Home Kabadapuram Read Kabadapuram ch 23 Na Parthasarathy

Read Kabadapuram ch 23 Na Parthasarathy

174
0
kabadapuram,kabadapuram book,kabadapuram tamil novel,kabadapuram book pdf,kabadapuram novel,kabadapuram tamil novel,kapadapuram novel download pdf,kapadapuram novel download free,
Read Kabadapuram Ch 23 Free, Kabadapuram is a historical novel. Kabadapuram audiobook, Kabadapuram pdf kabadapuram,kabadapuram book,

Read Kabadapuram ch 23 Na Parthasarathy

கபாடபுரம்

அத்தியாயம் 23 : கொடுந்தீவுக் கொலை மறவர்

Read Kabadapuram ch 23 Na Parthasarathy

பயப்படாதே முடிநாகா கடலில் அரக்கனின் வாய்ப் பற்களைப்போல் துருத்திக் கொண்டிருக்கும் இந்தப் பாறைகளைவிடக் கொடுந்தீவின் கொலை மறவர்கள் கெட்டவர்களாக இருந்துவிடமாட்டார்கள். எவ்வளவுதான் கொடியவர்களாக இருந்தாலும் மனிதர்களுக்குள்ளே இதயம் என்று ஒன்று இருக்கிறது. பாறைகளுக்குள்ளே அந்த இதயம் நிச்சயமாக இருக்கமுடியாது. பாறைகள் கல்லால் ஆகியவை என்பதை நினைவு வைத்துக்கொள்!” என்று காரண காரியத்தோடு சாரகுமாரன் ஆறுதல் கூறிய பின்பே முடிநாகன் தைரியமாக அவனோடு புறப்பட்டான். மனிதர்களின் குருதி பட்டுப் பட்டுச் சிவப்பேறிப் போயின போன்ற அந்தத் தீவின் பாறைகளில் தொற்றித் தொற்றி ஏறித் தட்டுத் தடுமாறிச் செல்லவேண்டியிருந்தது.

தான் பாறைகளில் ஏறும்போது ஒர் இடத்தில் காலடியில் ஏதோ இடறி நொறுங்கிய வேளையில் பீதியோடு கீழே குனிந்து அப்படி இடறி நொறுங்கிய பொருளைத் துக்கிப் பார்த்த முடிநாகனுக்குக் கைகள் நடுங்கின. அது ஒரு மரித்த மனிதனின் எலும்புக்கூடு. வாயில் சொற்கள் வராமல் பேசத் தடுமாறிய குரலில் ‘ஊ ஊ’ என்று காற்றாக வெளிப்படும் பீதி நிறைந்த குரலில் இளைய பாண்டியனுக்கு அந்த எலும்புக்கூட்டைக் காண்பித்தான் முடிநாகன்.

அதைக்கண்ட இளையபாண்டியனுக்கும் நெஞ்சம் ஒரு கணம் துணுக்குற்றது என்றாலும் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு,

“தீவுக்குள் அடியெடுத்து வைக்கும்போதே இப்படித் தெரியக்கூடாதது தெரிந்து கெட்ட சகுனம் ஆகிறதே என்று எண்ணாதே! நிமித்தங்கள் எல்லாம் நம்முடைய மனோபாவனைக்கு ஏற்றாற்போலத்தான் நமக்குத் தோன்றும். நிமித்தங்கள் நல்லவையாயிருந்தால் விளைவுகளும் நல்லவையாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அதேபோல் நிமித்தங்கள் தீயவையாயிருந்தால் விளைவுகளும் தீயவையாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நிமித்தங்கள் யாவும் நமது பாவனையின் பிரதிபிம்பங்களாகவே இருக்கும். கவலைப்படாமல் தயங்காமல் முன்னேறலாம் வா!” என்று முடிநாகனுக்கு இளையபாண்டியன் உறுதிகூறியும் அவனுடைய பயமும் நடுக்கமும் குறையவில்லை.

