Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch 2 Sandilyan | Tamilnovel.in

Read Kadal Pura Part 1 Ch 2 Sandilyan | Tamilnovel.in

246
0
Read Kadal Pura Part 1 Ch 2, kadal pura book online kadal pura online kadal pura pdf kadal pura read online Read Kadal Pura Part 1 Ch 2, kadal pura book online
Read Kadal Pura Part 1 Ch 2 Sandilyan | Tamilnovel.in

Read Kadal Pura Part 1 Ch 2 Sandilyan | Tamilnovel.in

கடல் புறா பாகம் 1

அத்தியாயம் 2 : அசைந்த திரை! அஞ்சன விழிகள்‌!

Read Kadal Pura Part 1 Ch 2 Sandilyan | Tamilnovel.in

பாலூர்ப்‌ பெருந்துறையின்‌ பிரும்மாண்டமான அந்தச்‌ சுங்க மண்டபத்தில்‌, பல நாட்டு வணிகரும்‌ மற்றோரும்‌ வாதிட்டதால்‌ விளைந்த கூச்சலையும்‌ மீறிக்‌ காவலர்‌ காதில்‌ விழும்படியாகக்‌ கலிங்கத்து மன்னனை நிந்தித்துக்‌ கருணாகர பல்லவன்‌ கூவிவிட்டதையும்‌, அந்த நிந்தனை காதில்‌ விழுந்ததும்‌ வாள்களின்‌ மேல்‌ கைகளை வைத்த வண்ணம்‌ காவலர்‌ இருவர்‌ அவனை அணுகத்‌ தொடங்கி விட்டதையும்‌ கண்ட சுங்க அதிகாரி அடியோடு நிலை குலைந்து திகைத்துப்‌ போய்விட்டானென்றாலும்‌,

அதற்குக்‌ காரணமான இளையபல்லவன்‌ மட்டும்‌, தன்னை எதிர்‌ நோக்கி வரும்‌ ஆபத்தைப்பற்றிச்‌ சிறிதும்‌ சிந்தியாமலும்‌, கோபம்‌ தலைக்கேறி நின்றதால்‌ விளைவைப்‌ பற்றி அறவே கவலைப்படாமலும்‌, உறையிலிருந்த தன்‌ வாளை வெகு வேகமாக உருவினான்‌.

சாதாரணமாக நிதானத்தை இழக்காதவனும்‌ திடபுத்தியள்ளவனுமான கருணாகர பல்லவன்‌ அன்று நிதானத்தை அறவே இழந்து உணர்ச்சிகளின்‌ வசப்பட்டு வாளை உருவியதற்குக்‌ காரணம்‌ இருக்கத்‌தான்‌ செய்தது. சுங்க அதிகாரி கூறிய விவரங்கள்‌ அப்‌பொழுதும்‌ அவன்‌ புத்தியில்‌ வலம்‌ வந்து வந்து இளமையின்‌ வேகத்தால்‌ ஏற்பட்ட அவன்‌ உணர்ச்சிகளை மேலும்‌ மேலும்‌ கொந்தளிக்கவே செய்தன.

அந்தக்‌ கொந்தளிப்பின்‌ விளைவு அவன்‌ வீரவதனத்தில்‌ இரத்தக்‌ குழம்பைப்‌ பாய்ச்சிச்‌ செக்கச்‌ செவேலென அடித்திருந்ததாலும்‌, அவன்‌ அணிந்திருந்த அங்கி பழுப்பு நிறம்‌ வாய்ந்திருந்ததாலும்‌, சுங்கச்‌ சாவடியின்‌ பல இடங்களில்‌ சுடர்விட்டுப்‌ பழுப்புக்‌ கட்டைகளுடனும்‌ சிவப்பு ஜ்வாலைகளுடனும்‌ நின்ற இப்பந்தங்களைப்‌ போலவே கருணாகர பல்லவனும்‌ அந்தப்‌ பெரும்‌ மண்டபத்தில்‌ நின்றான்‌.

பிற்காலத்தில்‌ கலிங்கத்‌தின்‌ பல பகுதிகளைக்‌ கொளுத்திவிட்ட அந்த இளைய பல்லவனுக்கு மட்டும்‌ வாய்ப்பு இருந்திருந்தால்‌, அந்தப்‌ பெரும்பணி சித்திரா பவுர்ணமியின்‌ அந்த இரவிலேயே நடந்திருக்கும்‌. அத்தனை கோபத்தைக்‌ கிளறி உணர்ச்சிகளைக்‌ கொதந்தளிக்கச்‌ செய்துவிட்ட செய்திகளைக்‌ கருணாகர பல்லவனின்‌ செவிகளில்‌ பாயச்சியிருந்தான்‌ சுங்க அதிகாரி இளையபல்லவனின்‌ இயற்கைக்‌ குணத்தை மட்டும்‌ சுங்க அதிகாரி முன்கூட்டி உணர்ந்திருந்ததால்‌, தன்னந்தனியே வந்திருக்கும்‌ ஓர்‌ இளைஞன்‌ ஆபத்தை விளைவிக்கக்‌ கூடிய செயல்களில்‌ அத்துமீறி இறங்கமாட்டான்‌ என்ற அசட்டு நம்பிக்கை மட்டும்‌ அவனுக்கு இருந்திராவிட்டால்‌, கலிங்கத்தில்‌ ஊழியம்‌ புரிந்தாலும்‌ தமிழனாகப்‌ பிறக்கும்‌ பாக்கியத்தைச்‌ செய்திராவிட்டால்‌, அவன்‌ வாயைத்‌ திறந்தே இருக்க மாட்டான்‌.

