Home Historical Novel Raja Perigai Part 3 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 3 Ch9 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free
Raja Perigai Part 3 Ch9 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch9 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 9. கிணற்று நீர்

Raja Perigai Part 3 Ch9 | Raja Perigai | TamilNovel.in

கண்ணைத் திறந்ததும் கனவு நனவாக, சீற முயன்ற உதடுகள் வெள்ளிக் கிண்ணம் தடுத்ததால் விலகமுடியாது நிற்க, கிண்ணத்திலிருந்து புகுத்தப்பட்ட கற்கண்டு போட்ட பால் வாயில் அமுதமென உட்புக, இவற்றுக்கெல்லாம் காரணமான நந்தினி அருகாமையில் உட்கார்ந்திருந்ததால் அவள் அழகிய தொடையொன்று அவன் இடையின் பக்கத்தில் அழுந்தி இழைய, பாற்கிண்ணத்தைப் பிடித்த அவள் கை அவன் உடலுக்குக் குறுக்கே விழுந்து கிடக்க, ஏதோ மாயலோகத்தில் இருப்பவனைப் போல் பிரமித்துப் படுத்த வண்ணமே பாலை உறிஞ்சி முடித்தான், அதுவரை வீறாப்பிலிருந்த விஜயகுமாரன்.

வேண்டி உள்ளே நுழைய முயன்றபோது அன்று காலை அந்தப்புரத்தில் தடுத்த தூண்டிற் புழுவான அரசகுமாரி இரவில் எதற்காக எதிர்பாராத வண்ணம் தன் அறைக்குள் வந்தாள், பஞ்சணையில் உட்கார்ந்தாள், பாலைப் புகட்டி மயக்குகிறாள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்த விஜயகுமாரன், அரசகுமாரியின் சமீபத்தால் தர்க்கத்தையும் யோசனையையும் கைவிட்டு, காரணம் எதுவாக இருந்தால் என்ன? நந்தினி அவளாக வந்து விட்டாளே’ என்று மனத் திருப்தியடைந்தான். சற்று முன்னிருந்த சீற்றம் எங்கோ பறந்தோடி விட்டதை நினைத்த அந்த வாலிபன், சீற்றத்துக்குப் பெண் நல்ல மருந்து என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

இப்படிப் பல எண்ணங்களுடன் படுத்துக் கிடந்த விஜயகுமாரனை நந்தினி நோக்கினாள், சில விநாடிகள் எதுவும் பேசாமல் பிறகு பஞ்சணையிலிருந்து எழுந்து பால் கிண்ணத்தை அறையின் ஒரு புறத்திலிருந்த சாளரத்தருகே வைத்து விட்டு மீண்டும் திரும்பி வந்தாள். பஞ்சணையில் உட்காராமலே, ”வெகு சீக்கிரம் தூங்கிவிட்டீர்கள்” என்றாள், ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக.

”ஆம்” என்றான் விஜயகுமாரன், அவள் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் தன் பக்கத்தில் பஞ்சணையில் உட்காரவைத்து.

”ஏன், அலுப்பா?” என்று கேட்ட வண்ணம் அவன் இழுப்புக்கு உட்பட்டுப் பஞ்சணையில் உட்கார்ந்தாள் அரசகுமாரி.

”அலுப்புத்தான், உன்னிடம்” என்ற விஜயகுமாரன் கையொன்று அவளைச்சுற்றி வளைக்க முயன்றது.

”கை இருக்கிற இடத்திலேயே இருக்கட்டும்” என்று அடக்க முயன்றாள் அரசகுமாரி.

”ஏனோ?” என்று கேட்ட விஜயகுமாரன் மெள்ளப் புன் முறுவல் செய்தான்.

”அலுப்பு அதிகமாகிவிடும்.”

”என்ன அலுப்பு?”

”என்னிடமுள்ள அலுப்பு.”

”ஆகாது.”

”ஏன் ஆகாது?”

“நீதான் வந்துவிட்டாயே!”

