Home Historical Novel Raja Perigai Part 3 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

68
0
Raja Perigai Part 3 Ch5 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 3 Ch5 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 5. தீர்த்தமும் திருத்துழாயும்

Raja Perigai Part 3 Ch5 | Raja Perigai | TamilNovel.in

பிற நாட்டு ஆதிக்கம் பாரதத்தில் காலூன்றப் போகிறது என்ற காரணத்தாலும், அதுவும் சென்னை ஸெய்ன்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புறப்படும் அந்த ஐந்நூற்றுப் பத்துப் பேர் கொண்ட படையினால் ஏற்படப்போகிறது என்ற சீற்றத்தாலும், 1751 ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலையில் உதித்த கதிரவன், கடலிலிருந்து கிளம்பிய போதே வெகு ஆக்ரோஷத்துடன் கிளம்பிக் காலை எட்டு மணிக்குள் கிரணங்களைத் தீட்சண்யமாக வீசினான். அந்தத் தீட்சண்யத்தைத் தாங்கமுடியாததால் கோட்டையின் கிழக்கு முகப்பிலிருந்த ஸெய்ன்ட் மேரீஸ் சர்ச்சின் அருகில் பிரம்மாண்டமாகக் கிளம்பி நின்ற பெரு மரங்கள் இரண்டின் கிளைகளிலிருந்து பட்சி ஜாலங்கள் ஜிவ்வென்று கடலின் நீரை நோக்கிப் பறந்து சென்றன.

அடிக்கடி பிரிட்டிஷ் ஸோல்ஜர்களின் கண்ணுக்கும் வயிற்றுக்கும் விருந்தாக இருந்த புறாக்கள் பெரிய ராணவக் கட்டிடங்களின் பொந்துகளிலிருந்து வெளிவந்து இனிமையாகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தன. இத்தகைய கடும் காலை உஷ்ணத்திலும் இனிமையான சூழ்நிலையிலும் கிளைவின் சிறுபடை ஆற்காட்டை நோக்கிக் கிளம்பத் தயாராக அணிவகுத்து நின்றது, புனித மாதாகோவிலுக்கு அருகே. அப்படையை வழியனுப்ப மார்கரெட் மாஸ்கலீனும் மற்றும் நான்கைந்து வெள்ளை மாதர்களும் புத்துடை அணிந்தும் சின்னஞ்சிறு யூனியன் ஜாக் கொடிகளை மார்பில் குத்தி அலங்காரம் செய்து கொண்டும் நின்றிருந்தார்கள்.
படையின் முன்னணியில் இருநூற்றுப் பத்து ஐரோப்பிய ஸோல்ஜர்களையும், அவர்களுக்குப் பின்னால் முந்நூறு சுதேசி சிப்பாய்களையும் அணிவகுத்து நிறுத்தியிருந்தார் கோட்டை மேஜர். அவர்களில் முதல் எட்டுப் பேர் படை நடத்தக்கூடிய ஆபீஸர்கள் என்றாலும், அவர்கள் அனைவரையும் ரைட்டர்கள் என்ற குமஸ்தாக்களாகப் பொறுக்காமல் நான்கு ரைட்டர்களையும் நான்கு ராணுவ ஆபீஸர்களையும் பொறுக்கியிருந்தார் மேஜர்.

சரியாக மணி எட்டு அடித்ததும் எட்மண்ட் மாஸ்கலீன் இருப்பிடத்திலிருந்து பூரண ராணுவ உடையில் கிளம்பிய கிளைவ் மேஜருடன் ஒருமுறை தனது படையைச் சுற்றிப் பார்த்தான். பிறகு படைக்குப் பின்னாலிருந்த நான்கு சிறு மார்ட்டர் பீரங்கி வண்டிகளையும் கவனித்தான். திருப்தியடன் தலையை அசைத்தான். பிறகு படையை ‘ரைட் டர்ன்’ திரும்பித் தன்னை நோக்கி நிற்கும்படி கூறினான் கிளைவ்.