குருதி முட்களைப்போல் காலில் கடுமையாகக் குத்தும் சிவந்த பாறைகளிலும், கற்களிலும் மிதித்து மிதித்து நடந்தார்கள் அவர்கள். தொலைவில் ஒரு காட்சி தெரிந்தது. கூட்டமாக அந்தத் தீவின் மனிதர்கள் ஒரு சிவப்பு மேடையில் எரிந்துகொண்டிருந்த தீயைச்சுற்றிக் கூத்தாடிக் கொண்டே வெறிமிகுந்த குரலில் ஏதோ பாடிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குரலிலும் கூத்திலும் பண்படையாத காட்டுக் குரூரம் மட்டுமே நிறைந்திருந்தது. தொலைவிலிருந்து அதைக் கேட்கும்போதே அருகில் செல்ல அஞ்சி நடுங்கி ஓடிவிட வேண்டும் போலிருந்தது. பண்படாமல் கரடு முரடாக இருந்த அந்தத் தீவின் காலைக்குத்தும் கற்களைப் போல் கேட்கும் செவிகளைக் குத்திக் கிழிப்பது போலிருந்தது அந்த ஒசை. அருகில் நெருங்கப் பூதாகாரமான மனிதர்களின் தடித்த உருவங்கள் கபாலங்களை அணிந்து இடுகாட்டுப் பேய்க் கணங்கள்போல் குதிக்கும் காட்சி தெளிவாகத் தெரியலாயிற்று. அவர்களோ வெறிமயமான கூத்தில் வட்டவடிவமாகக் கைகோத்து மேடையில் எரியும் தீயைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்ததனால் இவர்கள் இருவரும் வந்ததைக் கவனித்ததாகவே தெரியவில்லை.

இளையபாண்டியன் தைரியமாகவும், துணிவாகவும், முன்னேறிக்கொண்டிருந்தாலும் அவனைப் பின்தொடர்ந்து சென்ற முடிநாகன் அதே வேகத்தில் பின் தொடராமல் தயங்கித் தயங்கித்தான் நடந்தான். இந்த நிலையைக் கவனித்து உணர்ந்து கொண்ட இளையபாண்டியன் முடிநாகனைத் துணிவூட்டுவதற்காகவும், பாறைக்கற்களில் நடந்து நடந்து இசிவெடுத்து வலிக்கும் கால்களுக்கு ஓய்வளிப்பதற்காகவும் ஒரு காரியம் செய்தான். அந்த இடத்தினருகே இலைகளே இல்லாமல் கள்ளிக்கொடிபோல் படர்ந்து அடர்ந்து உயரமாகச் செழித்திருந்த ஒரு புதரருகே முடிநாகனையும் அமரச் சொல்லிக் கையால் சைகை செய்துவிட்டுத் தானும் அமர்ந்தான். அருகில் அமர்ந்து சுத்தமான காற்றைக்கூடச் சுவாசிக்க முடியாமல் அந்தக் கொடிக்கள்ளியைச் சுற்றிப் பொறுக்க இயலாத துர்நாற்றம் வீசியது. அவர்கள் அடக்கி முடக்கி மறைவாக உட்கார முயன்றபோது அந்தக் கொடிக் கள்ளியின் பசிய காம்புகள் முறிந்து பலபலவென்று பாலும் கொட்டி நனைந்தது. அந்தப் பால்பட்ட இடத்தில் தோல் தீய்ந்து புண்படரும். ஆகையால் இருவரும் தங்களால் இயன்றவரை அந்தக் கள்ளிப்பால் மேலே சொட்டாமல் தப்ப முயன்றார்கள். அவர்கள் முயற்சியினை மீறியும் சில இடங்களில் பால்பட்டு வேதனையளித்தது.

“செடிகள், கொடிகள், தரை எல்லாமே இங்கிருக்கிற மனிதர்களைப்போலவே வருகிறவர்களைத் துன்புறுத்தும் ஆற்றலில் சிறிதுகூடக் குறையாமல் இருக்கின்றன’ என்று இளைய பாண்டியனின் காதருகே முணுமுணுத்தான் முடிநாகன்.

