Home Historical Novel Raja Perigai Part 3 Ch10 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch10 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

41
0
Raja Perigai Part 3 Ch10 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 3 Ch10 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch10 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 10. மன்னருக்குத் தெரியும்

Raja Perigai Part 3 Ch10 | Raja Perigai | TamilNovel.in

விஜயகுமாரனின் சோதிடத்தில் தஞ்சைத் தளபதி மானாஜி அத்தனை நம்பிக்கை வைக்காவிட்டாலும், அவன் தஞ்சை ராணுவத்தில் உப தளபதியாக வேலை பார்க்க ஒப்புக் கொண்டது பற்றிப் பெருமகிழ்ச்சியே கொண்டார். தேவிக்கோட்டையிலும் அவன் தன்னுடன் உபதளபதியாகப் பிரிட்டிஷ்காரர்களுடன் போரிட்டாலும், அவன் மனம் முழுவதும் வேறு ஏதோ முக்கிய இடத்தில் லரித்திருப்பதாகப் புலப்பட்டது மானாஜிக்கு. ஆனால் இம்முறை அப்படி இரண்டுங் கெட்டான் நிலைமையில் அவனை வைக்காமல் தஞ்சைப் படையில் தனக்கடுத்த தளபதியாக ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துத் கொள்ளும்படி கட்டாயப்படுத்தத் தீர்மானித்தார் தஞ்சைத் தளபதி. அப்படியே அவனை உபதளபதியாக்கி அதற்கான உடைகளை அளித்து அரசர் முன்பு கொண்டு நிறுத்தினார், அவன் சோதிடம் சொன்ன அன்றே.

பிரதாப சிம்ம மகாராஜா மது ஆஸ்தான மண்டபத்தில் மற்ற மந்திரிப் பிரதானிகளுக்கு எதிரில் அவனுக்கு உபதளபதி பட்டம் வழங்கியதும் அவர் முன்பு தலை வணங்கிய விஜயகுமாரன், “நான் இந்தப் பதவியை ஏற்குமுன்பு ஒரு வரம் வேண்டுகிறேன்” என்று விண்ணப்பித்துக் கொண்டான்.

பிரதாபசிம்ம மகாராஜா மானாஜியை நோக்கினார் வியப்புடன். மானாஜி அந்த அவையில் கூறினார், விஜயகுமாரனை நோக்கி, “நாயக்கர் வம்ச வீரனே இந்த மாதிரி பதவிகள் எந்த வித நிபந்தனையின் பேரிலும் அளிக்கப்படுவதில்ல” என்று.

”இந்தப் பதவிக்கு நான் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். மன்னருக்காகவும் தஞ்சை அரசுக்காகவும் என் உயிரையும் அர்ப்பணிப்பதாக உறுதி கூற வேண்டும். இல்லையா?” என்று கேட்டான் விஜயகுமாரன்.

“ஆம்.”

“அவையெல்லாம் நிபந்தனையில்லையா?”

“இல்லை. கடமை.”

‘’அப்படியே வைத்துக் கொண்டாலும் எனக்கும் கடமை இருக்கிறது.”

”தனி மனிதனின் கடமைகள் அரசின் கடமைகளுக்கு அடங்கியவை.”

“நான் அப்படி நினைக்கவில்லை தளபதி. தனி மனிதர்களின் கூட்டந்தான் அரசு. இவர்கள் நன்மைக்காகவே அரசு இருக்கிறது. தவிர நான் தஞ்சைப் பிரஜையல்ல. இருப்பினும் அதற்காக ரத்தம் சிந்த வருகிறேன். எனக்கு வாழ்க்கைக் குறிக்கோள் ஒன்றிருக்கிறது. அதற்காகவே உயிரைவிடச் சித்தமாக இருக்கிறேன். அதற்கு இடம் இல்லாவிட்டால் நான் எந்தப் படையில் சேர்ந்தாலும் பயனில்லை.”
இதைக் கேட்ட சபையில் பேரமைதி குடிகொண்டது. பிரதாப சிம்ம மகாராஜாவின் முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. லேசாகப் புன்முறுவல் மட்டும் இருந்தது. மானாஜி கேட்டார். ”பதவிக்கு வருபவர்கள் இப்படி நிபந்தனைகளைப் போடுவது வழக்கமா வீரனே?” என்று.

