Home Historical Novel Raja Perigai Part 3 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

59
0
Raja Perigai Part 3 Ch1 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 3 Ch1 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 1. வேஜர்

Raja Perigai Part 3 Ch1 | Raja Perigai | TamilNovel.in

அசாதாரணமான மனிதனுக்கும் சாதாரணமான மனிதனுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அசாதாரணமான மனிதன் கண்களில் முன்பு எப்போதும் குறிக்கோள் நிற்கிறது. ஆதலால் ஆபத்து புலப்படுவதில்லை. சாதாரண மனிதன் குறிக்கோளற்று எல்லாவற்றுக்கம் பயந்து அந்தப் பயத்திலேயே பிராணனை விடுகிறான். ராபர்ட் கிளைவ் அசாதாரணமான மனிதன் ஆதலால் அவன் நாட்டம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய விஸ்தரிப்பில் இருந்தது. எதிரேயிருந்த ஆபத்தைப்பற்றி அவன் எண்ணவே இல்லை. ‘இதுதான் வழி’ என்று அவன் அடித்துச் சொன்னபோது கவர்னர் தாமஸ் ஸாண்டர்ஸ் அவனுக்கு உடனடியாகப் பதிலேதும் சொல்லாமல் அவனை உற்று நோக்கியபடி இருந்தார். அவனை நோக்கிய கண்கள் அவனுக்கு அப்புறமும் சென்று சாளரத்தைத் தாண்டி அப்பால் தெரிந்த விண்மீன்களை நோக்கின.

ஸெயின்ட் டேவிட் கோட்டையில் கவர்னர் அந்தரங்க ஆலோசனையின் கிழக்குக் கோடி சாளரத்துக்கு அப்பால் கிருஷ்ண பக்ஷத்து இரவு தனது அந்தகாரத்தை அன்று அளவுக்கு அதிகமாகவே விசிறியிருந்தது. இந்த இரவின் அந்தகாரம், கர்நாடகத்தில் விளையக்கூடிய பயங்கரப் போர் எனும் அந்த காரத்தை முன்கூட்டி விளக்குவதாகக் கவர்னர் தீர்மானித்தார்.

எட்ட இருந்த கடலிலிருந்து கிளம்பிய அலைகளின் இரைச்சல் போர் இரைச்சலாகத் தோன்றியது கவர்னருக்கு. வானத்திலிருந்து கண் சிமிட்டிய விண்மீன்கள் தன்னைப் பார்த்து நகைப்பதாகக்கூட எண்ணினார் ஸாண்டர்ஸ். இத்தனையையும் பார்த்து எதிரே அசையாமல் நின்ற கிளைவையும் பார்த்தபின்பு தமது நாற்காலியின் இருபுறத்திலும் நின்றிருந்த இரு நண்பர்களையும் பார்த்தார் தலையை இருபுறமும் திருப்பி. . அவர்களில் ஆஜானுபாகுவாக, ஒல்லியாக, சப்பிய தாடையுடனும், தாடை சப்பியதால் எடுப்பாகத் தெரிந்த தாடை எலும்புடனும், நன்றாகக் கத்திரித்து விட்ட மீசையுடனும், ராணுவ உடையில் நின்றிருந்த ரிச்சர்ட் பிரின்ஸ், கவர்னர் ஸாண்டர்ஸின் டெபுடி கவர்னருக்கு அடுத்தபடி சர்வ அதிகாரத்தையும் வகித்து வந்தார். அவர் நீலக்கண்களில் இரும்பு மனிதரான கவர்னர் கண்களிலிருந்த கூர்மையில் பாதியிருந்தது.

அடுத்தவர் நடுத்தர உயரத்துடனும் சற்றே பருத்த உடலுடனும் காணப்பட்டார். அவர் கண்கள் ஆராய்ச்சி மனப் பான்மையைக் காட்டின. அவர் ராணுவ உடை அணியா விட்டாலும் ராணுவ விவகாரங்கள் அவருக்குப் புதிதல்ல என்பதை அவர் முகம் எடுத்துக் காட்டியது. அவர் ராபர்ட் ஆர்ம். பிரிட்டிஷ் ராணுவத்தின் இந்திய நடவடிக்கைகளின் வரலாற்றை நேரில் கண்டு குறித்தவர்.
கவர்னர் அவ்விருவரையும் கவனித்தாலும் இருவரும் எவ்விதப் பேச்சையும் துவங்கவில்லை. மௌனத்துக்குப் பெயர் போன கவர்னர் ஸாண்டர்ஸே கடைசியாகப் பேசத் துவங்கி, ”காப்டன் கிளைவ்| நீ சொல்லும் யோசனை எத்தனை விபரீத மானது, எத்தனை ஆபத்தானது என்பதைப் புரிந்து கொண்டாயா?” என்று வினவினார் கிளைவை நோக்கி.

