Home Historical Novel Raja Perigai Part 3 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

41
0
Raja Perigai Part 3 Ch18 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch18 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 18 .தூக்கில் ஆட இருவர்

Raja Perigai Part 3 Ch18 | Raja Perigai | TamilNovel.in

காவேரிப்பாக்கம் ஏரியில் அப்போது நீர் அதிகம் இல்லாவிட்டாலும் ஏரிக்காற்று ஜிலுஜிலு வென்று வந்து கொண்டிருந்தது. அந்த ஜிலுஜிலுப்பான காற்றால் கூடக் கிளைவின் மன உஷ்ணத்தைத் தணிக்க முடியவில்லை. எதிரே அரிக்கன் லைட் வெளிச்சத்தில் விரிக்கப்பட்டிருந்த ‘மாப்’ காற்றில் பறக்க ஆரம்பிக்கவே, பக்கத்திலிருந்த சிறு மண்ணாங்கட்டிகளை எடுத்து அதன் முனைகளில் எரிச்சலுடன் வைத்தான் கிளைவ். உள்ளே இருந்த மனக்கொதிப்பின் காரணமாக, ”நௌ ஸீ” என்று விஜயகுமாரனையும் பாஜிராவையும் ‘மாப்’ பைப் பார்க்கச் சொன்ன ராபர்ட் கிளைவ், ”நாம் இப்போது காஞ்சி ஆற்காடு நெடுஞ்சாலையில் ஆற்காட்டிலிருந்து சிறிது தூரத்தில்தான் தங்கியிருக்கிறோம். நாம் இங்கு வருவதற்குக் காரணம் ராஜா சாகிபுவின் உதவிக்குச் செல்லும் பிரெஞ்சுப் படையை இடையில் சந்தித்து அழிப்பதற்காக” என்று கூறினான்.

கிளைவ் எதைப் பேசினாலும் காரணத்தோடுதான் பேசுவான் என்பதை உணர்ந்திருந்த விஜயகுமாரன் கிளைவின் பேச்சுக்குக் குறுக்கே எதையும் சொல்லவில்லை. ஆனால் ஏற்கனவே தங்களுக்குத் தெரிந்த விஷயத்தைக் காப்டன் எதற்காகத் திரும்பவும் விவரிக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ள முடியாத மகாராஷ்டிரனான பாஜிராவ் மட்டும் கேட்டான், ”இது ஏற்கனவே தெரிந்த விஷயந்தானே?” என்று.

கிளைவ் பாஜிராவின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மாப்பைப் பார்த்தபடியே சொன்னான், ”நாம் எதிர்பார்த்தது சரியல்ல” என்று.

”சரியல்லவா?” பாஜிராவின் முகத்தில் கவலை படர்ந்தது.

”சரியல்ல. ராஜா சாகிபின் படையும் பிரெஞ்சுப் படையும் இணைந்துவிட்டன.” என்றான் கிளைவ்.

”எங்கே?”

”ஹியர்’ என்று ஆற்காட்டுக்கு நேர் தெற்கேயிருந்த ஆரணியைத் தொட்டுக் காட்டினான் கிளைவ்.

பாஜிராவ் பிரமித்தான். “ராஜா சாகிப் வேலூரில் இருப்பதாக நேற்றுவரை செய்தி வந்தது எனது ஒற்றர்களிடமிருந்து” என்றான் பாஜிராவ்.

