Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch11 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch11 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

172
0
Read Kadal Pura Part 1 Ch11 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch11 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch11 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 11 : நீதி மண்டபம்.

Read Kadal Pura Part 1 Ch11 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

உணவுத் தட்டு சிறைக்குள் கொண்டு வரப்பட்ட போது மிகவும் அசட்டையாயிருந்த கருணாகர பல்லவன் அந்தத் தட்டின் மீது மூடப்பட்டிருந்த வெள்ளைச் சீலையைக் கண்டதும் எச்சரிக்கை அடைந்துவிட்டதை ஆரம்பத்தில் கவனிக்காத கூலவாணிகன் சேந்தன், இளைய பல்லவன் மிகச் சாவதானமாக உணவருந்தியதைப் பற்றி முதலில் வெறுப்படைந்தானானாலும், ஒளித்து வைத்தத் துணியை எடுத்துக் காட்டியதும் மிதமிஞ்சியப் பிரமிப்புக்கே இலக்கானான். காவலர் உணவுத் தட்டை எடுத்துச் சென்றதும், “இங்கு வா. இந்தத் துணியைப் பார்” என்று அழைத்த இளையபல்லவன்மீது, “என்ன அந்தத் துணிக்கு?” என்று எரிந்து விழுந்த கூலவாணிகன், அந்தத் துணியிலிருந்தது என்னவென்பதை அறிந்ததும் வியப்பின் எல்லையை அடைந்தான். அப்படி ஏற்பட்ட எல்லையில்லாத வியப்பின் விளைவாக, “இளையபல்லவரே! இது… ” என்று ஏதோ குழறவும் முற்பட்டான்.

அந்தக் குழறலை ஒரே பார்வையாலும் “உஸ்! இரைந்து பேசாதே” என்ற மூன்று சொற்களாலும் தேக்கிவிட்ட இளையபல்லவன், சேந்தனை அருகில் வர இழுத்து, அவன் காதுக்கருகில் குனிந்து, “சேந்தா! இது நம் விமோசனச் சீலை. இப்பொழுது புரிகிறதா உனக்கு?” என்று மிகவும் ரகசியமாகக் கேட்டான்.

அப்பொழுதும் பிரமிப்பின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த கூலவாணிகன் சேந்தன், “புரிகிறது இளைய பல்லவரே! நன்றாகப் புரிகிறது. ஆனால்…?” என்று ஏதோ கேட்க முற்பட்டான்.

இளையபல்லவன் மீண்டும் அவன் காதிலே ரகசியமாக ஓதத் தொடங்கி, “சேந்தா! இதில் சந்தேகத்துக்கு இடமில்லை. இதிலிருக்கும் கையொப்பம் அநபாயருடையதுதான். அவன் நமக்கு அளிக்கும் அபயம்தான் இந்தச் சீலையில் கண்ட வரிகள்” என்று கூறினான்.

கூலவாணிகன், அந்தச் சீலையை வாங்கிக்கொண்டு, அந்த அறைச் சாளரத்தின் அருகில் சென்று அந்தச் சீலையில் கூரிய மயிலிறகு நுனியால் மிக மெல்லியதாகத் தீட்டப்பட்டிருந்த நாலு வரிகளைக் கவனித்தான். “எதற்கும் அஞ்ச வேண்டாம். சமயத்தில் உதவி வரும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ளவும் – அநபாயன்” என்ற வரிகள் மெல்லியதாக மிகத் தெளிவாகத் தீட்டப்பட்டிருந்தன. அந்த வரிகளை மீண்டும் மீண்டும் கூலவாணிகன் படிப்பதைக் கண்ட இளைய பல்லவன் சாளரத்தருகில் தானும் சென்று, அவனுக்குப் பக்கத்தில் நின்று அந்தச் சீலையை வாங்கித் தன் கச்சையில் செருகிக்கொண்டான். தவிர, மறுபடியும் சிறையில் மஞ்சங்கள் இருந்த மத்திய இடத்திற்குச் செல்ல முயன்ற கூலவாணிகனைத் தடுத்து, “சேந்தா! இப்பொழுது மஞ்சத் துக்குச் செல்ல வேண்டாம். இப்படியே நாம் வெளியே நடமாடும் குதிரைக் காவலரை வேடிக்கை பார்ப்போம்” என்றும் கூறினான்.

