Home Historical Novel Raja Perigai Part 3 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 3 Ch14 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch14 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 14. தூதன் தாவூத்

Raja Perigai Part 3 Ch14 | Raja Perigai | TamilNovel.in

புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பழமொழிக்கு ஓர் எடுத்துக் காட்டு தேவையென்றால், அந்த எடுத்துக் காட்டாகச் சந்தாசாகிபின் மகனும் இளைய நவாபுமான ராஜாசாகிப் விளங்கினார். அக்டோபர் 30-ஆம் தேதியன்று தனது பெரிய பீரங்கிகளொன்றை ஆற்காட்டுக் கோட்டையின் வடமேற்கு வாசலை நோக்கி நகர்த்தியதன்றிக் கோட்டை மதிளின் தென் மேற்குப் பகுதியிலும் இரண்டு பீரங்கிகளைக் கொண்டு மதிளை இடித்துத் தள்ளி, படைகள் உட்புகப் பெரிய இடைவெளி ஒன்றை உண்டாக்கினார். ஆனால் உடனடியாக அவர் கோட்டைக்குள் புக எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் வடமேற்கு வாயிலை நோக்கிப் பிரெஞ்சு சோல்ஜர்கள் பீரங்கிப் பிரயோகம் மட்டுமே செய்யப் பணித்திருந்தார். அவருடைய தாமதத்துக்குக் காரணத்தை அறியாத மூர்ட்டிஸா அலி மிகவும் வெகுண்டு, “நவாப் வடமேற்கிலும் தென்மேற்கிலும் சுவரை இடித்து விட்டோம்; இனி கோட்டைக்குள் புக ஏன் தாமதிக்கிறீர்கள்?” என்று வினவினான்.

இளைய நவாபின் கூரிய விழிகள் இடிந்து கிடந்த சுவர்ப் பகுதிகள் இரண்டையும் டெலஸ்கோப் மூலம் கவனித்தன மாறி மாறி. பிறகு டெலஸ்கோப்பை வேலூர் கோட்டைத் தலைவரிடம் கொடுத்து, இப்போது இரு இடங்களையும் பாருங்கள்” என்று சொன்னார் அமைதியாக.

டெலஸ்கோப்பைக் கையில் வாங்கி இரு பகுதிகளையும் கவனித்த மூர்ட்டிஸா அலி. ”புதிதாக எதுவும் என் கண்ணுக்குத் தெரியவில்லை ” என்று கூறினார்.
”இரு பகுதிகளையும் அடுத்துக் கோட்டைக்குள் இரு போர்ப் பள்ளங்கள் ஓடுகின்றன’’ என்று சுட்டிக் காட்டினார் இளைய நவாப்.

”ஆம்” என்றார் மூர்ட்டிஸா அலி.

”கிளைவ் முன் யோசனையுடன் நடந்து கொண்டிருக்கிறான்” என்றான் இளைய நவாப்.

”பள்ளம் வெட்டுவதில் என்ன முன் யோசனை இருக்கிறது?” என்று வினவினார் மூர்ட்டிஸா அலி சிறிது கடுப்புடன்.

இளைய நவாப் அவரது கடுப்பைக் கவனித்ததாகவே தெரிய வில்லை. ‘வேலூர் தளபதி அவர்களே வெள்ளைக்காரர் போர் முறையை நீர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் பள்ளங்கள் வெட்டுவது தங்களைப் புதைத்துக் கொள்வதற்காக அல்ல. நாம் இடித்துத் தள்ளிய கோட்டைச் சுவர்ப் பகுதிகளில் நாம் புகமுற்பட்டால் மஸ்கேட் துப்பாக்கிப் பிரயோகம் அந்தப் பள்ளங்களிலிருந்து நடக்கும். குழியிலிருப்பவர்களை நாம் சுட முடியாது. ஆனால் குழியிலிருப்பவர்கள் நம்மைச் சுடலாம். கிளைவ் அந்தப் பள்ளங்கள் ஒவ்வொன்றிலும் இருபது பேரை நிறுத்தினால் ஒரு பெரும் படை கூட அந்தப் பகுதிகளை அபாயக் குறைவுடன் தாண்டிச் செல்ல முடியாது” என்று இளைய நவாப் விளக்கினார்.

