Home Historical Novel Raja Perigai Part 3 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

42
0
Raja Perigai Part 3 Ch13 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch13 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 13. பேரும் புகழும்

Raja Perigai Part 3 Ch13 | Raja Perigai | TamilNovel.in

அவுரங்கசீப் எப்படி வயதான காலத்திலும், உடல் தளர்ந்த காலத்திலும் உறுதி தளரவில்லையோ, அப்படியே அவர் ஆற்காட்டுக்கு அனுப்பிவைத்த அந்தப் பீரங்கியும் காலத்தின் கோலத்தில் துருப்பிடித்திருந்தும் தன் உரத்தில் தளரவில்லையாகையால், அது கோட்டையே அதிரும்படியாக வெடித்து 72 பவுண்டு எடையுள்ள குண்டை நேராக ராஜா சாகிப் இருந்த அரண்மனைக்குக் குறுக்கே அனுப்பிவைத்தது.

அப்போது ராஜா சாகிப் தமது படைத் தலைவர்களுடன் மந்திராலோசனையில் இருந்த சமயம். அந்தச் சமயத்தில் அரண்மனையை ஊடுருவிச் சென்ற அந்த அசுர குண்டு அரண்மனையின் இடப் பாகத்தில் சில இடங்களைச் சேதப்படுத்தியது. இதனால் திகிலடைந்த ராஜா சாகிப் மறுநாள் முதல் தமது மந்திராலோசனையை நடுப்பகலில் வைத்துக் கொண்டார். காலையிலும் மாலையிலும் கோட்டை மீது பிரெஞ்சுப் பீரங்கிகளைக் கொண்டு குண்டுமாரி பொழியவும் ஏற்பாடு செய்தார். இதனால் சில இடங்கள் மீண்டும் பழுதுப்பட்டன. அதனால் கிடைத்த சிறிது இடைவெளியில் ராஜா சாகிப் கோட்டைக்கு வெளியில் இருந்த சத்திரம் சாவடிகளில் தங்கியிருந்த துருப்புகளால் நிரப்பி, கோட்டையைச் சுற்றி முற்றுகையை நன்றாக இறுக்கிவிட்டார்.

இப்படி எதிரியின் முற்றுகை இறுகிவிட்டதையும், அதனால் உணவுப் பண்டங்கள் கோட்டைக்குள் குறைந்து சோல்ஜர்களும் சிப்பாய்களும் பட்டினி கிடக்கும் நிலைமை கிட்டி வருவதையும் கண்ட கிளைவ், அடுத்தடுத்து மூன்று நாட்கள் பகல் வேளையில் அவுரங்கசீப் பீரங்கியில் பெருங்கருங்கள் குண்டுகளை வைத்து சந்தாசாகிபின் அரண்மனையைக் குறித்து நோக்கி வெடித்தான். அந்தப் பீரங்கி பழுது பட்டிருந்தாலும், அதன் முதுகின் பல இடங்களில் களிமண்ணால் என்ஸைன் க்ளாஸ் அடைத்திருந்த துளைகள் மீண்டும் பெரிதாகிவிட்டதாலும் அதிக நாள் அந்த பீரங்கி தாங்காதென்றும் அதற்கு முடிவு காலம் வந்து விட்டதென்றும் கிளைவ் புரிந்து கொண்டான். அதன் விளைவாக அதை நான்காவது நாள் வெடிக்க ஆரம்பித்தபோது சோல்ஜர்களைச் சற்று எட்ட நிற்க வைத்து, ”பையர்!” என்று உத்தரவிட்டான்.

பீரங்கி வாயிலில் நெருப்பு வைக்கப்பட்டதும் பீரங்கி வெடிக்கவே செய்தது. எதிரியை நோக்கி அல்ல. கோட்டைக்குள்ளேயே முதுகுப்புறமாக வெடித்து, பல துண்டு களாகச் சிதறி வாண வேடிக்கை செய்தது. இதைக் கண்ட சோல்ஜர்களும் சிப்பாய்களும் ஆனந்தக் கூச்சலிட்டார்கள். கோட்டை பீரங்கித் தாழ்வரையிலும் குதித்து ஆரவாரம் செய்தார்கள். இந்தப் பெருங்கூச்சல் மந்திராலோசனையில் இருந்த ராஜாசாகிபின் காதிலும் விழவே, ராஜா சாகிப் மந்திராலோசனை அறையிலிருந்து தனது படைத் தலைவர்களுடன் வந்து கோட்டையை உற்று நோக்கினார்.