“இவையெல்லாம் நம்மால் நிச்சயமாக மாற்றவோ, வேறாக்கவோ, திருத்தவோ முடியாது முடிநாகா ஆனால் மனிதர்களை மாற்றவும், வேறாக்கவும், திருத்தவும் முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நீ ஒரு போதும் இழந்துவிடக் கூடாது காரணம், நமக்குள் துடித்துக் கொண்டிருப்பது போல் அவர்களுக்குள்ளும் ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்” என்று இளையபாண்டியன் மெல்லிய குரலில் தன்னம்பிக்கையோடு மறுமொழி கூறியபோதும் முடிநாகனுக்கு அதில் அவ்வளவாக நம்பிக்கை பிறக்க வில்லை.

அவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென்று அந்த வெறிக்குரலும் மனிதர்கள் திமுதிமுவென்று ஓடிவருகிற காலடி ஒசையும் தங்கள் புறமாகத் திரும்பினாற்போல் தோன்றவே அவர்கள் திடுக்கிட்டு நிமிர்ந்தனர். ஆம் அவர்கள் இருவரும் அந்தப் புதரடியில் அமர்ந்திருப்பதை யாரோ ஒருவன் முதலில் பார்க்க நேர்ந்து பின் அவன் உடனே மற்றவர்களுக்கும் செல்லியிருக்க வேண்டு மென்று தோன்றியது. ஏதோ வேட்டையாடுகிறவர்கள் தங்களுடைய ஆற்றலைவிட எளிய விலங்குகளுக்கு விரித்த வலையில் அவை தவறாமல் விழுந்து சிக்கியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியோடு ஓடி வருவதுபோல் இருந்தது அவர்கள் வரவு. எளிய விலங்குகளை வலிய விலங்குகள் இரைகண்டு மகிழ்ந்து தாவிப் பாய்ந்து வருவதுபோல் ஒர் வெறியை இவர்களுடைய பாய்தலில் அவர்கள் கண்டார்கள்.

இளையபாண்டியன் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு புதரிலிருந்து எழுந்து நின்றதோடு தன்னைப் பின்தொடர்ந்து உடன் நிற்குமாறு முடிநாகனுக்கும் குறிப்பினால் உணர்த்தினான். கபால மலைகளோடும் புலிப்பற்கள் போன்ற கோரப் பற்களைத் திறந்த வாயுடனும் அவர்கள் ஓடிவந்து சூழ்ந்து கொண்ட காட்சி மிகவும் குரூரமாக இருந்தது. வலையிலகப்பட்ட மீன்களைப்போல் இளையபாண்டியனும், முடிநாகனும் அந்தப் பைசாசங்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டனர். திரிசூலங்களையும், வேல்களையும், கொலைக்கருவிகளையும் ஓங்கிக்கொண்டு அந்தக் கொடிய கூட்டம் தங்கள்மேல் பாய்ந்தபோது அந்தத் தீவில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தபோது தன் காலில் இடறிய எலும்புக்கூடு நினைவிற்கு வரப்பெற்றவனாக நடுங்கினான் முடிநாகன். இளைய பாண்டியனோ சிறிதும் அஞ்சாதவனாக எதோ ஒரு நம்பிக்கையினால் திடம் கொண்டவனைப்போல் அவர்களிடையே இருந்தான். அவர்கள் இளையபாண்டியனையும், முடிநாகனையும், வேட்டையாடிய விலங்குகளையோ, வலையில் விழுந்துவிட்ட மீன்களையோ இழுத்துச் செல்வதுபோலத் தங்கள் தலைவனிடம் இழுத்துச் சென்றனர்.

