Home Historical Novel Raja Perigai Part 3 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

45
0
Raja Perigai Part 3 Ch16 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch16 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 16 .பத்துடை அடியவர்க்கு

Raja Perigai Part 3 Ch16 | Raja Perigai | TamilNovel.in

எளியவன் வீரனான விஜயகுமாரனால் வலியக் கட்டியணைத்து முத்தமிடப்பட்ட காப்டன் கிளைவ் ஆற்காட்டுக் கோட்டைமீது நின்றபோது தனக்குக் கிடைத்த வெற்றியைவிட, ஐம்பது நாட்களாகப் படாத பாடுபட்டுச் சரித்திரத்தில் நிரந்தரமாக நிலைபெறச் செய்யும் புகழைப் பெற்றதைவிட, தனது அருமை நண்பனின் அந்தப் பாராட்டுதலையும் கனிவையும் அன்பையும் பெரியதாக மதித்ததால் பெருமையும் புளகாங்கிதமும் கொண்டான். அடுத்தபடி எதிரிகள் ஏதாவது தாக்குதலைத் துவங்கும் பட்சத்தில் அதைச் சமாளிக்கும் பொறுப்பை லெப்டினண்ட் எவரிடமும் என்ஸைன் க்ளாஸிடமும் ஒப்படைத்துவிட்டு நீராடித் தன்னைச் சுத்தி செய்து கொள்ளத் தனது இருப்பிடம் சென்றான், விஜயகுமாரன் பின்தொடர. இருவரும் நீராடிப் புத்தாடை புனைந்ததும் தன் மேஜைக்கு எதிரிலிருந்த இரு நாற்காலிகளில் ஒன்றில் தான் அமர்ந்து இன்னைாரு நாற்காலியில் நாயக்கர் வம்ச வாலிபனை அமரச் சொல்லி அவனையே மௌனமாக நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் கிளைவ், வெளியே அப்போதும் கேட்டுக் கொண்டிருந்த எதிரி பீரங்கிகளைக் காதில் வாங்காமலே.

கிளைவ் தன்னை அப்படி ஆராய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயகுமாரன் இதழ்களில் புன்னகை அரும் பலாயிற்று. ”என்ன அப்படிப் பார்க்கிறாய் கிளைவ்?” என்று ஆசையுடனும் பெருமிதத்துடனும் வினவினான் விஜயகுமாரன்.
நீண்ட நேரம் கிளைவ் பதில் சொன்னான் இல்லை. ”ஒன்றுமில்லை. என் காதலியைப் பார்க்கிறேன்” என்றான் இதழ்களில் புன்முறுவல் படர.

”காதலியையா அப்படி யாராவது இருக்கிறாளா இங்கே?” என்று வினவினான் விஜயகுமாரனும் லேசாகப் புன்முறுவல் காட்டி. இருக்கிறாள்” என்றான் கிளைவ், விஜயகுமாரன் முகத்தில் வைத்த கண்களை வாங்காமலே.

”இது உன் மனைவியாகப் போகும் பெக்கிக்குத் தெரியுமா?”

”யார், எட்மண்ட் தங்கைக்கா?”

“ஆம்.”

“தெரியாது.”

“இவளைவிட அழுகுள்ளவளா?”

”அழகும் உள்ளவள், கம்பீரமும் உள்ளவள்.”

“இவள் பெயர்?”

”விஜயகுமாரி” என்று சொன்ன கிளைவ் திடீரெனப் பெரிதாக நகைத்தான்.

கிளைவ் தன்னைத்தான் குறிப்பிடுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட விஜயகுமாரனும் அவனுடன் கலந்து நகைத்தாலும் முடிவில் வினவினான், ”என்னைப் பெண்ணாக்கி விட்டாயே கிளைவ்? நான் வீரனல்லவா?” என்று.

கிளைவின் முகத்தில் மகிழ்ச்சி பெரிதும் படர்ந்தது. ”பெண்ணைவிடச் சிறந்தது ஒன்று உண்டு” என்றான் கிளைவ்.