படைத் தலைவர்களில் ஒருவன் கோட்டையின் உள்ளே கேட்ட கூச்சலுக்குக் காரணம் புரியாமல், ”நவாப் இதைன்ன கூச்சல்? அச்சம் எதிரிகளைப் பைத்தியமாக அடித்துவிட்டதா?” என்று வினவினான்.

சந்தாசாகிபின் மகனும் மகாவீரனுமான ராஜாசாகிப் உடனடியாகப் பதில் சொல்லவில்லை, தனது படைத் தலை வனுக்கு. நீண்ட நேரம் கோட்டையை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார். கடைசியில் சொன்னார் “இது அச்சத்தின் கூச்சலல்ல. பைத்தியத்தின் கூச்சலுமல்ல” என்று.

”வேறு என்ன கூச்சலாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?” என்று வினவினான் படைத்தலைவன்.

”வீரக் கூச்சல்” என்று பெருமிதத்துடன் பதில் சொன்னார் ராஜாசாகிப்.

‘’வீரத்தின் கூச்சல்!” என்று வினவினான் படைத் தலைவன் ராஜாசாகிப் சொன்னதை நம்பாமல்.

ராஜாசாகிப் தமது படைத் தலைவனை அழைத்து, ”டெலஸ்கோப் கொண்டு வா’ என்று உத்தரவிட்டார். அந்த டெலஸ்கோப்பை ஒரு கண்ணில் வைத்துக் கையால் நீட்டி ‘போகஸ்’ செய்து கோட்டையை நோக்கினார் பல விநாடிகள். பிறகு டெலஸ்கோப்டைப் படைத் தலைவன் கையில் கொடுத்து, ”இப்போது நீயே பார்” என்றார்.

படைத் தலைவன் டெலஸ்கோப்பின் மூலம் கோட்டைக் குள்ளிருந்த நிலையைக் கவனித்தான். அவன் முகத்தில் நம்பிக்கை யின்மையும் வியப்பும் கலந்து தாண்டவமாடின. ”என்ன தெரிகிறது?” என்று கேட்டார் ராஜாசாகிப்.

”அவுரங்கசிப்பீன் அரசு பீரங்கி படுதூளாக வெடித்துச் சிதறிக் கிடக்கிறது” என்றான் படைத்தலைவன்.

”இன்னும் என்ன தெரிகிறது?” என்று மேலும் வினவினார் ராஜாசாகிப்.

”அதைச் சுற்றிலும் பிரிட்டிஷ் சோல்ஜர்களும் சிப்பாய் களும் கூத்தாடுகிறார்கள். பெரிய கோழி இறகை ஹாட்டில் செருகி இருக்கும் ஒரு வெள்ளை வாலிபன் அதைப் பார்த்துக் கொண்டு எட்ட நிற்கிறான். பக்கத்திலிருக்கும் இன்னொருவனிடம் ஏதோ சொல்கிறான்” என்று கூறினான் படைத் தலைவன்.

”அதைப் பார்க்கும் அந்த வாலிபன் தான் பிரிட்டிஷ் காப்டன் கிளைவ். கூத்தாடுபவர்கள் நம்மால் முற்றுகையிடப்பட்டுச் சோறு தண்ணீரில்லாமல் கஷ்டப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் வீரர்கள்” என்று ராஜா சாகிப் பெருமிதத்துடன் சொன்னார். ‘’வாரே வா” என்று உற்சாகமும் பட்டார்.

படைத் தலைவனுக்கு ஏதும் புரியவில்லை . ”நவாப் இதில் உற்சாகப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்று வினவினான்.

