Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch7 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch7 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

162
0
Read Kadal Pura Part 1 Ch7 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch7 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch7 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 7 : காட்டுப் புறாவும், வீட்டுப் புறாவும்.

கலிங்கத்திற்குத் தென் கிழக்கிலும் தமிழகத்துக்கு நேர் கிழக்கிலும் வங்கக் கடலுக்கு அக்கரையில் விரிந்த ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் பெரும் சரித்திரத்தையும், துன்பமும் துரதிர்ஷ்டமும் கலந்த அதன் சோகக் கதையையும் குணவர்மன் சொல்லி முடித்ததும் முடிக்காததுமாக, அவன் துயரத்தைத் துடைக்க வந்த தேவதூதன் போல் சாளரத்தின் மார்க்கமாக ஏதோ புயலால் உந்தப்பட்டது போல் வெகுவேகமாகச் சிறகடித்துக் கொண்டு வெண்புறா ஒன்று உள்ளே வந்து, சற்று அப்பாலிருந்த ஒரு மஞ்சத்தின் முகப்பில் உட்கார்ந்து அறையிலிருந்த மூவரையும் இரண்டு மூன்று முறை தலையை அசைத்து அசைத்து உற்றுப் பார்த்தது. வீடுகளில் புறாக்கள் வளர்க்கப்படுவதோ, தப்பிய ஓரிரு புறாக்கள் எதிர் இல்லங்களுக்குப் பறந்து சென்றுவிடுவதோ அப்படியொன்றும் வியக்கத்தக்க விஷயமல்லவென்றாலும், உள்ளே வந்த புறாவின் அபரிமித வளர்ச்சியும், அதன் கால்களுக்கிருந்த அளவுக்கதிகப்பட்ட நீளமும், மிகப் பெரிய அலகும் சாதாரணமாக அது கலிங்கத்திலோ தமிழகத்திலோ காணப்படும் புறாவல்ல வென்பதை நொடிப் பொழுதில் உணர்ந்து கொண்ட இளைய பல்லவனே மற்ற இருவரும் வியப்பிலிருந்து மீளுமுன்பாகத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சரேலென்று எழுந்து சென்று அந்தப் பெரும் புறாவைத் தன் இரு கைகளாலும் பிடித்து எடுத்தான். அப்படி அவன் எடுத்துப் பிடித்துத் தடவிக் கொடுத்த போதும் அது எந்த வித சத்தத்தையும் கிளப்பாமல் திரும்பத் திரும்ப விழித்ததைக் கண்ட காஞ்சனாதேவி, மஞ்சத்திலிருந்து எழுந்து அவனிடம் வந்து, “அதோ, அந்தப் புறாவை இப்படி என்னிடம் கொஞ்சம் கொடுங்கள்” என்று கொஞ்சும் சொற்களைக் கொண்டு கெஞ்சினாள்.

ஆனால் இளைய பல்லவன் அவளுக்குப் பதிலேதும் சொல்லாமலும், அவள் கேட்டபடி புறாவைக் கொடுக்காமலும் அந்தப் புறாவைத் திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து விட்டுத் திடீரென சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே எட்டி நீண்ட நேரம் எதிர்சாரியிலிருந்த மாளிகைகளில் கண்களை ஓட்டினான். தப்பிச் சாளரத்துக்குள் ஓடிவந்து விட்ட புறாவைக் கண்டு முதலில் வியப்புக்குள்ளான குணவர்மனும் காஞ்சனாதேவியும் இளைய பல்வனின் அந்தப் புறா ஆராய்ச்சியையும், சாளரத்திடம் ஓடி வெளியே பார்த்து அவன் நடத்திய சோதனையையும் கண்டு அவற்றுக்குக் காரணம் புரியாதவர்களாய் அவனே வந்து விவரிக்கட்டுமென்று பேசாமலே நின்றுகொண்டிருந்தனர். நீண்ட நேரம் வெளியே யாரையோ பார்க்க முயன்றும் முடியாமையால், ஏமாற்றப் பெருமூச்சு விட்டுக் கொண்டு மீண்டும் அறையின் நடுவுக்கு வந்த இளைய பல்லவன் கடாரத்தின் அரசகுமாரியை நோக்கி, “காஞ்சனாதேவி! அதோ அந்த மூலையிலுள்ள தீபத்தைச் சற்று அருகில் கொண்டு வாருங்கள். இந்தப் புறாவைப் பரிசோதித்துப் பார்ப்போம்” என்று கூறினான்.

