Home Historical Novel Raja Perigai Part 3 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

68
0
Raja Perigai Part 3 Ch4 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 3 Ch4 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 4. டேமிங் ஆஃப் தி ஷ்ரூ

Raja Perigai Part 3 Ch4 | Raja Perigai | TamilNovel.in

அறையில் நுழைந்த கோட்டை மேஜர், மார்கரெட் வீசிய பிரம்பிலிருந்து தப்பக் கிளைவ் குனிந்துவிட்டதால், அது தம்மைத் தாக்கிவிடுமோ என்ற பயத்தால் சட்டென்று அதன் பாதையிலிருந்து ராணுவ பாணியில் விலகிக் கால்களை ஒன்று சேர்த்து, முறுக்கிவிடப்பட்ட தமது ஆணி மீசை மூலைகளில் செங்குத்தாய் நிற்க, உதடுகளைக் கூட்டியும் விரித்தும், தமது வியப்பையும் பிரமிப்பையும் தெரிவித்துக் கொண்டாரென்றால், பிரம்பு தட்டென்று வாயிற்படியில் தாக்கி விழுந்ததும் எட்மண்ட் என்ன செய்வதென்று அறியாமல் திணறினான்.

அந்தச் சமயத்தில் கிளைவ் மார்கரெட்டைத் தனது பிற்கால மனைவியாக அறிமுகப்படுத்தியதும், எட்மண்ட் சற்று உள்ளுற மகிழ்ந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் விழிக்கவே செய்தான். இந்த நிலையைக் கிளைவே சமாளிக்கத் தொடங்கி, ‘மேஜர், யூ ஹாவ் நாட் கங்ராசுலேடட் மி (என்னை நீங்கள் பாராட்டவில்லையே)” என்று வினவினான் மேஜரை நோக்கி.

‘ஷ்யூர் ஐ டூ, ஷ்யூர் ஐ டூ” என்று மேஜர் பாடம் ஒப்புவிப்பவர் போல் இருமுறை கூறினார்.

”தட்ஸ் ரைட்” என்று ஆமோதித்த கிளைவ், ‘மை ஃபியான்ஸி நோஸ்டமில்” என்றும் விளக்கினான்.

”குட், குட்” என்று பாடம் ஒப்புவித்தார் மேஜர்.
அதன் விளைவாகக் கிளைவ் தமிழில் பேசத் தொடங்கி, ”மேஜர், அவள் என்ன அழகு பார்த்தீர்களா?” என்று வினவினான்.

”ரொம்ப ப்யூடிபுல் ரொம்ப ப்யூடிபுல்” என்ற மேஜர், மார்கரெட்டின் சுடு விழிகளைக் கண்டதும் சட்டென்று வாயை மூடிக் கொண்டு எட்மண்டை நோக்கினார்.

எட்மண்ட் மாஸ்கலீன் ஒருமுறை தொண்டையைக் கனைத்துக் கொண்டான். பிறகு நிதானமும் கடுமையும் நிறைந்த குரலில், ”மேஜர், என் தங்கையை அழகு பார்க்க இங்கு வரவில்லை” என்று ஆங்கிலத்தில் கூறினான் கிளைவை நோக்கி.

”அதற்குத்தான் நான் இருக்கிறேனே!” என்றான் கிளைவ்.

அப்பொழுது மார்கரெட்தூர இருந்த மேஜைமீதிருந்த ஒரு பேப்பர் வெயிட்டை எடுத்தாள். “மார்கரெட் வேண்டாம்” என்று அதை அவள் கிளைவ் தலையில் எறியுமுன்பு தடுத்தான் எட்மண்ட்.

மார்கரெட்டையும் அவள் கையிலிருந்த பேப்பர் வெயிட்டையும் கண்ட கிளைவ் மேஜரை நோக்கி, ”மேஜர்! நீங்கள் ஷேக்ஸ்பியர் படித்திருக்கிறீர்களா?” என்று வினவினான்.

”காப்டன்! நீங்கள் படித்திருக்கிறீர்களா?” என்று வினவினார் மேஜர்.
“நோ.” கிளைவின் பதில் திட்டமாக இருந்தது.

”வெரி குட், வெரி குட்.” மேஜர் உற்சாகத்தைக் காட்டினார்.

