Home Kabadapuram Read Kabadapuram ch 8 Na Parthasarathy

Read Kabadapuram ch 8 Na Parthasarathy

170
0
kabadapuram,kabadapuram book,kabadapuram tamil novel,kabadapuram book pdf,kabadapuram novel,kabadapuram tamil novel,kapadapuram novel download pdf,kapadapuram novel download free,
Read Kabadapuram Ch 8 Free, Kabadapuram is a historical novel. Kabadapuram audiobook, Kabadapuram pdf kabadapuram,kabadapuram book,

Read Kabadapuram ch 8 Na Parthasarathy

கபாடபுரம்

அத்தியாயம் 8 : கண்ணுக்கினியாள் கருத்தில் கலந்தாள்

Read Kabadapuram ch 8 Na Parthasarathy

அவுணர்வீதி முரச மேடையிலிருந்து நுணுக்கமான உள் வழியில் புகுந்து காணவேண்டுமென்று இளைய பாண்டியன் விரும்பியும் முடிநாகன் அப்போது அதற்கு இணங்கவில்லை. ‘இளங்கன்று பயமறியாது’ – என்பதுபோல் பேசினான் சாரகுமாரன் :

“கொள்ளையிடுவதும் ஊனுண்ணுவதுமாகத்திரிந்த இந்த இராட்சதக் கூட்டத்திற்கு நாகரிக வாழ்வு கொடுத்தாரே பாட்டனார்; அவருக்காவது நன்றி செலுத்த வேண்டாமா இவர்கள்? இந்தக் கூட்டத்தினரால் எப்படித்தான் இவ்வளவு நன்றி விசுவாசமில்லாமல் வாழ முடிகிறதோ?”

“மனம் பண்படப் பண்படத்தான் நன்றியைப் போன்ற உயர்ந்த குணங்கள் எல்லாம் வருமென்று தங்கள் பாட்டனார் அடிக்கடி கூறுவார். எத்தனை காலம் நீரினுள் கிடந்தாலும் கல் இளகவோ மென்மை பெறவோ முடியாது. இந்தக் குறும்பர்கள் குணமும் அப்படித்தான்…”

“இருக்கலாம்! ஆனால் இவர்களை அப்படியே விட்டுவிட முடியாது. ‘ஓர் குறிக்கோளுடன் வாழ்கின்ற பெருங்குடி மக்களின் நகரமிது’ என்பதுபோல் தெய்வீகக் கபாடங்களுக்கு நிலைவைத்துப் பாட்டனார் படைத்த நகரமிது. இந்தக் கபாடங்களுக்கு வெளியே யார் எப்படி வாழ்ந்தாலும் கவலைப்படாமல் விட்டுவிடலாம். உள்ளே இருக்கிறவர்களின் தகுதியையும் ஒழுக்கத்தையும்பற்றி நாம் கவலைப்பட்டுத்தான் ஆகவேண்டும்.”

“இளையபாண்டியர் கவலைப்படுவதிலும், இந்த உட்பகையை நீக்குவதற்கான வழிவகைகளைச் சிந்திப்பதிலும் கவனம் செலுத்துவதும் சரிதான்! ஆனால் ஒன்றில் மட்டும் அவசரப் படக்கூடாது. சற்றே வயதுமுதிர்ந்தவன் என்ற முறையில் என் அறிவுரையைச் செவிசாய்த்துக் கேட்க வேண்டும். இந்த அகாலத்தில் முரசமேடைக்குக் கீழே உள்ள சுருங்கை வழியை ஆராயும் முயற்சி மட்டும் வேண்டாம். அதனாற் சில பல அசம்பாவிதங்கள் நேரிடலாமென்று தோன்றுகிறது.”

“சம்பவிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் நாம் நினைக்கிறபடிதான் நடக்கவேண்டுமா என்ன? அசம்பாவிதங்கள் நேருமென்பதையே ஒரு பெரிய பயமுறுத்தலைப் போலத் தெரிவிக்கிறாயே முடிநாகா!”

“பயமுறுத்தல் அல்ல வெறும் வேண்டுகோள்தான் நகர் பரிசோதனைக்காக அழைத்து வந்த தங்களைப் பத்திரமாகப் பாட்டனாரிடம் கொண்டுபோய் ஒப்படைக்க வேண்டுமென்பது என் விருப்பம். தயைகூர்ந்து இதற்குமட்டும் இளையபாண்டியர் செவிசாய்க்க வேண்டும்.”