“அதனால்?” ”தடையும் செய்யவில்லையே”

”எதை?”

”இதை?” என்ற சொன்ன விஜயகுமாரன் அவளை நோக்கிப் புரண்டு அவள் இடையை இரு கைகளாலும் வளைத்துப் பிடித்து முகத்தையும் பக்கத்திலிருந்த தொடையில் புதைத்துக் கொண்டான்.

அவன் செய்கை கண்டு நந்தினி மெள்ள நகைத்தாள். ”வீரரே மிக நன்றாயிருக்கிறது” என்று சொன்னாள் நகைப்பின் ஊடே.

”நன்றாயிருக்கிறதா?”

“ஆகா!”

”அப்படியானால் ஆட்சேபணை இல்லையே?”

”எதற்கு?”

”இதற்கு” என்று விஜயகுமாரன் சட்டென்று மல்லாந்து படுத்து அவளைத் தன்னை நோக்கி இறுக்கலானான். திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு அவளை விட்டுத் தலையணையில் தலையைத் திருப்பி வாயிற்படியை நோக்கினான். நோக்கியவன், ‘அப்படியா!” என்று கூறிப் புன்முறுவல் கொண்டான்.

‘’என்ன அப்படியா!” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் நந்தினி. அறைக் கதவு சாத்தியிருக்கிறது.”

”அதனால் என்ன?”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று விஜய குமாரனுக்குப் புரியாததால், “நந்தினி நந்தினி’ என்று உணர்ச்சி பெருக அணைத்து அவளைப் பழையபடி இழுத்து அவள் காதுக்கருகில், “இனி பயமில்லை நந்தினி” என்று கூறினான்.

“ஆம்” என்றாள் அவளும் மிக மெதுவாக.

”நல்ல ஏற்பாடுதான் நந்தினி’ என்று முணுமுணுத்தான் விஜயகுமாரன்.

”எது?” என்று கேட்டாள் நந்தினி உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய வண்ணம்.

”கதவைத் திறந்து வைக்காதது” என்றான் விஜயகுமாரன்.

நந்தினி மெல்ல நகைத்தாள் மிக இன்பமாக, “இன்னொரு ஏற்பாடு உங்களுக்குத் தெரியாது” என்றும் சொன்னாள் ரகசிமாக.

”என்ன ஏற்பாடு நந்தினி?” அவன் இடக் கை அவள் இடையைத் தடவிக் கொண்டிருந்தது.

”கதவுக்கு வெளியே…” மிக ரகசியமாக முணுமுணுத்தாள் நந்தினி.

“வெளியே?”

”அடிமைப் பெண் இருக்கிறாள்.”

இதைக் கேட்டதும் அவன் உணர்ச்சிகள் அறுந்தன. ”ஐயோ” என்று விலக முயன்றான் விஜயகுமாரன்.

அவன் விலக முடியாமல் அவன் மார்புமீது சாய்ந்தாள் நந்தினி. அவள் அழகிய மார்பகம் அவன் மார்புடன் இணைந்து குழைந்தது. ”அஞ்சாதீர்கள். அவள் காவலுக்குத்தான் இருக்கிறாள்” என்று கூறினாள், நந்தினி மிருதுவான குரலில்.

”அவளை நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது நந்தினி” என்றான் விஜயகுமாரன். அவன் குரலில் உண்மை யாகவே பயமிருந்தது. இதை நந்தினி கவனிக்கவே செய்தாள். ”என்ன பயம் அவளிடம்?” என்று கேட்டாள்.

”இவள் எதையும் ஒட்டுக் கேட்பாள்.”

”எதையுமா?”

1 ஆம். பிரிட்டிஷ் கவர்னரின் அந்தரங்க அறையில் ரகசியமாகப் பேசியதை எனக்கும் கிளைவுக்கும் முன்னதாகச் சொன்னவள்.”

”அதனால்…” நந்தினி இழுத்தாள்.

”என்ன ஆனால்…’’ என்று கேட்டான் விஜயகுமாரன் சலிப்புடன்.

