Home Historical Novel Raja Perigai Part 3 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 3 Ch15 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch15 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 15. ஆற்காட்டு இறுதிப் போர்

Raja Perigai Part 3 Ch15 | Raja Perigai | TamilNovel.in

நவம்பர் பதின்மூன்றாம் தேதியின் நள்ளிரவில், மூர்ட்டிஸா அலி தலையணையைக் கத்தியால் குத்திப் பஞ்சைக் கிளப்பி விட்ட அதே நேரத்தில் தூதனான தாவூத் ஆற்காட்டுக் கோட்டையை அணுகி அதற்குள் புக அனுமதி கேட்டான். தென் மேற்குப் பகுதியில் சுவர் உடைக்கப்பட்டு 30 அடி அகலம் எதிரிக்கு இலக்காயிருந்ததால் சிப்பாய்களாலும் என்ஸைன் க்ளாஸினாலும் பாதுகாக்கப்பட்டிருந்ததன் விளைவாக, தூதன் தாவூத், “ஒற்றன் வந்திருக்கிறேன், உட்புக அனுமதி வேண்டும்.” என்று கூறினான்.

தென்மேற்குச் சுவர் நன்றாக உடைக்கப்பட்டிருந்த தல்லாமல் அதன் சுற்றுப்புறப் பள்ளமும் நீரால் வழிந்தோடி எதிரிலிருந்த பெரிய குட்டையும் தண்ணீரில் நிரம்பியிருந்ததால் ஒற்றன் எப்படி வரமுடியும் என்பதை எண்ணிச் சந்தேகப்பட்ட க்ளாஸ் கோட்டைப் பகுதியிலிருந்து இரைந்தான்: “நீரை எப்படிக் கடந்தாய்?”

“நீந்தி வந்தேன். அவசரம். சீக்கிரம் அனுமதி வேண்டும். தலை போகிற காரியம் ” என்றான் தாவூத்.

”யார் தலை?” என்ற வினவினான்க்ளாஸ்.

”கோட்டையிலிருக்கிற அத்தனை பேர் தலையும்” என்று தாவூத் மேற்கொண்டு பேசாமல் சுவர் அளித்திருந்த இடை வெளிக்குள் புகுந்தான்.
உடனடியாக அவனை இருபுறமும் இரு வீரர் அணுகிப் பிடித்துக் கொண்டாலும் அதை லட்சியம் செய்யாத தாவூது. ”நான் உடனே கிளைவைப் பார்க்க வேண்டும்” என்று சிறிது அதிகார தோரணையில் கூறினான்.

அவன் தோரணைக்ளாஸிற்கு வியப்பைக் கொடுத்ததால், ”நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? என்ன முக்கியமான செய்தி?” என்று ஆங்கிலத்தில் வினவினான்..

தூதனும் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கி, “யூ டேக் மிடு காப்டன் கிளைவ் (என்னைக் காப்டன் கிளைவிடம் அழைத்துச் செல்)” என்றான்.

”ஹி இஸ் அஸ்லீப் (அவர் தூங்குகிறார்)’’ என்றான் கிளாஸ்.

”ஹி ஹாஸ் நோ பிஸினஸ் டு ஸ்லீப் நெள். வேக் ஹிம் (அவர் இப்போது உறங்குவது தவறு. எழுப்புங்கள்)” என்றான் தாவூத் மிகுந்த அதிகாரத்துடன்.

என்ஸைன் க்ளாஸ், ஒற்றனின் அதிகாரம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாவது ஆச்சரியத்தைக் கொடுத்ததால், மற்றச் சோல்ஜர்களையும் சிப்பாய்களையும் சுவரின் இடிந்த பகுதியைக் காக்க உத்தரவிட்டு, ஒற்றனை அழைத்துக் கொண்டு கிளைவ் உறங்கிக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்றான். கிளைவ் அறையை அடைந்ததும் என்ஸைன் க்ளாஸ் குரல் கொடுக்கு முன்பாகத் தூதன் தாவூத் கூவினான், ”கிளைவ், எழுந்திரு. இதென்ன தூக்கம்?” என்று.
அவன் கூறியதைக் கேட்ட கிளைவ் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து தாவூதை நோக்கினான். ”யார் நீ? உன் குரல் பழகிய குரலாயிருக்கிறது. முகம் மட்டும் வேறாயிருக்கிறது” என்று வினவவும் செய்தான்.

