Home Historical Novel Raja Perigai Part 3 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

74
0
Raja Perigai Part 3 Ch3 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 3 Ch3 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 3. நான் உன்னைக் காதலிக்கவில்லை

Raja Perigai Part 3 Ch3 | Raja Perigai | TamilNovel.in

அபாயமான அந்தப் போர் யாத்திரையை 130 ஐரோப்பிய சோல்ஜர்களுடனும் 300 சிப்பாய்களுடனும் கிளம்பிய ராபர்ட் கிளைவ், ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவில் சென்னை ஸெயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைந்தான். இந்தப் பயணம் எதிரிகளுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக இரவு நன்றாக ஏறிய பின்பே வேஜரிலிருந்து தனது படையைப் படகுகளில் கரைக்கு அனுப்பி வைத்தான். அதிகப் பரபரப்பு எதையும் ஏற்படுத்தாமல் சிறுசிறு கூட்டங்களாக ஸெயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழையுமாறு வீரர்களுக்கு எச்சரிக்கையும் செய்திருந்தான். அந்தப் படை வீரர் அனைவரும் கோட்டையை அடைந்த பின்பு, தான் மட்டும் தனிப் படகில் ஏறிக் கோட்டைக்கு வந்து சார்லஸ் தெருவிலிருந்த தனது பழைய அறைக்குச் சென்றான்.

அங்கே கைகால் முகம் கழுவிய பின்பு தனது நண்பன் எட்மண்ட் மாஸ்கலீன் குடியிருந்த இடத்தை நாடிச் சென்று நண்பனைச் சந்தித்தான். எட்மண்ட் மாஸ்கலீனுக்குக் கிளைவின் அந்த இரகிய வரவு வியப்பை விளைவித்திருந்ததால், ‘கிளைவ் நீ ஏதோ சிறு படையுடன் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் வரவை விளம்பரப்படுத்தக் கூடாதென்று கோட்டைத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள். எதற்காக இத்தனை மர்மம்?” என்று விசாரித்தான்.

கிளைவ் உடனடியாகப் பதில் சொல்லாமல் தனது ஹாட்டைக் கழற்றி அங்கிருந்த நாற்காலியொன்றில் மாட்டிவிட்டு, மற்றொரு நாற்காலியில் உட்கார்ந்து கால்களை நன்றாக நீட்டிக் கொண்டான். ”எட்மண்ட், உனக்கும் இன்னும் பலருக்கும் நான் வந்த விஷயமும் படைபலமும் தெரிந்திருப் பதிலிருந்து இது ரகசியமோ மர்மமோ அல்லவென்று தெரியவில்லையா?” என்று வினவினான்.

மாஸ்கலீன் சமாளித்துக் கொண்டு, ”கிளைவ், திடீரென ஒரு பிரிட்டிஷ் கப்பல் வருகிறது. அதைப் பார்த்துக் கோட்டையிலுள்ள ஆங்கிலேயர் அதில் தங்களுக்குப் பிரிட்டனிடமுள்ள உறவினர்களிடமிருந்து கடிதங்களோ, வேறு சாமான்களோ வருமென்று துடிக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு ஸோல்ஜர்கள், சிப்பாய்களின் சிறுசிறு கூட்டங்கள் வருகின்றன. பாரக்ஸில் (படை வீடுகளில்) பரபரப்பு ஏற்படுகிறது. ஆனால் யாருக்கும் காரணம் தெரியவில்லை. நீ வந்திருப்பதுகூட எனக்கே இப்போதுதான் தெரியும். இது மர்மம் இல்லாவிட்டால், வேறு என்னதான் பொருள்?” என்று வினவினான்.

கிளைவின் முகத்தில் மெல்ல மகிழ்ச்சிக் குறி படர்ந்தது. அவன் நேரடியாகப் பதிலேதும் சொல்லாமல், ”கோட்டை கமாண்டண்டை (தலைவன்) என்னை வந்து பார்க்கச் சொல்லி விட்டு வா” என்று மட்டும் உத்தரவிட்டான் எட்மண்டுக்கு.

எட்மண்டின் வியப்பு அதிகமாகியது. ”கிளைவ், ”கமாண்டண்ட் உன்னைவிடப் பெரிய அதிகாரி.”

“ஆம்…
”அவரைக் கூப்பிட்டனுப்பினால் உன்னை இப்போதே சிறையில் தள்ளுவார்.”

”மாட்டார்.”