கிளைவ் தனது கண்களைக் கவர்னர் கண்களுடன் கலந்தான். ”விபரீத நிலைமைகளில் சாதாரண யோசனைகள் பயனளிப்பதில்லை. ஆபத்தைச் சிந்திப்பவன் எதையும் சாதிப்பதில்லை” என்ற கூறினான் வறண்ட குரலில்.

கவர்னர் அவனுக்குப் பதில் சொல்லாமல் பக்கத்திலிருந்த மிஸ்டர் ஆர்மைப் பார்த்தார். ஆர்ம் சொன்னார், “இந்த வாலிபன் சொல்வது சரி” என்று.

மிஸ்டர் ரிச்சார்ட் பிரின்ஸ் சற்றுத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். “எதிரியின் படைபலம் நம்முடைய பலத்தை விடப் பலமடங்கு அதிகம்” என்று சுட்டிக் காட்டினார்.

இங்கே குறுக்கே நுழைந்த ராபர்ட் ஆர்ம், ”வாட் அபௌட் தி ஸ்பானிஷ் ஆர்மடா?” என்று பழைய சித்திரத்தை எடுத்துக் காட்டினார்.

”வாட் அபௌட் இட்? (அதைப் பற்றி என்ன?)” என்று வினவினார் ரிச்சர்ட் பிரின்ஸ்.

”ஸ்பெயினின் கடற்படை இங்கிலாந்தின் கடற்படையை விடப் பலமடங்கு உயர்ந்தது. பட் வீ வொன் தி வார் (இருப்பி பினும் நாம் போரில் வெறியடைந்தோம்)” என்றார் ராபர்ட் ஆர்ம்.

”தென் வி ஹாட் ஸர் வால்டர் ராலே அண்ட அதர்ஸ் (அப்பொழுது நம்மிடம் ஸர் வால்டர் ராலேயும் அவரது சகாக் களும் இருந்தார்கள்)” என்று விளக்கினார் ரிச்சர்ட் பிரின்ஸ்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த கவர்னர் ஸாண்டர்ஸ், ‘நௌ வீ ஹாவ் கிளைவ் (இப்பொழுது நம்மிடம் கிளைவ் இருக்கிறான்)” என்று குறிப்பிட்டார்.

கவர்னர் நோட்டம் இருக்கம் திசையைக் கவனித்த ராபர்ட் பிரின்ஸ், ”யுவர் எக்ஸலன்ஸி வாண்ட்ஸ் டூ ஸாக்ரிபைஸ், திஸ் யங் மான்?’ (இந்த வாலிபனைப் பலி கொடுக்க நீங்கள் தீர்மானித்து விட்டீர்களா?)” என்று வினவினார்.

மீண்டும் கிளைவின் குரல் ஒலித்தது. அந்த அறையில் மிக மெதுவாக, ஆனால் உறுதியாக, ”நோ ஸாக்ரிபைஸ், நோ ஸக்ஸஸ் (தியாகமில்லையேல் வெற்றியில்லை)” என்று கூறினான் அவன்.

”உயிரை விட இத்தனை பிடிவாதமாக இருக்கிறாய்?” என்று வினவினார் கவர்னர்ஸாண்டர்ஸ்.

”திருச்சிக் கோட்டையில் பிரிட்டிஷ் சோல்ஜர்கள் அடைந்து கிடக்கிறார்கள். அவர்கள் உயிர்களைக் காப்பதற்கு நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரமான நிலையில் தீவிரமான நடவடிக்கை எடுப்பது அவசியம். ஆனால் அங்கு அதற்கு யாரும் ஆள் கிடையாது. காப்டன் ஜீன்ஜின்ஸ் துணிவான நடவடிக்கை எடுக்கமாட்டார். பிரிட்டிஷ் சோல்ஜர்களின் கட்டுப்பாடு கோட்டைக்குள் குலைந்து கிடக்கிறது. கோட்டைக்கு வெளியே சந்தாசாகிப் பிரெஞ்சுக் கூட்டுறவின் பலத்த படை பலம் ஆடுகளை விழுங்கத் தயாராக இருக்கும் ஓநாயைப் போல் காத்திருக்கிறது.

