Home Historical Novel Raja Perigai Part 2 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

42
0
Raja Perigai Part 2 Ch9 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 2 Ch9 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 2 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 9. காதலுக்கும் கண் உண்டு

Raja Perigai Part 2 Ch9 | Raja Perigai | TamilNovel.in

எந்த மனிதனைக் காண தஞ்சையைவிட்டு, காதலித்த வஞ்சியையும் துறந்து வந்தானோ, அந்த மனிதனை அந்த நிலையில், சென்னைக்கு வெகு தூரத்துக்கு முன்னே சந்திக்கப் போகிறோம் என்ற நினைப்பு சிறிதளவும் இல்லாததால், அந்தப் பங்களாவின் கூடத்தின் பவர் விளக்கின் வெளிச்சத்தில் அவன் முகத்தைக் கண்டதும் பெரும் பிரமிப்புக்கே உள்ளானான் விஜயகுமாரன்.

மஞ்சத்தில் கண்களை மூடிப் படுத்துக் கிடந்த அந்த முகத்தில் அழகு அதிகம் இல்லையானாலும் வீரக் களைச் சுடர் விட்டதைக் கண்ட விஜயகுமாரன், ”உறங்கினாலும் மயங்கினாலும் விழித்திருந்தாலும் வீரன் வீரன்தான்” என்று உள்ளூறச் சொல்லிக் கொண்டு, மஞ்சத்தின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து அந்த வெள்ளை வாலிபனின் நெற்றியின் மீது தனது கையை வைத்துப் பார்த்தான். அளவுக்கு மீறிய சுரம் அந்த வாலிபனை வாட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்த விஜயகுமாரன் தானிருந்த நிலையையும் மறந்து, ‘யாரங்கே! பாத்திரத்தில் சிறிது சுடுநீர் கொண்டு வா’ என்று இரைந்து உத்தரவிட்டு, கிளைவின் அங்கியையும் பிரித்து விட்டு இதய வேகத்தையும் பரிசோதித்தான். பிறகு நாடியைப் பார்த்துத் தானாகத் தலையை ஆட்டிக்கொண்டு தனது தலைப்பாகைத் துணியை அவிழ்த்துத் துணியின் ஒரு பக்கத்தால் கிளைவின் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்தான். அதற்குள் ஒரு பாத்திரத்தில் சுடுநீர் அவனிடம் நீட்டப்பட்டதால், அதை யார் நீட்டுகிறார்கள் என்பதை அறியத் தலையைத் திரும்பாமலே தனது தலைப்பாகைத் துணியின் மற்றொரு பாகத்தை அந்தச் சுடுநீரில் தோய்த்துத் தனது நண்பனின் முகத்தில் இதமாக ஒற்றி ஒற்றித் துடைத்தான்.

பாத்திரத்தை பக்கவாட்டில் ஏந்தியவன், ”சுரத்தை இறக்கப் பனிக்கட்டி அல்லது குளிர் நீரைத்தான் தலையில் உபயோகிக்க வேண்டும். சுடுநீரை உபயோகிக்கக் கூடாது” என்று ஆங்கிலத்தில் மொழிந்தான்.

”எங்கள் வைத்தியம் வேறு. உஷ்ணம் உஷ்ணேன சாம்யதே…. அதாவது உஷ்ணத்தை உஷ்ணத்தால் குணப்படுத்த வேண்டும் என்பது ஆயுர்வேதம்’ என்ற விஜயகுமாரன் தலையைத் திருப்பாமலே கூறிவிட்டு, சிகிச்சையைத் தொடர்ந்தான்.