“நாம் பேசுவதைக் கேட்டு அவளுக்கு என்ன பயன்?”

“பயனோ இல்லையோ ஒட்டுக் கேட்பது அவள் சுபாவம். அவள் வேவுகாரி” என்று கூறிய விஜயகுமாரன் திடீரென்று நந்தினியைச் சீறிய பார்வையுடன் நோக்கி, “ஆமாம் நந்தினி! காலையில் ஏன் கதவடைத்தாய்? என்னை அந்தப்புரத்துக்குள் வரக்கூடாதென்று ஏன் தடுத்தாய்? ஏதோ அப்படி அரசர் உத்தரவு என்று சொன்னாயே, உனக்கு நான் புதியவன்போல்?” என்று வினவினான்.

நந்தினி சிந்தித்தாள் சில விநாடிகள். பிறகு சொன்னாள்; ”நீங்கள் இந்த அடிமைப் பெண்ணுடன் வந்திருப்பதாக முன்ன தாகவே என் பணிப்பெண்கள் சொன்னார்கள்.”

”அதனால்.” விஜயகுமாரன் கேள்வி வியப்பாக எழுந்தது.
‘நீங்கள் ஏற்கனெவே தேவிக் கோட்டையில் கொள்ளிடத் துக்கு அவளை ஜலக்கிரீடைக்கு அழைத்துச் சென்றிருக் கிறீர்கள்….”

“நந்தினி, அது பொய்யென்பது உனக்குத் தெரியும்.”

”எப்படித் தெரியும்?”

”அப்போது சொல்லியிருக்கிறேன், அதெல்லாம் எனது நண்பன் கிளைவ் செய்த விஷமமென்று.”

”இதிலெல்லாம் ஆண் பிள்ளைகள் சொல்லை நம்பக் கூடாது.” இதைத் திட்டமாகச் சொன்னாள் நந்தினி.

”அப்படியானால் அவளை உன்னுடன் இங்கு எதற்காக அழைத்து வந்தாய்?” என்று வினவினான் விஜயகுமாரன்.

”அவளும்தான் பொறாமைப் படட்டுமே” என்றாள் நந்தினி நகைத்து.

! நந்தினி தன்னைக் கேலி செய்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட விஜயகுமாரன், ‘சரி, அப்படியானால் அவள் நன்றாகப் பொறாமைப் படட்டும்” என்று கூறித் தன் மார்பு மீது தவழ்ந் திருந்த நந்தினியை இருகைகளாலும் இறுகப் பிடித்தான்.

”உஷ் விடுங்கள், வலிக்கிறது” என்றாள். “வலிக்கட்டும்” என்றான் விஜயகுமாரன். ”ஏனோ!” குழைந்தது அரசகுமாரியின் குரல்.
”உனக்கு வலிக்க வலிக்க அவள் நெஞ்சு வலிக்கும் பொறாமையால்.”

”விடுங்கள், அவளுக்கு ஒன்றும் பொறாமையில்லை” ”நீதான் சற்று முன்பு சொன்னாய் பொறாமைப்படுகிறாள் என்று.’’

”உங்களுக்காகச் சொன்னேன்.” ”என்னை இம்சைப்புடுத்த?”

”ஆமாம். சும்மா இருங்கள். சே சே கதவு தாளிட வில்லை”

”அவள்தான் இருக்கிறாளே.”

”யாராவது வந்தால் எச்சரிக்க உள்ளே வருவாள். விடுங்கள் காலம் வரட்டும்.”

”எந்தக் காலம்?”

”திருமணக் காலம்.”

”எப்பொழுது வரும் அது?”

”நீங்கள்தான் சொல்ல வேண்டும். நாளைக்குக் கூட வரலாம், நீங்கள் இஷ்டப்பட்டால்.”