”அப்படி நாம் நம்ப வேண்டுமென்பது ராஜா சாகிபின் விருப்பம். காஞ்சி மார்க்கத்தில் பிரெஞ்சு உதவிப்படை வருமென்று வதந்தியை உலாவ விட்டதும் ராஜா சாகிப் தான். இப்போது புரிகிறதா ராஜா சாகிப் எத்தனை சிறந்த படைத் தலைவன் என்பது” என்று கூறிய கிளைவ் , ”ஐ ஹாவ் டெபனிட் இன்பர்மேஷன் தட் ராஜா சாகிப் இஸ் இன் தி போர்ட் ஆஃப் ஆரணி அண்ட் தட் ஹி ஹாஸ் எபெக்டட் எ ஜங்ஷன் வித்தி பிரெஞ்சு கமாண்டர் (ராஜா சாகிப் இப்பொழது ஆரணி கோட்டையில் இருக்கிறார் என்றும் பிரெஞ்சு தளபதியுடன் சேர்ந்துவிட்டாரென்றும் எனக்குத் திட்டமாகத் தகவல் கிடைத்திருக்கிறது)” என்று கிளைவ் கூறினான். “வாட்ஷல் வீடு நௌ? (இப்போது நாம் என்ன செய்யலாம்?)” என்று வினவினான்.

விஜயகுமாரன் அப்போதும் மௌனமே சாதித்தான். பாஜிராவ் மட்டும் பதில் சொன்னான், “நாம் ஆரணியை நோக்கிச் செல்வோம்” என்று.

கிளைவ் விஜயகுமாரனை நோக்கி, ”விஜயகுமாரா! நீ ஏதும் சொல்லவில்லையே?” என்ற வினவினான்.

”உன் மனத்தில் இருப்பது எனக்குத் தெரியும். ஆகையால் சொல்லவில்லை” என்று கூறினான் விஜயகுமாரன்.

‘வாட் இஸ் ஆன் ஹிஸ் மைண்ட்? ஆர் யூ எ மைண்ட் ரீடர்? (அவர் மனத்தில் இருப்பதென்ன? எண்ணங்களை அறிவதில் நிபுணரா நீங்கள்?)” என்று விஜயகுமாரனை நோக்கி வினவினான் பாஜிராவ்.

”பாஜிராவ்! நீ மகாவீரன். ஆனால் அறிவு முதிர்ச்சி இல்லாத சிறுவன். காப்டன் சொல்வதைக் கேட்போம்’ என்ற விஜயகுமாரன் சிறிது கண்டிப்பான குரலில் கூறினான், மகாராஷ்டிரனை நோக்கி.

‘உங்களுக்கு ராணுவத்தில் கிழவர்கள்தான் வேண்டும் என்றால் அவர்களை அழைத்துக் கொள்ளலாமே” என்று சீறினான் பாஜிராவ்.

இதைக் கேட்ட விஜயகுமார்ன் சிவந்த கண்களை அந்த வாலிபன் மீது திருப்பினான். ‘உனக்கு முராரிராவின் உத்தர வென்ன?” என்று கேட்டான் உஷ்ணத்துடன்.

”காப்டன் கிளைவுக்கு உதவும்படி உத்தரவு. ஆனால்….”

‘ஆனால்?”

”உங்கள் தலைமையில் இயங்க ஆணை.”

”தென் கீப் கொயட். லெட் அஸ் ஹியர் கிளைவ்” என்ற பாஜிராவை அடக்கிய விஜயகுமாரன், ‘கிளைவ்! இப்போது உன் திட்டத்தைச் சொல்” என்றான்.

கிளைவ் மெல்ல நகைத்தான். ‘யூ ஆர் எ மைண்ட் ரீடர். ஹொய் நாட் யூ ஸ்டார்ட் த பால்” (நீ மனோதத்துவ நிபுணன், நீயே துவங்கு)” என்று சொன்னான் நகைப்பின் ஊடே.

விஜயகுமாரன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சிறிது சிந்தனைக்குப் பிறகு, ‘கிளைவ்! யூ வாண்ட் டு கோடு ஆர்ணி. தட் மீன்ஸ் டர்ணிங் பாக் அண்ட் டேகிங் ஆர்ணி ரோட் (கிளைவ், நீ ஆரணிக்குப் போக இஷ்டப்படுக்கிறாய் அதாவது திரும்பி ஆரணிச்சாலையை அடையப் பார்க்கிறாய்)” என்று கூறிய விஜயகுமாரன், ”அண்ட் யூ வில் மீட் த எனிமி ஹியர்’ என்று மார்பின் ஓர் இடத்தில் தன் ஆள்காட்டி விரலை ஊன்றினான்.

