Home Historical Novel Raja Perigai Part 3 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

44
0
Raja Perigai Part 3 Ch11 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch11 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch11 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 11. அவுரங்கசீப்பின் பீரங்கி

Raja Perigai Part 3 Ch11 | Raja Perigai | TamilNovel.in

மகாராஜா பிரதாப்சிங் காதருகில் சொன்ன ரகசிய வார்த்தையைக் கேட்ட விஜயகுமாரன் வியப்பின் எல்லையை எய்தினானென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. மிக அந்தரங்கமாகத் தன் மனத்துக்குள் பூட்டி வைத்திருந்த கிளைவின் கட்டளை, மகாராஜாவுக்குத் தெரிந்ததே வியப்பாயிருக்க, அதை அவர் ஏற்றது வியப்பிலும் வியப்பாயிருக்கவே, சில விநாடிகள் மகாராஜாவைப் பார்த்தது பார்த்தபடியே நின்றான்.

தஞ்சையை அணுகி மைசூர் ராஜ்யத்தின் உதவியைப் பெறும்படி மகாராஜா பிரதாபசிம்மனைத் தூண்டுவது கிளைவின் கட்டளைகளில் ஒன்றாகையால் அதைப் பதிரங்கமாகச் செய்து முடித்த விஜயகுமாரன், முராரிராவின் உதவியை நாடும்படி வெள்ளைக்காரக் கிளைவ் சொன்னதை அவன் தஞ்சை மன்னரிடமிருந்து மறைத்தே வைத்திருந்தான். முராரிராவுக்கும் தஞ்சை மன்னருக்கும் தீரா விரோதமாகையால், தான் அங்கே செல்வதை அறிந்தால் கண்டிப்பாய்த் தஞ்சைச் சிறைதான் தனக்குக் கிடைக்கும் என்பதை விஜயகுமாரன் திட்டமாக உணர்ந்திருந்ததால் அடுத்தபடி போகும் இடத்தைச் சொல்லவில்லை , பிரதாப சிம்மரிடம். அப்படியிருந்தும் மகாராஜா ஊகித்து, “முராரிராவின் இருப்பிடத்துக்கு நீ புறப்படு” என்று காதருகில் சொன்னதும் பெரும் பிரமிப்பையும் வியப்பையும் அடைந்தான் விஜயகுமாரன். அந்த ரகசியத்தைத் தொடர்ந்து மகாராஜா, ”எனக்கும் சோதிடம் தெரியும்” என்று நகைச் சுவையில் வேறு ஈடுபட்டது அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டதால் கேட்டான் விஜயகுமாரன். ‘’மகாராஜா நான் செல்லுமிடம் தெரிந்தும் என்னைப் போக அனுமதிக்கிறீர்களா?” என்று.

மகாராஜா அவன் முகத்தில் பிரதிபலித்த பிரமிப்பையும் பிரமிப்பைத் தொடர்ந்த கேள்வியையும், கேள்வியில் பிரதிபலித்த நம்பிக்கையளிக்காத ஒலியையும் கவனிக்கவே செய்தாராகையால் புன்முறுவல் செய்தார். “ஆம் விஜயகுமார், நீ செல்லுமிடத்தை ஊகிப்பது கஷ்டமல்ல. கிளைவின் நிலையில் நான் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேன். மற்றவர்களின் உதவியைவிட முராரிராவின் உதவிதான் இப்போது உடனடியாகக் கிளைவுக்குக் கிடைக்க முடியும். ஆற்காட்டு எல்லையில் முராரிராவ் இருக்கிறார்” என்றார் மகாராஜா புன்முறுவலின் ஊடே.

விஜயகுமாரன் சிறிது சிந்தித்தான். ”முராரிராவ் உங்கள் எதிரியல்லவா?” என்று வினவினான்.

“ஆம்” என்றார் மகாராஜா திட்டவட்டமாக.