என்னதான் அநபாயன் அனுப்பிய சீலை அபயம் தந்திருந்தாலும் ஆபத்திலிருந்து தப்பும் வரையில் நிச்சயமாக எதையும் சொல்ல முடியாதென்ற தீர்மானத்துடனிருந்த கூலவாணிகனுக்கு வேடிக்கை பார்க்க அது உசிதமான சமயமாகத் தெரியாததால், “வேடிக்கை பார்க்க இதுதான் சமயமா இளைய பல்லவரே?” என்று கசப்புடன் வினவினான்.

இளையபல்லவனின் இதழ்களில் சற்றே இளநகை படர்ந்தது. வேறு சமயம் எப்பொழுது கிடைக்கும் சேந்தா? இந்தச் சிறைக்கூடத்திற்கு நம்மை மறுபடியும் அழைத்து வரப் போகிறார்களா?” என்று பதிலுக்கு இளைய பல்லவனும் கேட்டான்.

“திரும்பவும் இங்கு வர முடியாதது தங்களுக்கு வருத்தமாயிருக்கிறதா?” என்றான் சேந்தன், குரலில் ஏளனம் தொனிக்க.

“இல்லை… இல்லை… வருத்தமில்லை” என்று நகைத் தான் இளைய பல்லவன்.

“அப்படியானால் நான் போகிறேன், மஞ்சத்துக்கு. “

“என்ன அங்கே அவசரம்?”

“இங்கே என்ன வேலை?”

“ஏற்கெனவேதான் சொன்னேனே குதிரைக் காவலர் போவதை வேடிக்கை பார்க்கலாமென்று. “

“வேடிக்கை எனக்குத் தேவையில்லை. “

“ஆனால் பேச்சுத் தேவையல்லவா?”

“என்ன பேச்சு?”

“அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டாமா?”

இதைக் கேட்ட கூலவாணிகன், பல்லவனைச் சற்றே ஏறெடுத்து நோக்கினான். “சேந்தா! நான் சொல்வது புரிய வில்லையா உனக்கு? மஞ்சத்தில் உட்கார்ந்து நாம் பேச முடியாது. இங்குள்ள காவலர்களில் நண்பர்களுமிருக்கலாம், விரோதிகளுமிருக்கலாம். ஆகவே நாம் தனித்துப் பேசக்கூடிய இடம் இந்தச் சாளர வாயில்தான். இது பிரமுகர்கள் சிறையாதலால் விசாலமாயிருக்கிறது. இந்தச் சாளரத்துக்கும் இரும்புக் கதவும் கம்பிகளுமிருக்கும் இடத்துக்கும் இடையே பன்னிரண்டடிகளாவது இருக்கும்… ” என்று சொல்லிக் கொண்டு போன இளைய பல்லவனை இடையே தடுத்த கூலவாணிகன், “ஆமாம் பிரபு! இருக்கும் இருக்கும்!” என்று சொல்லி ஆமோதித்துத் தலையையும் அசைத்தான்.

