Home Historical Novel Raja Perigai Part 3 Ch31 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch31 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

47
0
Raja Perigai Part 3 Ch31 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch31 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch31 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 31 இரண்டு பிசாசுகள்

Raja Perigai Part 3 Ch31 | Raja Perigai | TamilNovel.in

காவிரியின் காற்று எழுந்து ‘மாப்’பை எடுத்த விதம், அந்த ‘மாப் சற்று எட்டக் கண்களை மூடிக்கொண்டு நின்றிருந்த விஜயகுமாரன் மார்பில் ஒட்டிய விந்தை, விஜயகுமாரன் ஏதோ கனவில் நடப்பவன்போல் நடந்து மேஜைக் கருகில் வந்த விநோதம், அவனுக்கு இடம் விட்டு எழுந்த கிளைவ் அவன் கையில் ஒரு பென்சிலைச் செருகிய விசித்திரம், எல்லாமே மேஜர் லாரன்ஸுக்கு மட்டுமின்றி மானாஜி அப்பாவுக்கும் நஞ்ச ராஜாவுக்கும், முராரிராவுக்கும் பெரும் பிரமையை அளிக்கவே, மேலே நடக்கப் போவது என்னவென்பதை அவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கலாயினர்.

கிளைவால் நாற்காலியில் அமர்த்தப்பட்ட விஜயகுமாரனின் மூடிய கண்கள் மூடியபடியே இருந்தாலும் அவன் வலக் கை எழுந்து ஏறி, காற்றை எட்டுவதுபோல் சில விநாடிகள் அசைந்தது மற்றவர்களைச் சுட்டி. இடக்கை காற்றில் ‘மாப்’ பறக்காதபடி அதைக் கெட்டியாகப் பிடித்துப் பரத்தியது மேஜைமீது நன்றாக. பிறகு விஜயகுமாரனின் பென்சில் பிடித்த கை திட்டத்துடன் தேசப்படத்தின்மீது இறங்கி, ஓரிடத்தில் இரண்டு சிறு கோடுகள் ஒன்றின் மேல் ஒன்றாக இழுத்துக் குறி போட்டது. அடுத்தபடி சட்டென்று கிழே இறங்கி இன்னும் மூன்று இடங்களில் மூன்று குறிகளைப் போட்டது. கடைசியாக வடதிசையில் போட்ட குறியைச் சுட்டிக் காட்டி எதையோ வெட்டுவதுபோல் அப்புறம் இப்புறமும் திரும்பியது. பிறகு சில விநாடிகள் கை ஸ்தம்பித்து நின்று பென்சிலை நழுவ விட்டது, மேஜைமீது. விஜயகுமாரன் உடலும் மெல்லச் சாய்ந்தது நாற்காலிமீது.
இவையனைத்தையும் அந்த மந்திராலோசனை அறையிலிருந்த அனைவருமே கவனித்துக் கொண்டிருந்தாலும் அவர்களில் மேஜர் ஸ்டரின்ஜர் லாரன்ஸே அதிக வியப்பும் மன மகிழ்ச்சியும் அடந்தாராகையால் அவர், ”பிளாக் மாஜிக் பிளாக் மாஜிக்!” என்று இரைந்தார். திடீரென்று.

அவர் இரைச்சலைத் தமது கையால் சைகைக் காட்டி அடக்கினார், மானாஜி அப்பா. “இது மந்திரமல்ல. இவனுக்கு ஏதோ தேவதையின் உபாசனை இருக்கிறது” என்றும் கூறினார்.

நஞ்சராஜா ஏதோ சொல்ல வாயெடுத்தவர் சட்டென்று அடக்கிக் கொண்டார். போரில் மரணத்துக்கு அஞ்சாத அந்த அறையிலிருந்த பெரும் தலைவர்கள் எல்லாருமே அந்தச் சமயத்தில் அச்சத்தின் வசப்பட்டுக் கிடந்தார்கள். சிறிது அடங்கிய மேஜர் லாரன்ஸ், ‘’அய்தர் திஸ் ஈஸ் ப்ளாக் மாஜிக் ஆர் திஸ் பெல்லோ ஈஸ் எ மைன்ட ரீடர் (ஒன்று இது மந்திர வித்தை அல்லது இவன் மனோதத்துவ நிபுணன்)” என்று கூறினார் திட்டமாக.

“இரண்டும் அல்ல” என்று இடைபுகுந்தான் ராபர்ட் கிளைவ்.

”வேறு என்ன?” என்று மேஜர் கேட்டார், தமக்கும் தமிழில் நன்றாகப் பரிசயமுண்டு என்பதைக் காட்ட.

“இதை விஜயகுமாரனாகச் செய்யவில்லை” என்றான் கிளைவ் மீண்டும்.

“வேறு யார் செய்கிறார்கள்?” என்று கேட்டார் மானாஜி.

“அவன் தாயார்” என்று தங்கு தடங்கல் இல்லாமல் பதில் வந்தது கிளைவிடமிருந்து.

”ஹிஸ் மதர்?”

