Home Historical Novel Raja Perigai Part 3 Ch42 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch42 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

82
0
Raja Perigai Part 3 Ch42 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch42 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch42 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 42 அழிக்கும் கரம்

Raja Perigai Part 3 Ch42 | Raja Perigai | TamilNovel.in

சர்வ வல்லமையுள்ள ஆண்டவன் வேதபுத்தகமான குர் ஆன் அஸ்மா எல் ஹுன்னா பகுதியில் சூடியிருக்கும் 99 புனித நாமாக்களில் ஒன்றான அல் ஹாகிம் என்ற பெயரைப் பட்டாணியன் உச்சரித்தவுடன் பிரமைக்கும் பீதிக்கும் உள்ளான நவாப் சந்தாசாகிப், ”யார் நீ? எதற்காக அந்த நாமத்தைச் சொல்கிறாய்?” என்று நடுங்கும் குரலில் கேட்டார்.

இரவின் அந்த வேளையில் யாரும் இல்லாததால் ஹோவென்று பயங்கரமாயிருந்த அந்த மண்டபத்தில் நவாபின் சொற்கள் மிக விபரீதமான பல எதிரொலிகளைக் கிளப்பவே செய்தன. பெரிதாக எரிந்து கொண்டிருந்த பெரிய விளக்குகூட அவரைச் சுட்டெரித்துவிடுவதுபோல் பார்த்த பிரமை நவாபுக்கு உண்டானதால் அவர் தேகத்தில் லேசான நடுக்கமும் கண்டது.

அவர் கேட்ட கேள்விக்குப் பட்டாணியன் உடனடியாகப் பதில் சொல்லாமல் வாசலை ஒரு முறை நோக்கினான். அங்கே யாரோ ஒருவன் பெரிதாக எதையோ தூக்கிக்கொண்டு வந்து வெளிப்புறத் திண்ணையில் ஒதுங்கியதைக் கண்டதும் திருப்தியுடன் தலையசைத்தான் பட்டாணியன். பிறகு கேட்டான்: ”நான் சொன்ன புனித வாக்கியத்தின் பொருள் உனக்குத் தெரியுமா நவாப்?” என்று.

நவாபின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “தெரியும். சர்வ வல்லமையுள்ள ஆண்டவனின் பெயர் அது. அவன் இணையற்ற நீதிபதி என்பதை அந்த நாமம் சுட்டக் காட்டுகிறது.’ இதைச் சொன்ன சந்தா சாகிப் தலையைக் குனிந்து ஆண்டவனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

“நல்லது நவாப் நீ குர்-ஆனையும் ஓரளவு படித்திருக்கிறாய். எந்த ஆண்டவனை வேத புத்தகம் போற்றுகிறதோ, அந்த ஆண்டவன் இன்று உன் பாவங்களுக்குத் தீர்ப்பளிக்கப் போகிறான். அவன் சந்நிதானத்தில் நீ இப்போது நிற்கிறாய்” என்றான் பட்டாணியன்.

நவாப் சிந்தித்தார். ”நீ சொல்வது எனக்குப் புரியவில்லை” என்றார் அந்த நிலையிலும் துணிவைக் காட்டி.

பட்டாணியன் கேட்டான் : ‘இந்தச் சத்திரம் எதுவென்று புரிகிறதா?”

”இதை எப்போதோ ஒரு முறை பார்த்திருக்கிறேன். என் விடுதலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” கேட்டார் நவாப்.

”இதன் பெயர் தளவாய் சத்திரம்” என்ற பட்டாணியன், அதன் பெயர் அவர் உள்ளத்தில் உறையட்டுமென்று சில விநாடிகள் பொறுத்தான்.

சத்திரத்தின் பெயரைக் கேட்ட நவாப் நடுங்கினார். ”இதுவா தளவாய் சத்திரம்?” என்ற குரலும் நடுங்க வினவினார்.