”இல்லை தளபதி.”

”அப்படியானால் நீ மட்டும் எப்படி விதிவிலக்கு?” என்று வினவினார் தளபதி.

”அந்தப் பதவியை நான் தேடி வரவில்லை. நீங்களாக வற்புறுத்திக் கொடுப்பது. எனது வாழ்க்கை லட்சியத்துக்கு இது உதவுமாகையால் இதை ஏற்கிறேன்” என்று சுட்டிக் காட்டினான் விஜயகுமாரன்.

மானாஜி மேலும் திகைத்தார். உபதளபதி பதவி ஏதோ அத்தனை சுலபம் போலும், அது சுமத்தப்பட்டதாகவும் தங்கள் மீதே விஜயகுமாரன் குற்றம் சுமத்துவதைக் கேட்டதும், அதில் உண்மையிருந்ததால் மானாஜி மன்னரை நோக்கினார், சங்கடத்துடன்.

மகாராஜா பிரதாப சிம்மன் மட்டும் எவ்விதச் சங்கடத்துக்கும் உள்ளாகவில்லை. விஜயகுமாரனை நோக்கிப் புன்முறுவல் செய்தார். ”விஜயகுமாரா உன் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்று கூறினார்.

இதைக் கேட்டதும் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. எங்கிருந்தோ வந்த ஒரு வீரனிடம் மகாராஜா எதற்காக இத்தனை வளைய வேண்டும் என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டானர். மானாஜியும் வியப்புடன் நோக்கினார் மன்னரை. ‘மகாராஜா இது சம்பிரதாயம் இல்லை. தங்கள் நிலைக்கும் ஒத்ததல்ல” என்று சுட்டிக் காட்டினார்.

மகாராஜா தமது கூரிய கண்களை விஜயகுமாரன்மீது நாட்டினார்.” என்ன உபதளபதி| உன்னடமிருந்து பதிலேதும் வரவில்லையே?” என்று வினவவும் செய்தார் சர்வசாதாரணமாக.

விஜயகுமாரன் நிலை மிகவும் சங்கடத்துக்கு உள்ளாகியது. ராஜதந்திரத்தில் இணையற்றவரென்று பிரசித்தி பெற்றவரும், எத்தனையோ போர்களுக்குப் பின்பும் தஞ்சை அரசைச் சுதந்திரமாக வைத்திருப்பதாலேயே தமது ஆற்றலைப் பிரிட்டிஷ் பிரான்சு சக்திகளுக்குத் தெரியப்படுத்தியவருமான பிரதாப் சிம்ம மகாராஜா தன் நிபந்தனையை ஒப்புக் கொண்டதாகக் கூறியதும் விஜயகுமாரன் மிகுந்த சஞ்சலத்துக்கும் சங்கடத்துக்கும் இலக்காகி, “மகாராஜா இந்த அடிமை நிபந்தனை விதிக்கவில்லை. விண்ணப்பந்தான் செய்கிறான்’ என்றான் பணிவுடன்.

மகாராஜா அவனை அன்புடன் நோக்கிவிட்டுச் சொன்னார், ”விஜயகுமாரா அது நிபந்தனையானாலும் சரி, விண்ணப்பமானாலும் சரி, ஒப்புக்கொள்ளப்பட்டது” என்று.

இந்த அறிவிப்பு சபையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மானாஜி அப்பாகூடச் சிறிது சினத்தைக் காட்டினார். ”மகாராஜா! நிபந்தனை என்னவென்றுகூடத் தாங்கள் கேட்க வில்லையே?” என்றார் குரலில் லேசாக உள்ளிருந்து சினம் தொனிக்க.
மகாராஜா மானாஜியை நோக்கி, ”தளபதி! நமது உபதளபதி கேட்பது ஒரு தலை” என்று கூறினார் மெதுவாக.
”தலையா” மானாஜியின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

அந்தச் சமயத்தில் டபீர் பண்டிதர் இடை புகுந்து, “ஆமாம், தலைதான், தலைதான்” என்றார் சினத்துடன்.

