Home Historical Novel Raja Perigai Part 3 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

45
0
Raja Perigai Part 3 Ch28 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch28 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch28 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 28 .இன்னும் அறுபது நாள்

Raja Perigai Part 3 Ch28 | Raja Perigai | TamilNovel.in

சத்திரத்தின் சாளரங்கள் மூலமாகவும் வாயில் மூலமாக வும் பிரிட்டிஷ் பீரங்கிகள் முழங்கத் தொடங்கியவுடன், வெளி யில் பரந்த நிலப் பரப்பிலிருந்த பிரெஞ்சுக்காரரும் தங்கள் இருபது பீரங்கிகளைக் கொண்டு வெடிகளைப் பயங்கரமாக வீசினார்கள் என்றாலும், அவை எதிர்பார்த்த அளவு நாசத்தைப் பிரிட்டிஷ் துருப்புகளுக்கு விளைவிக்கவில்லை. சத்திரத்தின் கருங்கல் தூண்களும், சுவர்களும் பிரிட்டிஷ் சோல்ஜர்களுக்குப் பெரும் பாதுகாப்பை அளித்திருந்தன. அந்தப் பாதுகாப்பில்லாத பிரெஞ்சுப் படைகளுக்குச் சேதம் ஏற்படத் தொடங்கியதும் மான்ஷியர்லா பெரிதும் வெகுண்டார். தமது படைகளைச் சற்று முன்னேறவும், தளத்திற்கு முன்பாகப் பீரங்கிகளை நகர்த்திச் சுடவும் முயன்றாரென்றாலும், அந்த முயற்சி வீண் முயற்சி யாயிற்று. பிரிட்டிஷ் பீரங்கிகளின் வீச்சு மிகக் கடுமையாயிருந்ததால் முன் வரிசைப் பிரெஞ்சு சோல்ஜர்கள் பட்பட் என்று மாண்டு விழவே சோல்ஜர்களைப் பின்வாங்கும்படி கட்டளையிட்டார் லா. அப்படிப் பின்வாங்குவதை அவருக்கு இடப் புறத்திலிருந்த சந்தாசாகிப் விரும்பாததால் சத்திரத்தை நோக்கி விரையுமாறு தமது அரபுப் புரவிப் படைகளுக்கு உத்தரவிட்டார்.

பிரெஞ்சுப் படைகள் சேதமடைந்து கொண்டிருந்தபோது சிறிது தூரம் தள்ளித் தமது பெரும் புருவியில் அமர்ந்த ஆஜானு பாகுவாய், கையில் பிடித்த வாளுடனும், தலையிலிருந்த நீண்ட குல்லாயுடனும், சரிகை உடை வெயிலில் பளபளக்க வீரம் கண்களில் ஜொலிக்க நின்றிருந்த சந்தாசாகிப், பக்கத்திலிருந்த ஒரு பெரிய வீரனைத் திரும்பிப் பார்த்தார். அந்த வீரனும் புரவியிலிருந்தே தலைகுனிந்து சலாம் செய்து, ”நவாபின் கட்டளை என்னவோ?” என்று விசாரித்தான்.

”ஆலம்கான்! பிரெஞ்சுப் படைகளின் வீரத்தைக் கவனித் தாயா?” என்று வினவினார் ஆற்காட்டை இழந்த நவாப் சந்தா சாகிப்.

”துரிதம் காட்டுகிறார்கள் நமது நேசப்படையினர்’ என்ற ஆலம்கான் பெரிதாக நகைத்தான், அந்த யுத்த பூமியில். அவன் நகைப்பு பீரங்கி முழக்கத்தையும் மீறி அந்த நிலாப் பரப்பில் பெரிதாகவும் பயங்கரமாகவும் ஒலித்தது.

“எதில் துரிதத்தைக் காட்டுகிறார்கள்?” என்று வினவினார் சந்தாசாகிப்.

“பிராணனை விடுவதில்” என்ற ஆலம்கான் மீண்டும் நகைத்தான் இடியிடி என்று.

“இந்திய வீரர்கள் என்ன செய்ய முடியும் என்பதை நீ சிறிது காட்டினால் என்ன?” என்று வினவினார் சந்தாசாகிப்.