கூலவாணிகன் பேச்சின் குறுக்கே விழுந்ததால் ஒரு விநாடி பேச்சை நிறுத்திய கருணாகர பல்லவன், மேலும் பேசத் தொடர்ந்து, “ஆம் சேந்தா! பன்னிரண்டு அடிகளுக்குக் குறைவில்லை. நாம் இந்தச் சாளரத்தின் மூலம் வெளியே பார்த்துக்கொண்டு மெள்ளப் பேசினால் கதவுக்கு அப்புறமுள்ள காவலர் காதில் விழாது. தவிர பேசுவதும் புரியாது. நாம் ஏதோ வெளிப்புறத்தை வேடிக்கை பார்ப்பதாகவே நினைப்பார்கள். ஆகவே அப்புறமோ இப்புறமோ அசையாமல், வெளிப்புறம் பார்த்தே பேசு” என்று விவரித்துவிட்டு, “சேந்தா! இந்தப் பாலூர் துறைமுகத்தின் கோட்டை பலமானது. இயற்கை அரண்களும் இதற்கிருக்கின்றன. ஆனால் ஊருக்குள் இருக்கும் ஜனத்தொகை எப்படி?” என்று விசாரித்தான்.

இந்தக் கேள்வியும், கேள்வியை ஒட்டிய விசாரணையும் அனாவசியமாகப் பட்டதால், கூலவாணிகன் வெறுப்புடன் இதழ்களை மடித்து, பருமனான தன் சரீரத்தையும் ஒருமுறை நெளித்து, “எதற்கு இந்த ஆராய்ச்சி இப்பொழுது?” என்று வினவினான்.

“சொல், தேவையிருக்கிறது. ” கருணாகர பல்லவன் குரலில் கண்டிப்பு இருந்தது.

“மூன்றிலொரு பாகம் கலிங்கத்தவர். மற்ற இரண்டு பாகங்களில் தமிழரும், வேங்கி நாட்டவரும் சரி பாதி” என்று வினவினான் கூலவாணிகன்.

“இங்குள்ள படை எப்படி?”

“அதுவும் கலப்படம். கலிங்கரும், தமிழரும் வேங்கி நட்டவரும் இருக்கிறார்கள். “

“வணிகர்?”

“பெரும்பாலும் தமிழர். வேங்கி நாட்டவர் யாருமில்லை. கலிங்கர் ஒரு சிலர். “

“அப்படியானால் கலிங்கத்தின் மிகப் பலவீனமான இடம் அந்த பாலூர்ப் பெருந்துறைதான்” என்றான் கருணாகர பல்லவன்.

கூலவாணிகன் வியப்பினால் விழித்தான். அந்த வியப்பின் விளைவாக ஓர் உண்மையும் சொன்னான்: “இளைய பல்லவரே! இந்த ஊரில் தமிழ் வணிகர் பெரும்பாலோர் என்பதைப் பற்றிப் பெருமைப்பட வேண்டாம். படையினரில் பெரும்பாலும் கலிங்கர்தான். ஒரு சிலர் தான், தமிழர்” என்று.

இளையபல்லவன் சற்று யோசித்துவிட்டு, “சேந்தா! ஒரு நாட்டின் சக்தி படைபலத்தை மட்டும் பொறுத்ததன்று. வாணிபத்தையும் பொறுத்தது. வணிகர் பெருகிய ஊரில் அவர்கள் சக்தி மிதமிஞ்சி நிற்கும். படையிலும் சில தமிழர் இருப்பதால், அவர்கள் உதவியும் தமிழ் வணிகருக்கு இருக்கும். இந்தக் கூட்டுறவுதான் பீமனுக்கு இந்த ஊரில் பெரும் பலவீனம். இந்தக் கூட்டறவால்தான் அநபாயர் சிறையிலிருந்து தப்பியிருக்கிறார். சிறைக்குள்ளிருக்கும் நமக்கும் செய்தியனுப்பியிருக்கிறார். நமக்கு உணவு கொண்டு வந்த வீரனைக் கவனித்தாயா?” என்று கேட்டான்.

“இல்லை. அவனுக்கென்ன?”

“என் உணவை மஞ்சத்தில் வைத்தான். “

“ஆம். “

“உடனே திரும்பிப் போகவில்லை. “

“அப்படியா?”

“ஆம், சற்று நின்றான். உணவு மேலிருந்த சீலையை உற்றுப் பார்த்தான். பிறகே சென்றான். “

பிரமிப்புத் தட்டிய விழிகளை இளைய பல்லவன் மீது திருப்பிய கூலவாணிகன், “இதை நான் கவனிக்க வில்லையே!” என்றான்.