”அது என்ன? நான் அறிந்து கொள்ளலாமா?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”அறிந்து கொள்ளலாம். பெண்ணின் தழுவல் உடலுக்கு இன்பத்தை அளிக்கலாம். உள்ளத்துக்குக்கூட உன்மத்தமூட்ட லாம். ஆனால் வீரன் அணைப்பது என்னைச் சாசுவதமான சரித்திரத்துக்கு அழைத்துச் செல்கிறது. அதை நீ அளித்தாய் இன்றைக்கு. ஒன்று தெரியுமா? விஜயகுமாரா! எனக்குப் பெண் களைவிடப் போரைக் கண்டால் அதிகமாகப் பிடிக்கிறது, ஆபத்தைக் கண்டால் உற்சாகப்படுகிறேன். ‘இது முடியாது. அபாயம்’ என்ற யாராவது சொன்னால் அதை நாடிச் செல்ல மனம் துடிக்கிறது. ஆகவே உன் வீர அணைப்பு எனக்குத் தரும் இன்பம் இளம் பெண்களின் அணைப்பைவிட அதிக இன்பத்தைத் தருகின்றது. நீயும் ஆபத்துக்களை எதிர் நோக்கியிருக்கிறாய். சாதாரண மனிதன் செய்யத் துணியாத காரியங்களைச் செய்திருக்கிறாய்” என்ற கிளைவ் விஜயகுமாரனை மிகுந்த ஆவலுடன் பார்த்தான்.

விஜயகுமாரன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ‘கிளைவ்! உனக்கும் எனக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. நீ உன் மக்களின் புகழுக்கு, உன் நாட்டின் வெற்றியை இங்கு நிலை நிறுத்துவதற்கு, உயிரைப் பணயம் வைக்கிறாய். அதற்காக உயிர் வாழ்கிறாய். நான் அப்படியல்ல. ஒரு அநீதிக்குப் பழி வாங்க உயிர் வாழ்கிறேன். அதில் வெற்றியடைவேனோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் அதற்காக மடியச் சித்தமாயிருக்கிறேன். உனக்கும் எனக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்” என்று கூறியபோது அவன் பேச்சில் உணர்ச்சி ததும்பியது.

கிளைவ் தனது இருப்பிடத்தைவிட்டு எழுந்திருந்து பக்கத்திலிருந்த அலமாரியைத் திறந்து ஒரு ஒயின் பாட்டிலையும் இரண்டு க்ளாஸ்களையம் எடுத்து வந்து மேஜைமீது வைத்தான்.

இரண்டிலும் அரைவாசி ஒயினையும் ஊற்றினான். ஒரு டம்ளரை விஜயகுமாரனிடம் கொடுத்து இன்னொரு டம்ளரைத் தான் எடுத்துக் கொண்டான். தனது டம்ளரை விஜயகுமாரன் டம்ளருடன் இடித்து, ”விஜயகுமாரா! இன்று நான் என் வெற்றிக்காகக் குடிக்கவில்லை. உன் வெற்றிக்காக அருந்துகிறேன். இங்குள்ள அரசியல் சிக்கல்களில், உள்நாட்டு அரசுகளும் வெளிநாட்டவரும் பலவிதமாகக் கலந்து நடத்தும் போர்களில் உன் லட்சியம் ஈடேற ஏதாவது தடை ஏற்படுமானால் அப்போது ராபர்ட் கிளைவ் உன் தரப்பில் இருப்பான். நீ கொய்யக் காத்திருக்கும் நவாபின் தலையை வேறு யாரும் கொய்யாமல் பார்த்துக் கொள்கிறேன். அப்படியே உன்னையும் மீறிக் கொய்தாலும் அதை உன்னிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்ற கிளைவ் திடீரென எதையோ நினைத்துக்கொண்டு, ‘ஐ ப்ராமிஸ் ஆன் த பூன் கிவர் காட்” என்று ஆங்கிலத்திலும் பிரமாணம் செய்து ஒயினை மடக் மடக்கென்று துரிதமாகக் குடித்தான்.
விஜயகுமாரன் குடிக்கவில்லை. வியப்பின் வசப்பட்டு, “என்ன சொல்கிறாய் கிளைவ்? பூன் கிவர் காட்ட ஹூ ஈஸ் ஹி?” என்று வினவினான்.