”உத்தரவிடுங்கள் நவாப்” என்றான் ஆலம்கான்.

சந்தாசாகிப் தனது வாளால் எட்ட இருந்த சத்திரத்தைச் சுட்டிக் காட்டி, ”அந்தச் சத்திரத்தில் எனது வைரி இருக்கிறான். அந்தச் சத்திரம் அழிந்தால் அவனும் அழிவான். இந்தப் போருக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்” என்றார் சந்தாசாகிப்.

”யார் அவன்?”
”கிளைவ் என்ற திமிர் பிடித்தவன். சிறு பையன். ஆனால் அதிர்ஷ்டசாலி. ஆற்காட்டைப் பிடித்தவன்.”

இதைக் கேட்ட சந்தாசாகிபின் கண்களில் புத்தொளி பிறந்தது. ”செய்” என்று ஒற்றைச் சொல்லால் உத்தரவிட்டார். அடுத்த விநாடி ஆலம்கானின் வாள் உறையிலிருந்து எழுந்தது, சுழன்றது. புரவிகள் சத்திரத்தை நோக்கி விரைந்தன. ”ஹாவ்! ஹாவ்” என்ற ஆலம்கானின் ராட்சத நகைப்பு, புரவிகளின் குளம்பொலிகளுக்கு மேலே ஒலித்தது. அந்தச் சிரிப்பை உதிர்த்ததுதான் அவன் செய்த தவறு. சாளரமொன்றிலிருந்து பீரங்கியை இயக்கிக் கொண்டிருந்த விஜயகுமாரன் பிரெஞ்சுத் தனத்தை நோக்கிக் கொண்டிருந்த பீரங்கியைப் புரவிப் படைக்காகத் திருப்பினான்.

‘’விஜயகுமார்! என்ன செய்கிறாய் அங்கே?” என்று இரைந்தான் கிளைவ்.

விஜயகுமாரன் பதிலேதும் சொல்லாமல் பீரங்கித் துளையிலிருந்த வெடி மருந்துக்குத் தீயிட, பீரங்கி வெடித்து அதன் பெரிய குண்டு தொலைவில் வந்து கொண்டிருந்த புரவிப் படை மீது விழுந்தது. அதையும் மீறி வந்தான் ஆலாம்கான் படுவேகமாக. விஜயகுமாரன் இன்னொரு பீரங்கிக்கு ஓடி அதை வெடிக்கச் செய்தான். அதிலிருந்து வெளியான குண்டு ஆலம்கானின் தலையைத் தூளாகப் பறக்கடித்து விடவே, அவன் முண்டம் மட்டும் வெகு வேகமாகச் சத்திரத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது.

அந்த ஒரு புரவி வந்ததேயொழிய மற்றப் புரவிகள் சட்டென்று நின்றன. தலைவனை இழந்த அந்தப் படை வெகு வேகமாகப் பின்வாங்கியது. தனது படைத் தலைவன் தலையில்லாதவனாக ஆகிவிட்டதைக் கண்ட சந்தாசாகிப் பெருமூச்செறிந்தான். ‘யார் அவன்? அத்தனை கணக்காகச் சுட்டவன்?” என்று தம்மைத் தாமே வினவிக் கொண்டார். விடையை அவர் எதிர்பார்க்க கவில்லை. கிளைவின் அதிர்ஷ்டசக் கரம் வேகமாகச் சுழல்வது அவர் புத்தியில் சந்தேகமறத் தெரிந்தது.

சத்திரத்திலிருந்த கிளைவும் தனது அதிர்ஷ்டத்தை எண்ணி வியப்புடைந்தான். ”வெரி குட் ஷாட் விஜயகுமார்! நீ பெரிய ஆபத்திலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்டாய். அந்தப் புரவிப் படை இங்கு வந்திருந்தால் நமது கதி அதோகதி” என்று பாராட்டவும் செய்தான்.

விஜயகுமாரன் அந்தப் பாராட்டுதலை ஏற்கவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. துன்பப் பெருமூச்சு விட்டான்.

”ஏன் துயரப்படுகிறாய் விஜயகுமார்? உன் சாதனையில் உனக்குச் சந்துஷ்டியில்லையா?” என்று கிளைவ் வினவினான்.