சுற்றிலும் கபாலங்கள் அடுக்கிய குருதிநிறப் பாறை ஒன்றில் முரட்டுச் சிங்கத்தைப்போல் கம்பீரமாக அமர்ந்திருந்தான் கொடுந்தீவின் தலைவன். அவனருகிலே நெருங்கி நிற்கவும் முடியாமல் முடைநாற்றமும், மாமிச வாடையும் வீசியது. அவனுடைய கண்கள் நெருப்புக் கோளங்களைப்போல் சிவந்து உருண்டன. மீசையோடு கூடிய அந்த முகம் பயமுறுத்துவதாக இருந்தது. இளைய பாண்டியனையும், முடிநாகனையும் ஏதோ குற்றம் செய்தவர்களை விசாரிக்கக் கொண்டுபோய் நிறுத்துவதுபோல் தலைவன் முன் நிறுத்தினார்கள் கொலைமறவர்கள்.

அதற்கு முன்பு சிறிது நேரம்வரை வெறிக்குரல்களும் ஆரவாரமுமாக இருந்த அந்தக் கூட்டத்தினர்தங்கள் தலைவனுக்கு முன்னால் வந்ததும் ஏதோ கோவிலுக்கு முன் தொழ வந்தவர்கள் பயபக்தியினால் கட்டுண்டு நிற்பதுபோல் அமைதியடைந்து நின்றார்கள். இளைய பாண்டியன் அந்த நிலையில் மிகவும் சமயோசிதமான ஒரு காரியத்தைச் செய்தான். கொலை மறவனுடைய தலைவனிடம் அவர்களுடைய மொழியில் நலம் விசாரித்தான். அந்தத் தலைவனைச் சந்திக்க நேர்ந்ததற்காகத் தான் பெரிதும் மகிழ்வதாகவும் அந்தத் தீவைக்காணக் கொடுத்துவைத்ததற்காகக் களிப்பதாகவும் அவர்களுடைய மொழியில் தன்னுடைய இனிய குரலில் இனிய யாழ் மிழற்றுவதுபோல் இளைய பாண்டியன் பேசத் தொடங்கியதும் கொலை மறவர் தலைவனின் குரூரமான முகத்தில் சிறிதே மலர்ச்சி பிறந்தது. கண்களில் ஒளி மின்னியது. அந்த நல்ல விளைவை உடனே மேலும் மேலும் வளர்த்து உறுதி செய்துகொள்ள விரும்புகிறவனைப்போலக் கொலை மறவர் தலைவனைப் புகழ்ந்துகூறும் பொருளமைந்த பாடல் ஒன்றை அமைத்துத் தன்னுடைய அரிய இனிய குரலில் பாடவும் தொடங்கிவிட்டான் சாரகுமாரன்.

அந்தக் குரலும், அந்த இசையமைதியும், அந்தப் பாடலும் அவர்களை வசியம் செய்வதுபோல் மயக்கின. கொலை மறவர் தலைவன் சிறு குழந்தைபோல் உற்சாகமும் மயக்கமும் அடைந்தான். இசையில் தான் புகழப்படுவதைக் கேட்டு அவன் குழைந்து போனான். அப்படி இசையை அவனோ அல்லது அவனைச் சேர்ந்தவர்களோ அதுவரை கேட்டதே இல்லை. கல்லைப்போல் இறுகிக் கடினமாயிருந்த அவனுடைய ஈவு இரக்கமற்ற மனத்தில் அந்த இசையும், புகழ்ச்சியும், தன் மொழியில் எதிரி பேசக் கேட்ட வியப்பும் மாபெரும் மாறுதல்களை விளைவித்திருந்தன. அடுத்தகணம் அவன் செய்த காரியம் சுற்றியிருந்த எல்லாக் கொலை மறவர்களையும் வியப்பிலாழ்த்தியது. தங்கள் தலைவனிடம் இப்படி ஒரு பெரிய மாறுதலை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

Source

Previous articleRead Kabadapuram ch 22 Na Parthasarathy
Next articleRead Kabadapuram ch 24 Na Parthasarathy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here