Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch13 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch13 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

114
0
Read Kadal Pura Part 1 Ch13 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch13 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch13 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 13 : அபாயத்தை மறைத்த அழகு.

Read Kadal Pura Part 1 Ch13 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

யாரும் தப்ப முடியாத பாலூர்ப் பெருந்துறைச் சிறையிலிருந்து எந்த அநபாயன் தப்பினானோ, எந்த அநபாயனை மீண்டும் சிறைப்பிடிக்க பாலூரின் படைப் பிரிவுகள் அந்தச் சிறு நகரத்தை நான்கு நாள்களுக்கு மேல் சல்லடைப் போட்டுச் சலித்தும் பயனற்று அலுத்துவிட்டனவோ, எந்த அநபயனை நீதி மண்டபத்துக்குக் கொண்டு வருவேன் என அனந்தவர்மன் அகந்தையுடன் கூறினானோ, அந்த அநபாயனுடைய குரல், “நீ கொண்டு வரத் தேவையில்லை அனந்தவர்மா! இதோ நானே வந்துவிட்டேன்!” என்று நீதி மண்டபத்தை ஊடுருவிச் சென்றதும், மித மிஞ்சிய திக்பிரமைக்கு உள்ளாகி நீதி மண்டபத்தின் வாயிலை நோக்கிய பாலூர்ப் பெருமக்கள், அந்த வாயிலை அடைத்துக் கொண்டு நின்ற வாலிபன் தோற்றத்தையும் அவன் முகத்தில் மலர்ந்து கிடந்த மந்தகாசத்தையும் கண்டதும் விவரிக்கவொண்ணா வியப்பையும் அடைந்தார்கள்.

சிங்கத்தின் வாய்க்குள் தானாகத் தலையை விடுபவன் போல், ஆயுதம் தாங்கிய கலிங்க வீரர்கள் நிரம்பியிருந்த அந்த நீதி மண்டபத்துக்குள் மிகத் துணிவுடன் நுழைந்த அந்த வாலிபச் சோழனின் கண்கள் மிக அலட்சியமாக அந்த மண்டபத்தை ஒருமுறை அளவெடுத்ததையும், பிறகு அனந்தவர்மனின் மேல் நிலைத்ததையும் கண்ட மண்ட பத்திலிருந்த மக்களும் வீரரும், அந்த வாள் கண்கள் ஆக்ஞையிட சிருஷ்டிக்கப் பட்டனவேயொழிய அச்சத்துக்காகச் சிருஷ்டிக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள். உயரத்திலும், பருமனிலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கருணாகர பல்லவன் போலவே இருந்த அநபாயனுக்கு, இளையபல்லவனின் கன்னத்திலிருந்த வெட்டுக்காயத் தழும்பு இல்லாதிருந்ததால், அவன் முகம் குழந்தையின் முகம் போலவே இருந்ததையும், அந்தக் குழந்தை முகத்திலும் பருவ வயதுக்கான சிறு மீசை துளிர் விட்டிருந்ததையும், அதன் விளைவாக வதனத்தில் வீரக் களை பூரணமாகப் பொலிவு பெற்றுத் துலங்கியதையும் கண்ட மக்கள், நல்ல நெஞ்சுரமுள்ள ஒரு வாலிபன் முன்பு தாங்களிருப்பதை உணர்ந்தார்கள். அநபாய சோழனின் இடைக் கச்சையிலிருந்தது தொங்கிய நீண்ட வாள்கூட உருவப்படவில்லையென்பதையும் எந்த ஆயுதத்தையும் கையிலெடுக்காமலே அநபாயன் அந்த வாயிற்படியில் நின்றதையும் கண்ட அனைவரும், ‘துணிவுக்கும் ஓர் எல்லையிருக்க வேண்டாமா?” என்று சற்று அவனைக் கடிந்து கொள்ளவும் செய்தார்கள்.

