Home Historical Novel Raja Perigai Part 3 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 3 Ch21 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch21 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 21 .கடலைக் கேள்!

Raja Perigai Part 3 Ch21 | Raja Perigai | TamilNovel.in

அந்த இரவில் ஸெய்ன்ட் டேவிட் கோட்டையில் கிளைவ் ஒரு பெரிய வெற்றி வீரன் அடையக்கூடிய சந்தோஷத்தை அடையவே செய்தாலும் ஸெய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்த சோல்ஜர்களின் பெருக்கத்தையும் தளவாடங்களின் பெருக்கத் தையுங்கண்டு பெருமகிழ்ச்சி கொண்டாலும், அவன் உள்ளத்தில் ஒரு சிறு குறையும், அக்குறையால் ஏற்பட்ட வருத்தமும் ஊடுருவி நிற்கவே செய்தன. கவர்னர் ஸாண்டர்ஸ் பழைய கவர்னர் ப்ளாயரைப் போலல்லாமல் ஸெய்ன்ட் டேவிட் கோட்டையை யாரும் தாக்கமுடியாத அரணாக ஆக்கியிருந்ததையும், அதன் சுவர்களின் உச்சியில் பெரும் பீரங்கிகள் அமைக்கப் பட்டிருந்ததையும், அந்த இரவு கொண்டாட்டங்களுக்குப் பிறகு கண்டான் கிளைவ். சோல்ஜர்களும் சிப்பாய்களும் அவனைத் தூக்கிச் சென்று கோட்டைச்சதுக்கத்தில் கூத்தாடிய பிறகு தரையில் உட்கார வைத்து, அவனுடன் விஸ்கி குப்பிகளைக் குடித்த பிறகு ஆர்க்காட்டு வெற்றியைப் பற்றிக் குடி வெறியிலேயே உளறலுடன் விசாரிக்கலாயினர்.

”காப்டன், வீ ஹேர்ட் யூ பிகேம் டெவில். ஹௌ டிட் யூ பிகேம் டெவில்? (காப்டன், நீ பிசாசாக மாறினியாமே, எப்படி?)” என்று ஒரு சோல்ஜர் கேட்டான்.

”ஹௌ டிட் யூ ஸேவ் காம்ரேட்ஸ் ப்ரம் பகோடா? (கோவிலிலிருந்து நமது தோழர்களை எப்படிக் காப்பாற்றினாய்?)” என்று விசாரித்தான் இன்னொருவன்.
”ஐ வாண்ட் டு நோ அபௌட் அவ்ரங்கசீப்ஸ் பிக் கன் (அவுரங்கசீப்பின் பெரிய பீரங்கியைப் பற்றி அறிய விரும்பு கிறேன்)” என்றான் மற்றொரு சோல்ஜர்.

கிளைவும் சற்று அன்றிரவில் அதிகமாகவே குடித்திருந்தாலும், நிதானம் இழக்காததால், ”மை டியர் பாய்ஸ்| ஐ வில் டெல் யூ த ஹோல் ஸ்டோரி (சகோதரர்களே! உங்களுக்கு முழுக் கதையையும் சொல்கிறேன்)” என்று அவர்களை அடக்கி, ”நௌஹியர்” என்றான்.

”வீ ஹியர் யூ! வீ ஹியர் யூ!” என்று பத்து சோல்ஜர்கள் சேர்ந்தாற்போல் பாடினார்கள்.

இன்னொரு சோல்ஜர் ‘யூ’ வை மடிக்கையில் உச்சஸ்தாயியில் ‘யூ…ஊ…ஊ…ஊ’ என்று நடுங்கும் குரலில் கத்தினான்.

”லிஸன் மை டியர் பாய்ஸ் (கேளுங்கள் என்னருமைத் தோழர்களே)” என்ற கிளைவை இரு சோல்ஜர்கள் கட்டிக் கொண்டனர். உட்கார்ந்த பெருங்கூட்டத்திலிருந்து ஒரு சோல்ஜர் எழுந்திருந்து வந்து கிளைவைக் கட்டி முத்தமிட்டான். கிளைவ் அவனைப் பிடித்துக் தோளை அழுத்தி உட்கார வைத்து விட்டு, ”வி ஸ்டார்டட் ப்ரம் ஹியர் ஆன் ஷிப் (இங்கிருந்து கப்பலில் கிளம்பினேன்)….” என்று துவங்கினான்.