”யார் தலை?”‘ சீற்றத்துடன் கேட்டார் மானாஜி, டபீர் பண்டிதரை நோக்கி.

”உமக்குத் தெரியாது” என்ற டபீர் பண்டிதர், ”யார் தலையையோ வெட்டித் தாம்பாளத்தில் வைத்துக் கொண்டு வருவதாக அரங்கன் சந்நிதியில் சபதம் செய்தான் இவன்” என்றார்.

மகாராஜா அந்தச் சர்ச்சைக்கு முத்தாய்ப்பு வைக்க, ”உபதளபதி கர்நாடகப் போரில் வெற்றி கிடைத்தால் அந்தத் தலை உன்னுடையது” என்றார் முடிவாக.

அது…” என்று மீண்டும் ஆட்சேபிக்கப் பார்த்தார் மானாஜி.

”நமக்கு வேண்டாத தலை” என்று மகாராஜா முடிவாகச் சொன்னார். ‘அருகே வா உபதளபதி” என்று கூறி, தமது கையிலிருந்த பட்டாக்கத்தியை அவனிடம் நீட்டினர். மன்னர் எதிரே மண்டியிட்டு அவர் பாதங்களில் தலையை சாய்த்து அந்தப் பெருவாளைப் பெற்றுக்கொண்டு அதை முத்த மிட்டுப் பிரதிக்ஞை செய்தான் விஜயகுமாரன்.
‘மகாராஜா, இந்த வாள் மகாராஷ்டிரர்களின் வாள். மெல்லியது, வளைந்திருக்கிறது. எந்தக் கழுத்தையும் அநாயாசமாக அறுக்க வல்லது. அதைத் தங்கள் ஆணைகளை நிறைவேற்றுவதிலும் தங்கள் எதிரிகளை அழிப்பதிலும் தஞ்சைக் குடிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும் உபயோகப் படுத்துவேன். இந்தப் பணிகளுக்காக என் உயிரையும் விடுவேன். அரங்கன் மீது ஆணை’ என்று உணர்ச்சி பொங்க ராஜவிசுவாசப் பிரமாணமும் செய்தான்.

மகாராஜா அவன்மீது தமது அன்பு விழிகளை நாட்டி, ”வீரனே, நீ யாரென்று எனக்குத் தெரியும். எதற்காக வாழ்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும். நீ அரங்கன் முன்பு செய்த சபதம் நிறைவேற அரங்கனே உனக்கு அருள் புரியட்டும். உன் சபதத்துடன் தஞ்சை அரசின் நல்வாழ்வும், ஏன், கர்நாடகத்தின் நல்வாழ்வும் கலந்திருக்கிறது. இந்த அனைத்தும்…’’ என்ற மகாராஜாதமது சொற்களை முடிக்காமல் விட்டார்.

விஜயகுமாரன் பயபக்தி நிறைந்த குரலில் சொன்னான், ”கிளைவின் கைகளில் இருக்கிறது” என்று.

மகாராஜா தலையை அசைத்தார். ”இம்முறை பிரிட்டிஷார் உண்மையான வீரத்தைக் காட்டுவார்களென்று எதிர்பார்ப்போம்” என்று கூறிவிட்டு, சபை முடிந்தது என்பதற்கு அறிகுறியாக எழுந்தார் அரியணைவிட்டு. சபையோரும் எழுந்தனர்.

