Home Kabadapuram Read Kabadapuram ch 4 Na Parthasarathy

Read Kabadapuram ch 4 Na Parthasarathy

143
0
kabadapuram,kabadapuram book,kabadapuram tamil novel,kabadapuram book pdf,kabadapuram novel,kabadapuram tamil novel,kapadapuram novel download pdf,kapadapuram novel download free,
Read Kabadapuram Ch 4 Free, Kabadapuram is a historical novel. Kabadapuram audiobook, Kabadapuram pdf kabadapuram,kabadapuram book,

Read Kabadapuram ch 4 Na Parthasarathy

கபாடபுரம்

அத்தியாயம் 4 : கடற்கரைப் புன்னைத் தோட்டம்

Read Kabadapuram ch 4 Na Parthasarathy

இளையபாண்டியருடைய தேர் திடீரென்று அங்கு நின்றது எல்லோருக்கும் ஒரு புதிராகவே இருந்தது. முன்னால் சென்ற தேர்கள் வெகுதூரம் போய்விட்டன. பின்னால் வர வேண்டிய தேர்கள் வரமுடியாமல் இளையபாண்டியருடைய தேர், கோட்டத்தின் வாயிலிலேயே வழிமறித்து நின்று கொண்டது. நூலிழை கோத்தாற்போல் வரிசையாக இடை வெளிவிடாமல் வீதியில் செல்லவேண்டிய தேர் உலாவில் இதனால் இடைவெளி உண்டாகி அணிவகுப்புக் குலைந்தது.

‘அத்தனை அவசரம் என்னவாயிருக்கும்?’ – என்று எல்லாருடைய கண்களுக்கும் தேரிலிருந்து கீழிறங்கி இளைய பாண்டியர் சென்ற திசையையே நோக்கின. அங்கே அவர்களுக்கு ஒர் அதிசயம் காத்திருந்தது. தேர் உலாக்கோலத்தில் இளையபாண்டியர் மிக மிகக் கவர்ச்சி நிறைந்து தோன்றினார். சொந்த தேசத்தில் விளைந்த முத்துக்களும், இரத்தினங்களும் பதித்த கிரீடத்தினோடு சுருண்ட கருங்குஞ்சி பிடரியில் கற்றை கற்றையாய் அலையிட ஆண் சிங்கம் போல அவர் நடந்து சென்ற அழகைக் கண்டு மயங்காதவர்களில்லை. அவருடைய அழகிலே பெண்மையின் கனிவு இருந்தது என்றால் நடையிலே ஆண்மையின் கம்பீரம் இருந்தது. பெருமிதமும் இருந்தது. தேரிலிருந்து கீழிறங்கி நடந்துபோய் அவர் செய்த காரியத்தைப் பார்த்தபோது தோற்றத்தில் மயங்கியவர்களே மறுபடியும் அவருடைய தொண்டினால் மயங்கினார்கள்.

கூட்டத்தில் இடியுண்டு நெருக்கப்பட்டதன் காரணமாக இளம் பாண்மகள் ஒருத்தியின் கைகளிலிருந்து இழே நழுவி விழுந்துவிட்ட யாழை அவள் கைகளில் எடுத்துக் கொடுத்த இளையபாண்டியரின் அந்தக் கருணையைக் கண்டு வியந்தனர் யாவரும். அந்தப் பெண் யார்? இளைய பாண்டியரின் கருணையையும், கண்ணோட்டத்தையும் அடைய அவள் கொடுத்து வைத்தவளாயிருக்க வேண்டும்! அவளுடைய பாக்கியமே பாக்கியம் – என்றெல்லாம் கூட்டத்தினர் அந்தப் பாண் மகளைக் கண்டு வியந்ததுபோல் முடிநாகன் வியக்கவில்லை.

மணிபுரத்திலிருந்து நகரணி மங்கல விழாவிற்காகக் கபாடபுரத்திற்கு வருகிற வழியில் இளையபாண்டியரோடு தேரில் இடம்பெற்ற பெண்தான் அவள். மனத்தில் ஒருவிதமான பயத்தோடு முன்னால் தேர்கள் செல்லும் வீதியைப் பார்த்தான் முடிநாகன். நல்ல வேளையாகப் பாட்டனாருடைய தேர் முன்னால் வெகுதூரம் போய்விட்டது. ஆனால் கோட்டத்தினுள்ளிருந்து வெளியே வரவேண்டிய மற்ற இரதங்கள் ஏன் பின்தங்கின என்ற சந்தேகம் முன்னால் போய்விட்ட அவருக்கு வரக்கூடாதே என்பது முடிநாகனின் பயமாயிருந்தது.