அரசகுமாரியின் அஞ்சன விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. “இன்னும் சோதிப்பதற்கு என்ன இருக்கிறது அதில்? இத்தனை நேரந்தான் துருவித் துருவிப் பார்த்தீர்களே” என்று அவள் சொற்கள் இனிமையுடன் உதிர்ந்தன. சாதாரண சமயமாக இருந்தால் அந்த இனிமையில் இளையபல்லவன் இதயத்தைப் பறிகொடுத்திருப்பான். ஆனால் அவன் இதயமும் சித்தமும் அந்தப் புறாவிடமே லயித்திருந்ததால் அந்த இனிமையைக்கூட கவனிக்காதவனாய், “அரசகுமாரி! இந்தப் புறாவை அத்தனை எளிதில் சோதித்துவிட முடியாது. சற்று அந்த விளக்கை எடுத்து வாருங்கள். நம் மூவர் கதியையும் இந்தப் புறாவே ஒருவேளை நிர்ணயிக்கக்கூடும்,” என்றான்.

இதைக் கேட்ட அரசகுமாரி மட்டுமின்றி அதுவரை சோகத்தின் பிம்பமாயிருந்த குணவர்மன்கூட வியப்புக் குள்ளானதால் அவனும் கேட்டான்: “இதென்ன விசித்திரம் இளையபல்லவரே? இந்தப் புறாவா நமது கதியை நிர்ணயிக்க முடியும்? என் நாட்டின் பெரும்படைகளே அதை நிர்ணயிக்க முடியும்?”

இளையபல்லவனின் இடது கை புறாவைப் பிடித் திருந்தது. வலது கை அதை மெல்லத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அத்துடன் குணவர்மன் கூறியதைக் கேட்டதும், அவன் இதழ்கள் இளநகை புரிந்தன. “ஆண்டவன் படைப்பில் எது அதிக பலமுள்ளது. எது சொற்பப் பலமுள்ளது என்பதை மனிதன் நிர்ணயிக்க முடியாது குணவர்மரே. மனிதனுக்குச் சிறு அலுவலைப் புரிவதற்கும் பெரும் ஆயுதங்கள் தேவை. ஆண்டவன் இஷ்டத்துக்கு வளைந்து கொடுக்கச் சிறு துரும்பும் போதும். உமது படைகள் சாதிக்க முடியாததை இந்த அற்பப் பறவை சாதித்தாலும் சாதிக்கும்” என்ற கருணாகர பல்லவன், “குணவர்மரே! உமது நாட்டில் புறாக்கள் இருக்கின்றனவா?” என்று ஏதோ சந்தேகம் கேட்பவன்போல் கேள்வியொன்றையும் விடுத்தான்.

இந்தக் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாத குணவர்மன் தன் மகளின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, பிறகு கருணாகர பல்லவனை நோக்கி, “புறாக்கள் இருக்கின்றன.. அதற்கென்ன?” என்று வினவினான்.

“பெரும் புறாக்கள்?” என்று மீண்டும் அழுத்திக் கேட்டான் இளையபல்லவன்.

“இருக்கின்றன. சாவகத் தீவின் அடர்த்தியான காடுகளில் இருக்கின்றன” என்றான் குணவர்மன்.

இந்தப் பதிலைக் கேட்டதும் குணவர்மனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்த கருணாகர பல்லவன், “இருக்கலாம் குணவர்மரே! ஆனால் இத்தனைப் பெரிய புறாவை நீங்கள் சாவகத்தின் காடுகளில் பார்த்திருக்க முடியாது. உங்கள் நாட்டு வணிகர்கள் எங்கள் புகார் நகருக்குப் பெரும் புறாக்களையும் நானாவிதக் கிள்ளைகளையும், சாவகத்தின் காடுகளிலிருந்து கொண்டுவந்து அரண்மனைகளிலும் வணிகர் மாளிகைகளிலும் விற்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன் அந்தப் புறாக்களை. விளையாட்டுக்கும் உணவுக்கும் உங்கள் நாட்டுப் புறாக்கள் பயன்படுகின்றன. ஆனால் அறிவுச் செயல்களுக்கு அவை உதவுவதில்லை. இப்பொழுது கவனியுங்கள் இந்தப் புறாவை” என்று அவரிடம் தன் இடது கையைத் தூக்கி அதிலிருந்து புறாவைக் காட்டி, “கிட்டத்தட்ட வல்லூரின் அளவுக்கு இந்தப் புறா வளர்ந்திருக்கிறது. இந்தச் சாதிப் புறாக்கள் உலகிலேயே அபூர்வமானவை. ஒரே ஒரு இடத்தில்தான் இருக் கின்றன” என்றான்.