ராஜாசாகிப் அவன் கையிலிருந்த டெலஸ்கோப்பை வாங்கிக் கோட்டையை மீண்டும் நீண்ட நேரம் உற்று நோக்கிக் கொண்டே இருந்தார். முடிவில் அதைக் கண்ணிலிருந்து அகற்றி அருகிலிருந்த எல்லாப் படைத் தலைவர்களையும் உற்றுப் பார்த்தார். ”படைத் தலைவர்களே எதிரிகள் மிகச் சொற்ப மானவர்கள். போர் அநுபவமில்லாத ஒரு குமாஸ்தாவின் தலைமையில் இயங்குபவர்கள். கோட்டைக்குள் நாம் உணவுப் பொருள்கள் செல்லாதபடி அடித்திருக்கிறோம். இத்தனையிலும் எதிரி வீரர்கள் உற்சாகம் இழக்கவில்லை. பெரிய பீரங்கி பயனற்றுப் போனதைத் திருவிழாவாக நினைத்துக் குதிக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது?” என்று வினவினார் ராஜாசாகிப்.

“தலைக்கு மேலே போன வெள்ளம் சாண் போனாலென்ன, முழம் போனாலென்ன என்ற நிலையில் எதிரி இருக்கிறான்” என்றான் ஒரு படைத்தலைவன்.

”நாம் நினைப்பது போல் கோட்டைக்குள் உணவுப் பொருள்கள் குறைந்துவிட்டதாகத் தெரியவில்லை” என்றான் இன்னொரு படைத்தலைவன்.

”வேறு ஏதோ தந்திரத்துக்கு எதிரி அடிகோலுகிறான்” என்றான் மற்றொரு படைத்தலைவன்.

ராஜாசாகிப் படைத் தலைவர்கள் சொன்னதையெல்லாம் நிதானமாகக் கேட்டார். பிறகு திடீரெனப் பெரிதாக நகைத்தார். ”படைத் தலைவர்களே! நம்மில் கால்வாசிப் படைபலங்கூட இல்லாத எதிரி குதூகலிக்கிறான் கோட்டைக்குள், ஆயுதம் வெடித்த பின்பு. நீங்கள் இங்கே குழம்புகிறீர்கள், அங்கு என்ன இருக்குமோ ஏதிருக்குமோ என்று. இதுதான் இரு படைகளுக்குமுள்ள வித்தியாசம். அங்கு ஆபத்தை அலட்சியம் செய்யும் வீரர்கள்; இங்கு ஆபத்து இல்லாதிருக்கும்போதே அஞ்சும் படைத்தலைவர்கள்; இதுதான் வித்தியாசம். கோட்டைக்குள் இருக்கும் வீரர்களுக்கும் அவர்கள் காப்டனுக்குள்ள துணிவும் அசட்டையும் இருக்கின்றன. காப்டன் கிளைவின் துணிச்சல் பெரும் தொற்று வியாதி. அது அங்கு எல்லோரையும் பிடித்துச் கொண்டிருக்கிறது. அவர்களை எளிதில் முறியடிக்க முடியுமென்று தோன்றவில்லை. கால தாமதம் செய்வதும் உசிதமல்ல. ஆகவே அவர்கள் சரணடையச் சந்தர்ப்பம் கொடுப்போம்” என்றார்.

இதைக் கேட்ட படைத் தலைவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். “இன்னும் இரண்டு நாளில் கோட்டையின் வடமேற்கில் சுவரை உடைக்கிறோம்” என்றான் ஒரு படைத் தலைவன்.

ராஜாசாகிப் தனது வீர விழிகளை அந்தப் படைத்தலைவன் மீது திருப்பினார். அவன் வேலுர்க் கோட்டைக் காவலனான மூர்ட்டிஸா அலி. மிகத் துணிவுள்ளவன்தான். இருந்தாலும் இத்தனை நாள் யார் பக்கம் தான் சாய வேண்டுமென்பதைச் சிந்தித்து, ராஜாசாகிப்பின் கை ஓங்கியதும் அவர் பக்கம்தான் சேர்ந்தான். அவனை மிகுந்த சந்தேகக் கண்ணுடன் நோக்கிய ராஜாசாகிப், ”இத்தனை நாள் அதை ஏன் செய்யவில்லை?” என்ற வினவினார்.

