Home Kabadapuram Read Kabadapuram ch 22 Na Parthasarathy

Read Kabadapuram ch 22 Na Parthasarathy

138
0
kabadapuram,kabadapuram book,kabadapuram tamil novel,kabadapuram book pdf,kabadapuram novel,kabadapuram tamil novel,kapadapuram novel download pdf,kapadapuram novel download free,
Read Kabadapuram Ch 22 Free, Kabadapuram is a historical novel. Kabadapuram audiobook, Kabadapuram pdf kabadapuram,kabadapuram book,

Read Kabadapuram ch 22 Na Parthasarathy

கபாடபுரம்

அத்தியாயம் 22 : மொழி காப்பாற்றியது

Read Kabadapuram ch 22 Na Parthasarathy

கப்பலைச் சூழ்ந்து கொண்டவர்களோ இளையபாண்டியன் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகச் சோதனை செய்தனர். வலிய எயினனின் பெருந்தன்மையைப் புகழ்ந்து கூறிய இவர்களது சொற்களினால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. தாங்களிருவரும், எந்தவிதமான அரச தந்திரத்திலும் அக்கறையில்லாத வெறும் யாத்திரீகர்களே என்பதை இவர்கள் நிபிக்க முயன்றதிலும் அவர்கள் மனநிறைவு அடைந்துவிட்டதாகத் தெரியவில்லை. அரசியல் உறவுகளில் சந்தேகம் கொண்டவர்களுக்கே உரிய பேய்ப் பிடிவாதத்தோடு சாரகுமாரனிடம் உரையாடலைத் தொடங்கித் தொடர்ந்தார்கள் அவர்கள்.

“எயினர் தீவிலேயே உங்களை வியக்கச் செய்த இடம் கலஞ்செய் நீர்க்களமாகத்தான் இருக்கும். சிறிதும் ஒளிவு மறைவின்றி அதனை உங்களுக்குச் சுற்றிக் காண்பித்ததற்காகத்தான் வலிய எயினரை நீங்கள் மனமாரப் புகழுகிறீர்கள் பொதுவாக யாத்திரீகர்களுக்குத் தங்களுடைய பாதுகாப்புப் படைக் கோட்டங்களைச் சுற்றிக் காண்பிக்க யாரும் துணியமாட்டார்கள். வெள்ளை உள்ளமும், பரந்த நல்லெண்ணமும் உள்ள வலிய எயின மன்னரைப் போன்றவர்கள் சூதுவாது அறியாதவர்களாகையினால் யாருக்கும் எதையும் மறைப்பதில்லை” என்று கூறிவிட்டு உடனே சாரகுமாரனின் முகத்திலும் கண்களிலும் பிரதிபலிக்கும் உணர்ச்சிகளைத் தேடுபவன்போலக் கூர்ந்து நோக்கினான் வந்தவர்களில் ஒருவன்.

“தீவு தீவாகச் சுற்றித் திரியும் எங்களை ஒத்தவர்களுக்கு எந்தப் புதிய பொருளைப் பார்த்தாலும் வியப்புத்தான் ஐயா! ஆனால் அந்த வியப்பும், விந்தையும், அடுத்த புதிய பொருளைப் பார்க்கிறவரைதான் எங்கள் மனத்திலே நிலைத்திருக்கும். ஒவ்வொரு மலராகத் தேடிப்பறந்து திரிந்து தேனுண்ணும் வண்டுகளைப்போல் அனுபவங்களிலே மகிழ்ச்சிகொள்ள அலைபவர்கள் நாங்கள் சொல்லப்போனால் எயினர் தீவிலே நாத கம்பீரம் என்ற அழகிய அருவியும் ஆறும் எங்களைக் கவர்ந்த அளவுகூட கலஞ்செய் நீர்க்களமும், கப்பல் கட்டும் தொழில் துணுக்கங்களும், எங்களைக் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்”