தாவூத் பதில் சொல்லவில்லை. லேசாக நகைத்தான். அவன் நகைப்பொலி கிளைவை மீண்டும் தூக்கிப் போடவே நன்றாகத் தாவூதை உற்று நோக்கினான். பிறகு க்ளாஸை நோக்கி ”என்ஸைன் க்ளாஸ், ஸ்நாட்ச் ஹிஸ் பியர்ட் (க்ளாஸ், இவன் தாடியைப் பிய்த்துவிடு)” என்றான்.

காப்டனின் உத்தரவுக்கும் போக்குக்கும் காரணம் புரியாத க்ளாஸ் திருதிருவென்று விழிக்கவே, தனது கட்டிலிலிருந்து கிளைவே குதித்து, தாவூதின் தாடியையும் பெரிய மீசையையும் கையால் பிய்த்தெறிந்ததன்றித் தலையிலிருந்த பெருமயிர் களையும் பிய்க்கலானான். அதனால் பெருவேதனையடைந்த தாவூத், ”கிளைவ், வலிக்கிறது. விட்டுவிடு” என்று கூவினான்.

கிளைவ் விடவில்லை . ‘யூ ரோக். யூ டிஸர்வ் திஸ் அண்ட் மச் மோர் (அயோக்கியா! உனக்கு இதுவும் வேண்டும், இன்னும் வேண்டும்)” என்று கூறி, தாவூதின் தாடி மீசைகளையும் அதிகப் படியாயிருந்த தலைமயிரையும் பிய்த்தெறிந்து அவனைக் கட்டிக் கொள்ளவும் செய்தான்.

என்ஸைன் க்ளாஸ் தாவூதின் மறு உருவத்தைக் கண்டு வியந்து பேயறைந்தது போல் நின்றான். வயதான முஸ்லிமாகத் தலைமயிர் கறுத்து நீண்டு தொங்க, மீசையும் தாடியும் அபரிமிதமாயிருக்கக் காட்சியளித்த ஒற்றன், வேஷம் கலைந்தபின் ஓர் அழகிய இந்து வாலிபனாக மாறியதைக் கண்ட க்ளாஸுக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரிய வில்லை.

‘’க்ளாஸ், மீட் மை பிரண்ட் லெப்டினண்ட், விஜய குமார்” என்று கிளைவ் அறிமுகப்படுத்தியதுமே உண்மை விளங்கியது க்ளாஸுக்கு. தேவிக்கோட்டைப் போரில் இணையிலா வீரம் காட்டியவனும் கிளைவின் உயிரைக் காப்பாற்றியவனும், கிளைவின் உற்ற நண்பனுமான அந்த வீரனைப் பற்றிக் க்ளாஸ் கேட்டிருந்தானே யொழிய பார்த்ததில்லை. அன்று பார்த்ததும் அவனைப்பற்றித் தான் கேட்ட விஷயங்கள் எத்தனை உண்மை என்பதைப் புரிந்து கொண்டான். அதன் விளைவாக அவனைப் பார்த்து ராணுவ பாணியில் கால்களைச் சேர்த்துச் சல்யூட் அடித்து, ”ஸாரி லெப்டினெண்ட், ஐ டிண்ட் நோயூ (வருந்துகிறேன் லெப்டினண்ட், உங்களை எனக்கு தெரியாது)” என்று மன்னிப்புக் கேட்டான்.

விஜயகுமாரன் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. ”என்ஸைன் க்ளாஸ், யூ ஆர் நாட் ராங். ஐ ஆம் நோ மோர் எ லெப்டினண்ட் (என்ஸைன் க்ளாஸ், நீ தவறு செய்யவில்லை. நான் இப்போது உங்கள் லெப்டினண்ட் அல்ல)” என்றான்.