“மனத்தில் சாவுக் கிலி பிடித்திருந்ததால் நீ எதையும் கவனிக்கவில்லை சேந்தா! அபாயத்திலிருப்பவன் மனத்தைத் தளரவிடக்கூடாது. மனத்தையும் கண்ணையும் காதையும் தீட்டி வைத்துக்கொண்டு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். நீ சோர்வடைந்து கிடந்தாய். ஆனால் நான் கவனித்தேன். கவனித்ததும் சீலைமீது கண்களை ஓட்டினேன். சீலை மிக மெல்லியதாகையால் மறுபுறமிருந்த எழுத்துகள் தெளிவாகத் தெரிந்தன. சீலையை எடுத்து முடித்து வைத்துக்கொண்டேன்” என்ற இளைய பல்லவனை இடைமறித்த கூலவாணிகன், “அதனால்தான் தைரியமாக உணவருந்தினீர்களா?” என்று கேட்டான்,

இளையபல்லவன் பதிலுக்கு நகைத்தான். “இல்லை சேந்தா! எப்படியும் நான் உணவருந்தியிருப்பேன். இறப்பு எப்பொழுது வருமென்று யாரும் நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. ஆகவே, உயிருடனிருக்கும் வரையில் துணிவுடன் வழக்கப்படி வாழ்வதே அறிவாளிகளுக்கு அழகு” என்று! கூறிய இளையபல்லவன், “அது கிடக்கட்டும் சேந்தா! இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியதெல்லாம், அநபாயர் உதவி எப்பொழுது வரும், எப்படி வரும், வந்தால் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன என்பதுதான். உன் விடுதியில் பீமன் தனக்கு எல்லாம் தெரிந்தமாதிரி நடித்தான். ஆனால் அவனுக்குத் தெரிந்த உண்மை சொற்பம் என்பதை நான் தெரிந்துகொண்டேன்” என்றும் குறிப்பிட்டான்.

“எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?”

“பீமன் வாயிலிருந்தே. “

“பீமன் வாயிலிருந்தா!”

“பீமன் வாயிலிருந்துதான். தூதுப் புறா விடப்பட்டதால் நான் பிரமுகர் வீதியிலிருந்த வீட்டிலிருந்ததை ஊகித்ததாகச் சொன்னானல்லவா?”

“ஆம், சொன்னான். “

“ஆனால் தூதுப் புறா எனக்காக விடப்படவில்லை யென்பதை அவன் உணரவில்லை. குணவர்மனுக்கு விடப்பட்டது அந்தப் புறா. “

“அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்கள் வந்தது அநபாயருக்கு எப்படித் தெரியும்?”

“உண்மையில் அப்பொழுது நான் அங்கிருந்தது அநபாயருக்குத் தெரியாது. ஆகையால் சந்தர்ப்பவசத்தால் என்னைப் பிடித்திருக்கிறான் பீமன். துறைமுகத்திலிருந்து என்னைத் துரத்தி வந்தவர்கள் நான் வெளிநாட்டுப் பிரமுகர் வீதியில் மறைந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு ஒற்றர்களை நிறுத்தினான் பீமன். தூதுப் புறா ஒன்று பறந்ததாகச் செய்தி கிடைத்ததும் அது எனக்காகத்தான் விடப்பட்டதாக நினைத்தான். அநபாயர் தப்பிவிட்டார். நான் ஒரு விடுதியில் மறைந்திருக்கிறேன். அங்கு விடப்படுகிறது ஒரு புறா. எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்து, அநபாயரின் முத்திரை மோதிரத்தை அனுப்பி என்னை வஞ்சகமாக அழைத்து வந்துவிட்டான். “

இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த கூலவாணிகன், “ஆம். சொல்ல மறந்துவிட்டேன், உங்களிடம். பீமன் என் பெட்டியைச் சோதனை செய்தபோது உங்கள் ஓலையுடன் அநபாயர் எனக்களித்திருந்த முத்திரை மோதிரத்தையும் வைத்திருந்தேன். அதையும் அவன் எடுத்துக்கொண்டான்” என்றான்.