ஆனால்‌ பல்லவ முத்திரையுடன்‌ கூடிய மோதிரத்தை இளைய பல்லவன்‌ கரத்தில்‌ பார்த்தவுடன்‌ தமிழக அரச குடும்பத்‌தைச்‌ சேர்ந்த ஒருவனை நாசமாக விடக்கூடாது, எப்படியும்‌ காப்பாற்றியே தீரவேண்டும்‌ என்ற நல்லெண்ணத்‌திலேயே அவன்‌ இளையபல்லவனைத்‌ தனியாக அழைத்‌துச்‌ சென்று, பாலூரில்‌ உள்ள நிலையை மெல்ல மெல்ல விவரித்தான்‌.

அவன்‌ தன்னை முதன்‌ முதலில்‌ யாரென விசாரித்தபோது சற்றும்‌ வியப்பெய்தாமல்‌ கேள்விகளுக்குப்‌ பதில்‌ சொன்ன இளைய பல்லவன்‌, சுங்க அதிகாரி தன்னைத்‌ தனிமையில்‌ வரும்படி சைகை காட்டி அழைத்துச்‌ சென்றதும்‌ சற்று வியப்பே எய்தினான்‌.

தனி இடத்தை அடைந்ததும்‌, தன்னை ஊருக்குள்‌ செல்லவேண்டாமென்று அவன்‌ தடுக்கவே அந்த வியப்புப்‌பன்மடங்கு அதிகமாகியதால்‌, அகல விரிந்த கண்களைச்‌ சுங்க அதிகாரியின்மீது நிலைக்கவிட்டான்‌ கருணாகர பல்லவன்‌. இளைய பல்லவன்‌ முகத்திலும்‌ கண்களிலும்‌ விரிந்த வியப்பின்‌ சாயையைக்‌ கவனிக்கத்‌ தவறாத சுங்க அதிகாரி, சற்று வெறுப்புடன்‌ இதழ்களை மடித்து, “இளையபல்லவர்‌ வியப்படைய வேண்டிய நேரமல்ல இது” என்று சற்றுக்‌ கண்டிப்புத்‌ தொனித்த குரலில்‌ மெல்லக்‌ கூறினான்‌.

இளைய பல்லவனின்‌ இமைகள்‌ சற்றே உயர்ந்தன. கூர்‌ விழிகள்‌ சுங்க அதிகாரியை நன்றாக ஊடுருவிப்‌ பார்த்தன. பிறகு அவன்‌ இதழ்களிலிருந்து உதிர்ந்த சொற்களில்‌ ஏளனமும்‌ தொனித்தன. “வியப்பை விதைத்தவர்‌ தாங்கள்‌ விதைத்தபின்‌ விளைவை எப்படித்‌ தடுக்க முடியும்‌? ” என்று ஏதோ தத்துவ வினாவை விடுப்பவன்‌ போல்‌ கேட்டான்‌ கருணாகர பல்லவன்‌.

பல்லவனின்‌ அந்தப்‌ பதில்‌ மிகவும்‌ விசித்திரமாயிருந்ததால்‌ சுங்க அதிகாரியின்‌ முகத்திலும்‌ வியப்புக்குறி லேசாகப்‌ படரவே, அவனும்‌ திருப்பிக்‌ கேட்டான்‌, “என்ன ! வியப்புக்கு வித்தட்டவன்‌ நானா? ” என்று.

“சந்தேகமென்ன ! தாங்கள்தானே இங்கு தனிமையில்‌ வரும்படி என்னை அழைத்தீர்கள்‌? ” என்று வினவினான்‌ கருணாகர பல்லவன்‌.

“ஆமாம்‌. அதில்‌ வியப்புக்கு இடமெங்கே இருக்கிறது? ” என்று வினவினான்‌ சுங்க அதிகாரி.

“பூம்புகாரிலிருந்து மரக்கலத்தில்‌ வருகிறேன்‌; அதுவும்‌ அரசாங்க அலுவலாகப்‌ பாலூர்ப்‌ பெருந்துறையில்‌ இறங்குகிறேன்‌. சுங்கச்சாவடியில்‌ சோதனைக்கு இடமில்லாமல்‌ செல்ல என்‌ முத்திரை மோதிரத்தையும்‌ காட்டுகிறேன்‌. உடனே தாங்கள்‌ என்னைச்‌ செல்ல அனுமதித்திருக்க வேண்டும்‌. அதுதான்‌ நியாயமாக நடக்கக்‌ கூடியது. ஆனால்‌ அனுமதிக்கவில்லை. தனிமையில்‌ பேச அழைக்கிறீர்கள்‌. மற்றச்‌ சுங்க அதிகாரிகளுக்கு எட்டாக்‌ கையாக இருக்கும்‌ இந்த இடத்துக்கு அழைத்து வருகிறீர்கள்‌. அது மட்டுமல்ல, ஊருக்குள்‌ செல்ல விரும்பும்‌ என்னைத்‌ தடையும்‌ செய்கிறீர்கள்‌. இத்தனைக்கும்‌ வியப்படையாமல்‌ எந்த மனிதனால்‌ இருக்க முடியும்‌” என்று கேட்டான்‌ கரணாகர பல்லவன்‌, சற்றே இகழ்ச்சியுடன்‌ இளநகை கூட்டி.

