Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch15 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch15 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

138
0
Read Kadal Pura Part 1 Ch15 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch15 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch15 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 15 : கண்கள் பெற்ற பயன்.

Read Kadal Pura Part 1 Ch15 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

காஞ்சனாதேவியின் பூவிதழ்களில் கொஞ்சித்தவழ்ந்த புன்னகையையும், அஞ்சன விழிகள் அள்ளி வீசிய மிதமிஞ்சிய அழைப்பையும் கண்ட கருணாகர பல்லவனின் மனத்தில் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச கட்டுப்பாடும் அரைகுறையாகத் திறந்திருந்த குடிசை வாயிலிலிருந்து வந்த கோதாவரியின் காற்றில் பறந்து போய்விடவே. அவன் உணர்ச்சிகள் அந்தக் கோதாவரியின் வெள்ளம் போலவே கட்டுக்கடங்காமல் பிரவாகிக்கத் தொடங்கியதால் அந்தப் பூவையின் குழலில் பூங்கொத்தைச் செருகிய வலது கை, புங்கொத்துப் பதிந்த இடத்திலேயே தங்கி விரல்களால் குழலைப் பிரித்தும், உள் நுழைந்தும் ஏதோ விஷமம் செய்து கொண்டிருந்தது. வில்லொத்த அவள் புருவத்தின் அடியில் விரிந்த மலரொத்த அவள் விழிகளில் மலர்ந்த மெல்லியல் பார்வையில் வசப்பட்டு நின்ற அவன் விழிகள், ஏதோ புதுமையைக் கண்டுவிட்டனபோல் சிறிது நேரம் அவற்றுடன் உறவாடினாலும், வேறு புதுமைகளையும் காண இஷ்டப்பட்டு, இந்தக் கண்களிலிருந்து அகன்று அவள் கன்னத்தை அடுத்திருந்த கழுத்தின் பின்புறத்திலும் மாறி மாறிப் பதிந்தன. தூண்டிவிட்ட விளக்கிலிருந்து எழுந்த பொன்னிற ஒளி, வெட்கத்தால் சிவந்து கிடந்த அவள் கன்னத்தில் பாய்ந்து அதன் மென்மையையும் வழவழப்பையும் அநேக ஆயிரம் மடங்கு அதிகமாக எடுத்துக் காட்டிக்கொண்டிருந்ததைக் கண்ட இளைய பல்லவன், ‘விளக்குத் தான் இவளுக்கு முதல் எதிரி’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கோதாவரியிலிருந்து வந்ததும் முதலில் குடிசைக்குள் நுழைந்த காஞ்சனாதேவி, “இருங்கள், விளக்கை ஏற்றுகிறேன்” என்று கூறித் தன்னை வாசலில் நிற்க வைத்ததில் அர்த்தம் ஏதுமில்லை என்றே நினைத் தான் அந்த வாலிபன். விளக்கு ஏதோ பெரும் பாது காப்புப்போல் அவள் நினைத்தது எத்தனை பிசகு என்பதை அந்த விளக்கின் பணியே அந்தச் சமயத்தில் விளக்குவதாக அவன் நினைத்தான். அவள் அவயவங்களின் அழகுகளைப் பற்றி அளவுக்கு அதிகமாக ஊகத்தை அளித்துத் தன்னைத் திணறவிடும் அந்த விளக்கு தனக்கு விரோதியா அல்லது திரியைத் தூண்டிய அந்த மோகன வல்லிக்கு விரோதியா என்பதை நிர்ணயிக்க முடியாத மோகன நிலையிலும் சில விநாடிகள் சிக்கினான் இளைய பல்லவன்.

விளக்கைப் பாதி மறைத்து இளையபல்லவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருந்த காஞ்சனா தேவியின் பின்புறக் கழுத்திலும் முதுகிலும் விளக்கொளி படவில்லைதான். ஆனால் இளையபல்லவன் மன ஒளி இவற்றின்மீது வீசி ஏதேதோ விவரிக்க இயலாத வியாக்கி யானங்களைச் செய்துகொண்டிருந்தது. இப்படி ஒளியில் தெரிந்த இடப்புறக் கன்னத்தையும் தோளையும் ஆராய்ந்த புறக்கண்களும் இருளில் பின்புற எழில்களை ஆராய்ந்த அகக் கண்களுமாகச் சேர்ந்து, இருளும் ஒளியும் பாதிப் பாதியுள்ள மனித வாழ்க்கையையே ஆராய்வது போன்ற பிரமையை இளைய பல்லவன் இதயத்தில் ஏற்படுத்திய தால் அவன் பெரும் மயக்கத்திலிருந்தான்.

