Home Kabadapuram Read Kabadapuram ch 28 Na Parthasarathy

Read Kabadapuram ch 28 Na Parthasarathy

117
0
kabadapuram,kabadapuram book,kabadapuram tamil novel,kabadapuram book pdf,kabadapuram novel,kabadapuram tamil novel,kapadapuram novel download pdf,kapadapuram novel download free,
Read Kabadapuram Ch 28 Free, Kabadapuram is a historical novel. Kabadapuram audiobook, Kabadapuram pdf kabadapuram,kabadapuram book,

Read Kabadapuram ch 28 Na Parthasarathy

கபாடபுரம்

அத்தியாயம் 28 : கலைமானும் அரிமாவும்

Read Kabadapuram ch 28 Na Parthasarathy

பெரியபாண்டியருடைய பிடிவாதத்தைச் சிகண்டியா சிரியருடைய சொற்களால் தகர்க்கமுடியவில்லை. கலை காரணமாக எற்படும் ஆர்வத்தையும், அரசியல் காரணமாக ஏற்படும் அக்கறையையும், பகுத்து உணரமுடியாத அளவிற்குச் சிகண்டியாசிரியருடைய மதிமழுங்கியிருக்கவில்லை. நானும் அந்தப் பாண்மகளின் இன்னிசையைக் கேட்க ஆசைப்படுகிறேன் என்று பெரியபாண்டியர் கூறியதைச் சிகண்டியார் நம்பவில்லை. அவருடைய வேண்டுகோளில் இயற்கையான ஆர்வமோ, கனிவோ இல்லாததை அவர் முன்பே கூர்ந்து கவனித்து உணர்ந்துவிட்டார். அந்த வேண்டுகோளில் யாருமே விரும்பத் தக்கதல்லாத ஒரு கடுமையான உள்நோக்கம் இருப்பதுபோல் சிகண்டியாசிரியருக்குத் தோன்றியது. அதற்கு இணங்கவும் மனமின்றி அதை மறுக்கவும் இயலாத வாராய்க் குழப்பமானதொரு மனநிலையில்தான் அப்போது அவர் இருந்தார்.

கண்ணுக்கினியாளைப் பற்றிப் பெரியபாண்டியரிடம் எதுவும் கூற நேர்ந்தால் அவருக்குச் சிறிதும் சந்தேகம் வராதபடி கூறுமாறு இளைய பாண்டியன் தன்னிடம் வேண்டிக் கொண்டிருந்ததை இப்போது நினைவுகூர்ந்தார் சிகண்டியாசிரியர். சிறிய காரணத்துக்காகவோ, பெரிய காரணத்துக்காகவோ எதற்குமே அவர் பொய் சொல்லிப் பழகியதில்லை. பொய் சொல்லக் கூடாதென்ற நோன்பை அழித்துக் கொள்ளக் காரணம் சிறிதாயிருந்தால் என்ன? பெரியதாயிருந்தால் என்ன? அது அவரால் முடியவில்லை. பெரிய பாண்டியரைக் கண்ணுக்கினியாளிடம் அழைத்துப்போக அவர் இணங்கிவிட்டார். அப்படித் தம்மை அங்கு அழைத்துப் போகும் செய்தியை இளையபாண்டியனுக்குத் தெரிவிக்கலாகாது” என்றும் சாமர்த்தியமாகச் சிகண்டியாசிரியரிடம் வாக்கும் வாங்கிக் கொண்டுவிட்டார் பெரியவர்.

கலை உள்ளத்தின் கணிவையும், மென்மையையும் அரசியல் காரணங்களுக்காக அவற்றை அணுகுகிறவர்களால் புரிந்துகொள்ள முடியாமற் போகிறதே என்று உள்ளுற வருந்துவதைத் தவிரச் சிகண்டியாசிரியரால் அப்போது வேறெதுவும் செய்ய இயலவில்லை. இளைய பாண்டியன் தன்னைக் கண்ணுக்கினியாளிடம் அழைத்துச்சென்ற அதே தின்த்தின் மாலைவேளையில் பெரியவரைத் தான் அவளிடம் அழைத்துச் செல்லவேண்டியவராக இருந்தார் சிகண்டியாசிரியர்.