என முகத்தில் எந்தவிதமான உணர்வுகளுமில்லாத ஒரு பாமரனைப்போல் இளைய பாண்டியன் மறுமொழி கூறினான். அவ்வளவில் கப்பலை வழிமறித்தவர்களுக்குச் சந்தேகம் படிப்படியாகக் குறைந்திருக்கவேண்டும். சிறிது நேரம் வேறு ஏதேதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றுக்கொண்டு அவர்கள் போய்விட்டார்கள். போகும்போது சாரகுமாரனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தவன் ஒர் எச்சரிக்கையும் செய்துவிட்டுப் போனான்:

“உங்கள் யாத்திரையை இந்தக் கடற்பகுதிகளில் மிகவும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும் செய்யவேண்டும். இங்கே இந்தத் தென்கடற் பகுதியில் கொடுமையான பழக்க வழக்கங்களையுடைய எத்தனை எத்தனையோ தீவுகள் இருக்கின்றன. யாத்திரை செய்பவர்களையும் அரசதந்திர நோக்கத்தோடு சுற்றுப்பயணம் செய்பவர்களையும்கூடத் தனித் தனியே வேறுபாடு கண்டு பிரித்துணரும் ஆற்றல் குறைந்தவர்களின் முன்னால்கூட நீங்கள் போய் நிற்க நேரிடலாம்.”

இந்த எச்சரிக்கையை அவன் எதற்காகச் செய்துவிட்டுப் போனான் என்பதை இளையபாண்டியனால் விரைந்து புரிந்து கொள்ள முடியவில்லையாயினும் இதில் ஏதோ உட்பொருள் இருப்பதாக உய்த்துணர மட்டும் முடிந்தது. துன்பமும் சோதனைகளும் வரும்போது மனித மனத்திற்கு இயல்பாகவே முன்னெச்சரிக்கையும் என்ன நேரப்போகிறது என்பதை உணரும் முனைப்பும் வருவதுண்டு. மழை பெய்யுமுன் இயல்பாகவே பூமியில் கிளரும் மண் வாசனையைப்போல் தற்செயலாக மனித இதயத்தில் நேரும் முன்னறிவிப்பு இது. கடலில் அவர்கள்கலத்தை வளைத்துக்கொண்டு தடுத்த கப்பல்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. விரைந்து நிகழ்ந்த ஆரவாரமும் அதைவிட விரைந்து நிகழ்ந்துவிட்ட தனிமையும் மாயங்கள் போல் தோன்றின.

இளையபாண்டியன், அதுவரை மெளனமாகவும், இனி என்னென்ன நேருமோ என்ற திகைப்புடனும் தன்னருகில் நின்றுகொண்டிருந்த முடிநாகனை நோக்கிக் கூறலானான்

“இந்தச் சோதனையில் தப்பிவிட்டோம். ஆனால் இதிலிருந்து தப்பிவிட்டதற்காக மகிழ்வதற்குக்கூட நேரமும், அமைதியும் இன்றி அடுத்த சோதனையை எதிர்பார்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம் நாம். சில காரியங்களில் வென்றுவிட்டதற்காகவோ, நிறைவு பெற்றுவிட்டதற்காகவோ, அந்த வெற்றியோ, நிறைவோ, நிகழ்ந்து முடிந்துவிட்டதாக நாம் நினைத்த மறுகணமே உடன் விரைந்து மகிழ்வதோ, பெருமிதப்படுவதோகூட அரச தந்திரமிாகாது. நம்முடைய மகிழ்ச்சியும் புறத்தார் அறிய வெளிப்படலாகாது. நம்முடைய துயரமும் புறத்தார் அறிய வெளிப்படலாகாது. சாதுரியத்தின் கனிந்த நிலை நமது உணர்ச்சிகளின் பலங்களையும், பலவீனங்களையும், பிறர் கணிக்கவும் முடியாமல் நம்மை அநுமானத்துக்கும் அப்பாற் பட்டவர்களாக வைத்துக் கொள்ளுவதுதான்.”