“எந்த இடம் அது?” விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்டான் குணவர்மன்.

“பாரத நாட்டுக்கு மேல் திசையில் எரித்திரியக் கடல் இருக்கிறது… ”

“ஆமாம். “

“அதன் மூலம் அரபு நாடுகளுக்குச் செல்லும் வழியில் இடையே கடலில் இருக்கிறது பறவைத் தீவு எனும் ஒரு தீவு. “

“அப்படியா?”

“ஆமாம் குணவர்மரே! அந்தப் பறவைத் தீவில்தான் இத்தகைய பெரும் புறாக்கள் கிடைக்கின்றன. அந்தத் தீவை எந்த மரக்கலமும் அணுகுவதில்லை. அணுகும் கப்பல்களைக் கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் அழித்துவிடும். ஆனால் தூரமாகப் பறந்து தனித்துவரும் சில புறாக்கள் வணிகர் கைகளில் சிக்குகின்றன. முக்கியமாக யவன வணிகர்கள் தான் இவற்றைப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள். அவற்றை எங்கள் நாட்டு யவன வீரர்கள் வாங்குகிறார்கள். “

“வாங்கி?”

“தூது செல்லப் பழக்குகிறார்கள். “

இதைக் கேட்டதும் குணவர்மனுக்கும், காஞ்சனா தேவிக்கும் உண்மை மெள்ள மெள்ளப் புரியலாயிற்று. “அப்படியானால் இதுவும் தூதுப் புறாவா?” என்று ஏக காலத்தில் ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.

“ஆம்” என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த கருணாகர பல்லவன், “சந்தேகமில்லை குணவர்மரே! இந்தப் புறாவைப் பார்த்ததுமே இது தூதுப் புறாவென்பதைத் தெரிந்துகொண்டேன். இதன் பரிமாணமும் அலகும் நடத்தையும் அதைச் சந்தேகமற நிரூபித்தன” என்று வாய்விட்டுச் சொன்னான்.

“நடத்தையா?” என்று வியப்புடன் வினவினாள் காஞ்சனாதேவி.

“ஆம் அரசகுமாரி! ஆண்டவன் சிருஷ்டிக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் நடத்தை உண்டு. மற்ற ஜீவராசிகள் பிறக்கும்போது உள்ள நடத்தையைவிட்டு மாறுவதில்லை. மனிதன்தான் மாறுகிறான். உதாரணமாக இதோ பாருங்கள்” என்று கூறிவிட்டுக் கையிலிருந்த புறாவைப் பறக்க விட்டான். அந்தப் புறா எந்த இடத்துக்கும் செல்லாமல் சிறகடித்து மீண்டும் முதலில் உட்கார்ந்திருந்த மஞ்சத்தின் முகப்பிலேயே வந்து உட்கார்ந்தது.

“பார்த்தீர்களா அரசகுமாரி! முதலில் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகர்கிறதா இந்தப் பறவை? நகராது அரச குமாரி, நகராது. இதன் உடலில் எங்கோ மறைந்திருக்கும் செய்தி எடுக்கப்படும் வரையில் இது இந்த அறையை விட்டு வெளியே பறந்தும் செல்லாது. அவ்வளவு திறமையுடன் யவனர்கள் அவற்றைப் பழக்குகிறார்கள்” என்று விளக்கினான் கருணாகர பல்லவன்.

“அப்படியானால் செய்தியை எடுத்துப் பாருங்களேன்” என்றாள் காஞ்சனாதேவி.

இளையபல்லவன் மெள்ளப் புன்னகை செய்துவிட்டுச் சொன்னான்: “செய்தியை எடுப்பது அத்தனை எளிதல்ல அரசகுமாரி” என்று.

“ஏன் எளிதல்ல? புறாவின் காலில்தானே கட்டுவார்கள் செய்தி ஓலையை?”

