Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch12 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch12 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

119
0
Read Kadal Pura Part 1 Ch12 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch12 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch12 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 12 : அநபாய குலோத்துங்கன்.

Read Kadal Pura Part 1 Ch12 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

பிரேதத்தின் கண்களைப்போல் ஒளியிழந்து கிடந்தாலும், ஒளியிழந்த காரணத்தினாலேயே பயங்கரமாகத் தெரிந்த நீதிபதியின் கண்கள் தன்னை ஊடுருவிப் பார்ப்பதையும், அந்தப் பார்வையைத் தொடர்ந்து நீதிபதியுடைய வெளுத்த இதழிலே ஒரு புன்னகை விரிந்ததையும் கண்ட கருணாகர பல்லவனுக்குப் பல விஷயங்கள் குழப்பத்தையளித்தாலும், தீர்ப்பு என்னவாயிருக்கும் என்பதில் மட்டும் எத்தகைய குழப்பமும் ஏற்படவில்லை. வட கலிங்கத்து மன்னனும் தனது ஜன்ம விரோதியான அனந்தவர்மன், தென்கலிங்கத்துக்கு எப்பொழுது வந்தான், என்ன காரணத்தை முன்னிட்டு வந்தான், பீமனோ அல்லது அவனது நீதிபதிகளோ அமர வேண்டிய இடத்தில் அவன் எதற்காக அமர்ந்திருக்கிறான் என்ற விவரங்கள் புரிய வில்லையே தவிர, விசாரணை ஒரு கேலிக்கூத்தாகவே இருக்குமென்பதிலோ தன் தலையைச் சீவும்படி தீர்ப்புக் கூறப்படும் என்பதிலோ லவலேசமும் சந்தேகமில்லாதிருந்தது இளையபல்லவனுக்கு. அப்படி மரணத்தை எதிர் நோக்கி நிற்கும் தருவாயில் அச்சம் காட்டுவதோ, எதிரிக்குத் தான் தாழ்ந்தவனென்று பொருள்பட இடங்கொடுப்பதோ தகுதியற்றது என்ற காரணத்தால், அனந்த வர்மனின் புன்முறுவலைப் புரிந்துகொண்டதற்கு அத்தாட்சியாகத் தானும் ஒரு பதில் புன்முறுவலைக் கோட்டினான் கருணாகர பல்லவன். சோழ நாட்டின் மீதுள்ள பகை பெரும் பகையாக அனந்தவர்மனின் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டிருந்ததால், தெளிவில்லாத உள்ளத்துடனும், துவேஷ புத்தியுடனுமே அன்று அவன் விசாரணையை நடத்தினான். ஆனால் அவனைப் பாராட்டி ஒன்று மட்டும் கூறலாம். துவேஷத்தில் துளிகூட வெளிக்குக் காட்டாமல் நீதியை மட்டுமே கவனிப்பவன் போல் விசாரணையை நடத்தினான் அவன். சிறைப்பட்டிருந்தவர் களிடம் உண்மையாக அனுதாபம் கொண்டவன் போல் நடித்தான். மேலுக்கு எத்தனை கண்ணியமாக விசாரணை நடத்த முடியுமோ அத்தனை கண்ணியமாக நடத்தினான். நீதிக்கும் நேர்மைக்கும் புறம்பாக அன்று விதித்த தண்டனைகள் அனைத்தையும் நீதியின் பெயராலும் நேர்மையின் பெயராலும் விதித்தான். அவன் நடத்திய விசாரணைகளையும், விதித்த தண்டனைகளையும் கவனித்த கருணாகர பல்லவன், அந்த நீதி மண்டபத்தின் உயர்ந்த தூண்களையும் பார்த்து, நீதிபதியையும் நோக்கி, ‘இங்கு தூண்கள் தான் உயர்ந்திருக்கின்றனவே யொழிய நீதி தாழ்ந்துதான் கிடக்கிறது’ என்று தனக்குள் பலமுறை சொல்லிக் கொண்டான்.

