Home Historical Novel Raja Perigai Part 3 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 3 Ch24 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch24 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 24 .அதர சபதம்

Raja Perigai Part 3 Ch24 | Raja Perigai | TamilNovel.in

தஞ்சை உபதளபதியாகப் பிரதாப சிம்ம மகாராஜாவாலும் படைத் தலைவர் மானாஜி அப்பாவினாலும் நியமிக்கப்பட்ட நாளன்று எந்த அறை அவனுக்கென்று அளிக்கப்பட்டதோ அதே அறையில் அன்றும் நின்றிருந்தான் விஜயகுமாரன். பல நாட்களுக்கு முன்பிருந்த அதே நிலையிலும்கூட அன்றிருந்தான், நாயக்கர் வம்சத்தின் வாலிபன். அறையின் சுவர்களில் நாலா பக்கங்களும் இருந்த துப்பாக்கிகளும் மற்றப் போர்த் தளவாடங்களும் அன்றும் சாட்சியளிக்கத்தான் செய்தன வென்றாலும் அவை எதையும் அவன் கண்கள் அந்த இரவில் காணவில்லை, எதிரே அழகெலாம் திரண்டு நந்தினி நின்றிருந்தாள் என்ற காரணத்தினால்.

அவனுக்கென நந்தினி அன்று தனி அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். மிகப் பகட்டான காசிப் பட்டுச் சேலை யொன்று நானாவிதச் சரிகை வேலைப்பாடுகள் அளித்த பூந்தொட்டிகளுடன் அவள் பூவுடலைச் சுற்றியிருந்தது. தலையில் நவரத்தினச் சுட்டியொன்று முகத்தைத் தொட்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தது. கழுத்தைச் சுற்றி வளைத்திருந்த பெரிய முத்துமாலை தன் பெரிய பதக்கத்தை அவள் மார்புகளுக்குள் ஒளித்திருந்ததால், அழகிருக்கும் இடத்திற்கு அந்த மாலையின் வடங்கள் விஜயகுமாரரின் கண்களை அழைத்துச் சென்றாலும், கெட்டியான சேலை கண்ணைக் கட்டி அந்த எழுச்சிகளைக் காணமுடியாமல் அடித்தது.

இருப்பினும் செயற்கை இயற்கையை வெற்றி கொள்ள முடியாதென்பதை நிரூபிக்க இழுத்து இழுத்துவிடப் பட்ட அவள் மூச்சு, அந்த எழில்களை ஏற்றி இறக்கிச் சேலைக்குள் அசைத்துக் காட்டவே செய்தது. அவள் வழக்கத்துக்கு மாறாகத் தஞ்சாவூர் கதம்பத்தை முன்னால் சரம்போல் தொங்கவிடாமல் பின்னலில் புகுத்தி இரட்டையாகத் தொங்கவிட்டதால் அவன் கண்களுக்கு அவை தெரியவில்லை யாயினும் நாசிக்கு நன்றாகத் தெரிந்தன. அவள் சிற்றாடையை வளைத்தோடிய மேகலாபரணம் சேலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாலும் இடை நன்றாக தெரியவே செய்ததால், அதை ஒரு முறை குனிந்து பார்த்த விஜயகுமாரன் கண்கள், வழவழப்பாகத் தங்கப் பாளம் போலிருந்த இடையை நோக்கி அவன் உதடுகளைத் துடிக்க வைத்தன.

விஜயகுமாரன் கைகள் அவள் இரண்டு கைகளையும் இறுகப் பிடித்திருந்தாலும், அவள் விரல்கள் மட்டும் அவன் கைகளில் அசைந்து ஏதோ செய்தி சொல்லியிருக்க வேண்டும். இல்லையேல் அவனுக்கு ஏன் அந்த உன்மத்தப் பார்வை? நடுங்காத அவன் உடல் ஏன் அப்படிச் சிறிது நடுங்க வேண்டும்? கண்கள் ஏன் திடீரென்று அவள் கண்களை விட்டு அறைக் கூரையில் பாயவேண்டும்? கூரையில் உணர்ச்சிகளுக்கு மருந்து இருந்ததா? இருந்தது. அடக்குவதற்கு அல்ல எழுப்புவதற்கு, புரட்டுவதற்கு.