கருணாகரபல்லவன் உடனே பதிலேதும் சொல்லாமல், புறா உட்கார்ந்திருந்த மஞ்சத்திடம் சென்று, புறாவைப் பிடித்துக்கொண்டு வந்து, “இந்தாருங்கள் அரச குமாரி! நீங்களே சோதித்துச் செய்தியை எடுத்துக் கொடுங்கள்” என்று அந்த வெண் புறாவை அவளிடம் கொடுத்தான்.

காஞ்சனாதேவியின் அழகிய கரங்கள் அந்தப் புறாவை ஆசையுடன் பற்றின. அவள் அஞ்சன விழிகள் அதன் பட்டுக் கால்களை ஆராய்ந்தன. அந்த வெண்புறாவின் வழ வழத்த உடலைப் பலபடி திருப்பித் திருப்பிப் பார்த்தாள் அவள். கால்களிலோ அதன் உடலிலோ செய்திச் சுருள் ஏதுமில்லாததைக் கண்ட காஞ்சனா தேவியை நோக்கி மெல்ல நகைத்தான் கருணாகர பல்லவன்.

“எதற்கு நகைக்கிறீர்கள்?” என்று கோபத்துடன் கேட்டாள் அவள்.

“செய்தி கிடைக்கவில்லை போலிருக்கிறதே!”

“ஆமாம். இருந்தாலல்லவா கிடைக்கும்?”

“கால்களைப் பரிசோதித்தீர்களா?”

“ஆம், பரிசோதித்தேன். “

“கால்களில் ஓலையைக் கட்டி அனுப்பும் முறை பண்டையக் கால முறை அரசகுமாரி. “

“உடலையும் பார்த்தேன். “

“அங்கும் கிடைக்கவில்லையாக்கும். “

“கிடைக்கவில்லை. “

“உங்களுக்குக் கிடைக்காது அரசகுமாரி. “

“ஏன்?”

“இது அந்தப்புர ஸ்திரீகள் வளர்க்கும் மாடப் புறாவல்ல. படைவீரர் வளர்க்கும் தூதுப் புறா. அதை ஆராயும் பொறுப்பைப் படைவீரர்களுக்கு விட்டுவிடுவது நல்லது. “

“தங்களைச் சொல்லிக் கொள்ளுகிறீர்களாக்கும்?” என்றாள் காஞ்சனாதேவி கோபம் தொனிக்க.

“கோபம் வேண்டாம் தேவி. இப்படிக் கொடுங்கள் அந்தப் புறாவை. தூர இருக்கும் அந்த விளக்கைச் சற்று அருகில் கொண்டு வாருங்கள்” என்று கூறிய கருணாகர பல்லவன், காஞ்சனாதேவியின் கைகளிலிருந்து புறாவை வாங்கிக் கொண்டான். அதற்கு மேல் ஏதும் பேச இஷ்டப்படாததாலும், தூதுச் செய்தி ஏதாவது இருந்தால் அதை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலாலும் தூரத்தேயிருந்த கலிங்க நாட்டு மணிவிளக்கைத் தூக்கி வந்து கருணாகர பல்லவனுக்கு அருகே நின்று ஒளியைப் புறாவின் மீது நிலைக்க விட்டாள் காஞ்சனாதேவி.

புறாவின் உடலைக் கையிலிருந்து விடுவித்துக் கால்களை மட்டும் பிடித்துக்கொண்டு அதை உயரத் தூக்கிய இளையபல்லவன் அதன் பெரும் இறக்கைகளைக் கூர்ந்து நீண்ட நேரம் கவனித்தான். பிறகு முன்னும் பின்னும் நீண்டு கிடந்த இறக்கைகளை ஒவ்வொன்றாகத் தூக்கித் தூக்கித் தன் விரல்களால் தடவினான். அந்தப் பட்சியை அவன் மிகவும் ஜாக்கிரதையாகத் தடவித் தடவி அதற்கு ஏதும் சிரமமில்லாமல் சோதிப்பதையும், அவன் விரல் படும் இடங்களில் அந்தப் பறவையும், நீண்ட நாள் அவனுடன் பழக்கப்பட்டதுபோல் இறக்கைகளைத் தூக்கித் தூக்கிக் காட்டியதையும் கண்ட காஞ்சனாதேவி பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். ‘தூதுப் புறா சோதனையிலிருந்து சகல போர்த் தந்திரங்களையும் அறிந்திருப்பதால்தான் இவர் புகழ் கடாரம் வரையில் பரவியிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டாள் அவள். அத்துடன் ஒரு விஷயம் ஆச்சரியமாகவுமிருந்தது கடாரத்தின் இளவரசிக்கு. ‘இத்தனை மெல்லிய பறவையின் இறகில் செய்தி ஓலையை எப்படி அடியோடு மறைக்க முடியும்?’ என்றும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் அவள்.