”ஜென்டில்மேன்! யூ ஆர் எஸ்மால் ஆர்மி, பட் எக்ரேட் ஆர்மி, பிகாஸ் யூ ஹாவ் எ மிஷன் (வீரர்களே! உங்களைக் கொண்ட இப்படை சிறிது, ஆனால் இதற்கொரு லட்சியம் இருப்பதால் இது மகத்தான படையாகிறது) காட் ஹெல்ப் அஸ். ரைட் அபௌட் டர்ன்; அண்ட் மார்ச்” என்று கூறிப் பக்கத்திலிருந்த புரவியிலேறி வாளை உயர்த்தினான். திடீரெனக் கோட்டை பாண்டு சப்தித்தது. அதற்கிணங்கப் படை ராணுவ நடை போட்டு நகர்ந்தது. கடைசியில் சென்ற கிளைவ் மாதாகோவிலைப் பார்த்தான். அங்கு நின்றிருந்த மார்கரெட் தனது சிறு கர்ச்சீப்பை வீசி வழியனுப்பினாள். தலையை லேசாகச் சாய்த்து அவள் வாழ்த்தை ஏற்றுக் . கொண்ட கிளைவ் மேற்கொண்டு திரும்பிப் பார்க்காமல் புரவியைப் படையின் முன் பக்கத்துக்குக் கொண்டு சென்றான்.

ஆற்காட்டை நோக்கி அபாய யாத்திரையைத் தொடங்கிய அந்தச் சிறுபடையைக் கோட்டையிலிருந்த பாக்கி ஐம்பது சோல்ஜர்களும், சில குடும்பங்களும், கிடங்குக்காரர்களும் இதர ஐரோப்பிய வணிகர் ஐந்தாறு பேரும் பக்தியுடனும், அதனுடைய வெற்றியில் அவநம்பிக்கையுடனும் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆனால் முன்னால் புரவியில் அமர்ந்து சென்ற கிளைவுக்கு அவநம்பிக்கை ஏதுமில்லாதது மட்டுமல்ல, மிதமிஞ்சிய நம்பிக்கையும் பெருமையுங்கூட இருந்தது.

பிரட்டனின் காலிப் பயல் இன்று பிரிட்டனின் மானத்தைக் காக்கும் வீரனாகி விட்டதை எண்ணி அவன் மனம் பூரித்துக் கொண்டிருந்தது. படை புறப்படுமுன்பு, நன்றாகக் கிளம்பி அதிகமாகக் கிரணங்களால் தகிக்க ஆரம்பித்துவிட்ட கதிரவன் அவன் முகத்தைக் குங்குமச் சிவப்பாக அடித்தது அதற்குத் தனி கம்பீரத்தை அளித்திருந்ததால், ஆற்காட்டைத் தாக்க இன்னொரு கதிரவன் கிளம்பியதுபோல் சென்றான்.

கோட்டையை விட்டு ஆறு மைல் பயணம் செய்ததுமே ஒரு தோப்பில் படைகளை இளைப்பாற அவகாசம் கொடுத்த கிளைவ், “இந்த இடத்தில் நீங்கள் சிற்றுண்டி அருந்தலாம்” என்று அறிவித்தான். இதைக் கேட்ட ஒரு லெப்டினண்ட், ”சுமார் ஆறு மைலுக்குள்தான் பயணம் செய்திருக்கிறோம்” என்று சுட்டிக் காட்டினான்.

”எனக்குத் தெரியும்’ என்ற கிளைவ், ”வீடோண்ட் ஹரி. வீ மார்ச் ஸ்லோ (நாம் துரிதமாகப் போகப் போவதில்லை. பயணம் மெள்ளத்தான் இருக்கும்)” என்று பதில் சொன்னான். அத்துடன், ”லெப்டினண்ட்! ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் த ரேஸ் (நிதானமும் திடமும் பந்தயத்தில் வெற்றியளிக்கிறது)” என்ற பிரிட்டிஷ் பழமொழியையும் எடுத்து வீசினான்.

லெப்டினண்டுக்கு அந்தப் பழமொழியிலோ படையெடுப்பிலோ அதிக நம்பிக்கை இல்லாவிட்டாலும் ‘’எஸ் காப்டன்” என்று மரியாதையுடன் கிளைவ் சொன்னதை ஆமோதித்தான்.

கிளைவ் தனது படை சிற்றுண்டியை முடித்துக் கொள்வ தற்கும் இளைப்பாறுவதற்கும் ஒரு மணி நேர அவகாசம் கொடுத்தான். இப்படி ஒவ்வோர் இடத்திலும் நிறுத்தி நிறுத்தியே படையை அழைத்துச் சென்றான். பாரதப் பகலவனின் வெயிலில் வெள்ளைக்கார சோல்ஜர்கள் துவண்டு கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் முகமும் நன்றாகச் சூளை போடப்பட்ட செங்கல் மாதிரி ஆகிக்கொண்டிருந்தது. தடியான ராணுவச் சட்டைகள் மிதமிஞ்சிய வியர்வையால் நனைந்து கொண்டிருந்தன. இத்தகைய வெயிலின் காரணமாக மிக நிதானமாகவே படையை நடத்திச் சென்ற கிளைவ், ”போய்ச் சேருமிடத்தில் படை களைத்தால் தோல்வி நிச்சயம். ஆகையால் இளைப்பாறவும் உணவருந்தவும் இடம் கொடுத்துப் படையைத் திடத்துடன் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும்’ என்ற மனத்தில் தீர்மானித்துக் கொண்டான்.