கிளைவின் புருவங்கள் கேள்விக்கு அறிகுறியாக மேலெழுந்தன. விஜயகுமாரனே பதில் சொன்னான். ‘கிளைவ், நான் தஞ்சை ராணுவத்தின் உபதளபதிப் பதவியை ஒப்புக் கொண்டு விட்டேன். இப்போது தஞ்சையும் போரில் இறங்கி விட்டது. பிரிட்டிஷ் – பிரெஞ்சுப் போட்டியின் கடைசிக் கட்டம் வந்து விட்டது. முராரிராவ் 4000 புரவி வீரர்களுடன் எந்த விநாடியிலும் நகரச் சித்தமாயிருக்கிறார். உன்னிடமிருந்து செய்தி எதிர்பார்க்கிறார். அநேகமாக மைசூர் ரீஜண்டும் நகரத் தயாராகி விட்டார். இப்போது பகடை உன் கையிலிருக்கிறது. நீ ஆற்காட்டில் வெற்றியடைவதைப் பொறுத்திருக்கிறது. ஆகையால் உறங்காதே வீரனே, எழுந்திரு. நாளை விடியற்காலையில் ராஜாசாகிப் இந்தக் கோட்டையைத் தாக்குவார்” என்று விளக்கினான் விஜயகுமாரன்.

இந்த விளக்கத்தை விஜயகுமாரன் அளித்ததும் அவனைத் தழுவிய கைகளை நீக்கி அவனை விடுதலை செய்த கிளைவ், ”உனக்கு எப்படித் தெரியம் அவர்கள் தாக்குதலைப்பற்றி?” என்று வினவினான்.

”எனக்குத் தெரியாது கிளைவ். ஆனால் நீ சற்று முன்பு கொன்றுவிட்ட தூதன் தாவூதுக்குத் தெரியும். தாவூத் வழியில் வந்த டூப்ளேயின் தூதனைக் கொன்று அவனிடமிருந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தானே தூதனானான்; ராஜா சாகிபைப் பார்த்தான்; கடிதத்தில் கில் பாட்ரிக் உனக்கு உதவப் படையுடன் வருவதாகவும், முராரிராவும் நகருவதாகவும் கண்டிருந்தது. ஆகவே நாளை விடியற்காலையில் இதைத் தாக்க ராஜாசாகிப் உத்தரவிட்டிருக்கிறார். முதலில் அவர் யானைப் படை வடமேற்கு வாசலையும் கிழக்கு வாசலையும் நோக்கி நகரும். அதன் மறைவில் பிரெஞ்சு சோல்ஜர்களும் சிப்பாய்களும் கொண்ட இரு பிரிவுகள் வரும். வடமேற்கிலும் தென் மேற்கிலும் சுவர் உடைக்கப்பட்ட பகுதிகளில் வேறு இரு பிரிவுகள் தாக்கும். இப்படி நான்கு பிரிவுகள் நான்கு இடங்களைத் தாக்கத் தயாராக நிற்கின்றன. இதை அங்குள்ள சோல்ஜர்கள் பேசக் கேட்டதும் நேராகக் கோட்டைக்குள் வந்தேன். இங்கு வந்ததும் நீ என் வேஷத்தைக் கலைத்தாய்” என்று எதிரியின் தாக்குதல் விவரத்தைத் தெரியப்படுத்தினான் விஜயகுமாரன்.
இதைக் கேட்ட கிளைவ் சிந்தனையில் இறங்கினான் பல விநாடிகள். பிறகு என்ஸைன் க்ளாஸையும் விஜயகுமாரனையும் அழைத்துக் கொண்டு கோட்டைச் சுவர்ப் பகுதிகளுக்குச் சென்றான். கோட்டை வாசல் இரண்டின் மீது சில துப்பாக்கி வீரர்களையும் நாலு பீரங்கிகளையும் தயாராக நிறுத்தினான். சுவர் இடிந்த பகுதிகளை நோக்கிப் பக்கவாட்டிலிருந்த வீடுகளின் மாடி களிலும் கோட்டைச் சுவரின் இடியாத பகுதிகளின் மேலும் பீரங்கிகளை அமைத்துத் தயார் செய்தான்.