”ஆம் சந்தா சாகிப். இன்றிலிருந்து பதினாறு ஆண்டுகள் பின்னோக்கிப் பார். நீ செய்த பாதகச் செயல் தெரியும். அப்போது உனக்குப் பெயர் சந்தாசாகிப் அல்ல. என்னவென்று நினைப்பிருக்கிறதா?” என்ற பட்டாணியன் கேள்வியில் வெறுப்பும் உக்கிரமும் கலந்து தாண்டவமாடியன.

இந்தக் கேள்விக்குச் சந்தாசாகிப் பதில் சொல்லவில்லை. பட்டாணியன் குரலே பெரிதாக ஒலித்தது. * ”ஹுஸேன் தோஸ்த்கான்! ஆற்காட்டு நாவாப் தோஸ்த் அலியின் மூன்றாவது மருமகனே!” என்று பழைய பெயரைச் சொல்லிச் சீற்றத்துடன், அழைத்த பதான் வீரன், “இதே மண்டபத்தில் அதோ உன் கண்ணில் தெரிகிறதே அதே மேடைக்கருகில் குர்-ஆன் மீது பொய் ஆணையிட்டாய். நாயக்கர் வம்சத்து ராணியும் மகாபதிவிரதையு மான ராணி மீனாட்சி திருச்சிக்குள் உன்னையும் உன் படைகளையும் விட்டதும் நீ அவளைச் சிறை செய்து இதே மண்டபத்தில் இருக்கச் செய்தாய். குர்-ஆன் மீது பொய் சத்தியம் செய்யும் யாராயிருந்தாலும் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் (ஸல்) மன்னிப்பதில்லை. ஆண்டவன் காத்திருக்கிறான் தீர்ப்பளிக்க. தீர்ப்பு அளிக்கும்போது அது பயங்கரமாக இறங்குகிறது, மனிதன் தலைமீது” என்று உணர்ச்சிப் பொங்கப் பேசினான்.

சந்தாசாகிப் உடலெல்லாம் வியர்த்தது. “இல்லை, நான் குர்-ஆன் மீது சத்தியம் செய்யவில்லை ” என்று குளறினார்.

”அதிலும் பொய் சொல்கிறாயா?”

“இல்லை. ஒரு தட்டில் செங்கல்லை வைத்து, பட்டால் மூடி குர்-ஆன் என்று சத்தியம் செய்தேன்.”

”அது இன்னும் பாதகம். செங்கல்லை குர்-ஆன் என்று சொல்வது ஆண்டவனை ஏமாற்றுவதாகும். அது மட்டுமல்ல நவாப்! நீ எதைக் காட்டி குர்-ஆன் என்று சொன்னாலும் அது குர்ஆன் ஆகிவிடும். அதன் வலிமையை நீ உணரவில்லை” என்றான் அந்த வாலிபன்.

”தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி உன் விஷயத்தில் எத்தனை உண்மையாகிறது. பதினாறு ஆண்டுகள் கழித்து இப்போது ஆண்டவன் சந்திதானத்தில் தீர்ப்புக்கு நிற்கிறாய். இப்பொழுதாவது ஆண்டவனைப் பிரார்த்தித்துக் வணங்கு. தொழு” என்ற பட்டாணிய வீரன், தன் முகத்தை மறைத்த கவசத்தை இடக் கையால் எடுத்துக் கீழே எறிந்தான்.

அந்த இரும்புக் கவசம் வீசப்பட்டுத் தரையில் உருண்ட தால் பயங்கரமான உலோக சப்தம் தளவாய் மண்டபத்தை ஊடுருவியது. பட்டாணியன் முகத்தைப் பார்த்த நவாபின் விழிகளில் பயத்தோடு வியப்பும் கலந்து கொண்டது. “நீ பதான் அல்ல, இந்து. உன் முகத்தில் திலகம் இருக்கிறது நீ… நீ….” என்று இழுத்தார்.

”விஜயகுமாரன். ராணி மீனாட்சியின் தத்துப் பிள்ளை” என்று மிக நிதானமாகச் சொன்ன விஜயகுமாரன், இடையிலிருந்த பட்டையான பெருவாளை உருவிக் கையில் பிடித்துக் கொண்டான்.