‘’வாட் ஈஸ் ஸோ அம்யூஸிங் அபௌ இட் (என்ன அத்தனை வியப்பு அதில்?)” என்று கேட்டான் கிளைவ்.

”நானும் படித்ததில்லை ” என்றார் மேஜர் ஆங்கிலத்தில்.

”இரண்டு பெரும் நிரட்சரகுட்சிகள் என்பதில் மேஜருக்குச் சந்தோஷம் போல் இருக்கிறது” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட கிளைவ் புன்முறுவல் செய்து, ‘’ஹாவ் யூ ஹேர்ட் ஆஃப் ஹிம்?” என்று கேட்டான் வெளிப்படையாக.

“ஹ …”

“ஷேக்ஸ்பியர்.”

”ஷ்யூர். குட்பெல்லோ” என்று சிலாகித்தார் மேஜர் ஷேக்ஸ்பியரை.

ஷேக்ஸ்பியருக்குக் கிடைத்த இந்தப் பாராட்டுகளைக் கேட்ட எட்மண்ட் பிரமித்தான். “ஷேக்ஸ்பியரைப்பற்றி இப்பொழுது என்ன?” என்று வினவவும் செய்தான்.

மேஜர் தலையை மும்முரமாக அசைத்தார் இருமுறை காரணமில்லாமல். கிளைவ் மட்டும் பதில் சொன்னான், ”எட்மண்ட் உன் தங்கையைப் பற்றி ஷேக்ஸ்பியர் நாடகம் எழுதியிருக்கிறார்” என்று.

”உனக்கு எப்படித் தெரியும்? நீதான் படித்ததில்லையே?”

“கேள்விப்பட்டிருக்கிறேன்.”

”என்ன நாடகம்?” எட்மண்டின் குரலில் எரிச்சல் இருந்தது.

”டேமிங் ஆஃப் தி ஷ்ரு” என்ற கிளைவ், “ஐ வில் டேம். திஸ் ஒய்ல்ட் காட் (இந்தக் காட்டுப் பூனையை நான் அடக்குகிறேன்)” என்றான் மார்கரெட்டைச்சுட்டிக்காட்டி.

மார்கரெட் ஒருமுறை மூவரையும் முறைத்து நோக்கிவிட்டு உள்ளே விடுவிடு என்று சென்றுவிட்டாள். அடுத்த விநாடி மேஜர் தேன் கொட்டியதுபோல் ஒரு காலை மட்டும் உதறி, ‘காப்டன்! யூ ஹாவ் அஃபெண்டட் யுவர் ஃபியான்ஸி (உங்கள் வருங்கால மனைவியிடம் அபசாரப்பட்டு விட்டீர்கள்)” என்று தெரிவித்தார்.

”இல்லை, அவளை ஜெயித்து விட்டேன்” என்ற கிளைவ் மேஜரை நோக்கினான் முறுவலுடன்.

”அதனால்?” என்று கேட்டார் மேஜர். ”ஆற்காட்டுக் கோட்டையும் ஜெயித்த மாதிரிதான்.”

”வாட் டூ யூ மீன்?”
”பெண்ணை ஜெயிப்பதைவிடக் கோட்டையை ஜெயிப்பது சுலபம். பெண்ணையே ஜெயித்துவிட்டேன்.”

”எக்ஸ்ப்ளெய்ன் காப்டன், எக்ஸ்ப்ளெய்ன்” என்றார் மேஜர்.

கிளைவ் உடனடியாகப் பதில் பேசவில்லை . சிறிது நேரம் அறையில் உலாவினான். பிறகு பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான் மேஜரிடம். மேஜர் தனது பையிலிருந்த கறுப்புக் கயிறு கட்டியிருந்த ஓர் ஒற்றைக் கண்ணாடியை எடுத்து வலக் கண்ணில் பொருத்திக் கொண்டு கடிதத்தைப் படித்தார். படித்ததும் அவர் உடல் முன்னைவிட அதிகப்படியாக விறைத்தது. கடிதத்தைக் கிளைவிடம் கொடுத்துவிட்டு நிமிர்ந்து நின்று சல்யூட் அடித்தார். “காப்டன்! பிரிட்டிஷ் பிரஜைகள் எங்கிருந்தாலும் யாராக இருந்தாலும் தங்களுக்கு வேண்டிய உதவியைச் செய்ய வேண்டுமென்றும் உங்கள் ஆணைக்குப் படிய வேண்டு மென்றும் கவர்னரின் இக்கடிதம் கூறுகிறது. ஐ ஆம் அட் யுவர் சர்வீஸ்” என்றும் சொன்னார்.

