Home Historical Novel Raja Perigai Part 3 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

42
0
Raja Perigai Part 3 Ch17 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch17 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 17 .பாஜிராவ்

Raja Perigai Part 3 Ch17 | Raja Perigai | TamilNovel.in

காப்டன் கில்பாட்ரிக் கொண்டு வந்த உதவி அதிகமில்லை என்றாலும், சுமார் 50 சோல்ஜர்களுடன் 200 சிப்பாய்களுடனுமே அவன் வந்திருந்தாலும் பிரிட்டிஷ் ‘தடபுடலுக்குச் சிறிதும் குறையாமல் முன்னால் ட்ரம்மர்களைக் கொண்டு பெரிதாக பாண்டு டமாரத்தை மிலிடரி பாணியில் அடிக்கச் செய்தும், லெப்ட் ரைட் என்ற சப்தங்களை அதிகமாகக் கிளப்பிக் கொண்டும் கோட்டைக்குள் வந்து, கிளைவ் விஜயகுமாரனுடன் நின்றிருந்த இடத்தை அணுகினான். தனது புரவியிலிருந்து இறங்கிப் பலமாக ஸல்யூட் அடித்தான். சில சோல்ஜர்களை வரிசையாக நிறுத்தி, துப்பாக்கிகளைக் கால்களில் இடித்து நிறுத்தி, ‘காப்டன் கில்பாட்ரிக் அட் யுவர் சர்விஸ் ஸார் சோல்ஜர்ஸ் ப்ரஸெண்ட் ஆர்மஸ்” என்று கூற, சோல்ஜர்கள்

சட்டென்று கால்களை இடித்துத் தலைகளை விறைத்துக் கொண்டு நின்றனர்.

கிளைவ் அவர்களை எரிச்சலுடன் பார்த்தான். ”காப்டன் கில்பாட்ரிக்! ஹௌ மெனி மென் ஹாவ் யூ?” என்று மட்டும் வினவினான்.

”50 ஹொய்ட்மென் அண்ட் டூ ஹண்ட்ரெட் நேடிவ்ஸ்” என்றான் கில்பாட்ரிக். அவன் குரலில் பிடிபடாத பெருமை ஒலித்தது.
கிளைவின் இதழ்களில் இகழ்ச்சி நகை அரும்பியது. “யூ நோதி ஸ்ட்ரெங்த் ஆப்தி எனிமி?” என்று விசாரித்தான் கிளைவ்.

”தே ஹாவ் வித்ட்ரான்” என்றான் கில்பாட்ரிக், அதைத் தானே நிறைவேற்றியவன்போல்.

‘டூ யூ நோ ராஜா சாகிப்? (உனக்கு ராஜா சாகிப்பைத் தெரியுமா?)” என்று கிளைவ் கேட்டான்.

”ஐ டூ நாட் நோ (எனக்குத் தெரியாது)” என்றான் கில்பாட்ரிக்.

”ஹீ ஈஸ் எ வெறிப்ரேவ் மான்” என்று கூறிய கிளைவ், கில்பாட்ரிக்கையும் அவனுடன் வந்த படையினரையும் உணவருந்த அனுப்பினான்.

அவர்கள் சென்றபின் விஜயகுமாரனைப் பார்த்துக் கிளைவ், ”காப்டன் கில்பாட்ரிக்கைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று வினவினான்.

“சற்றுத் தற்பெருமையுள்ளவன். ஆனால் மேற்கொண்டு நடவடிக்கைகளுக்கு அவன் அழைத்து வந்திருக்கும் படை போதாது” என்று கூறினான் விஜயகுமாரன்.

”எனது படையில் 50 பேர் இறந்துவிட்டார்கள். மீதியிருப்பவர்களில் சிலர் காயமடைந்திருக்கிறார்கள். மற்று முள்ளவர்கள் 50 நாள் முற்றுகையின் சிரமத்தால், உணவுக் குறைவால் பலவீன மடைந்திருக்கிறார்கள். என் நிலை எப்படி?” என்று வருத்தத்துடன் வினவினான் கிளைவ்.