இளையபாண்டியரைக் காண்பதிலுள்ள ஆவல் அடங்காமல் கோ நகரின் விழா நாளில் அவரைக் காணமுடிந்த ஒவ்வோரிடத்திற்கும் அந்த பாண்மகள் வருவதைக் கவனித்திருந்தான் முடிநாகன். பகலில் நகரணி மங்கலத்துக்காக அரசவை கூடியிருந்தபோதும் அங்கு இதே பெண்ணிைப் பார்த்ததாக ஞாபகமிருந்தது அவனுக்கு. இப்போதும் இளையபாண்டியர் கீழே நழுவி விழுந்திருந்த யாழை அவள் கைகளில் எடுத்தளித்துவிட்டு ஏதோ கூறவே முடிநாகன் அதைச் செவிகொடுத்துக் கேட்கலானான்.

“மறுபடியும் உன் யாழைக் கீழே தவற விட்டு விட்டாயே பெண்ணே? அதற்குள் நான் கூறியதை மறந்து விட்டாயா? ‘கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் வாழ்க்கையின் சோர்வுகளில்கூட அவர்களிடமிருந்து கீழே நழுவி விடக்கூடாது’ என்று நான் கூறியது இனிமேலாவது உனக்கு நினைவிருக்கும் அல்லவா?”

“அவர்களுடைய எழுத்தாணியும், யாழும் கீழே விழும் போதெல்லாம் – அதை நினைவூட்டி மறுபடியும் எடுத்தளிக்க உங்களைப்போன்ற முத்துவனிகர்கள் இருக்கும்போது கவலை எதற்கு?” – என்று குனிந்த தலை நிமிராமல் அவள் கூறிய பதில் வார்த்தைகளில் ‘முத்து வணிகர்களிருக்கும் போது – என்ற இடத்தில் மட்டும் குரலை நிறுத்தி வார்த்தைகளை அழுத்தி ‘நீங்கள் ஒரு முத்து வணிகர்’ – என்பதாக என்னிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள். ஞாபகமிருக்கட்டும் – என்பதுபோல் பேசினாள்.

“அதில் சந்தேகமென்ன? இந்தப் பாண்டி நாட்டுக் கபாடத்தின் புகழ்பெற்ற முத்துக்களுக்கெல்லாம் சொந்தக்காரர்கள் நாங்களே அல்லவா?” – என்று அவள் கேள்வியிலே குத்திக் காட்டப்பட்ட குறிப்புக்கும் சேர்த்தே மறுமொழி கூறினான் இளையபாண்டியன். அவளும் விடவில்லை. மேலும் அவனை வம்புக்கிழுத்தாள்.

“கபாடபுரத்து முத்து வணிகர்கள் முத்துக்களோடு பொய்யையும் விலைபேசுவார்கள் போலிருக்கிறதே?”

“வாணிகத்துக்குப் பொய் பாவமில்லை!…”

” ஆனால் பொய்யே ஒரு வாணிகமாகி விடக்கூடாது…”

  • இதற்கு மறுமொழி கூறாமல் அவளை நோக்கிப் புன்னகை பூத்த சாரகுமாரன்… “கண்ணுக்கினியாள்! நீயும் உன் பெற்றோர்களும் இங்கு எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று அவளைப் பரிவுடன் வினாவினான்.

“கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் எல்லாப் பாணர்களோடும் தங்கியிருக்கிறோம்” – என்று அவளிடமிருந்து மறுமொழி கிடைத்தது. இந்த விஷயத்தில் இளைய பாண்டியனைக் கண்காணித்துக்கொள்ள வேண்டிய அந்தரங்க ஒற்றனாகவும் முதியபாண்டியர் வெண்தேர்ச் செழியர் அவனை நியமித்து வைத்திருந்ததனால் முடிநாகன் இவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மேலே என்ன பேசுகிறார்கள் என்று முடிநாகன் கவனிக்க அவசியமில்லாமல் இளையபாண்டியன் அந்தப் பெண் கண்ணுக்கினியாளிடம் விடைபெற்றுக்கொண்டு தேருக்கு வந்துவிட்டான். எனவே முடிநாகனும் தேரை விரைவாக முன்னே விரிந்து கிடந்த வீதியில் செலுத்த வேண்டியதாயிற்று.