காலையில் இளைய பாண்டியனோடு கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்றபோதிருந்த அவ்வளவு உற்சாகம் மாலையில் வெண்தேர்ச்செழியரோடு சென்றபோது அவருக்கு இல்லை. கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது போன்ற மனநிலையோடு இருந்தார் அவர். கண்ணுக்கினியாள் என்ற புள்ளிமானைக் காணப் பெரியபாண்டியர் என்ற சீற்றம் நிறைந்த முதிய சிங்கத்தை அழைத்துப்போவது போன்ற அவ்வளவு வேதனை அந்த இசைப்புலவருடைய உள்ளத்திலே நிறைந்திருந்தது. சிகண்டியாசிரியர் சந்தேகப் பட்டதற்கும் வேதனைப்பட்டதற்கும் ஏற்றாற்போலவே பெரிய பாண்டியரும் அங்கு நடந்துகொண்டார். சிறிதுநேரம் அவளுடைய இசையைக் கேட்பதுபோல நடித்த பெரிய பாண்டியர் அவளிடம் வினாவிய வினாக்களும் விசாரித்த விசாரணைகளும் சிகண்டியாசிரியரைக் கலக்கத்திற்கு உள்ளாக்கின.

“இவ்வளவு நன்றாகப் பாடும் வல்லமை வாய்ந்த நீயும் உன் பெற்றோரும் ஏன் இந்தக் கபாடபுரத்திலேயே தங்கி விட்டீர்கள்? பயன் மரம் நாடிச்செல்லும் பறவைகள்போல் ஊரூராகச் சென்று பாடிக்கொண்டிருப்பதல்லவா சிறந்த பாண்குடியினருக்கு அழகு?” என்று முதல் வினாவிலேயே அவள் மனத்தை ஆழம் பார்த்தார் பெரியபாண்டியர்.

“நகரணி மங்கல விழாவுக்காக இங்க வந்தோம்! அப்படியே தங்கிவிட்டோம். வந்த கலைஞர்களை எல்லாம் காலவரையறையின்றி விருந்தினராக ஏற்று உபசரிக்கும் பண்புள்ள இந்தப் பாண்டிய நாட்டில் முதல் முதலாக நீங்கள் தான் இப்படி எங்களை வினாவுகிறீர்கள் தங்கள் நாட்டிற்கு வந்த கலைஞர்கள் வேறு ஊர்களுக்குப் புறப்பட்டுப் போகாமல் ஏன் அதிக நாட்கள் தங்கியிருக்கிறார்கள் என்று கவலைப்படும் முதல் மனிதரை நான் இன்று மாலையில் இப்போதுதான் இங்கே சந்திக்கிறேன்!” என்றாள் கண்ணுக்கினியாள்.

“நான் தவறாகக் கூறவில்லை பெண்ணே சிறப்பாக வேறு காரணம் ஏதாவது இருந்தாலன்றிக் கலைஞர்கள். ஓரிடத்திலேயே இப்படித் தங்கமாட்டார்களே என்றுதான் வினாவினேன்…”

“இது வெறும் வினாவா? அல்லது கவலையா என்று எனக்குப் புரியவில்லை. உங்கள் கேள்வி வினாவாக மட்டும் ஒலிப்பதுபோல எனக்குத் தோன்றாததுதான் காரணம். கலைஞர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று கலைஞர்களே உணராத ஒன்றை வற்புறுத்துகிறீர்கள் நீங்கள்…”

“அப்படியில்லை. இடத்தின்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். மனிதர்கள்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். கலையின்மேல் பிரியப்பட்டு மட்டுமே ஒரிடத்தில் தங்கமுடியாது…?”

“எப்படி வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன். இடத்தின்மேல் பிரியப்படுத்துவது தவிர மனிதர்கள் மேல் பிரியப்படத்தக்க அத்துணைச் சிறப்பான பண்புள்ள மனிதர்களும் இங்கு நிறைய இருக்கிறார்கள் என்று இன்று காலைவரையில் நான் எண்ணியிருந்தேன். இப்போதோ என்னுடைய அந்த இரண்டாவது எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது.”

“நீ மிகவும் சினமாகப் பேசுகிறாய் பெண்ணே பேச்சில் எப்போதுமே நிதானம் வேண்டும். அதுவும் என்னைப் போன்ற முதியவர்களிடம் உரையாடும்போது இன்னும் அதிகமான நிதானம் வேண்டும்.”

