Home Historical Novel Raja Perigai Part 3 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

66
0
Raja Perigai Part 3 Ch2 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 3 Ch2 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 2. அபாய யாத்திரை

Raja Perigai Part 3 Ch2 | Raja Perigai | TamilNovel.in

கடலில் ஆடி நின்ற கப்பலைக் கண்ட கிளைவின் இதயத்தில் விவரணத்துக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சியும் குதூகலமும் நிரம்பி நின்றன. சாளரத்தில் கவர்னர் ஸாண்டர்ஸுடன் நின்று வேஜரை நோக்கிய அந்த வாலிபன் கண் முன்பாக ஸர் வால்டர் ராலே முதலிய பெரும் கடல் வீரர்களின் சரிதங்கள் எழுந்தன. எலிஸபத்தின் கடல் வேட்டை நாய்கள் (ஸீ டாக்ஸ் ஆப் எலிஸபத்) என்று சரித்திர பிரசித்தி பெற்ற மகா வீரர்களின் கூட்டமும், அந்தக் கூட்டம் பெரும் ஸ்பானிஷ் கடற்படையை முறியடித்த அற்புதச் செயலும் அவன் மனத்தில் எழுந்து தாண்டவமாடின.

அன்று அவர்களுக்கு இருந்த எதிர்ப்பு தனக்கும் இந்தியாவில் இருந்ததையும், அவர்கள் சென்ற ஆபத்தான மார்க்கத்தில் தானும் செல்ல இருப்பதையும் நினைத்துக் கிளைவ் உள்ளம் பூரித்தான். தான் செய்யும் எந்தக் காரியத்தின் விளைவும் கவர்னர் ஸாண்டர்ஸின் தலையில் இறங்குமாகையால் தன்னிடம் அளவுக்கு மீறிய நம்பிக்கை கொண்ட இந்தப் பெருமகனாரை வாழ்த்தவும் செய்தான் கிளைவ். அத்தகைய எண்ணங்களால் நிரப்பப்பட்ட மனத்துடன் வினவினான் கவர்னரை நோக்கி, ”யுவர் எக்ஸலென்ஸி| இந்தப் படையெடுப்பில் நான் தோற்றால் பழி உங்கள் மீதுதானே விழும்?” என்று.

”என்ன பழி?” என்று வினவினார் கவர்னர் அலட்சியமாக.

”போர் அநுபவமில்லாத ஒரு வாலிபனை, படைத் தலைவர்களும் ஏற்று நடத்த மறுக்கக்கூடிய போருக்குத் தக்க படைத்துணையின்றிக் கவர்னர்ஸாண்டர்ஸ் அனுப்பினார் என்று உங்களைப் பழி சொல்ல மாட்டார்களா?” என்று கேட்டான் கிளைவ் மீண்டும்.

கவர்னர் கிளைவை நோக்கித் திரும்பினார். ”சொல்லுவார்கள்” என்றார் லேசாகப் புன்முறுவல் செய்து.

”அப்படியிருந்தும்…” என்று இழுத்தான் கிளைவ்.

”உன்னை அனுப்புகிறேன். மை டியர் பாய்! டிட் ஐ நாட் ஸே திஸ் ஈஸ் எ காம்பிள்? (இது சூதாட்டமென்று நான் சொல்ல வில்லையா?)” என்று வினவினார் ஸாண்டர்ஸ்.

‘’எஸ் யுவர் எக்ஸலென்ஸி.”

”டிட் ஐ நாட் ஸே ஐ லைக் டு காம்பிள்? (சூதாட எனக்கு விருப்பம் என்றும் சொல்லவில்லையா?)”

”எஸ் யுவர் எக்ஸலென்ஸி.”

”சூதாட்டத்துக்குத் தேவை எது?” என்று தமிழுக்குத் திரும்பினார் ஸாண்டர்ஸ்.

”பந்தயப் பணம்.”

”இங்கிலீஷில்?”

”வேஜர்.”

”மை பாய், தேர் இஸ் வேஜர் ஸ்டார்ட் ஆன் இட்.”

கிளைவ் அவரை உற்று நோக்கினான். கவர்னரே மேற்கொண்டு சொன்னார், ‘காப்டன் கிளைவ் ஐ ஹாவ் கான்பிடன்ஸ் இன் யூ. ஐ ஹாவ் ஃபெய்த் தட் தி பிரிட்டிஷ் வில் ஆல்வேஸ் வின்டிஸ்பைட் ஆட்ஸ். (காப்டன் கிளைவ்| உன்னிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பகை எத்தனை பெரிதானாலும் பிரிட்டிஷார் வெற்றி பெறுவார்கள் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது)” என்று சொல்லிவிட்டு, “கோ அண்ட் டேக் ரெஸ்ட். மேக் யுவர் பிரபரேஷன்ஸ் டுமாரோ, (போய் ஓய்வெடுத்துக் கொள். பயணத்துக்கு நாளை ஏற்பாடு செய்து கொள்)” என்று ஆணையிட்டுத் திரும்பினார் சாளரத்திலிருந்து.