“அப்படி நாம் இருக்கும்போது நம்மை உய்த்துணர முயல்கிறார்கள் இங்கிருப்பவர்கள்! அப்படியில்லாமல் நாமே பலவீனமாகவும் நம்மைப் பிறர் உணரமுடிந்த வெளிப்படையான நிலையிலும் இருந்துவிட்டோமோ இன்னும் துன்பம் தான்! ஏன்தான் இந்தத் தீவுகளில் வசிக்கும் சிற்றரசர்கள் இவ்வளவு சந்தேகப்படுகிறார்களோ, தெரியவில்லையே?” என்று வினாவினான் முடிநாகன். இளைய பாண்டியன் சில விநாடிகள் அவனுக்கு மறுமொழி கூறவும் தோன்றாமல் ஏதோ சிந்தனைவயப்பட்டவனாக இருந்தான். பின்பு முடிநாகனை நோக்கிக் கூறத் தொடங்கினான்.

“நேருக்கு நேர் நம்மை யாரென்று உறைத்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளத் தயங்கி இப்படித்தான் வலிய எயினன் நம்மை இனங்கண்டுகொள்ள முயல்வான் என்ற ஐயப்பாடும் அநுமானமும் என் மனத்தில் முன்பே உண்டாகிவிட்டன. அதனால்தான் நான் முன்னெச்சரிக்கை அடைய முடிந்தது. விரைந்து மகிழ்ந்திடுதலும், விரைந்து வெகுளியடைதலும் அரசர்குடிக்கு ஆகாத செயல்கள். வீரமரபினராகிய அரசர் குடிக்குச் சிறப்பாக உரிய தன்மானமும், கோபமும் நமக்கு இருக்கின்றனவா, இல்லையா, என்பதைத்தான் வலிய எயினன் சோதித்து அறிந்துகொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறான். சொற்களின் மூலம் மனிதர்களை அறிந்துகொள்ள முயல்கிறவர்களைவிட உணர்ச்சிகளின் மூலமே மனிதர்களை அநுமானம் செய்கிறவர்களிடம் மிக மிக விழிப்பாக இருக்க வேண்டும்.”

“உண்மைதான் இளையபாண்டியரே! சிந்தனையின் மூலமாகவும், சொற்களின் மூலமாகவும், மனிதர்களை அறிந்து கொள்கிறவர்களைவிட உணர்ச்சி பாவங்களின் மூலம் உய்த்துணர முயல்கிறவர்கள் குழப்பங்களையும் பயங்கர விளைவுகளையும் உண்டாக்கிவிட வல்லவர்கள். எதற்கும் நாம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.”

“இவ்வளவில் அவர்களுடைய உரையாடல் நின்றது. கப்பல் ஊழியர்களைக் கூவி அழைத்து மேலே பயணத்தைத் தொடரவேண்டிக் கட்டளைகளை இட்டனர். சிறிது நேரத்தில் பயணம் தொடர்ந்தது. மேலே செல்லச் செல்ல அலைகள் சுழன்று சுழன்று புரட்டிக்கொண்டு வந்தன. அப்பகுதியில் இரண்டு மூன்று சிறுசிறு தீவுகளால் கடல் துணிக்கவும், பிரிக்கவும் பட்டிருந்ததனால் காற்றும், அலைகளும் அவர்களுடைய கப்பலை ஆட்டிவைக்கத் தொடங்கின. அந்த நேரத்தில் அவ்வளவு பயங்கரமான அலைகளுக்கும் காற்றுக்கும், இடையே பயணம் செய்வதைவிட அருகிலுள்ள தீவு ஏதாவது ஒன்றில் தங்கிவிட்டு மறுநாள் காலையின் பயணத்தைத் தொடர்வதுதான் பொருத்தமாக இருக்கும்போலத் தோன்றியது. இரவுநேரத்தில் இதுபோல் தீவுகளால் பிரிக்கப்பட்ட கடல் வழிகளில் காற்றுடன் அலையும் கொந்தளிப்பும் மிகுதியாயிருப்பதும் பகலில் சிறிது அமைதியடைவதும் வழக்கமென்று கப்பல் உழியர்களும் கூறவே தங்கிச் செல்வது என்ற முடிவை இளையபாண்டியன் உறுதிப்படுத்திக் கொண்டான்.