அப்புறமோ இப்புறமோ திரும்பாமல், நண்பன் அவஸ்தையில் இருக்கிறான் என்ற ஓர் எண்ணத்தைத் தவிர வேறு எண்ணாமல், துணியை வெந்நீரில் பிழிந்து கிளைவின் நெற்றியிலும் கண்ணிலும் பல முறை ஒற்றி எடுத்து, அவனது வயிற்றையும் விஜயகுமாரன் லேசாக அழுத்திக் கொடுத்தான். பிறகு அவன் கச்சையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் கீழே வைத்து விட்டுக் கச்சையைத் தளர்த்தி விட்டான். கிளைவின் சட்டைப் பையிலிருந்த பெரிய சிமிழ் ஒன்றையும் அவன் எடுக்க முயன்ற போது தான் மயங்கியிருந்தவன் கை அவன் கையைப் பிடித்துத் தேக்கியது. ”அது அங்கேயே இருக்கட்டும்” என்று. கண்களை மூடியிந்தாலும் உதடுகளை அசைத்துக் கூறினான் வியாதியஸ்தன். பிறகு விழிகளை மெல்ல விரித்து அரை மயக்கத்தில், தன் முகத்தை நோக்கியிருந்த விஜயகுமாரன் முகத்தைக் கவனித்தான். மீண்டும் அவன் கண்கள் மூடி முகத்தில் சிந்தனை ஓடுவதற்கான சாயை நன்றாகத் தெரிந்தது. நெற்றி ஒரு முறை சுருங்கி மீண்டது. மறுமுறை விழித்த கண்களில் தெளிவு இருந்தது. பழைய ஒளியும் பளிச்சிட்டது. ”யார்? நீயா” என்ற சொற்களும் சற்றுத் துடிப்புடனும் சந்துஷ்டியுடனும் சுரக்காரன் வாயிலிருந்து உதிர்ந்தன.

தன்னை இன்னாரென்று கிளைவ் புரிந்துகொண்டு விட்டதை உணர்ந்ததால் முகத்தில் ஏற்கனவே இருந்த கவலையுடன் மகிழ்ச்சியையும் படரவிட்டுக் கொண்ட விஜயகுமாரன், ”ஆம், நான் தான்! நீங்கள் இங்கு எப்பொழுது வந்தீர்கள்? எதற்காக வந்தீர்கள்? அருகில் பிரெஞ்சுப் படை இருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று மெதுவாகக் கேள்விகளை உதிர்த்தான்.

கிளைவ் அத்தனை சுரத்திலும் தனது இதழ்களில் புன்முறுவலைப் படர விட்டுக் கொண்டான். ”தெரியும். ஆனால் அவர்கள் இந்தப் பங்களாவிலிருந்து இரண்டு பர்லாங்கு தள்ளியே இருப்பார்கள்” என்று கூறிவிட்டு, லேசாக ஏதோ சிந்தித்து மீண்டும் வினவினான். ”ஆம். நீ எப்போது இங்கு வந்தாய்? எதற்காக இங்கு வந்தாய்?” என்றும் கேட்டான்.

பதில் சொல்லத் துவங்கிய விஜயகுமாரன், ”நீங்கள்…” என்று ஏதோ ஆரம்பிக்கவே தனது கையை உயர்த்தி அவன் பேச்சைத் தடுத்த பிரிட்டிஷ் லெப்டினன்ட், ”நீ என்று சொன்னாலே போதும். நண்பர்களுக்குள் மரியாதை அவசியமில்லை” என்று கண்டித்துச் சொன்னான்.

விஜயகுமாரன் வியப்பு மிதமிஞ்சியது. வெள்ளைக்காரனான கிளைவ் தமிழ் மொழியை நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டு விட்டதையும், ஆங்கிலமும் தமிழும் கலந்த பழைய மணிப்பிரவாளம் அவனிடமிருந்து மறைந்து விட்டதையும் கண்டதால் வியப்புடன் சந்துஷ்டியையும் அடைந்து, ‘முன்னை விடத் தமிழை நன்றாகப் பேசுகிறாய்” என்று சிலாகிக்கவும் செய்தான்.