‘’அப்படியானால் உங்கள் உபதளபதி எதிரியிடம் தூது செல்வதும் அவர் உதவியை நாடுவதும் எப்படிச் சரியாகும்?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”நீ தூது செல்வது கிளைவின் சார்பாக. என் சார்பாக அல்ல. தவிர முராரிராவ், கிளைவ், இவர்கள் சேர்க்கை சந்தாசாகிபை முறியடிக்க உதவுமானால் அது தஞ்சைக்கு லாபம். என் மக்களின் நன்மைக்கு உதவும் விவகாரங்களில் எனது சொந்த விருப்பு வெறுப்புக்களை நான் அனுமதிப்பது கிடையாது” என்றார் மகாராஜா. மேலும் சொன்னார்: “முராரிராவ் மகாராஷ்டிரத், தளபதியாக மட்டுமாயிருந்தால் நான் அவரை வெறுக்கமாட்டேன். எந்தப் படையெடுப்பிலும் அவர் பல ஊர்களை கொள்ளையடித்திருக்கிறார். கொள்ளையடிப்பவன் எத்தனை பெரிய வீரனாயிருந்தாலும் அவனுடன் நட்புரிமை கொண்டாட நான் விரும்பவில்லை. ஆனால் இப்போது தஞ்சை அரசு இருப்பதா, சந்தாசாகிபுவுக்குப் பலியாவதா என்ற கேள்விதான் என்முன் நிற்கிறது. அதற்கு விடை ஒன்றுதான். யாரிடம் சேர்ந்தால் இந்த ராஜ்யம் பிழைக்குமோ அவர்களிடம் சேர வேண்டியது. சாந்தாசாகிபை டூப்ளே ஆதரிப்பதால் இந்தத் தஞ்சையையும் இரு முறை அவர் சந்தாசாகிபைக் கொண்டு தாக்கச் செய்து, தான் தஞ்சையின் விரோதி என்பதைப் பறைசாற்றிவிட்டபடியால், நான் பிரிட்டிஷ்காரர் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியில்லை. இதுவரை பிரிட்டிஷ் தீவிரமான போரில் இறங்காததால் அவர்கள் வீரத்தில் எனக்குச் சந்தேகமும் இருந்தது. அதைக் காப்டன் கிளைவ் போக்கடித்துவிட்டான். அவன் துணிவு இந்த நாட்டில் புதிய சகாப்தத்தைச் சிருஷ்டிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்தச் சகாப்தம் நாட்டுக்கு நல்லதா அல்லவா என்பது எனக்குத் தெரியாது. அதனால் தான் என் விரோதியிடம் நீ செல்வதைக்கூட நான் அனுமதிக்கிறேன்.” இதைச் சொன்ன மகாராஜா விஜயகுமாரனை உற்று நோக்கினார்.

விஜயகுமாரன் முகத்தில் பெருமிதம் குடிகொண்டு நின்றது. ”மகாராஜா, தங்கள் ஊகம் என்னைத் திணற வைக்கிறது.

மக்களிடம் தங்களுக்கு இருக்கும் பரிவு என்னை மேலும் தங்களிடம் அடிமைப்படுத்துகிறது. கிளைவ் திட்டங்கள் நிறைவேறினால் அடுத்து வர இருக்கிறது பெரும் போர். அது இந்தக் கர்நாடகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும். அப்படி வரும் போரில் இந்த வாள் தஞ்சைப் படைகளின் முன்னிலையில் இந்த அரசைக் காக்கச் சுழலும். என் உயிர் தங்களுக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று வேகத்துடன் கூறிவிட்டுத் தனது வாளையும் தட்டிக் காட்டிவிட்டு அகன்றான். அதற்குப் பிறகு சிறிதும் தாமதிக்காமல் பயணமானான் ஆற்காட்டை நோக்கி.

புரவியில் சுமார் நான்கு நாள் பயணத்திற்குப் பிறகு ஆற்காட்டின் எல்லையை அடைந்த விஜயகுமாரன் அதைச் சுற்றி வடபுறம் சென்று அங்கு முகாம் செய்திருந்த முராரிராவின் படைப் பகுதியை அடைந்தான். ஆற்காட்டு வட எல்லையில் மலையடிவாரத்தில் முகாம் செய்திருந்த முராரிராவின் வாயுவேக புரவிப் படை தூரத்திலிருந்து பார்ப்பதற்கே அழகாக இருந்தது. மலைச்சரிவில் மாலை நோக்கில் ஒரே ஒரு வெள்ளைக் கூடாரம் மட்டும் தெரிந்தது. அதன்மீது மகாராஷ்டிர சாம்ராஜ்யக் கொடி பறந்து கொண்டிருந்தது.