அன்று நீதிமண்டபத்தில் ஏராளமான தமிழர் சிறைப்பட்டு நின்றிருந்ததால் கருணாகர பல்லவன் கடைசியிலேயே விசாரிக்கப்பட்டான். நடுப்பகல் வந்தபின்பே அவன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இத்தனை நேரம் கழித்து விசாரிக்க எதற்காக ஊருக்கு முன்பு தன்னை அழைத்து வந்தார்களென்று எண்ணிப் பார்த்த கருணாகர பல்லவன், கலிங்க விரோதிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதைத் தனக்கு உணர்த்தவே அனந்தவர்மன் தன் விசாரணையைத் தாமதித்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் உயிரிழக்கப் போகிறவனையும் கடைசி வரையில் துன்புறுத்தவே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறதென்பதை அறிந்த இளையபல்லவன், அனந்தவர்மனுடைய குரூரத்தின் எல்லையைப் புரிந்துகொண்டான். இத்தகைய பல படிப்பினைகள் இளையபல்லவனுக்கு ஏற்படுவதற்கு முன்பாக, அவனுக்குக் கொடுக்க வேண்டிய மட்டுமரியாதைகள் எதையும் குறைக்கவில்லை வடகலிங்கத்து மன்னன். தன்னெதிரில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட இளைய பல்லவனை நோக்கி இளநகை புரிந்த அனந்தவர்மன், அவனுக்குப் பின்னாலிருந்த கூலவாணிகனைச் சில விநாடிகளே நோக்கிவிட்டு மீண்டும் இளையபல்லவன் மீது கண்களை நிலைக்கவிட்டான். அந்தப் பிரேதக் கண்களின் பார்வை அளித்த சங்கடத்திலிருந்து விடுவித்துக் கொள்ள அப்புறமும் இப்புறமும் பார்த்த இளைய பல்லவன் மீது மீண்டுமொரு புன்முறுவலை வீசிய அனந்தவர்மன், எதிரேயிருந்த காவலரைப் பார்த்து, “இளைய பல்லவருக்கு ஓர் ஆசனம் எடுத்துப் போடுங்கள். வெளிநாட்டுத் தூதர்கள் மரியாதைக்கு உரியவர்கள்” என்று கூறினான்.

அப்படிக் கூறிய அனந்தவர்மனின் குரலில் மிகுந்த நிதானமிருந்ததையும், குரலும் பலவீனமாகவே வெளி வந்ததையும், அப்படிப் பலவீனமாக வந்த குரலிலும் ஒரு கடூரமும் கம்பீரமும் விரவி இருந்ததையும் கருணாகர பல்லவன் கவனித்தான். தனக்குச் செய்யப்படும் அத்தனை மரியாதையும் காவுக்கு அனுப்பப்படும் ஆட்டுக்குப் பூசாரி செய்யும் மரியாதைப் போன்றது என்பதையும் சந்தேகமற உணர்ந்துகொண்ட கருணாகர பல்லவன், அடுத்து நடப்பவை என்னவென்பதைக் கவனிக்கலானான். அனந்த வர்மனின் உத்தரவுப்படி பெரிய ஆசனமொன்று கருணாகர பல்லவனுக்கு அளிக்கப்பட்டதும் விசாரணைகளைத் தொடங்கிய அனந்தவர்மன், முதன் முதலாக, வேவு பார்க்கும் குற்றங்கள் சாட்டப்பட்ட பல தமிழ் வணிகர்களையும் இதர பிரமுகர்களையும் தன் முன்பு கொண்டுவர உத்தரவிட்டான்.
சோழ நாட்டுத் திருமந்திர ஓலைக்காரன் போல் கலிங்கத்திலிருந்து நீதி நிர்வாக ஸ்தானீகன் குற்றச்சாட்டு களைப் படிக்க, அனந்தவர்மன் கேள்விகளைக் கேட்டுத் தண்டனைகளை விதித்துக்கொண்டே போனான். குற்றச் சாட்டுகளெல்லாம் கிட்டத்தட்ட வேவு பார்ப்பது சம்பந்தமாக ஒரே மாதிரியாக இருந்ததையும், முக்கியமானவர்க்கெல்லாம் மரண தண்டனையும் மற்றவர்களுக்கெல்லாம் நீண்ட கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டதையும் கண்ட கருணாகர பல்லவனுக்கு, அனந்தவர்மன் தமிழர்களிடம் விரோதத்தை வேண்டுமென்றே சம்பாதிக்க முயலுவதாகத் தோன்றியது. பலமான சோழப் பேரரசைத் தேக்கி நிறுத்தும் வழி இதுவல்லவென்பது இளைய பல்லவனுக்குத் தெரிந்திருந்ததால், மன்னன் சாட்டும் வஞ்சத்தால் கலிங்கத்து மக்கள் எத்தனை பேர் அழிவார்கள் என்று எண்ணி அவர்கள் நிலை குறித்து ஏங்கினான். ஆனால் அப்படி எந்த ஏக்கத்துக்கும் இலக்காகாத அனந்தவர்மன், இஷ்டப்படி தண்டனை விதித்துக் கொண்டே போனான்.