கிளைவ் அவரிடமும் அறையிலிருந்த மற்ற இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கவர்னர் அறையிலிருந்து நாலு அறைகள் தள்ளியிருந்த தனது அறைக்கு வந்தான். அங்கிருந்த அடிமைப் பெண்ணிடமும் விஜயகுமாரனிடமும் தேவையான அளவுக்கு விஷயங்களைச் சொன்னான்.

‘’விஜயகுமார் இவளை அழைத்துக் கொண்டு நீ தஞ்சை செல். அங்கு அரண்மனையில் இவளை நந்தினியிடம் ஒப்படைத்துவிட்டு நான் சொல்லும் அலுவல்களைக் கவனி” என்று கூறினான் விஜயகுமாரளை நோக்கி.
விஜயகுமாரனின் முகத்தில் சங்கடம் தெரிந்தது. “இவளை நான் அழைத்துக் கொண்டு நந்தினியிடம் போக வேண்டுமா?” என்று வினவினான் திகிலுடன்.

”ஆம்.”

”எதற்கு?”

“இவளுக்கு ஒரு புகலிடம் வேண்டும்.”

”இவளைத் தந்தையிடம் அனுப்பிவிட்டால் என்ன?”

”எதிரியைச் சேர்ந்ததற்காக உடனடியாகக் கொல்லப்படுவாள்.”

”தந்தை பெண்ணைக் கொல்வாரா?”

“இவளைச் சந்தா சாகேபுக்குத் தெரியாதென்று இவளே சொல்லியிருக்கிறாள். ஆகையால் சந்தாசாகேபிடம் இவளை அனுப்பமாட்டார்கள். சாதாரணப் படைத் தலைவனே விஷயத்தை முடித்துவிடுவான்.”

இதைக் கேட்ட விஜயகுமாரன் பரிதாபமாக நோக்கினான் கிளைவ. ”கிளைவ்! ஏற்கனவே இவளால் நந்தினிக்கும் எனக்கும் மனஸ்தாபம் இருக்கிறது. இவளை நான் அழைத்துச் சென்றால் எரிமலை வெடிக்கும்” என்று கெஞ்சினான்.

அவன் சொன்னதைக் கிளைவ் காதில் வாங்கிக் கொள்ள வில்லை. அவன் சிந்தனை எங்கோ பறந்து கொண்டிருந்தது. கண்களில் கனவு விரிந்து கிடந்தது. ஆகவே அவன் பதிலேதும் சொல்லாமல் ஏதோ கட்டளை பிறப்பிப்பது போல் கூறினான்:

”இங்கிருந்து தஞ்சை போய் இவளை நந்தினியிடம் ஒப்படைத்து விடு. ஒரு அரசகுமாரியை நடத்துவதுபோல் இவளை நடத்தச் சொல். தஞ்சை மன்னர் பிரதாபசிம்ம மகாராஜாவுக்கு ஒரு கடிதம் தருகிறேன். அதை அவரிடம் ஒப்படைத்துவிடு. நீ அதற்குப் பின்னர் செய்ய வேண்டிய வேலைகளுக்கும் விவரமான உத்தரவுகள் இருக்கும். லெப்டினண்ட் பி கேர்ஃபுல் இன் வாட் யூ டு. யூ ஆர்திவர்ஜ் ஆப் க்ரேட் ஹிஸ்டாரிகல் ஹாப்பனிங்ஸ் (லெப்டினண்ட் செய்வது எதிலும் ஜாக்கிரதையாயிரு. இப்பொழுது நீ பெரிய சரித்திர நிகழ்ச்சிகளின் எல்லையில் நிற்கிறாய்.)”