”ஏன்?”

”தற்சமயம் என்னைத் தொடக்கூட அவருக்கு அதிகாரம் இல்லை.”

”நீ என்ன கவர்னரா?”

“இல்லை. அவருக்கு அடுத்தபடி.’’

இதைக் கேட்ட எட்மண்ட் திகைத்தான். ஆனால் மேற்கொண்டு ஏதும் பேசாமல், ”சரி, போய்ச் சொல்கிறேன் கமாண்டண்டிடம்’ என்று கிளம்பியவனைச் சற்றுத் தடுத்த கிளைவ், ”எட்மண்ட், மார்கரட் இருந்தால் எனக்குக் கொஞ்சம் உணவு கொண்டு வரச்சொல். பசி தாங்கவில்லை” என்றான்.

இது எட்மண்டுக்கு இன்னும் அதிக அதிர்ச்சியை அளிக்கவே, வாயிற்படியைத் தாண்டியவன் திரும்பி நோக்கினான் கிளைவை. ‘கிளைவ், அவளுக்கு இன்னும் திருமணமாக வில்லை ” என்று சுட்டிக் காட்டினான்.

”இந்தச் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது” என்றான் கிளைவ் புன்முறுவல் தோன்ற.

”அவள் இங்கே வந்து நீண்ட நாளாகிறது” என்று சுட்டிக் காட்டினான் எட்மண்டு.

”தெரியும் எனக்கு…”

”அவள் வந்த பின்பு நீ என் வீட்டுக்கு வரவேயில்லை.’’

“ஆமாம்.”

”நீங்கள் இருவரும் அறிமுகம்கூட ஆகவில்லை.”

”அதனால் என்ன?”

”திடீரென்று அவளை அழைத்து வேலைக்கு ஏவினால் வருவாளா?”

”வருவாள், எதற்கும் சொல்லிப் பார்” என்றான் கிளைவ் மிக அசிரத்தையுடன்.

கிளைவின் புத்திக் கூர்மையை அவனுடன் நெருங்கிப் பழகிய எட்மண்ட் அறிந்தே இருந்தான். தனது தங்கையைக் கிளைவுக்கு மணமுடிக்கும் நோக்கத்துடன் அவளை ஊரிலிருந்து வரவழைத்தது கிளைவுக்கு நன்றாகத் தெரியும் என்பதையும், இருப்பினும் அவளைக் கிளைவ் அன்றுவரை ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை என்பதையும் அறிந்திருந்த எட்மண்ட், அன்று திடீரென்று தனது நண்பன் தன் தங்கையை அழைத்து உணவு கொண்டு வரச் சொன்னது அசம்பிரதாயமென்றும் நாகரிகமற்ற அவசர நடவடிக்கையென்றும் எண்ணினான். அதைப் பற்றி ஏதோ விவரிக்கவும் ஆரம்பித்த சமயத்தில் உள்ளேயிருந்த மார்கரட் மாஸ்கலீனே வந்து விட்டாள். அவள் வந்ததும் எழுந்திருந்து அவளை நோக்கித் தலையைத் தாழ்த்திய கிளைவ், ‘மிஸ் மாஸ்கலீன்! காப்டன் கிளைவ் அட் யுவர் சர்வீஸ்” என்று கூறினான் மிகப் பணிவுடன்.

இதனால் தனது சங்கட நிலை சற்றுத் தீர்ந்தவிடவே எட்மண்டும் அவளை நோக்கி, ”பெக்கி! கிளைவ் பசியுடன் இருக்கிறான். கவனித்துக் கொள்” என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.

அவன் சென்றதும் மார்கரெட்டை ஏறெடுத்து நோக்கினான் கிளைவ் நின்ற வண்ணம். ”நாட் பாட், நாட் பாட் அடால்” என்று தனக்குள் சொல்லியும் கொண்டான். பிறகு அவளை, ‘பெக்கி யூ நோடமில்?” என்று வினவினான்.

அவன் தன்னை மிஸ் மாஸ்கலின்’ என்று அழைக்காமல், ‘பெக்கி!’ என்ற குடும்பச் செல்லப் பெயரைக் கொண்டு அழைத்ததால் அவள் முகம் நாணத்தால் சிவந்தது.

”எலிட்டில்” என்று பதில் சொன்னாள் அவள். ”எட்மண்ட் மிகவும் கெட்டிக்காரன்” என்றான் கிளைவ். ”எதில்?” ”திட்டமிடுவதில்” எந்தத் திட்டமிடுவதில்?” உன்னையும் என்னையும் சந்திக்கவிடுவதில்.”