அநபாயன் வரவு கருணாகர பல்லவனுக்குக்கூட பெரும் அதிர்ச்சியைத் தந்ததென்றாலும், அநபாயன் அப்படி உதவி ஏதுமில்லாமல் தன்னந்தனியாக அந்த நீதி மண்டபத்துக்கு வந்தது சரியல்ல என்ற நினைப்பே அவன் சிந்தையில் அந்தச் சில விநாடிகளில் ஓங்கி நின்றபடி யால், அடுத்தபடி அநபாயனுக்கு என்ன தீங்கு நேருமோ என்ற திகிலுக்கே ஆரம்ப அதிர்ச்சி இடம் கொடுத்தது. வாளும், வேலும் தாங்கிய நூறு கலிங்க வீரர்களுக்கு மேலிருந்த அந்த மண்டபத்திலிருந்து அநபாயன் தப்புவதும் அத்தனை எளிதல்ல என்று தோன்றியது இளைய பல்லவனுக்கு. அந்த இடத்தில் அநபாயனை எதிர்பார்க்கவும் இல்லை அவன். சிறையில் உணவுச்சீலைச் செய்தியைப் படித்ததும், ‘ஒன்று சிறையிலிருந்து நீதி மண்டபத்துக்குப் போகும்போது மீட்கப்படுவோம். அல்லது நீதிமண்டபத்திலிருந்து கொலைக்களத்துக்குப் போகும் வழியில் மீட்கப் படுவோம்’ என்று திட்டமாக நம்பியதன்றி, கூலவாணிகனுக்கும் அதை எடுத்து ஓதியிருந்த இளையபல்லவன், தன் கணக்குத் தப்புக்கணக்காகி விட்டதையும், எந்த நீதி மண்டபத்தை அநபாயன் அணுக முடியாதென்று அவன் நினைத்தானோ அந்த நீதி மண்டபத்துக்கே அநபாயன் வந்துவிட்டதையும் எண்ணிப் பார்த்து, ‘எந்தத் துணிவுடன் இவர் இங்கு வந்தார்? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு விடையேதும் தெரியாமல் விழித்தான்.

கருணாகரபல்லவனது எண்ணங்களும் நீதி மண்ட பத்தில் குழுமியிருந்த மற்றவர் எண்ணங்களும் இவ்விதம் வியப்பிலும் குழப்பத்திலும் ஈடுபட்டிருந்த சில விநாடிகள், நீதி ஸ்தானத்தில் அமர்ந்திருந்த அனந்தவர்மனுக்குப் பெரும் திகிலையும் சங்கடத்தையும் அளித்ததால் அவனது உணர்ச்சிகள் கொந்தளித்து நின்றன. கொந்தளித்த உணர்ச்சி அலைகள் மோதும்போது முகமும் உதடுகளும் திடீரெனச் சிவந்தும், பின்வாங்கிய போது திடீரென வெளுத்தும் இரண்டு மூன்று முறைகள் மாறிமாறி பயங்கரத்துக்கும் பயத்துக்கும் அவன் மனம் இலக்காகியிருந்ததைக் குறிப் பிட்டன. கருணாகர பல்லவனை விடுவிக்க அநபாயன் கண்டிப்பாய் முயலுவான் என்பதை அனந்தவர்மன் அறிந்திருந்தாலும், அந்த முயற்சியை நீதிமண்டபத்துக்குள் வைத்துக்கொள்வான் என்பதை அவன் சிறிதும் எதிர் பார்க்காததால், கணீரென அநபாயனின் குரல் நீதி மண்டபத்தில் ஊடுருவிச் சென்றதும் அவன் சில வினாடிகள் சிலையென உட்கார்ந்துவிட்டான். பிறகு மெள்ளச் சமாளித்துக்கொண்டு, வீரர்கள் பக்கம் கண்களைச் செலுத்தினான். அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு வீரர்கள் வாயிற்படியை நோக்கிக் காலடி எடுத்து வைக்கவும் முற்பட்டனர். மீண்டும் அதிகாரத் துடன் எழுந்த அநபாயனின் குரல் அந்த கால்களைக் கற்சிலைகளாக அடித்தன.