முடிநாகனின் வேண்டுகோளுக்கு இணங்கினான் இளைய பாண்டியன். அவுணர்வீதி முரசமேடையிலுள்ள இரகசியங்களை அறிந்துகொள்ளத்துடிக்கும் துடிப்பும், துணிவும், ஆவலும், அதிகமாயிருந்தும் அவற்றை அடக்கிக்கொண்டு இருவரும் புறநகரிலுள்ள கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்றனர். குளிர்ந்த காற்று வீசும் மரங்களடர்ந்த புறநகர் விதிகள் இரவில் மிக வனப்பாயிருந்தன. யாருக்காகவோ உரத்த குரலில் அலைகளை எற்றி எற்றி அரற்றுவதுபோல் கடல் ஒசை தொலைவில் கேட்டுக்கொண்டிருந்தது! கடற்கரைக் கோடியில் உயரமான பாறை ஒன்றின் மேல் அமைந்திருந்த கலங்கரை விளக்கின் உச்சியில் விறகுகள் தீக்கொழுந்துகள் எழ எரிந்துகொண்டிருந்த காட்சியானது. அந்தரத்தில் பற்றி எரியும் செந்தீப்போல் தோற்றமளித்துக் கொண்டிருந்தது.

புறநகரப் புன்னைத் தோட்டத்தில் நிலா ஒளியிலும், கடற்காற்றிலும் உற்சாகமடைந்ததாலோ என்னவோ அங்கு வந்து தங்கியிருந்த பாணர்களும், விறலியர்களும், இசையிலும், கூத்திலுமாக உறங்காமற் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். யாழொலியும், இசைக் குரலொலியும் ஆடும் பாதங்களின் அழகு ஒலியும் நிறைந்து கடற்கரைப் புன்னைத் தோட்டம் கந்தர்வலோகமாயிருந்தது. நகர் பரிசோதனைக்காகப் புனைந்துகொண்ட மாறு வேடங்களில் இருந்த காரணத்தால் கூட்டத்தோடு கூட்டமாக ஒதுங்கி நின்று சாரகுமாரனும், முடிநாகனும் அவற்றை எல்லாம் காண வாய்ப்பிருந்தது. நகரணி மங்கல நாளுக்காகக் கோநகருக்கு வந்திருந்த கலைஞர்கள் வந்த இடத்தில் தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காகத் தங்களுக்குள்ளேயே பாடிய பாடல்களும், இசைத்த இசைகளும், ஆடிய ஆட்டங்களும், இணையற்ற தரத்திலிருந்தன.

“நோக்கமும் பயனும் எதிர்பாராத எல்லையில் கலைகள் தான் எத்தனை அழகாயிருக்கின்றன பார்த்தாயா முடிநாகா! பரிசிலை எதிர்பார்த்து அரண்மனைக் கொலு மண்டபத்துக்கு வரும்போது இவர்களில் பலர் தரமிழந்து விடுகிறார்கள். சொந்த மனத்தின் திருப்தியையே ஒரு சித்தியாக எதிர்பார்த்து அதற்காக ஏங்கிக்கொண்டே படைக்கும்போது அந்தக் கலைத்திறனுக்கு இணை சொல்லமுடியாமல் அது உயர்ந்துவிடுகிறது பார்!” என்று முடிநாகனின் காதருகே மெல்லக் கூறினான் இளையபாண்டியன். முடிநாகனும் அந்தக் கருத்தை வரவேற்றுப் பாராட்டுவதுபோல் இளையபாண்டியரை நோக்கிப் புன்முறுவல் பூத்தான். மணிபுரத்திலிருந்து இளையபாண்டியரைக் கோநகருக்கு அழைத்து வரும்போது-இடைவழியில் உதவிபெற்ற அந்தப் பெண்ணும் தன் பெற்றோர்களுடன் அதே கூட்டத்தில் இருந்தாள். அவள் அங்கே கூட்டத்தினிடையே அமர்ந்திருப்பதை முடிநாகன் பார்த்தான். சாரகுமாரனும் அவளைப் பார்த்திருக்க முடியுமென்று முடிநாகனால் அநுமானம் செய்ய முடிந்தது. அவளைப் பார்த்துவிட்டதன் காரணமாக-அவள் அக்கூட்டத்தில் பாடும் முறை வந்து அதையும் கேட்டுவிட்டுப் போகவேண்டுமென்ற ஆவலிலேயே இளையபாண்டியன் அங்கே தாமதம் செய்வதாக முடிநாகன் உய்த்துணர்ந்து கொண்டாலும் அதை இளையபாண்டியர் வாயிலாகவே வரவழைக்க விரும்பி அவரைப் பேச்சுக்கு இழுத்தான் அவன்.

“அரண்மனைக்குத் திரும்பலாமா? நேரமாகிறதே? பாட்டனார் ஒருவேளை நம்மை நினைத்து உறங்காமல் காத்துக் கொண்டிருப்பாரோ என்னவோ?”

“போகலாம்! இன்னும் சிறிதுநேரம் பொறுமையாக இரு” என்றான் இளையபாண்டியன். அவனுடைய கண்கள் அந்தக் கூட்டத்தினிடையே விண்மீன்களுக்கு நடுவே முழு மதிபோல் வீற்றிருந்த கண்ணுக்கினியாளைச் சுற்றிச் சுற்றி மீள்வதை முடிநாகன் கவனித்தும் கவனியாததுபோல் உள்ளுற நகைத்துக்கொண்டான். ‘காதல் குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடிப்பது கூடாது’ என்று கருதியவனைப்போல் வாளாவிருந்தான் அவன்.