“ஹிந்துஸ்தானிகூட நன்றாகப் பேசுவேன். அதையும் பழகிக் கொண்டிருக்கிறேன்” என்று கிளைவ் பதில் சொல்லி விட்டுத் தலையைச் சிறிது திருப்பி, ‘நீங்கள் போகலாம்” என்று கூறி விட்டு, எட்மண்ட் நீ கூடப் போ. கீப் தி வெஸல் ஆன் தி ப்ளோர்” என்று உத்தரவிட்டான். அதற்கு பிறகே அந்த அறையில் மேலும் பலர் இருப்பதையும் பக்கத்தில் வந்த சுடுநீர்ப் பாத்திரத்தை அலாவுதீன் அற்புதவிளக்கு கொண்டு வரவில்லை என்பதையும் உணர்ந்த விஜயகுமாரன் தனது பார்வையை அக்கம் பக்கத்தில் திருப்பினான். சுமார் பத்துப் பதினைந்து வெள்ளைக்காரர்கள் அந்தக் கூடத்தில் நின்றிருப்பதையும், தனது பக்கத்தில் கிளைவின் வயதுக்கு ஈடான வயதுடைய ஒரு வாலிபன் பாத்திரமேந்தி நிற்பதையும் கண்ட விஜயகுமாரன் பாத்திரமேந்தி நிற்பவனை நோக்கி, ”உங்கள் பெயர் எட்மண்டா?” என்று வினவினான்.

அந்த வாலிபன் கையிலிருந்த சுடுநீர் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, ”தட்ஸ் ரைட்” என்று கூறியதன்றிச் சிறிது புன்முறுவலும் காட்டினான்.

“தென் யூ மஸ்ட் பி எட்மண்ட் மாஸ்கலீன்” என்று விஜயகுமாரன் ஆங்கிலத்தில் கூறினான். இதற்கு மேல் எட்மண்ட் எதுவும் பேசாவிட்டாலும் அவன் முகத்தில் ஆச்சரிய ரேகை படர்ந்தது. ‘உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்?” என்று தமிழில் வினவினான்.

‘சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கருகில் கிளைவ் தனது சுயசரிதையைச் சொன்னார். அது தவிரகிளைவுக்கு ஒரு நெருங்கிய நண்பன் உண்டு. அவர் பெயர் எட்மண்ட் மாஸ்கலீன் என்று பலரிடம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு மனிதன் பெயர் பிரசித்தமாகும் போது அவன் நண்பர்கள் பெயரும் சேர்ந்து அடிபடுகிறது. ஆகவே…” என்று இழுத்தான் விஜயகுமாரன்.

“ஆகவே …?”

”என் பெயரும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் தான் விஜயகுமாரன்.”

இதை கேட்ட எட்மண்ட் ஸ்தம்பித்து நின்றான். பிறகு விஜயகுமாரனின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, ”எனது நண்பனின் உயிரைக் காப்பாற்றியவர்” என்றும் கூறினான், நன்றி குரலில் நன்றாக ஒலிக்க. பிறகு எட்மண்ட் பாத்திரத்தைத் தரையில் வைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகரவே மற்ற வெள்ளையரும் கூடத்திலிருந்து வெளியேறினர். கூடத்தில் இரு நண்பர்கள் மட்டும் தனித்து விடப்பட்டார்கள். எனினும் இருவரும் நீண்ட நேரம் பேசவில்லை. அந்த மௌனத்தை கடைசியில் விஜயகுமாரனே கலைத்து, ”கிளைவ் இதென்ன சுரம்? வாட் இஸ் தி ரீஸன் ஃபார் திஸ். இதற்கு என்ன காரணம்?” என்று ஆங்கிலமும் தமிழுமாகக் கலந்து விளாசினான்.

கிளைவின் கண்களும் சிரிப்பைக் கக்கின. இது ஒரு புதுமாதிரி சுரம். இதற்குக் காரணம் எங்கள் வைத்தியர்களுக்குத் தெரியவில்லை. இந்த ஊர் சுரம் மாதிரி தெரிகிறது” என்றான் புன்முறுவலை உதட்டில் காட்டி.