குணவர்மன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அலைமோதிக் கொண்டிருந்தன. ‘உண்மையில் இது தூதுப் புறாதானா? இல்லை, இளையபல்லவன் இல்லாததைக் கற்பனை செய்கிறானா? தூதுப் புறாவாயிருந்தால் இது எந்தவிதத் தூதைக் கொண்டு வந்திருக்க முடியும்? இதில் ஏதாவது நமக்கு விடிமோட்சமுண்டா ?” என்று ஏதேதோ யோசித்துக் கொண்டும் அடிக்கடி புறாவையும் கருணாகர பல்லவனையும் பார்த்துக்கொண்டும் நின்றான்.

கருணாகர பல்லவன் குணவர்மனையோ, அருகே பிம்பம் போல் நின்ற காஞ்சனாதேவியையோ ஏறெடுத்தும் பார்க்காமல், தன் சோதனையிலேயே முனைந்தான். புறாவின் ஒரு புறத்து இறக்கைகளை விரல்களால் தடவித் தடவிச் சோதித்த பிறகு, மற்றொரு பக்கத்துக்காக அதைத் திருப்பி அந்தப் பகுதிகளையும் சோதித்தான். அந்தப் பகுதியின் இறக்கைகளுக்குள்ளும் அவன் விரல்கள் நீண்ட நேரம் துழாவிக் கொண்டிருந்த சமயத்தில் ஏதோ ஓரிடத்தில் அவன் விரல் பட்டதும் அந்தப் புறா ‘கூ… கூ….’ என்று திடீரெனச் சத்தமிட்டது. அந்த இடத்தில் வைத்த ஆள்காட்டி விரலை அகற்றாமல் விளக்குக்காக நன்றாகப் புறாவை உயரத் தூக்கிய இளையபல்லவன், வேலினும் கூரிய தன் விழிகளை இறக்கையின் அந்தப் பகுதியில் ஓட்டி, மற்றும் இரண்டு விரல்களை இறக்கையின் அந்தப் பகுதியில் புகவிட்டு, இறக்கையும் உடலும் இணைந்த இடத்திலிருந்து சின்னஞ்சிறு பட்டுத் துணியொன்றை வெளியே எடுத்தான்.

அந்தப் பட்டுத் துணியின் பரிமாணத்தைப் பார்த்துக் காஞ்சனாதேவி மட்டுமல்ல, குணவர்மனும் ஆச்சரியத்தின் எல்லையை எய்தினான். தென்னை ஈர்க்கின் கனமும் அரைச் சுண்டுவிரல் அகலத்துக்குமாகச் சுற்றப்பட்டிருந்த அந்தப்பட்டுத் துணி எத்தனை நீளமிருக்கும், அதில் செய்தியைத்தான் எப்படி எழுத முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியாத அந்த ஸ்ரி விஜய பெருமக்கள் இருவரும் வியப்பு முகங்களில் நன்றாகப் பிரதிபலிக்கக் கருணாகர பல்லவனை உற்று நோக்கினார்கள். அவர்கள் முகங்களில் படர்ந்த ஆச்சரிய ரேகையைக் கவனித்த கருணாகர பல்லவன் உதடுகளில் லேசாகப் புன்முறுவல் காட்டி, “உங்களுக்கு இது ஆச்சரியமாகத்தானிருக்கும். ஆனால் தமிழகத்திலிருக்கும் எங்களுக்கு அது அதிசயமல்ல?” என்று கூறி, நன்றாக இறுக்கிச் சுருட்டப்பட்டிருந்த அந்தப் பட்டு சுருளை தன் விரல்களால் மெல்ல மெல்லப் பிரித்தான். சுருள் பிரியப் பிரிய அந்தப் பட்டுத் துணி நீண்டது. கிட்டத்தட்ட ஓர் அடிக்கு மேல் நீண்டு, பஞ்சினும் மெல்லிய தாய்க் காணப்பட்ட அந்தப் பட்டில் செய்தியொன்று பொறிக்கப்பட்டதற்கு அடையாளமாக எழுத்துகள் சிவப்பாகத் தெரிந்தன. வெண்பட்டில் சிவப்பாகத் தெரிந்த அந்த எழுத்துகள் கலிங்கத்தின் விளக்கொளியில் பெரும் நெருப்புத் துண்டங்களைப்போல் பளபளத்தன.