அவன் ஆற்காடு போயிருந்த நாளில், முராரிராவுடன் காலத்தைச் செலவிட்ட தினங்களில், யாரோ அந்தக் கூரையில் அந்த வண்ணச் சித்திரங்களை வரைந்திருக்க வேண்டும். அதோ அரை நிர்வாணமாக நிற்கும் அந்தப் பெண்ணை வளைத்து நெருங்கும் வாலிபனை எதற்காக வரைந்தார்கள்? சரி, அதுதான் கிடக்கட்டும், சற்று எட்ட இருக்கும் ரதிமன்மத விலாசத்தை எதற்காக அத்தனை வெளிப்படையாகச் சித்திரிக்க வேண்டும்? சரி, அதுதான் போகட்டும். குளத்தில் குளித்து எழுந்திருக்கிறாளே ஒரு பருவ மங்கை, அவள் மார்புச் சேலை அத்தனையும் நழுவ வேண்டுமா? இப்படியெல்லாம் எதற்காக உடையலங்காரம்? இப்படி அந்த வண்ணச் சித்திரங்களைக் கண்டு தன்னைத் தானே இல்லாத கேள்விகளைக் கேட்டுக்கொண்ட அந்த வாலிபனின் உணர்ச்சிகள் கரை கடந்துவிட்டதால் அவன் கைகள் அவள் கைகளைவிட்டு வேறு இடங்களை நாடின.

அவன் சித்திரங்களைப் பார்ப்பதைக் கண்டாள் நந்தினி. அவற்றையும் பார்த்துத் தன்னையும் பார்த்ததால் வெட்கத்தால் தன் முகத்தை ஒருபுறுமாகத் திருப்பியும் கொண்டாள். அது எத்தனை தவறு என்பதை சில விநாடிகளுக்குள் புரிந்துகொண்டாள். திடீரென அவள் கைகளை விட்ட அவன் கைகளில் ஒன்று அவள் இடையைச் சுற்றி வளைத்து அவளை இழுத்தது அவனை நோக்கி. திடீரென்று அவள் திரும்பியதால் முற்றும் புலனான அவள் ஒரு வழவழத்த கன்னம் அவன் கண்களுக்கு நன்றாகப் புலனாகவே முரட்டு இதழ்கள் வெறியுடன் அதில் புதைந்தன. இன்னொருகரம் புஷ்பக் கொத்துகளை நாடிச் சென்றது.

வாலிபனின் அந்த வெறி அவளையும் வளைத்துக் கொண்டதால் அவன் கை அவளை இறுக்க. இறுக்க அவள் பூவுடலையும் அவளாகவே அவன் உடலுடன் பதியவிட்டாள். நின்ற நிலையில் பதிந்த உடல்கள் இழைந்தன. அவன் வலக் கை முன் புறத்திலிருந்து அவள் முதுகை நாடிச் சென்று இறங்கி இடையையும் தாண்டி ஓடிப் பின்னழகில் பதிந்தது, பரிமாணத்தையும் பார்த்தது. அவன் கைகள் செய்த ஆராய்ச்சியில் சில சமயம் அவள் நெகிழ்ந்தாள், சில சமயம் பிரிந்தாள். சில சமயம் நெளிந்தாள். எல்லாம் ஒரே அவஸ்தையாகவும் இன்பமாகவும் இருந்தது நந்தினிக்கு.

விஜயகுமாரன் தனது எண்ணங்களையெல்லாம், உணர்ச்சி களையெல்லாம் அந்தப் பருவச் சிலைக்கு அர்ப்பணித்தான். இருவரும் நின்ற நிலையில் பின்னிக் கிடந்த அந்த நேரத்தில் விஜயகுமாரன் சொன்னான் மிக மெதுவாக, கன்னத்தில் புதைந்து கிடந்த அவன் உதடுகளைக் காதுக்கருகில் நகர்த்தி, ”நேரமாகிறது நந்தினி!” என்று.

அவள் நீண்ட நேரம் பதில் சொல்லவில்லை. அவன் சொற்கள் மிக வேதனையையே அளித்தன. அவற்றிலிருந்து விடுபடக் கேட்டாள், “எதற்கு நேரமாகிறது?” என்று.

அவன் பற்களிரண்டும் ஊமத்தம் பூவைப் போல் மென்மையாயிருந்த அவள் காதை மெள்ளக் கடித்து மீண்டன. உதடுகள் கழுத்தில் மிக வேகமாகப் புதைந்தன, அங்கேயே பதிலையும் சொல்லின. “புறப்பட” என்று.

”உம் உம்” என்று ஆமோதித்த அவள் குரலில் சோகம் மிதமிஞ்சி நின்றது.

”வீரப் பெண்கள் துன்பப்படும் நேரமல்ல இது” என்று அவன் மீண்டும் கூறினான், உதடுகளை கழுத்திலிருந்து எடுத்து, இரு கைகளாலும் அவள் தேகத்தை நொறுக்கி இழுத்து.

