Home Historical Novel Raja Perigai Part 3 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

61
0
Raja Perigai Part 3 Ch6 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 3 Ch6 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 6. மகரகண்டி

Raja Perigai Part 3 Ch6 | Raja Perigai | TamilNovel.in

இரவு முழுவதும் நன்றாக உறங்கிய கிளைவ், மறுநாள் விடியற்காலையில் யாரோ பெரிதாகப் பாடுவதைக் கேட்டுக் கண் விழித்துக் கொண்டான். ”கௌஸல்யா ஸுப்ரஜா ராமா பூர்வா ஸந்தியா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமான்ஹிகம்” என்று பட்டர் தமது தாஷ்டிகமான குரலில் வால்மீகி பகவான் ஜகந்நாதனான பரமபுருஷனை எழுப்பிய சுலோகத்தைக் கோவிலுக்குள்ளிருந்த குளத்தங்கரையிலிருந்து பெரிதாக அனுசந்தித்தது காதில் விழவே கிளைவ் முந்திய நாளிரவு துவிபாஷிகனாய் விளங்கிய சிப்பாயை அழைத்து யார் பாடுவதென்று வினவினான்.

‘பட்டர்’ என்று சிப்பாய் விடையளிக்கவே, ”கெட் ஹிம்” என்று உத்தரவிட்டான் கிளைவ்.

உத்தரவிட்ட நீண்ட நேரத்துக்குப் பிறகே கிளைவைப் பார்க்க வந்த பட்டர், புஷ்கரணியில் நீராடி, வேஷ்டி துவைத்து, பன்னிரண்டு திருநாமங்களையும் தரித்திருந்தார். வேஷ்டியைப் பிழிந்து முறுக்கித் தலைமீது வளைத்தும் வைத்திருந்தார். இடையில் ஈரத்துண்டுடன் அலட்சியமாகக் கிளைவின் அருகில் வந்து, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.

அவ்வளவு தமிழ் கிளைவுக்கும் தெரிந்திருந்ததால் ”கிளைவ்” என்றான் கிளைவ்.

“ராத்திரி சொஸ்தமாதூங்கினையா?” என்று விசாரித்தார் பட்டர்.
”தூங்கினேன்.”

“எல்லாம் வரதன் கடாட்சம்” என்ற பட்டர், பகாவானுடைய சந்நிதியை நோக்கித் திரும்பினார்.

”யூ மீன் யுவர் காட் ஹெல்ப்ட் மி?” என்று கேட்டான் கிளைவ்.

இங்கிலீஷில் பட்டருக்கு ‘எஸ், நோ’ என்ற இரண்டு வார்த்தை தெரிந்திருந்ததால் அவற்றிலொன்றை எடுத்து, “எஸ்” என்று வீசினார்.

கிளைவ் சில விநாடிகள் ஏதோ யோசித்தான். பிறகு கேட்டான், ”வாட் மெடிஸின் யூ கேவ் மி எஸ்டர்டே?” என்று.

சிப்பாயை நோக்கினார் பட்டர். சிப்பாய் மொழி பெயர்க்கவே, “மருந்துக்கெல்லாம் மருந்து பெருமாள் தீர்த்தம், திருத்துழாய் இரண்டும். திருமஞ்சன தீர்த்தத்தில் கொஞ்சம் ஆத்தில் வைத்திருந்தேன். அதைக் கொடுத்தேன்” என்று பதில் சொன்னார் பட்டர்.

‘ஹோலி வாட்டர்? ஈஸ் இட் ஸோ பவர்ஃபுல்?” என்ற கிளைவ், “நான் ஆற்காட்டுக்கு இன்றே போக வேண்டும். அங்கே கோட்டையைப் பிடிக்கவேண்டும். இஸ் இட் பாஸிபிள்?” என்று கேட்டான்.

”வரதன் கிருபையிருந்தால் எந்தச் சாம்ராஜ்யத்தையும் பிடிக்கலாம்” என்றார் பட்டர்.
கிளைவ் யோசித்தான் ஒரு விநாடி ”ஐ காண்ட் ப்ரே டூ யுவர் காட். பட் ஐ கான் பே” என்று பொற்காசுகளைக் கொடுக்கும்படி உத்தரவிட்டான்.

