Home Historical Novel Raja Perigai Part 3 Ch41 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch41 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

77
0
Raja Perigai Part 3 Ch41 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch41 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch41 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 41 அல் ஹாகிம்

Raja Perigai Part 3 Ch41 | Raja Perigai | TamilNovel.in

அவன் சென்ற திக்கையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த மானாஜி கடைசியில் சந்தாசாகிபை நோக்கித் திரும்பி, ”வாருங்கள்’’ என்று கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே சென்றதும் ஒரு ஆசனத்தில் அவரை அமரச் செய்து, தாங்கள் தங்க தனிக் கூடாரம் ஏற்பாடு செய்திருக்கிறேன். தங்களுக்குத் துணையாக இங்குள்ள மகாராஷ்டிர வீரர் யாரும் வேண்டாமென்று ஒரு பதானையே ஏற்பாடு செய்திக்கிறேன்” என்றார்.

”தங்கக் கூடாரம் எதற்கு? நான் புறப்பட வேண்டியது தானே?” என்று சந்தேகம் ஒலித்த குரலில் கேட்டார் சந்தா சாகிப்.

அந்தச் சந்தேகத் தொனியைக் கவனித்தாலும் கவனிக்காதது போலவே சொன்னார் மானாஜி ”இன்றிரவு இளைப்பாருங்கள். மீதியை நாளை யோசிப்போம்” என்றார்.

சந்தாசாகிபின் கண்களில் சந்தேகச் சாயை அதிகமாகப் படர்ந்தது. ‘நாளை வரை ஏன் காக்க வேண்டும்? இப்போது நான் கிளம்பினால் என்ன?” என்று வினவிய அவர் குரலிலும் கிலியிருந்தது.

”நேசப் படைகள் வழிநெடுக அடர்த்தியாக நிற்கின்றன. உங்களை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அத்தனை சுலபமாக அனுப்ப முடியாது. ஒரு நாள் பொறுங்கள்” என்றார் மானாஜி. பிறகு பணமுடிப்பைக் காட்டி, ”இதையும் உங்கள் விடுதலை சம்பந்தமாக உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்’ என்றும் தெரிவித்தார்.

”ஆமாம். கொடுக்க வேண்டிவர்களுக்குக் கொடுங்கள். என் விடுதலை பூர்த்தியானதும் இன்னும் நிரம்பப் பணம் தருகிறேன்.’’

”அப்புறம் தேவையிருக்காது ” என்று சொன்ன மானாஜி, ”பதான்! பதான்!” என்று இருமுறை அழைக்க, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை கவசமணிந்த ஒரு மனிதன் உள்ளே நுழைந்தான்.

”நவாப் அவர்களே, ஜாக்கிரதையாகக் கவனி. பிரிட்டிஷ்காரர்கள் கேட்டால் மானாஜியின் நீண்ட கால நண்பன் என்று கூறிவிடு. நான் சொன்னது நினைப்பிருக்கட்டும். நம்மிடம் நவாப் இருக்கும் விஷயம் யாருக்குத் தெரிந்தாலும் குழப்பம் அதிகமாகும். பிறகு நவாபை விடுதலை செய்வது நமது கைகளில் இருக்காது” என்று கூறவே கவசமணிந்த பதான் சந்தாசாகிப் பின்தொடர வெளியே சென்றான். நாலைந்து கூடாரங்களைத் தாண்டி அதிகப் படை நடமாட்டமில்லாத இடத்திலிருந்த ஒரு கூடாரத்துக்குள் அவரை அழைத்துச் சென்று அங்கிருந்த கயிற்றுக் கட்டிலை காட்டி, “நவாப் இதில் படுக்கலாம். மீதி விஷயங்களை நாளை பார்ப்போம்” என்றான் அந்தப் பட்டாணிய வீரன்.

சந்தாசாகிப் அவனைச் சந்தேகத்துடன் பார்த்தார். ”’பதான் இத்தனை அருமையாகத் தமிழ் பேசுவது வியப்பாக இருக்கிறதே” என்றும் கூறினார்.
”எல்லாம் பழக்கம்தான் காரணம். படுங்கள் நவாப்” என்று சொல்லி அந்த வீரன் வெளியே சென்றான்.

நவாப் படுத்தார், நீண்ட நேரம் உறக்கம் வராவிடினும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அளித்த அசதி கடைசியில் அவரை உறங்க வைத்தது.

மறுநாள் காலை பொழுது விடிந்து நீண்ட நேரம் கழித்தே அவர் விழித்தார். விழித்தும் எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. அவர் கைகளும் கால்களும் பலமாகச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. நவாப் திகைத்தார். ஏதோ மோசடி நடந்துவிட்டதென்ற நினைப்பில், ”யாரங்கே?” என்று குரல் கொடுத்தார் ஆத்திரத்துடன்.

பட்டாணிய வீரன் தலை நீட்டினான். அப்போது அவன் கவசமே அணிந்திருந்தான். “ஏன்?” என்று கேட்கவும் செய்தான்.

“இதற்கு என்ன பொருள்?” என்று கைகால் சங்கிலிகள் மீது கண்களை ஓடவிட்டார் சந்தா சாகிப்.

”என் மீதும் மானாஜி மீதும் மற்றவர்கள் சந்தேகப்படாதிருக்க ஒரு நாடகம் ” என்றான் அந்த வீரன்.

