Home Kabadapuram Read Kabadapuram ch 7 Na Parthasarathy

Read Kabadapuram ch 7 Na Parthasarathy

88
0
kabadapuram,kabadapuram book,kabadapuram tamil novel,kabadapuram book pdf,kabadapuram novel,kabadapuram tamil novel,kapadapuram novel download pdf,kapadapuram novel download free,
Read Kabadapuram Ch 7 Free, Kabadapuram is a historical novel. Kabadapuram audiobook, Kabadapuram pdf kabadapuram,kabadapuram book,

Read Kabadapuram ch 7 Na Parthasarathy

கபாடபுரம்

அத்தியாயம் 7 : அவுணர் வீதி முரச மேடை

Read Kabadapuram ch 7 Na Parthasarathy

இரவில் புறவீதி வழியே வானளாவி நிற்கும் கபாடங்களை நோக்கி அவர்கள் நடந்து சென்ற காட்சி பெருமலையை எதிர்த்துச் சிறு கருங்குன்றுகள் விரைவாக உருண்டு செல்வது போலிருந்தது.

“எதைச் சுமந்துகொண்டு இப்படி கபாடங்களை நோக்கிப் போகிறார்கள் இவர்கள்? அடைத்து
விட்ட கபாடங்களை இவர்களுக்காக இனி யார் திறக்கப் போகிறார்கள்? உன்னால் ஏதாவது அதுமானம் செய்ய முடிகிறதா?” என்று முடிநாகனைக் கேட்டான் இளையபாண்டியன். உடனே பதில் கூற முடியாமல் சில விநாடிகள் சிந்தனையோடு தயங்கிய பின் “முன்பும் இப்படி நடந்திருக்கிறது. ஒருவேளை இன்றும் அப்படி ஒரு முயற்சி செய்கிறார்களோ என்னவோ? எதையும் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். என் அநுமானம் சரியாகவும் இருக்கலாம். முற்றிலும் பிழையாகவும் போய்விடலாம்…” என்றான் முடிநாகன்.

“எந்த அநுமானம்?”

“தயை செய்து சில விநாடிகள் பொறுத்திருங்கள் இளைய பாண்டியரே! நேருக்கு நேர் யாவற்றையும் பார்த்து விடலாம்.”

“ஆவலை அடக்க முடியவில்லை! ஆத்திரமும் வருகிறது…”

“ஆவல் காரியத்தைக் கெடுத்துவிடும்! ஆத்திரம் இப்போது இந்த இடத்தில் பயன்படாது.”

“இந்தத் தடியர்களுக்கு இரவு வேளையில்கூட உறக்கம், களைப்பு, சோர்வு எதுவுமே கிடையாதா?”

“அதுதான் திருடனும், காமுகனும், மற்றவர்கள் உறங்கும் நேரத்தில்கூட உறங்குவதில்லை என்று காலையில் உங்கள் பாட்டனார் அழகாகச் சொன்னாரே!”

“அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நம்மையுமல்லவா உறக்கமிழக்கச் செய்கிறார்கள்?” என்று இளையபாண்டியர் சலிப்பும், கோபமுமாகப் பதிலுரைத்தபோது கபாடத்தின் பக்கமே வைத்த கண் மாறாமல் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த முடிநாகன், “இப்போது பாருங்கள் அங்கே என்ன நடக்கிறது தெரிகிறதா?” என்று சுட்டிக் காட்டினான். கொண்டு சென்ற பொதிகளிலிருந்து கபாடத்துக்கு முன்னால் வெண் மேகம்போல் எதையோ கொட்டிக் குவித்தார்கள் அந்த அவுணர்கள்.

“என்ன அது?”

“பஞ்சு இழைகள்.”

“பஞ்சைக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் இங்கே?”

“என்ன செய்கிறார்கள் என்றுதான் பாருங்களேன்?”

-முடிநாகனோடு இளையாண்டியனும் அவர்களுடைய விசித்திரச் செயலைக் கூர்ந்து கவனிக்கலானான் . பொதிகளை எல்லாம் அவிழ்த்து உதறியபின் கபாடங்களில் கீழிருந்து வரிசை வரிசையாகக் குமிழ்களில் இணைந்து தொங்கிய வெண்கல மணிகளைப் பக்கத்துக்கு இருவர் வீதம் நிமிர்த்திப் பிடித்து உள்புறமிருந்த நாக்குகளையும் மணிகளின் உடல்களையும் நடுவே பஞ்சு இட்டுத் திணித்து ஒசையெழாதபடி செய்தனர் அவர்கள். நாக்குகள் அடித்துக் கொண்டு மணியோசை எழுப்பா வண்ணம் உள்ளே பஞ்சு இட்டுத் திணித்த பின் மணிகள் எவ்வளவு ஆடினாலும் ஒலி எழாது. ஒலி எழா விட்டால் கதவுகளின் குமிழ்களைப் பற்றிப் பயமின்றி மேலே ஏறி முத்துக்களையோ இரத்தினங்களையோ பெயர்க்கலாம். மிகவும் தந்திரமாக இந்த ஏற்பாட்டைச் செய்யலாயினர் அவுணர்கள். இதைக் கண்டு பரபரப்பும் ஆத்திரமும் அடைந்த இளையபாண்டியன்,