”யூ டிட், யூ டிட் (நீ கிளம்பினாய், கிளம்பினாய்)” என்று சோல்ஜர்கள் இருவர் பின்பாட்டுப் பாடினார்கள்.

அதற்கு மேல் அவர்கள் அடங்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்ட கிளைவ் மெள்ள மெள்ள தன் வெற்றிக் கதையைச் சொன்னான். ஒவ்வொன்றுக்கும் இரண்டு சோல்ஜர்கள் பின்பாட்டுப் பாடினார்கள். அந்தக் காட்சியை மட்டும் தமிழ்நாட்டுப் பாகவதர்களும், வில்லுப் பாட்டு நிபுணர்களும் பார்த்திருந்தால் தங்கள் புராதனக் கலையையும் கிளைவ் தட்டிக் கொண்டு போய்விட்டான் என்பதை உணர்ந்திருப்பார்கள். அத்தகைய பாணியில் கிளைவும் தன் வீரச் சரிதையைச் சொன்னான். பின்பாட்டுக்காரர்களும் விடாமல் பாடினார்கள். கதை முடியும்பொழுது நடுநிசி தாண்டி இரண்டு மணி ஆகி விட்டதால் சோல்ஜர்கள் சதுக்கத்திலேயே படுத்து உறங்கி விட்டார்கள். ஸெண்ட்ரி ட்யூடியில் (காவல் பணியில்) இருந்தவர்கள் மட்டும் கோட்டை மதிள் பகுதிகளில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போட்ட எச்சரிக்கைக் கூச்சல் மட்டும் இரவின் நிம்மதியை அவ்வப்போது கிழித்துக் கொண்டிருந்தது.

அந்தச் சூழ்நிலையில் கிளைவ் மட்டும் உறங்காமல் உட்கார்ந்திருந்தான். எதிரே இன்னும் பல சாராயக் குப்பிகள் இருந்தாலும் எடுத்துக் குடிக்கவில்லை அவன். அவற்றை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துவிட்டு எழுந்திருந்து கோட்டை மதிளோரமாக நடந்து சென்றான் அன்றைய வீர நாயகனான கிளைவ்.

அவன் அப்படி நடந்து சென்றபோது யாரோ தன்னைப் பின்தொடருவதாகத் தோன்றவே சிறிது நின்று திரும்பிப் பார்த்தான். பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியரான ராபர்ட் ஆர்ம் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவர் நடையில் எந்தத் தள்ளாட்டமும் இல்லை. மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் வந்து கொண்டிருந்தார். கிளைவின் அருகில் வந்ததும், “மை டியர் காப்டன்! யூ ஹாவ் நாட் லெப்ட் எட் (அன்பார்ந்த காப்டன். நீ இன்னும் உறங்கவில்லையா?)” என்று வினவினார் கிளைவை நோக்கி.

“இல்லை” என்ற கிளைவ் மேலும் நடக்கலானான். ராபர்ட் ஆர்மும் அவன் பக்கத்தில் நடந்து சென்றார், அவன் கையுடன் தனது கையைக் கோத்துக்கொண்டு. சிறிது தூரம் நடந்ததும் சொன்னார், ”காப்டன், இது மகிழ்ச்சிக்கு நேரம் ” என்று. அவர் தமிழிலேயே பேசினார், கிளைவுக்கும் அந்த மொழி நன்றாகப் பழகி விட்ட காரணத்தால்.

”ஆம்.” என்று உணர்ச்சியற்ற குரலில் பதில் சொன்னான் கிளைவ்.

”நீ இப்பொழுது பெரிய ஹீரோ” என்றார் ராபர்ட் ஆர்ம்,

”ஆமாம்…”கிளைவின் குரல் வரண்டு கிடந்தது.