“எப்படி வருகிறது?”

”முதலில் வயிற்று வலி வருகிறது. தாங்க முடியவில்லை. பிறகு சுரம் வருகிறது.”

”அதற்கு வைத்தியம்?”

‘கொஞ்சம் அபின் சாப்பிடுகிறேன், வலி அடங்க.”

”உம்.”

”பிறகு மயக்கத்தில் படுத்து விடுகிறேன். மயக்கம் வலியை, ஏன் உலகத்தை, சுரத்தை, சகலத்தையும் மறக்க அடிக்கிறது.” இதைச் சொன்ன கிளைவ் லேசாக நகைத்தான்.

விஜயகுமாரன் முகத்தில் கோபம் மிதமிஞ்சி உதயமாயிற்று. ”வலியை அடக்க அபின் சாப்பிட்டால் உடம்பு குட்டிச்சுவராகப் போய்விடும்” என்று கடுமையுடன் இரையவும் செய்தான்.

கிளைவ் தனது கையொன்றால் விஜயகுமாரன் கையைப் பற்றிக் கொண்டான். ”ஃப்ரண்ட் உனக்கு அந்த வலி எத்தனை கடுமையானதென்பது தெரியாது” என்று பரிதாபத்துடன் சொன்னான்.

”ஒரு கொடுமையை இன்னொரு கொடுமையால் அழிக்க முயல்வது அறிவீனம்’ என்று கடுமையுடன் சொன்ன விஜயகுமாரன், ”உன் சுரம் ச்லேஷ்ம சுரம். அதற்கு ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறது. ஆனால் இந்த அபின் சாப்பிடுவதை விட்டால் தான் உன்னைக் குணப்படுத்த முடியும்” என்று விளக்கினான். ”சரி, இந்தப் பங்களாவில் ஏன் தங்கியிருக்கிறாய்? எங்கே போகிறாய்?” என்று மீண்டும் கேட்டான்.

”திருச்சிக் கோட்டைக்கு உணவுப் பொருள் கொண்டு போகிறேன், விஜயகுமாரா! இப்போது கிளைவ் சோல்ஜரல்ல, ஒரு வியாபாரி. அது தெரியுமா உனக்கு?” என்று வினவினான் கிளைவ்.

”வியாபாரியா! நீயா?” நம்பிக்கை அறவே இல்லாத குரலில் கேட்டான் விஜயகுமாரன்.

”உனக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் கவர்னர் ப்ளாயருக்கு வியப்பாயில்லை. தேவிக்கோட்டையை நான் பிடித்த பிறகு இந்த உத்தியோகத்தைத்தான் கொடுத்தார், எக்ஸலன்ஸி. ஆனால் இதில் நல்ல லாபமிருக்கிறது. பணம் நிறைய சேர்த்திருக்கிறேன்” என்று இகழ்ச்சிக் கலந்த நகைப்பை உதிரவிட்டுக் கூறினான்.

‘பணத்தால் என்ன லாபம்?” என்று எரிச்சலுடன் கேட்டான் விஜயகுமாரன்.

”பணத்தால் எதையும் வாங்கலாம். சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரை விலைக்கு வாங்கியிருக்கிறார். பிரிட்டிஷ்காரரை விலைக்கு வாங்க முகம்மது அலி முயல்கிறார். இப்போது கர்நாடக அரசியலே வியாபாரமாக மாறியிருக்கிறது. ஒன்று தெரியுமா உனக்கு? இந்த உணவுப் பொருள்களை நான் திருச்சியில் சேர்த்ததும் முகம்மது அலி எனக்கு மட்டும் ஆயிரம் பகோடா கொடுப்பார்” என்று கூறி மீண்டும் நகைத்தான்.