மறுமொழிகூறாமல் அவரை வெறுப்பவள்போல் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டாள் அவள். இந்தக் கேள்விகளை விரும்பாத சிகண்டியாசிரியர் வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றார். சிறிது தொலைவு விலகி நின்ற அவள் தந்தை, அருகில் வந்து பெரியபாண்டியரிடம் ஏதோ பேசத் தொடங்கினார்.

“தொடர்ந்து ஓரிடத்திலேயே தங்கிவிடாமல் பல இடங்களுக்கு மாறிமாறிச் சென்றுகொண்டிருப்பதனால்தான் கலைஞர்களின் கலை வளர்ச்சியும் மெருகும் அடையும்” என்று மீண்டும் அவளுடைய தந்தையிடம் வாதிடத் தொடங்கினார் பெரியபாண்டியர்.

உடன் வந்திருந்த சிகண்டியாசிரியருக்கே வெறுப்பைத் தருவதாயிருந்தது அவர் பேச்சு. தானும், தன்னுடன் வந்தவரும் இன்னார் இன்னாரெனச் சிகண்டியாசிரியர் தெரிவிக்காததனால் புள்ளிமான்போன்ற அந்தப் பெண்ணுக்குப் பெரியபாண்டியரிடம் பயமும் இல்லை. மதிப்பும் வரவில்லை. சினமே மேலெழுந்து பொங்கியது. காலையில் இளைய பாண்டியன் சிகண்டியாசிரியரை மாறுவேடத்தில் அழைத்து வந்திருந்ததனால் இப்போது அவரை அவளுக்கு அடையாளமும் தெரியவில்லை. ஆனால் உடன் வந்திருந்த கிழச்சிங்கத்தை ஒத்த அந்த முதியவர் வினாவினாற் போன்ற வினாக்களையே தன்னிடம் வினவாமல் அமைதியாக இருந்ததோடல்லாமல் அந்த வினாக்களை ஒரளவு வெறுப்பதுபோன்ற முகபாவத்தையும் காண்பித்ததனால் சிகண்டியார் மேல் அவளுக்குக் கோபம் வரவில்லை. பெரியபாண்டியர் மேலேயே சினம் மூண்டது. பெரியபாண்டியரோ தாம் யாரென்று அவளுக்குக் குறிப்பாகப் புரிய வைத்து அவளை மேலும் பயமுறுத்தவும், திகைக்க வைக்கவும் விரும்பினார்.

அரசகுடும்பத்தினர் மட்டுமே பாணர்களுக்குப் பரிசளிக்கும் பொற்பூக்கள் சிலவற்றைத் தம்மோடு கொண்டுவந்திருந்த அவர் அந்த பொற்பூக்களில் ஒன்றை எடுத்து, “எவ்வாறாயினும் ஆகுக! உன் கலைத்திறனைப் போற்றி இவற்றை உனக்களிக்கிறேன்” என்று அவற்றை அவளிட்ம் நீட்டினார். ஆனால் அவள் அவற்றைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவரை எள்ளி இகழ்வதுபோன்ற புன்னகை யொன்று உடன் அவள் இதழ்களில் மின்னி மறைந்தது. “தங்களை மதியாதவர்களுடைய பரிசை ஏற்பது கலைஞர்களின் இயல்பில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்று அவள் பதிலுக்குச் சீறியபோது பெரியவரின் முகத்தின் சினம் அதிகமாகியது. கடுமையும் மிகுதியாகி வளர்ந்தது.

“ஏதேது? உங்கள் சினத்தைப் பார்த்தால் எங்களை நாடுகடத்தவும் செய்வீர்கள் போலிருக்கிறதே?” என்றாள் அவள்.

“அவசியமென்று கருதினால் அதையும் செய்ய முடிந்தவன்தான் நான்” என்று கூறிவிட்டுப், “போகலாம்! புறப்படுங்கள்” என்று சிகண்டியாரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார் பெரியவர். புறப்படுகிறபோது முறைக்காக ஒருவார்த்தைகூட அவளிடமோ அவள் தந்தையிடமோ சொல்லிக்கொள்ளவில்லை. சிகண்டியார் மட்டும் சொல்லி விடைபெற்றுக்கொண்டார். இருவரும் அரண்மனையை நோக்கித் திரும்பினர்.

Source

Previous articleRead Kabadapuram ch 27 Na Parthasarathy
Next articleRead Kabadapuram ch 29 Na Parthasarathy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here