”இல்லை. அந்தக் குண்டுடன் எதிரிகள் பின்வாங்குவார்க ளென்று நான் எதிர்பார்க்கவில்லை. மீதியுள்ள புரவிப் படை வரும். அப்பொழுது…..”

”அப்பொழுது?”

”இப்பொழுது அதைப்பற்றிப் பேசிப் பயனில்லை” என்ற விஜயகுமாரன் கிளைவிடமிருந்து சற்று எட்டச் சென்று விட்டான்.

குன்றிவிட்ட அந்த மகாவீரனின் உடல், சுண்டிவிட்ட வதனம், இவற்றுக்கு ஓரளவு காரணம் கிளைவுக்குத் தெரிந்திருந்த படியால் அவன் விஜயகுமாரனை அணுகாமலும் மேற்கொண்டு பேசித் தொந்தரவு செய்யாமலும் மீண்டும் தனது பீரங்கிப் போரைத்துவங்கினான்.

பீரங்கிப் போர் அன்று மாலைவரை நடந்தது. பிரிட்டிஷ் சோல்ஜர்களில் எட்டுப் பேர் கோடையின் உக்கிரம் தாங்காமல், ‘ஸன் ஸ்ட்ரோக்’ அடித்துச் சுருண்டு விழுந்து மாண்டு போனார்கள். ஒருவேளை அந்த உஷ்ணந்தான் காரணமோ அல்லது தன் பக்கலில் மாண்டவர் எண்ணிக்கை காரணமோ மானிஷியர் லா தமது சோல்ஜர்களையும் சிப்பாய்களையும் பின்னுக்கு இழுத்தார்.

அன்றிரவு மேஜர் லாரன்ஸ் கிளைவுடனும் தமது படைகளுடனும் திருச்சிக் கோட்டைக்குள் நுழைந்தார். முற்றுகையில் வாடியிருந்த திருச்சி பிரிட்டிஷ் படைகள் மிகுந்த உற்சாகத்தைக் காட்டின. மேஜர் லாரன்ஸும், கிளைவும் கோட்டைக்குள் ஊர்வலமாகச் சென்று திரும்பி, தங்களுக்காக ஒழித்து விடப்பட்டிருந்த வீடுகளில் தங்கினார்கள். அன்றிரவு ‘கம்பெனி நவாப்’ முகம்மது அலி மேஜர் லாரன்ஸுக்கு ஒரு விருந்து வைத்தார் தமது மாளிகையில்.

முற்றுகையில் சிக்கி உணவுப் பொருள்கள் குறைந்திருந்த சமயத்திலும் தாம் நவாப்தான் என்பதை முகம்மது அலி அந்த விருந்தில் காட்டினார். பெரிய மேஜைமீது வெள்ளையாடை விரித்து, மேலேயிருந்த ஷாண்டலியர்ஸ் ஜாஜ்வல்லியமாக ஒளி வீச, வெள்ளித் தட்டுகளும் டம்ளர்களும் வைக்கப்பட்டிருந்தன. குல்லாயணிந்த பரிமாறும் பணியாளர் ஒவ்வொரு நாற்காலிக்குப் பின்னும் நின்றிருந்தார்கள். மேஜையின் ஒரு தலைப்பில் கம்பெனி நவாப் முகமது அலியும் இன்னொரு தலைப்பில் மேஜர் லாரன்ஸும் அமர, காப்டன் கிளைவ், காப்டன் டால்டன், காப்டன் ஜின்ஜின்ஸ் மற்றும் சில லெப்டினண்டுகளும் பக்க வாட்டுகளில் அமர்ந்து கொண்டார்கள். உணவு பரிமாறப்பட்டதும் மேஜர் லாரன்ஸ் தலை குனிந்து கண்களை மூடிப் பரம பிதாவுக்குப் பிரார்த்தனை செய்தார்.