”நான் திருச்சியிலிருந்து வெளியே வருவதே பிரும்ம பிரயத்தனமாகி விட்டது. அந்த அடிமைப் பெண்ணின் உதவி இல்லாவிட்டால் நானோ, விஜயகுமாரனோ இங்கு உயிருடன் வந்திருக்க மாட்டோம்” என்று கவர்னருக்குப் பதிலளித்த கிளைவ் நின்றபடியே சிறிது நேரம் சட்டென்று மௌனமானான். சில விநாடிகளுக்குப் பிறகு சொன்னான்: ”பிரிட்டன் என்னை நம்பட்டும். நான் ஆற்காட்டின் மீது படையெடுத்துச் சென்று கோட்டையைக் கண்டிப்பாய்ப் பிடிக்கிறேன்” என்று. அப்பொழுது அவன் முகத்தில் பளிச்சென்று விழுந்த பவர் விளக்கின் வெளிச்சம் அவன் உறுதிக்கும் வீரத்துக்கும் சான்று கூறியது. ஒரு விநாடி கிளைவின் மேட்டு நெற்றிச் சருமம் சுருங்கி விலகியது, கண்கள் பளபளத்தன.

கவர்னர் ஸாண்டர்ஸ் அவன் வதனத்தைக் கவனித்துக் கொண்டுதானிருந்தார். அவர் கண்களில் ஏதோ ஒரு புத்தொளி பிறந்தது. ‘’ஆற்காட்டைச் சிறு படையைக் கொண்டு பிடிப்பது ராணுவ விதிப்படி சரியல்ல” என்று கூறி நிதானித்தார் கவர்னர்.

‘’ஆனால்?” ரிச்சர்ட் பிரின்ஸ் வினவினார்.

”அப்படிச் செய்வது அரசியல்வாதியின் ராஜதந்திரத் திட்டம். ஒரு சூதாட்டம் போன்றது. ஜஸ்ட் எ காம்பிள்” என்ற

கவர்னர் பக்கத்திலிருந்த ராபர்ட் ஆர்ம் எழுந்ததும் அவரைத் தமது கையால் அடக்கி, ”ஐ லைக் டு காம்பிள்” என்றார் முடிவாக.

”யூ! காம்பிள்?” என்று வியப்புடன் கேட்டார் மிஸ்டர் பிரின்ஸ்.

கவர்னர் புன்முறுவல் கொண்டார். ‘லைப் இட்ஸெல்ப் இஸ் எகாம்பிள்’ என்று விளக்கினார் புன்முறுவலின் ஊடே.

பிரின்ஸ் பதிலே பேசவில்லை. கவர்னர் கிளைவிடம் பிரிட்டிஷ் நலனை ஒப்படைக்க முடிவு செய்து விட்டார் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட காரணத்தால், ராபர்ட் ஆர்மின் முகம் உணர்ச்சியற்ற கல்லாகி விட்டது. கவர்னர் சரேலென எழுந்து மேஜையைச் சுற்றி வந்து கிளைவின் தோள்மீது கையைப் போட்டுக் கொண்டு சாளரத்தை நோக்கி நடந்தார். சாளரத்தின் மூலம் கடலை நோக்கிய வண்ணம் சொன்னார்: ”காப்டன் அதோ அந்தக் கடலைக் கண்டு நடுங்கும் நாடுகள் உண்டு. ஆனால் பிரிட்டன் நடுங்குவதில்லை. அதைப் பொறுத்துத்தான் பிரிட்டிஷ் வாழ்வு இருக்கிறது” என்று.

கவர்னர் இதை எதற்காகச் சொல்கிறார் என்பதை அறியாததால் கிளைவ் மௌனம் சாதித்தான் சில விநாடிகள். கவர்னர் கை அவன் தோளை இரும்பாகப் பிடித்த போதிலும் அதிலும் அன்பிருந்தது. ”காப்டன் நமது கடல் வாழ்வு சிறந்தது ஸர் வால்டரால். நில வாழ்வு உன்னால் சிறக்கப் போகிறது” என்று கூறினார் கவர்னர்.
கிளைவ் நன்றி ததும்பும் கண்களை அவர்மீது நாட்டினான். ‘’ஐ ஆம் ஆனர்ட்” என்றும் சொன்னான் பணிவுடன்.

”கிளைவ்!” என்றார் கவர்னர், இருமுறை அவன் ராணுவப் பட்டத்தைவிட்டு.

”எஸ் யுவர் எக்ஸலன்ஸி!” என்றான் கிளைவ்.

”என் மகன் இங்கிருந்தால் அவனை உன்னுடன் அனுப்பு வேன்” என்றான் கவர்னர் சர்வ சாதாரணமாக.

