Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch10 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch10 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

100
0
Read Kadal Pura Part 1 Ch10 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch10 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch10 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 10 : விமோசனச் சீலை.

Read Kadal Pura Part 1 Ch10 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

சிறிது நேரத்துக்கெல்லாம் சிறைக் காவலர் தொடரப் பாலூர் நீதி மண்டபம் சென்று, சம்பிரதாய விசாரணைக்கு இலக்காகி ஊரின் ஒரு மூலையிலிருந்த கொலைக்களத்தில் தலையிழக்கவிருந்த கருணாகர பல்லவன், அதைப்பற்றித் தினையளவும் சிந்திக்காமல் அன்று காலை கொண்டு வரப்பட்ட உணவுத் தட்டின் மேலிருந்த துணியை அகற்றி, மிக ஜாக்கிரதையாக மடித்து வைத்து உணவைச் சுவைத்துச் சுவைத்து உண்ணத் தொடங்கியதைக் கண்ட கூலவாணிகன் அவனை மிதமிஞ்சிய வெறுப்புடனேயே நோக்கினான். அந்த வெறுப்பு அப்பொழுது துவங்கிய தல்ல. முதல் நாள் மூன்றாம் ஜாமத்தில் சிறையில் தள்ளப் பட்டதும் சிறையிலிருந்த மஞ்சத்தைத் தட்டிவிட்டுக் கருணாகர பல்லவன் படுக்க ஏற்பாடு செய்தவுடனேயே ஏற்பட்ட வெறுப்பு அது. சிறையில் இருவரையும் காவலர் தள்ளியதும், காவலரில் ஒருவன் கூலவாணிகனின் கைக்கட்டுகளை அவிழ்த்துவிட்டதன்றி, அந்தச் சிறை, பிரமுகர்கள் தங்கும் சிறையென்பதையும், ஏதாவது தேவையாயிருந்தால் சொல்லலாமென்று பணிவுடன் கேட்டான். கூலவாணிகன் அதற்கேதும் பதில் சொல்லாவிட்டாலும் கருணாகர பல்லவன் மட்டும், அப்பொழுது தேவையேது மில்லையென்றும், ஏதாவது வேண்டும் பட்சத்தில் குரல் கொடுப்பதாகவும் கூறியதைக் கேட்டதுமே கசப்படைந் தான் கூலவாணிகன். ஆகவே சிறைக் காவலர் சிறையைப் பூட்டிச் சென்றதும் கருணாகர பல்லவனை நோக்கி வினவினான். “ஏன்? தங்களுக்கு இந்த இடத்தில் சௌகரியம் ஏதாவது தேவையாயிருக்கிறதா?”

கருணாகர பல்லவன் ஒருமுறை சிறையைச் சுற்றிக் கவனித்தான். ராஜபிரமுகர்கள் தங்குவதற்கு வேண்டிய சகல சௌகரியங்களும் அங்கிருப்பதையும், மஞ்சங்களில் கூடப் பஞ்சணைகள் இருப்பதையும் பார்த்து, “எனக்குத் தேவையேதுமில்லை. உனக்கு?” என்று வினவினான்.

சிறையிலும் சௌகரியம் தேடும் இளையபல்லவனை வெறுப்புடன் நோக்கிய கூலவாணிகன், தனக்கு ஏதும் தேவையில்லையென்பதைத் தலையை ஆட்டிய தோரணை யாலேயே தெரிவித்துவிட்டு, கிழிந்த தன் ஆடைகளைச் சிறிது சரிசெய்து கொண்டதன்றி, கயிறுகள் கட்டியிருந்த தால் நைந்து போயிருந்த மணிக்கட்டுகளையும் கவனித்துக் கொண்டான். அவற்றைக் கவனித்த கருணாகர பல்லவனும் கூலவாணிகனை நோக்கி, “சேந்தா! கலிங்க வீரர்கள் உன்னை மிகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறதே?” என்று அனுதாபத்துடன் வினவினான்.

“சோழநாட்டு ஒற்றனிடமிருந்து உண்மையை வர வழைக்க வேறு என்ன செய்வார்களென்று நினைக்கிறீர்கள்?” என்று வினவினான் கூலவாணிகன், பதிலுக்கு.

“உன்மீது இவர்களுக்கு எத்தனை நாள்களாகச் சந்தேகம்?” என்று மீண்டும் வினவினான் கருணாகர பல்லவன்.