”எதிரி முழுபலத்துடன் இருந்தான்” என்றான் மூர்ட்டிஸா அலி.

”இப்போது?”

“பாதி குறைந்துவிட்டது. தவிர…”

”தவிர?”

”உண்மையில் கோட்டைக்குள் உணவுப் பஞ்சம் இருக்கிறது.”
”அதனால்?”

“இப்பொழுது…”

“இப்பெழுது?” ராஜாசாகிப்பின் குரலில் கடுப்பு இருந்தது.

”எதிரியை வழிக்குக் கொண்டு வருவது எளிது” என்றான்.

ராஜாசாகிப்பின் அழகிய வதனத்தில் புன்முறுவல் அரும்பியது. ”அப்படியானால் அவர்களுக்குச் சரணடைய வாய்ப்புக் கொடுத்தால் சரணடைந்து விடுவார்களா?” என்று வினவினார்.

”சந்தேகம் இல்லாமல்” என்று கூறினான் மூர்ட்டிஸா அலி. ஆனால் அந்த வாய்ப்பு நாம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றும் உறுதியாகச் சொன்னான்.

”எதற்கும் அதையும் முயன்று பார்ப்போம். இல்லா விட்டால் தங்கள் வீரத்தைக் காட்ட நிறைய சந்தர்ப்பம் இருக்கும்” என்ற ராஜாசாகிப் படைத்தலைவன் ஒருவனை நோக்கி, ”ஒரு சமாதானக் கொடியுடன் ஒரு வீரனை அனுப்புங்கள் கிளைவிடம். கோட்டையை விட்டுக் கொடுத்தால் வீரர்கள் அனைவரும் ஆபத்தில்லாமல் வெளியேற நாம் அவாக்குக் கொடுப்பதாகச் சொல்லுங்கள். கிளைவுக்கு நிரம்பப் பணம் கொடுப்பதாகவும் தூதன் கூறட்டும். கிளைவ் ஒரே நாளில் கோடீசுவரனாக முடியும் என்று தெரிவியுங்கள்” என்று உத்தரவிட்டார் வேகமாக.
ராஜாசாகிப் சொன்னபடி வெள்ளைக் கொடியுடன் ஒரு தூதன் அனுப்பப் பட்டான் கோட்டைக்கு. ராபர்ட் கிளைவ் அப்போது கோட்டைக்குள் மதிலைச் சுற்றி வெட்டியிருந்த நீண்ட ‘ட்ரெஞ்சை’ (போர்ப் பள்ளத்தை)க் கவனித்துக் கொண்டிருந்தான். அந்தப் பள்ளத்தை அடுத்து இன்னொரு பள்ளமும் வெட்டச் சொல்லிக் கொண்டிருந்தான். “இன்னொரு பள்ளம் எதற்கு?” என்று வினவினான் ஒரு பிரிட்டிஷ் லெப்டினண்ட்.

”கோட்டை விழுந்தால் முதல் பள்ளத்திலிருந்து எதிரியைச் சுடுவோம் துப்பாக்கியால். அதை எதிரி ஆக்ரமித்தால் அடுத்த ட்ரெஞ்சியிலிருந்து சுடுவோம். எதிரி கோட்டையைப் பிடிப்பதானால் என் பிணத்தின் மீதுதான் பிடிக்க முடியும்” என்று விளக்கினான் கிளைவ்.

இப்படி அவன் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ராஜா சாகிபிடமிருந்து தூதன் வந்திருப்பதாக அறிவிக்கப்படவே, “இங்கேயே தூதனை அழைத்துவா” என்று உத்தரவிட்டான் கிளைவ்.

வந்த தூதன் கிளைவுக்குத் தலைவணங்கி, ”காப்டன்! நான் இளைய நவாப்பின் தூதனாக வந்திருக்கிறேன்” என்ற அறிவித்தான்.

”பயப்படாமல் சொல்” என்றான் கிளைவ்.