கண்ணிலிருந்து டெலஸ்கோப்பைக் கழற்றிய மூர்ட்டிஸா அலி கேட்டார். ”அப்படியானால் நாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்காந்திருக்க வேண்டியதுதானா?” என்று.
”அவசியமில்லை. நான் இன்னும் சிறிது உதவி கேட்டுக் கவர்னர் டூப்ளேயுக்கும் என் தந்தைக்கும் எழுதியிருக்கிறேன். எழுதிப் பத்து நாட்களுக்குமேல் ஆகிவிட்டது. இன்னும் நாலைந்து நாளில் உதவியை எதிர்பார்க்கிறேன். அப்பொழுது பெரும் பலத்துடன் கோட்டைக்குள் நுழைவோம்” என்றார் இளைய நவாப். ”அதுவரையில் நமது படைப் பிரிவுகள் தினம் இருமுறை கோட்டைமீது பீரங்கிப் பிரயோகம் செய்யட்டும். எதிரி சோல்ஜர்களோ சிப்பாய்களோ அந்தச் சுவர் வெடிப்புகளில் கண்ணுக்குத் தெரிந்தால் சுடட்டும். எதிரிக்கு ஆள்பலம் குறைவு. அதை இன்னும் குறைக்கப் பார்ப்போம்” என்று உத்தரவிட்டார்.

ராஜாசாகிபின் உத்தரவுப்படியே சதா கோட்டை இடை வெளிகளிலும், பிரதான வாயில் மூலமாகவும் பீரங்கிப் பிரயோகம் நடந்தது. கோட்டைச் சுவரைவிட உயரமாய் வெளியில் இருந்த பெரும் மாளிகைகளின் மாடி அறைகளில் ராஜாசாகிப் துப்பாக்கி வீரரையும் நிற்க வைத்துக் கோட்டை மீது வருகிறவர்களைச் சுட ஆரம்பித்தார். அந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் கோட்டையைக் காத்த கிளைவின் படைவீரர்கள் இருவர் மாண்டனர். நாலைந்து பேர் காயமும் அடைந்தனர்.

தனது நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதைக் கிளைவ் உணரவே செய்தாலும் அதைச் சிறிதும் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் கோட்டை மதிளுக்கருகே இரவும் பகலும் உலாவலானான். கோட்டை மதிளை அடுத்து இல்லங்களில் வசித்து வந்த ஆற்காட்டுக் குடும்பங்களை வெளியேற்றி அந்த இல்லங்களில் தனது படைவீரரைக் குடியேற்றி, அங்கு நாலைந்து சிறு பீரங்கிகளை வைத்து, இடிந்து கிடந்த சுவர்களை நோக்கித் திருப்பினான். இதைப்பற்றிக் காயமடைந்து கிடந்த என்ஸைன் க்ளாஸினிடமும் பிரஸ்தாபித்தான். ”இதனால் என்ன பயன்?” என்று வினவினான் க்ளாஸ்.

‘’ட்ரெஞ்சுகளில் இருக்கும் வீரர்களால் என்ன பயன்?” என்று வினவினான் கிளைவ்.

”மறைந்து நின்று சுட முடியும்” என்றான் க்ளாஸ்.

”அதையே இந்த வீடுகளிலிருந்தும் செய்யலாம். பள்ளங்களிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மட்டும் செய்யலாம். ஆனால் பக்கவாட்டு இல்லங்களிலிருந்து பீரங்கிகள் முழங்கும்.”

“அப்படியானால் எதிரிகள் மூன்று பக்கங்களில் ஏக காலத்தில் தாக்கப்படுவார்கள்.”

“ஆம்.”

”இது புதிய போர்முறை காப்டன்; இதை யாரும் யோசித் திருக்க முடியாது.”

‘’அவசியம் வரும்போது, பூரண அழிவு எதிர்நோக்கி யிருக்கும்போது எந்த மனிதனின் மூளையும் துரிதமாக வேலை செய்யும். எந்தக் களிமண் மூளையிலும் யுக்திகள் பிறக்கும்’’ என்ற கிளைவ், “உன் காயம் எப்படியிருக்கிறது?” என்று விசாரித்தான்.

”என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்” என்றான் என்ஸைன் க்ளாஸ்.
”மை டியர் பாய்! எவ்வரி ஒன் ஆஃப் யூ ஈஸ் இம்பார்ட் டண்ட்டு மி நௌ. அண்ட் அகைன், மைண்ட் யூ, இட் இஸ் நாட் தி லீடர்ஸ் தட் வின் எ வார், பட் தி மொரோல் ஆப் தி ஆர்டினரி சோல்ஜர் டஸ். காப்டன்ஸ் அண்ட் ஜெனரல்ஸ் டேக் தி க்ரெடிட் பார் தி விக்டரி பிராட் அபௌட் பை தி ஸாக்ரிபைஸ் ஆப் ஸோல்ஜர்ஸ்” என்ற கிளைவ், என்ஸைன் க்ளாஸின் தலையைத் தடவிக் கொடுத்தான்.