இப்படி நிதான பயணத்தால் சென்னைக்கும் காஞ்சிக்கும் இடையிலுள்ள நாற்பத்தெட்டு மைல் தூரத்தை நான்கு நாள் பயணத்துக்குப் பிறகே கடந்தான்.
காஞ்சி மாநகரத்தில் பிரவேசித்த கிளைவின் கண்களை முதல் முதலாகத் தேவாதி தேவனான வரதராஜப் பெருமாளின் கிழக்குக் கோபுரம் ஈர்த்துக் கொண்டது. அந்த மாபெரும் கோபுரங்களிலும் அதன் இருபுறமும் ஓடிய பெரும் மதிள்களையும் கண்ட கிளைவ், ‘இது இந்துக்களின் கோயில்களில் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அதைப் பார்த்த வண்ணம் பல விநாடிகள் நின்றான். பிறகு தனது படைகளை அதைச் சுற்றி வளைத்துப் பிரதட்சிணமாக அழைத்துச் சென்று சரித்திரப் பிரசித்தியையும்
புராணப் பிரசித்தியையும் பெற்ற மேலைக் கோபுர வாசலுக்கு வந்து சேர்ந்து அந்தக் கோபுரத்தையும் நீண்ட நேரம் நோக்கினான்.

‘அமர்கள் அதிபதி’ என்று நம்மாழ்வாராலும், ‘தேவாாதி தேவன்’ என்று ஸ்ரீ ஆண்டாளாலும் மங்களா சாஸனம் செய்யப் பெற்றவரும், கலியுகத்தில் வரந்தரும் தெய்வங்களில் சிறந்தவர் என்பதால் வரதராஜன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவரும், வைகாசி விசாகத்தில் புள்ளேறி வந்து லட்சக்கணக்கான மக்களை உய்விக்கும் நிலை குறித்து, ”விநூதா ஸுத வாகனுடை வைடலனு காஞ்சி வர துடு’ என்றும், ”நெர வைசாகோத்ஸவ முன சத தினகருடு உதயஞ்சின” (நிறைவுள்ள வைகாசி உற்சவத்தில் ஆயிரம் சூரியர்கள் போல் பிரகாசித்துக் கொண்டு வருகிறான் பகலவன்) என்று தியாக பிரும்மத்தால் துதிக்கப்பட்ட வருமான தேவராஜனுடைய கோவில் மேலைக் கோபுரம் கண்ணுக்குப் பெரு விருந்தாயிருந்தது. அவன் ஆத்மாவுக்கும் அது பெரும் சாந்தியை அளித்திருக்க வேண்டும். ஆகவே அந்தக் கோபுரத்துக்குள் நுழைவதை அபசாரமாக நினைத்துத் தனது சிப்பாய்களில் ஒருவனை அழைத்து, “இந்த ஹிந்து சர்ச்சுக்கு யார் அதிகாரி?” என்ற வினவினான்.
”காப்டன் இது சர்ச்சல்ல; கோவில்” என்று பதில் சொன்னான் சிப்பாய்.

”ஆல்ரைட் இந்தக் கோவிலுக்குள் நாம் போகலாமா?”

“கூடாது” என்று திட்டவட்டமாகப் பதில் சொன்னான் சிப்பாய்.

மீண்டும் கோவில் மதிள்களை நோக்கிய கிளைவ், ”இந்த மதிள்கள் படைக்கு நல்ல பாதுகாப்பு” என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டு, “சிப்பாய் இந்தக் கோவில் அதிகாரி யாராக இருந்தாலும் அழைத்துவா” என்றான்.

இப்படியொரு படை வந்த மாத்திரத்தில் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டே மாடத் தெரு பக்த கோடிகள் மெள்ள மெள்ள வெளியே வந்து ஒன்றுகூடி எட்ட நின்று படையை வேடிக்கை பார்க்கலானார்கள்.