“இங்கு வரப்போவதாக நீங்கள் எனக்கு ஓலையனுப்பியது எப்பொழுது?”

“பத்து நாள்களுக்கு மேலாகிறது. “

“அந்தப் பத்து நாள்களாக என் மாளிகைமீது கலிங்கத்தின் ஒற்றர்கள் கண் வைத்திருக்கிறார்கள். “

“தமிழ் வணிகர்களையும் பிரமுகர்களையும் சிறையில் பிடித்து அடைத்து வைக்கும் வேலை எத்தனை நாள்களாக நடக்கிறது. “

“மூன்று நாள்களாக. “

“அதாவது?”

“மன்னன் பீமன் பாலூர் வந்த நாளாக. “

“பீமன் வந்து மூன்று நாள்களாகின்றனவா?”

“ஆம். மிக ரகசியமாக வந்தான். இல்லாவிடில் நான் எச்சரிக்கையடைந்திருப்பேன். மன்னன் வருவதற்கு அறிகுறியாகத் தாரைகள் ஊதப்படவில்லை. சங்கங்கள் சப்திக்க வில்லை. முதலில் ஊருக்குள் வரவேண்டிய குதிரைப் படைகளும் வரவில்லை. பீமன் வந்தது, நேற்று வரை யாருக்குமே தெரியாது. திடீரென நேற்று, மாளிகையில் என்னை வீரர்களுடன் வந்து பீமனே சிறைப்படுத்தித் துன்புறுத்திய பின்புதான் எனக்கே தெரியும். “

“பீமன் வந்து மூன்று நாள்களாயின என்று சொன்னாயே சேந்தா, அதெப்படித் தெரியும் உனக்கு?”

“பீமனே சொன்னான், “நான் வந்து மூன்று நாள்களாக உன்னைக் கவனித்து வருகிறேன்’ என்று. “

இளையபல்லவன் சிறிது நேரம் சிறையில் அப்படியும் இப்படியும் உலாவியபடி சிந்தனையில் ஆழ்ந்தான். திடீரென்று மௌனத்தைக் கலைத்துக் கொண்டு, “நான் வந்திருப்பதை எப்படியறிந்தான் பீமன்?” என்று வினவினான் சேந்தனை நோக்கி.

“அது என் குற்றம் இளைய பல்லவரே! தாங்கள் அனுப்பிய ஓலையை என் பணப்பெட்டியில் ரகசிய அறையில் வைத்திருந்தேன். அந்த அறையைத் திறக்கும் முறை எனக்குத்தான் தெரியும் என்று மனப்பால் குடித்திருந்தேன். ஆனால் சோதனையின்போது நிமிட நேரத்தில் பீமன் அந்தக் கள்ள அறையைத் திறந்தான். பீமன் இந்தப் பிறவியில்தான் மன்னன். சென்ற பிறவியில் பெட்டி திறக்கும் திருடனாயிருந்திருக்க வேண்டும்” என்று அலுத்துக்கொண்டு கூறினான் சேந்தன்.

இளையபல்லவன் முகத்தில் கவலைக்குறி படர்ந்தது. “அந்த ஓலையில் கடாரத்தின் மன்னன் குணவர்மனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே?” என்றான், குரலிலும் கவலை பாய.

“ஆம், குறிப்பிட்டிருந்தீர்கள்” என்றான் சேந்தன்.

“அப்படியானால் குணவர்மன் பாலூரில் இருப்பது பீமனுக்குத் தெரியும்?”

“தெரிந்திருக்க வேண்டும். “

“அவனிருக்குமிடம்?”

“அதுவும் தெரிந்திருக்க வேண்டும். “

“அப்படியானால், சோழநாட்டின் உதவியை நாடி வந்திருக்கும் குணவர்மனை ஏன் பீமன் சிறைப்படுத்த வில்லை?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை. “

குணவர்மனையும் காஞ்சனாதேவியையும் சிறைப் படுத்தாமல் விட்டு வைப்பதற்கு ஆழ்ந்த அரசியல் காரணங்கள் இருக்கவேண்டும் என்று இளையபல்லவன் முடிவுக்கு வந்திருந்தானானாலும், அந்தக் காரணங்கள் என்னவாயிருக்கக் கூடும் என்பது புரியவில்லை அவனுக்கு. அவர்களுக்கும் தன்னைப்போல் பேராபத்துக் காத்திருக்கிறது என்பதை மட்டுமே புரிந்துகொண்ட இளைய பல்லவன், பீமனிடம் அகப்பட்டால் காஞ்சனாதேவியின் கதி என்னவாகுமோ என்பதை நினைத்துத் திகில் கொண்டான். அந்தத் திகிலுடன் அநபாயனைப் பற்றிய எண்ணமும் கலந்துகொள்ளவே பல விவரங்கள் விளங்காமல் குழம்பிய இளையபல்லவன், அவற்றைப் பற்றிச் சேந்தனிடமே விளக்கம் கேட்க முற்பட்டு, “சேந்தா!” என்று அவனை விளித்தான்.