கிளைவின் முகத்தில் வியப்புப் பெரிதும் விரிந்தது. ”விஜயகுமார்! இனி இங்கிலீஷில் பேசாதே. எனக்கு ஹிந்துஸ்தானியும் தமிழும் நன்றாக வந்துவிட்டது. நீ ஒரு ஜீனியஸ். அண்ட் யூ ஆர் எ மைண்ட் ரீடர்” என்றான் உணர்ச்சி வேகத்தில்.

விஜயகுமாரனும் பாஜிராவும் பெரிதும் நகைத்தார்கள். ”ஏன் நகைக்கிறீர்கள்?” என்று வினவினான் கிளைவ்.

”உன் பிறவிக் குணம் போகவில்லையே’ என்ற விஜயகுமாரன் மீண்டும் நகைத்தான், பாஜிராவும் நகைத்தான், கிளைவ்கூட அந்த நகைப்பில் கலந்து கொண்டான். அந்த மூவர் நகைப்புடன் காவேரிப்பாக்கம் ஏரியும் கலந்து கொண்டு தனது சிற்றலைகளைக் கருங்கல் சுவர்கள் மீது மோதியது.

மூவர் சிரிப்பும் அடங்கியதும் கிளைவ் சொன்னான். ”ஆம் விஜயகுமார்! நாம் ஆரணிக் கோட்டையை நோக்கிச் செல்வோம். இடையே ஆற்காட்டைப் பிடிக்க ராஜாசாகிப் பெரும் படையுடன் வருவான். இங்கு நாம் அவரைச் சந்திப்போம்” என்று ஒரு சிறு கிராமத்தைச் சுட்டிக் காட்டிய கிளைவ் , ”கிவ் மார்ச்சிங் ஆர்டர்ஸ் லெப்டினண்ட்” என்று பாஜிராவை நோக்கிக் கூறினான்.

அந்த ஏரிக்கரைத் திட்டப்படி ராஜா சாகிபின் படையை ஆரணி அருகிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் சந்தித்தான் கிளைவ். எதிரியின் படைகள் கண்களுக்குப் புலப்படுமுன்பே பெரிய ஒரு மேட்டில் தன் பிரிட்டிஷ் பிரிவையும் ராஜா சாகிப் ஆற்காட்டில் விட்டுப் போய்த் தான் கைப்பற்றிய பீரங்கிகளையும் நிறுத்திக் கொண்டான். அந்த மேட்டின் ஒரு பகுதி ஆழமாகவும் இன்னொரு பக்கத்தில் பெரிய பனைமரத்தோப்பும், நேர் எதிரில் பச்சைப் பசேலென்ற நெற்பயிர்கள் காற்றில் விளையாடிய நஞ்சை வயல்களும் இருந்தன. பனைமரத் தோப்பின் மறைவில் மகாராஷ்டிரப் புரவிப் படை நிறுத்தப்பட்டது.

கிளைவின் ஏற்பாடுகளை ராஜா சாகிப் தூரத்திலிருந்தே கண்டாலும் போரிலிருந்து விலகிப் பின் வாங்கவில்லை. அவரிடம் நான்கு பெரும் பீரங்கிகளைக் கொண்ட 300 பிரெஞ்சு வீரர்கள், 1500 சிப்பாய்கள் கொண்ட காலாட்படை, 2000 பேர் கொண்ட புரவிப் படை இவை யாவும் இருந்ததால் தைரியத்துடன் முன்னேறினார்.