சுங்க அதிகாரி தன்‌ இதழ்களையும்‌ சிறிது ஒருபுறம்‌ இழுத்துத்‌ தனக்கும்‌ இகழ்ச்சி முறுவல்‌ கூட்ட முடியும்‌ என்பதை நிரூபித்தான்‌. பேச்சிலும்‌ தான்‌ இளைய பல்லவனுக்குச்‌ சோடையில்லையென்பதைக்‌ காட்டத்‌ தொடங்கி, “நீங்கள்‌ சொல்லுவதிலும்‌ பொருளிருக்கிறது. வியப்புக்கும்‌ இடமிருக்கத்தான்‌ செய்கிறது” என்று கூறி வியப்புக்கும்‌ என்ற சொல்லில்‌ கடைசி “உம்மைச்‌ சற்று அழுத்தியும்‌ உச்சரித்தான்‌.

“வியப்புக்கும்‌ என்றால்‌ வேறு உணர்ச்சிக்கும்‌ இடமிருக்கிறது என்கிறீரா? ” என்று வினவினான்‌ இளைய பல்லவன்‌.

“ஆம்‌. தங்கள்‌ நிலையில்‌ நானிருந்திருந்தால்‌ வியப்புக்கு இடமளிக்க மாட்டேன்‌. ”

“வேறு எதற்கு இடமளிப்பீர்‌ !”

“எச்சரிக்கைக்கு. ”

“எதைப்‌ பற்றி எச்சரிக்கை? “

“தங்கள்‌ உயிரைப்பற்றி!”

இதைக்‌ கேட்டதும்‌ இளையபல்லவன்‌ அதிர்ச்சியடைந்து விடுவானென்று சுங்க அதிகாரி எதிர்பார்த்‌திருந்ததால்‌ அவன்‌ ஏமாந்தே போனான்‌. கருணாகரனின்‌ விழிகளில்‌ மேலும்‌ வியப்பின்‌ சாயையே படர்ந்தது. அந்த வியப்பு குரலிலும்‌ தொனிக்கக்‌ கேட்டான்‌, “அரசாங்க அலுவலாக வந்திருக்கிறேன்‌. இதோ இந்தப்‌ பையில்‌ சோழ மன்னனின்‌ ஆ க்ஞாபத்திரம்‌ இருக்கிறது. நான்‌ அரசாங்கத்‌தூதன்‌ என்னைக்‌ காப்பாற்றுவது கலிங்கத்து மன்னனின்‌ கடமை. அப்படியிருக்க என்‌ உயிருக்கு என்ன ஆபத்து நேரிட முடியும்‌? ” என்று.

“முதலில்‌ உயிருக்கு ஆபத்து நேரிடாது” என்று பணிவு டன்‌ ஒப்புக்கொண்ட சுங்க அதிகாரியின்‌ குரலில்‌ ஏளனம்‌ ஒலித்தது.

“பின்னால்‌ ஏற்படுமா? ” இளைய பல்லவன்‌ சற்று நிதானத்தைக்‌ கைவிட்டுக்‌ கேட்டான்‌, இந்தக்‌ கேள்வியை.

“ஆமாம்‌. முதலில்‌ சிறையில்தான்‌ தள்ளுவார்கள்‌. பிறகு சமயம்‌ பார்த்து… ” என்று வாசகத்தை முடிக்காமல்‌ விட்ட சுங்க அதிகாரி, கழுத்தில்‌ தன்‌ கையை வைத்துச்‌சரேலென்று குறுக்கே இழுத்து முடிவு என்னவென்பதை அடையாளத்தால்‌ காட்டினான்‌.

இளையபல்லவன்‌ முகத்திலிருந்த வியப்புடன்‌ மெல்ல மெல்லக்‌ கோபமும்‌ கலந்துகொள்ளவே, “இளைய பல்லவனான என்னையுமா சிறையில்‌ தள்ளுவார்கள்‌? ” என்று சற்றுச்‌ சீற்றத்துடனேயே கேட்டான்‌.

“தங்களைத்தான்‌ முக்கியமாகத்‌ தள்ளுவார்கள்‌!” என்று பதில்‌ சொன்னான்‌ சுங்க அதிகாரி.

“வீர ராஜேந்திர சோழதேவரின்‌ ஆ க்ஞா பத்திரத்தை வைத்திருக்கும்‌ என்னையா? ” இம்முறை கேள்வியில்‌ கோபம்‌ பூர்ணமாக ஒலித்தது.

“அந்த ஆ க்ஞா பத்திரம்தான்‌ தங்களுக்கு எமன்‌? “

“என்ன உளறுகிறீர்‌? கலிங்கத்துக்கு அமைதியை அளிக்கும்‌ சாஸனம்‌ அது. ”

“ஆனால்‌ அந்தச்‌ சாஸனம்‌ கலிங்கத்தின்‌ துறைமுகங்‌களைச்‌ சோழர்கள்‌ ஆதிக்கத்திற்குள்‌ கொண்டு வரும்‌ நோக்கமுடையது. ”