அப்பொழுதும் மனவேதனைப் பட்டுக் கொண்டிருந்த சேந்தன் பதிலுக்கு, “ஹும்” கொட்டினான்.

“அநபாயச் சோழரையும் பீமன் சிறைப்படுத்தினானாமே. தெரியுமா உனக்கு?” என்று வினவினான் கருணாகர பல்லவன்.

“தெரியும்” என்றான் கூலவாணிகன் பெருமூச்சு விட்டு.

“அவரையும் இந்தச் சிறையில்தானே அடைத்திருப் பார்கள்”

“இதில்தான் அடைத்திருக்க வேண்டும். இந்த ஊரில் வேறு சிறை கிடையாது. “

“இந்தச் சிறையைப் பார்த்தாயா சேந்தா!” என்று ஆச்சரியத்துடன் கேட்ட இளைய பல்லவன், சிறையையும் சாளரத்தின் மூலம் தெரிந்த சாளரத்தின் வெளிப்புறத்தையும் சுட்டிக் காட்டினான்.

அவன் சிறையை ஆராய்ந்ததால் வெறுப்புக் கொண்ட கூலவாணிகன், “இப்பொழுதே ஆராய்ந்துவிடுங்கள் சிறையின் அமைப்பை. நாளை நடுப்பகலுக்குப் பின்பு நமது கண்கள் எதையும் ஆராய முடியாது” என்றான்.

அவன் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமலே பேசிக்கொண்டு போனான் கருணாகர பல்லவன். “இந்தச் சிறையின் அமைப்பை நன்றாகப் பார் சேந்தா! சுற்றிலும் பெரிய இரும்புச் சட்டங்கள், சிறையின் ஒவ்வொரு கூடத்திலும் ஏராளமான வீரர்கள். சாளரத்துக்கு வெளியேயும் பார். அதோ தெரியும் உயர்ந்த மதில் பெரும் கோட்டையின் மதில்களைப் போலிருக்கிறது. அவற்றை எவனும் தாண்டிக் கடக்க முடியாது. தவிர, சிறையின் அறைகளுக்கும் அந்த மதில்களுக்கும் இடையேயுள்ள வெளிப்பகுதி குதிரை வீரர்களால் காக்கப்பட்டிருக்கிறது… ”

இப்படிப் பேசிக்கொண்டு போன இளையபல்லவனை இடைமறித்த கூலவாணிகன், “இந்தச் சிறையிலிருந்து யாரும் தப்பமுடியாது என்பதற்குக் காரணம் கூறுகிறீர்களா?” என்று இகழ்ச்சியுடன் கேட்டான்.

இளையபல்லவனின் கண்கள் கூலவாணிகன் முகத்தில் நன்றாகப் பதிந்தன. குரலை மிகவும் தாழ்த்திக் கொண்டு சொன்னான் இளையபல்லவன், “சேந்தா, இந்தச் சிறையிலிருந்து போரிட்டு யாரும் தப்ப முடியாது. “

வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த அந்த உண்மையைத் தெரிவிக்க அத்தனை ரகசியமென்னவென்பதை அறியாத கூலவாணிகன், “அது தெரிந்த விஷயம்தானே?” என்றான்.

“ஆனால்… ” என்று கூறி அப்புறமும் இப்புறமும் கவனித்தான் இளையபல்லவன்.

“ஆனால்?”

“இதிலிருந்து அநபாயர் தப்பியிருக்கிறார். “

கூலவாணிகனின் முகத்தில் வியப்புக்குறி படர்ந்தது. “ஆமாம், மறந்துவிட்டேன். எப்படித் தப்பினார்?”, என்று கேட்டான், வியப்புக் குரலிலும் ஒலிக்க.

“அதுதான் எனக்கும் புரியவில்லை. இதிலிருந்து அவர் போரிட்டுத் தப்பியிருக்க முடியாது. “

“வேறெப்படித் தப்பியிருக்க முடியும்!”