அவள் விளக்கைத் தூண்டி விநாடிகள் பல ஓடித் தான்விட்டன. ஆனால் அப்படி ஓடின நேரம் தெரியாவிட் டாலும் அந்த நேரத்துக்குள் கணத்துக்குக் கணம் ஏற்பட்ட நிகழ்ச்சிகளில் சிக்கித் தன்னையே மறந்துவிட்டாள் கடாரத்தின் கட்டழகி. விளக்கைத் தூண்டியதும் வெகு துரிதமாக இளையபல்லவன் தன்னை அணுகிப் பின்புறத் தில் நின்றதே பெரும் இன்பவேதனையை அளித்தது அந்தப் பேரழகிக்கு. அத்துடன் கையிலிருந்த பூங்கொத்தை அவன் தன் குழலில் சூட்டியதும் குழலுக்குள் அவன் விரல்கள் புகுந்து விஷமம் செய்ததும் அஞ்சன விழிகளைத் திருப்பினாள் அவள். அந்தப் பார்வையுடன் கலந்த இளையபல்லவன் பார்வை தன் விழிகளில் கூரிய ஈட்டிகள் போல் பாய்ந்து இதயத்தையே ஆராய்ந்துவிடுவன போலிருந்ததைக் கண்ட அவன் இதயம் பெரு வேகத்தில் அடித்துக் கொண்டது.

ஆனால் அந்த இருவரின் கண்ணியமான பரம்பரை பெரும் விபரீதத்தைத் தடுத்து நின்றது. பரம்பரைக் கண்ணியம் விபரீதத்தைத்தான் தடுக்க முடிந்ததேயொழிய பிரவாகிக்கும் அன்பைத் தடுக்க முடியாததால் இருவரும் நிலைகுலைந்த தன்மையிலேயே நின்றிருந்தார்கள். நிலை குலைந்த தன்மையைச் சீர்படுத்திக் கொள்ள முனையவும் செய்தார்கள். ஆனால் முனைந்தது முழுப் பலனை மட்டும் அளிக்கவில்லை. இளையபல்லவன் கண்களிலிருந்து தன் கண்களைக் காஞ்சனாதேவி விடுவித்துக் கொள்ளத்தான் செய்தாள். தலையைக்கூடத் தாழ்த்திக் கொண்டாள். ஆனால் உணர்ச்சிகளிலிருந்து விடுபட மட்டும் முடியாமல் திண்டாடினாள். பின்புறத்தில் அவளுக்குக் கண்கள் இல்லைதான். ஆனால் பின்புறத்தில் அந்தப் புருஷன் மிகச் சமீபத்தில் நின்றுகொண்டிருக்கிறான் என்ற நினைப்பே இன்ப ஜ்வாலைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது அவள் தேகத்தில். பின்புறத்தில் அவள் கண்கள் இல்லைதான். இருப்பினும் தன் சேலையுடன் அவன் அங்கியின் நுனி உராய்ந்ததைக்கூட அவள் உணர முடிந்தது. பின்புறத்தில் தனக்கும் அவனுக்கும் இடை வெளி இருந்ததை அவள் அறிந்துதானிருந்தாள். இருப்பினும் அந்த இடைவெளி அதிகத் தைரியத்தைக் கொடுக்க வில்லை அவளுக்கு. சற்றுத் தவறினால் விழுவது பெரும் பாதாளம். அப்படித் தவறாவிட்டாலும் எந்த விநாடியில் தவறுவோமோ என்ற கிலி. அந்த நிலையில் தான் இருந்தாள் காஞ்சனாதேவி.

அந்த நிலை மட்டும் சாதாரண நிலையாயிருந்தால், அபாயம் மட்டும் சாதாரண அபாயமாயிருந்தால், அதிலிருந்து மனிதர் விலகுவதுண்டு. ஆனால் காதலின் அபாயம் மட்டும் விலகச் சந்தர்ப்பமளிக்கவில்லை . அபாயத்தை நோக்கிச் செல்லவே தூண்டுகிறது. அந்தத் தூண்டுதலினாலோ என்னவோ அவன் மார்பில் மெல்லச் சாய்ந்தாள் அந்தப் பூங்கொடி.

அவன் மார்பில் அவள் தலை சாய்ந்து கிடந்தது. இருவரும் நெருங்கிவிட்டதால் பாதாதிகேச பரியந்தம் ஏற்பட்ட ஸ்பரிச உணர்ச்சிகள் புதுப்புது இன்பக் கதைகளைச் சொல்லத் தொடங்கின. மனிதன் தோன்றிய கால முதல் ஏற்பட்ட கதைகள் தான் அவை. ஆனால் அவற்றைத் திரும்பத் திரும்பப் புதுக் கதைகள் போல் கேட்டுத் திருப்தியடைவது மனித இயல்பாகிவிட்டது.