வீரர்கள் அசையுமுன்பாகவே, “இந்த மண்டபத்தி லிருப்பவர்கள் யார் அசைந்தாலும் சரி, இருப்பிடத்தை விட்டு ஓர் அடி எடுத்து வைத்தாலும் சரி, அனந்தவர்மன் அடுத்த விநாடி பிணமாகி விடுவான். கலிங்கத்துக்கு வேறு மன்னனைத் தேட வேண்டியிருக்கும்!” என்ற அநபாயனின் அதிகாரக் குரல் மறுபடியும் அந்த மண்டபத்தை ஊடுருவிச் சென்றது. அந்தக் குரலிலிருந்த திடத்தைக் கண்ட மக்கள் ஒருமுறை நடுங்கினர்; அசைந்த வீரர் அசைவற்று நின்றனர். தான் மரண தண்டனை விதிக்க வேண்டிய நீதி மண்டபத்தில் தனக்கே மரண தண்டனை விதிக்க அநபாயன் முற்பட்டதைக் கண்டு ஒரு விநாடி நடுங்கிய அனந்த வர்மன், வாயிற்படியில் மறுபடியும் தன் பிரேதக் கண் களை ஓட்டி அங்கு அநபாயன் ஆயுதமெதையும் உருவிப் பிடிக்காமல் வெற்றுக் கையுடனே நின்றதையும், அவனுக்குத் துணையாக யாருமில்லாததையும் கண்டு சற்றுத் தைரியம் கொண்டு, “வீணாக மிரட்டுகிறான். அஞ்சாதீர்கள்! நெருங்கிப் பிடியுங்கள் அவனை!” என்று கூவினான்.

மறுவிநாடி, பிரேதக் கண்கள் உள்ளடங்கின. அச்சத்தால் உதடுகள் மீண்டும் வெளுத்தன. திடீரென எழுந்த அநபாயனின் சிரிப்பொலி அந்தப் பெரும் நீதி மண்டபத்தின் சுவர்களில் தாக்கிப் பலவிதமாக எதிரொலி செய்ததால் தன்னை நோக்கி நூற்றுக்கணக்கான பேர்கள் நகைப்பது போன்ற பிரமை ஏற்பட்டது அனந்தவர்மனுக்கு. அநபாயனைச் சிறைச் செய்ய உத்தரவிட்டதும், கண்ணிமைக்கும் நேரத்தில் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த ஓர் உருவம் தன்னை நோக்கி, நாணில் ஊன்றி இழுக்கப்பட்ட பெரும்கணையும் வில்லுமாகக் காட்சியளித்ததைப் பார்த்த அனந்தவர்மன், உண்மையைப் புரிந்து கொண்டான். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அந்த நிகழ்ச்சியால் நிலைமை புரியாதவர்களுக்கும் புரிய வைக்க அநபாயன் மீண்டும் பேசினான்: “புரிகிறதா அனந்தவர்மா? முன்னேற்பாடின்றி இந்த மண்டபத்துக்கு வர நான் முட்டாளல்ல. இதோ தொடுக்கப்பட்டிருக்கும் அம்பு நேராக உன் இதயத்துக்குக் குறி வைக்கப்பட்டிருக்கிறது. கணையின் நுனி நல்ல எஃகால் செய்யப்பட்டு விஷம் தோய்க்கப்பட்டிருக்கிறது. அம்புக்கு வாயுவேகம் கொடுக்க அதன் அடிப் பாகத்தில் புறாவின் இறகுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது எய்யப்பட்டால் உன் கதி என்னவாகுமென்பதை நான் சொல்லத் தேவையில்லை?” என்ற சொற்கள் அவன் முதலில் வெளியிட்ட சிரிப்பைத் தொடர்ந்து கடுமையாக வெளிவந்தன.

அன்று ஆச்சரியப்படுவதற்காகவே தாங்கள் அந்த நீதி மண்டபம் வந்ததாக மக்கள் நினைத்தார்கள். நாண் கயிற்றைக் காதுவரையில் இழுத்து அம்பைக் குறி வைத்து வில்லைத் தாங்கி நின்ற உருவத்தைக் கண்டதும், மண்டபத்திலிருந்த வீரர்களும் மற்றவர்களும் அப்படியே வியப்பில் ஆழ்ந்தார்களானாலும், அந்த வியப்பு மற்ற எல்லோரையும்விட இளைய பல்லவனையே அதிகமாக ஆட்கொண்டது. வில்லேந்தி நின்றது நாணிழுக்கப்பட்ட வில்லைவிட வளைந்த புருவங்களையுடைய கடாரத்தின் இளவரசி காஞ்சனாதேவி. அவளது மலர்க்கரங்கள் வில்லேந்தி நின்ற உறுதியைக் கண்டு பெரிதும் வியப்பெய்தினான் கருணாகர பல்லவன். அவன் உணர்ச்சிகளை அந்தச் சமயத்தில் தொட்டது காஞ்சனாதேவியின் இணையற்ற அழகினால் ஏற்பட்ட ஆசையா, அவள் வில்லைப் பிடித்து நின்று காட்டிய தைரியத்தைக் கண்டு ஏற்பட்ட ஆச்சரியமா, அல்லது இத்தகைய அபாயமான பணியில் அவள் ஈடுபட்டுவிட்டாளே என்பதால் ஏற்பட்ட அச்சமா என்பது அவனுக்கே விளங்கவில்லை.