“தந்திரத்தால் தப்பியிருக்க வேண்டும். “

“என்ன தந்திரமாயிருக்கும்?”

“எனக்குப் புரியவில்லை. ஆனால் யாரோ நண்பர்கள் உதவி அவருக்கு இருந்திருக்க வேண்டும். “

“ஆம். ஆம், உண்மை. “

“அது மட்டுமல்ல சேந்தா! அந்த நண்பர்கள் எண்ணிக்கையும் கணிசமாயிருக்க வேண்டும். “

“அதெப்படித் தெரிகிறது?”

“சிறையிலிருந்து தப்பிய பின்பு இன்னும் அவர் பாலூர்ப் பெருந்துறையில் சுதந்திரமாக உலாவுகிறார். அது மட்டுமல்ல, புறா மூலம் குணவர்மனுக்குத் தூதும் அனுப்பியிருக்கிறார். அநபாயருக்கு இவ்வூரில் பக்கபலம் நிரம்ப இருக்கிறது, சந்தேகமில்லை. “

இதைக் கேட்டதும் வியப்புக்குள்ளான கூலவாணிகன், “என்ன தூதுப் புறாவா! செய்தியா?” என்று ஆச்சரியத்துடன் வினவினான். சிறிது நேரத்துக்கு முன் பீமனும் இளையபல்லவனும் புறாவைப் பற்றிப் பேசிக்கொண்டதைக் கூலவாணிகனும் கேட்டுக் கொண்டுதான் இருந்தானெனினும் அப்போதிருந்த குழப்பமான மனநிலையில் அவன் அதைச் சரியாக மனத்தில் வாங்கவில்லை.

இளையபல்லவன், “ஆம் சேந்தா! குணவர்மனுக்குப் புறா மூலம் தூது வந்தது. அதில் அநபாயரே கையொப்ப மிட்டிருந்தார்” என்றான்.

“அநபாயரே கையொப்பமிட்டிருந்தாரா?”

“ஆம் சேந்தா!”

“என்ன கண்டிருந்தது ஓலையில்?”

“குணவர்மனை மூன்று நாள்கள் பொறுத்திருக்கும்படி கண்டிருந்தது. மூன்று நாள்கள் அந்த மாளிகையில் எது நடந்தாலும் கவனிக்க வேண்டியதில்லை யென்றும் எழுதியிருந்தது. “

இம்முறை கூலவாணிகன் தீவிர சிந்தனையில் ஆழ்ந் தான் “மூன்று நாள்கள்! மூன்று நாள்கள்!” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டான்.

கூலவாணிகனின் வருத்தத்தையும் பெருமூச்சையும் கவனித்த இளையபல்லவன் கேட்டான்: “மூன்று நாள் களுக்கென்ன சேந்தா?”

“மூன்று நாள்கள் இந்தப் பாலூர்ப் பெருந்துறையில் அநபாயர் இருக்கப்போகிறார் என்பது தெளிவாக வில்லையா?” என்று வினவினான் சேந்தன்.

“ஆம். “

“அப்படியானால் அந்த மூன்று நாள்களில் ஒவ்வொரு வினாடியும் அவர் உயிர் ஆபத்திலிருக்கிறது. “

“ஆபத்துக்கு அஞ்சும் சுபாவம் அநபாயருக்குக் கிடையாதென்பது உனக்குத் தெரியாதா?”

“தெரியும். அதனால்தான் நான் அஞ்சுகிறேன். “

“நீ அஞ்சுவானேன்?”

“சோழநாட்டு நலனில் அக்கறையுள்ள யாரும் அஞ்சு வார்கள். “

“என்ன அச்சம் அதில்”

கூலவாணிகன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் இளைய பல்லவனை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு சொன்னான்: “நான் வணிகன் மட்டுமல்ல, இளைய பல்லவரே!”

“ஆம்,” என்று தலை அசைத்தான் இளையபல்லவன், கூலவாணிகன் எதைச் சொல்ல உத்தேசிக்கிறான் என்பதை அறியாமல்.

“நினைவு தெரிந்த நாளாக ஒற்றன் வேலையும் செய்கிறேன். “

“ஆம், சேந்தா. “

“ஆகவே, சோழநாட்டு அரசியல் நிலை, படைத் தலைவர்களைவிட எனக்கு நன்றாகத் தெரியும். “

“ஓகோ!”