பிறகு லெப்டினண்ட் க்ளாஸையும் லெப்டினண்ட் ரெவர் என்ற பீரங்கி இயக்கும் நிபுணனையும் பார்த்து, ‘உங்களில் ஒருவர் வடக்குப் புறத்தைக் கவனியுங்கள். இன்னொருவர் தெற்குப் புறத்தைப் பாதுகாத்து நில்லுங்கள். நான் வரும்வரை விஜயகுமாரன் மேற்பார்வை செய்வான்” என்ற அறிவித்து விட்டு நகர்ந்தான்.

”எங்கே போகிறாய் கிளைவ்?” என்று வினவினான் விஜயகுமாரன், திடீரெனத் தன்மீது சுமத்தப்பட்ட பெரும் சுமையை நினைத்து வியப்படைந்து.

”தூங்கப் போகிறேன்… தூங்கி நான்கு நாட்களாகின்றன.”

”எதிரி விழித்துக் கொண்டிருக்கிறான்” என்றான் விஜயகுமாரன்.

கிளைவ் திடீரென ஆங்கிலத்துக்குத் திரும்பினான், க்ளாஸும் ரெவரும் உணர்ந்து கொள்ள. ‘யூ நோ ஹொய் தே காண்ட் ஸ்லீப்?” என்ற வினவினான் கிளைவ்.
”டெல்மி.”

”பிகாஸ் தே ஹாவ் நோ விஜயகுமார்.” இதைச் சொன்ன கிளைவ் வெகுவேகமாகத் தன் பாசறையை நோக்கி நடந்து படுக் கையில் விழுந்து நிம்மதியாக உறங்கினான்.

விஜயகுமாரன் நண்பன் போவதைப் பார்த்து பெருமூச்சு விட்டான். ”புவர் கிளைவ் ஹி ஹாஸ் டூ மச்டு பேர் (பாவம் கிளைவ். அவன் தாங்கும் சுமை அளவுக்கு மீறியது)” என்று அநுதாபத்துடன் கூறிவிட்டுக் க்ளாஸையும் ரெவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்று கோட்டையின் பாது காப்புக்களைக் கவனித்தான். ரெவரை வடக்கு வாசலிலும் க்ளாஸைக் கிழக்கு வாசலிலும் நிற்க வைத்தான். ”ரெவர், யூ வாட்ச் ப்ரம் நார்த். மூவ் ஆஸ்தி எனிமி மூவ்ஸ், ஒபன் தி பாட்டரீஸ் ஆன் தி எலிபெண்ட்ஸ் . தே மே ட்ரை டு க்ராஸ் தி வாட்டர் பை ராப்ட்ஸ். தென் ஸ்மாஷ் தி ராப்ட்ஸ் (ரெவர், நீ வடக்கிலிருந்து கோட்டையின் வெளிப் புறத்தைக் கவனி. எதிரி நகருவதை ஒட்டி நீயும் நகர். எதிரி யானைகள் மீது பீரங்கிகளைப் பிரயோகம் செய். எதிரி அதோ இருக்கும் நீரைக் கடக்கக் கட்டுமரங்களில் வந்தால் அவற்றை அழித்து விடு)” என்று உத்தரவிட்டான்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டுக் கோட்டையை ஒரு முறை சுற்றிவிட்டு அவன் வருவதற்கும் எதிரியின் படை கோட்டையை நோக்கி நகருவதற்கும் சமயம் சாரியாயிருந்தது.