மற்றவர்களை விடுவிடு என்று விசாரித்துக் கொண்டு போன அனந்தவர்மன் கூலவாணிகனை விசாரிக்கும் சமயம் வந்ததும் சிறிது நிதானித்து, ஒருமுறை இளைய பல்லவனை நோக்கிவிட்டுக் கூலவாணிகனையும் நோக்கினான். அதைத் தொடர்ந்து அந்தப் பிரேதக் கண்களில் சில விநாடிகளில் சிந்தனை படர்ந்தது. கடைசியாக ஏதோ முடிவுக்கு வந்ததற்கு அறிகுறியாகத் தன் தலையை ஒரு முறை அசைத்துவிட்டு, இளையபல்லவனை எழுந்து நிற்க ஆக்ஞாபித்தான். விசாரணையின் விளைவைப் பற்றி முன்னமே அறிந்து கொண்டிருந்த இளைய பல்லவன், மிகக் கம்பீரமாக எழுந்து, பாலூர்ப் பெருந்துறையின் அந்தப் பிரும்மாண்டமான மண்டபத்தில் நின்று, ஆடுகளை நோக்கும் பெரும் புலிபோல் தன் கண்களை ஒருமுறை நாற்புறமும் துழாவவிட்டான். பிறகு நீதிஸ்தானத்திலிருந்த பகைவன்மீது ஈட்டிகளைப் போலப் பளிச் சிட்ட தன் கண்களை நாட்டினான்.

இரண்டு ஜோடிக் கண்களும் மீண்டுமொருமுறை கலந்தன. இரண்டிலுமிருந்த பகைமை அவற்றின் கொடுமையை அதிகப்படுத்திக் காட்டியது. அந்தப் பகைமை உள்ளூர இருந்தாலும் அமுதம் சொட்டும் குரலில் விசாரணையைத் தொடங்கிய அனந்தவர்மன், “இளைய பல்லவரே! நாமிருவரும் ஒருவரையொருவர் முன்பே அறிவோம்” என்றான்.

“நன்றாக அறிவோம்” என்ற இளைய பல்லவன் குரலில் இகழ்ச்சியொலி மண்டிக் கிடந்தது.

“நீதி அதிகாரி, குற்றவாளி என்ற இவ்வித உறவில் நாம் முன்பு சந்திக்கவில்லை” என்று சுட்டிக் காட்டினான் அனந்தவர்மன்.

“அப்பொழுதும்கூட கலிங்கத்துக்குத் தூதனாகத்தான் வந்தேன். அப்பொழுது அரசியல் கருத்து வேறுபாடுகளிருந்தும் சிறை செய்யப்படவில்லை. அப்பொழுதைக்கு இப்பொழுது கலிங்கம் பெரிதும் முன்னேறியிருக்கிறது,” என்று சர்வ சாதாரணமாகப் பேசிய கருணாகர பல்லவன், மெல்ல நகைக்கவும் செய்தான்.