“இதென்ன முடிநாகா! நாம் ஏன் இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்? இரண்டு கதவுகளிலும் முதல் வரிசை மணிகளை முழுவதும் பஞ்சிட்டு அடைத்து ஊமையாக்கிவிட்டார்களே? இன்னும் பத்து வரிசையும் இப்படிச் செய்து விட்டால் சுலபமாகக் கதவில் ஏறி முத்துக்களைப் பெயர்க்கலாமே? இருபது வரிசை பஞ்சு திணித்து விட்டால் மேலேயிருக்கும் இரத்தினங்களைக்கூடப் பெயர்த்து விடலாம்! இந்த நிலையில் கதவுகளின் அருகேயுள்ள காவல் மாடங்களிலிருக்கும் வீரர்களையாவது நாம் கூக்குரலிட்டு எழுப்பலாமே?” என்று பதறினான். முடிநாகனோ மிகவும் நிதானமாக இளையபாண்டியனுக்கு மறுமொழி கூறினான்.

“இப்படிப் பலமுறை செய்து தோற்றும் இவர்கள் இதில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதுதான் எனக்கு வியப்பை அளிக்கிறது. கொக்கின் தலையின் வெண்ணெயை வைத்துப் பிடித்து விடலாமென்பது போன்ற முயற்சி இது இதில் அவர்கள் காரியம் ஒருபோதும் நிறைவேறாது” என்ற முடிநாகனின் வார்த்தைகளைக் கேட்டு இளையபாண்டியனுக்கு கோபமே வந்து விட்டது.

“இன்னும் நாம் வாளாவிருந்தால் நகரின் உடைமைகள் கொள்ளை போய்விடும் உன் நிதானம் என் பொறுமையைச் சோதிக்கிறது.”

“ஒரு கொள்ளையும் போகாது பதறாமலிருங்கள் இந்த இடத்தில் இயற்கை நமக்கு அற்புதமானதொரு வசதியைச் செய்து கொடுத்திருக்கிறது. இப்போது நாம் மனம் வைத்தால் தான் இந்த இடத்திலிருந்தே அத்தனை கபாடத்து மணிகளையும் ஊரே எழுந்திருக்கும்படி ஒலிக்கச் செய்து விட முடியும்…”

“நீ பேசுவது கதை காரியத்தில் நடப்பதைச் சொல்! சாத்தியமானதை விட்டுவிட்டுக் கற்பனையில் மூழ்காதே… முடிநாகா!”

“நான் சொல்வது எதுவும் கற்பனையில்லை! எத்தனையோ முறை தங்கள் பாட்டனாருடனும், தந்தையாருடனும் நகர் பரிசோதனைக்கு வந்திருக்கிறேன் நான். உலகியலனுபவத்தில் தங்கள் பாட்டனாரைவிடச் சாமார்த்தியசாலி இனிமேல் பிறந்து வந்தால்தான் உண்டு. சமயோசித ஞானத்தில் அவருக்கு இணை அவர்தான். அவரிடமிருந்தும் நான் கற்ற எதுவும் பயன்படாத கற்பனையாயிருந்து விடமுடியாது இளையபாண்டியரே!”

“அதெல்லாம் உன் சொந்தப் பெருமை! அந்தப் பெருமை இப்போது இங்கு எப்படிப் பயன்படுமென்பதுதான் எனக்குப் புரியவில்லை?”

“இதில் பெருமை எதுவுமில்லை! எல்லாமே அனுபவமும் ஞாபகமும் தான்! நாலைந்து தடியர்களாக இருக்கும் அவர்களை அருகிற்போய் எதிர்க்க இப்போது நம்மால் ஆகாது. தேசாந்திரிகளாகத் தோன்றும் நம்மை ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டாலும் போட்டுவிடுவார்கள் பாவிகள்! காவலர்களை எழுப்ப நீங்கள் இங்கிருந்து கூக்குரலிடுவதும் பயன்படாது. எனவேதான் நான் இந்த யோசனையைச் செய்தேன்” என்று கூறிக்கொண்டே கீழே குனிந்து பருமன் பருமனான புன்னைக் காய்கள் ஐந்தாறைப் பொறுக்கிய முடிநாகன் அவற்றைக் கனவேகமாக அருகிலிருந்து புன்னை மரங்களையெல்லாம் நோக்கி ஒசையெழும்படி வீசினான்.

