Home Historical Novel Raja Perigai Part 3 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

62
0
Raja Perigai Part 3 Ch7 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 3 Ch7 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch7 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 7. இந்த வாயிற்படியைத் தாண்டக் கூடாது!

Raja Perigai Part 3 Ch7 | Raja Perigai | TamilNovel.in

ராபர்ட் கிளைவ் கொடுத்த கடிதத்துடனும் அடிமைப் பெண்ணுடனும் ஸெய்ன்ட் டேவிட் கோட்டையிலிருந்து புறப்பட்டுத் தஞ்சையை அடைந்த விஜயகுமாரன் காலதாமதம் செய்யாமல் பிரதாபசிம்ம மகாராஜாவின் பேட்டியை நாடினான். முன்பு இருமுறை விஜயகுமாரனைச் சந்தித்த அதே ஆலோசனை அறையில் மகாராஜா விஜயகுமாரனைச் சந்தித்தார். அறை வாசலில் அடிமைப் பெண்ணை நிற்க வைத்தவிட்டுத் தான் மட்டும் உள்ளே நுழைந்த விஜயகுமாரன், மன்னருடன் மானாஜி அப்பாவும் டபீர் பண்டிதரும் இருந்ததைக் கவனித்ததும், தனது வருகையின் காரணத்தை மகாராஜா முன்கூட்டியே புரிந்து கொண்டிருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் மூவருக்கும் தலை வணங்கி, தன் கையிலிருந்த கிளைவின் கடிதத்தை எடுத்துப் பிரதாப் சிங்கிடம் நீட்டினான்.

அன்று காலை பிரகதீஸ்வரரைத் தரிசித்துவிட்டு வந்ததால் முகத்தில் விபூதி குங்குமத்துடன் காணப்பட்ட பிரதாப்சிங், விஜயகுமாரன் கடித்தைக் கையில் வாங்கிப் பிரித்து நீண்ட நேரம் படித்தார். மிக மெதுவாகவும் ஆழ்ந்த சிந்தனை முகத்தில் படரவும் பிறகு அந்தக் கடிதத்தைத் தனது தளபதியும் மகாவீரனுமான மானாஜி அப்பாவிடம் நீட்டினார். மானாஜி அப்பா அந்தக் கடிதத்தைப் படித்தவிட்டு டபீர் பண்டிதரிடம் கொடுத்தார். டபீர் பண்டிதர் அதைப் படித்து முடித்த பின்பு மீண்டும் மகாராஜாவிடம் கடிதத்தைச் சமர்ப்பிக்கவே, பிரதாப் சிங்கின் சிந்தனை நிரம்பிய விழிகள் தளபதியையும் வருமான இலாக்கா அமைச்சரையும் நோக்கின, ஏதோ கேள்வி கேட்பனபோல்.

மகாராஜாவின் உள்ளத்தையும் தீட்சண்யமான கண்களில் எழுந்த கேள்விகளையும் புரிந்து கொண்ட மானாஜி அப்பா, “இந்தக் கடிதம் பல புதுப் பிரச்னைகளைக் கிளப்புகிறது” என்று கூறினார் நிதானமாக.

டபீர் பண்டிதர் தமது தலையிலிருந்த பெரிய வட்டத் தலைப்பாகையை இருமுறை பெரிதாக அசைத்து, ”போர் என்றால் பணம் ” என்று சுட்டிக் காட்டினார்.

”ஆம்” என்றார் தஞ்சை மன்னர்.

”மீண்டும் புது வரி விதிக்க வேண்டும். தொடர்ந்த போர்களால் கஜானா நன்றாகத்துடைக்கப்பட்டிருக்கிறது” என்று சுட்டிக் காட்டினார் பண்டிதர்.

”தெரியும் ” என்றார் மகாராஜா.
“ஏற்கனவே வரியால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று சொன்னார் வருமானஅமைச்சர், வரி போட்டுப் பணம் வசூலிப்பது அத்தனை சுலபமல்ல என்பதை அறிவுறுத்த.

