Home Kabadapuram Read Kabadapuram ch 29 Na Parthasarathy

Read Kabadapuram ch 29 Na Parthasarathy

105
0
kabadapuram,kabadapuram book,kabadapuram tamil novel,kabadapuram book pdf,kabadapuram novel,kabadapuram tamil novel,kapadapuram novel download pdf,kapadapuram novel download free,
Read Kabadapuram Ch 29 Free, Kabadapuram is a historical novel. Kabadapuram audiobook, Kabadapuram pdf kabadapuram,kabadapuram book,

Read Kabadapuram ch 29 Na Parthasarathy

கபாடபுரம்

அத்தியாயம் 29 : இசைநுணுக்க இலக்கணம்

Read Kabadapuram ch 29 Na Parthasarathy

கண்ணுக்கினியாள் மேல் இளையபாண்டியன் சாரகுமாரனுக்கு அன்பு இருப்பதையும், அப்படி ஓர் அன்பையோ தொடர்பையோ இணைப்பையோ விரும்பாதவராகப் பெரியபாண்டியர் மனம் குமுறுவதையும் சிகண்டியாசிரியர் தெளிவாகப் புரிந்துகொண்டார். போகிற போக்கைப் பார்த்தால் பெரியபாண்டியர் சினவெறியில் அந்தப் பாண்மகளையும் அவள் குடும்பத்தினரையும் நாடுகடத்தினால்கூட வியப்பதற்கில்லை என்ற தோன்றியது. அதற்குள் தம் கலை இலட்சியமாகிய இசைநுணுக்க இலக்கண நூலை இயற்றி அரங்கேற்றி முடித்துவிடுவதில் கவனம் செலுத்தவேண்டியவராக இருந்தார் அவர். இளைய பாண்டியனும், கண்ணுக்கினியாளும் தத்தம் குரலினிமையின்மூலம் விளைவித்துக்காட்டிய புதுமைகளையும், நுணுக்கங்களையும், நயங்களையும் கண்டபின் அவற்றை இலட்சியங்களாகக் கொண்டே இசைநுணுக்கத்தை இயற்றத் தொடங்கியிருந்தார் அவர் கலைத்துறையைப் பொறுத்தவரையில் ஒர் சுவையின் மேலான எல்லையைத் தொடுகிறவர்கள்தான் அதுவரை அந்தத் துறைக்கு என்று அமைக்கப்பட்டிருந்த இலக்கணங்களையும் மரபுகளையுமே வளர்த்துப் புதியதாக்கி விடுகிறார்கள்.

இப்படிப் புதிய இலட்சியங்கள் பிறந்துவிட்டபின்பே அவற்றை எடுத்துக்காட்டாகக்கொண்டு புதிய இலக்கணங்களும், மரபுகளும் பிறக்கின்றன. இலட்சியங்களைப் படைக்கிற படைப்பாளியின் சாதனை எல்லை என்கிற உயரத்தை அடையமுடியாமல் சில வேளைகளில் இலட்சணங்களை வரையறுத்துச் சொல்லுகிற இலக்கண ஆசிரியரின் கீழ் எல்லையிலேயே தளர்ந்து நின்றுவிடுவதும் உண்டு. அப்படித் தளர்ந்து நின்று விடுவதனால் அந்தக் கலையின் எதிர்காலத்துக்கு வளர்ந்துவரும் புதிய மரபுகள் சொல்லப்படாமலே போய்விடும். அந்த நிலை ஏற்பட்டுவிடலாகாதே என்பதற்காகத்தான் சிகண்டியாசிரியர் இசைநுணுக்க இலக்கணத்தை விரைந்து இயற்றிக்கொண்டிருந்தார். அந்த இலக்கணத்தை அவர் இயற்றுகையில் பெரும்பான்மை நேரம் சாரகுமாரனும் அவருடன் கூடவே இருந்தான். பெரியபாண்டியரோடு தாம் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்றுவந்த செய்தியைச் சிகண்டியாசிரியர் சாரகுமாரனிடம் கூறவில்லை. சாரகுமாரன் மட்டும் முடிநாகனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் சில காலை வேளைகளிலும், சில மாலை வேளைகளிலும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்றுவந்தான். அப்படிச் சென்று கண்ணுக்கினியாளைச் சந்தித்தபோதும் அவளிடம் ஆழமான மாறுதல் ஒன்றை உணர்ந்தான் அவன்.