வில்லைப் பிடித்த இடது கரத்தின் விரல்கள் மடிந்து கிடந்த அழகும், நாணில் பொருந்தியிருந்த அம்பையும் நாணின் அந்தப் பகுதியையும் பிடித்து இழுத்துக் கொண்டு காதுக்கருகில் இருந்த கட்டை விரலும் ஆட்காட்டி விரலும் ஏதோ காதுக்குச் சேதி சொல்வது போலிருந்த கம்பீரமும், அவள் மலர்க்கண்கள் தன்னைக்கூட நோக்காமல் வாளின் நுனியையும் அனந்தவர்மன் மார்பையும் இணைத்துப்பார்த்துக் கொண்டிருந்த திடமும், மார்புக்குக் குறுக்கே வருடிச் சென்ற நாண் கயிற்றின் கோலமும், இளைய பல்லவன் இதயத்தைப் பலபடி அலைக்கழித்தன. அம்பெய்ய வந்த அந்தச் சமயத்திலும் அவள் கொண்டையைத் தூக்கி மிக இன்பமாக முடிந்திருந்ததையும், அந்தக் கொண்டையை அலங்காமல் நிறுத்த ஓர் ஆபரணம் அதைச் சுற்றி ஓடியதையும் கவனித்த கருணாகர பல்லவன், அவள் வாளெடுத்துச் சுழற்றினாலும் அந்தக் கொண்டை மயிர் அவிழ்ந்து விழுந்து அவளுக்குச் சங்கடம் விளைவிக்காதென்பதைப் புரிந்துகொண்டான். முதல் நாளிரவு கட்டியதுபோல் அவள் சேலையை அன்று கட்டாமல், கால்களுக்கிடையே சுருட்டி வளைத்துக் கட்டியிருந்ததன்றி, இடையிலும் சல்லடத்தை வைத்துப் பிணைத்திருந்தாளா கையால் அவள் எத்தனை நேரம் வேண்டுமானாலும் எத்தகைய இடுக்கண்ணுமின்றிப் போராட முடியும் என்பதையும் உணர்ந்துகொண்டான் இளையபல்லவன். அவள் இடையிலிருந்த நீண்ட வாளும் அவள் போர்ச் சன்னத்தைத் தெரியப்படுத்தியது. இருப்பினும் அவளிடம் முதல் நாளே ஏற்பட்டுவிட்ட விவரிக்க இயலாத ஓர் அன்பினால் அவள் நிலை பற்றி அச்சமே கொண்ட கருணாகர பல்லவன், சில விநாடிகள் மலைத்தே நின்றான். அந்த மலைப்பு மண்டபத்திலிருந்த மற்ற மக்களுக்கும் இருந்தது. ஆனால் அவர்களது மலைப்பின் காரணம் வேறு, அஸ்தி வாரம் வேறு. ஒரு பெண் இத்தனை அபாயத்தில் பிரவேசிக்கிறாளே என்பதால் ஏற்பட்ட மலைப்பு அது. ‘அதுவும் எத்தனை அழகான பெண்! என்ன இளமை!’ என்ற எண்ணங்களால் ஏற்பட்ட பரிதாபம் கலந்த மலைப்பு அது.

அந்த மலைப்பு அனந்தவர்மனுக்கும் ஏற்படத்தான் செய்தது. அத்தனை அழகிய துணிவுள்ள பெண் யாரா யிருக்கக்கூடும் என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்ததன்றி, ‘கேவலம் ஓர் இளம் பெண்ணுக்கு விற்பயிற்சி எத்தனை இருக்க முடியும்?” என்ற எண்ணமும் அனந்தவர்மனுக்கு ஏற்படவே, அவன் கண்களில் விபரீத ஒளியொன்றும் சுடர்விட்டது. அதன் காரணத்தை அநபாயன் புரிந்து கொண்டுவிட்டானென்பது அவனுடைய அடுத்த வார்த்தை களில் வெளியாயிற்று. “அனந்தவர்மா! இளம்பெண் என்பதால் வாளின் குறி தவறுமென்று நினைக்காதே. இணையிலா விற் பயிற்சியும், வாள் பயிற்சியும் உடையவள் காஞ்சனாதேவி. கடாரத்தின் மன்னர் குணவர்மனுக்குப் பிள்ளையில்லாததால் பெண்ணையே பிள்ளையாக வளர்த் திருக்கிறார். உடனே உன் வீரர்களை ஆயுதங்களைக் கீழே எறியச் சொல். இல்லையேல் இந்த விநாடியே அந்த வாள் உன் மார்பை நோக்கிப் பறக்கும். சீக்கிரம் உத்தர விடு!” என்று ஈட்டியின் முனையைவிடக் கூர்மையாகத் தொனித்த சொற்களை உதிர்த்தான் அநபாயன்.