அதுவரை பேசாதிருந்த மானாஜி அப்பாவை நோக்கிய பிரதாப்சிங், ‘சேனாபதி ஒன்றும் சொல்லவில்லையே” என்று கேட்டார்.

மானாஜி அப்பாவின் பெரு விழிகள் பிரதாப்சிங்கை உற்று நோக்கின. ”போர் என்றால் பணந்தான். புது வரி கூடத்தான். மக்களுக்குப் பணக்கஷ்டமுந்தான். முடிந்தால் போரைத் தவிர்க்கலாம்” என்ற மானாஜி ‘முடிந்தால்’ என்ற சொல்லைச் சிறிது அழுத்தியே சொன்னார்.

பிரதாப் சிங்கின் விழிகளில் புத்தொளி பிறந்தது. ”அப்படி யானால் கிளைவ் எதிர்பார்க்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டியதுதான் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

ஒரு பக்கம் குஞ்சலம் தொங்கிய மானாஜியின் தலைவட்டாவும் லேசாக அசைந்தது ஆம் என்பதற்கு அறிகுறியாக. மானாஜி மேலும் சொன்னார்:

”அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதுபோல் காப்டன் கிளைவ் ஆற்காட்டைப் பிடித்தால் சந்தாசாகிபின் படைப் பிரிவு ஒன்று திருச்சியிலிருந்து ஆற்காட்டை நோக்கி நகரும். அப்படி நகர்ந்தால் இடையிலுள்ள தஞ்சை அரசு பாதிக்கப்படும். தஞ்சை நகர் பாதிக்கப்படா விட்டாலும் தஞ்சையின் எல்லைகள் பாதிக்கப்படும். தவிர டூப்ளேயும் பிரிட்டிஷ் அதிகாரமும் செல்வாக்கும் ஓங்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். இந்த இரு தேச சக்திகள் உராயும்போது சுதேசி சக்திகள் தாமாகவே இணையும், அப்போது பணம் இருக்கிறதோ இல்லேையாதஞ்சை போரில் ஈடுபடாமல் இருக்க முடியாது.”

பிரதாப்சிங், மானாஜி அப்பாவின் வார்த்தைகளை முழுவதும் ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தமது தலையை நன்றாக அசைத்தார். பிறகு விஜயகுமாரை நோக்கி, ”கிளைவுடன் எத்தனை பெரிய படை செல்கிறது?” என்று வினவினார்.

”மிகச்சிறிய படை” என்று சொன்னான் விஜயகுமாரன்.

”எத்தனை சோல்ஜர்கள்? எத்தனை சிப்பாய்கள்? பீரங்கிகள் எவ்வளவு?” என்று வினவினார் மகாராஜா.

”ஸெயின்ட் டேவிட் கோட்டையிலிருந்து கிளம்பிய போது 130 சோல்ஜர்கள், 300 சிப்பாய்கள், சென்னையில் 80 சோல்ஜர்கள் கிடைப்பார்களாம். பெரிய பீரங்கிகள் இல்லை. பீல்ட் மார்ட்டர்களுடன் செல்லலாம்” என்ற விஜயகுமாரன் பதில் மகாராஜாவை மட்டுமல்ல மானாஜி அப்பாவையும் திகைக்க வைத்தது.

”என்ன மொத்தம் 510 பேருடன் ஆற்காட்டைப் பிடிக்கப் போகிறானாகிளைவ்?” என்று கேட்டார் பிரதாப்சிங்.

”அதற்குமேல் படை கிடையாது” என்று விளக்கினான் விஜயகுமாரன்.

“இது சுத்த பைத்தியக்காரத்தனம். ஆற்காட்டையாவது 510 பேரை வைத்துக் கொண்டு பிடிப்பதாவது?” என்றார் தஞ்சை மன்னர்.