”தோஸ்த்கான்! இந்த மண்டபத்தில்தான் உன் சதிச் செய்லால் ராணி மீனாட்சி தீக்குளித்தாள். அந்த இடத்தைக் குறிக்கத் தான் இந்த மேடை கட்டப்பட்டது. இந்த மேடையில் நீயும் அழியப் போகிறாய். இது சர்வ வல்லமையுள்ள அல்லாவின் (ஸல்) விருப்பம். உன்னைப் பழி வாங்க நான் பதினாறு ஆண்டுகள் காத்திருந்தேன். சென்ற இரண்டு ஆண்டுகளில் உன்னை யார் யார் அழிக்க முடியுமோ அவர்களிடம் எல்லாம் சேவைக்கு அமர்ந்தேன். தஞ்சை, மராட்டியர், பிரிட்டிஷார் ஆகியவர்களுடன் சாதாரண வீரனாகவும், உபதளபதியாகவும் பணியாற்றினேன். பலன் இன்று கிடைத்தது. ஆண்டவன் அல் – ஹாகிம் மட்டுமல்ல, அல் பஸீர் (எல்லாவற்றையும் பார்ப்பவர்) அல் – முஸில் (அழிப்பவர்) இப்பொழுது உன்னை அழிக்கும் கரமாக என்னை அனுப்பியிருக்கிறார்” என்று கருணை சிறிதுமற்ற குரலில் கூறினான் விஜயகுமுாரன்.

”நீ இந்து. எங்கள் இறைவனை ஏன் உதவிக்கு அழைக்கிறாய்? அவன் நாமங்களை ஏன் சொல்கிறாய்?” என்று கேட்டார் சந்தாசாகிப்.

“இறைவன் எல்லாருக்கும் ஒருவன்தான். பல . நாமங்களால் அவனை அழைக்கிறோம். அநாவசியமாகப் பேசி நேரத்தை ஓட்ட வேண்டாம். பாதகனே! நீயாகச் சென்று அந்த மேடையில் படு. வீரனாக இறக்க முயற்சி செய். கோழையாகப் பிராணனை விடாதே” என்ற விஜயகுமாரன், கையிலிருந்த கத்தியைக் கூர்பார்த்தான் தன் இடக்கை விரல்களால்.

சந்தாசாகிப் சுற்றுமுற்றும் பார்த்தார் சில விநாடிகள். விஜயகுமாரனின் கண்களையும் தன் கண்களால் கவனித்தார். எதிரியின் கண்களில் அநுதாபச் சாயை சிறிதளவும் இல்லாததைக் கண்டார். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு கேட்டார். ‘நான் செய்தது சதியானால் நீங்கள் செய்வதென்ன? நம்பி வந்த என்னைக் கொல்கிறீர்கள். விடுதலையளிப்பதாகச் சொல்லி வெட்டப் பார்க்கிறீர்கள். நீங்கள் யோக்கியர்களானால் என் பணத்தை ஏன் வாங்கிக் கொண்டீர்கள்? மானாஜி இத்தனை மோசக்காரன் என்பதை நான் அறியவில்லை.’
”இதில் மோசம் ஏதுமில்லை. லஞ்சம் கொடுத்து நீதப்பப் பார்த்தாய். அது மானாஜியிடம் பலிக்காது. உனக்கு விடுதலை யளிப்பதாகச் சொன்னார். அதற்குப் பொருள் தெரியுமா உனக்கு? விடுதலையென்றால் இந்த உலகத்திலிருந்து விடுதலை. வேறு யாருக்கும் நீ தீமை விளைவிக்காதிருக்க இந்த உலகத்திலிருந்தே விடுதலையளிக்கச் சொன்னார் தளபதி. சரி சரி. தலையை மேடையில் வை’ என்ற விஜயகுமாரன் கத்தியின் நுனியால் நவாபைச் சற்றுக் குத்தி மேடைக்காக நகரவிட்டான்.