லெப்டினண்ட் கையில் நீட்டிய பொற்காசுகளைப் பார்த்த பட்டர் அலட்சியமான பார்வையொன்றைக் கிளைவ் மீது வீசினார். “பணத்தைக் கொடுத்துப் பகவானை வாங்க முடியாது. அவன் அருட்செல்வம் வேண்டுமானால் பிரார்த்தித்துக் கொள்”

சிப்பாய் அதை பரிஷ்காரமாக மொழி பெயர்க்கவே கிளைவ் கேட்டான், “நான் பிரார்த்தனை செய்தால் எதுவும் கிடைக்குமா?” என்று.

”கிடைக்கும்.”

”ஆற்காட்?”

“‘கிடைக்கும்.”

”ஹௌ டூஐப்ரே?”

”உன் தெய்வத்தை எப்படி வேண்டுகிறாயோ அப்படி.”

  இதைக் கேட்ட கிளைவ் வியப்பின் வயப்பட்டான். ''இஃப்ஐப்ரேடு மை காட் ஹீபி பிளீஸ்ட்?" என்று கேட்டான்.

பதிலுக்குப் பட்டர் சொன்னார், ”ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம், ஸர்வதேவ நமஸ்காரம் கேசவம் ப்ரதிகச்சதி” என்று. ‘ஆகாயத்திலிருந்து பொழியும் மழை எப்படி இறுதியில் கடலை அடைகிறதோ அப்படியே எந்தத் என்றார்.

தெய்வத்தைத் துதித்தாலும் அது கேசவனையே அடைகிறது” என்று அதை மொழி பெயர்த்தும் சொன்னார்.

”வாட்டஸ் ஹி ஸே?” என்ற கேட்டான் கிளைவ்.

சிப்பாய் தமிழை மொழி பெயர்த்தான். அவன் மொழி பெயர்த்ததும் பட்டர் விடாமல் தொடர்ந்து, ”ஏ கிளைவ் நீ மிலேச்சனாயிருந்தாலும் உனக்கு வரதன் அனுக்கிரகம் இருக் கிறது. தீர்த்தமும் திருத்துழாயும் இத்தனை சீக்கிரம் எங்கள் நோய்களைக்கூடச் சொஸ்தப்படுத்துவதில்லை. ஆகையால் வரதனை நேராகப் பிரார்த்தனை செய்துகொள். வெற்றி ஏற்பட்டால் பகவத் அலங்காரமாக ஏதாவது சமர்ப்பிப்பதாகச் சொல்” என்ற கூறினார்.

இதைச் சிப்பாய் மொழி பெயர்த்ததும் கிளைவ் எழுந்து நின்றான். பகவத் சந்நிதானத்தைச் சில விநாடிகள் வெறித்து நோக்கினான். பிறகு தலை வணங்கி இரைந்து, “பகவான் ஹெல்ப் மி வின் திஸ் வார். ஐ வில் கிவ் யூ தி மோஸ்ட் காஸ்ட்லி ஜுவல் ஐ வில் ஃபைண்ட் இன் ஆற்காட் (பகவானே, இந்தப் போரில் வெற்றிகொள்ள உதவு. ஆற்காட்டில் கிடைக்கும் பொக்கிஷத்தில் ஆபரணங்களில் சிறந்ததை உனக்குக் கொடுக்கிறேன்)” என்ற கூறினான்.

அந்தச் சமயத்தில் திடீரென வானம் இருண்டது. இடி இடித்தது.
“பகவான் உனக்கு அனுக்கிரகம் செய்துவிட்டார்” என்றார் பட்டர்.

“மழை வரப்போகிறது கடுமையாக” என்றான் கிளைவ்.

”அதை லட்சியம் செய்யாதே. போ, வரதன் காப்பாற்றுவான்” என்றார் பட்டர்.

“நேற்று ஃபீவர்” என்ற தயங்கினான் கிளைவ்.

‘’அவன் கடாட்ச வீட்சணம் இருக்கும் வரையில் சுரம் திரும்பாது” என்று சொல்லிவிட்டுப் போனார் பட்டர்.