சந்தாசாகிப்பின் சிந்தனையில் ஏதேதோ சந்தேகங்கள் எழுந்து குழப்ப மீண்டும் மஞ்சத்தில் விழுந்தார். ஆனால் அன்று வேளாவேளைக்குப் பட்டாணிய வீரன் அவருக்கு ஆகாரம் கொண்டு வந்து கொடுத்தான். எல்லா உபசாரங்களையும் செய்தான். மறுநாளிரவு மீண்டும் நவாப்பை அவன் சந்தித்த போது, ”நவாப் தாங்கள் கைதான விஷயம் மேஜர் லாரன்ஸுக்கும் நஞ்சராஜாவுக்கும் தெரிந்துவிட்டது. எல்லாரும் உங்களைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்கிறார்கள். உங்களுக்குக் கிராக்கி அதிகமாக இருக்கிறது” என்றான் உற்சாகத்துடன்.

”மானாஜி என்ன சொன்னார்?” என்று திகிலுடன் வினவினார் சந்தா சாகிப்.

”யாரிமும் ஒப்டைக்க முடியாது என்று திட்டமாகக் கூறிவிட்டார். மற்றத் தளபதிகள் தொல்லை அதிகமாயிருப்பதால் உங்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் தனிமையில் சொல்லியிருக்கிறார்” என்று கூறினான்.

சந்தாசாகிப் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார். ‘நாம் எப்போது கிளம்பலாம்?” என்று கேட்டார்.

‘’இந்தப் பரபரப்பு கொஞ்சம் அடங்கட்டும். நாளைக்கு மறுநாள் இரவோடு விஷயத்தை முடித்து விடுகிறேன்” என்றான் பட்டாணிய வீரன்.

சொன்ன சொற்படி நவாப் கைதான மூன்றாவது நாளிரவு அதாவது 1752-ஆம் வருஷம் ஜூன் 3-ஆம் தேதி இரவில் அந்தப் பட்டாணிய வீரன் வந்து அவர் தளைகளை நீக்கினான். அவர் உடலைப் பூராவும் மறைக்க உடை ஒன்றையும் கொண்டு வந்தான். ”நவாப் இதை அணிந்து கொள்ளுங்கள். புறப்படலாம்” என்றான்.

நவாப் அவசர அவசரமாக உடையணிந்து கொண்டார். அவருக்காக ஒரு புரவியும் வெளியே நின்றது. அவர் அதில் ஏறியவுடன், “நவாப் இது அராபியர் உடை. முகத்தை நன்றாக இழுத்து மூடிக் கொள்ளுங்கள். இடையில் யார் தடுத்தாலும், எதைக் கேட்டாலும் பொருட்படுத்தாதீர்கள். அபாயமான வழியில் உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்று அந்தப் பதானும் இன்னொரு புரவியில் ஏறி அவர் புரவியுடன் அதை இணையவிட்டுப் பயணத்தைத் துவக்கினான். போகப் போக, சந்தாசாகிபின் மனத்தில் ஒரு தெம்பு உண்டாயிற்று. அந்தப் பட்டாணிய வீரன் யார் எதைக் கேட்டாலும் தஞ்சைத் தளபதியின் பெயரை உபயோகித்து நவாபைத் தப்புவித்து அழைத்துச் சென்றான். கடைசியில் அவன் திருச்சிக்குள் நுழையும்போது சந்தாசாகிப் திகிலுடன் கேட்டார், “நாம் திருச்சிக்குள் அல்லவா நுழைகிறோம்?” என்று.

”ஆம். நேர்வழிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வழி சென்றால் யாரும் நம்மை எதிர்பார்க்கமாட்டார்கள்” என்றான் அந்த வீரன்.

மிகுந்த சந்தேகத்துடன் தனது ஜன்ம விரோதியிருக்கும் திருச்சிக்குள் நுழைந்தார் சந்தாசாகிப். பட்டாணிய வீரன் அவரைத் திருச்சி மதிள் ஓரமாகவே மறைவில் பல தெருக்களைத் தாண்டி ஒரு மண்டப வாசலை அடைந்து, “நவாப் இறங்குங்கள்” என்றான்.

அதைக் கண்ட சந்தா சாகிபின் திகில் உச்ச நிலையை அடைந்தது. “இங்கு எதற்காக அழைத்து வந்தாய்?” என்று நடுங்கும் குரலில் வினவினார்.
‘’விடுதலை அளிக்க. ” வீரனின் குரலில் முதல் முதலில் கடுமை இருந்தது.

“இங்கு என்ன விடுதலை யிருக்கிறது?” என்று வினவினார் சந்தாசாகிப்.

அடுத்த விநாடி பட்டாணிய வீரன் கையிலிருந்த இரு குழல் கைத்துப்பாக்கி அவர் முகத்துக்காக நீட்டப்பட்டது. ”இறங்கு!” என்ற அவன் குரலில் மரியாதை இல்லை , அதிகாரம் இருந்தது.

நவாப் பதிலேதும் சொல்லாமல் இறங்கினார். அந்த வீரன் உத்தரவுப்படி அந்த மண்டபத்தின் பெருங் கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தார். மண்டபத்தில் பெரும் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. மத்தியிலிருந்த மேடை சுத்தப் படுத்தப்பட்டிருந்தது. அதைக் கண்ட நவாப் ஒரு முறை நடுங்கினார். பிறகு திடப்படுத்திக் கொண்டு பட்டாணியனை நோக்கித் திரும்பினார்.

”இது…” என்று இழுத்தார் மெதுவாக.

பட்டாணியன் குர் ஆனிலிருந்து பதில் சொன்னான்: ”அல்- ஹாகிம் (ஜல்)” என்ற கூட்டுச் சொல், அந்த மண்டபத்தைப் பயங்கரமாக ஊடுருவிச் சென்றது. சந்தாசாகிபின் உடல் பேயாட்டம் கண்டது.

Previous articleRaja Perigai Part 3 Ch40 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch42 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here