“எஸ்” என்றான் கிளைவ்.

”ஷீ ஈஸ் ஹியர்?”

“எஸ். ஷீ ஈஸ் ஹியர்.” கிளைவ் திட்டமாகக் கூறினான்.

“யூ ஸா ஹர்.”

“நோ, ஹீ ஸாஹர்.”

”யூகான்ப்ரிங் ஹியர்?”

”ஷீ வாஸ் ஹியர் எ ஃப்யூ மினிட்ஸ் அகோ. (அவள் இங்கிருந்தாள் சில நிமிடங்களுக்கு முன்பு).”

“நன் ஆப் அஸ் ஸா ஹர். (நாங்கள் யாரும் அவளைப் பார்க்கவில்லையே).”

“நாட் பாஸிபில். (முடியாது).”

“ஹொய்?’ (ஏன்?)”

”பிகாஸ் ஷி ஈஸ் டெட் (அவள் இறந்து விட்டாள்).”

”டெட்” என்றார் மெஜர் லாரன்ஸ் தமது விழிகளை அகல விரித்து.

“எஸ்” என்றான் கிளைவ்.

“யூ ஸெட் ஷீகேம் ஹியர்? (அவள் இங்கு வந்தாளென்று சொன்னாயே?)” என்று கேட்டார் லாரன்ஸ்.

”ஷீ ஈஸ் நௌ எ ஸ்பிரிட் (இப்போது அவள் ஆவிரூபத்தில் இருக்கிறாள்)” என்றான் கிளைவ்.

முந்திய இரவில் கிளைவ் எத்தனை சந்தேகத்துடன் விஜயகுமாரனைப் பார்த்தானோ அதே சந்தேகக் கண்களுடன் மேஜர் லாரன்ஸ் அந்த இரவில் கிளைவைப் பார்த்தார். ‘’காப்டன், ஐ வாண்ட் யூ டு கமான்ட் ஹாஃப் அவர் போர்ஸஸ் (காப்டன், நமது பாதிப் படைக்கு நீ தலைமை வகித்து நடத்த வேண்டுமென்று எண்ணினேன்)” என்றார் லாரன்ஸ் பரிதாபத்துடன்.

”ஐ கான் டூ ஈவன் நௌ (இப்போதும் நான் அதைச் செய்ய முடியும்)” என்றான் கிளைவ்.

”நோ, யூ கான்ட் (முடியாது. உன்னால் முடியாது)” என்றார் மேஜர் லாரன்ஸ் வருத்தத்துடன்.

”ஹொய்?”
மேஜர் லாரன்ஸ் அவனுக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. நாற்காலியில் நன்றாகச் சாய்ந்தார். தொண்டையை இருமுறை கனைத்தார். பிறகு சொன்னார் பரிதாபத்தடன், “பிகாஸ் யூ ஆர் மாட் (காரணம் உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது)” என்று.

கிளைவ் முகத்தில் சினம் தெரிந்தது. ‘ஐம் ஆம் நாட் மாட் (எனக்குப் பைத்தியமில்லை)” என்றான்.

”மாட் ஃபெல்லோஸ் வில் நெவர் அக்ஸப்ட் தே ஆர் மாட் (பைத்தியங்கள் தங்களைப் பைத்தியம் என்று ஒப்புக் கொள்வதில்லை)” என்றார் மேஜர்.

அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாக மைசூர் பிரதிநிதி தலையசைத்தார். மானாஜி மட்டும் மௌனமாக உட்கார்ந்திருந்தார். அந்தச் சமயத்தில் கண் திறந்த விஜயகுமாரன் ஆசனத்தை விட்டு எழுந்திருக்க முயன்றான்.

“டோன்ட் கெட் அப், யூ ஆர் நாட் ஆல்ரைட் (எழுந்திருக்காதே. உனக்கு உடம்பு சரியாயில்லை)” என்று உபசரித்தார் மேஜர் லாரன்ஸ்.

”ஐ ஆம் ஆல்ரைட் மேஜர்” என்று கூறிய விஜயகுமாரன் எழுந்திருந்து கிளைவ் இருந்த இடத்திற்குச் சென்று அவன் பக்கத்தில் நின்று கொண்டான்.

மேஜர் இருவரையும் உற்று நோக்கினார். “நௌ தேர் ஆர் டூ ஆப் தெம் (இப்போது இருவர் இருக்கிறார்கள் அதே மாதிரி)” என்றும் இகழ்ச்சியுடன் கூறினார். பிறகு விஜயகுமாரனைப் பார்த்து, “விஜயகுமார்! யூ ஆர் எகுட் ஸோல்ஜர். யூ ஒன்ட் லை டூ ஆன் ஓல்ட் மான் (விஜயகுமார்! நீ சிறந்த வீரன் வயதானவனிடம் பொய் சொல்லமாட்டாயல்லவா)” என்று அவனைச் சரிக்கட்ட முயன்றார்.