பின்னால் தங்கிய தேர்களும் அடுத்தடுத்து விரையலாயின. இளையபாண்டியர் வலுவில் வந்து பேசிவிட்டுச் சென்ற பேறு பெற்றவள் என்பதனால் அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த இளம்பெண்களுக்கு எல்லாம் கண்ணுக்கினியாள் மேல் பொறாமையாயிருந்தது. கண்ணுக்கினியாளோ மதுவுண்ட வண்டு போன்ற மயக்க நிலையிலிருந்தாள். யாழில் மீட்டத் தெரிந்த பண்களை எல்லாம் அப்போது தன் நெஞ்சில் மீட்டிக் கொண்டிருந்தாள் அவள். தேர்க்கோட்டத்திலிருந்து புறப்பட்ட தேருலா நகரை வளைத்துக் கிடந்த பெருவீதியைச் சுற்றிக்கொண்டு மறுபடி தேர்க்கோட்டத்தின் வாயிலுக்கு வந்து சேருவதற்குள் விடிந்தாலும் விடிந்துவிடுமென்று தோன்றியது.

கூட்டத்தில் பலர் தேர்க் கோட்டத்தின் மதிற்புறத்து மேடைகளிலும், மணல் வெளியிலும், மரக் கூட்டங்களின் கீழும் அமர்ந்துவிட்டனர். நகரம் சோதி மயமான தீபாலங்காரங்களினால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எங்கே திரும்பினாலும் ஒளி. எங்கே செவி கொடுத்தாலும் இசைகளின் இனிய ஒலி. எங்கே கண்டாலும் அலங்காரம். எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். நிலா ஒளியில் கடலும் நீலமாகப் பொங்கி மின்னிக் கொண்டிருந்தது. மரக்கலங்களிலும் சிறு படகுகளிலும்கூட விளக்குகள் மின்னிக் கடலிலும் ஒரு பெரு நகரம் உருவாகிவிட்டது போன்ற தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

இந்த நகரணி மங்கல விழா நாளில் மட்டும் தேச தேசாந்தரங்களிலிருந்து வரும் யாத்திரீகர்களுக்கும், வணிகர்களுக்கும், தென்பழந் தீவுகளிலிருந்து வரும் கடற் குறும்பர்களுக்கும் கூடச் சுங்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. பிற நாடுகளிலிருந்து பண்டங்களைக் கொண்டுவந்து விற்போருக்கும் கபாடபுரத்திலிருந்து முத்துக்களையும், இரத்தினங்களையும் கொள்முதல் செய்துகொண்டு போகிறவர்களுக்கும் இந்த விழா நாட்களில் வாணிகம் செய்வதற்கு வசதிகள் அதிகமாயிருந்தன.

தென் பழந்தீவுகளில் வசித்துவந்த முரட்டுக் குடிமக்களான கடற் குறும்பர்கள் குருதிவெறி பிடித்தவர்களாயிருந்தும் ஒவ்வோராண்டும் கபாடபுரத்து நகரணி மங்கல விழாவில் ஏதாவது கலகமூட்டிவிட்டுச் செல்லும் வழக்கத்தை அவர்கள் மேற்கொண்டிருந்தும், அவர்களுக்குத் தடைவிதிக்காது விட்டிருந்ததற்குக் காரணம் பெரியபாண்டியர் வெண்தேர்ச்செழியரின் பெருந்தன்மையும் அநாகுல பாண்டியரின் துணிவுமே என்று கபாடபுரத்து மக்கள் அறிந்திருந்தனர்.