அதை அடுத்தும் சுற்றிலும் ஆயிரமாயிரம் புரவிகள் ஆங்காங்கு முளையடித்தும், சின்னஞ்சிறு செடிகளிலும் பிணைக்கப் பட்டு இருந்தன. ஒவ்வொரு புரவிக்கும் அருகே ஒரு மகாராஷ்டிர வீரன் படுத்தோ உட்கார்ந்தோ இருந்தான். வளைந்த வாள் இடையில் துலங்க, மாட்ச்லாக்துப்பாக்கி அருகே கிடக்க.

வீரர்கள் எங்கணும் பல நிலைகளில் விரவியிருந்த அந்தப் படையைத் தூரத்திலிருந்து நோக்கிய விஜயகுமாரன் அதில் சுமார் நாலாயிரம் வீரர்களுக்குக் குறையாமல் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தான். முராரிராவின் பத்தாயிரம் படை வீரரில் மற்றவர்கள் எங்கேயிருப்பார்கள் என்று சிந்தித்தான். அவர்கள் வெகு அருகில்தான் இருக்க வேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். ஆனால் இந்த நாலாயிரம் பேர் கொண்ட படையே ஆற்காட்டிலுள்ள கிளைவுக்கு உதவப் போதும் என்று தீர்மானித்தான்.

இந்த யோசனையுடன் படைக்குள் புகுந்து முராரிராவின் படை வீரரால் வெள்ளைக் கூடாரத்துக்கு அழைத்துச் செல்லப் பட்ட விஜயகுமாரன் கூடாரத்துக்குள்ளிருந்த முராரிராவைக் கண்டதும் தலை வணங்கினான்.

முராரிராவின் கூரிய விழிகள் விஜயகுமாரனை உற்று நோக்கி நகைத்தன. அவர் இதழ்களிலும் ஒரு புன்முறுவல் அரும்பி நின்றது. ”வீரனே, வரவேண்டும்” என்று மகழ்ச்சியுடன்
விஜயகுமாரனை வரவேற்றார் முராரிராவ். எதிரிலிருந்த ஓர் ஆசனத்தைச் சுட்டிக் காட்டி அதில் உட்காரும்படி சைகையும் செய்தார். பிறகு கைகளைத் தட்டி வெளியிலிருந்த காவலனை அழைத்து, “இவருடைய புரவியைக் கவனி, இவர் என்னுடன் இந்தக் கூடாரத்தில் தங்குவார்” என்று உத்தரவிட்டார், மகாராஷ்டிரத்தின் இணையற்ற தளபதி.

”நான் வந்த அலுவலைப்பற்றி ஏதும் கேட்கவில்லையே” என்று விஜயகுமாரன் துவங்கினான் பேச்சை.

“தஞ்சை அரசர் தூதைக் கேட்க அவசியம் இல்லை. கிளைவின் தூது விஷயத்தைக் கண்ணிருப்பவர் யாரும் புரிந்து கொள்ள முடியும். ஐந்நூறு பேருடன் ராஜ்யத்தைப் பிடிப்பவன் மற்றவர் உதவியை நாடுவதில் வியப்பில்லை. அப்படி அரசைப் பிடிப்பவன் பக்கத்தில் வேறு வழியின்றித் தஞ்சை பக்கம் சாய்வதும் ஊகிக்க முடியாத மர்மமல்ல” என்று ரத்தினச் சுருக்கமாக விஷயத்தை அறிவித்தார் முராரிராவ்.

விஜயகுமாரன் பதிலேதும் பேசவில்லை. முராரிராவின் புத்தி கூர்மை அவன் ஏற்கனவே உணர்ந்ததுதான். இருப்பினும் இத்தனை திட்டவட்டமாக விஷயங்களை அவர் உணர்ந்திருப்பார் என்பதை அவன் அறியாததால், “நான் கிளைவின் சார்பாக வந்திருப்பதை நீங்கள் ஊகிக்க நியாயம் இருக்கிறது. தஞ்சை சார்பாகவும் வருவேனென்பது எப்படித் தெரியும்?” என்று வினவினான்.