”தி ஹிண்டு காட் அட்கஞ்சீவரம். ஹி ஹூக்யூர்ட் மி ஆப் ஃபீவர். ஹி ஹூகேவ் மெனி விக்டரி ஹியர் (காஞ்சிபுரத்திலுள்ள ஹிந்து கடவுள், என் ஜுரத்தைத் தணித்தவர். இங்கு எனக்கு வெற்றியை அளித்தவர்” என்றான் கிளைவ்.

”கிளைவ் நீ அதிகமாகக் குடித்துவிட்டு, உளறுகிறாய்.” ”நோ, ஐ ஸ்பீக்த ட்ரூத்” என்றான் கிளைவ்.

”யூ ஆர் நாட் எ ஹிண்டு’’ விஜயகுமாரனின் குரலில் வியப்பும் நம்பிக்கையும் மிதமிஞ்சி நின்றது.

‘டஸ் நாட் மாட்டர். ஹீ க்யூர் டு மி அண்ட் ஹி கேவ் மி விக்டரி. எல்ஸ் டூ மீன்டு ஸே வித் பைவ் ஹண்ட்ரெட் மென் ஐ பீட் ஆப் தி எனிமி?” “(அவசியமில்லை , ஹிந்து கடவுள் என் ஜுரத்தை நீக்கினார்… இங்கு வெற்றியை அளித்தார். இல்லா விட்டால் நான் 500 பேரை வைத்துக்கொண்டு பலசாலியான எதிரியை முறியடிக்க முடியுமென்று நினைக்கிறாயா)” என்றான் கிளைவ் திட்டவட்டமாக. அத்துடன் நில்லாமல் எழுந்திருந்து சற்றுத் தூரத்திலிருந்த தஸ்தாவேஜு மரப்பெட்டியைச் சாவியால் திறந்து அதிலிருந்த மகரகண்டியை எடுத்து விளக்கில் காட்டினான்.

மகரகண்டி விளக்கின் வெளிச்சத்தில் ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்தது, ”ஐ ஹாவ் ரிஸர்வட் திஸ் பார் பூன் கிவர்’ என்றும் கூறினான்.
விஜயகுமாரன் வியப்பின் எல்லையை எய்தினான். ஒரு வெள்ளைக்காரனுக்கு, அதுவும் கிளைவைப் போல் அதிக மதப் பற்றில்லாதவனுக்கு இப்படி ஒரு ஹிந்து தெய்வத்தின் மேல் பக்தி விழவேண்டுமானால் அதற்குத் தகுந்த காரணம் இருக்க வேண்டுமென்றே நினைத்தான். ஆகையால் அந்தத் தெய்வம் யார் என்பதை அறிய ‘ஹுஈஸ் பூன் கிவர்?” என்று வினவினான்.

“தப்ரீஸ்ட், தே கால் ஹிம் பட்டர், ஹி ஸெட் வர்தா ராஜா. விச் ஹி அகைன் ஸெட் மெண்ட் பூன் கிவர். எஸ் மை ப்ரண்ட் ஹீ டிட் கிவ் மி பூன் அண்ட் ஹீ டிட் கிவ் விக்டரி. நோ டௌட் அபௌட் இட்” என்றான் கிளைவ் திட்டவட்டமாக.