சந்தா சாகிப்பின் கண்களில் திடீரென ஓர் உறுதி பளிச் சிட்டது. தலையை நன்றாக நிமிர்ந்து நின்றுகொண்டு விஜயகுமாரனை வெகு அலட்சியமாகப் பார்த்தார். பிறகு கம்பீர நடை நடந்தது மேடைக்குச் சென்றார். அவர் நடையில் தளர்ச்சி ஏதுமில்லை; அரச நடை இருந்தது, வீர நடை இருந்தது. அத்தகைய நடை நடந்து மேடைமீது அவர் தலையை வைத்ததிலும் நிகரற்ற துணிவும் கம்பீரமும் தெரிந்தன.

அந்தச் சமயத்தில் அவரை உள்ளத்துக்குள் பெரிதும் பாராட்டினான் விஜயகுமாரன். கடைசியில் வீரனாகவே சாக சந்தா சாகிப் முடிவு செய்து ராஜ கம்பீரமாக நடந்தது நாயக்கர் வம்ச வீரனுக்குப் பெரிதும் திருப்தியை அளித்தது. ‘இப்பேர்ப்பட்ட வீரன் ஒரு அநீதியை மட்டும் செய்யாதிருந்தால், பொய் ஆணை இடாதிருந்தால், அழிக வேண்டியவனல்ல’ என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டான். பிறகு இரைந்து, ”தாயே! என் கடமையைச் செய்கிறேன்” என்று கூவினான்.

அந்தக் கூவலை ஒட்டி ராணி மீனாட்சியின் ஆவி மேடைமீது தோன்றியது. ”முடித்துவிடு மகனே! இதோ நான் இந்த ஆவி ரூபம் துறந்து நமது முன்னோர்கள் இருக்கும் இடம் செல்லப் போகிறேன்” என்ற அவனை நோக்கிக் கூறியது.

அதே சமயத்தில் வெளியே ராஜபேரிகை டம டமவென மரண ஒலியைப் போல் பெரிதாகவும் அமங்கலமாகவும் சப்தித்தது. விஜயகுமாரன் தன் இரு கைகளாலும் வாளை உயரத் தூக்கி மின்னல் வேகத்தில் சந்தா சாகிப்பின் கழுத்தில் இறுக்கினான். ஏதோ வாழைத் தண்டு பிளப்பது போல் சர்ரென்ற உருண்டது சந்தாசாகிப்பின் தலை. உடல் இருமுறை துடித்து நின்றது, மேடைப் பாறையின் மீது. கழுத்திலிருந்து மளமள வென்று குமிழியிட்டுப் பிரவகித்த குருதி, மேடையைச் குங்குமச் சிவப்பாக அடித்தது. ராஜபேரிகை வெளியே அலறியது.

சில விநாடிகள் துண்டிக்கப்பட்ட சந்தாசாகிப்பின் தலையைப் பார்த்துக் கொண்டு நின்றான் விஜயகுமாரன். பிறகு கேட்டான், “தாயே உன் ஆவி திருப்தி அடைந்ததா?” என்று.

”திருப்தியடைந்தது மகனே. இதோ நான் கிளம்புகிறேன்” என்று குரல் ஒலிக்க ராணியின் ஆவி மேலே எழுந்து திடீரென மறைந்தது. விஜயகுமாரன் வாயிலை நோக்கிக் கையைத் தட்ட உள்ளே நுழைந்த வீரனிடம் கையை நீட்டினான். அவன் ஒரு துணியையும் பட்டுத்துணியையும் தாம்பாளத்தையும் கொடுக்க, கீழே உருண்டு கிடந்த நவாபின் தலையை எடுத்துப் பையில் போட்டுக் கொண்ட விஜயகுமாரன் பட்டுத்துணியையும் தாம்பாளத்தையும்கூட அதில் திணித்துக் கொண்டான். “இனி ராஜபேரிகையின் வேலை இங்கு முடிந்தது. அதைத் தஞ்சைக்கு அனுப்பிவிடு” என்று உத்தரவிட்டு, ”புரவி எங்கே?” என்று வினவினான்.