இதைக்‌ கேட்டதும்‌ கருணாகர பல்லவன்‌ திக்பிரமை பிடித்து நின்றான்‌. மிகவும்‌ ரகசியமாகத்‌ தன்னிடம்‌ வீரராஜேந்திர சோழதேவர்‌ அளித்த ஆ க்ஞா பத்திரத்தில்‌ அடங்கிய விவரங்கள்‌, கலிங்கத்தின்‌ ஒரு மூலையிலுள்ள பாலூர்‌ துறைமுகத்தின்‌ சாதாரண ஒரு சுங்க அதிகாரிக்குத்‌ தெரிந்திருப்பதை அறிந்ததும்‌, மீண்டும்‌ சொல்ல வொண்ணா வியப்பின்‌ வசப்பட்டுக்‌ கையைக்கூட அசைக்‌காமல்‌ நிலைத்து நின்றுவிட்ட இளைய பல்லவனை நோக்கிய சுங்க அதிகாரி, “மீண்டும்‌ வியப்பையே அடைகிறீர்கள்‌ இளையபல்லவரே அதற்கு நேரமில்லை. எச்சரிக்‌கைக்குத்தான்‌ நேரம்‌ என ஆரம்பத்திலேயே சொன்னேன்‌,” என்று ஏளனத்துடன்‌ கூறிவிட்டு, பிறகு குரலைத்‌ தணித்துக்‌ கொண்டு மேலும்‌ சொன்னான் “இளைய பல்லவரே! கலிங்கத்தின்‌ நிலை தாங்கள்‌ எண்ணி வந்ததுபோல்‌ இல்லை. வீர ராஜேந்திர சோழதேவர்‌ கலிங்கத்துடன்‌ சமாதானத்தை விரும்பலாம்‌. ஆனால்‌ தென்‌ கலிங்கத்து மன்னன்‌ பீமனோ, வட கலிங்கத்து மன்னன்‌ அனந்தவர்‌ மனோ சோழநாட்டுடன்‌ சமாதானத்தை விரும்பவில்லை.

சென்ற ஆண்டில்‌ கூடல்‌ சங்கமத்திலும்‌, அதற்கு முன்பு கொப்பத்திலும்‌ நடந்த போர்களைக்‌ கலிங்கத்து மன்னர்‌கள்‌ இன்னும்‌ மறக்கவில்லை. படைகளை அணிவகுப்‌பதிலும்‌ நடத்துவதிலும்‌ இணையற்றவரென்று பாரதம்‌ புகழும்‌ மேலைச்‌ சாளுக்கிய சோமேச்வர மாமன்னரையே முறியடித்த சோழ மன்னர்களின்‌ பெரும்‌ பலத்தைக்‌ கண்டும்‌ சோழ சாம்ராஜ்யம்‌ மேற்கொண்டு விரிவடைந்து கொண்டே கலிங்கத்தின்‌ வாசலுக்கும்‌ வந்துவிட்டதைப்‌ பார்த்தும்‌ கலிங்கம்‌ திகிலடைந்திருக்கிறது. வேங்கி நாட்டில்‌ சதா உலவும்‌ கலிங்கத்தின்‌ ஒற்றர்கள்‌, கலிங்கத்தின்‌ துறைமுகங்களின்‌ அதிக்கத்தை வீர இராஜேந்திர சோழ தேவர்‌ விரும்புவதாகவும்‌, அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்‌ கொள்ளக்‌ கலிங்கத்தின்மீது படையெடுக்கவும்‌ அவர்‌ தயாரென்றும்‌ செய்தி கொண்டு வந்திருப்பதாகப்‌ பாலூரில்‌ பெரும்‌ வதந்தி சில நாள்களாக உலவுகிறது. இந்த வதந்தியின்‌ விளைவோ என்னவோ எனக்குத்‌ தெரியாது

பாலூரிலுள்ள தமிழ்ப்‌ பெருவணிகர்கள்‌ பலரும்‌, படைவீரர்கள்‌ சிலரும்‌ சிறைகளில்‌ தள்ளப்பட்டிருக்கிறார்கள்‌… ”

இதற்குமேல்‌ சுங்க அதிகாரி பேசவில்லை. இளைய பல்லவன்‌ என்ன சொல்லப்‌ போகிறானென்பதைக்‌ கவனிக்கச்‌ சற்றே தன்‌ பேச்சை நிறுத்தினான்‌. இளைய பல்லவனின்‌ முகத்தில்‌ சிந்தனையின்‌ சாயை தீவிரமாகப்‌ படர்ந்தது. அவனும்‌ சில விநாடிகள்‌ பேசாமலே நின்று கொண்டு, சுங்க அதிகாரி விவரித்துச்‌ சொன்ன விஷயங்‌களை மீண்டும்‌ மீண்டும்‌ அலசிப்‌ பார்த்தான்‌.

முதலாம்‌ ராஜேந்திர சோழ தேவர்‌ கங்கை கொள்ளப்‌ பெரும்‌ படையனுப்பிய காலத்துக்கு முன்பிருந்தே சோழ நாட்‌டுடன்‌ பகைமையும்‌ சாளுக்கியர்களுடன்‌ தோழமையும்‌ பாராட்டிய கலிங்க நாடு, திடீரெனத்‌ தம்முடன்‌ சமா தானத்துக்கு இசையும்‌ என்று வீர ராஜேந்திர சோழ தேவர்‌ எப்படி எண்ணினார்‌? கொப்பத்தில்‌ ராஜாதி ராஜனாலும்‌, இளவரசன்‌ இரண்டாவது ராஜேந்திரனாலும்‌, கூடல்‌ சங்கமத்தில்‌ இரண்டாவது ராஜேந்திரனாலும்‌, அவர்‌ மகன்‌ ராஜ மகேந்திரனாலும்‌ சாளுக்கியர்கள்‌ அடைந்த பெரும்‌ தோல்விகளுக்குப்‌ பிறகு கலிங்கம்‌ கலங்குவது இயற்கைதானே? ” என்று தன்னைத்தானே கேட்டுக்‌ கொண்ட கருணாகர பல்லவன்‌, இருப்பினும்‌, போர்களை விடச்‌ சமாதானம்‌ சிறந்ததல்லவா? சில துறை முகங்‌களைக்‌ கலிங்கம்விட்டுக்‌ கொடுத்தால்தான்‌ என்ன? போர்‌களை நிறுத்தலாம்‌.