காய்களை வீசியதும் அந்தப் புன்னை மரங்களிலிருந்து பேரோசையோடு புயலெழும்பியதுபோல் கத்தியபடி பறவைகள் மேலெழும்பின. பெரிய பெரிய சிறகுகளையுடைய அந்த கடற்பறவைகள் பெரும் கூட்டமாகப் பறந்துபோய் எதிரே இருந்த கபாடங்களின் குமிழ்களில் அமர்ந்ததும் கணிர் கணிரென்று நகரையே எழும்புவதுபோன்ற மணிஒலிப் பிரளயம் அதிசமாய் நிகழ்ந்தது. கீழே சிலவரிசை மணிகளில் மட்டுமே அவர்கள் பஞ்சு திணித்திருந்தனர். பஞ்சு திணிக்காத மேல்வரிசையின் மற்ற மணிகளில் எழும்பிய ஒலியே செவிகளை அதிரச் செய்தது. கொலைஞர்கள் பஞ்சுப் பொதிகளைப் போட்டுவிட்டு ஒட்டமெடுத்தனர். மணியோசையோ நிற்காமல் அவர்களைத் துரத்தியது.

“இந்தக் கடற்பறவைகள் பகலில் மதிலிலும் கதவுக் குமிழ்களிலும்தான் அமர்வது வழக்கம். இரவில் மரத்திலிருந்து இவற்றைக் கிளப்பிவிட்டால் எப்போதும் உடன் இரை தேடும் வழக்கமான மாற்றிடமாக எதிரே மிக அருகிலிருப்பவை மதிற்கவரும் கபாடங்களுமே. இவை கபாடங்களின் குமிழ்களில் அமர்ந்தால் மணிஓசை கிளர்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அதுதான் இதன் நுணுக்கமே தவிர இவற்றிற்கு நான் இப்படிச் செய்யும்படி மந்திரம் எதுவும் போடவில்லை இளையபாண்டியரே!” என்று முடிநாகன் அதைச் சாதாரணமாக விளக்கினாலும் – மந்திரம் போட்டு அனுப்பியதால்தான் அந்தப் பறவைகள் அப்படிச் செய்தன போல் இளையபாண்டியனுக்கு அது ஒர் அற்புதமாகவே தோன்றியது.

இந்தச் சாதுரியமான சிந்தனைக்காக முடிநாகனைத் திரும்பத் திரும்பப் பாராட்டினான் அவன். ஆனால் முடிநாகனோ அந்தப் பாராட்டெல்லாம் பெரியபாண்டியருக்குரியவை என்று பணிந்து விநயமாகத் தெரிவித்தான். பறவைகள் மணியொலி எழுப்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் கோட்டைக் காவல் வீரர்கள் வந்து கூடவிட்டதனால் கபாடங்களைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு ஒடிய அவுணர்களின் வழியில் அவர்களைப் பின்பற்றி மறைந்து மறைந்து நடந்தனர் இளையபாண்டியனும், முடிநாகனும். புறவீதியில் தாங்கள் குடியிருப்பிற்கு அண்மையில் இருந்த முரச மேடையினருகே சென்றதும் அங்கே இந்த அவுனர்களை எதிர் பார்த்து வேறு சிலரும் காத்திருப்பதைத் தொலைவிலிருந்த படியே கண்ட முடிநாகன் இளையபாண்டியருக்கு அதனைச் சுட்டிக்காட்டினான்.

இருவரும் மறைந்து நின்று அங்கு மேலே நடப்பதைக் கவனித்தனர். வீதியின் முகப்பில் மாபெரும் மேடையிட்டு மிகப் பெரியதாக அந்த முரசத்தைக் கட்டி நிறுத்தியிருந்த அவுனர்கள் அதை எந்த நோக்கத்தோடு அங்கே அமைத்திருக்கிறார்கள் என்ற ரகசியமும் அன்று இளையபாண்டியனுக்கும் முடிநாகனுக்கும் தெரிய நேர்ந்தது. அவர்கள் பார்த்துக்கொண்டு நின்றபோதே முரச மேடையின் அருகே நின்ற அவுணர்கள் நிலவொளியில் திடீர் திடீரென்று மாயமாக மறையலாயினர். கூர்ந்து நோக்கியபோது முக்கால் பனை உயரத்திற்கிருந்த அந்த முரசத்தின் கீழ்ப்பாகத்தில் அது பிறருக்குத் தெரியாத வண்ணம் சாதுரியமாக ஒரு சிறு நுழைவாயிலிருப்பதும் தெரிந்தது.

Source

Previous articleRead Kabadapuram ch 5 Na Parthasarathy
Next articleRead Kabadapuram ch 8 Na Parthasarathy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here