”கவர்னர் உன்னை … உன் பணிகளை ஏற்றுக்கொண்டு விட்டார்.”

ஆம்.”

”’என்றைக்கும் இடித்த புளி மாதிரி உட்கார்ந்திருக்கும் கவர்னர் இன்று சிறு பிள்ளைபோல் குடித்து உன்னைக் கட்டிக் கொண்டிருக்கிறார்.”

“ஆம்.”
”அடுத்த படையெடுப்பைத் திருச்சிமீது நடத்த உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.”

”தட்ஸ் ரைட்.”

”பட் யூ ஆர் நாட் ஹாப்பி (ஆனால் நீ மகிழ்ச்சியுடனில்லை)” என்றார் ராபர்ட் ஆர்ம் ஓரிடத்தில் சட்டென்று நின்று.

அவ்விருவர் மீதும் கோட்டை உள் விளக்குகளிலொன்று பிரகாசித்தது. கிளைவ், ஆர்மைக் கூர்ந்து நோக்கிவிட்டுக் கேட்டான். ‘ஹௌ கான் ஐ பி ஹாப்பி? (நான் எப்படிச் சந்தோஷமாயிருக்க முடியும்)” என்று.

ராபர்ட் ஆர்ம் மறுபடியும் தமிழுக்குத் திரும்பி, ”ஏன் முடியாது?” என்று வினவினார்.

”கவர்னர் திருச்சிமீது படையெடுக்கப் பெரும்படை திரட்டியிருக்கிறார்….” என்று கிளைவ் சொன்னான்.

”ஆம்.”

”அந்தப் படையை நடத்திச் செல்ல என்னை நியமித்திருக்கிறார்.”

“ஆம்.”

”அது பெரும் பதவி.”

”புரிந்து கொண்டிருக்கிறாய்.”

”ஆம். புரிந்து கொண்டிருக்கிறேன். அது மட்டுமல்ல, நான் புரிந்து கொண்டிருப்பது…” என்றான் கிளைவ்.

”வேறு என்ன?” என்று கேட்டார் ராபர்ட் ஆர்ம்.

“திருச்சியில் இப்போது யார் நமது படைகளுக்குத் தலைவன்?” என்று வினவினான் கிளைவ்.

அப்போதுதான் கிளைவின் மன வேதனைக்குக் காரணம் புரிந்து ராபர்ட் ஆர்முக்கு, ‘புரிகிறது புரிகிறது. அங்கிருப்பவன் காப்டன் ஜின்ஜின்ஸ்…” என்று இழுத்தார் ஆர்ம்.

”எனக்குச் சீனியர்” என்றான் கிளைவ்.

‘’ஆம். அது ஒரு துர்ப்பாக்கியம்” என்றார் ஆர்ம்.

”அவனிடம் நான் ஜூனியர் காப்டனாக வேலை செய்ய வேண்டும்” என்று சுட்டிக் காட்டினான் கிளைவ்.

”மிகவும் துர்ப்பாக்கியம் ” என்றார் ஆர்ம்.

”துர்ப்பாக்கியமா?”

”உனக்கு மட்டுமல்ல, பிரிட்டனுக்கும் துர்ப்பாக்கியம்.”

”ஜின்ஜின்ஸ் தலைமையைப்பற்றி நான் கவலைப் படுவது… பதவி பற்றி அல்ல.”
”புரிகிறது. அவன் திறமை பற்றிக் கவலைப்படுகிறாய். எதற்கும் உதவாதவன் ஜின்ஜின்ஸ் ஆன் அனல்லாய்ட் டட் (கலப்படமல்லாத களிமண் மூளையை உடையவன்)” என்று ஆர்ம் எரிச்சலுடன் சொன்றார்.

”அவன் திறமை…” கிளைவ் இழுத்தான்.

”பல சமயங்களில் ருசுவாகியிருக்கிறது.”

”ஜின்ஜின்ஸும் போரில் முன்னேறமாட்டான். என்னை யும் முன்னேற விடமாட்டான்’ என்றான் கிளைவ்.
”ட்ரூட்ரூ,” என்று கார்ட் விசில் அடிப்பது போல் பதில் சொன்னார் ஆர்ம். ”எனிவே லெட்டஸ் வெய்ட்” என்றும் சொன்னார்.