மக்கள்‌ மாளமாட்டார்கள்‌ என்றும்‌ மனத்திற்குள்‌ சொல்லிக்கொண்டான்‌.

அவன்‌ மனத்திலோடிய எண்ணங்களைச்‌ சுங்க அதிகாரி புரிந்துகொண்டிருக்க வேண்டும்‌. ஆ கவே அவன்‌, “இளைய பல்லவரே! கலிங்கத்தின்‌ துறைமுகங்களை, அதுவும்‌ முக்கியமாக இந்தப்‌ பாலூர்ப்‌ பெருந்துறையை, சோழ மன்னர்‌ விரும்பும்‌ காரணம்‌ கலிங்க மன்னர்களுக்கு நன்றாகத்‌ தெரியும்‌” என்றான்‌.

“என்ன காரணம்‌? ” என்று வினவினான்‌ இளைய பல்லவன்‌.

“புகாரும்‌, புதுவையும்‌, சோழகுலவல்லியும்‌, கொற்‌கையும்‌, தமிழகத்தின்‌ பெரும்‌ துறைமுகங்கள்தான்‌. ஆனால்‌ அவற்றைவிடச்‌ சிறந்தது இந்தப்‌ பாலூர்த்‌ துறைமுகம்‌” என்று சுட்டிக்‌ காட்டினான்‌ சுங்க அதிகாரி.

“எப்படி!”

சுங்க அதிகாரி மிகுந்த அமைதியுடன்‌ சொன்னான்‌ “இது சொர்ண பூமியின்‌ திறவுகோல்‌,” என்று கருணாகர பல்லவன்‌ புரிந்துகொண்டும்‌ புரிந்து கொள்ளாதவன்போல்‌ கேட்டான்‌, “சொர்ணபூமியின்‌ திறவுகோலா? ” என்று.

“ஆம்‌ இளையபல்லவரே ! வைரமும்‌ வைடூரியமும்‌ பதிக்கப்‌ பெற்ற மணிக்கதவுகள்‌ உள்ள கடாரத்துக்கும்‌, தங்கம்‌ மண்ணிலே கொழித்துக்‌ கிடக்கும்‌ சொர்ணத்‌ தீவுக்கும்‌ இந்தப்‌ பாலூர்ப்‌ பெருந்துறைதான்‌ திறவுகோல்‌. இந்தத்‌ துறைமுகத்திலிருந்துத்ன்‌ வசதியான காற்று தென்கிழக்கு நோக்கி அடிக்கிறது. புகாரிலிருந்தும்‌, புதுவையிலிருந்தும்கூடச்‌ செல்லலாம்‌. ஆனால்‌ அந்தப்‌ பிராந்தியங்‌களில்‌ சில சமயங்களில்‌ அடிக்கும்‌ பெரும்‌ காற்றுகள்‌ கப்பல்களைத்‌ திசை மாறச்‌ செய்திருக்கின்றன.

மூழ்கிய கப்பல்களின்‌ எண்ணிக்கையும்‌ அதிகம்‌. ஆனால்‌ பாலூர்ப்‌ பெருந்துறையிலிருந்து தென்கிழக்கில்‌ சென்றால்‌ எந்த ஆபத்துமில்லை. ஆ கவே இந்தப்‌ பாலூர்ப்‌ பெருந்துறையை உடைய நாடு, தென்கிழக்கு நாடுகளின்‌ வாணிபத்தின்‌ முழுப்‌ பலனை அடையும்‌ கடாரத்தை வெற்றி கொண்டு மரகதத்‌ தோரணத்தையும்‌ ஆபரண வாயிலையும்‌ கொண்டு வந்தும்‌ முதலாம்‌ ராஜேந்திரரின்‌ கடற்படை இங்கிருந்துதான்‌ கிளம்பியது. இதையெல்லாம்‌ கலிங்கர்கள்‌ அறிவார்‌கள்‌. ஆ கவே உயிரைக்‌ கொடுத்தாலும்‌ வாணிபம்‌ கொழிக்‌கும்‌ இந்தப்‌ பெருந்துறையைக்‌ கொடுக்க மாட்டார்கள்‌!” என்று பதில்‌ சொன்னான்‌ சுங்க அதிகாரி.

“ஆ கவே… ”

“உங்களுக்கு ஆபத்து ஊருக்குள்‌ காத்திருக்கிறது. நீங்கள்‌ வருவது மட்டுமல்ல, வரும்‌ அலுவல்‌ மட்டுமல்ல, இந்தப்‌ பெருந்துறையில்தான்‌ இறங்குவீர்கள்‌ என்பதும்‌ தென்கலிங்க மன்னருக்குத்‌ தெரிந்திருக்கிறது. ”

“அப்படியா!”

“ஆமாம்‌ இளையபல்லவரே ! ஆ க, நீங்கள்‌ ஊருக்குள்‌ போவதானால்‌ மாற்று உடையில்‌ போக வேண்டும்‌. அதுவும்‌ நள்ளிரவில்‌ போக வேண்டும்‌. ”

“அத்தனை எச்சரிக்கை தேவையா? “

“அவசியம்‌ தேவை. ஊர்‌ முழுதும்‌ படை நடமாட்டமிருக்கிறது. தமிழர்கள்‌ பலரைச்‌ சந்தேகத்தின்மேல்‌ சிறை செய்திருக்கிறார்கள்‌ என்று முன்பே சொன்னேனல்லவா? அது மட்டுமல்ல… ” குரலை மிகவும்‌ தாழ்த்தினான்‌ சுங்க அதிகாரி.