கிளைவின் குரலிலிருந்த உணர்ச்சியை விஜயகுமாரன் கவனிக்கவே செய்தான். ஒரு மகா வீரனுடன் தான் நட்பு கொள்ள நேர்ந்ததைப் பெரும் அதிர்ஷ்டமாகக் கருதினாலும், “இத்தனைக்கும் இன்னொரு நாட்டான் தானே நமது நாட்டைப் பிடிக்கப் போகிறான்? நமது நவாப்புகளும் அரசர்களும் சண்டை போடாமல் தங்கள் அரசுகளை ஏன் காப்பாற்றிக் ‘கொள்ளவில்லை?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். ஆனால் அதற்குத் தான் விடை பகர இயலாது என்பதையும் புரிந்து கொண்டதால் கிளைவின் சொற்களுக்குத் தலையை மட்டும் ஆட்டினான்.

அத்துடன் கிளைவ் அவ்வறையைவிட்டு வெளியே சென்றான். கவர்னர் மாளிகையின் கீழ்ப் புகுதியை அடைந்து அங்கிருந்த சோல்ஜர்கள், சிப்பாய்கள் இவர்கள் கணக்கையும் எடுத்துப் பார்த்தான். ஸெய்ண்ட் டேவிட் கோட்டை ராணுவ ஜாபிதாவைப் பார்த்ததும் தனக்கு 130 ஐரோப்பிய சோல்ஜர்களும்
300 சிப்பாய்களும் தான் கிடைப்பார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கிருந்து கடற்கரை சென்று உலாவிக் கொண்டிருந்தான் சுமார் இரண்டு மணி நேரம். விடிவதற்குச் சற்று முன்பே அறைக்குத் திரும்பி வந்ததும் உறங்காமல் அறையின் கோடியிலிருந்த மேஜைக்குச் சென்று ஒரு கடிதத்தை விடுவிடுவென்று எழுதி, கவரில் போட்டு முத்திரை வைத்தான். பொழுதும் பலபலவென்று விடிந்தது.

கிளைவ் மட்டும் அன்றிரவு உறங்காமலில்லை. விஜயகுமாரனுக்கும் உறக்கம் பிடிக்கவில்லையாதலால் கிளைவ் வந்ததும் அவனுக்குத் தெரியும், கடிதம் எழுதினதும் தெரியும், இருந்தும் கண்ணை மூடிப் பொய்த் துகில் கொண்டிருந்தவன் திடீரென விழிப்பவன் போல் சோம்பல் முறித்து எழுந்து உட்கார்ந்தான். கிளைவ் மெல்லப் புன்முறுவல் கொண்டு, ”விஜயகுமாரா நன்றாகத் தூங்கியிருக்கிறாய். இதோ பிரதாப சிம்ம மகாராஜாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு நீ புறப்படலாம்’ என்று கூறினான்.

விஜயகுமாரன் அதைக் கேட்டு மெல்ல நகைத்தான். ”உன்னை அனுப்பிவிட்டுக் கிளம்புகிறேன் கிளைவ்’ என்று நகைப்பின் ஊடே கூறவும் செய்தான்.

”எங்கு அனுப்பிவிட்டு?”

”மதராஸுக்கு.’’
”மதராஸுக்கு நான் போகப் போவதாக யார் சொன்னது?”

”இவள்தான் சொன்னாள்” என்று அடிமைப் பெண்ணைக் காட்டினான் விஜயகுமாரன்.

‘’அவளுக்கு எப்படித் தெரியும்?” என்று உஷ்ணத்துடன் வினவினான் கிளைவ்.

“நீ நேற்றிரவு கவர்னருடன் பேசியதை இவள் கேட்டாள்” என்று விளக்கினான் விஜயகுமாரன்.

”எப்படி?”

”கதவுக்கருகில் காதை வைத்து கிளைவ் இவள் சுபாவ மாகவே வேவுகாரி என்பதை மறந்துவிட்டாயா?”

கிளைவ் அசந்து போனான். ”ஆமாம், நான் எங்கே போகப் போகிறேன் என்பதை கவர்னர் குறிப்பிடவில்லையே?” என்று சொன்னான்.

‘வேஜரில் போகப் போவதாகச் சொன்னாராம். அது மதராஸ் போகிறதென்று இவள் சொன்னாள்” என்றான் விஜயகுமாரன்.