மானாஜி அப்பா உடனடியாகப் பதில் சொல்லவில்லை. பதில் சொன்னபோது சற்றுச் சிந்தனையும் இருந்தது அதில். ”சற்றுப் பொறுத்துப் பார்ப்பது நல்லது” என்றார் மானாஜி.
‘’எதற்கு?” என்று கேட்டார் டபீர் பண்டிதர்.

”போரில் நாம் கலப்பதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஆற்காட்டுப் போர் முடிவைப் பார்ப்போம்’ என்றார் மானாஜி.

”இதில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? 510 பேரும் கிளைவும் ஆற்காட்டில் சமாப்தி” என்று முடிவு கட்டினார் பண்டிதர்.

”நிச்சயமில்லை” என்ற மானாஜி உறுதியுடன் சொன்னார். ”இந்தக் கிளைவ் இருக்கிறானே அவன் சாதாரண சோல்ஜரல்ல. மகாவீரன். நிதானமற்றவனுமல்ல. அவன் திட்டமிட்டுப் போரில் இறங்காது போனாலும் ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம் இருக்கிறது அவனுக்கு. அத்துடன் வீரம் இணையும்போது பலன் கையில் காத்திருக்கிறது. அந்த வாலிபன் போரிடுவதைத் தேவிக் கோட்டையில் பார்த்தேன். அவன் கண்களை நன்றாகப் பார்த்தேன். அவனிடம் ஏதோ அமானுஷ்ய சக்தி இருக்கிறது.”

பிரதாப்சிங் மகாராஜாவும், ”சந்தேகமில்லை” என்ற தளபதியின் சொற்களை ஆமோதித்தார். ‘அப்படியானால் மானாஜி இந்தக் கடிதத்தைப்பற்றி உமது முடிவு என்ன?” என்ற யோசனை கேட்டார்.

”மகாராஜாவுக்குத் தெரியாத யோசனை எதையும் நான் சொல்லப் போவதில்லை. இந்தக் கடிதத்தில் கிளைவ் நமது உதவியைத் தனக்குக் கேட்கவில்லை . முகம்மது அலி பக்கம் நமது பலம் சாய வேண்டுமென்று கேட்கிறான். சமயம் வரும்போது அந்த உறுதியுடன் போரில் இறங்க வேண்டுமென்று
விரும்புகிறான். அந்த நாளும் தூரத்தில் இல்லையென்றும், ஆகவே சீக்கிரம் படை திரட்டுமாறும் யோசனை சொல்கிறான். இது எதையும் நாம் செய்யலாம். சந்தாசாகிப் நம்மிடமிருந்து இருபத்தைந்து மைல் தூரத்தில் திருச்சியிலிருக்கும் போது நமது படை போர் சன்னத்தத்துடன் இருப்பதுதான் முறை. சந்தா சாகிப் நம்மை இதுவரை படுத்தியிருக்கும் பாட்டுக்கு, நமது அரசின்மீது ஆடியிருக்கும் சூறைக்கு, நாம் பதில் கொடுக்க சமயம் இதுதான். ஆகவே படையைத் தயாராக வைத்திருக்கிறேன். ஆனால் மைசூர் ராஜ்யத்தை இந்தப் போரில் இழுக்க வேண்டுமென்கிறானே, அது எப்படி?” என்றார் தஞ்சைதளபதி.

‘’அதற்குக் கிளைவ் காரணம் எழுதியிருக்கிறான்” என்றார் மகாராஜா.
”இந்தப் போரில் இந்து ராஜ்யங்கள் ஒன்றுபட்டால் சந்தா சாகிப்பை ஒடுக்குவது சுலபம் என்பதுதானே?” என்ற வினவினார் மானாஜி.

”ஆம்” என்றார் மகாராஜா.