கிளைவ் எதிரியை முன்னேற விட்டான். தனக்கு எதிரி லிருந்த வயல்களில் அவர்கள் இறங்கும் வரையில் வாளா இருந் தான். பாதி வயல்களில் புகுந்துவிட்ட பிரெஞ்சுப் படை, பீரங்கிகளை இயக்கிக் குண்டுகளை வீசத் துவங்கிய போதும் கிளைவ் நடவடிக்கை தொடங்கவில்லை. பிரெஞ்சுப் படையும் ராஜா சாகிபின் புரவிப்படையும் வயல்களில் பாதி தூரம் வந்ததும் தனது பீரங்கிகளில் ஒன்றை வெடிக்க உத்தரவிட்டான் கிளைவ். அதுதான் அவன் தனது படைகளுக்குக் கொடுத்திருந்த அடையாளம். அடுத்த அரை மணியில் போர் மும்முரமாக மூண்டு விட்டது. நடு வயல்களில் சகதி இருந்ததால் எதிரியின் பீரங்கி வண்டிகள் நகரவில்லை. திருப்ப முடியாத பீரங்கிகளை வெடித்த போது குண்டுகள் திசை தப்பின. புரவிகளின் கால்கள் சேற்றில் மாட்டிக் கொண்டதால் அப்படையும் தத்தளித்தது. உடனடியாகக் பிரிட்டிஷ் பீரங்கிகள் ஒரே சமயத்தில் முழங்கின. ஒவ்வொரு குண்டும் எதிரிகளின் உயிர்களைக் கும்பல் கும்பலாகப் பருகின. அதே சமயத்தில் பனந்தோப்பிலிருந்த மகாராஷ்டிரர்களின் பேரிரைச்சல் கேட்டது. காற்று வேகத்தில், அந்தப் புரவிப் படை வெளியே வந்து வெறியுடன் வாள்களை வீசிக் காலாட் படைக்குப் பெரும் சேதம் விளைவித்தது. எங்கும் எதிரிகள் அலறி விழுந்து திரும்பியோடும் ஒலிகள் பயங்கரமாகக் கேட்டன. காலாட்படை ஒடியதும் பாஜிராவ் தனது படையைக் கழனிகளின் முனைப்புக்குக் கொண்டு வந்து மாட்ச் லாக் துப்பாக்கிகளால் எதிரிகளை அழிக்க ஆரம்பித்தான்.

மிகப் பயங்கரமாக ஆரம்பித்து அரைநாள் நடந்த ஆரணிப் போரில் எதிரி பெரும் சேதத்துடன் பின் வாங்கினான். பகலவன் உச்சியிலிருக்கையிலேயே பிரிட்டிஷ் வெற்றி ப்யூகிள் ஊதப் பட்டது. பிரிட்டிஷ் கொடி மிக்க கம்பீரமாகப் பறந்தது, இந்தியரை அடிமைப்படுத்த வந்துவிட்டோம் என்ற ஆணவத்தில்.

அன்று மாலை ஆரணிக் கோட்டைக்கு எதிரில் கிளைவ் வந்தான். போர் நடந்த நாள் டிசம்பர் 5. அடுத்த நாள் ஆரணிக் கோட்டைத் தலைவன் தான் முகம்மது அலிக்குப் பணிந்துவிட்டதைக் கிளைவுக்குத் தெரிவித்தான். இப்படிக் கிளைவ் முகம்மது அலியின் பெயரால், கர்நாடகத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு அடிகோலிவிட்டாலும் நாடகம் முழுவதும் முடியவில்லை கர்நாடகத்தில்.

அவன் சென்னை திரும்பியபோது வழியில் காஞ்சி மாநகர் பிரெஞ்சு வசம் இருந்தது. ஏகாம்பரேசுவரர் கோயிலின் கோட்டை போலுள்ள மதிளுக்குள் பிரெஞ்சுக்காரர் கிளைவை எதிர்க்கத் தயாராக இருந்தார்கள்.