சிரிப்பும், மகிழ்ச்சியும், கலகலப்பான உரையாடலும் அற்றுக் கவலை நிறைந்தவளாய்த் தென்பட்டாள் அவள். அந்த மாறுதலைப் புரிந்துகொள்ளவும் முடியாமல், வினாவித் தெரிந்துகொள்ளவும் இயலாமல் வேதனைப்பட்டான் சாரகுமாரன். கபாடபுரத்திலிருந்து தாங்கள் வேறு ஊருக்குப் புறப்படப் போவதைப் பற்றியே அவனைச் சந்திக்க நேரும் போதெல்லாம் பேசிக்கொண்டிருந்தாள் அவள் சாரகுமாரனுக்கு இது புதுமையாக இருந்ததோடல்லாமல் மனவருத்தத்தை அளிப்பதாகவும் இருந்தது. மனத்திற்குள்ளேயே துயரப்பட்டான் அவன். சிகண்டியாசிரியர் பெரியபாண்டியரை அவளிடம் அழைத்துச் சென்றிருந்ததையும் அவர் அவளிடம் வினாவிய வினாக்களையும் கூயிருந்தாரானால் சாரகுமாரனுக்கு அவளுடைய இந்த மாறுதலுக்கான காரணங்கள் எல்லாம் தெளிவாகப் புரிந்திருக்கும். அதையும் அவர் கூறாததால் ஒன்றும் புரியாமல் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது சாரகுமாரனுக்கு.

“கோ நகராகிய கபாடபுரத்தின் அரசவையில் பெரும் புலவர்கள் அனைவரையும் கூட்டிய அரங்கத்தில் இசை நுணுக்கத்தை அரங்கேற்றவேண்டும் என்று விரும்புகிறேன் நான். பெரிய பாண்டியரிடம் இதை எடுத்துக்கூறி அவருடைய இசைவைப் பெறவேண்டும்” என்று சாரகுமாரனிடம் விளக்கினார் சிகண்டியாசிரியர்.

“நாமிருவருமாகச் சென்று பாட்டனாரிடம் கூறினால் அவர் அவசியம் இணங்குவாரென்று நம்புகிறேன்” என்று சாரகுமாரன் கூறத்தொடங்கியதை மறுத்து,

“நான் ஒருவனே சென்றால் பெரியபாண்டியர் ஒருவேளை இந்த அரங்கேற்றத்திற்கு இணங்கினாலும் இணங்கலாம். இளையபாண்டியரும் உடன் வந்தாலோ பெரியவருக்கு உலகத்தில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் வந்துவிடும். மறுத்தாலும் மறுத்துவிடுவார்” என்றார் சிகண்டியாசிரியர். ஆசிரியரின் இந்தக் கருத்தில் இளையபாண்டியனுக்குச் சந்தேகம் எதுவும் உண்டாகவில்லை. அதனால் அவன் அவர் விருப்பப்படியே செய்ய இணங்கினான். ஆனால் ஒன்றை மட்டும் சிகண்டியாசிரியரிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறினான்.