மானாஜி நகைத்தார் மெல்ல. ”இந்துக்களிடம் உள்ள பிரியமல்ல கிளைவின் யோசனைக்குக் காரணம். ஒரு இனத்தின் மேல் இன்னொரு இனத்தை ஏவப் பார்க்கிறான் கிளைவ்” என்று விளக்கிய மானாஜி, “இருப்பினும் யோசனை நமக்கு அனுகூலம் மகாராஜா. மைசூர் சர்வாதிகாரிக்கும் எழதியனுப்புங்கள்” என்று கூறினார்.

”யாருக்கு? மகாராஜாவுக்கா?”

”இல்லை, இப்பொழுது மகாராஜாவின் பெயரால் ஆட்சி புரியும் தளபதி நஞ்சராஜாவுக்கு. நானும் அவருக்கு எழுதுகிறேன்.”

மானாஜி அப்பாவின் யோசனையை ஏற்ற மகாராஜா, ”சரி, விஜயகுமார் ஏற்பாடுகளைச் செய்கிறோம். ஆனால் தஞ்சைப் போரில் இறங்குவது பிரிட்டிஜ் ஜெயாபஜயத்தைப் பொறுத்தது. அதுவரை நீங்கள் இங்கே தங்கியிருக்கலாம்” என்று கூறினார்.

”இல்லை மகாராஜா, நான் அதிக நாட்கள் தாமதிக்க முடியாது. இன்னொரு அலுவலை நாடி நான் புறப்படவேண்டும்” என்றான்.

”என்ன அலுவல்?” என்று வினவினார் மகாராஜ.
விஜயகுமார் மௌனம் சாதித்ததால் அதற்குமேல் அவனை விசாரிக்க இஷ்டப்படாத மகாராஜா, ”விஜயகுமார்| நீ படை வீட்டில் தங்கியிரு. சீக்கிரம் எனது முடிவைச் சொல்கிறேன்” என்றார்.

“அதற்கு முன்பு ஒரு கடமை இருக்கிறது. கோரிக்கையும் இருக்கிறது” என்ற விஜயகுமாரன் வெளியே சென்று அடிமைப் பெண்ணை அழைத்து வந்தான். “இவளுக்கு நீங்கள் அடைக்கலம் தரவேண்டும்” என்றும் கேட்டான்.

மகாராஜாவும் மானாஜியும் அந்தப் பெண்ணை உற்று நோக்கினார்கள். ”இவளை எங்கோ பார்த்திருக்கிறேன்” என்றார் மகாராஜா.

”எனக்கும் பழகிய முகமாக இருக்கிறது” என்றார் மானாஜி.

‘நான்கூடப் பார்த்திருப்பதாக நினைப்பு” என்று டபீர் பண்டிதரும் அவளை அணுகித் தமது வட்டாவின் குஞ்சலம் அவள் முகத்தில் அடிக்கக் கூர்ந்து நோக்கினார்.

விஜயகுமாரன் சொன்னான்: “இவளை நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஆனால் இவள் தந்தையை நீங்கள் பார்த்திருக்க முடியும்” என்று.

‘யார் இவள் தந்தை?” என்று கேட்டார் மானாஜி சிறிதே சந்தேகப்பட்ட குரலில்.
இங்கு விஜயகுமாரன் பதில் சொல்ல முற்படுவதற்கு முன்பாகவே, ”அதோ, அவனேதான்” என்று மகாராஜா சீறி எழுந்தார் சிங்காதனத்திலிருந்து.

”யார்? யார்?” என்றார் டபீர் பண்டிதர் எதற்கும் அசையாத மகாராஜாவே அசைந்துவிட்டதை நினைத்து வியந்து.

”சந்தா சாகிப்” என்ற மன்னர் குரலில் கடுமை இருந்தது. அதைச் சொல்லி அவர் விஜயகுமாரனைப் பார்த்த பார்வையிலும் சீற்றம் இருந்தது. இதைக் கேட்ட மானாஜி அதிர்ச்சியடையா விட்டாலும் டபீர் அதிர்ச்சியடைந்தார். ”அப்படியானால் இவள் வேவுகாரி. இவனும் அப்படித்தான். இருவரையும் சிறையில் தள்ளுங்கள்” என்று விண்ணப்பித்தார் கிலி நிரம்பிய குரலில்.