இதைக் கேட்ட அவள் சினத்தின் வசப்பட்டாள். ”காப்டன்! யூ ஆர் ப்ரிஸம்ப்சுவஸ்’ என்று கூறி, கம்பீரமாகத் தலையை நிமிர்த்தினாள்.
கிளைவ் அவள் கோபத்தைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமல், ”சரி, எனக்குப் பசிக்கிறது. சீக்கிரம் உணவு கொண்டுவா” என்றான்.

அவள் உள்ளே சென்று ஏதோ ஆணையிட்டு வர, சில நிமிடங்களுக்கெல்லாம் பட்லர் உணவு கொண்டு வந்து பரிமாறினான். உணவருந்திக் கை துடைத்துக் கொண்ட கிளைவ், மீண்டும் எழுந்து எதிரே நின்று கொண்டிருந்த மார்கரெட்டை நாடி, ”மை டியர் பெக்கி| நான் உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டியிருக்கிறது” என்று கூறி, அவள் கைகள் இரண்டையும் தனது கையால் பிடித்துக் கொண்டான்.

மார்கரெட்டின் முகம் குங்குமச் சிவப்பாகச் சிவந்தது. ”என்ன அப்படி அவசரம்?” என்று வினவினான் அவள்.

”அப்புறம் அவகாசம் கிடையாது” என்றான் கிளைவ்.

“ஏன்?”

”நாளைக் காலையில் இந்தக் கோட்டையிலுள்ள பெண்கள் கல்கத்தாவுக்கு அனுப்பப்படுவார்கள். ‘நீயும் பெண்ணானதால்…”

”வாட்! வாட்”

”நீ அழகான பெண்ணானதால் உன்னையும் அனுப்பத்த தீர்மானித்து விட்டேன்.”

இதைக் கேட்ட மார்கரெட் தனது கையை அவனிடமிருந்து சரேலென்று இழுத்துக் கொண்டாள்.

”கோட்டையிலிருந்து எங்களை அனுப்ப உனக்கு என்ன அதிகாரம்?” என்றும் கேட்டாள்.

”அதிகாரம் இருக்கிறது. இல்லாவிட்டால் கோட்டை மேஜரை அழைத்துவர உன் அண்ணனை அனுப்புவேனா?” என்றுவினவிய கிளைவ் மேலும் சொன்னான், ”மார்கரெட்! உன்னை உன் அண்ணன் இங்கு வரவழைத்த காரணம் எனக்குத் தெரியும். அந்தக் காரணத்தை நானும் ஆட்சேபிக்கவில்லை. ஆகையால் உன்னை மணக்கத் தீர்மானித்து விட்டேன்.”

இந்தப் பரம அயோக்கியத்தனமும் முரட்டுத் தனமுமான பேச்சைக் கேட்டு மாஸ்கலீன் அசந்து போனாள். அதன் விளைவாக, தனது இடக் கையால் வாயைப் பொத்திக் கொள்ளவும் செய்தாள். பிறகு சொன்னாள், ‘கிளைவ்! டோண்ட் பி எஃபூல்” என்று.

“ஐ ஆம் நாட் ஒன்” என்றான் கிளைவ்‘’சம்பிரதாயப்படி என்னை நீ காதலிக்கவில்லை . யூ ஹாவ் நாட் ஊட்மி” என்றாள் மார்கரெட்.

”அதற்கு அவகாசமில்லை. ஐ ஹாவ் நோ டைம்” என்றான் கிளைவ்.

‘ஐ டோன்ட் லவ் யூ” என்றாள் மார்கரெட் எரிச்சலுடன். “நாட் நெஸஸரி” என்றான் கிளைவ்.

அவள் விழித்துக் கொண்டு நின்றாள். கிளைவ் அவளை அணுகி அவள் தோளைப் பற்றினான் தன் இரு கைகைளாலும். “மார்கரெட் இது இங்கிலாந்தல்ல. சம்பிரதாயப்படி காதலிப்பதற்கு. இங்கே தூர தேசத்தில் நமது ஜனங்கள் இல்லாத பகுதியில் நாம் உதிரிகளாகக் கிடக்கிறோம். இங்கு விவாகம் முன்னால் நடந்து, பின்னால்தான் காதல் ஏற்படுகிறது. தவிர, நாம் போரின் மத்தியில் வாழ்கிறோம். ஆகையால் முடிவுகளைச் சீக்கிரம் செய்ய வேண்டும்” என்றான்..