“ஆச்சரியம் ஆச்சரியம்!” என்று வாய்விட்டே சொன்னான் குணவர்மன். அந்தப் பட்டுச் சீலை விரிந்த விந்தையைக் கண்டு.

“உங்களுக்கு இது ஆச்சரியம்தான் குணவர்மரே” என்றான் இளைய பல்லவன்.

“இத்தனை மெல்லிய பட்டுத் துணி இருக்கக் கூடுமென்று நான் கேள்விப்பட்டது கூட இல்லை” என்றான் குணவர்மன்.

“நீங்கள் கேள்விப்படாதிருக்கலாம். ஆனால் ரோமாபுரியும் மற்ற மேல்நாடுகளும் கேள்விப்பட்டிருக்கின்றன. சீனத்துப் பட்டுக்கு அடுத்தபடியாக எங்கள் மெல்லிய பஞ்சு உடைகளும் பட்டு உடைகளும்தான் ரோம சாம்ராஜ்யத்தில் வாங்கப்படுகின்றன. இறக்கைக்குள் அடையக் கூடிய இந்தச் சிறு பட்டுத் துணியைப்பற்றி ஆச்சரியப்பட வேண்டாம். அரசகுமாரி உடுக்கக்கூடிய பெரும் சேலை ஒரு கைக்குள் அடங்கும்படியான ஆடைகளையும் எங்கள் நெசவாளர்கள் தயாரிக்கிறார்கள். “

“அப்படியா!” என்று வினவினாள் காஞ்சனாதேவி.

“ஆம் அரசகுமாரி! ஒருவேளை இந்தக் கலிங்கத்தி லிருந்து நாம் தப்பிச் சோழ நாடு சென்றால், அத்தகைய பட்டாடை ஒன்று இந்த அடிமையின் பரிசாகத் தங்களுக்கு அளிக்கப்படும்” என்று பதில் சொன்ன கருணாகர பல்லவன், “அதிருக்கட்டும் அரசகுமாரி, இந்தச் செய்தியை முதலில் படிப்போம். விளக்கை இன்னும் சற்று அருகில் காட்டுங்கள்” என்று கூறவே அரசகுமாரி விளக்கை அவனருகில் காட்டினாள்.

மெள்ள மெள்ள விரித்துப் பிடித்த அந்தச் சின்னஞ்சிறு பட்டுத் துணியில் காணப்பட்டவை நாலைந்து வரிகளென்றாலும், அவற்றில் அவர்கள் விமோசனத்துக்கான செய்தியே விரிந்து கிடந்தது. அந்த நாலைந்து வரிகளைப் படித்துக்கொண்டே போன இளைய பல்லவனின் முகம் திடீரெனப் புத்தொளி பெற்றது. அவன் கண்களில் எல்லையற்ற மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. “நினைத்தேன்! நினைத்தேன் அப்பொழுதே!” என்று இரைந்து கூவிக்கொண்டு திடீரென்று மஞ்சத்தை விட்டு எழுந்தான் கருணாகர பல்லவன்.

அவன் மகிழ்ச்சிக்கும் பேச்சுக்கும் காரணம் புரிந்து கொள்ளமுடியாத தந்தையும் மகளும் ஒருவரையொருவர் சில விநாடிகள் பார்த்துக் கொண்டனர். கடைசியில் குணவர்மனே கேட்டான்: “என்ன நினைத்தீர்கள் இளைய பல்லவரே?” என்று.

“புலியைச் சிறையிலடைப்பது கஷ்டமென்று. “

“எந்தப் புலியை?”

“இந்தப் புலியைத்தான்” என்று குணவர்மனிடம் அந்தப் பட்டுத் துணியை நீட்டினான் இளைய பல்லவன். அந்தப் பட்டுத் துணிமீது ஏக காலத்தில் கண்களை ஓட்டிய குணவர்மனின் முகத்திலும், காஞ்சனாதேவியின் முகத்திலும் பிரமிப்பு மட்டுமின்றி ஏதோ புதையலைத் திடீரென்று பிடித்துவிட்டது போன்ற நம்பிக்கையொளியும் சுடர் விட்டது.