இதைக் கேட்டதும் என்ன காரணத்தாலோ விஜயகுமாரன் கைகள் விலகின, சரேலென்று. அவளைவிட்டுச் சிந்தனை உள்ளே ஒடுவதைக் கண்கள் புலப்படுத்தின. “ஆம் நந்தினி, ஆம். காலம் வர இன்னும் சிறிது காலம் ஆகும். ஆனால் அந்தக் காலம் தூரத்தில் இல்லை” என்று அவன் சொன்னான்.

”என்ன அத்தனை நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

”கிளைவ் சும்மா இருக்கமாட்டான். சீக்கிரம் ஆற்காட்டைப் பிடிப்பான். பிடித்தால் கர்நாடகம் பெரும் போரில் சிக்கும். அப்பொழுது உன் தந்தையும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. தஞ்சையும் அந்தச் சூழலில் சிக்கும். அப்பொழுது அதில் உன் தந்தை அளித்த இந்தப் பட்டாக் கத்தியும் உருவப்படும் என்னால். ஒரு கிராதகன் தலை உருளும். என் சபதம் தீரும். அடுத்த விநாடி உன்னை நோக்கி வருவேன், காற்றிலும் கடுதி” என்ற விஜயகுமாரன், கனவில் பேசுவதுபோல் பேசினான். “ஆம். நிச்சயம். நான் இங்கு வரக் கிளம்பிய போதே வேஜரில் கிளைவ் கிளம்பிவிட்டான் சென்னை நோக்கி. இன்னும் சில நாட்களில் ஆற்காடு அவன் கையில் விழுந்துவிடும். சரி, சரி, உன் தந்தை இஷ்டப்படி பத்து நாள் இங்கு இருக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை அரசகுமாரி.”

”என்ன நிபந்தனை?”

”பத்து நாளும் நீ என்னைச் சந்திக்க வேண்டும்.”

”அழகாயிருக்கிறது நிபந்தனை.”

”அதில் என்ன கஷ்டம்?”

”பெண்கள் கஷ்டம் உங்களுக்குத் தெரியாது.”

“நாம் இருவரும் ஒருவரையொருவர் நேசிப்பது ரகசிய மல்லவே!”

”நேசிப்பது வேறு. ஒவ்வொரு இரவிலும் சந்திப்பது வேறு. அதில் ஆபத்தும் இருக்கிறது. அரண்மனை வம்பு எனும் விபத்தும் இருக்கிறது.”

”யாரால் ஆபத்து?”

”உங்களால், எனக்கு” என்ற அரசகுமாரி சிரித்துவிட்டுப் பஞ்சணையிலிருந்து எழுந்து கொண்டாள். ”பொறுங்கள். இது கிணற்று நீர். வெள்ளம் கொண்டு போகாது” என்று கூறிவிட்டு அவள் சென்றாள்.

விஜயகுமாரன் மகிழ்ச்சி நிரம்பிய எண்ணங்களுடன் அன்று உறங்கினான். அடுத்த நாள் மானாஜியைச் சந்தித்துத் தஞ்சைப் படைகளின் உபதளபதிப் பதவியை ஒப்புக் கொள்வதாகவும் அறிவித்தான்.

‘’இந்தத் திடீர் முடிவுக்கு என்ன காரணம்?” என்றார் மானாஜி.

”உங்கள் உபதளபதியாக, தூதனாக நான் இன்னும் பத்து நாள் கழித்துப் புறப்படப் போகிறேன்” என்றான் விஜயகுமாரன்.

”எங்கு?”

”கிளைவ் இருக்குமிடத்திற்கு.’’

”கிளைவ் ஆற்காட்டைப் பிடிப்பானென்பது என்ன நிச்சயம்? தஞ்சையும் போரில் இறங்கும் என்பதுதான் என்ன நிச்சயம்?”

”இரண்டும் நிச்சயம்.”

”ஜோஸ்யமா?”

“ஆம். என் ஜோஸ்யம்” என்றான் விஜயகுமாரன். பத்து நாளில் அவன் ஜோஸ்யம் பலிக்கவே செய்தது.

Previous articleRaja Perigai Part 3 Ch8 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch10 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here