”வாயிலில் தயாராயிருக்கிறது” என்றான் அந்த வீரன்.

கையிலிருந்த பையுடன் வெளியில் ஓடிய விஜயகுமாரன் புரவி மீது தாவி அதைக் காற்றினும் கடுகப் பறக்க விட்டான்.

புரவியை எங்கும் நிறுத்தாமல் நேராகத் திருவரங்கத்தின் தெற்கு வாசலுக்குக் கொண்டு வந்து ரத்தம் தோய்த்த வாளைத் தலைக்கு மேலே ஆட்டினான். அங்கிருந்த காவலர் கதவைத் திறந்துவிட, ஆர்யபடாள் வாசலுக்கு வந்து, புரவியினின்றும் இறங்கிய விஜயகுமாரன் நவாபின் தலையை எடுத்துத் தட்டில் வைத்துப் பட்டால் மூடினான். பிறகு அந்தத் தட்டுடன் வெகு வேகமாக அரங்கன் கர்ப்பக்கிருகத்தின் முன் மண்டபத்துக்கு ஓடினான். மண்டபத்துக்குள் நுழைந்து கையிலிருந்த தாம்பாளத்தைச் சந்நிதிக்கெதிரில் வைத்து பட்டுத் துணியை நீக்கினான். அடுத்தபடி தனது ரத்தம், தோய்ந்த வாளையும் தட்டுக்குப் பக்கத்தில் வைத்து மண்டியிட்டான். கர்ப்பக்கிருகத்துக்குள்ளிருந்த ஸ்ரீரங்கநாதன் உருவத்தை மனத்துள் ஆவாகனம் செய்துகொண்டான்:

“பிரபு! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உன் சந்நிதானத்தில் இட்ட ஆணையை நிறைவேற்றிவிட்டேன். இதோ இருக்கிறது, என் தாயை அழித்த நவாபின் தலை. என் பிரார்த்தனை இன்று முடிந்துவிட்டது, உன் அனுக்கிரகத்தால். சங்கீதத்தின் ஸப்த ஸ்வரங்களுக்குள் உறையும் பிரணவத்தைப் போல் ஸப்த பிராகாரங்களுக்குள் உறையும் உன் கருணைக் கண்கள் இந்த நவாபின் மீதும் படியட்டும். ‘யதி வா ராவண ஸ்வயம்’ என்று ராவணனே சரணடைந்தாலும் அபயமளிப் பேன் என்ற உன் அபரிமித கருணையை இந்த நவாபுக்குக் காட்டு. என் மனத்தில் இவன் தலையை வெட்டுவது வரையில் இருந்த உக்கிரம் உன் சந்நிதானத்துக்கு வந்ததும் தணிந்து விட்டது. சாந்த ஸ்வரூபியான உன் கடைக்கண் வீச்சு இந்த அடியவன் மீதும் படட்டும். என் மனத்திலுள்ள சஞ்சலம், கோபம், குழப்பம் எல்லாம் மாறி நிம்மதி நிலவ நீலமேக சியாமளனான நீதான் அருள் புரிய வேண்டும்.” மீண்டும் தண்டனிட்டான் தலை நிலத்தில் படிய.

இப்படிப் பகைவனுக்கும் தனக்கும் ஒருங்கே நலனை நாடி, பகைவனையும் மன்னிக்கும் பண்பாடு தமிழனுக்கு உண்டு என்பதைத் தெளிவாக்கிய விஜயகுமாரன் நீண்ட நேரம் சந்நிதி முன்பு படுத்துக் கிடந்தான். அவன் தோளை மெள்ள ஒரு வாள் தொட்டது. தலைநிமிர்ந்து தன்னை வாளால் தொடக்கூடியவன் யார் என்று நோக்கினான் விஜயகுமாரன். உருவிய வாளுடன் ராஜபுத்திரனான ஜெய்சிங் நின்று கொண்டிருந்தான்.

Previous articleRaja Perigai Part 3 Ch41 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch43 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here