கருணாகரன்‌ முகத்தில்‌ மெல்ல மெல்லக்‌ கோபம்‌ துளிர்த்தது. “இன்னும்‌ என்ன தேவை, தமிழர்களை அவமதிக்க? ” என்று சீறினான்‌.

“தேவையானது நடந்திருக்கிறது. தமிழர்கள்‌ வீதியில்‌ நடமாடினாலும்‌ கண்காணிப்பு இருக்கிறது,” என்றான்‌ சுங்க அதிகாரி.

“என்ன அக்கிரமம்‌! சாதாரண மக்களையெல்லாம்‌ ஒற்றர்களாக எண்ணுகிறானா பீமன்‌? ” என்று சிறிய இளையபல்லவனின்‌ குரலில்‌ அதிகக்‌ கொந்தளிப்பு தெரிந்தது.

அந்தக்‌ கொந்தளிப்பைக்‌ கவனிக்காத சுங்க அதிகாரி மேலும்‌ தன்‌ சாமர்த்தியத்தைக்‌ காட்டி, “அது மட்டுமல்ல… ” என்று ஆரம்பித்தான்‌.

“எது மட்டுமல்ல? ” என்று மீண்டும்‌ சீறினான்‌ இளையபல்லவன்‌.

“இரவில்‌ தமிழர்‌ யாரும்‌ ஊரில்‌ நடமாட அனுமதிக்கப்‌படுவதில்லை. அது மட்டுமல்ல… ”

இந்த அது மட்டுமல்ல பெரும்‌ கசப்பாயிருந்ததால்‌முகத்தைச்‌ சுளித்தான்‌ கருணாகர பல்லவன்‌. “ஒவ்வொன்றாகச்‌ சொல்ல வேண்டாம்‌; முழுவதையும்‌ ஒரே அடியாகச்‌ சொல்லித்‌ தொலையும்‌!” என்று எரிந்தும்‌ விழுந்‌தான்‌. அந்த முகச்‌ சுளிப்பையும்‌ எரிச்சலையும்‌ கொந்தளிப்‌பாக அடிக்கப்‌ பெரும்‌ கொள்ளியை இளைய பல்லவனின்‌ உணர்ச்சிகளில்‌ செருகினான்‌ சுங்க அதிகாரி. “அது மட்டுமல்ல இளைய பல்லவரே ! சோழ வம்ச இளவலும்‌ நேற்றுச்‌ சிறை செய்யப்பட்டிருக்கிறார்‌” என்று அக்கம்‌ பக்கம்‌ பார்த்து மிக மெதுவான குரலில்‌ கூறினான்‌.

“யாரது? ” எரிமலை குமுறும்‌ குரலில்‌ எழுந்தது இளையபல்லவனின்‌ கேள்வி.

“ஆம், மங்காதேவியின்‌ மகன்‌! ராஜராஜ நரேந்திரன்‌ செல்வன்‌!” என்றான்‌ சுங்க அதிகாரி.

எரிமலை திடீரென வெடித்தது. “அத்தனை துணிவா கலிங்கத்துப்‌ பீமனுக்கு? ” என்று. கோபம்‌ கொந்தளிக்கக்‌ குரலில்‌ கனல்‌ பொறிகள்‌ சிதறக்‌ கூவினான்‌ கருணாகர பல்லவன்‌. அதைக்‌ கேட்டுத்‌ திகைத்துப்போன சுங்க அதிகாரி, சுயநிலை அடையுமுன்பாக, வாள்‌ தாங்கிய காவல்‌ வீரரிருவர்‌ இளையபல்லவனை அணுகிவிட்டதால்‌, மேற்கொண்டு என்ன செய்வது என்பதை அறியாமல்‌ தத்தளித்தான்‌ சுங்க அதிகாரி. நிதானத்தைத்‌ தான்‌ இழந்து விட்டதால்‌ நிலைமை மீறிவிட்டதை உணர்ந்த கருணாகர பல்லவன்‌ மின்னல்‌ வேகத்தில்‌ தன்‌ வாளை உருவிக்‌காவல்‌ வீரர்‌ இருவரின்‌ வாள்களையும்‌ சரேலெனத்‌ தடுத்‌தான்‌. அதே நேரத்தில்‌, கச்சையில்‌ வயிற்றுக்கு நேரேயிருந்ததன்‌ குறுவாளை எடுத்து ஒரு காவலன்‌ வயிற்றில்‌ பாய்ச்சிக்‌கொண்டே அகலமான தன்‌ பெருவாளை மற்றொரு வீரன்‌ கழுத்தில்‌ பாய்ச்சினான்‌.

மின்னல்‌ வேகத்தில்‌ நிகழ்ந்துவிட்ட அந்த விபரீதத்‌தாலும்‌ காவலரிருவர்‌ திடீரெனத்‌ தரையில்‌ சாய்ந்துவிட்டதாலும்‌, அடுத்த வினாடி அந்தப்‌ பெரும்‌ சுங்க மண்டபம்‌ அமளி துமளிப்பட்டது. கண்ணிமைக்கும்‌ நேரத்தில்‌ இருகாவல்‌ வீரரை வானுலகுக்கு அனுப்பிய கருணாகர பல்லவனைச்‌ சூழ மற்றும்‌ சில வீரர்‌ விரைந்தாலும்‌, அவர்கள்‌ சூழ்வதற்கு முன்பே வணிகர்களிடம்‌ அச்சம்‌ ஏற்பட்டு அவர்கள்‌ சரக்குகளைக்‌ காப்பாற்றப்‌ பெரும்‌ கோஷத்தைக்‌ கிளப்பி அங்குமிங்கும்‌ ஓடியதால்‌ காவலர்‌, வணிகர்‌, அடிமைகள்‌ இவர்கள்‌ கலந்துபோய்விட்டதாலும்‌,