”வெரி பாட், நோ டௌட்’’ என்ற விஜயகுமாரன் சிந்தனையில் இறங்கினான். பிறகு இரைந்து வினவிக் கொண்டான். “முராரிராவ் என்ன செய்கிறார்? சும்மா இருப்பவர் அல்லவே?” என்று.

விஜயகுமாரன் இரைந்தே பேசியதால் அது தெளிவாக விழுந்தது கிளைவின் காதிலும். ஆனால் பதில் அவனுக்குத் தெரியவில்லை ஆகையால் எதுவும் பேசாமல் தனது இருப்பிடத்தை நோக்கித் திரும்பத் தொடங்கினான். அன்று இரவு உறங்கிய பிறகு மறுநாட் காலை ஒரு முடிவுக்கு வந்தே எழுந்திருந்தவன், ”முராரிராவ் உதவியளித்தாலும் சரி, அளிக்காவிட்டாலும் சரி நான் வேலூரை நோக்கிப் புறப்படுகிறேன்” என்றான் விஜயகுமாரனிடம்.

விஜயகுமாரனுக்கு முராரிராவ் உதவிப் படை அனுப்பாத காரணம் புரியவில்லை. ‘’உதவி அனுப்புவதாகத் தன்னிடம் திட்ட மாகக் கூறிய முராரிராவ், ஆற்காட்டுச் சுற்றுப்புறங்களைச் சூறையாடி ராஜா சாகிபுக்கு உணவுப் பொருளோ வேறு உதவியோ வராமல் தடுத்த மகாராஷ்டிர உபதளபதி – இப்போது ஏன் வாளாவிருக்கிறார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அதற்குச் சரியான விடை ஏதும் கிடைக்காததால் கிளைவை நோக்கிச் சொன்னான். ”உதவி நிச்சயம் கிடைக்கும் முராரிராவிடமிருந்து. உன்னிடம் அவருக்குள்ள. மதிப்பும் பிரேமையும் அளவிலடங்காதது கிளைவ். இருப்பினும் நீ உடனடியாக ராஜா சாகிபைத் துரத்திச் செல்ல வேண்டியதுதான். நானும் வருகிறேன்” என்றான் திட்டமாக.
கிளைவ் மீதியிருந்த தனது படைப் பிரிவை விஜயகுமாரன் பின்தொடரப் பார்வையிட்டான். அவர்களில் பலர் காயமடைந்து பல விடுதிகளில் படுத்துக் கிடந்தார்கள். ராணவ சர்ஜன் முடிந்த வரையில் கிடைத்த மருந்தைக் கொண்டு அரைகுறை வைத்தியம் செய்திருந்தான். காயம் படாமல் பாசறையிலிருந்த அவர்கள், ஐம்பது நாள் முற்றுகையால் களைப்படைந்திருந்தாலும் எந்த நடவடிக்கைக்கும் சித்தமாகவே இருந்தார்கள். காயம் பட்டவர்கள் படாதவர்கள் எல்லாரிடமும் ஓர் உற்சாகமும் போர் வெறியும் காணப்பட்டன. ஒவ்வொரு சோல்ஜருடனும் சிப்பாயுடனும் கை குலுக்கினான் கிளைவ்.

அந்தக் காட்சிகளைக் கண்ட விஜயகுமாரன், கிளைவின் அபாரத் துணிவும் அதனால் விளைந்த வெற்றியும் அந்த வீரர்களின் உள்ளங்களிலும் அதிகத் துணிவையும் நம்பிக்கையையும் ஊட்டியிருப்பதை உணர்ந்தான். எப்போதே ஜன்மாந்தரத்துக்கு ஒரு முறை தோன்றும் மகத்தான தலைவர்களில் ஒருவன் சமீபத்தில் தான் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனது அந்த முடிவுக்குச் சான்று மறுநாளே கிடைத்தது.

டிஸம்பர் 15-ஆம் தேதி காப்டன் கில்பாட்ரிக்கை ஆற்காட்டுக் கோட்டையைப் பாதுகாக்கும்படி கூறிவிட்டுத் தன்னிடமிருந்த சிறு படையுடன் வேலூரை நோக்கிப் புறப்பட்டான் கிளைவ். அந்தப் படையுடன் பலமான வேலூர்க் கோட்டையை நோக்கிச் செல்வது தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை விஜயகுமாரன் உணர்ந்திருந்தாலும், கிளைவின் பேச்சுக்குக் குறுக்கு எதுவும் கூறாமல் அவனைப் பின்தொடர தனது புரவியின் மீது, வாள் இடையில் தொங்க, மாட்ச்லாக் துப்பாக்கி கையில் துலங்க, போர் சன்னத்தமாய் உட்கார்ந்திருந்தான்.