அந்தக் கூட்டத்தில் ‘கண்ணுக்கினியாள்’ பாடும் முறை வந்தது. அமுதமாரி பொழிந்தாற்போல அவள் பாடியபோது இளையபாண்டியன் சிரக்கம்பம் செய்து இரசித்துக்கொண்டிருந்தான். அவள் கூத்திலும் வல்லவளாக இருந்ததனாலோ என்னவோ அக்கூட்டத்திலிருந்த முதிய பாணரும், பொருநரும், அவள் சிறிது நேரம் ஆடவும் வேண்டினர். யாழைப் பெற்றோர்யால் கொடுத்துவிட்டுப் பொற் கொடி மின்னலென அவள் பதம் பெயர்த்து ஆடியபோது சாரகுமாரன் அந்த எழிலின் வசப்பட்டு மனம் பறிகொடுத்தான். அவனுடைய இதயத்தில் பதியும் அன்பின் முதல் மலர்ச்சியாக இருந்தது அது.

சிகண்டியாரும், அவிநயனாரும் அவனுக்கு நூல்களையும் கலைகளையும் கற்பித்திருந்தார்கள். அவற்றின் காரணமாக அவன் பெற்றிருந்த நுண்ணுணர்வுகள் எல்லாம் இந்தப் பேதைப் பெண்ணுக்குத் தோற்றுப்போய் விட்டாற் போலிருந்தது இப்போது. உலகில் சில அழகுகள் கவனத்தைக் கவரும், இன்னும் சில அழகுகள் இதயத்தில் பதியும். மிகச் சில அழகுகளோ இதயத்தையே பறித்துக் கொண்டுபோய் மறுபடி வந்து இதயமாக உள்ளே உறையும். இந்த மூன்றாவது வகை அழகுணர்ச்சி உயிரோடு இரண்டறக் கலந்துவிடும் ஆற்றல் வாய்ந்தது. கண்ணுக்கினியாளின் அழகும் கலையும் அவனை அந்த நிலைக்கு ஆளாக்கியிருந்தன. தாமரைப் பூப்போன்ற அவள் கைகளும், பாதங்களும், செதுக்கி நிறுத்தினாற் போன்ற மின்னலிடையும், கலைவளர்ச்சியின் நிறைவைப் போலவே வஞ்சகமின்றிச் செழித்திருந்த அவள் உடல் வனப்பும், அங்கங்களின் செழுமையும், கூத்தின் போது உணர்வுகளை ஏந்தி விரையும் விழிகளின் நயமும், மலரும் சிரிப்பின் கவர்ச்சியும் அவன் மீது மாரவேள் கணைகளைத் தொடுத்தன.

“அழகை நிரூபிப்பதற்காகவே ஒரு காப்புக் கட்டிக் கொண்டு இந்தப் பெண்ணைப் படைத்திருக்கிறான் இறைவன்…”

“இந்தப் பெண்ணை மட்டுமென்ன? எல்லாப் பெண்களையும் இறைவன் அதே காரியத்திற்காகத்தான் படைத்திருக்க வேண்டும்!” என்று முடிநாகன் அதைப் பொதுப்பேச்சாக்கியபோது இளைய பாண்டியனுக்கு அவன் மேல் கோபம் வந்தது. ஆனால் அந்தக் கோபத்தை வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்ள முடியவில்லை.

இளைய பாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் அருகே நின்ற முதியவர் ஒருவர், “உருகுவதற்காக ஆண்பிள்ளைகளையும் உருக்குலைப்பதற்காகப் பெண்களின் அழகையும் படைத்திருக்கிறான் கடவுள்” என்று எங்கோ பாராக்குப் பார்த்தபடியே சொல்லி விட்டு நகர்ந்தார். அவரை வாதுக்கழைத்துக் கோபமாக உரையாட எண்ணினான் சாரகுமாரன். ஆனால் அவரோ இதைச் சொல்லிவிட்டு அவசர அவசரமாகப் போய்விட்டார். மேலும் அரை நாழிகைப் போதுக்கு மேல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் கழித்த பின்பே முடிநாகனும், இளையபாண்டியனும் அரண்மனைக்குத் திரும்பினர். வழியில் அந்தப் பெண்ணின் அழகை வியந்தபடியே பேசிவந்தான் இளையபாண்டியன். முடிநாகன் ஒன்றும் மறுத்துச் சொல்லவில்லை. அவர்கள் இருவரும் உறங்கச் செல்வதற்காக எந்தப் பள்ளிமாடத்துக்குப் போகவேண்டுமோ அந்தப் பள்ளிமாடத்தின் வாயிலில் கவலையோடு அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பெரிய பாண்டியர் வெண்தேர்ச்செழியர்.

Source

Previous articleRead Kabadapuram ch 7 Na Parthasarathy
Next articleRead Kabadapuram ch 9 Na Parthasarathy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here