நவம்பர் 14-ஆம் தேதி காலை வெள்ளி முளைக்கும் நேரத்தில் ராஜாசாகிப் தமது படையை நான்கு பிரிவுகளாகப் பிரித்து இரண்டுக்குத் தாமும் இரண்டுக்கு மூர்ட்டிஸா அலியும் தலைமை வகித்துப் படை நகர ஒரு துப்பாக்கியை வெடித்தார் ஆகாயத்தை நோக்கி. “இரு கோட்டை வாசல்களை நோக்கி இரு பிரிவுகளும், வடமேற்கு, தென்மேற்குப் பகுதிகளில் கோட்டைச் சுவர் வாயைப் பிளந்திருக்கும் பகுதிகளில் மற்றுமிரண்டு பகுதிகளும் நகரட்டும். கோட்டையை அணுகுபவர்கள் யானைகளின் மறைவில் செல்லுங்கள். இடிந்த இடங்களை அடையக் கட்டுமரங்களை உபயோகியுங்கள்” என்று உபதலைவர்களுக்கு உத்தரவிட, கருக்கல் நேரத்தில் படைகள் பிரிந்து நகர்ந்தன.

பிரெஞ்சு சோல்ஜர்களின் பூட்ஸ்களின் ஒலியும், சிப்பாய்களின் செருப்பொலியும், யானைகளின் பிளிறல்களுமாகச் சேர்ந்து அந்தக் காலை நேரத்தை மிகப் பயங்கரமாக அடித்தன. பீரங்கி வண்டிகள் உருண்ட சத்தமும் அவற்றைத் தள்ளிய வீரர்களின் கூச்சலும் அந்தப் பயங்கரத்தை அதிகப்படுத்தின.

ராஜாசாகிப் துப்பாக்கியை வெடித்தவுடன் கோட்டைக் குள் உறங்கிக் கொண்டிருந்த கிளைவும் கண் விழித்தான். ராணுவ உடையிலேயே உறங்கிக் கொண்டிருந்ததால் அப்படியே எழுந்தவன் அங்கிருந்து ஆர்டர்லியை அழைத்து, ”ஆர்டர்லி, ஆஸ்க் தி குக் டூ மேக் ஸம் காபி அவைலபிள் பார் தி சோல்ஜர்ஸ், அண்ட் ஸம் பார் தி சிப்பாய்ஸ். க்விக்” என்று உத்தரவிட்டுக் கோட்டை மதிளை நோக்கி விரைந்தான்.

கோட்டை மதிள் மீதேறிச் சுமார் நூறு அடிகள் நடந்து சுற்றுமுற்றும் பார்த்த கிளைவின் முகத்தில் மிகுந்த திருப்தி நிலவியது. கோட்டை மதிளின்மீது விஜயகுமாரன் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகத் திறம்படச் செய்திருந்தான். ஐம்பது அடிக்கு ஓர் இடமாகச் சோல்ஜர்களும் சிப்பாய்களும் பிரிக்கப்பட்டு நிறுத்தப் பட்டிருந்தார்கள். கோட்டை வாயில்களில் பீரங்கிகளும் மஸ்கெட்துப்பாக்கி வீரரும் போருக்குத் தயாராக இருந்தார்கள்.

கிளைவ் அந்த ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அருணனும் கீழ்த்திசையில் மெல்லத் தலை நீட்டினான். அவன் சிவப்பைக் குறைக்க இஷ்டப்பட்டவர்போல் ராஜாசாகிப் தனது அம்பாரியிலிருந்து கையை உயர்த்த, பிரெஞ்சு பீரங்கிகள் கோட்டைமீது சீறிப் பாய்ந்தன.

யானைகள் நகர்ந்தன, இருவாயில்களை நோக்கி. அவற்றை நோக்கிச் சீறி வந்தன கோட்டை மீதிருந்த இரு பீரங்கிகள். குறி மிகச் சரியாக வைக்கப் பட்டதால் யானைகள் இரண்டுப் பெரிதாக அலறிக் கீழே விழுந்தன. மாவுத்தர்கள் விழுந்த புரண்டு யானைகளின் கால்களில் அகப்பட்டுச் சிதைந்த கோரம் காணத்தகாததாயிருந்தது.

முதலிரண்டு யானைகள் விழுந்ததும் மற்ற யானைகள் திரும்பி, பின் வந்த வீரரை மிதிக்கவும் துவைக்கவும் தொடங்கியதால் அவர்கள் மரணக் கூச்சல் வானத்தைப் பிளந்தது.