“நீ சொல்லத் தேவையில்லை சேந்தா! பெரும் ஒற்றர் களிடம் ராஜாங்கக் காரியங்களைச் சாதிக்க ராஜவம்ச முத்திரை மோதிரங்களைக் கொடுக்கும் பழக்கம் உண்டு என்பதை நானறிவேன். ஆகவே உன் மாளிகையில் நீ இருந்த கோலத்தைக் கண்டதும் உண்மையை ஊகித்துக் கொண்டேன்” என்ற இளையபல்லவன், “ஆகவே சேந்தா! பீமனின் நடவடிக்கைகள் சந்தர்ப்பவசத்தாலேயே பயனடைந்திருக்கின்றன. பீமன் சிறந்த அறிவாளியாதலால் இந்த நிலைமையைத் தனக்கு அனுகூலமாகச் செய்துகொள்ளவே முயலுவான். ஆகவே உனக்கும் எனக்கும் இன்று விசாரணை இருக்காது” என்றான்.

இளையபல்லவன் சொற்களைக் கேட்ட கூலவாணிகன் மிதமிஞ்சிய பிரமிப்பை அடைந்தான். அத்துடன் திடீரென இளையபல்லவனை நோக்கியும் திரும்பினான். திடீரெனத் திரும்பி, “என்ன! என்ன சொல்கிறீர்கள்?” என்று வினவவும் செய்தான்.

“இன்று நமக்கு விசாரணை இருக்காது” உறுதியுடனும் திட்டவட்டமாகவும் வந்தது இளையபல்லவன் பதில்.

“ஏன்?” என்று மறுபடியும் வினவினான் கூல வாணிகன்.

“நீயும் நானும் முக்கியமல்ல பீமனுக்கு” என்று திட்டவட்டமாகக் கூறினான் இளையபல்லவன்.

“வேறு யார் முக்கியம்?”

“அநபாயர் முக்கியம். “

“உண்மைதான். “

“நம்மைக் கொல்வதால் பீமனுக்கு லாபம் இல்லை. “

“ஏன்?”

“நம்மைக் கொன்றால் சிறந்த ஒரு வலையை இழப்பான் பீமன். புலி தப்பிவிடும். “

“நீங்கள் சொல்வது புரியவில்லை எனக்கு. “

“நான் அநபாயனின் இணைபிரியாத் தோழன்” என்று சுட்டிக் காட்டிக்கொண்ட இளையபல்லவனது குரலில் பெருமிதம் மிதமிஞ்சி ஒலித்தது.

“உங்களை இரட்டையர் என்றுகூடச் சொல்வதுண்டு” என்று கூலவாணிகனும் ஒப்புக்கொண்டான்.

“ஆம் ஆம். அந்தப் பாக்கியம் எனக்குண்டு. ஆகவே என்னை அழித்தால் அநபாயரை இழுக்கும் காந்தத்தை இழப்பான் பீமன். “

கூலவாணிகன் முகத்தில் தெளிவுக்குறி படர்ந்தது. “உண்மைதான் இளையபல்லவரே! உம்மை வைத்து அநபாயரை இழுக்கப் பார்ப்பான் பீமன்” என்றான்.