இந்தக்‌ குழப்பத்தில்‌ ஓரிரு பந்தங்களும்‌ தளைகளிலிருந்து கீழே விழுந்துவிட்டதாலும்‌, நிலைமையை நன்றாகப்‌ பயன்‌படுத்திக்‌ கொண்ட கருணாகரன்‌ திடீரென வர்த்தர்களுக்‌ இடையே பதுங்கி மறைந்து ஓரமாக ஒதுங்கு ஒதுங்கி வெளியே வந்து தன்‌ புரவியை அவிழ்த்து ஏறப்‌ போனவனை, கையைப்‌ பிடித்துத்‌ தடுத்த சுங்க அதிகாரி, “வேண்டாம்‌, புரவியை நான்‌ பார்த்துக்கொள்கிறேன்‌ இப்படி வாருங்கள்‌” என்று சுங்கச்‌ சாவடியின்‌ மறைவிடமொன்றுக்கு அழைத்துச்‌ சென்று, “இந்தாருங்கள்‌, இந்த மேலங்கியால்‌ உங்களை நன்றாக மறைத்துக்‌ கொள்ளுங்கள்‌.

இது அராபியர்‌ உடை, தலையிலிருந்து கால்‌ வரைக்கும்‌ மறைக்கும்‌. அதோ போகும்‌ அராபிய வணிகர்‌ கூட்டத்‌துடன்‌ கலந்து ஊருக்குள்‌ நுழையுங்கள்‌. கூலவாணிகன்‌ விடுதிக்குப்‌ பிறகு செல்லலாம்‌. ஊருக்குள்‌ நுழையுங்கள்‌. நுழைந்ததும்‌ வெளிநாட்டு வணிகர்‌ தங்கும்‌ பெரும்‌ வீதிக்குள்‌ சென்றால்‌ அங்கு தங்க இடமும்‌ இருக்கிறது. தமிழரை அந்த இடத்தில்‌ யாரும்‌ தேடவும்‌ மாட்டார்கள்‌. அங்கு இருங்கள்‌ பிறகு சந்திக்கிறேன்‌” என்று கூறிவிட்டு, அராபியர்‌ அங்கியொன்றையும்‌ அளித்துவிட்டுப்‌ பழையபடி சுங்கச்‌ சாவடியிருந்த கட்டடத்துக்குள்‌ நுழைந்தான்‌.

சுங்க அதிகாரியின்‌ சொற்களை நன்றாக மனத்தில்‌ பதித்துக்‌ கொண்ட கருணாகர பல்லவன்‌, அடுத்த விநாடி அங்கு நிற்காமல்‌ பாலூர்ப்‌ பெருந்துறையின்‌ கோட்டை வாயிலுக்குச்‌ செல்லும்‌ அராபியர்‌ கூட்டங்களுடன்‌ கலந்து சென்றான்‌. கோட்டைக்‌ காவலர்‌ ஒவ்வொருவரையும்‌ தனிப்படப்‌ பரிசோதனை செய்தே உள்ளே அனுமதித்‌தார்கள்‌. கருணாகர பல்லவன்‌ வாயிலை அணுகியதும்‌ திடீரெனத்‌ தலை கவிழ்ந்து, ஏற்கெனவே சோதனை செய்யப்பட்ட அராபிய வணிகன்‌ ஒருவனது மூட்டையை எடுத்துக்‌ கொண்டு அவனைத்‌ தொடர முற்பட்டான்‌.

காவலன்‌ முதலில்‌ அவனைப்‌ போக அனுமதித்துவிட்டாலும்‌, கால்புறத்தில்‌ சற்றே தூக்கியிருந்த அவன்‌ மேலங்கியிலிருந்து தலை நீட்டிய வாளின்‌ நுனியைப்‌ பார்த்ததும்‌, “ஏய்‌! வா! இப்படி!” என்று அழைத்தான்‌.

கருணாகர பல்லவன்‌ திடீரென அங்கியைக்‌ கழற்றிக் ‌காவலன்‌ முகத்தில்‌ எறிந்ததன்றி, அடுத்த விநாடி. தன்னைச்‌ சூழ்ந்நகொண்ட நாலைந்து காவலரைத்‌ தன்‌ வாள்‌வீச்சினால்‌ விலக்கிக்கொண்டு ஓரிருவரை வெட்டிப்‌ போட்டுவிட்டு, அந்தப்‌ பெரும்‌ துறைமுக நகரின்‌ வீதிகளில்‌ எங்கு போகிறோம்‌ என்பதை அறியாமல்‌ ஓடினான்‌. அவனைத்‌ தொடர்ந்து பத்துப்‌ பதினைந்து காவலரும்‌ விரைந்தனர்‌.

பாலெனக்‌ காய்ந்து கொண்டிருந்த அந்த வெண்ணிலவில்‌ பாலூர்ப்‌ பெருநகரத்தின்‌ நடுப்பகுதி வெள்ளை வேளேரென்றும்‌, வீடுகளின்‌ தாழ்வாரங்களில்‌ நிழலடித்தும்‌ பக்கப்‌ பகுதிகள்‌ கரேலென்று இருட்டாகவும்‌ தெரிந்ததால்‌, அந்த நகரம்‌ இருளும்‌, ஒளியும்‌, நன்மையும்‌ தமையும்‌ கலந்த மனித இதயம்போல்‌ காட்சியளித்தது. வீரர்கள்‌ கண்களில்‌படாமல்‌ இருள்‌ அடித்த பகுதிகளிலேயே ஓடினாலும்‌,வீரர்கள்‌ அவன்‌ காலடி ஒலியைக்‌ கொண்டே அவனைத்‌ துரத்திச்‌ சென்றார்கள்‌.