மீண்டும் இரு ஜோடிக் கண்களும் ஒன்றையொன்று கௌவி நின்றன. கண்களுக்குத் தாங்கள் சளைக்கக்கூடாது என்பதில் இதழ்களும் அவற்றைப் பின்பற்றின மும்முரமாக. அவன் முரட்டு இதழ்கள் பதிந்தன வேகமாக, இழைந்தன மீண்டும் மீண்டும். அவற்றுக்கு அவள் இதழ்களும் ஏதோ பதில் கொடுத்திருக்க வேண்டும். அவள் அந்த நிலையில் வெறி பிடித்தவனானான். அவன் அவள் உடலை அளவுக்கு மீறி நெறித்தான். அதனால் ஏற்பட்ட அவள் ‘உம்’ காரத்திலும் மூச்சிலும் கனல் வீசியது. அந்தத் நிலையிலிருந்து மீண்ட அந்த வாலிபன், ”ஊஹும் ஊஹும் தவறு, தவறு” என்று முணுமுணுத்தான்.

”ஊம்?” மெய்ம்மறந்த நிலையில் வந்தது அவளிட மிருந்து அந்த ஊம்.

மெள்ளத் தன்னை ஓரளவு உணர்ச்சிகளிலிருந்து விடுவித்துக் கொண்ட விஜயகுமாரன், ”தவறு நந்தினி தவறு” என்றான்.

”செய்த பின் சொல்லி என்ன பயன்?” என்று கேட்டு அவள் மெல்ல நகைத்தாள்.

”நந்தினி!’’

”உம்”

“நான் தவறு எதுவும் செய்யவில்லை.”

”ஓகோ!” அவள் கேள்வியில் நகைப்பின் ஒலி ஊடுருவி நின்றது.

”தவறு என்றால்….” என்று இழுத்தான் அவன்.

“விளக்கம் இருக்கிறதா?”

“ஆம்.”

”சொல்லுங்கள்.”

”இப்படி வா’ என்று விஜயகுமாரன் அவளைக் கட்டிலை நோக்கி இழுத்துச் சென்றான்.

“அங்கு எதற்கு?” என்றாள் அவள்.

“பேசுவதற்கு?”

”பேசும் இடமா அது?”

“வேறு எந்த இடம்?”

”மேலும் தவறு செய்யக்கூடிய இடம்.” இதைச் சொன்ன நந்தினி மோகனாகாரமாக நகைத்தாள்.

அவன் அவள் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளை இழுத்துச் சென்று பஞ்சணையில் படுக்க வைத்து முகப்பில் உட்கார்ந்த வண்ணம் வலக் கையால் அவள் உடலைச் சுற்றினான். அந்த நிலையில் சொன்னான், ”நந்தினி, நான் தவறு ஏதும் செய்யவில்லை, செய்ய விரும்பவும் இல்லை” என்று.

நந்தினி பதில் கூறவில்லை புன்முறுவல் காட்டினாள். அவன் கண்களைக் கூர்ந்து நோக்கினாள். மேற்கொண்டு அவன் செய்யக்கூடிய தவறுக்கு அவள் தயாரென்பதை அந்தப் புன்முறுவலும் பார்வையும் தெளிவாக விளக்கின. இருப்பினும் உணர்ச்சிகளைச் சிறைப்படுத்திக் கொண்ட விஜயகுமாரன் சொன்னான், “நந்தினி! ஒரு சபதம் மட்டும் என்னைக் கட்டுப்படுத்தாவிட்டால் நான் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்” என்று.

“நகராமல் என்ன செய்வீர்கள்?” என்று அவள் ஏதுமறியாதது போல் கேட்டாலும் அதில் வேட்கையின் எதிர்பார்ப்பு ஊடுருவி நின்றது.

விஜயகுமாரன் பெருமூச்செறிந்தான். அவள் கேள்வி விளைவித்த உணர்ச்சிப் பெருக்கால், ‘நந்தினி! உன் சொற்கள் என்னைப் பைத்தியமாக அடிக்கின்றன. என்னைப் பைத்தியமாக்குவதற்கு நீ பேசவே வேண்டாம். உன் மௌனமே போதும். உன் அழகே போதும். ஆனால் நந்தினி அவற்றை ஒரு நாள் வெற்றி கொள்வேன். ஆணை” என்றான் விஜயகுமாரன்.

“இதுவும் ஒரு சபதமா?” என்று மெல்லக் கேட்டாள், அவள் புன்முறுவல் செய்து.

”ஆமாம் நந்தினி!”

”அன்று அரங்கன் சந்நிதியில் வாளை வைத்தல்லவா சபதம் செய்தீர்கள்?” என்று அவள் வினவினாள்.