மார்கரெட்டுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக, “காப்டன்” என்று ஆரம்பித்தாள்.

”கால் மி ராபர்ட்” என்றார் கிளைவ்.

“யூ ஹாவ் நாட் ஈவன் ப்ரபோஸ்ட். (மணம் செய்து கொள்ள நீ என்னைக் கேட்ககூட இல்லை)” என்றாள் மார்கரெட்.

”ஆல்ரைட். பெக்கிமை டியர் வில் யூ மாரி மி?” என்று கேட்ட கிளைவ், அவள் சரி என்று பதில் சொல்லிவிட்டதாகத் தானே முடிவு செய்து கொண்டு, “ஐ ஆம் ஹாப்பி மை டியர்’ என்று கூறி, அவளைத் திடீரென அணைத்து அவள் இதழ்களில் தனது இதழ்களைப் பொருத்தி மீண்டான்.

மார்கரெட் நிலை குலைந்து போனாள். ‘யூ ஆர் டூ ஃபாஸ்ட் (நீ ஆனாலும் வேகம்)” என்றும் சொன்னாள் அவன் பிணைப்பிலிருந்து விலகி.

”ஐ டேக் க்விக் டெஸிஷன்ஸ் (நான் முடிவுகளைத் துரிதமாக எடுக்கிறேன்)” என்றான் கிளைவ்.

”ஆனாலும் இது…’’ வாசகத்தை முடிக்கவில்லை மார்கரெட்.

”நான் ஏற்கனவே முடிவு செய்தது. உன் அண்ணன் முடிவுக்குப் புறம்பானது இல்லை” என்ற கிளைவ், “மை டியர்! நான் ஆற்காட்டுக் கோட்டையைத் தாக்கப் போகிறேன். அந்த முடிவு எடுத்திருக்கிறேன்” என்றான்.

“நான் கோட்டையல்ல; பெண்” என்று சுட்டிக் காட்டினாள் மார்கரெட்.

“இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை. திடீர்த் தாக்குதலில் தான் இரண்டையும் பிடிக்கலாம்.”

மார்கரெட்டுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. “என்று ஆற்காட்டுக்குப் பயணம்?” என்று வினவினாள் மார்கரெட்.

”நாளை.”

”அதற்குள் உங்கள் காதலை முடித்துக்கொண்டு விட்டீர்களாக்கும்?”

‘’ஆம். அவகாசம் அதிகம் இல்லை என்று சொல்லவில்லை நான்?”

“அதற்காக?”

”கடமைகளை முடித்துக் கொண்டு கிளம்புகிறேன். எட்மண்ட் மகிழ்ச்சியுடன் இருப்பான்.”

”உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா?”

”ஏன் இல்லை?”

“காப்டன்!” என்று சீறினாள் மார்கரெட்.

“கால் மி ராபர்ட்” என்றான் கிளைவ்.

‘’ஹொய்?” என்றாள் அவள்.

“பிகாஸ் ஐ ஆம் யுவர்ஹஸ்பெண்ட்-டூ-பீ.’’

அதை கேட்ட மார்கரெட் அந்த அறை மூலைக்குச் சென்று அருகிலிருந்த ஒரு பிரம்பை எடுத்து ஓங்கிக் கொண்டு அவனை நோக்கி வந்தாள். “எஸ் மை ராபர்ட் டேக் திஸ்” என்று பிரம்பை வீசி எறிந்தாள் கிளைவின்மீது.

அதிலிருந்து தப்பக் கிளைவ் தலையைக் குனிந்தான். குனிந்தபடி நகைத்தான். அந்தச் சமயத்தில் எட்மண்டும் கோட்டை மேஜரும் அறையில் நுழைந்தனர்.

”ஐ ஆம் ஸாரி” என்றார் மேஜர் அங்கிருந்த நிலையை நோக்கி.
‘பீஹாப்பி. மீட் மை ஃப்யூச்சர் வொய்ப்” என்று கிளைவ் மார்கரெட்டை அறிமுகப்படுத்தினான்.

எட்மண்ட் என்ன சொல்வதென்று அறியாமல் வாயடைத்துச் சிலையென நின்றான்.

Previous articleRaja Perigai Part 3 Ch2 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here