“இசைநுணுக்கம் என்ற தங்கள் நூல் தோன்றக் காரணமாயிருந்தவளும் அந்த அரங்கேற்றம் நிகழ்கிற அன்று இந்த அரண்மனையில் வந்து இசைக்கவேண்டும் என்பது என் விருப்பம்” என்று சாரகுமாரன் ஒவ்வொருமுறை கூறும் போதும் சிகண்டியாசிரியர் உள்ளுற வருந்தினார். “கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பாண்மகள் வந்து பாடவேண்டும்” என்று வேண்டினால் பெரியபாண்டியர் இசைநுணுக்க நூலை அரங்கேற்றவே ஒப்புக்கொள்ளமாட்டாரென்று தோன்றியது. அதை இளையபாண்டியனிடமும் விட்டுச் சொல்ல முடியாமல் தவித்தார்.அவர் சாரகுமாரனின் தந்தை அநாகுல பாண்டியனிடம் இந்த அரங்கேற்றத்தைப்பற்றி விவரித்துக் கூறலாம் என்றாலோ பெரியபாண்டியர் வெண்தேர்ச் செழியரின் விருப்பத்துக்கு மாறாக அநாகுலனும் ஒரு காரியத்தைச் செய்யமாட்டான் என்பது சிகண்டியாசிரியருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எனவே பெரியபாண்டியரையே தேடிச் சென்றார் அவர். பெரியபாண்டியர் சிகண்டியாசிரியரை வரவேற்ற விதமே இசையைப் பற்றியோ, கலைகளைப் பற்றியோ, கடற்கரைப் புன்னைமரத் தோட்டத்தில் தங்கியிருக்கும் பாண்மகளைப் பற்றியோ எதையும் என்னிடம் சொல்லிவிடாதே என்பதுபோல் இருந்தது.

“தென்பழந்தீவுகள் அனைத்தையும் ஒரு வலிமைவாய்ந்த கடற்படையை அனுப்பி வெற்றிகொண்டு நேராகக் கபாடபுரக் கோ நகரின் ஆட்சிக்குக் கீழே கொணர்ந்து பாண்டியர் வலிமையைப் பலப்படுத்திவிட எண்ணிக்கொண்டிருக்கிறேன். அதற்கு இன்னும் ஒரு வழி புலப்படவில்லை. தென்கடலில் தனித் தனியே சிதறுண்டுகிடக்கும் அந்தத் தீவுகளை ஒரிரு நாட்களில் வெற்றிகொள்வதும் சாத்தியமென்று தோன்றவில்லை. அதிக நாட்களும், அதிக முயற்சியும், அதிகப் பொறுமையும் அந்தக் காரியத்திற்குத் தேவைப்படும். அநாகுலனை அனுப்பலாமென்றாலோ, அவ்வளவு அதிக நாட்கள் அவன் கோ நகரத்தில் இல்லாமல் வெளியே தீவுகளுக்குப் போவது நல்லதல்ல. நானே போகலாமென்றாலோ என்னுடைய முதுமையும், தளர்ச்சியும் அதற்கு ஏற்றவையல்ல. இந்த நிலையில் இந்தப் படையெடுப்பிற்குத் தலைமையேற்கச் சாரகுமாரன் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை. முன்பே அதை மனத்திற்கொண்டுதான் அவனையும், முடிநாகனையும் தென்பழந்தீவுகளில் ஒருமுறை சுற்றிவருமாறு செய்தேன். ஆனால் அவனோ இன்னும் அரசியற் பொறுப்புக்களில் அக்கறையற்றவனாகத் தோன்றுகிறான்.

ஒர் அரசன் போரற்ற அமைதிக் காலங்களில் மட்டுமே கலைகளின் இரசிகனாக இருக்கலாமே அன்றிப் போர்க்காலங்களில் கலைகளை மறக்கவும் தெரியவேண்டும். இரசிகனாக இருப்பதற்கும் மேலாக அவனே கலைஞனாக இருப்பதோ, கவிஞனாகவே வளரவிரும்புவதோ அவனைப் பெற்ற அரசகுடும்பத்துக்கு எவ்வளவிற்குப் பயன்படாமல் போகுமென்பதை உங்களைப்போன்ற புலவர்களால் ஒருபோதும் உணரமுடிவதில்லை. ஆனால் என் போன்றவர்களோ ஒவ்வொரு விநாடியும் அதை மட்டுமே உணர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கலைகள் மனித இதயத்தை நெகிழச்செய்து நளினமாக்கிவிடுகின்றன. ஒரு மனம் அப்படி நெகிழ்ந்து நளினமாவதனால் அது ராஜதந்திர நினைவுகளுக்கோ, அரசியற் சூழ்ச்சிகளுக்கோ பயன்படாமல் போகிறது” என்று கவலை தோய்ந்த குரலில் பெரியபாண்டியர் தன்னிடம் வருத்தப்பட்டபோது தான் வந்த காரியத்தை அவரிடம் கூறுவதற்கு ஏற்ற சமயம் அதுதானா இல்லையா என்பதைக் கணிக்க முடியாமல் தயங்கியபடியே பேசாமல் இருந்தார் சிகண்டியாசிரியர். பெரியபாண்டியரோ அவருடைய தயக்கத்தைத் தமக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு மேலும் தொடர்ந்து குறைபடத் தொடங்கிவிட்டார்.