”அது வாளால் சாதிக்க வேண்டிய சபதம். இது அப்படியல்ல. இதில் கடினத்தடன் மென்மையும் இருக்கிறது. ஆகவே புஷ்பத்தின் மீது ஆணைவைக்கிறேன்.”

”எந்த புஷ்பம் வீரரே?”

”செவ்வலரி.”

“இங்கே கிடையாதே அது.”

”இருக்கிறது இதோ” என்று அவள் உதடுகளின் மீது இரண்டு விரல்களை வைத்தான். ”ஆம் நந்தினி எனக்கு உன்மத்தம் ஊட்டும் உன் அதரங்கள் மீது ஆணை. திரும்பியும் உன்னை …” என்று இழுத்தான் அந்த வாலிபன்.

“என்னை?”

”என் சொந்தமாக்குவேன். அப்போது இப்படி எட்ட இருக்க மாட்டேன்” என்றான் விஜயகுமாரன்.

அந்தச் சமயத்தில் அவள் தனது இரு கைகளையும் தூக்கி அவன் கழுத்தைச் சுற்றி அவன் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்தாள். மார்பில் புதைந்த அவன் முகத்தை சற்றுத் திருப்பி, ”எச்சரிக்கையாக இருங்கள்” என்று இதயம் வெடிக்கச் சொன்னாள்.
”அஞ்சாதே நந்தினி கண்டிப்பாய் நான் திரும்பி வருவேன், இன்று விட்ட குறையைத் தீர்த்துக் கொள்ள” என்று விஜயகுமாரன் கூறிய சமயத்தில் தூரத்தில் ராஜபேரிகை டமடமவென முழங்கியது.

”படைகள் புறப்பட சித்தமாக இருக்கின்றன நந்தினி,” என்று அவளை விட்டு எழுந்த விஜயகுமாரன், ”மானாஜி காத் திருக்கிறார். வருகிறேன்” என்றான். அவளும் எழுந்து நின்றாள்” அவனுடன் இணைந்து. அவள் முகத்தில் திடீரென வியப்பின் சாயை படர்ந்தது.

”நமது ராஜபேரிகை தூரத்தே முழங்குகிறதே” என்றாள் நந்தினி.

”ஆம்” என்றான் விஜயகுமாரன். “என்னுடன் வருகிறது” என்றும் சொன்னான்.

”ராஜ பேரிகையை அதன் கூண்டிலிருந்து இறக்கும் வழக்கம் இல்லையே” என்றாள் அரசகுமாரி.

“வழக்கத்தை மன்னர் மாற்றிவிட்டார் என் வேண்டு கோளுக்கிணங்கி.’’

“என்ன உங்கள் வேண்டுகோள்?”

”பேரிகையில் ஒன்றை என்னுடன் அனுப்ப வேண்டுமென்று வேண்டினேன்.”

”விசித்திர வேண்டுகோள்.”
‘’இல்லை நந்தினி. என் வாழ்க்கையின் முக்கிய சந்தர்ப்பங்களில் இந்தப் பேரிகை ஒலித்திருக்கிறது. முதலில் உன்னுடன் இங்கு வந்தபோது ஒலித்தது. பிறகு உன்னைப் பிரிந்து சென்ற போது ஒலித்தது. மீண்டும் ஒலிக்கப் போகிறது திருச்சியில் மூன்றாம் முறை. அதன் ஒலியில் என் இதயம் குளிரும். அந்தக் குளிர்ச்சியுடன் இங்கு வருவேன், இதன் மேல் இட்ட ஆணையை நிறைவேற்ற” என்றான் விஜயகுமாரன் மீண்டும் அவள் இதழ்களை விரல்களால் தடவி.

மீண்டும் ராஜபேரிகை ஒலித்தது பலமாக. ”வருகிறேன் அரசகுமாரி” என்ற விஜயகுமாரன் அவளை மீண்டும் ஒருமுறை வலிய அணைத்து இடையில் தொங்கிய வாளுடனும் செருகிய கைத்துப்பாக்கியுடனும் வெளியே விரைந்தான்.

அவன் சென்ற வேகத்தை, வேகத்தில் துலங்கிய ஆண்மையை, வீரத்தைப் பார்த்துக்கொண்டே நின்றாள் நந்தினி. “வெற்றியுடன் வாருங்கள்” என்று தன்னுள் சொல்லிக் கொண்டாள். அவள் இதயம் பட படத்துக் கொண்டிருந்தது. வெளியே நடந்த வீரர்களின் காலடி ஓசை அந்தப் படபடப்புடன் கலந்து கொண்டது.

Previous articleRaja Perigai Part 3 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch25 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here