விஜயகுமாரன் சொன்னான் தெளிவாக, ‘உங்களிடம் என்ன, யாரிடமும் பொய் சொல்ல மாட்டேன்” என்று.

”குட் குட். தட்ஸ் எ குட் பாய்” என்ற மேஜர், ‘நௌ டெல் மி, ஹூ கேவ் யூத ஐடியா? (நல்லது நல்லது. இப்போது சொல். யார் இந்த யோசனையைக் கூறியது உனக்கு?)” என்று கேட்டார்.

”விச் ஐடியா? (எந்த யோசனை?)” என்று கேட்டான் விஜயகுமாரன்.

பதிலுக்கு மேஜர் லாரன்ஸ் மேஜைமீதிருந்த தேசப் படத்தைச் சுட்டிக் காட்டி, ”அதோ பார், நான்கு இடங்களில் குறிகளை இட்டிருக்கிறாய்!” என்றார்.

விஜயகுமாரன் அந்தக் குறிகளை உற்றுப் பார்த்தான். ”நானா இட்டேன் இந்தக் குறிகளை?” என்று வினவினான் வியப்புடன்.

‘யூ நோ யூ டிட் (நீ போட்டாயென்பது உனக்குத் தெரியும்)” என்றார் மேஜர்.

”நோ, மை மதர் மஸ்ட் ஹாவ் டன் திஸ் (இல்லை, என் தாய் போட்டிருக்க வேண்டும்)” என்றான் விஜயகுமாரன்.
“த டெட் மதர்? (இறந்த தாய்?)” என்று கேட்டார் மேஜர்.

‘எஸ்.”

”ஷீஈஸ் எஸ்பீரிட்?”

“எஸ்.”

மேஜர் திடீரென நாற்காலியிலிருந்து எழுந்திருந்தார். கிளைவையும் விஜயகுமாரனையும் மாறி மாறி நோக்கினார். ”யூ ஸ்கௌன்டரல்ஸ்! யூ ப்ளான் த பெஸ்ட் மிலிடரி மனுவல் அன்ட் யூ வான்ட் மிடு பிலீவ் இன் எ கோஸ்ட் (அட காலிகளா நீங்கள் இருவருமாக இணையற்ற ராணுவத் திட்டத்தைத் தயாரித்திருக்கிறீர்கள். ஏதோ பிசாசு தயாரித்ததாக என்னை நம்ப வைக்க முயல்கிறீர்கள்) என்று பெரிதாக இரைந்தார். மேலும் கூறினார்: ”பிளாகார்ட்ஸ்! யூ கம் ஹியர் அன்ட் ப்ளே கோஸ்ட் ட்ராமா ஆன் ஆல் ஆப் அஸ் (அயோக்கியப் பயல்களே! இங்கு வந்து எங்கள் முன்பு பிசாசு நாடகம் நடத்துகிறீர்கள்).”

இந்த இடத்தில் மானாஜி புகுந்து, ”மேஜர்! சற்று அமைதியாக இருங்கள். இந்தத் திட்டத்தை நானும் கவனித்தேன். இதை ஆவி சொன்னாலென்ன, இவர்களே நாடகமாடினால் என்ன? சிறந்த திட்டம். இதன்படி எதிரியைச் சுற்றி நான்கு முளைகள் அடிக்கப்படுகின்றன. இதன்படி கொள்ளிடத்து வடக்கே ஒரு படைப்பிரிவு சமயபுரத்தில் நிற்கும். வடக்கிருந்து வரும் கொள்ளிடத்துக்கு ஆற்காடு, புதுச்சேரி ரஸ்தாக்கள் அதனால் துண்டிக்கப்படும். நமது படைகளில் மற்றும் மூன்று பெரும் பகுதிகள் இருக்கின்றன. கிழக்குப் பகுதியில் தஞ்சைப் படைகளும், மேற்கில் முராரிராவின் காற்று வேகப் புரவிப் படையும் நின்றால் ஸ்ரீரங்கம் தீவு வெளி உலகத்திலிருந்து அடியோடு துண்டிக்கப்படும். பிறகு ஸ்ரீரங்கம் நோக்கி நகர்ந்து அங்குள்ள அரங்கன் கோயில் மதில்களுக்குள் உறையும் சந்தாசாகேபின் படையும், சற்று முன்னால் பதுங்கிக் கிடக்கும் பிரெஞ்சுப் படையும் சரணடைவடைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

மேஜர் தலையை அசைத்தார் கம்பீரமாக. ”அப்படியானால் இந்தப் பிசாசுகளை நாம் வடக்கே அனுப்புவோம்” என்று விஜயகுமாரனையும் கிளைவையும் சுட்டிக் காட்டினார்.

மறுநாள் காப்டன் கிளைவ் விஜயகுமாரனுடன் இரண்டு காவிரிகளையும் பிரிட்டிஷ் படையுடன் தாண்டிச் சமயபுரத்தில் படை வீடு அமைத்தான். அடுத்த சில தினங்களில் பயங்கரப் போர் மூண்டது.

Previous articleRaja Perigai Part 3 Ch30 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch32 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here