அனந்தவர்மன் உதடுகளிலும் மீண்டும் புன்னகை விரிந்தது. “கலிங்கம் முன்னேறவில்லை. நீங்கள்தான் முன்னேறியிருக்கிறீர்கள். “

“விளங்கவில்லை எனக்கு. “

“அன்று நீங்கள் வட கலிங்கத்துக்குத் தூதராக மட்டும் வந்தீர்கள். தூதருக்கான மரியாதை காட்டப்பட்டது. இன்று ஒற்றராக முன்னேறியிருக்கிறீர்கள். அன்று வட கலிங்கத்துக்கு வந்தபொழுது கருத்து வேறுபாடு காட்டினீர்கள். ஆனால் கலிங்கத்தின் காவலனை அவமதிக்கவில்லை. இன்று கருத்து ஒற்றுமை ஏற்படுத்திச் சமாதான ஓலையுடன் வந்தீர்கள்; ஆனால் சுங்கச் சாவடியிலேயே தென் கலிங்க மன்னனை அவமதித்தீர்கள். எந்தத் துறையில் நோக்கினும் தங்கள் தற்சமய விஜயம் பெரும் முன்னேற்றம்” என்று விளக்கினான் அனந்தவர்மன்.

பழைய விரோதத்தை மறக்காமலும், ஆனால் அதற்கும் தற்சமய விசாரணைக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் முறையிலும் அனந்த வர்மன் பேசியதைக் கேட்ட கருணாகர பல்லவன், அவனது புத்தி கூர்மையைப் பெரிதும் வியந்தான். குற்றங்களைக் கோவையாக ஜோடிப்பதிலும், நீதியைத் தவிர வேறெதுவும் கலிங்கத்தில் நடவாததுபோல் வெளி உலகத்துக்குக் காட்டுவதிலும் அனந்தவர்மனுக்கு இணை அனந்த வர்மனே என்பதைப் புரிந்துகொண்ட இளையபல்லவன், வெகு எச்சரிக்கையுடன் பதில்களைச் சொன்னான். “முன்னேற்றம் எனக்கு மட்டும் ஏற்படவில்லை மன்னவா! கலிங்கத்துக்கும் ஏற்பட்டுத் தானிருக்கிறது. தென் கலிங்கம் வட கலிங்கத்தோடு இணைந்து எத்தனை நாளாகிறது?”

“இணைந்ததாக யார் சொன்னது?” சர்வ சாதாரணமாக எழுந்தது அனந்தவர்மன் கேள்வி.

“இணையாவிட்டால் தென் கலிங்க மன்னர் உட்கார வேண்டிய இடத்தில் வட கலிங்க மன்னர் எப்படி உட்கார முடியும்?”

இதற்கு உடனே பதில் சொல்லாமல் ஏதோ யோசித்த அனந்தவர்மன் சில விநாடிகள் கழித்து, “ஆமாம்! நீங்கள் அறியக் காரணமில்லை. பேரரசன் கரவேலன் காலத்தில் ஒன்றாயிருந்த கலிங்கம் பிற்காலத்தில் இரண்டாகப் பிரிந்தது உண்மைதான். ஆனால் தென் கலிங்கம், வட கலிங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. தவிர, சமீபத்தில் வட கலிங்கத்துக்கும், தென் கலிங்கத்துக்கும் ஓர் ஒப்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது ஒரு காரணத்தால்… ” என்று விவரித்த அனந்தவர்மன், இளைய பல்லவனைக் கூர்ந்து நோக்கினான்.

“என்ன காரணம்?” என்று கேட்டான் இளைய பல்லவன்.

அதுவரையில் பளிச்சிடாத அனந்தவர்மனின் கண்கள் பளிச்சிட்டன. உணர்ச்சியில்லாத குரலில் உணர்ச்சி ஊடுருவிச் சென்றது. குருதியில்லாத வெளுத்த உதடுகளிலும் குருதி பாய்ந்தது. “சோழப் பேரரசின் பேராசை, விஸ்தரிப்புக் கொள்கை” என்று இரைந்தான் அனந்தவர்மன்.

சோழ நாட்டிலும் அவனுக்குள்ள வெறுப்பை பூர்ணமாக உணர்ந்து கொண்டான் கருணாகர பல்லவன். இருப்பினும் தான் உணர்ச்சி வசப்படாமல் சொன்னான்: “காரணம் அது, ஒப்பந்தம் எது?” என்று கேட்டான்.