‘உங்கள் மகனைத்தான் இப்பொழுதும் அனுப்புகிறீர்கள்” என்று கூறினான் கிளைவ்.

அந்த இரும்பு மனிதர் லேசாகத் திரும்பிக் கிளைவை நோக்கினார். ‘கிளைவ் நமக்குப் பின்னால் டேபிளுக்கு அருகில் இருவர் உட்கார்ந்திருக்கிறார்கள்” என்று மெள்ளச் சொன்னார்.

“ஆம்” என்றான் கிளைவ்.

”அவர்கள் இல்லாவிட்டால் உன்னை அணைத்துக் கொள்வேன்.”

கிளைவ் சங்கடப்பட்டான் அந்த இரும்பு மனிதரின் சொற் களைக் கேட்டு. அவரே மேலும் சொன்னார்: “இரண்டும் அரசியல் கோட்டான்கள். எதிரி பலத்தைப் பற்றியே யோசிக் கிறார்கள்” என்று.
‘அதில் தவறில்லையே.”

”தவறில்லை. ஆனால் செயலுக்கு உபயோகமில்லை.’

“நீங்கள் என் திட்டம், அரசியல் திட்டம் என்று சொன்னீர் களே. அப்படியானால் நானும்…”

“நீ வேறு…”

“எப்படி?”

”வேறாக இல்லாவிட்டால் ஆபத்தில் நுழையமாட்டாய்” என்ற கவர்னர் திடீரென்று அவனை மீண்டும் நோக்கி, ‘போர், தரைப் போர்தான். ஆனால் நம் நாடு கடல் சூழ்ந்த நாடு. கடலால் பயனடைந்த நாடு” என்றார்.

இதை எதற்காகக் கவர்னர் சொல்கிறார் என்பதை உணராத கிளைவ் கேட்டான், ”யுவர் எக்ஸலன்ஸி இதை எதற்குச் சொல்கிறீர்கள்?” என்று.

‘நிலத்தை வெற்றி கொள்ள நீயும் கடலில் செல்’ என்ற கவர்னர் தூரத்தே கடலைச் சுட்டிக் காட்டினார். ”அது என்ன தெரியுமா?” என்றும் வினவினார்.

எதிரே கடலில் ஒரு கப்பல் ஆடிக்கொண்டு நின்றது. ‘இது எப்போது வந்தது?” என்று கேட்டான் கிளைவ்.

“இன்று காலை”

”எப்பொழுது புறப்படும்?”

“அதை நீதான் சொல்ல வேண்டும்.”

“நானா”

”ஆம்.”

‘’புரியவில்லை.”

”புரியாததற்கு ஏதுமில்லை. தட் ஈஸ் வேஜர்” என்றார் கவர்னர்.

”வேஜர்!” கிளைவின் குரலில் வியப்பு ஒலித்தது.

”ஆம். மிக அதிர்ஷ்ட க் கப்பல்!” என்று கூறிய கவர்னர் சட்டென்று திரும்பி அறைக்குள் கோடியிலிருந்த இருவரையும் நோக்கிக் கிளைவையும் நோக்கினார். அவர் குரல் இரைந்து ஒலித் தது. ”காப்டன் கிளைவ்| நீ வேலூருக்குக் கூடிய சீக்கிரம் பயணப்பட வேண்டும். வேண்டிய படையை அழைத்துக் கொள். நீ எதைச் செய்வதற்கும் பூரண அதிகாரத்தை அளிக்கிறேன்” என்று கூறிவிட்டு மேஜைக்கருகில் வந்து மணியைத் தட்டினார்.

அடுத்த விநாடி ஆர்டர்லி ஒயின் புட்டியுடனும் கண்ணாடி டம்ளர்களுடனும் வந்து அவற்றில் ஒயினை ஊற்றினான். கவர்னரும் மற்றோரும் டம்ளர்களை எடுத்துக் கொண்டதும், ‘டு தி ஸக்ஸஸ் ஆஃப் ராபர்ட் கிளைவ்” என்று கூறி டம்ளரை

உயர்த்தினார் கவர்னர். அடுத்த விநாடி டம்ளர்கள் லேசாக இடித்துக் கொண்டன. அந்த ஒலியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய வெற்றி ஒலியைக் கண்டார் ஸாண்டர்ஸ். கிளைவ் தலை தாழ்த் தினான் கம்பீரமாக. தூரத்தே கடலில் நின்ற வேஜரைக் கவனித்தான். வேஜர் அலையில் ஆடி அவனை வா வா என்று அழைத்தது.

Previous articleRaja Perigai Part 2 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here