கிளைவ் அவரையும் நோக்கி எட்மண்டையும் நோக்கி, ‘’டு மாரோ ஐ ஆம் மார்ச்சிங் ஆன் ஆற்காட்” என்றான் சர்வ சாதாரணமாக.

எட்மண்ட் விழித்தான். மேஜரின் விழி நெட்டுக்குத்தாக நின்றது. ”அதற்குப் படை எங்கே கிளைவ்?” என்று கேட்டான் எட்மண்ட்.

“என்னுடன் நூற்று முப்பது சோல்ஜர்களும், முந்நூறு சிப்பாய்களும் வந்திருக்கிறார்கள்” என்று கிளைவ் சுட்டிக் காட்டினான்.

”ஆற்காட்டை இந்தப் படையை வைத்துக்கொண்டு பிடிக்கப் போகிறாயா?” என்ற வினவினான் எட்மண்ட்.

“இல்லை. இங்கிருந்து சோல்ஜர்களை அழைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று கிளைவ் கூறியதும் மேஜரின் விறைப்பு அதிகமாகிவிடவே, அவர் மகாராஜாக்களின் பங்களாக்கள் வாசலில் நிற்கும் சோல்ஜர் பொம்மை மாதிரி ஆகிவிட்டார். ”ஐ ஹாவ் ஒன்லி ஒன் தர்ட்டி மென் ஹியர். அண்ட் ஆல் ஆஃப் தெம் ஆர் நாட் சோல்ஜர்ஸ்” என்று குளறினார் மேஜர்.

”நான் நூற்று முப்பதில் எண்பது பேரை அழைத்துக் கொள்கிறேன். அவர்களில் எட்டுப் பேர் என்னுடன் வேலை செய்த ரைட்டர்களும் வரட்டும் ” என்றான் கிளைவ்.

”ரைட்டர்ஸ்/ யூ மீன் தோஸ் க்ளார்க்ஸ்? யூ மீன்டு ஸே தே கான்ஃபைட்! ஹா ஹா!” என்று அசுர நகை நகைத்தார் மேஜர்.

”நெவர் மைண்ட். ஐ வில் டேக் தெம்” என்றான் கிளைவ்.

‘யூ மீன் கில் தெம்?” என்ற மேஜர் புஸ் புஸ் என்ற மூச்சு விட்டார் பாம்பு போல்.

“நான் முடிவு செய்து விட்டேன்” என்றான் கிளைவ்.
‘’டு கில் தெம்?” என்ற மேஜர், ”ஆல் ரைட் காப்டன்! ஐ வில் ஆட் எய்ட்டி மென் டு யுவர் ஒண்டர் ஃபுல் ஆர்மி” என்று கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றார்.

அவர் சென்றதும் கிளைவ் மேஜைக்கருகிலிருந்த நாற்காலி யில் உட்கார்ந்து கொண்டு எட்மண்டையும் உட்காரச் சொல்லி, ”எட்மண்ட், இப்பொழுது நமது குடும்ப விஷயத் தைப் பேசுவோம்” என்றான்.

எட்மண்ட் கிளைவை உற்று நோக்கினான், சில விநாடிகள். பிறகு சொன்னான், “ராபர்ட் முதலில் நண்பர்களாகப் பேசவோம்” என்று.

“அதுவே நல்லது” என்றான் கிளைவ். ”எது?” எட்மண்ட்குரலில் வெறுப்புத் தெரிந்தது. ‘நண்பர்களாகப் பேசுவது…”

“ஏன்?”

”உறவினர்களுக்குள் எப்போதும் பகை உண்டு. நண்பர் களிடத்தில் கிடையாது.”

”சரி” என்ற எட்மண்ட் மீண்டும் யோசனையில் இறங் கினான்.

”என்ன யோசிக்கிறாய் எட்மண்ட்?” என்று வினவினான் கிளைவ்.
“இந்த ஆற்காட்டுப் படையெடுப்பு மிகவும் பைத்தியக்காரத்தனமானது.”

”ஏன்?”

”நீ மொத்தம் ஐந்நூற்றுப்பத்துப் பேருடன் படையெடுக்கிறாய்.”