கிழக்கு வாசலிலும் இதே கதைதான் எங்கும் யானைகள் சிதறுண்டு ஓடின. வீரர்கள் எதிரியைத் தாக்காமலே மடியலாயினர். ஆனால் எதிரி யானைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தான். தாக்குதலை வடமேற்கிலும் தென்மேற்கிலும் பிளந்து கிடந்த சுவர்களின் இடைவெளிகள் மீது துவங்கினான். இங்கு வெறி பிடித்து ஓட யானைகள் இல்லை. படையோ கிளைவின் சிறு படையைவிட நான்கு மடங்கு அதிகம். போதாக்குறைக்கு அவ்விடங்களுக்கு இயற்கைப் பாதுகாப்பாயிருந்த குட்டைகளின் ஆழழுமான நீரும் பாதுகாப்பளிக்க முடியவில்லை. அங்கே கட்டு மரங்களில் சிப்பாய்களும் பிரெஞ்சு சோல்ஜர்களும் ஏறிக் கோட்டையை அணுகினர். சில இடங்களில் கோட்டைமீது ஏற ஏணிகள் பொருத்தப்பட்டன.

கிளைவ் போர் நிலைமையை நோக்கினான் கோட்டை மீதிருந்து. என்னதான் தனது பீரங்கிகள் சேதத்தை விளைவித்தாலும் எதிரிக்கு அதிக பலம் என்பதைப் புரிந்து கொண்டான்.

அந்தக் காரணத்தாலேயே கிளைவ் மிகுந்த துணிவுடனும் உறுதியுடனும் போரை நடத்தினான். அவனும் விஜயகுமாரனும் இருவருமே இரு பீரங்கிகளை இயக்கினார்கள். எதிரே நீரில் வந்த கட்டு மரங்கள், பீரங்கிக் குண்டுகளால் நாசமடைந்தன. திடீரென சுமார் 90 எதிரி சடலங்கள் நீரில் மிதந்தன.

கோட்டைச்சுவர்மீது ஏணிகளில் ஏறத் தொடங்கிய எதிரிச் சிப்பாய்களைக் கிளைவின் சிப்பாய்கள் மஸ்கெட் பிரயோகத்தால் அழித்தனர். சுவர் இடிந்த பகுதிகளைத் தாண்ட முயன்றவர்கள் ட்ரெஞ்சிலிருந்த சிப்பாய்களாலும் சோல்ஜர்களாலும் சுடப் பட்டனர். அந்தத் துப்பாக்கிகள் ரவைகளை இழுத்தபோது பின்னாலிருந்த ட்ரெஞ்சிலிருந்தவர்கள் ரவைகளைப் பொருத்திய புதுத்துப்பாக்கிகளை முன்னிருப்பவர்களுக்குக் கொடுத்தார்கள்.

இப்படி நாள் முழுவதும் போர் நடந்தது. எதிரிக்குப் பெரும் சேதம் என்றாலும் கிளைவின் படைக்கும் சேதம் சொற்பமல்ல.
ஆனால் அன்று கதிரவன் மலைவாயிலில் விழுந்தபோது எதிரி பின்வாங்கத் துவங்கினான்.. பின்வாங்க ஒலித்தன பேரிகைகள். ராஜா சாகிப் வெகு வேகமாகத் தமது இருப்பிடம் விரைந்தார். நெற்றியில் காயத்திலிருந்து சிந்திய ரத்தத்துடன், மாலைக் கதரவன் அளித்த சிவப்புடன், ஜெயஸ்ரீ ஜொலிக்க நின்றான் கிளைவ் ஆற்காட்டுக் கோட்டையின்மீது. அவனை ஆசையுடன் கட்டியணைத்த விஜயகுமாரன், ”கிளைவ், யூ ஆர் க்ரேட்’’ என்று கன்னத்தில் முத்தம் இட்டான்.

Previous articleRaja Perigai Part 3 Ch14 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here