கிளைவ் கோயிலை வளைத்ததும் பிரெஞ்சு படைத் தலைவன் ஒரு தூதனை அனுப்பினான். அந்தத் தூதன் சொன்னான்: ”காபிதான் கிளைவ்! அவர் காபிதான் ஆபர்ஸ் ஹிஸ் க்ரீதிங்ஸ் துயூ. அவர் காபிதான் ஸேஸ் யூ கோ. ஹீ ஹாஸ் க்ளாஸ், ரெவர், போத் பிரிஸனர்ஸ். அந்த தே ப்ராத் கிப்த்து திஸ் தவுன் காத். இப் யூ வோன்த் கோ அவர் காபிதான் ஹாங் யுவர் ஸோல்ஜர்ஸ் போத் குத் பாய்ஸ், யங் பாய்ஸ்.’’ இதைச் சொல்லித் தலையை வருத்தத்துடன் சாய்த்தான் பிரெஞ்சுத் தூதன்.

கிளைவ் புரிந்துகொண்டான். தான் சிசிச்சைக்குச் சென்னைக்கு அனுப்பிய லெப்டினண்ட் ரெவரும், என்ஸைன் க்ளாஸும் எப்படியோ பிரெஞ்சுக்காரரிடம் சிக்கிக் கொண்டு விட்டார்கள். அவர்களிடம் தான் கொடுத்தனுப்பிய மகர கண்டியும் பிரெஞ்சுக்காரர்களிடம் இருக்கிறது. இவற்றை வைத்துப் பிரெஞ்சு அதிகாரி தன்னை மிரட்டுகிறான். இந்த விஷயங்களைப் புரிந்து கொண்ட கிளைவ், ‘ஆல் ரைட் கிவ் மிதி லெட்டர்” என்று கேட்டான்.

இதைக் கேட்ட தூதன் முகத்தில் வியப்பு பெரிதும் படர்ந்தது. ”காபிதான் வெரி க்ளவர்” என்று கூறி, தனது மடியிலிருந்த கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். அந்தக் கடிதத்தில் என்ஸைன் கிளாஸும் லெப்டினண்ட் ரெவரும் திட்டமாக எழுதியிருந்தார்கள் ஆங்கிலத்தில். “பிரெஞ்சு மிரட்டலுக்குப் பணிய வேண்டாம். எங்களைத் தூக்கில் போட்டால் பரவாயில்லை” என்று பொருள்படும்படியாக.

காப்டன் கிளைவ் ஒரு விநாடிதான் யோசித்தான். பிறகு தன் பதிலைத் திட்டமாகச் சொன்னான். “டெல் யுவர் காப்டன் தட் ஐ ஹாவ் இனப் கன்ஸ் டூ பாட்டர்டவுன் த பகோடா கேட்ஸ். தட் இப் ஹி ஹார்ம்ஸ் ஒன் ஹேர் ஆப் மை பாய்ஸ் ஐ வில் ஹாங் ஹிம் அண்ட் ஹிஸ் எண்டயர் படாலியன் (சொல் உன் தளபதியிடம், என்னிடம் கோவில் கதவுகளை உடைக்கப் போதிய பீரங்கிகள் இருப்பதாக. உடனடியாகச் சரணடையச் சொல். எனது சோல்ஜர் இருவர்களின் மயிரிழை ஒன்று தொடப்பட்டாலும் உன் தளபதியையும் படை வீரர்களையும் தூக்கில் தொங்கவிடத் தயங்கமாட்டேனென்று சொல்)”

அந்தப் பதிலைச் சொன்ன கிளைவின் கண்களல் என்றுமில்லாத கொடுமை காணப்பட்டதை விஜயகுமாரனும் பாஜிராவும் பார்த்தார்கள். சிறைப்பட்டிருப்பவர்களுக்கு எது நேருமோ என்று ஏங்கவும் செய்தார்கள்.

Previous articleRaja Perigai Part 3 Ch17 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here