”ஆம்.”

”ஆற்காட்டை ஆயிரத்து நூறு பேர் காத்து நிற்கிறார்கள்’’.

”அதனால் என்ன?’’

”எதிராளியின் பலம் இரண்டு பங்கு அதிகம்.”

”பலமல்ல. தொகை.”

”இரண்டுக்கும் வித்தியாசமுண்டா?”

”உண்டு’ என்ற கிளைவ் விளக்கினான்: ”நான் ஆற்காட்டின் மீது படையெடுக்கப் போவது யாருக்கும் தெரியாது, ஸெய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்து தகவல் போகாது. இங்கிருந்து தகவல் போய்ச் சேருமுன்பு நான் போய்ச் சேர்ந்துவிடுவேன் ஆற்காட்டுக்கு. அப்படியே தகவல் போனாலும் சந்தாசாகிப் திருச்சியிலிருந்து துணைப் படை அனுப்புமுன்பு நான் ஆற்காட்டைப் பிடித்துவிடுவேன்.” மேலும் சொன்னான்:
”எட்மண்ட் போரில் எண்ணிக்கை ஓரளவு முக்கியம். திட்டம் வகுப்பது, தாக்கும் முறைகள், தாக்கும் காலம் இவைதான் வெற்றியைத் தருகின்றன. அதுமட்டுமல்ல, ஒன்று இந்தப் போரில் பிரிட்டிஷ் ஆதிக்கம் இங்கு நிலைக்கும், இல்லையேல் அழிந்துவிடும். ஆகையால் இது அவசியம் ஆகிறது. இதன் வெற்றியோ தோல்வியோ பிரிட்டிஷ் வரலாற்றை ஆசியாவில் நிர்ணயிக்கும்.”

இப்படிப் பேசிய கிளைவ் உணர்ச்சி வசத்தால் சில விநாடிகள் கண்களை மூடிக் கொண்டான். எட்மண்ட் அவன் சொற்களிலிருந்த வேகத்தைக் கண்டான். உணர்ச்சியைக் கண்டான். தான் ஒரு சரித்திர புருஷன் முன்பு இருப்பதைப் புரிந்து கொண்டான். அதனால் குழைந்த குரலுடன் கேட்டான், “நானும் வரட்டுமா, ராபர்ட்?” என்று.

”எங்கு?” கிளைவ் கண்களைத் திறக்காமலே கேட்டான்.

”ஆற்காட்டுக்கு?”

“நோ”

”ஹொய்?”

”யூ பி ஹியர், ஸென்ட் பெக்கிடு கல்கட்டா, லெட் ஹர் ரிமெய்ன் தேர் டில் திஸ் ட்ரபிள் ஈஸ் ஓவர். அண்ட்…” கிளைவ் வாசகத்தை முடிக்கவில்லை.

”அண்ட்?”‘

”அனௌன்ஸ் அவர் எங்கேஜ்மெண்ட்.”

இதைச் சொன்ன பிறகும் கிளைவ் கண் விழிக்கவில்லை. நாற்காலியில் உட்கார்ந்தபடியே உறங்கினான். விளக்கை மெல்ல இழுத்து வைத்துவிட்டு அறைக் கதவையும் ஓசைப்படாமல் சாத்திவிட்டு எட்மண்ட் உள்ளே சென்றான். சில விநாடிகளுக் கெல்லாம் கையில் ஒரு போர்வையுடன் மார்கரெட் வந்தாள், அந்த அறைக்குள். மெள்ளக் கிளைவின்மீது போர்வையைப் போர்த்தினாள். பிறகு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவன் கன்னத்தில் தன் இதழ்களை லேசாகத் தொட்டுப் பார்த்துவிட்டு எழுந்து நின்றாள். அவள் இதயம் வேகமாக ஓடியது. நேரமும் அதைவிட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

சில விநாடிகள் அந்த மகாவீரனை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்ற மார்கரெட் தனது பெரும் பாவாடையை லேசாகத் தூக்கிக்கொண்டு பூனைபோல் நடந்து உள்ளே சென்றுவிட்டாள்.

மறுநாள் காலை ஆகஸட் இருபத்தாறாம் தேதி விழித்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நல்ல காலமும் கண் விழித்தது.

Previous articleRaja Perigai Part 3 Ch3 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here