முகம்மது அலி மிக ருசிகரமான உணவுகளைத் தயாரித் திருந்தார் என்பதற்கு அந்த மாளிகைச் சமையலறைத் தொட்டியி லிருந்த கோழி இறகுகளும், ஆட்டு எலும்புகளும் சான்று கூறின. மாமிச உணவுப் பக்குவங்களும் மிக நன்றாக இருந்ததால் மேஜர் லாரன்ஸ் யாரையும் கவனிக்காமல் பிளேட் பிளேட்டாகக் கையிலிருந்த கத்தியும் போர்க்கையும் இடைவிடாது உபயோகப் படுத்தினார். பிறகு விஸ்கி பரிமாறப்பட்டதும் டம்ளரைக் கையிலெடுத்து, “டு ஹீஸ் மெஜஸ்டி” என்று முகம்மது அலியை நோக்கி உயர்த்தினார். மற்றக் காப்டன்களும் அப்படியே உயர்த்தினாலும் முகம்மது அலி மட்டும் டம்ளரைத் தொடவில்லை. லேசாகப் புன்முறுவல் செய்து, ”இஸ்லாம் மதுவை அனுமதிக்கவில்லை, நீங்கள் அருந்துங்கள்” என்றார்.

மற்றவர் மது அருந்தியதும், “இனி இளைப்பாறுவோம்” என்ற முகம்மது அலியை மேஜர் லாரன்ஸ் கையால் தடுத்து, ”வீ ஹாவ் நோ டைம் பார் இட் நௌ லெட் அஸ் அட்ஜர்ன் டு த கான்பரன்ஸ் ரூம். (இளைப்பாற அவகாசமில்லை. ஆலோசனை அறைக்குச் செல்வோம்)” என்றார்.

மேஜரை எதிர்த்துப் பேச யாருக்கும் துணிவில்லாததால் எல்லோரும் அடுத்திருந்த பெரிய அறைக்குச் சென்றார்கள். அங்கிருந்த மேஜையில் தேசப்படத்தைப் பரப்பிப் போரின் அடுத்த கட்டத்தை விவரித்தார் லாரன்ஸ். துணிகரமான திட்டம் அது. ஆனால் வேறு திட்டம் ஏதும் சாத்தியமாக இல்லாததால். எல்லாரும் அதை ஆமோதித்தார்கள். ”இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒரு தகுந்த காப்டன் தேவை ” என்று கிளைவை நோக்கினார் லாரன்ஸ்.

கிளைவ் தீவிர சிந்தனையில் இருந்தான்.

”விஜயகுமாரன் எங்கே போனானென்று தெரிய வில்லை ” என்றான்.

அது அத்தனை முக்கியமாகப் படவில்லை மேஜருக்கும் மற்றோருக்கும். ஆனால் அதுதான் போரின் முடிவை நிச்சயிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

கிளைவ் அவனைப் பிரஸ் தாபித்த அதே சமயத்தில் மலைக் கோட்டையிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு மண்படத்தை அணுகிக் கொண்டிருந்தான் விஜயகுமாரன். அப்பொழுது நடுநிசி. மண்டபம் மூடிக் கிடந்தது. என்ன காரணத்தாலோ அதைச் சுற்றி மனித அரவம் சிறிதும் இல்லை. பெரும் நிசப்தம் நிலவிக் கிடந்தது.
மண்டபப் பெரும் கதவைச் சிரமப்பட்டுத் திறந்தான் விஜயகுமாரன். உள்ளேயும் கும்மிருட்டு மூண்டிருந்தது. கதவை மீண்டும் மூடி விட்டு உள்ளிருந்த கும்மிருட்டில் நடந்து சென்ற விஜயகுமாரன் ஒரு மேடை அருகில் வந்ததும் மண்டியிட்டு அமர்ந்தான். தலை வணங்கினான். பிறகு ஏதோ முணுமுணுத்தான். வெள்ளை வெளேரென்று முக்காடிட்ட ஒரு பெண் உருவம் மேடைமீது எழுந்து நின்றது. அதன் கையொன்று எழுந்து விஜயகுமாரன் தலைமீது பதிந்தது .

”வந்தாயா மகனே” என்று ஒரு குரல் எங்கிருந்தோ ஒலிப்பதுபோல் மெல்ல ஒலித்தது.

”தாயே வந்தேன்” என்றான் விஜயகுமாரன்.

“இன்னும் எத்தனை நாள்?” என்று வினவியது அந்த உருவம்.

”அறுபது நாள்” என்றான் விஜயகுமாரன் பயபத்தியுடன்.

Previous articleRaja Perigai Part 3 Ch27 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch29 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here