என்ஸைன் க்ளாஸின் கண்களில் நீர் சுரந்தது. கிளைவின் கையைப் பற்றி நன்றியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டான். ‘காப்டன்! இஃப் ஐ ஹாவ் ஹண்ட்ரெட் லைவ்ஸ் ஐ வில் ப்ளேஸ் தெம் அட் யுவர் சர்வீஸ்” என்று நாதழுதழுக்கக் கூறினான்.

கிளைவின் மனமும் நெகிழ்ந்தது. ஆனால் அதை வெளிக்குக் காட்டாமல் காயமடைந்த மற்றச் சோல்ஜர்களையும் சிப்பாய்களையும் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் ட்ரெஞ்சுகளைப் பார்வையிடச் சென்றான். ட்ரெஞ்சுகளைப் பார்வையிட்டுக் கோட்டை மதிளையும் கவனித்தான். இடிந்த சுவர்ப் பகுதிகளைப் பார்த்து நிற்கும் பிரெஞ்சுப் பீரங்கிகளைக் கவனித்தான். பிறகு டெலஸ்கோப்பை எடுத்து எதிரே தெரிந்த நவாபின் படைப் பகுதிகளைக் கவனித்தான். தன் படையைவிட மூன்று பகுதி அதிகப் படையிருந்ததும் ராஜாசாகிப் ஏன் தாமதிக்கிறார் கோட்டையைத் தாக்க என்பது புரியவில்லை கிளைவுக்கு. ‘வீணாகக் கால தாமதம் செய்கிறார் ராஜா சாகிப். அவர் நிலையில் நான் இருந்தால் இந்தக் கோட்டையை இப்போதே தாக்குவேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். ‘விஜயகுமாரன் என்ன ஆனான்? தஞ்சை அரண்மனையில்
காதலியுடன் தங்கிவிட்டானா? முராரிராவுக்கு என் தூதைச் சொன்னானா இல்லையா?” என்று பல கேள்விகளையும் எழுப்பிக் கொண்டான். திடீரென்று கோட்டை மீது பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக்கைக் கவனித்தான். “இட் ஈஸ் எ ப்ரௌட் திங்டுடை பார் மை ப்ளாக்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டான். அதற்குப் பிறகு அவன் யோசனைகள் அகன்றன. நடை துரிதப்பட்டது. ஒரு புத்துயிர் உடலில் ஓடியது. விடுவிடுவென அங்கிருந்த வீரர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு சென்றான்.

கிளைவின் கவலையும் யோசனையும் துரிதமும் எத்தனை யிருந்தனவோ அத்தனை ராஜா சாகிப்பிடமும் காணப்பட்டன. ராஜா சாகிப் எதற்கும் கவலைப்படுவரல்ல. அவரது துணிவை அவர் எதிரிகள்கூடச் சந்தேகித்தது கிடையாது. இருந்தாலும் அவர் நவம்பர் 9-ஆம் தேதி வரையில் கோட்டையைத் தாக்க முயற்சி எதுவும் எடுக்கவில்லை . நவம்பர் 9-ஆம் தேதி இரவில் எதிர்பாராதவிதமாக மகாராஷ்டிரப் புரவிக் காற்றுப் படை திடீரென ஆற்காட்டில் நுழைந்தது. பல இல்லங்களைச் சூறையாடிவிட்டு ராஜாசாகிபின் படை தயாராவதற்குள் பறந்து விட்டது. இதற்கும் ராஜாசாகிப் மசியவில்லை.

மறுநாள் தனது படைத்தலைவர்களை அழைத்து ஆற்காட்டு எல்லைப் புறங்களை அடைத்து விடும்படி உத்தரவிட்டார். ”நமது ஒற்றர்கள் எங்கும் பரவட்டும். டெலஸ்கோப்புகளைக் கொடுத்து எல்லைக் கண்காணிப்பு மண்டபங்களில், ஆற்காட்டை அணுகும் வழிகளைக் கவனிக்கச் சொல்லுங்கள். இன்னும் இரு ஒற்றர்கள் புதுச்சேரிக்கும் செயின்ட் டேவிட் கோட்டைக்கும் விரையட்டும்” என்றார்.

அவர் உத்தரவுப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் இரண்டே நாட்களில் புதுச்சேரியிலிருந்தும் செய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்தும் தகவல் வந்தது. தகவல் கொண்டு வந்தது ராஜாசாகிப் அனுப்பிய ஒற்றர்களல்ல. புது ஒற்றன் ஒருவன் ராஜாசாகிப்பை அணுகிச் சலாம் செய்தான். ”யார் நீ?” என்று வினவினர் இளைய நவாப்..