வரதராஜப் பெருமாளைத்தான் வர்தா ராஜா என்று கிளைவ் அழைக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட விஜய குமாரனின் இதயத்தில் பெருமைக்குப் பதில் பொறாமை படர்ந்தது. இந்த வெள்ளைக்காரனுக்கு, மிலேச்சனுக்கு இருக்கும் நம்பிக்கையில் ஆயிரத்தில் ஒரு பங்கு ஹிந்துக்களுக்கு மட்டுமிருந்தால் இந்தச் சாம்ராஜ்யம் இந்த நாட்டில் நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்று நினைத்தான். கலியுகத்தின் பிரத்யட்ச தெய்வமும், பக்தர்கள் கேட்டதைக் கொடுப்பதாகலேயே வரதன் என்று பெயர் பெற்றவனும், சுடர்மிகு சுதியுள் உளன் எனப் பெரியாழ்வாரால் பரத்வ நிர்ணயமான திருவாய்மொழியின் முதல் பத்துப் பாட்டுக்களில் சொரூப நிர்ணயம் செய்யப்பட்ட நாராயணனுமான வரதராஜனின் கிருபாகடாட்சம் கிளைவின்மீது விழுந்திருப்பதை எண்ணிப் பார்த்தான்.

அதன் காரணமும் அவனுக்கு விளங்கவே செய்தது. பத்துடை அடியவர்க்கு எளியவனான பகவான் மூட பக்தி கொண்ட கிளைவின்மீது தனது கிருபா கடாட்சத்தைத் திருப்பியதில் எந்தப் புதுமையும் இல்லை என்றே நினைத்தான். கடலிலும் பெரியவாய அவன் கண்கள் எங்கே திரும்புகின்றன, ஏன் திரும்புகின்றன என்பதை யார் அறியமுடியும் என்றும் எண்ணிய விஜயகுமாரனுக்கு ஒன்று மட்டும் தெள்ளெனத் தெரிந்தது. உண்மையான நம்பிக்கை வீண் போவதில்லை என்ற உண்மைதான் அது.

விஜயகுமாரன் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடுவதைக் கண்ட கிளைவ் மீண்டும் மகர கண்டியைப் பெட்டியில் பூட்டி விட்டுத் திரும்பினான். ‘விஜயகுமாரா! உன் வியப்புத் தீர்ந்து விட்டதா?” என்றும் வினவினான்.

”தீர்ந்துவிட்டது. முடிவும் தெரிந்துவிட்டது” என்றான் விஜயகுமாரன் சுயநிலை அடைந்து.

”என்ன முடிவு?” என்று கேட்டான் காப்டன் கிளைவ்.

”நீ இந்த நாட்டில் உன் நாட்டின் அரசை நிறுவுவாய். எங்கள் சுதந்திரம் முடிந்தது” என்றான் விஜயகுமாரன் சொற்களில் துயரம் ததும்ப.

”சாம்ராஜ்யத்தை நான் நிறுவுவேனா?”

“நிறுவுவாய்.”

”யார் சாம்ராஜ்யம்? யாராவது தட்டில் வைத்து என்னிடம் சாம்ராஜ்யத்தை அளிக்கப் போகிறார்களா?”

”அளித்துவிட்டார்கள்.”

”யார்?”

”யாருடைய சங்கல்பத்தை வேதங்களும் அறிய முடிய வில்லையோ அவர்.’’

”எனக்குப் புரியவில்லையே!”

”வரதராஜன், எம்பெருமான் அவர் உன் பக்கத்தில் இருக்கிறார்.”

கிளைவ் ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத் தான். “என்னிடம் இப்பொழுது சோல்ஜர்கள் அதிகமில்லை. இருப்பவர் காயமடைந்திருக்கிறார்கள். யுவர் காட் மஸ்ட் ஹெல்ப் மி நௌ. நோ அதர் கோ” என்றான் கிளைவ்.

விஜயகுமாரன் சொன்னான் திட்டமாக, ”உனக்கு உதவி விரைவில் வரும், உன் எதிரிகள் மறைவார்கள்” என்று.

அவன் சொன்னது உண்மையாயிற்று. ராஜா சாகிப் அன்றிரவு வேலூரைப் பார்க்க விரைந்தார் தமது படையுடன். காப்டன் கில்பாட்ரிக் பிரிட்டிஷ் படையுடன் ஆற்காட்டுக்குள் நுழைந்தான் மறுநாள் விடியற்காலையில்.

Previous articleRaja Perigai Part 3 Ch15 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here