கிளைவ் அவர் சொன்னபடி கிளம்பினான், ஆற்காட்டை நோக்கி. கொட்டும் மழையில் அவனது பட்டாளம் புறப்பட்டது. இடி இடித்தது; மின்னலடித்தது. வானம் மிக மிக இருண்டது. எதையும் லட்சியம் செய்யாமல் சென்றான் கிளைவ்.

படை செல்வதை வீட்டு ஜன்னல்களிலிருந்து ஜனங்கள் வேடிக்கை பார்த்தார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதைப் பார்த்த பட்டர் பெருமூச்சு விட்டார். ”ஸம்ப்ரோக்ஷணைதான் பண்ண வேண்டும். மிலேச்சப் பிரவேசத்துக்கு வேறு பரிகாரம் கிடையாது” என்று சொல்லிக் கொண்டு பக்கத்திலிருந்த பையனைப் பார்த்து, “டேய் வரதா! பரிசாரகனைக் கூப்பிடு” என்று உத்தரவிட்டார்.

இடியிலும் கொட்டுக் கொட்டென்று கொட்டிய மழையிலும் தனது ஐந்நூற்றுப் பத்துப் பேர் கொண்ட படையை அழைத்துக் கொண்டு கிளைவ் மிக உறுதியுடன் தனது பயணத்தைச் செய்த அடுத்த நாள், அதாவது செப்டம்பர் முதல் தேதியன்று ஆற்காட்டுக்குப் பத்து மைல் முன்பு தங்கினான். மழை திடீரென அகன்றதால் ஆற்காட்டு நிலையை அறிய முன்னோடிகள் இருவரை அனுப்பினான். அவன் தங்கிய ஊரிலிருந்து இரு புரவிகளை அவிழ்த்துக் கொண்டு சென்ற அவ்விருவர் பிரமிக்கத்தக்க செய்தியைக் கொண்டு வந்தார்கள்.

வியர்க்க விறுவிறுக்கப் புரவியிலிருந்து குதித்த இரு சிப்பாய்களில் ஒருவன், ‘காப்டன், காப்டன்” என்று அழைத்து மேற்கொண்டு விஷயத்தைச் சொல்ல முடியாமல் தவித்தான்.

“ஏன்?” என்றான் கிளைவ்.

“ஆற்காட்டைக் காத்து நின்ற படை…” என்று சிப்பாய் இழுத்தான்.

“கோ ஆன்…” கிளைவின் குரல் கடுமையாக ஒலித்தது.

“ஓடிவிட்டது” ஒரு வெடியை எடுத்து வீசினான் சிப்பாய்.

”வாட்டூ யூ மீன்?” ”டெவில்ஸ்.’’

கிளைவுக்கு ஏதும் புரியவில்லை. ‘டெவில்ஸ்? ஹு? ஹொயர்?”

“ஐ டெவில்?”

“தே ஆர் ஆல்ஸோ டெவில்ஸ்” என்று மற்ற லெப்டி னெண்டுகளையும் பிரிட்டிஷ் சோல்ஜர்களையும் சுட்டிக் காட்டினான் சிப்பாய்.

“வாட் நான்ஸன்ஸ்”

சிப்பாய் வினக்கினான். “இந்த இடியிலும் மழையிலும் எந்தப் படையும் முன்னேற முடியாது. நீங்கள் முன்னேறியதால் உங்களுக்குப் பிசாசுகள் துணையிருப்பதாகவும், நீங்கள் பிசாசுகளோடு உறவு வைத்துக் கொண்டிருப்பதாகவும் சந்தா சாகிப்பின் சிப்பாய்கள் நினைத்துக் கோட்டையைவிட்டு ஓடி விட்டார்கள்.”

கிளைவ் லெப்டினண்டுகளைத் திரும்பிப் பார்த்தான். திடீரெனப் பெரிதாக நகைத்தான். ”யூ ஆர் ஆல் டெவில்ஸ். ஐ ஆம் டெவில் . லாங் லிவ் டெவில்ஸ்” என்று கூறவும் செய்தான்.