பதிலுக்கு மடியிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான் அந்த வீரன். கடிதத்தைப் படித்த இளைய நவாப் வினவினார், ”உன் பெயர் என்ன?” என்று.

”தாவூத்” என்றான் ஒற்றன். ”இந்தக் கடிதத்தைப் படித்தாயா?” என்று வினவினார் நவாப்.

”படித்தேன்.”

”ஏன்?”

”என்னை முராரிராவின் வீரர்கள் துரத்தினார்கள். அவசிய மானால் கழுதையாயிருப்பேன்.”

”என்ன, கழுதையாக இருப்பாயா?”

”ஆம். காதிதத்தைத் தின்றிருப்பேன். ஆனால் செய்தி என் சிந்தையைவிட்டு அகன்றிருக்காது….”
தூதனின் இந்த வாக்கியத்தைக் கேட்ட இளைய நவாபின் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது.

”இந்தக் கடிதத்தில் ஸெய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்து காப்டன் கில்பாட்ரிக் என்பவர் தலைமையில் ஒரு படை வருவதாக எழுதியிருக்கிறது. முராரி ராவும் இங்கே கிளைவின் உதவிக்கு வருவதாகக் கண்டிருக்கிறது” என்றார் இளைய நவாப்.

”முராரி ராவ் ஆற்காட்டு நகர வழிகளை அடைத்து விட்டார். நகர்ப்புறத்தின் வெளியே சாலைகளைத் தடுத்திருக்கிறார். ஆனால் கில்பாட்ரிக் வர இன்னும் நான்கு நாட்கள் ஆகும்.”

”அதனால்?”

”சீக்கிரம் நீங்கள் கோட்டைத் தாக்க வேண்டுமென்பது புதுவைக் கவர்னர் உத்தரவு. உங்களுக்கு உதவிப் படையும் கிளம்பிவிட்டது. ஆனால் அது வரும் வரை காத்திருக்க அவகாசமில்லை.’’

”உண்மை. நாளைக் காலையில் நாம் தாக்குவோம். இன்று தேதி என்ன?”

“நவம்பர் 13.”

”அச்சா இது வெள்ளைக்காரர்களுக்கு துரதிருஷ்ட எண். நாளை நமது யானைப்படை முன்னணியில் நகரும். அதன் பாது காப்பில் மற்றப் படைகள் பின்னால் நகரட்டும்” என்ற ராஜா சாகிப் தூதனைக் கவனிக்க சகல ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னார்.

தூதன் வணங்கிச் சென்றதும் மூர்ட்டிஸா அலியை நோக்கி, ‘’மூர்ட்டிஸா நான் முட்டாள் இல்லையா?” என்று வினவினார் இளைய நவாப்.

”எப்படி?”

”ஒரு தூதனின் முன்பு தாக்குதல் முறையைச் சொல்லலாமா?”

மூர்ட்டிஸா அலியின் மூளை குழம்பியது. ”கூடாது” என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.

‘பின் ஏன் சொன்னேன்?” என்று வினவினார் நவாப்.

‘’புரியவில்லை” என்று மூர்ட்டிஸா அலி ஒப்புக் கொண்டார்.

”அவன் தாக்குதல் ரகசியத்தை உணர்ந்துவிட்டான். இனி அவனை உயிருடன் வைக்கக் கூடாது. இன்று இரவு வெட்டி. விடுங்கள் அவன் தலையை” என்றார் ராஜாசாகிப்.

மூர்ட்டிஸா அலி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டார். “நவாப்” என்று அச்சத்துடன் கூவினார். ”அவன் தூதன்” என்றும் குளறினார்.

”அவன் தூதனல்ல. முஸ்லிமும் அல்ல. வெட்டி விடுங் கள்” என்றார் ராஜா சாகிப்.

தலையசைத்துச் சென்றார் மூர்ட்டிஸா அலி. அன்றிரவு தூதன் இருந்த இடத்தை அணுகினார். அவன் படுக்கையில் போர்த்துப் படுத்திருந்தான். கையில் பிச்சுவாவை எடுத்து மும்முறை செலுத்தினார் அவன் மீது. ஏதோ சந்தேகப்பட்டுப் போர்வையை விலக்கினார். உள்ளே தூதனில்லை, அவன் குருதியில்லை, குறுக்கே படுத்திருந்த தலையணையிலிருந்த பஞ்சு காற்றில் பறந்து மூர்ட்டிஸாவின் மூக்கில் நுழைந்தது. மூர்ட்டிஸா அலி மிக அபசகுனமாகப் பெரிதாகத் தும்மினார்.

Previous articleRaja Perigai Part 3 Ch13 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here