அனந்தவர்மன், அநபாயனையும் பார்த்து, வில்லேந்தி நின்ற காஞ்சனாதேவியையும் பார்த்தான். அநபாயன் உத்தரவிட்ட நிலையிலும் அவன் இதழ்களில் தவழ்ந்த புன்னகை பயங்கரமாயிருந்ததென்றால், அதைவிட அச்சத்தை அளித்தது வில்லேந்திய ஏந்திழையின் கண்களில் கண்ட உறுதி. அந்த நிலையில் என்ன செய்வ தென்பதை அறியாமல் விழித்த அனந்தவர்மனை நோக்கிய அநபாயன், “விழித்துப் பயனில்லை அனந்தவர்மா! உத்தரவிடு. காலம் கடத்தினால் துணை வருமென்று கனவு காணாதே. இந்த மண்டபத்தைச் சுற்றிலும் பீமன் நிறுத்திய ஐம்பது வீரர்களையும் வெட்டிவிட்டோம். கலிங்கத்தின் படையில் பணி செய்யும் தமிழகத்தின் வீரரில் நூறு பேர்கள் இந்த மண்டபத்தைச் சூழ்ந்திருக்கிறார்கள். முன்னேற்பாடில்லாமல் நான் வந்திருப்பதாக மனப்பால் குடிக்காதே. உன் நன்மையை முன்னிட்டுக் கூறுகிறேன். உத்தரவிடு!” என்று கூற்றினும் கொடிய சொற்களைக் கொட்டினான்.

அடுத்த விநாடி, பலதரப்பட்ட ஒலிகளால் பாலூர் நீதிமண்டபம் பயங்கரமாக அதிர்ந்தது. அந்த நீதி மண்டபம் அநபாயனின் சொற்களால் அதிர்ந்ததா, அனந்தவர்மன் கத்தினானே, “ஏன் நிற்கிறீர்கள்? எறியுங்கள் ஆயுதங்களை!” என்ற அந்தக் கூச்சலால் அதிர்ந்ததா, வேல்களும் வாள்களும், ‘கிணாங் கிணாங்’ என்று எறியப் பட்டனவே, அந்த ஒலியால் அதிர்ந்ததா என்று அறியக் கூடாத நிலை ஏற்பட்டது. ஆயுதங்களின் வீழ்ச்சியே கலிங்கத்தின் வீழ்ச்சியோ என்று எண்ணுமளவுக்கு எதிரொலி கிளப்பிய அந்த நீதி மண்டபத்தில், அந்த எதிரொலியைக் கிழித்துக்கொண்டு கிளம்பிய அநபாய னின் குரல் திட்டமான உத்தரவுகளைக் கிடுகிடுவென்று பிறப்பிக்கத் தொடங்கியது. “காஞ்சனா தேவி! அனந்தவர்மன் மார்புக்குறியை விட்டுக் கணையை அகற்றாமல் நில்லுங்கள். கருணாகரா! ஏன் மலைத்து நிற்கிறாய்? கலிங்க வீரர்கள் எறிந்த ஆயுதங்களைத் திரட்டி அவர்கள் கைகளுக்கு எட்டாதபடி மண்டபத்தின் ஒரு மூலையில் கொண்டு போய் வை. பிறகு நீ மட்டும் புறப்பட்டு என் அருகில் வா. தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களே! ஒவ்வொருவராகச் சீக்கிரம் வெளியே செல்லுங்கள். குழப்பமில்லாமல் எங்களை நெறித்துத் தள்ளாமல் செல்லுங்கள். சேந்தா! நீயும் மற்றத் தமிழர்களுடன் சென்றுவிடு. வெளியே சென்றதும் தலைமறைந்துவிடு. பிறகு, சந்திப்போம். கலிங்க வீரர்களே! நின்ற இடத்தில் அசையாமல் நில்லுங்கள். அனந்தவர்மா! எந்தக் காரணத்தை முன்னிட்டும் நீதி ஸ்தானத்திலிருந்து அசையாதே!” என்று விடுவிடுவென்று ஆணைகளைப் பிறப்பித்தான் அநபாயன்.