அன்று பகல் மேலும் இரு பெரிய பீரங்கிகளை அனுப்புமாறு கடிதம் எழுதி, சென்னைக்கு ஒரு சிப்பாயை அனுப்பினான். படை ஆற்காட்டை நோக்கி நகர்ந்தது.

கிளைவ் ஆற்காட்டுக்குள் வெற்றியுடன் நுழைந்தான். எதிர்ப்பார் யாருமில்லாக் கோட்டை பல இடங்களில் இடிந்து கிடந்தது. ஆற்காட்டுவாசிகள் அந்தச் சிறு படையை வேடிக்கை பார்த்தார்கள். அவர்கள் சம்பந்தப்பட்டவரை முகம்மது அலி ஆண்டாலும் சந்தாசாகிப் ஆண்டாலும் ஒன்று தான் என்பதைக் கிளைவ் அறிந்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கோட்டைக்குள் நுழைந்து நவாப்பின் மாளிகையைக் கைப்பற்றினான். அங்கேயிருந்த பொக்கிஷத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயை, நவாப்பிடம் கொடுத்து வைத்திருந்த வர்த்தகர்களுக்குத் திருப்பிக் கொடுத்தான்.

அன்று மக்களைக் கூட்டி, “முகம்மது அலியின் பெயரால் இந்த ஆற்காட்டைப் பிடித்திருக்கிறேன். இன்று முதல் உங்கள் நவாப் முகம்மது அலி. சந்தா சாகிப் அல்ல. உங்களைக் காக்க வந்திருக்கும் இப்படைக்கு வேண்டிய உணவுகளை நீங்கள் கொடுக்க வேண்டும். கோட்டைச் சவர் பழுது பட்டிருக்கிறது. பழுது பார்க்கக் கொத்தர்களை அனுப்புங்கள்” என்று ஆங்கிலத்தில் கூறி, மொழி பெயர்க்கவும் செய்தான். பிறகு இந்துஸ்தானியிலும் சில வார்த்தைகள் சொன்னான். கடைசியில், ‘லாங் லிவ் தி கிங்” என்று கத்தியை உயர்த்தினான். பிரிட்டிஷ் மன்னனை வணங்கும் முறையில். வெள்ளை சோல்ஜர்கள், ‘லாங் லிவ் தி கிங்” என்ற கூவினார்கள்.

அன்ற இரவு பொக்கிஷப் பெட்டியை திறந்து பார்த்தான். ஐந்து லட்சம் ரூபாய்களைக் கொடுத்துவிட்டதால் இரும்புப் பெட்டி காலியாக இருந்தது. ஆனால் அதைத் தட்டிப் பார்த்த போது உள்ளே ஏதோ ஓசைப்பட்டது. கையால் பெட்டியைத் தடவிப் பார்த்தான். உள்ளே ஓர் ஆணி கையில் தடைப்படவே, “இங்கு எதற்கு ஆணி?” என்று அசக்கினான். அந்தப் பெட்டிக் குள்ளிருந்த சிறு கதவு திறந்தது. உள்ளிருந்து பளீரென மின்னியது விலையுயர்ந்த மகரக் கண்டியொன்று. அதை எடுத்து விளக்கில் பார்த்த கிளைவ், ”ப்யூட்டிஃபூல்” என்று சொல்லிக் கொண்டான். அவன் முகத்தில் இருந்த வியப்பு திடீரென மகிழ்ச்சிக்கு இடம் கொடுத்தது. தி லார்ட் ஹாஸ் பவுண்ட் ஹிஸ்ஜூவல். ஐவில் கிவ் டு தி ஹிண்டு காட். ஹீ ஹாஸ் கிவன் மி, திஸ் டெவில் விக்டரி” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
மகரகண்டியை எடுத்துப் பத்திரப்படுத்தியும் கொண்டான். அந்த விநாடியிலிருந்து கிளைவுக்குப் பிரிட்டிஷ் வெற்றியில் பூரண நம்பிக்கை பிறந்தது.

கிளவை சமர்ப்பித்த ஒரு மகரகண்டி இன்றும் வரதராஜப் பெருமாளின் சிறந்த ஆபரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.!

Previous articleRaja Perigai Part 3 Ch5 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here