கிளைவும் தனது புரவியில் ஏறினான், வாளுடனும் கச்சையில் செருகிய இரு கைத்துப்பாக்கிகளுடனும். அவற்றைக் கவனித்த விஜயகுமாரன் முறுவல் கொண்டான். “இவை போதுமா படையெடுக்கும் காப்டனுக்கு?” என்று வினவினான் கிளைவை நோக்கி.

அந்தக் கைத் துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்தக் காட்டிய கிளைவ், “இதன் வரலாறு தெரியுமா உனக்கு?” என்று கேட்டான் தனது நண்பனை நோக்கி.

”தெரியாது.”

”இதைக் கொண்டுதான் முதலில் நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். என்னைக் கொல்ல மறுத்தது. ஆகையால் இதை எப்போதும் என்னிடம் வைத்துக்கொண்டிருக்கிறேன்.”

”ஏன்?”

”இதற்கும் என் நடவடிக்கைகளுக்கும் ஒரு பொருத்த முண்டு.”
”எப்படி?”

”எப்பொதும் தற்கொலை மார்க்கத்தில் செல்கிறேன். இப்பொழுது இந்தச் சிறுபடையுடன் வேலூருக்குப் போவதும் அப்படித்தானே?” என்று கேட்ட கிளைவ் நகைத்தான்.
விஜயகுமாரனும் நகைத்தான். நகைத்துவிட்டுச் சொல்லவும் செய்தான். “கிளைவ், நீ முயன்றும் இந்தத்துப்பாக்கி உன்னைக் கொல்ல மறுத்தது. இப்போழும் உன்னிஷ்டத்தை நிறை வேற்றாது. நீ சாக முடியாது. வெற்றி உன் தலையில் எழுதியிருக்கிறது. அதற்கு வரதராஜப் பெருமாளே சாட்சி” என்று.

கிளைவ் தலை வணங்கினான் காஞ்சியை நோக்கி. அந்தச் சமயத்தில் தடதடவென்று கணக்கற்ற புரவிகள் கோட்டைக்குள் நுழைந்து எங்கும் பரவின. அவற்றின் முன்னிலையில் வந்த ஒரு மகாராஷ்டிர வீரன் கிளைவின் முன் வந்து புரவியை நிறுத்தி வணங்கினான். “நீங்கள்தான் காப்டன் கிளைவ், ஆற்காட்டு வெற்றி வீரன் என்று நினைக்கிறேன்” என்று கேட்டான்.

”ஆம்” என்றான் கிளைவ்.

”முராரிராவிடமிருந்து வருகிறேன். ஆயிரம் புரவி வீரர்களை உடனழைத்து வந்திருக்கிறேன். மீதி நாலாயிரம் வீரருடன் முராரிராவ் திருச்சிச் செல்கிறார். தனது பாராட்டுதலைத் தங்களுக்குச் சொல்லச் சொன்னார்” என்று கூறி மீண்டும் தலை வணங்கினான்.

அதுவரை வாளா நின்றிருந்த விஜயகுமாரன் இடை புகுந்து, ”கிளைவ், மீட் தி மோஸ்ட் பேமஸ் லெப்டினண்ட் ஆப் முராரிராவ். எ மான் அன்டாண்டட் இன் வார் (கிளைவ், முராரிராவின் பிரசித்தி பெற்ற உபதலைவனைச் சந்தி; போரில் இணையற்றவன்)” என்று அறிமுகம் செய்து வைத்தான்.

அப்போது விஜயகுமாரனைக் கவனித்து மகாராஷ்டிர உபதலைவனும் அவனுக்குத் தலை சாய்த்து, ”மன்னிக்க வேண்டும். தாங்களைக் கவனிக்கவில்லை’ என்று மரியாதையுடன் பதில் சொன்னான்.