இளையபல்லவன் சில விநாடிகள் ஏதோ யோசித்தான். “பீமன் எண்ணம் அப்படித்தானிருக்கும். அநபாயரை அழித்துவிட்டால் வேங்கி நாட்டு அரியணையில் அமர வேண்டிய அரசனை அழித்ததாகிவிடும். பிறகு வேங்கி நாட்டில் அரியணையில் போட்டி இருக்காது. சாளுக்கிய விஜயாதித்தன் தாயாதி எதிர்ப்பைப் பற்றி அச்சப்பட அவசியமில்லை. நாடு திடமாகிவிடும் அவனுக்கு. திடமான வேங்கி நாடு கலிங்கத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இருப்பதால் கலிங்கத்துக்கு அது பெரும் அரண் போலாகும். அத்தகைய நிலையை ஏற்படுத்த அநபாயர் சிக்கவேண்டும். அநபாயரைப் பாலூரில் சாதாரணமாகப் பிடித்துவிட முடியாதென்பதைப் பீமன் அறிந்திருக்கிறான். அந்த வேங்கையைப் பிடிக்க என்னைத் தூண்டுதலாக உபயோகப்படுத்துவான். ஆகவே விசாரணை இன்று கிடையாது. தவிர விமோசனமும் இந்தச் சிறையிலிருந்து கிடைக்காது” என்றும் கூறினான்.

“அதென்ன அத்தனை திட்டமாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் கூலவாணிகன்.

“நாமிருப்பதால் இந்தச் சிறைக்கூடம் மிக ஜாக்கிரதை யாகக் கவனிக்கப்படும். அநபாயர் இங்குள்ள அவர் நண்பர்களை உபயோகப்படுத்தினால் உடனே சிறை செய்யப்படுவார்கள். இங்கிருந்து தப்ப ஏற்பாடு இருக்காது. “

“எங்கிருந்து இருக்கும்? ஒருவேளை விசாரணை நடந்தால் நீதிமண்டபத்திலிருந்து… ” என்று கேட்க முற்பட்ட கூலவாணிகனை இடைமறித்த இளைய பல்லவன், “அங்கிருந்தும் இருக்காது சேந்தா! நீதி மண்டபம் நான்கு சுவர்களுக்குள் அடங்கியது. அது பலமாகவும் காக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து நாம் தப்ப முடியாது. வெளிப் புறத்தில்தான் நமக்கு விமோசனம்” என்றான்.

“வெளிப்புறத்திலென்றால்?”

“நமக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டால் நீதி மண்டபத்திலிருந்து கொலைக்களத்துக்குச் செல்லும் வழியில் காப்பாற்றப்படலாம். சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் சிறைக்கு மீண்டும் வரும்போது வழியில் மீட்கப்படலாம். வேறு இடமில்லை” என்று திட்டமாக அறிவித்த இளைய பல்லவன், “சேந்தா! இது அனைத்தும் உனக்கு எதற்காகச் சொல்கிறேன் தெரியுமா?” என்று கேட்டான்.

“தெரியாது” என்று பதில் சொன்னான் கூலவாணிகன்.

“அநபாயர் குறிப்பிட்டிருப்பதுபோல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நீ தயாராயிருக்க வேண்டும். எதற்கும் என்னைக் கவனித்துக் கொண்டிரு. தவிர, சிறையிலிருக்கும் வரையில் சந்தேகத்துக்கு இடம் கொடாமல் நடந்துகொள். பழையபடி திகிலுடனும், வெறுப்புடனும் நடந்துகொள். மகிழ்ச்சியிருந்தால் வெளிக்குக் காட்டாதே. நீதி மண்டபத்தைவிட்டுக் கிளம்பியதும் என்னையே கவனி. இனி நமக்குள் சம்பாஷணை எதுவும் கிடையாது” என்று முடிவாகச் சொல்லிய இளையபல்லவன், சாளரத்தை விட்டு மீண்டும் அறையின் நடுவுக்கு வந்து மஞ்சத்தில் சாய்ந்து கொண்டான்.

புத்தி பெரிதும் குழம்பிக் கிடந்ததால் என்ன செய்வ தென்பதை அறியாத கூலவாணிகன் ஏதேதோ யோசித்துக் கொண்டு பொழுதை ஓட்டினான். இளையபல்லவன் சொல்வதெல்லாம் நியாயமாகவும் காரணங்களை ஒட்டிய தாகவும் இருந்தாலும், கூலவாணிகன் மனத்தில் பூரண திருப்தியில்லை. ‘பீமன் இன்றே நீதி மண்டபத்தில் சந்திப்ப தாகத்தானே சொல்லிப் போனான், வார்த்தை தவறும் வழக்கம் அவனுக்கில்லையே? என்று எண்ணினான்.