“சோழப் பேரரசு தாக்கினால் தென் கலிங்கத்தை வட கலிங்கம் காப்பாற்றும். ஆகவே வட கலிங்கத்தின் உரிமையைத் தென் கலிங்கம் ஏற்றிருக்கிறது. அதன் பாதுகாப்பு நீதி நிர்வாகம் எதிலும் வட கலிங்கம் தலையிடலாம். அந்த ஒப்பந்தத்தின் விளைவாகத்தான் இந்த ஸ்தானத்தில் நான் அமர்ந்திருக்கிறேன்” என்றான் அனந்தவர்மன், சட்டப்படி தனக்கு விசாரணை செய்யும் உரிமை உண்டென்று காட்ட.

இதைக் கேட்ட இளையபல்லவன் நகைத்தான். “உங்கள் உரிமையைப் புரிந்துகொண்டேன். தென் கலிங்கத்திற்கு என் அனுதாபங்கள் இருக்கட்டும்” என்றான் சிரிப்போடு சிரிப்பாக.

அனந்தவர்மன் கண்களில் கோபம் துளிர்த்தது. “அனுதாபம் எதற்கு?” என்று கேட்டான்.

“சோழ ஆதிக்கம் இங்கு ஏற்படவில்லை. தென் கலிங்கம் முறை தவறி நடக்காவிட்டால் ஏற்படவும் ஏற்படாது. ஆனால் வடகலிங்கத்தின் ஆதிக்கம் இப்பொழுதே ஏற்பட்டுவிட்டது. அது கிடக்க, ஆதிக்கத்திற்கு உட்படுவதென்றால் யார் ஆதிக்கத்திற்கு உட்பட்டாலென்ன?” என்று வினவினான் இளைய பல்லவன், இளநகை புரிந்து.

“சோழர் வேறு இனம்; கலிங்கம் வேறு இனம். “

“மாந்தர் அனைவரும் ஒரே இனம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். தவிர இன்னொரு நாட்டவரின் ஆதிக்கத்தைவிட ஓர் இனம் தன் இனத்தின் மீதே நடத்தும் ஆதிக்கம் மிகக் கொடுமையானது. சரித்திரம் இதற்குச் சான்று. “

இதைக் கேட்ட அனந்தவர்மன் தனது ஆசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். “சரித்திரம் இதுவரை காணாத புதிய சான்றுகளைக் கலிங்கம் அளிக்கும். இன்னொருவன் ஆதிக்கத்தைவிட இனத்தவன் ஆதிக்கம் மேம்பட்டது என்பதைக் கலிங்கம் உலகுக்கு புகட்டும். உங்களைப் போன்ற ஒற்றர்களால் நிரப்பப்பட்ட பாலூர்ப் பெருந்துறையை, வாணிபத்திலும் செல்வத்திலும் சிறந்த ஊராக மாற்ற நாம் முயலுவோம். அந்த முயற்சியின் முதல்படி இங்குள்ள தமிழ் ஒற்றர்களை விலக்குவது” என்று உஷ்ணத்துடன் சொற்களை உதிர்த்தான் அனந்த வர்மன்.

இளையபல்லவன் கண்களில் வீரச் சுடர் படர்ந்தது. பெயர் சொல்லியே வட கலிங்க மன்னனை அழைத்தான். “அனந்தவர்மரே! தென் கலிங்கத்துக்குத் தாங்கள் செய்யும் பாசாங்கால் தீமை விளைவிக்கிறீர்கள். தமிழர்களிடம் உமக்குள்ள நீண்டநாள் பகையைத் தீர்த்துக்கொள்ளத் தென் கலிங்கத்தையும் அதன் பெரிய துறைமுகமான இந்தப் பாலூர்ப் பெருந்துறைப் பட்டணத்தையும் கருவிகளாக உபயோகப்படுத்திக் கொள்கிறீர்கள். இங்கு இது வரை நடந்த விசாரணையைக் கவனித்தேன். விசாரணை நடக்கவில்லை. வஞ்சம் தீர்த்துக் கொள்ளப்பட்டது. இது தென்கலிங்கத்துக்கு நன்மை பயக்காது. சோழர்களை அனாவசியமாக எழுப்புவது உறங்கும் புலியை எழுப்புவதாகும்.