அன்று மானாஜி தஞ்சைக் கோட்டையின் சூட்சுமங்களையெல்லாம் விஜயகுமாரனுக்குக் காட்டிக் கொடுத்தார். நிலவறைகளைக் காட்டினார். ஆயுதசாலைகளைக் காட்டினார்; மருந்து கிடங்குகளைக் காட்டினார்; மற்ற ராணுவ அதிகாரிகளிடமும் அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் விஜயகுமாரன் தஞ்சை அரசின் முக்கிய அங்கமாக அரண்மனை வட்டாரங்களிலும் ராணுவத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டான். கோட்டை கொத்தளங்களைக் காத்த வீரர்கள் மானாஜிக்குக் காட்டிய மரியாதையை அவனுக்கும் காட்டினர். விஜயகுமாரனும் அன்றுமுதல் தன் பணியை மிக மும்முரத்துடன் தொடங்கினான். பீரங்கிகளைச் சுத்தம் செய்யவும், துப்பாக்கிகளை எண்ணை யிட்டுத் தயாராக வைக்கவும் ஏற்பாடு செய்தான். கோட்டை ராணுவத்தினரை அணிவகுத்து, தினசரி சென்னை ராணுவத்தைப் போல் ‘பரேட்’ நடத்தினான். அத்துடன் மகாராஷ்டிர ‘லைட்ஹார்ஸ்’ போர் முறையிலும் அவர்களைப் பழக்கினான். தினம் இருபது புரவி வீரர்களைத் தன் புரவியின் பின்னால் வரப் பணித்து, கோட்டைச் சாலைகளில் வெகு வேகத்துடன் சென்று வாளைச் சுழற்றியடிக்கும் முறைகளைக் கற்பித்தான்.

இந்த ஏற்பாடுகளையும் அவன் போர் சன்னத்தத்தையும் மகாராஜாவும் மானாஜியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கவனித்தனர். மூன்றாவது நாள் மானாஜி மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னார், ”மகாராஜா! நமது கோட்டைப் படை மிகவும் துரிதத்துடன். இயங்குகிறது. துப்பாக்கிப் பிரயோகத்திலும் திறமை வலுத்து விட்ட து.”

மகாராஜா தலையை அசைத்தார், அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாக. இந்த ஏற்பாடுகளுக்கு உதவ விஜயகுமாரன் தஞ்சை ராஜபேரிகையை ஒவ்வோர் இரவும் உபயோகித்ததை மட்டும் மானாஜி ஆட்சேபிக்க முயன்றார். அதற்கு மகாராஜாவே சமாதானம் சொன்னார்: ”மானாஜி போர் நிலையைச் சிருஷ்டித்து வீரர்களுக்கு உரமூட்டப் பார்க்கிறான் விஜயகுமாரன். அதுவும் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஏதாவது ஒரு அறிகுறி வேண்டும். அதற்குப் பேரிகையை உபயோகப்படுத்துகிறான். போகட்டும்.”

”ஆனால் ராஜ பேரிகை சப்திப்பதற்குச் சம்பிரதாயம் உண்டு.”

”சம்பிரதாயம் இதுவரை நமக்குப் பயன் அளிக்கவில்ல. சிறிது அதை மாற்றித்தான் பார்ப்போம்” என்று மகாராஜா கூறிவிட்டார்.

அடுத்த பத்து நாட்களும் சீர்திருத்தங்களைத் தஞ்சைப் படைகளில் செய்தான் விஜயகுமாரன். எதற்கும் மானாஜியின் உத்தரவைப் பெற்றான். இரவில் பிரதிதினம் துப்பாக்கிப் பயிற்சி படைகளுக்கு நடந்தது. மேல் சட்டையைக் கழற்றிவிட்டுச் சராயுடன் நின்று துப்பாக்கிகளுக்கு இலக்கு வைத்துச் சுடப் பழக்கினான் படைகளை. கோணிகளில் மணலைக் கட்டித் தொங்க விட்டு ‘பயனட்’ பயிற்சியும் அளித்தான்.

இந்தத் தினங்களில் வேலையின் மும்முரத்தால் அவன் இரண்டொரு முறையே நந்தினியைச் சந்தித்தான். சந்தித்த போதும் அதிகமாகப் பேசமுடியவில்லை அவனுக்கு. இதனால் பெரிதும் வெகுண்ட நந்தினி ஒரு நாள் இரவு துப்பாக்கிப் பயிற்சி நடந்து கொண்டிருந்த இடத்துக்கே வந்து சேர்ந்தாள்.