கிளைவ் யோசித்தான் சில விநாடிகள். ”சரி சரி! இவளை நாம் பாதுகாப்பில் வைக்க வேண்டும். தஞ்சையில் கடுமையான காவலில் வைக்கும்படி நந்தினியிடம் கூறு” என்று கட்டளை யிட்ட கிளைவ் தனது கட்டிலில் படுத்துக் கண்களை மூடினான்.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து எழுந்து மீண்டும் கவர்னரிடம் சென்று தனது திட்டங்களைப்பற்றி விவாதித்தான். ”யுவர் எக்ஸலென்ஸி! அடிமைப் பெண்ணுடன் விஜயகுமாரன் தஞ்சை செல்லுகிறான். பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு ஒரு கடிதம் கொடுத்திருக்கிறேன், மற்ற ஹிந்து மன்னர்களின் ஆதரவை எத்தனை தூரம் பெற முடியுமோ அத்தனை பெறும்படி. மைசூர் அரசு தஞ்சையுடன் இந்தப் போரில் இணைந்து செயலாற்றலாம். விஜயகுமாரன் தஞ்சையிலிருந்து ஆற்காட்டு மேற்கத்தி எல்லை சென்று, அங்குள்ள முராரிராவை நமக்குத் துணை அழைப்பான். நான் வேலூரை அடைவதற்கும் முராரி ராவ் அங்கு வருவதற்கும் சரியாயிருக்கும். மகாராஷ்டிரர்களின் ‘லைட் ஹார்ஸ்’ நமது படையின் பலவீனத்தை ஈடு செய்யும்” என்று விளக்கமாகச் சொன்னான் கிளைவ்.

கவர்னர் சில விநாடிகள் சிந்தனையில் இறங்கினார். ”எஸ் தட் ஈஸ் எ பாஸிபிலிடி” என்றார். ”பட் மை பாய், யூ ஹாட் பெட்டர் ரிலை ஆன் யுவர் ஹெல்ஃப் (அது நடக்கலாம். ஆனால் நீ உன் சக்தியையே நம்புவது நல்லது)” என்றும் எடுத்துக் காட்டினார்.

கிளைவ் அவர் சொல்வதை ஆமோதிக்கும் பாணியில் தலையசைத்தான். “இன்றிரவு நான் கிளம்புகிறேன்” என்றும் சொல்லித் தன் மடியிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கவர்னரிடம் நீட்டினான்.

கவர்னர் ஸாண்டர்ஸ் நீண்ட நேரம் கடிதத்தைக் கூர்ந்து நோக்கினார், ”130 சோல்ஜர்கள் 300 கிப்பாய்கள். மிகச் சிறிய படை” என்று கூறினார் கிளைவை நோக்கி.
”ஆம். ஆனால் மதராஸ் ஸெய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் 130 சோல்ஜர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 80 பேரை அழைத்துக் கொள்கிறேன். தென் ஐவில் ஹாவ் 210 யூரோபியன்ஸ்” என்று சுட்டிக் காட்டினான் கிளைவ்.

கவர்னர் அதையும் ஆமோதித்தார். அன்று முழுவதும் கிளைவ் சோல்ஜர்களையும் சிப்பாய்களையும் திரட்டித் தயார் செய்வதிலும் தேவையான தளவாடங்களைச் சேகரிப்பதிலும் காலம் கடத்தினான்.

ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. சோல்ஜர்களும் சிப்பாய் களும் தங்கள் ராணுவக் ‘கிட்’ களுடனும் துப்பாக்கிகளுடனும் படகுகளில் சென்றார்கள். கிளைவை வழியனுப்ப கவர்னர் ஸாண்டர்ஸும், ரிச்சர்ட் பிரின்ஸும், ராபர்ட் ஆர்மும் கடற் ‘கரைக்கு வந்திருந்தார்கள். விஜயகுமாரனும் அடிமைப் பெண்ணும் கூட வந்திருந்தார்கள். அனைவரிடமும் அனுமதி பெற்றுக் கொண்ட கிளைவின் கையைக் கவர்னர் இறுதியாகப் பிடித்துக் குலுக்கினார். ”மை டியர் பாய் காட் பி வித் யூ” என்ற உள்ளத்திலிருந்த நெகிழ்ச்சி வெளியே தெரியாத இரும்புக் குரலில் கூறினார்.

கிளைவின் கண்கள் அவர் கண்களுடன் கலந்தன, சில விநாடிகள். அவ்விருவர் உள்ளங்களும் பேசின. ஒருவரை யொருவர் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். கடைசியாகக் கவர்னர் கையிலிருந்து தனது கையை விடுவித்துக் கொண்டு கடலில் இறங்கித் தனக்கென்று நின்றிருந்த படகில் ஏறினான் கிளைவ். படகு நகர்ந்தது.

அதைப் பார்த்துக்கொண்டே நின்ற கவர்னர் தனது ஆங்கிலச் சகோதரர்களை நோக்கி, ‘அதோ போகிறான் ஒரு மகா வீரன்” என்று கூறினார். தனது அபாய யாத்திரையைக் கிளைவ் தொடங்கினான்.

Previous articleRaja Perigai Part 3 Ch1 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here