அதன் பாய்ச்சலை வீணாக விலைக்கு வாங்கிக் கொள்ளாதீர்கள்” என்று பேசிய கருணாகர பல்லவன், மண்டபத்தில் சுற்றிலும் நின்ற மக்களை நோக்கித் தன் கையை ஒருமுறை நீட்டி, அனந்தவர்மனை நோக்கி, “இந்த மக்களையெல்லாம் வீணாகப் பலி கொடுக்க வேண்டாம். நான் இன்று கொண்டு வந்திருப்பது சமாதான ஓலை. நீட்டுவது சமாதானத்தின் கரம் பற்றிக் கொள்ளுங்கள். ஒன்றி வாழலாம்” என்று இடிபோல் சொற்களை உதிர்த்தான்.

அனந்தவர்மன் முகத்தில் உணர்ச்சிகள் மங்கின. பழையபடி கல்லாகிவிட்டது அவன் முகம். மண்டபத்திலிருந்த தென்கலிங்க மக்களிடம் காணப்பட்ட சலசலப்பை அவன் பிரேதக் கண்கள் கவனித்தன. உதடுகள் முன்னைவிடச் சற்று அதிகமாக வெளுத்தன. சொற்கள் நிதானமாக, அழுத்தமாக உதிர்ந்தன. “இளைய பல்லவரே! நீர் இப்பொழுது பேசிய பேச்சுகள் சமாதானத்தை அளிப்பதற்கு அறிகுறியல்ல. சோழர்கள் பராக்கிரமத்தைக் குறிப்பிட்டு அச்சுறுத்துகிறீர்கள். அச்சுறுத்தலுக்குக் கலிங்கம் இடங்கொடாது. அச்சத்துக்குப் பணிந்து அடிமையாகாது. பெரிய வரலாற்றில் இடம் பெறும் மக்களின் பழக்கமும் அதுவல்ல. இத்தகைய பயமுறுத்தல்கள் உங்கள் சமாதான ஓலையின் போலித்தனத்தை நிரூபிக்கின்றன. உங்கள் ஓலையையும் படித்துப் பார்த்தோம். சமாதானத்துக்குச் சுங்கமாகக் கலிங்கத்தின் துறைமுகங்களைக் கேட்கிறது சோழ நாடு. துறைமுகங்களை இழந்தால் கலிங்கம் வாணிபத்தை இழக்கும். வாணிபத்தை இழக்கும் நாடு செல்வத்தை இழக்கும். செல்வத்தை இழக்கும் நாட்டில் வறுமை, அறியாமை, துன்பங்கள் தாண்டவமாடும். இதற்குக் கலிங்க மக்கள் சம்மதிக்கமாட்டார்கள்” என்று சொன்ன அனந்தவர்மனின் குரலை ஆமோதித்துப் பாலூர்ப் பெருந்துறை மக்களின் குரல்கள் பல, “சம்மதிக்க மாட்டோம்,” “இவன் போலி,” “கொல்லுங்கள் தமிழர்களை” என்று எழுந்து மண்டபத்தின் சுவர்களில் தாக்கி எதிரொலி செய்தன.

சோழர்கள் கலிங்கத்தின் துறைமுகங்களைக் கேட்டது சொர் ண பூமியிடம் வர்த்தகம் நடத்தவேயொழிய, அரசியல் ஆதிக்க ஆசையால் அல்ல என்பதைக் கருணாகர பல்லவன் உணர்ந்தே இருந்தான். ஆனால் சாட்சியங்கள் அன்று அவனுக்கு எதிராகவும், பலமாகவுமிருந்தன. தான் எதைச் சொன்னாலும் நம்பாத அளவுக்கு அனந்தவர்மன் வழக்கை ஜோடித்து மக்களின் வெறியைக் கிளப்பி விட்டதைக் கண்ட கருணாகர பல்லவன், கோபம் உச்ச நிலையை எட்டியதால், சிவந்த கண்களுடனும், சற்றே துடித்த உதடுகளுடனும் இரைந்து பதில் சொன்னான், “அனந்தவர்மரே! நீங்கள் சொல்வதில் தினையளவும் உண்மையில்லை என்பதை உங்கள் மனம் அறியும். சோழர்களுக்கு ஆதிக்க நோக்கமிருக்கும் பட்சத்தில் இராஜேந்திர சோழதேவர் கங்கை கொண்ட காலத்திலேயே இடையிலிருந்த இந்தக் கலிங்கத்தை அடிமைப்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. சுதந்திரமாகவே இருக்கவிட்டார். ஏன்? ஆதிக்க ஆசை இல்லை . கலிங்கத்தை அடக்கச் சோழ நாட்டுக்கு இன்றும் பலமிருக்கிறது. பலத்தை உபயோகிக்கவில்லை. ஏன்? ஆதிக்க ஆசையில்லை. இத்தனை அத்தாட்சிகளிலிருந்தும் உமது மக்களிடையே வெறியைக் கிளறிவிட்டு தமிழர்கள் தலைகளைத் துண்டித்தும், தண்டித்தும் பல வழிகளில் கொடுமை செய்தும் போருக்கு அடிகோலுகிறீர். இன்று உங்களை எச்சரிக்கிறேன். வீணான விரோதத்தை வலுவில் சம்பாதிக்காதீர்கள். சம்பாதித்தால் லாபமில்லை. உங்களுக்குப் பெருநாசம்” என்று சீற்றத்துடன் கூறினான்.