‘’வீரனே! உன் பெயரென்ன?” என்று வினவினான் கிளைவ்.

”பாஜிராவ்”

”குட், பாஜிராவ் பீ ரெடி டு ஸ்டார்ட் இன் ஆன் அவர் (நல்லது பாஜிராவ். இன்னும் ஒரு மணி நேரத்தில் புறப்படத் தயாராகு)” என்றான் கிளைவ்.

”ஹொயர் டு? (எங்கே போவதற்கு?)” என்றான் பாஜிராவும் தனக்கு ஆங்கிலம் தெரியுமென்பதைக் காட்டி.

”வேலூருக்கு.”

”அங்கே சென்று பயனில்லை.”

”ஏன்?”
”ராஜாசாகிபுக்கு உதவப் பிரெஞ்சுப் படையொன்று புதுச்சேரியிலிருந்து வருகிறது. அவர்களும் ராஜா சாகிபும் சேர்ந்தால் நாம் வெற்றி பெறுவது பகற் கனவு.”

”உதவிப் படை பெரிதா?”

‘’சுமார் 200 பிரெஞ்சு சோல்ஜர்களும் 1000 சிப்பாய்களும் வருகிறார்கள். அவர்களது முன்னோடிகளை நானே சந்தித்துப் பிடித்தேன். அவர்களை விஷயத்தைக் கக்கவும் வைத்தேன். இந்தப் படை ராஜா சாகிபுடன் சேர்ந்தால் அவருக்கு 300 பிரெஞ்சு சோல்ஜர்கள், 2500 காலாட் சிப்பாய்கள், 2000 புரவிப் படை இருக்கும்.”

இப்படிச் சொன்ன அந்த வாலிப வீரனின் முகத்தில் வீரக் களை கொட்டிக் கொண்டிருந்ததைக் கண்டதால் மகிழ்ச்சி யடைந்த கிளைவ் கேட்டான், ”வாட்டு யூ ஸஜ்ஜஸ்ட்?” என்று.

இந்த பாஜிராவையும் பேஷ்வா பாஜிராவையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இருவரும் வேறு. இவனை Orme ‘போஸின் ராவ்’ என்று அழைத்திருக்கிறார்.

”நாம் வேலூருக்குப் போகவேண்டாம். காஞ்சிக்குச் செல்வோம். பிரெஞ்சுப் படையை இடையில் சந்திப்போம். அது ராஜா சாகிபின் படையுடன் சேருமுன்பு அழித்து விடுவோம்” என்றான் மகாராஷ்டிர உபதலைவன்.

கிளைவுக்கு மயிர்க்கூச்செறிந்தது. அந்த வீரனுடன் மிக மகிழ்ச்சியுடன் கை குலுக்கினான். அவனை இளைப்பாறும் படியும் மாலையில் கிளம்பலாமென்றும் சொன்னான். அந்த இளைஞன் அதற்கு ஒப்பவில்லை. “எங்களுக்கு இளைப்பாற வேண்டாம். இப்போதே என் வீரர்கள் புறப்படத் தயார்” என்று அறிவித்தான்.

கிளைவ் புறப்பட்டான் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல். இரண்டு நாட்களுக்குள் ஆற்காட்டுக்கும் காஞ்சிக்கும் இடையிலிருந்த காவிரிப்பாக்கத்தில் பாசறை அமைத்தான். அங்கே கிடைத்தது ஒரு விபரீதத் தகவல். அது வீரர்களுக்குத் தெரிந்தால் கிலியை அளிக்கும் என்று நினைத்து, பாஜிராவையும் விஜயகுமாரனையும் அழைத்துக் கொண்டு காவேரிப்பாக்கம் ஏரியை நோக்கிச் சென்றான். அதன் கரையில் தான் கையில் கொண்டு வந்திருந்த விளக்கை வைத்து விஜயகுமாரனையும் பாஜிராவையும் எதிரே உட்காரப் பணித்துவிட்டுப் பையிலிருந்த ஒரு ‘மாப்’பை எடுத்துத் தரையில் விரித்தான். ”நௌ ஸீ” என்று தனது படை நிலையை விளக்கலானான்.

Previous articleRaja Perigai Part 3 Ch16 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here