வேறு நாடுகளிலிருந்து கபாடபுரத்துக்கு வரும் கப்பல்களுக்கும், கபாடபுரத்திலிருந்து வேறு நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கும் தென்பழந்தீவுகளைக் கடக்க நேரும் போது இந்தக் கடற் குறும்பர்களால் விளையும் தொல்லைகளும் வேதனைகளும் நீண்டகாலமாகத் தவிர்க்கமுடியாதபடி இருந்தன. வெண்தேர்ச்செழிய மாமன்னர் காலத்திலும் அநாகுல பாண்டியர் காலத்திலும் ஒரளவு அடக்கி ஒடுக்கப்பட்ட பின்பும் இவர்களுடைய கொலை வெறியோ, கொள்ளை வெறியோ தணியாமல் அவ்வப்போது தலையெடுப்பதும் மறைவதுமாக இருந்தன. இந்தத் தென்பழந்தீவுக் கடற் கொலைஞர்களின் இனத்தில் பெண்கள் குறைவாகவும், ஆண்கள் அதிகமாகவும் இருந்ததனால் – கப்பல்களைக் கொள்ளையடிக்கும் காலங்களிலும், தரைப்பகுதி நகரங்களில் புகுந்து கொள்ளையிடும் காலங்களிலும் பொன்னையும், மணியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும் கொள்ளையிடுவதைவிட அழகிய பெண்களைக் கொள்ளையிடுவதில்தான் இவர்கள் வெறிபிடித்து அலைந்தனர்.

இரத்தம் உமிழ்வதுபோல் உருண்டு அலைபாயும் சிவந்த விழிகளும் உயரமும் பருமனமாகத் தோற்றமும், உடலில் அருகம்புல் போல் விகாரமாகச் செழித்த ரோம அடர்த்தியும், செந்திப்போல் சடையிட்டுத் திரிந்த தலைமுடியுமாகக் கொலையரக்கர்களெனத் தோன்றுவார்கள் குறும்பர்கள். ஊன் தின்பதிலும், மதுவருந்துவதிலும் அளவற்ற ஆவலும் பசியுமுள்ள இந்தக் கொலைவெறியர்களுக்கும் கபாடபுரத்துக்கும் பழம் பகைகள் நிரம்ப இருந்தன. அரச நீதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்காகப் பாண்டிய மரபினர் இவர்களைப் பண்படுத்த முயன்ற முயற்சிகளை எல்லாம் தங்களுடைய சுதந்தர உணர்வையும், கொள்ளையிட்டுத் திரியும் தொழிலையும், கட்டுப்படுத்தி ஒடுக்கும் ஏற்பாடுகளாகவே இவர்கள் புரிந்து கொண்டதுதான் இதற்குக் காரணம்.

தென் பழந்தீவுகளில் அங்கங்கே சிறு சிறு குழுக்களாகத் திரிந்துவந்த இவர்கள் தொகை எண்ணிக்கையிற் சிறிது என்றாலும் இவர்களிடம் வலிமையும், சூழ்ச்சியும், கொடுமையும் மிகுதியாயிருந்தன. பாண்டிநாட்டின் வலிமை மிகுந்த கடற்படை மரக்கலங்களையும், வில் வீரர்களையும் பெருந் தொகையினராக அனுப்பி இந்தத் தென் பழந்தீவுக் கடற் கொலைஞர்களின் இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது சாத்திய மென்று தோன்றினாலும் அப்படிச் செய்து தீர்த்துவிடுவது இராசதந்திரமாகாது என்று விட்டிருந்தார் வெண்தேர்ச் செழியர். கடல் வழியாக வேறு நாட்டினர் எவரேனும் கபாடபுரத்தின் மேலோ பாண்டிய நாட்டின் வேறு கடலோரப் பகுதிகளின் மேலோ படையெடுத்து வருவதாயிருந்தால் முதலில் இந்தக் கடற்கொலைஞர்களின் தீவுகளைக் கடந்தே வரவேண்டும். பிறவிக் கலகக்காரர்களும், கொள்ளைக் கூட்டத்தினரும் ஆகிய கடற் குறும்பர்கள் தங்களைக் கடந்து யார் எங்கு போக முயன்றாலும் வழிமறித்துத் தொல்லை தருவது இயல்பாக இருக்கும்.

இந்தக் காரணத்தை அந்தரங்கமாகச் சிந்தித்துப் பார்த்த பின்பே அவர்களை அடக்குவதுபோல அடக்கிவிட்டுக் கபாடபுரத்துக்கோ மற்ற நகரங்களுக்கோ விழாவணி நாட்களில் அவர்கள் வருவதையோ போவதையோ தடுத்து ஒடுக்காமல் விட்டிருந்தார் பெரிய பாண்டியர். அநாகுலனுக்கும் தந்தையாரின் இந்த இராசதந்திர ஏற்பாடு பிடித்திருந்தது. இந்த ஏற்பாட்டிற்குப் பின்னரும் கடற் கொலைஞர்களின் சிறு சிறு தொல்லைகள் அங்கங்கே எழுவதுண்டாயினும் அவற்றைச் சாதுரியமாகவும், பெரும் பகை மூளாத வகையிலும் பாண்டி நாட்டார் எதிர்கொண்டு ஒடுக்கி வந்தனர்.