சந்நிதித் தெருவின் முகப்பு வீட்டுக்காரர்களும் வெளியே வந்தார்கள். அப்பொழுது சாயங்கால பூஜையை முடித்துக்கொண்டு பெருமாளுக்கு அமுது கண்டருளப் பண்ண மணியடித்துக் கொண்டு பிரசாதத் தட்டுடன் வந்த பரிசாரகருடன் சந்நிதி சந்நிதியாகப் போய்க் கொண்டிருந்த பட்டர் பகவத் கைங்கர்யம் முடிந்ததும், தமது பட்டுக் கரை வேஷ்டியை உதறி விட்டுக்கொண்டு யோக வேஷ்டியுடனும் பெரும் சாவிகளைத் தோளில் போட்டுக் கொண்டும் கோபுர வாசலுக்கு வந்தவர் எதிரே புரவியில் அமர்ந்திருந்த கிளைவைக் கண்டதும் சில விநாடிகள் சிலையென நின்றார். பிறகு, ‘வரதன் இருக்கிறான்’ என்று மனத்துள் சொல்லிக்கொண்டு கிளைவ் முன்பாக வந்து, “உனக்கு என்ன வேண்டும்?” என்று வினவினார்.

கிளைவ் பட்டரை உற்று நோக்கினான். அவர் சரீரம் பூராவும் பளபளத்த ஊர்த்வபுண்ட்ரங்களைக் கவனித்து வியந்தான். “ஹொய் யூ ஹாவ் பெய்ண்டட் யுவர்ஃபேஸ் அண்ட் பாடி? (உன் உடம்பிலும், நெற்றியிலும் ஏன் பெய்ண்ட் செய்து கொண்டிருக்கிறாய்?)” என்று வினவினான்.

பட்டருக்கு ஆங்கிலம் புரியாததால் சற்று எட்ட இருந்த ஒரு ஹிந்து சிப்பாயை நோக்கி, “இவன் என்னடா சொல்கிறான்?” என்றார்.

சிப்பாய் கிளைவை நோக்கினான். கிளைவ் தலையசைத்தான். சிப்பாய் பதில் சொன்னான்; ”உங்கள் நெற்றியிலும் உடம்பிலும் ஏன் வர்ணம் தீட்டியிருக்கிறீர்கள் என்று கேட்கிறார் காப்டன்” என்று.

”இவை வெறும் வர்ணமல்ல… எம்பெருமானின் திருநாமங்கள் என்று சொல்” என்றார் பட்டர்.

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தான் சிப்பாய். அதற்குப் பிறகு தமிழிலேயே கேட்டான் கிளைவ், ”கடவுளின் பெயர்களா?” என்று.

”ஆம்” என்றார் பட்டர்.

”எல்லாம் கோடுகள். எழுத்துக்கள் அல்ல” என்றான் கிளைவ்.
‘சின்னங்கள்” என்றார் பட்டர். அவன் அறியாமைக்கு வருந்தி.

“நீங்கள்?”

“கைங்கர்ய பரன்.”

இந்தச் சம்பிரதாய வார்த்தை கிளைவுக்குப் புரியாததால் விழித்தான் ஒரு விநாடி. அப்பொழுது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் பட்டர், “ப்ரீஸ்ட்’ என்ற ஒரு ஆங்கில வார்த்தையை வீசினார். அந்த ஒரு வார்த்தைதான் அவருக்குத் தெரியும். அதுவும் ஏதோ ஒருமுறை காஞ்சியை வேடிக்கை பார்க்க வந்த ஒரு வெள்ளையன் சொன்ன பெயர். அதைக் கேட்டதும் கிளைவ் உற்சாகத்தில் ஆழ்ந்தான். “யூ நோ இங்கிலீஷ்?” என்று வினவினான்.

அது புரியாவிட்டாலும் விஷயம் எப்படி இருக்குமென்பதை ஊகித்துக் கொண்ட பட்டர் தெரியாதென்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தார். அதனால் சிப்பாயின் உதவியைக் கொண்டு அவருடன் உரயாடிய கிளைவ், “ஐ வாண்ட் டு ரெஸ்ட் மை ஆர்மி இன்ஸைட் தி வால்ஸ் ஆப் திஸ் பகோடா. (எனது இந்தப் படையை இக்கோவிலின் மதிலுக்குள் இன்றிரவு தங்க வைக்க உத்தேசிக்கிறேன்)” என்றான்.