விஜயகுமாரன் அந்தச் சிரிப்பில் கலந்து கொள்ள வில்லை. ”திருச்சிக்கு நானும் வருகிறேன். முதலில் உன் உடல் நலத்தைக் கவனிப்போம். பிறகு மற்ற விஷயங்களைச் கவனிப்போம்” என்ற விஜயகுமாரன், ”உன் ஷர்ட் பையிலிருக்கும் சிமிழை எடுத்துக் கொடு” என்று கையை நீட்டினான்.

கிளைவ் ஒரு விநாடி சிந்தித்தான். பிறகு கேட்டான், “அது எதற்கு உனக்கு?” என்று.

”அதிலிருக்கிற அபினியைக் குப்பையில் கொட்ட” என்று சீறினான் விஜயகுமாரன்.

”அதில் அபின் இல்லை ” என்றான் கிளைவ். ”வேறென்ன இருக்கிறது?” ”அதை விட பெரிய மயக்கப் பொருள்.”

”அப்படியானால் அதை நான் அவசியம் பார்த்தாக வேண்டும்.”

”பார்க்கலாம், ஆனால் ஒரு நிபந்தனை.”

”என்ன நிபந்தனையோ?”

”அதை எட்மண்டிடம் காட்டக் கூடாது. அது என்னிடம் இருப்பதாக அவனுக்குத் தெரியவும் கூடாது.”

”ஏன்?”

கிளைவ் மிக விசித்திரமான பதிலைச் சொன்னான், சிறிது தயக்கத்திற்கு பிறகு. ‘அது எட்மண்டுக்குச் சொந்தம். நான் திருடினேன்’ என்று கூறினான்.
விஜயகுமாரன் முகத்தில் வியப்பு விரிந்தது. ஆனால் கிளைவ் பையில் கையை விட்டுக் கொணர்ந்த வஸ்துவைப் பார்த்ததும் அவன் வியப்பு அதிகமாகியது. அது வெறும் சிமிழல்ல. லாக்கெட்டைப் பிரித்தான். அதற்குள் இரு பாகங்களிலும் தீட்டப் பட்டிருந்தன, இரு ஓவியங்கள். இரண்டும் ஒரு வெள்ளை அழகியின் உருவங்கள்; வெவ்வேறு நிலையில் இருந்தன. அந்த அழகி விஜயகுமாரனைப் பார்த்துச் சிரித்தாள் படத்திலிருந்து. விஜயகுமாரன் வியப்பு எல்லை கடந்தது, ”இவள்…” என்று துவங்கினான் மெள்ள.

“என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவள். எட்மண்டின் சகோதரி. பெயர் மார்கரெட் மாஸ்கலின்” என்ற சொற்கள் கிளைவின் உதடுகளிலிருந்து மிக மிருதுவாக உதிர்ந்தன.

விஜயகுமாரன் பதில் கூறவில்லை . வியப்பு நிரம்பிய விழிகளைக் கிளைவ் மீது திருப்பினான். ”ஏன்? கிளைவுக்குக் கூடக் காதலா என்று திகைக்கிறாயா விஜயகுமாரா? அந்த விபரீதம் கூட என் வாழ்க்கையில் ஏற்பட்டு விட்டது” என்று கூறினான் கிளைவ்.

‘விஜயகுமாரா, இந்த லாக்கெட்டைச் சென்னையில் தன் மேஜையின் மீது போட்டிருந்தான் எட்மண்ட். பிரித்துப் பார்த்தேன்; இவள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாள். ஆகவே லாக்கெட்டை நான் கொள்ளை அடித்தேன். ஒரு கொள்ளை இன்னொரு கொள்ளையைச் சரிப்படுத்தி விட்டது. ”யூ ஸி லவ் ஈஸ் நாட் ப்ளைண்ட். இட் ஹாஸ் ஐஸ் – பார்த்தாயா? காதலுக்கு கண்ணில்லை என்பது பொருத்தமில்லை. கண் இருக்கிறது இல்லாவிட்டால் இது என் கண்ணில் படுமா?”

Previous articleRaja Perigai Part 2 Ch8 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 2 Ch10 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here