ஆனால் விஷயங்கள் இளையபல்லவன் சொன்னது போலவே நடந்தன. அன்று முழுவதும் மட்டுமல்ல, அதற்கு மறுநாளும்கூட விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இருவரும் சிறையிலேயே அடைந்து கிடந்தார்கள். அந்த இரண்டு நாளும் இரண்டு யுகங்களாகக் கூலவாணிகனுக்குப் பட்டனவேயொழிய, இளையபல்லவனோ உண்பதையும் உடுப்பதையும் சிறிதும் குறைத்துக் கொள்ளாமல் சகல சௌகரியத்தையும் செய்துகொண்டான். மூன்றாவது நாள்தான் அவர்களிருவரையும் நீதிமண்டபத்திற்கு அழைத்துச் செல்லக் காவலர்கள் வந்தார்கள். அவர்களோடு உடனே புறப்பட மறுத்த இளையபல்லவன் தன் பதவிக்கும் வணிகப் பெருந்தகையின் அந்தஸ்துக்கும் தகுந்த ஆடைகள் அளிக்குமாறு கோரினான். அவர்கள் கொண்டு வந்த ஆடைகளைத் தானும் அணிந்து கூலவாணிகனையும் அணியச் சொல்லி காவலரைப் பின்தொடர்ந்தான்.

காவலர் ஒரு பெரிய மூடுவண்டியில் இருவரையும் ஏற்றி நீதி மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நீதி மண்டபத்திற்குள் நுழைந்த கருணாகர பல்லவன் அந்த மண்டபத்தைச் சுற்றிலும் ஒருமுறை நோக்கினான். மண்டபம் பூராவும் ஜனங்கள் கூட்டம் மண்டிக் கிடந்தது.

காவல் மிகவும் பலமாக இருந்தது. ஜனங்களை இருபுறமும் ஈட்டிகளைக் கொண்டு அடக்கி வைத்த வீரர்களைத் தவிர யாரும் தப்ப முடியாதபடி அளவுக்குச் சற்று அதிகமாகவே காவல் இருந்தது அந்த நீதி மண்டபத்தில்.

மண்டபத்தைச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு நீதி ஸ்தானத்துக்கு அருகே வந்ததும் அந்த ஸ்தானத்தின் மீது கண்களை உயர்த்திய கருணாகர பல்லவன் சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றான். அந்த ஸ்தானத்தில் அமர்ந்திருந்தது பீமனல்ல. கொடுமையிலும், தந்திரத்திலும் எடுத்த காரியத்தைச். சாதிப்பதிலும், பீமனைவிடக் கோடி மடங்கு உயர்ந்தவனும் தனது பரம விரோதியுமான மனிதன் உட்கார்ந்திருப்பதைக் கண்ட கருணாகர பல்லவனது நெஞ்சில்கூடச் சிறிது அச்சம் உதயமாயிற்று. அதனால் சிறிது சலனப்பட்ட கருணாகர பல்லவனது கண்களை, நீதி ஸ்தானத்தில் அமர்ந்திருந்தவனின் இரு கண்கள் கூர்ந்து கவனிக்கவும் செய்தன. பிரேதத்தின் கண்களைப்போல் பயங்கரமாயிருந்த அந்தக் கண்களுக்குச் சமமாக வெளுத்துக் கிடந்த மெல்லிய உதடுகளில் ஒரு சோரப் புன்னகை விரிந்தது. அந்தப் புன்னகையே தன் மரண தண்டனை என்பதைப் புரிந்துகொண்டான் கருணாகரல்லவன்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch10 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch12 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here