அவள் வந்ததைப் பார்க்காமலே அணிவகுத்து நின்ற வீரர்களுக்கு ‘நில், ரெடி, ஷூட்’ என்ற அவன் உத்தரவிட்டுக் கொண்டிருந்தான். சரியாகத் துப்பாக்கியைத் தோளில் பொருத்தாதவர்களுக்குப் பொருத்தி வைத்துக் காட்டினான்.
சுற்றிலும் விளக்குகளும் பந்தங்களும் ஆங்காங்கு எரிய அவற்றின் வெளிச்சத்தில், சராய்மட்டுமே அணிந்து அரை நிர்வாணமாய், கழுத்தில் ஒரு சங்கிலியும் பதக்கமும் மட்டும் ஆடப் பயிற்சி அளித்துக் கம்பீரமாய், அதிகமான அலுவலால் வியர்வை ஆறாய் ஓட நின்றிருந்த விஜயகுமாரனை அணுகிய அரசகுமாரி, ”உபதளபதிக்கு அடியோடு ஒழியவில்லை போலிருக்கிறது?” என்றாள் சிரித்தபடி.

விஜயகுமாரன் மெள்ள அவனை நோக்கித் திரும்பினான். ”எல்லாம் நீங்கள் அளித்த பதவிதானே அரசகுமாரி!” என்றான்.

அத்துடன் துப்பாக்கிப் பிரயோகம் அன்று முடிந்து விட்டதால் மேலங்கியைத் தோளில் போட்டுக் கொண்டு அரசகுமாரியுடன் சென்றான். கோட்டையின் இருளடைந்த பகுதி ஒன்றுக்கு வந்ததும் அரசகுமாரி அவனுடன் இழைந்தாள். ‘’என்ன, அரசகுமாரிக்கு மரியாதை அதிகமாகிவிட்டது?” என்றான்.

”வீரர்கள் எதிரில் எப்படி அழைப்பதாம்?” என்று கேட்டாள் அரசகுமாரி.

”அதற்காகவா?”

”ஆமாம்.”

“இப்பொழுது?”

“நந்தினி….”
அந்த ஒரு சொல் அவனை அவனுடன் இறுக வைத்தது. கோட்டையின் ஒரு பகுதி அது. அதன் பின்னாலிருந்தது சுவர். பஞ்சணைக்கு அது எப்படிக் குறைச்சல்? ‘நந்தினி நாளைக்குப் பத்து நாள் ஆகிறது” என்றான் விஜயகுமாரன், அவளை அணைத்த கைகளை எடுக்காமலே.

“ஆமாம்.”

“நாளை நான் பயணமாகிறேன்.’’

”எங்கு?”

”ஆற்காட்டுக்கு.”

“அங்கு யார் இருக்கிறார்கள்?”

”கிளைவ்.”

”எப்படித் தெரியும்?”

”சந்தேகமில்லை.”

”உங்கள் நண்பரிடம் அத்தனை நம்பிக்கை?”

“ஆமாம்.”

பிறகு அவன் பேசவில்லை. போரைப் பற்றியோ ஆற்காட்டைப் பற்றியோ கவலைப்படவில்லை. இரண்டு நாழிகைக்குப் பிறகு இருவரும் இருப்பிடம் சென்றனர்.
மறுநாள் மன்னர் அழைத்தார் விஜயகுமாரனை. ”ஆற்காட்டைக் கிளைவ் பிடித்து விட்டான். சந்தாசாகிபின் வீரர்களை இருமுறை திமிரிக் கோட்டையிலிருந்தும் விரட்டி விட்டான்’’ என்று அறிவித்தார்.

”அப்படியானால்…?”

“நீ புறப்படலாம்.’’

”எங்கு மகாராஜா?”

மகாராஜா அவனருகில் வந்து ரகசியம் சொன்னார், அவன் காதில். விஜயகுமாரன் பிரமித்துப் போனான். “மகாராஜா! உங்களுக்கு…” என்று துவங்கினான்.

மகாராஜா நகைத்தார். ”எனக்கும் சோதிடம் தெரியும்” என்று கூறி, ‘போய்வா. கிளைவின் கட்டளையை நிறைவேற்று. அது நமக்கும் அனுகூலம் ” என்றும் தெரிவித்தார்.

Previous articleRaja Perigai Part 3 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here