அத்துடன் இருவரும் பிரிந்தனர். அடுத்த இரண்டு நாட் களில் கிளைவ் தலைவிதியை நொந்த வண்ணம் படைப் பகுதிகளை அணிவகுக்கலானான். தளவாடங்களையும் உணவுப் பொருட்களையும் எடுத்துச் செல்லும் வண்டிகளையும் தயார் செய்தான். எல்லாவற்றையும் ஏதோ யந்திரம் போல் உணச்சியற்றே செய்து வந்தான். இதைக் கவர்னர் ஸாண்டர்ஸும் கவனித்தாலும் கவனிக்காதது போலவே நடந்து கொண்டார். ராபர்ட் ஆர்ம், கிளைவின் மனோ நிலையை எடுத்து அடுத்த நாளே கவர்னருக்குச் சொன்னார். கவர்னர் மீண்டும் இரும்பு மனிதராகி விட்டார். ராபர்ட் ஆர்ம், “ஏன்? கிளைவின் பதவியை உயர்த்தினால் என்ன?” என்று கேட்டாதற்கு கவர்னர் முடியாதென்று திட்டமாகத் தலையசைத்தார். ”மிஸ்டர் ஆர்ம், யூ மே பி எ மெம்பர் ஆப் மை கௌன்ஸில், பட் ஐ வோண்ட் அப் கிரேட் எ ஜூனியர் காப்டன் ஓவர் தி ஹெட் ஆப் எ சீனியர் (ராபர்ட் ஆர்ம், நீங்கள் என் சபை மெம்பராயிருக்கலாம். ஆனால் நான் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு ஜூனியர் காப்டனை சீனியர் காப்டனுக்கு மேற்பட்ட தலைவனாக்க மாட்டேன்)” என்றார் திட்டமாக.

ஆர்ம் நிதானத்தைக் கைவிட்டுக் கேட்டார், ”ஓய்? என்று.

”ரூல்ஸ், மிலிடரி டெகோரம் (சட்ட திட்டங்கள், ராணவப் பண்பாடு)” என்றார் கவர்னர். இதைச் சொல்லிப் புன்முறுவலும் பூத்தார்.

இதற்குப் பிறகு நிதானத்தை அடியோடு இழந்த ஆர்ச் கேட்டார், “வென்ஷுட் கிளைவ் ஸ்டார்ட்?” என்று.

கவர்னர் தமது நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து கொண்டு ”ஆஸ்க்த ஸீ (கடலைக் கேளுங்கள்)” என்று தமது நாற்காலிக்குப் பின்னாலிருந்த சாளரத்தை நோக்கிக் கையைக் காட்டினார்.

ஆர்ம் வியப்புடன் அவரை உற்றுப் பார்த்தார். விடை ஏதும் கிடைக்கவில்லை.

”ஹொய் ஷூட் ஐ ஆஸ்க் த ஸீ? (கடலை ஏன் கேட்க வேண்டும்?)” என்று வினவினார் ஆர்ம் எரிச்சலுடன்.

கவர்னர் ஸாண்டர்ஸ் நாற்காலியில் முன்னைவிட நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்… ”பிகாஸ் வீ ஆர் எ ஸீ பேரிங் பீபிள். த ஸீ ஆல்வேஸ் கேவ் அஸ் ஆன்ஸர்ஸ்….. ஆன்ஸர்ஸ் ஆஃப் விக்டரி (நாம் கடலை நம்பிய மக்கள். கடல் நமக்கு எப்பொழுதும் பதில் சொல்லியிருக்கிறது. அந்தப் பதில் எப்போதும் வெற்றியாக அமைந்திருக்கிறது)” என்றார் கவர்னர்.

கடல் இரண்டு நாளில் பதில் சொல்லத்தான் செய்தது. அது வெற்றிப்பதிலும்கூடத்தான்.

Previous articleRaja Perigai Part 3 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here