எந்த வினாடியிலும்‌ தான்‌ அகப்‌பட்டுக்‌ கொள்ளலாம்‌ என்பதைக்‌ கண்டதும்‌ என்ன செய்வதென்பதை அறியாமல்‌ திடீரெனப்‌ பக்கத்திலிருந்த மாளிகைத்‌ தாழ்வாரத்தில்‌ பதுங்கினான்‌. பிறகு மெல்லமெல்ல இருளடித்துக்‌ கிடந்த மாடிக்‌ கூரைப்‌ பகுதி மீது தொற்றி ஏறவும்‌ தொடங்கினான்‌.

அந்தப்‌ பல அடுக்கு மாளிகையின்‌ சுவர்களில்‌ நீண்டிரந்த கைப்பிடிகளைப்‌ பிடித்த வண்ணம்‌ அபாய நிலையில்‌ நடந்து நடந்து தொற்றி ஏறி, இரண்டாவது அடுக்கின்‌ தாழ்வரையை அடைந்த இளையபல்லவன்‌, கீழே கருமையுடன்‌ தெரிந்த அதல பாதாளத்தையும்‌, தான்‌ பிடித்திருந்த மெல்லிய தாழ்வரைச்‌ சுவரையும்‌ பார்த்து, பிடி சிறிது பிசகினாலும்‌ மரணம்‌ நிச்சயம்‌ என்பதை உணர்ந்து கொண்டான்‌.

இருப்பினும்‌ மிகுந்த எச்சரிக்கையுடன்‌ நடந்து ஒரு மூலைக்கு வந்ததும்‌, அடுத்து ஒரு சாளர மிருப்பதைக்‌ கண்டு, அந்தச்‌ சாளரத்தை எட்டிப்‌ பிடித்து வெகு லாகவமாகத்‌ தன்‌ உடலை அதில்‌ சாய்த்து ஓசைப்‌படாமல்‌ அங்கிருந்த அறைக்குள்‌ குதித்தான்‌.

அறையில்‌ யாருமில்லாதது பெரும்‌ ஆறுதலாயிருந்தது இளைய பல்லவனுக்கு. அறையிலிருந்த சிறு விளக்குகூட மங்கலான ஒளியைத்தான்‌ பரப்பியது. அந்த மங்கலான ஒளியிலிருந்தும்‌ தன்னைக்‌ காப்பாற்றிக்கொள்ள எண்ணிய கருணாகர பல்லவன்‌, அந்த அறையின்‌ ஓரத்தில்‌ ஒரு திரையிருந்ததைக்‌ கவனித்து, அடிமேலடி வைத்து, ஓசைப்‌ படாமல்‌ அதை அணுகு, அதற்குப்‌ பின்னால்‌ ஒளிந்துகொண்டான்‌. எதிர்பாராத விதமாக யாராவது அறைக்குள்‌ வந்தால்‌ தன்னைக்‌ காத்துக்கொள்ள, வாளை உறையில்‌ போடாமல்‌ கையில்‌ பிடித்தவண்ணம்‌ அசையாமல்‌ திரைமறைவில்‌ நின்றான்‌.

” சில நிமிடங்களுக்கெல்லாம்‌ அந்த அறைக்குள்‌ ஓர்‌ உருவம்‌ நுழையத்தான்‌ செய்தது. ஆனால்‌ அதைக்‌ கண்டதும்‌ இவன்‌ வீரமெல்லாம்‌ எங்கோ பறந்தது வாள்‌ பிடித்த அவன்‌ கை வெலவெலத்தது. உறுதியான அவன்‌ கால்‌களும்‌ உதறத்‌ தொடங்கின. அந்த உருவம்‌ நுழைந்த சில வினாடிகளுக்குள்ளேயே பெருத்த சங்கடத்தில்‌ சிக்கித்‌ துணறினான்‌ அந்த மாவீரன்‌. அவன்‌ உணர்ச்சிகளை அப்படி ஆட்டிவைக்க உள்ளே நுழைந்தது ஒரு பெண்‌ உருவம்‌.

ஏதோ பஞ்சின்மேல்‌ நடப்பதுபோல்‌ மெல்லடி வைத்து அறையில்‌ நுழைந்தது அந்த மோகன பிம்பம்‌. அதுவும்‌ முன்னாடைகளைந்து மறு ஆடை உடுக்க வந்தது. அறைக்குள்‌ நுழைந்ததும்‌ கதவைத்‌ தாழிட்டு முன்னாடையை மெல்ல மெல்லக்‌ களையவும்‌ முற்பட்டாள்‌ அந்த மோகனாங்கி. நெறியினின்று சிறிதும்‌ பிறழாத குலத்தில்‌ வந்த இளைய பல்லவன்‌ தன்‌ கண்களை இறுக மூடிக்‌ கொண்டான்‌. பயத்தால்‌ திரைச்சலையைச்‌ சிறிது இறுக்கியும்‌ பிடித்தான்‌. அப்படி அவன்‌ பிடித்ததால்‌ அசைந்த அந்தத்‌ திரைச்சீலையை அந்த ஏந்திழையின்‌ அஞ்சன விழிகள்‌ திடீரென ஏறெடுத்து நோக்கின.

Previous articleRead Kadal Pura Part 1 Ch 1 Sandilyan | Tamilnovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch 3 Sandilyan | Tamilnovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here