அவன் ஆணைப்படி காரியங்கள் வெகு துரிதமாக நடந்தன. கூலவாணிகன் சேந்தன் காட்டிய வழியைப் பின்பற்றி, தண்டனையிடப்பட்ட மற்றத் தமிழர் தாங்கள் நிதானத்துடனும் குழப்பமில்லாமலும் நடந்துகொள்ள முடியும் என்பதைக் காட்டினார்கள். அவர்கள் வெளியேறயதும் கருணாகர பல்லவன் வீரர்களின் ஆயுதங்களை யெல்லாம் திரட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டுத் தனக்கு மட்டும் ஒரு வாளைக் கையில் எடுத்துக் கொண்டான். கலிங்க வீரர் அநபாயன் சொன்னபடி சிலையென நின்றனர். தன் கண் முன்பாகவே தான் இட்ட நீதி குலைந்து சிதறிப்போவதையும் தண்டனையடைந்த தமிழர் சுதந்திரத்துடன் ஓடிவிட்டதையும் பார்த்த அனந்தவர்மன் மனம் உடைந்து கண்களில் முன்னைவிடப் பிரேதக் களை அதிகமாகச் சொட்ட ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அந்த நிலையில் அவனிடம் விடை பெற்ற அநபாயன் சொன்னான்: “அனந்தவர்மா, வருகிறேன். பின்னால் ஒரு காலத்தில் நாம் முடியுமானால் போர்க்களத்தில் சந்திப்போம். ஓர் எச்சரிக்கை மட்டும் செய்கிறேன், உனக்கும் பீமனுக்கும். தமிழ் மக்களை இப்பொழுது துன்புறுத்துவது போல் இனி மேலும் துன்புறுத்தாதே. அப்படித் துன்புறுத்தியதாகத் தெரிந்தால் வெகு சீக்கிரம் பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்!” என்று கூறிவிட்டுக் காஞ்சனாதேவியை நோக்கி, “இளவரசி! நானும், கருணாகரனும் கதவுக்கு அப்புறம் சென்றதும் நீங்கள் மெள்ளப் பின்னடைந்து வாருங்கள்” என்று உத்தரவிட்டான்.

அப்படியே பின்புறமாகவே வெளியே நகர்ந்த மூவரும் வாயிற்படியைத் தாண்டியதும் சரேலென அந்த நீதி மண்டபத்தின் பெரும் கதவுகளை அநபாயன் சாத்திய தன்றி, தான் கொண்டு வந்திருந்த ஒரு பெரும் பூட்டையும் சாவியையும் இளையபல்லவனிடம் கொடுத்து, “கருணாகரா! இந்த நீதி மண்டபத்தைப் பூட்டிவிடு. நாம் சிறையிலிருந்தது போல் அனந்தவர்மனும் நீதி மண்டபத்தில் சில நாழிகைகள் சிறையிருக்கட்டும்” என்று கூறி நகைத்தான். அந்த நகைப்பில் கலந்துகொண்ட கருணாகர பல்லவனின் கரங்கள் வெகுவேகமாக வேலை செய்தன. நீதி மண்டபத்தைப் பூட்டிச் சாவியைத் தூரத்தில் எறிந்த கருணாகரபல்லவனையும், வில்லை மீண்டும் தோளில் மாட்டிக் கொண்டு கணையை அம்பறாத் தூணியில் அடைத்து விட்ட அஞ்சன விழியாளையும் புரவிகளில் ஏறச் சொல்லித் தானும் ஒரு புரவிமீது பாய்ந்து, “உம் சீக்கிரம்!” என்று எச்சரிக்கை செய்து, கலிங்கத்தின் தமிழ் வீரர்கள் பின்தொடர அந்தப் பாலூர் நகர வீதிகளில் புழுதி மண் பறக்கச் சென்றான், துணிவில் இணையற்றவன் என்று பெயர் வாங்கிய அநபாயச் சோழன்.