அதே நேரத்தில் முன்பின் தெரியாத ஒரு புதிய தீவில் இரவுநேரத்தில் போய்க் கரையிறங்குவதால் எற்படக்கூடிய விளைவுகளைப்பற்றியும் அவன் சிந்திக்கத் தவறவில்லை. இத்தகைய தீவுகளில் மனித இயல்பின் மேன்மையான நாகரிகங்களும், கருணை முறைகளும் பரவவில்லை என்பதாலும், தற்காப்பு என்ற ஒரே எண்ணத்தின் அடிப்படையில் புதியவர்கள் எவரைக் கண்டாலும் துன்புறுத்துவது இயல்பாகி விட்டமையாலும் தயங்கவேண்டியிருந்தது. அதே சமயத்தில் கரையேறத் தயங்கிக் கடலிலேயே பயணத்தைத் தொடர்வதிலும் துன்பங்கள் இருந்தன. துணிந்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலையில் இளைய பாண்டியனும், முடிநாகனும் இருந்தனர். கப்பல் போய்க்கொண்டிருந்த வழியிலோ சுற்றும் முற்றும் கடலிடை அங்கங்கே கரிய பெரிய பாறைகளும் சிறு சிறு குன்றுகளும் தென்பட்டன. நடுவாகச் செல்ல இருந்த வழியோ குறுகியது. காற்று அதிகமாக அதிகமாகக் கலம் அலைக்கழிக்கப்பட்டது. எந்த இடத்தில் பாறைகளில் மோதுண்டு சிதற நேரிடுமே என்ற பயமும் அதிகமாகியது. என்ன துன்பம் வருவதாயினும், அருவிலுள்ள தீவில் கரையிறங்குவது என்ற முடிவிற்கு வந்தார்கள் அவர்கள். அப்பகுதியிலுள்ள தீவுகள் மேடாகவும், பாறைகள் நிறைந்த பாங்கினதாகவும் கடல் உட்குழிந்து ஆழமானதாகவும் அமைந்திருந்ததனால் கரையோரமாக எந்த இடத்தில் கலத்தை ஒதுக்கிக்கொண்டு சென்றாலும் – குன்றுகளில் மோதாமல் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு கரைசேருவது அரிதாயிருக்கும் போலத் தோன்றியது.

ஆயினும் திறமையாகக் கலத்தை ஒதுக்கிக் கரைசேர முயன்றார்கள். கரை நெருங்க நெருங்க அந்தக் கரைப்பகுதிப் பாறைகளிலும் குன்றுகளிலும் மங்கலாகத் தெரிந்த காட்சிகள் அவர்களைத் திடுக்கிடச் செய்வனவாக இருந்தன. எந்தத் தீவின் பெயரைச் சொன்னால் அழுத பிள்ளைகளும் வாய் மூடுமோ அத்தகைய குருரமாக தீவை அணுகியிருந்தார்கள் அவர்கள். ஆயினும் அவன் அஞ்சவில்லை. தன்னிடமிருந்த மொழியறிவு தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு கரையிறங்குவதற்கான ஏற்பாடுகளிலே தயங்காமல் ஈடுபட்டான் அவன்.

Source

Previous articleRead Kabadapuram ch 21 Na Parthasarathy
Next articleRead Kabadapuram ch 23 Na Parthasarathy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here