“நீங்கள் பெரும் வீரர், இணையற்ற படைத்தலைவர். ஆனால் உங்களுக்கு மக்கள் மனம் தெரியாது. அவர்களுடன் சதா உலவிப் பழகும் நான்தான் அறிவேன். “

“சரி, சேந்தா. “

“சோழநாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் தெரியுமா, படைத் தலைவரே!”

“சொல். “

“அநபாயரை அரியணையில் எதிர்பார்க்கிறார்கள். “

திடீரெனக் கூலவாணிகன் வீசிய அந்தச் சொல் சரத்தால் தாக்குண்டவனைப் போல் சில விநாடிகள் அசைவற்று நின்றுவிட்டான் இளையபல்லவன். பிறகு கூலவாணிகனை நோக்கி, “சேந்தா, வீரராஜேந்திர சோழதேவர் இப்பொழுதுதானே அரியணையில் ஏறியிருக்கிறார்” என்று வினவினான்.

“ஆம், இளையபல்லவரே” என்றான் கூலவாணிகன்.

“அப்படியிருக்க அநபாயர் எப்படி அரியணை ஏற முடியும்?”

“மக்கள் அவரை விரும்புகிறார்கள். ” “வீரராஜேந்திரரிடம் பக்தியில்லையா மக்களுக்கு?” “இருக்கிறது. அவர் வீரத்தில் இருக்கிறது. ஆனால்…?”

“ஆனால், என்ன சேந்தா?”

“அக்கம்பக்கத்து நாடுகள் விஷயத்தில் அவர் கடைப் பிடிக்கும் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை. உதாரணமாக, வேங்கியில் சாளுக்கிய விஜயாதித்தனை அரசாள விட்டிருப்பது பிடிக்கவில்லை. அங்கு அரசாள வேண்டியவர் அம்மாங்கா தேவியின் புதல்வரல்லவா?”

“ஆம். ஆனால், இப்பொழுது சாளுக்கியர்களுடன் போர் தொடுப்பதில் கஷ்டங்களிருக்கின்றன. “

“கஷ்டங்களை மக்கள் கவனிப்பதில்லை இளைய பல்லவரே, நீதியைத்தான் கவனிக்கிறார்கள். நீதி நிலைத் திருந்தால் அநபாயர் வேங்கியின் அரியணையில் அமர்ந்திருக்க வேண்டும். அமர்ந்திருக்கத் தகுதியுள்ளவர் என்று மக்கள் நினைக்கிறார்கள். அநபாயர் போர் வீரர் மட்டுமல்ல. ராஜதந்திரத்திலும் வல்லவர். வீர ராஜேந்திரருக்கு ராஜதந்திரம் அத்தனை போதாது என்பது மக்கள் நம்பிக்கை. “

சேந்தன் கூறியது அத்தனையும் சரியென்பது தெரிந்தே இருந்தது இளைய பல்லவனுக்கு. வீரராஜேந்திரனுக்குப் பிறகு எப்படியும் அநபாயன் சோழ அரியணையில் மட்டு மின்றி வேங்கி அரியணையிலும் அமரக்கூடும் என்ற நம்பிக்கையுமிருந்தது. இருப்பினும், அதற்குக் காலமிருக்கிறது என்று நினைத்த இளையபல்லவன் பதிலேதும் சொல்லவில்லை. கூலவாணிகன் சேந்தனே மேற்கொண்டு பேசினான். “நான் அஞ்சியதற்குக் காரணம் தெரிகிறதா உங்களுக்கு? அநபாயர் நமது நாட்டின் உயிர். அவர் இந்த ஊரிலிருக்கும் மூன்று நாள்களும் அவர் உயிர் ஆபத்திலிருக்கிறது. “

அதை ஆமோதித்த இளையபல்லவன், “அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை சேந்தா. நாளைக்கு நமது உயிர் எமலோகத்தை நாடிச் சிட்டாய்ப் பறக்கும்!” என்று கூறிய பின்பே, அநபாயனைப் பற்றிய நினைப்பிலிருந்து சிறையின் சூழ்நிலைக்கு வந்த கூலவாணிகன், அடுத்த நாள் தன் தலை போய்விடுமென்பதை நினைத்து நடுங்கினான். இளையபல்லவன் மட்டும் அந்த நினைப்பை அறவே உதறிவிட்டு, மஞ்சத்திலிருந்து பஞ்சணையை நன்றாகத் தட்டிவிட்டு, “அப்பாடா” என்று படுத்தான். அவன் அப்படி ஆனந்தமாகப் படுத்தது கூலவாணிகனுக்குப் பெரும் வெறுப்பாயிருக்கவே, “ஏன், பஞ்சணை சுகமாயிருக்கிறதோ?” என்று வினவினான்.