“கடாரத்தின் மன்னருக்குப் பயம் வேண்டாம். மூன்று நாள்கள் அங்கேயே இருங்கள். பல காரியங்கள் நடக்கும். இடையூறு செய்ய வேண்டாம் – அநபாயன்” என்று கண்டிருந்தது.

அந்த ஓலையைத் திரும்பத் திரும்பப் படித்த குணவர்மன், “இளைய பல்லவரே! இந்தக் கையெழுத்து அநபாயரதுதானா?” என்று சந்தேகத்துடன் வினவினான்.

“ஆம், அவருடையதுதான். “

“அப்படியானால் அவர் தப்பியிருக்க வேண்டும். “

“தப்பித்தான் இருக்க வேண்டும். “

“கலிங்கத்தின் சிறையிலிருந்து தப்புவது அவ்வளவு எளிதா?”

“எளிதல்ல குணவர்மா! ஆனால் அநபாயரின் திறமை எல்லையற்றது. அவரை எந்த இடத்திலும் அடைத்து வைப்பது கஷ்டம். “

“ஏதோ எனக்கும் அதிர்ஷ்டமிருப்பதாகத் தெரிகிறது இளைய பல்லவரே. எப்படியாவது அநபாயர் வந்து நம்மை விடுவித்து, சோழநாடு அழைத்துச் சென்றால் நான் வந்த காரியம் கைகூடும்” என்று கூறி ஆயாசம் தீர்ந்ததற்கு அறிகுறியாகப் பெருமூச்சு விட்டான் குணவர்மன்.

“முதலில் இங்கிருந்து தப்பும் மார்க்கத்தைப் பார்ப்போம் குணவர்மரே! இப்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம் மூன்று நாள்கள் காத்திருப்பதுதான்” என்று விளக்கினான் கருணாகர பல்லவன்.

அதற்கு மேல் பேசுவதற்கு ஏதுமில்லாததால், “சரி இளைய பல்லவரே இரவும் ஏறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் படுக்கச் செல்லுங்கள். காஞ்சனா! இவருக்கு எந்த அறையைக் கொடுக்கலாம்?” என்று வினவினான்.

“எந்த அறைக்குள் ஏறிக் குதித்தாரோ அந்த அறையையே கொடுக்கலாம்!” என்றாள் காஞ்சனாதேவி.

“சரி அப்படியே செய். பணிப் பெண்களை விட்டு வேண்டிய வசதிகளைச் செய்து கொடு” என்று குணவர்மன் கூறியதும் தன்னுடன் வரும்படி இளைய பல்லவனுக்குச் சைகை செய்த காஞ்சனாதேவி அறையை விட்டு வெளியேறத் திரும்பினாள். கருணாகர பல்லவன் தூதுப் புறாவை மீண்டும் கையில் பிடித்துக் கொண்டு அவளைத் தொடர்ந்தான்.

மீண்டும் அந்தப் பழைய மாடியறையை அடைந்ததும், “உள்ளே செல்லுங்கள்” என்று கூறிய காஞ்சனாதேவி வாயிற்படிக்கு வெளியிலேயே நின்றாள்.

“ஏன்? நீங்கள்?” என்று மெள்ள இழுத்தான் இளைய பல்லவன்.

“ஊஹும் நீங்கள் மட்டும் போங்கள். “

“நான் வேண்டுமானால்….”

“என்ன சொல்கிறீர்கள்?”

“திரைக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறேன்… ”

அதைக் கேட்ட காஞ்சனாதேவி கலகலவென நகைத் தாள். “இளைய பல்லவருக்கு ஏற்கெனவே இத்தகைய பழக்கம் பலம் போலிருக்கிறது” என்றும் சொன்னாள் சிரிப்புக்கிடையே.

இளையபல்லவன் கையிலிருந்த பறவைத் தீவின் காட்டுப் புறா, இருமுறை சிறகடித்தது. கடாரத்தின் வீட்டுப் புறா ஒருமுறை நெளிந்தது. இரண்டு புறாக்களையும் மாறி மாறிப் பார்த்த கருணாகர பல்லவனின் மனம் புத்தம் புதிய கனவுலகத்தில் பறந்துகொண்டிருந்தது. அவன் கண்கள் மிகுந்த தைரியத்துடன் எதிரே இருந்த வீட்டுப் புறாவின் மீது நிலைக்கவும் செய்தன.

Previous articleRead Kadal Pura Part 1 Ch 6 Sandilyan | Tamilnovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch8 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here