இப்படிப்பட்ட கடற் கொலைஞர்கள் சிலரை நகரணி விழாவன்று இரவில் தேருலா முடிந்ததும் சாரகுமாரனும், முடிநாகனும் சந்திக்க நேர்ந்தது. தேருலா முடிந்ததும் பழையபடி தேர்களைத் தேர்க்கோட்டத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டுப் பட்டினப் பிரவேசத்துக்காகப் புனைந்து கொண்ட அலங்காரக் கோலங்களையும் களைந்துவிட்டு உறக்கம் வராத காரணத்தினால் பரிகளில் முடிநாகனும் சாரகுமாரனும், கோட்டைக்கு வெளியே புறப்பட்டிருந்தார்கள்.

கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சற்றே தள்ளி வடபுறமுள்ள சிறு சிறு குன்றுகளில், கபாடபுரத்தின் புகழ் பெற்ற இரத்தினச் சுரங்கங்கள் இருந்தன. இந்த இரத்தினாகரங்கள் அமைந்திருந்த குன்றுப் பகுதி முழுதும் முகவசீகரம் – எனப்படும் ஒருவகை விசேடமான எலுமிச்சை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. பொன்னிறத்திற்குத் தளதளவென்று பருமன் பருமனான எலுமிச்சைக் கனிகள் மரகதப்பசுமை போர்த்த இலைகளின் அடர்த்தியிலே நிலவொளியில் செய்து தொங்கவிட்ட தங்கப் பழங்களைப்போல் மிக அழகாகத் தோன்றும். குன்றுகளில் சாலைகளும், கிளைச் சாலைகளுமாக அங்கங்கேயிருந்த பல இரத்தினாகரங்களுக்குப் பிரியும் சிறு வழிகளுமாக இருக்கும்.

குன்றுகள் யாவற்றுக்கும் உயரமான இடத்திற்கு மகேந்திரமலை என்று பெயர் வழங்கி வந்தது. மணிமலை என்றும் மக்கள் அதைச் சொல்லி வந்தார்கள். மணிமலையில் சுற்றுப்புற மண்ணே சிவப்புப் பொடியாகவும், நீலப் பொடியாகவும், பச்சைப் பொடியாகவும் செய்து துவினாற்போல இரத்தினங்களில் நிறக்கலவையும் ஒளி வண்ணமும் செறிந்து தோன்றும். மணிமலை உச்சியிலிருந்து கீழே பார்த்தால் முதலில் கரையோரத்துப் புன்னைத் தோட்டமும், அப்புறம் நகரமும் கடலும் நிலவொளியில் மிகமிக அழகாகத் தோன்றும்.

அந்தக் காட்சியைப் பார்த்து நீண்ட நாளாகிவிட்டபடியால் குருகுலவாசத்திலிருந்து கோ நகருக்கு வந்து தங்கியிருக்கும் இந்த வேளையில் ஆவலோடு புறப்பட்டிருந்தான் சாரகுமாரன். முடிநாகனுக்கோ இளைய பாண்டியனுக்குத் துணையாகச் செல்ல வேண்டிய கடமையைத் தவிர பெரிய பாண்டியருக்காக இளையபாண்டியனோடு சென்று அவனைக் கண்காணிக்க வேண்டிய இரகசியப் பொறுப்பும் இருந்தது. எனவே முடிநாகனும் களைப்பைப் பொருட் படுத்தாமல் உடன் புறப்பட்டிருந்தான். அரச குடும்பத்தார் வழக்கமாக நகர் பரிசோதனைக்குப் போவது போன்ற எளிய கோலத்தில் அவர்கள் இருவரும் புறபட்டிருந்தனர். விழா இரவின் அமைதியிலும் நகர் பொலிவு மிகுந்திருந்தது.

Source

Previous articleRead Kabadapuram ch 3 Na Parthasarathy
Next articleRead Kabadapuram ch 5 Na Parthasarathy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here