கருணாகர பல்லவன் மனம் எங்கோ பறந்துகொண் டிருந்தது. பக்கத்தில் வந்த அஞ்சன விழியாளை அடிக்கடி பார்த்துக்கொண்டு எங்கே போகிறோமென்பதைக் கவனிக் காமலே புரவியில் அமர்ந்து சென்றான். அவன் கவனித்த தெல்லாம் காஞ்சனாதேவி திடமாய்ப் புரவியில் அமர்ந்தி ருந்ததையும், புரவியின் ஓட்டம் அசைத்துக் கொடுத்த அங்கலாவண்யங்களையும்தான். அவனும் அநபாயனும் அப்பொழுதிருந்ததோ அபாய நிலை. அந்த அபாயத்தையும் அவன் மனத்திலிருந்து மறைத்தது அவள் அபார அழகு. அது காரணமாகப் போகுமிடத்தைக் கவனிக்காமல் மிக வேகமாகப் போய்க் கொண்டிருந்த புரவியைத் திடீரென நிறுத்த வேண்டிய நிலை வந்த பிறகே அவன் சுரணை அடைந்தான். அப்பொழுதுதான் பல தெருக்களைத் தாண்டித் தாங்கள் வந்துவிட்டதையும் நகரத்தின் தெற்குக் கோடியில் கோதாவரியின் ஓரமாக இருந்த கூட்டமான குடிசைகளுக்கருகில் புரவிகள் நிற்பதையும் உணர்ந்தான் இளையபல்லவன். மற்றவர்களோடு புரவியிலிருந்து கீழே குதித்த இளைய பல்லவன் அநபாயனை நோக்கி, “அநபாயரே! இங்கு மறைவதற்கு இடம் ஏதுமில்லையே. இங்கு ஏன் வந்தோம்” என்று விசாரித்தான்.

“கருணாகரா! நாம் மறைய வேண்டிய இடம் வேறு, அந்த இடத்துக்கு இரவில்தான் செல்ல முடியும். அதுவரை இங்குதான் தங்க வேண்டும்” என்று கூறிய அநபாயன் மற்ற குதிரை வீரர்களைப் பார்த்து, “வீரர்களே! உங்கள் உதவிக்கு நன்றி. நீங்கள் மீண்டும் உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். வேண்டுமானால் மறுபடியும் வழக்கப்படி செய்தி அனுப்புகிறேன்” என்று அவர்களுக்கு உத்தரவிட்டு அவர்களை அனுப்பிய பின்பு, “வா கருணாகரா! தேவி, வாருங்கள்” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருந்த ஒரு தோப்புக்குள் நுழைந்து அங்கிருந்த குடிசைகளில் ஒன்றை நாடிச் சென்றான். குடிசையை அடைந்ததும் கருணாகர பல்லவனையும் காஞ்சனாதேவியையும் உள்ளே நுழையச் சொன்ன அநபாயன் மட்டும் குடிசைக்கு வெளியே சிறிது நேரம் ஏதோ யோசித்துக் கொண்டு நின்றான். பிறகு உள்ளே வந்து, “நாம் இரவு வரை இங்குதான் இருக்கும்படியிருக்கும்” என்றான்.

“பிறகு?” என்று கேட்டான் கருணாகர பல்லவன்.

“இந்த ஊரை விட்டுத் தப்பிச் செல்லும் வழி தேட வேண்டும்” என்று பதில் சொன்னான் அநபாயன்.

“இனிமேல்தான் வழி தேட வேண்டுமா?” என்று இளையபல்லவன் மட்டும் வினவினான்.

“ஆம். வழி தேடுவதற்கு ஒருவரை நியமித்திருக்கிறேன். அவர் வருவார் இன்றிரவு” என்று பதிலிறுத்தான் அநபாயன்.

இரவு அவர் வந்தார். வந்தவரோ வினோதமாயிருந்தார். தப்புவதற்கு அவர் சொன்ன திட்டம் அதைவிட வினோதமாயிருந்தது. ஆனால் அந்த இரவுக்கும் பிற்பகலுக்கும் இடையே இருந்த அரை ஜாம நேரம் ஆனந்த மாயிருந்தது இளையபல்லவனுக்கு. அபாயத்தை மறைக்கும் ஆற்றல் அழகுக்கு உண்டு என்பதை அவன் புரிந்து கொண்டான். அதைப் புரிய வைத்தாள் அவன் கூட இருந்த அஞ்சன விழியாள்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch12 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch14 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here