முராரிராவ் தாம் உட்கார்ந்திருந்த கட்டிலிலிருந்து எழுந்து அவன் தோள் மீது கையை வைத்தார் அன்புடன். “விஜயகுமார் தஞ்சையின் நிலையில் உன்னை வைத்துக்கொள். சந்தாசாகிப் திருச்சியில் வெற்றி பெற்றால் அவர் பீரங்கிகள் அடுத்தது தஞ்சையை நோக்கும், அழித்து விடும். ஆகவே அவர்கள் கிளைவ் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியில்லை. கிளைவின் நிலைமை எப்படி? திடீரென்று துணிவுத் தாக்குதலால் ஒரு கோட்டையைப் பிடிப்பது வேறு, அதைக் காப்பாற்றுவது வேறு. காப்பாற்றக் கிளைவிடம் போதிய படை இல்லை. ஆகவே அருகிலிருக்கும் என்னைத்தான் நாட முடியும். இதனால் கிளைவுக்கு லாபமுண்டு. அந்த லாபத்தால் தஞ்சைக்கும் லாபமுண்டு. ஆகையால்தான் இந்தக் கொள்ளைக்காரத் தளபதியிடம் நீ வருவதைப் பிரதாப சிம்மன் ஆட்சேபிக்கவில்லை” என்று கூறிய முராரிராவ் பெரியதாக நகைத்தார்.
தஞ்சை மன்னரையும் போர் நிலையையும் அவர் திட்டமாக அளவிட்டிருப்பதைக் கண்டு அசந்து போன விஜயகுமாரன், “அப்படியானால் நீங்கள்?” என்று துவங்கினான்.

”கிளைவுக்கு உதவவே இங்கு வந்திருக்கின்றேன். பிரிட்டிஷார் எந்த நிலையிலும் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டு அவர்கள் கோழை என்று எண்ணினேன். இப்பொழுது அவர்களில் வீரர்களும் இருக்கி றார்கள் என்பது தெரிகிறது. ஆகையால் வீரர்களுக்கு உதவுவோம். இதனால் நான் சந்தாசாகிப்பையும் ஆற்காட்டையும் வீழ்த்த முடியும். நீயும் உன் காரியத்தைச் சாதிக்க முடியும்” என்றார் முராரிராவ்.

“என் காரியமா?”

“ஆம்.”

“என்ன அது? நாடாசையா?”

”நாடாசையுமல்ல, பெண்ணாசையுமல்ல, தலை ஆசை.”

”தலை ஆசையா” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் விஜயகுமாரன்.

”ஆம். நீ யாரென்பது எனக்குத் தெரியும். எதற்காகத் தினம் ஒரு பக்கம் சேருகிறாய் என்பதும் எனக்குத் தெரியும். யாருக்கு உதவினாலும் உதவாவிட்டாலும் உனக்கு உதவுகிறேன். அந்த நவாபின் தலையை உன்னிடம் நீட்டுகிறேன், நீயே உன் வாளால் கொய்து விடு” என்ற முராரிராவ் நகைத்தார் பிசாசைப் போல.

”தளபதி’ விஜயகுமாரன் குரல் திகைப்புடன் ஒலித்தது.

முராரிராவ் விஜயகுமாரன் தோளை ஆதரவுடன் அழுத்தினார். ”எதுவும் பேசாதே. எனக்குத் தெரியாமல் கர்நாடகத்தில் எதுவும் நடக்க முடியாது. என் ஒற்றர் இல்லாத இடம் இல்லை. இன்னும் இரண்டு நாளில் என் படை ஆற்காட்டில் தென் எல்லையை அடையும். கிளைவுக்கு நாமும் ஒரு கைகொடுப்போம்” என்ற கூறவும் செய்தார்.

அதே மாலையில் கிளைவும் ஆற்காட்டில் ஒரு பெரிய பீரங்கியைக் கோட்டைக்குள் எழுப்பிக் கொண்டிருந்தான். அது பழைய பீரங்கி. ஆனால் பழைய உருப்படிகளிலும் சில சௌகரியங்கள் உண்டு என்பதைக் கிளைவ் உணர்ந்திருந்தான். அந்த அரசு பீரங்கி அவரங்கசீப்பின் சொத்து என்பது அவனுக்கு ஒரு விபரீதத் திருப்தியையும் அளித்தது.

Previous articleRaja Perigai Part 3 Ch10 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch12 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here