“மனம் அரசதந்திரத்திற்கு ஏற்றதாக வாய்க்காத காரணத்தினாலேயே அப்படிப்பட்ட அரசகுமாரர்களைப் பெற நேர்ந்த பல அரச குடும்பங்கள் பெருமையழிந்து மரபு கெட்டிருக்கின்றன. தென்பழந்தீவுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பியபின் அந்தத் தீவுகளை வென்று அடக்கி வலிமை மிக்கதொரு பாண்டியப் பேரரசை உருவாக்கவேண்டியதைப் பற்றித் தானாகவே என்னிடம் பேசவருவான் வருவானென்று சாரகுமார்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான். அவனோ காலையும், மாலையும், தேரிலும் புரவியிலுமாக மாற்றி மாற்றிக் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறான். இந்த நிலையிலேயே நீங்கள் வேறு இசையிலக்கணம் ஏதோ இயற்றிக் கொண்டிருக்கிறீர்களாம்…” என்று அவர் கூறிக்கொண்டே வந்தபோது அது தான் சமயமென்று, “ஆம்! அந்த இசையிலக்கண நூலைக் கபாடபுரத்துப் புலவர் பெருமக்கள் கூடிய பேரவையிலேயே அரங்கேற்றுவது பற்றிப் பேசத்தான் நான் இப்போது உங்களிடம் வந்தேன். விரைவில் அதை அரங்கேற்றி முடித்துவிட்டால் அப்புறம் இளையபாண்டியருடைய கவனத்தை அரசியற் காரியங்களில் திருப்புவதற்கு மிகவும் வாய்ப்பாக இருக்கும். அதை அரங்கேற்றக் காலந் தாழ்த்திக்கொண்டே போனாலும் இளையபாண்டியருடைய கவனம் அந்த அரங்கேற்றத்தை எதிர் நோக்கியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கும். அதைத் தவிர்க்க ஒரே வழி அந்த அரங்கேற்றத்தை உடன் ஏற்பாடு செய்து முடிப்பதுதான்! தங்கள் மனக்குறிப்பை அறிந்துதான் நானும் அதனை விரைந்து அரங்கேற்றி முடிக்க விரும்பினேன்.” சமயோசிதமாக அவர் மனப்போக்கினை அறிந்து இப்படிப் பேச்சைத் திசை திருப்பினார் புலவர்.

“அரங்கேற்றம் முடிந்தபின்பும் சாரகுமாரன் கலை கலை என்று திரியத் தொடங்கினால் எனக்கு உங்கள்மேல்தான் கோபம் வரும்” என்று நிபந்தனையில் இறங்கினார் பெரியவர். ஒரு வழியாக அதற்கு ஏதோ தீர்திறன் கூறி அவரை அரங்கேற்றத்துக்கு இணங்கச்செய்து அடுத்த பெளர்ணமி மாலையில் இசைநுணுக்க நூலுக்கு அரங்கேற நாள் குறித்தார் சிகண்டியாசிரியர்.

“இந்த நூல் அரங்கேறிய உடனே மறுபடியும் இன்னொரு இசையிலக்கணத்தை உடனே உருவாக்கிவிடமாட்டீரே?” என்று பெரியபாண்டியர் குத்தலாகக் கேட்டபோது சிகண்டியாசிரியருக்கு உள்ளுறச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் அந்தச் சிரிப்பை அடக்கிக்கொண்டு அடக்கமாகவும் நிதானமாகவும், “அப்படியெல்லாம் ஒன்றும் நேர்வதற்கில்லை” என்று பெரியவருக்கு மறுமொழி கூறினார் சிகண்டியாசிரியர்.

Source

Previous articleRead Kabadapuram ch 28 Na Parthasarathy
Next articleRead Kabadapuram ch 30 Na Parthasarathy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here