”ஆற்காட்டின் உண்மை நவாபான சந்தாசாகிபின் மைந்தரும் இளைய நவாபுமான ராஜாசாகிப் உங்கள் வீரத்தைப் பாராட்டுகிறார். ஆனால் இந்த வீரம், கோட்டையைக் காப்பாற்றி விடலாம் என்ற வீண்பிடிவாதம் உங்களுக்குப் பயனளிக்காது என்று சொல்லச் சொன்னார். ஆகவே வீணாக ரத்தம் சிந்த இஷ்டப்படாமல் உங்களுக்குப் பாதுகாப்பும் நன்மையும் அளிக்கும் வழியைக் காட்டுகிறார். நீங்கள் சரணடையும் பட்சத்தில் உங்கள் வீரர்களைத் தொடாமல் வெளியேற நவாப் அனுமதிப்பதாக உறுதி கூறுகிறார். உங்கள் வீரத்தைப் பாராட்டும் வகையில் உங்களுக்குப் பெரும் பணம் அளித்துக் கோடீசுவரராக்கச் சம்மதிக்கிறார். இல்லையேல் உடனடியாக நவாபின் பீரங்கிகள் உங்கள் கோட்டையைப் பிளக்க நகரும்” என்று தூதைக் கூறினான்.

கிளைல் தனது பக்கத்திலிருந்த லெப்டினண்டை நோக்கினான். ”லெப்டினண்ட் வாட் யூ திங் ஆப் தி ப்ரபோஸல்?”

”வெரி அட்ராக்டிவ்” என்றான் லெப்டினண்ட்.

கிளைவ், ”ஷ்யூர்! வெரி அட்ராக்டிவ்” என்று கூறியவன், ”வெல் லெப்டினண்ட் அட்ராக்டிவ் டு ஹும்?” என்று வினவினான்.

லெப்டினண்ட் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான். கிளைவே சொன்னான். “அட்ராக்டிவ் டு எ கவர்ட், ஒன் ஹுகான் பி பிரைப்ட் (இது கோழையை வசீகரிக்கக்கூடியது. லஞ்சம் வாங்குபவனுக்கும் நல்லது)” என்று. அத்துடன் நிலத்தில் கண்களைத் தாழ்த்தியபடி, ”பட் நாட் டு ஒன் ஹூ வாண்ட்ஸ் க்ளோரி பார் ஹிஸ் லாண்ட். நோ, டெபனட்லி நாட்டு எ சோல்ஜர் (தனது நாட்டுக்குப் புகழைத் தேடுபவனுக்குச் சிறிதும் ஒவ்வாதது. போரிடுவனுக்கும் ஒவ்வாதது)” என்று கூறினான் உரக்க.
கடைசியில் தலை தூக்கி நோக்கிச் சொன்னான் ராபர்ட் கிளைவ்: “இளைய நவாபுக்கு என் வணக்கத்தைச் சொல். வீரன் பணத்தைவிடப் புகழை விரும்புவான் என்று சொல். ஆகவே அவகாசம் இருக்கும்போதே அகலச் சொல், இந்தப் பகுதியைவிட்டு.” அப்பொழுது கிளைவின் கண்கள் பெரிதும் பளிச்சிட்டன.

தூதன் கிளைவின் பதிலைக் கேட்டு வணங்கித் திரும்பினான், ராஜாசாகிப்பின் இருப்பிடத்துக்கு. செய்தியை வாங்கிய ராஜாசாகிப் மூர்ட்டிஸா அலியை நோக்கினார் புன்முறுவலுடன். “பதிலைக் கேட்டீர்களா?” என்று வினவினார்.

”கேட்டேன். திமிர் பிடித்தவன்” என்றான் வேலூர் கோட்டைக் காவலன்.

”திமிரல்ல, வீரம் பேசுகிறது. இப்போது நீங்கள் உங்கள் வீரத்தைக் காட்டலாம். பீரங்கிகளை வடமேற்குத் திசையில் நகர்த்துங்கள்” என்று உத்தரவிட்டார் ராஜாசாகிப். பீரங்கிகள் நகர்ந்தன. அக்டோபர் 30-ஆம் தேதி ஆற்காட்டுப் போரின் உக்கிரமான நிலை அணுகிக் கொண்டிருந்தது.

Previous articleRaja Perigai Part 3 Ch12 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here