அதற்கு உடன்பட பட்டர் திட்டமாக முதலில் மறுத்து விட்டார். மறுத்தால் எப்படியும் நுழைவதாகக் கிளைவ் அறிவித்தான். அங்கிருந்த படையின் துப்பாக்கிகளைக் கண்ட பட்டர், அதிகப்படியான எதிர்ப்பில் பயனில்லை என்பதை அறிந்து, ”வரதராஜனுடன் விளையாடுவது யுக்தமல்ல. பிறகு உன்னிஷ்டம்” என்று கூறி எதிரே இருந்த தனது இல்லம் நோக்கி நடந்தார். கிளைவ், லெப்டினண்டை அருகில் அழைத்து, ”லெப்டினண்ட் வி ரெஸ்ட் இன்ஸைட்தி வால்ஸ். பட் டோண்ட் கோ டூ மச் இன்டு தி இன்டீரியர் (லெப்டினண்ட் இக்கோவிலின் மதிள்களுக்குள் இன்று தங்குவோம். ஆனால் உள்ளே அதிகமாகப் போக வேண்டாம்”) என்று உத்தரவிட்டான்.

அந்தச் சமயத்தில் ஏற்கனவே பட்டருக்கும் கிளைவுக்கும் துவிபாஷியாக இருந்த சிப்பாய், ‘இங்கு நுழைவது பாவம். ஆண்டவனுக்கு அபசாரம். அதுவும் பெருமாள்….’ என்று பயத்துடன் நடுங்கிக் கொண்டே எச்சரித்தான்.

அதையும் மீறிக் கிளைவ் துவஜ ஸ்தம்பத்துக்கு முன்பே படையை இருக்கச் செய்தான். தானும் ஒரு மண்டபத்தில் படுத்தான். அவன் படுத்து ஐந்து நிமிஷங்கள்கூட ஆகியிருக்காது. திடீரெனப் பெருங் குளிர் எடுத்தது அவனுக்கு. உடலைத் தூக்கிப் போட்டது. சுரம் பெரிதாக விசிறியடிக்க ஆரம்பித்தது. இரண்டு சோல்ஜர்கள் அவன்மீது ராணுவக் கம்பளியைப் போட்டுப் போர்த்தினார்கள். அமுக்கியும் பிடித்தார்கள். கிளைவ் உளற ஆரம்பித்தான் சுர வேகத்தில். ”கெட் தட் பட்டர், தப்ரீஸ்ட்” என்று.

கிளைவ் உளறுகிறானென்று லெப்டினண்டும், சோல்ஜர் இருவரும் நினைத்தார்கள். ஆனால் கிளைவ் மறுபடியும் இரைந்து ஜன்னி வந்தவன் போல் கூவினான். ‘தப்ரீஸ்ட் – ஐ மீன் பட்டர், கெட் ஹிம்” என்று கூச்சலிடவே பட்டரை அழைத்துவரச் சிப்பாய் ஓடினான்.
அடுத்த கால்மணி நேரத்தில் வந்த பட்டர் கிளைவை நோக்கினார் தயையுடன், ”மிலேச்சன், விஷயம் தெரியாமல் பகவானிடம் அபசாரப்பட்டு விட்டான்” என்று கூறினான்.

”வாட் இஸ் ஹி ஸேயிங்?” என்று கேட்டான் ஒரு லெப்டினன்ட்.

”ஹி இஸ் ஸேயிங் காப்டன் கமிடட் ஸின். காட் ஆங்ரி” என்றான் சிப்பாய்.

பட்டர் அவ்விருவர் பேசியதைக் கேட்காமல் கையில் கொண்டு வந்திருந்த செப்புக்குளபாத்திரத்திலிருந்து இரண்டு உத்திரிணி பெருமாள் தீர்த்ததைக் கிளைவின் வாயில் புகட்டி, திருத்துழாய் தளமொன்றையும் அவன் வாயில் போட்டார். பிறகு, சந்நிதியை நோக்கி வரதராஜ ஸ்வத்திலிருந்து சில சுலோகங்களை முணுமுணுத்தார். “இன்னும் ஒரு நாழிகைக்குள் குணப்பட்டு விடும். பிறகு இவன் உறங்கட்டும்… காலையில் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுப் பட்டர் சென்றார்.

அந்த அதிசயம் நிகழவே செய்தது. அரை மணியில் கிளைவுக்குச் சுரம் இருந்த இடம் தெரியாமல் பறந்தது. கிளைவ் நிம்மதியுடன் உறங்கினான்.

Previous articleRaja Perigai Part 3 Ch4 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here