இதைக் கேட்ட மண்டபத்திலிருந்த கலிங்க மக்கள் ஒருமுறை நடுங்கினார்கள். கருணாகர பல்லவனின் ஆவேசம் அவர்களைக் கிடுகிடுக்க வைத்தது. புலியைத் தட்டி எழுப்பினால் இப்படித்தானிருக்குமோ என்றுகூட நினைத்தார்கள். அந்த நடுக்கமே அவர்களை மீண்டும் கூச்சலிடச் செய்தது. “அவனைக் கொல்லுங்கள்!” “கொண்டு போங்கள். கொலைக் களத்துக்கு” என்ற கூச்சல்கள் எழுந்தன. அந்தக் கூச்சலை ஊடுருவிச் செல்லும் முறையில் அனந்தவர்மன் தீர்ப்புக் கூறினான்: “போலிச் சமாதான ஓலையைக் காட்டி இங்கு வேவு பார்க்க வந்த குற்றத்திற்காகவும், சுங்கச்சாவடியில் தென் கலிங்கத்து மன்னனை அவதூறாகப் பேசியதற்காகவும், தென் கலிங்க வீரர்களில் சிலரைக் கொன்றதற்காகவும், உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன். இந்தக் கூலவாணிகனுக்கு விசாரணை தேவையில்லை. நீண்ட நாளாக அவன் ஒற்றனென்பதற்கு அத்தாட்சிகள் நிரம்ப இருக்கின்றன. ஆகவே அவனுக்கு மரணதண்டனை விதிக்கிறேன். நீங்களிருவரும் இங்கிருந்து நேராகக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு எந்தக் கலிங்க மக்களுக்கு எதிராகச் சதி செய்தீர்களோ அந்தக் கலிங்க மக்களின் முன்பாக உங்கள் தலைகள் சீவப்படும். “

கொலைவாளின் கூர்மையைப் பழிக்கும் குரலில் இந்தத் தீர்ப்பைக் கூறி, கருணாகர பல்லவனைத் தன் பிரேதக் கண்களால் நோக்கிய அனந்தவர்மன், “அநபாயச் சோழன் தப்பிவிட்டானென்று நினைக்க வேண்டாம். சீக்கிரம் அவனையும் இங்கு கொண்டு வருவேன்” என்றும் சீறிச் சொற்களை உதிர்த்தான். அந்தச் சொற்களை உதிர்த்த உதடுகள் திடீரென வெளுத்தன. அசைவற்று நின்றன. “நீ கொண்டு வரத் தேவையில்லை அனந்தவர்மா! நானே வந்துவிட்டேன்” என்ற கணீரென்ற சொற்கள் அந்த நீதி மண்டபத்தை ஊடுருவிச் சென்று திடீரென பயங்கர அமைதியை நிலைநாட்டின. அனந்தவர்மன் கண்கள் வாயிலை அச்சத்துடன் நோக்கின. வாயிலை மறித்துக் கொண்டு தன்னந்தனியே நின்றிருந்தான், பிற்காலத்தில் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ அரியணையில் அமரவிருந்த அநபாய சோழன்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch11 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch13 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here