“ஆமாம், சேந்தா! கலப்படமில்லாத இலவம் பஞ்சு” என்றான் இளையபல்லவன்.

“நன்றாக உறங்குங்கள்” என்று இகழ்ச்சியுடன் கூறிய கூலவாணிகன், அடுத்த சில வினாடிகளில் அயர்ந்து போனான். இளையபல்லவன் சில வினாடிகளிலேயே கண்களை மூடி நன்றாகத் தூங்க முற்பட்டதைக் கண்டு “நாளை உயிர் போக இருக்க எப்படித் தூக்கம் வருகிறது இவருக்கு?” என்று சொல்லிக்கொண்டு மிதமிஞ்சிய வெறுப்புடன் உறங்காமலே அன்றிரவைக் கழித்தான் கூலவாணிகன். மறுநாள் காலைப்பொழுது விடிந்து நீண்ட நேரமட்டும் நன்றாகத் தூங்கிய இளையபல்லவன், உணவைத் தட்டுகளில் கொண்டு வந்த காவலர் எழுப்பிய பின்பே எழுந்திருந்து பெருங்கிண்ணங்களில் இருந்த நீரால் பல்துலக்கி முகம் கழுவினான்.

உணவைத் தட்டுகளில் வைத்துக் காவலர் சென்றதும், ‘இரவு நன்றாகத் தூங்கினீர்களா?’ என்று இகழ்ச்சியுடன் கேட்டான் சேந்தன்.

“ஆம், உறங்கினேன். “

“எப்படி உறக்கம் பிடித்தது?”

“ஏன்? பிடிக்காமலென்ன?”

“இன்று நாம் வெட்டப்படுவோம். “

“ஆகவே இன்றிரவு உறங்க முடியாதல்லவா? அதற்காகத்தான் நேற்றிரவே போதிய அளவு தூங்கிவிட்டேன்” என்று கூறி நகைத்த இளையபல்லவன், உணவின் எதிரில் சில வினாடிகளில் உட்கார்ந்தான். கூலவாணிகன் உணவுத் தட்டினருகில் கூட வராமல் இளையபல்லவனை வெறுப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான். சில வினாடிகள் உணவுத் தட்டை உற்றுப்பார்த்த இளையபல்லவன், திடீரென அதன்மேல் மூடப்பட்டிருந்த துணியை எடுத்து மடித்து ஒருபுறம் வைத்துவிட்டு உணவருந்துவதில் முனைந்தான். அவன் மிகுந்த விருப்பத்துடன் உணவைச் சுவைத்து அருந்துவதைக் கண்ட கூலவாணிகனின் வெறுப்பு பன்மடங்காகியது.

“ஏன் சேந்தா, நீ சாப்பிடவில்லை?” என்று வினவினான் இளையபல்லவன்.

“தேவையில்லை எனக்கு” என்று கூறிய கூலவாணிகன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.

உணவை நிதானமாகச் சுவைத்து உண்ட பின்பு தட்டுகளை எடுத்துச் செல்ல வீரர்களைப் பணித்த கருணாகர பல்லவன் அதன்மேல் மூடியிருந்த துணியை மட்டும் தன் மஞ்சத்தில் ஒளித்தான். வீரர்கள் தட்டுகளை எடுத்துச் சென்றதும் கூலவாணிகனை அழைத்த கருணாகர பல்லவன், “சேந்தா, இதைப் பார்!” என்று தான் ஒளித்து வைத்திருந்த துணியை எடுத்து அவனிடம் காட்டினான்.

“என்ன அந்தத் துணிக்கு?” என்று எரிந்து விழுந்தான் கூலவாணிகன்.

“அருகில் வா!” என்றான் இளையபல்லவன்.

அருகில் நெருங்கியதும், இளையபல்லவன் காட்டிய அந்தத் துணியைக் கண்டு பிரமித்த கூலவாணிகன், “இது… ” என்று எதோ குழறினான்.

“உஸ்… இரைந்து பேசாதே!” என்று அவன் வாயைப் பொத்திய இளையபல்லவன், “இது நம் விமோசனத்தின் சீலை. இதைக் கேள்,” என்று கூறி, அவன் காதில் மிகவும் ரகசியமாக ஏதேதோ ஓதினான்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch9 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch11 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here