விஜயகுமாரன் வெறுப்பும் இகழ்ச்சியும் ததும்பிய பார்வையை பீர் பண்டிதர்மீது வீசினான். அதைத் தொடர்ந்த அவன் சொற்களிலும் இகழ்ச்சியும் வெறுப்பும் இணைந்து கிடந்தன. ”பண்டிதரே நீர் ஒரு அவசர குடுக்கை. இப்படித்தான் ஆரம்பத்தில் அரங்கன் சந்நிதியில் அபாண்ட குற்றம் சாட்டி என்னைப் பிடிக்க உமது வீரர்களை ஏவினீர். அதனால் நான் அரசகுமாரியைக் கவர்ந்து செல்ல வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தினீர். என்ன செய்ய வேண்டும் என்பது மன்னருக்குத் தெரியும். தஞ்சையிடமுள்ள எனது நேசமும் பத்தியும் அவருக்கு தெரியும். தளபதி அவர்களுக்கும் தெரியும், உமக்கும் தெரிந்திருக்க வேண்டும்” என்று பண்டிதரை நோக்கிப் பேசிய விஜயகுமாரன், ”மகாராஜா! இவன் சந்தாசாகிபிடம் சென்றால் கொல்லப்படுவாள். இவளுக்கு அபயம் தேடி அழைத்து வந்திருக்கிறேன். நாடியவர்களைக் கைவிடும் இந்து அரசகுலம் எதுவும் கிடையாது. அதுவும் தஞ்சை மன்னர் குணம் உலகுக்குத் தெரியும். இவள் அரசகுமாரிக்குப் பணிப் பெண்ணாக இருக்கட்டும் சில நாட்கள்” என்று வேண்டினான்.

மகாராஜா சில விநாடிகள் தீர்க்காலோசனையில் இறங்கினார். முடிவில் அந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டு, ”அப்படியே ஆகட்டும் விஜயகுமார். இவளைப் பற்றிய விவரங்களை ஓரளவு நந்தினி சொல்லியிருக்கிறாள். நந்தினியிடம் நீயே இவளை அழைத்துச் செல். ஆனால் என் உத்தரவின்றி நீயோ இவளோ இந்த அரண்மனையை விட்டுப் போகக்கூடாது. இன்னும் பத்து நாட்களில் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகும். அதுவரை பொறுத்திரு” என்றார் முடிவாக.

அதற்குப் பின் விஜயகுமாரன் அடிமைப் பெண்ணை அழைத்துக்கொண்டு அந்தப்புரம் சென்றான். அங்கு நந்தினி தயாராகக் காத்திருந்தாள் அவர்களை எதிர்கொள்ள. விஜயகுமாரன் சொன்னதையெல்லாம் தலைகுனிந்த வண்ணம் நிதானமாகக் கேட்டாள். அடிமைப் பெண்ணையும் அந்தப்புரத்துக்குள் அனுப்பி வைத்தாள். ஆனால் விஜயகுமாரனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள். அவன் அந்தப்பரத்துக்குள் தொடர முற்பட்டபோது, “ஆண்பிள்ளை இந்த வாயிற்படியைத் தாண்டக்கூடாதென்று அரசர் ஆணையிருக்கிறது” என்று அலட் சியமாகச் சொல்லி வாயிற்படியையும் சுட்டிக் காட்டிவிட்டு உள்ளே நடந்து விட்டாள். ஆத்திரத்துடன் உள்ளே நுழைய முயன்ற விஜயகுமாரனைக் காவலர் ஈட்டிகள் இரண்டு வழி மறித்தன.

Previous articleRaja Perigai Part 3 Ch6 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch8 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here