பழைய காவியங்கள் திகட்டுவதில்லை. புதுப்புதுக் கருத்துகள் தோன்றுவதால் காதல் காவியமும் அத் தன்மையதுதான். காவியம் பழையது. கருத்துகள் என்றும் புதியவை. காவியத்தை நுகரும் முறைகள் பழமைதான். ஆனால் அந்த நுகர்ச்சியில் என்றும் புதுமை தோன்றத் தான் செய்கிறது. மாயை என்பதற்குப் பொருள் சொல்ல வேண்டுமானால் இயற்கையின் இந்தக் காவியத்தைச் சுட்டிக்காட்டலாம். பழமையில் புதுமையைக் காட்டுவது மாயை. கண்ணை மறைக்கும் விந்தையல்லவா இது!

மாளிகையில் பிறந்து மாளிகையில் வாழ்ந்த அந்த இருவர் கண்களும் அந்தத் தருணத்தில் மறைந்தே கிடந்தன.

அவன் மார்பில் சாய்ந்து கிடந்த அவள் கண்கள் மூடியிருந்தன. அவள் அழகைப் பருகிக் கொண்டிருந்த அவன் கண்கள் திறந்திருந்தன. ஆனால் மூடிய விழிகளுக்கும் விழித்திருந்த விழிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை . இரண்டுக்கும் பார்வையில்லை. உணர்ச்சிகளுக்குத்தான் பார்வை இருந்தது. பார்வை மட்டுமென்ன? பேசும் சக்தியு மிருந்ததால் அவை ஏதேதோ பேசிக்கொண்டிருந்தன. ‘நான் ஆடை புனையும் அறைக்குள் வந்தாரே இந்தப் புருஷர் போயும் போயும்’ என்று நினைத்த அவள் உள்ளுக்குள் நகைத்துக் கொண்டாள். ‘சற்று முன்பு கோதாவரியில் நீராடிவிட்டு வந்தபோது எப்படி வெறித்துப் பார்த்தார்! சே! ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் வெட்கம் சிறிதும் கிடையாது’ என்று கண்டிப்பதுபோல் கண்டித்துக் கொண்டாள். ஆனால் அது உண்மையில் கண்டனந்தானா என்பதில் பெரும் சந்தேகமிருந்தது அவளுக்கு.

காஞ்சனாதேவி மெள்ள நகைத்தாள். அந்த நகைப்பு கருணாகர பல்லவனை இக உலகத்துக்குக் கொண்டு வரவே மெள்ள அவன் கேட்டான், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று.

அவள் மீண்டும் நகைத்தாள். அந்த நகைப்பு அவனுக்குச் சற்றுக் கோபத்தைக் கொடுக்கவே, “பதில் சொல்லி விட்டு நகைத்தால் நன்றாயிருக்கும்” என்று கடுமையாகச் சொன்னான்.

மேல் ஸ்தாயியில் மிக மிருதுவாகச் சுண்டப்பட்ட வீணையின் நாதம்போல் வெளிவந்தது அவள் பதில், “பதில் சொல்லலாம்… ” என்று.

“பின் ஏன் சொல்லவில்லை?” காதுக்குள் ரகசியமாக ஓதினான் அவன்.

அவன் மார்பிலிருந்த அவள் முகத்தாமரை அவன் முகத்தை நோக்கியது. “கேள்வி சரியில்லை” என்று உதடுகள் இருமுறை திறந்து மூடின.

“கேள்வி சரியில்லையா?”

“ஆம். “

“என்ன கேட்டேன்?”

“ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டீர்கள்?”

“அதில் தவறென்ன?”

“சிரிக்கிறீர்கள் என்பதில் மரியாதை கலந்திருக்கிறது. “

“ஏன் மரியாதை கூடாதா?”

“கூடும், மற்றக் காரியங்களிலும் மரியாதை காட்டப் பட்டால். “

“என்ன மரியாதைக் காட்டவில்லை நான்?”

“இந்த நிலை மரியாதைக்கு அறிகுறியா!”

“தேவி! நான். “

“ஊஹும். தவறு, தவறு” என்று சிரித்தாள் அவள்.

“காஞ்சனா!”

“அதுதான் சரி” என்றாள் அவள். “எது?”

“அழைத்த முறை. “

அவன் புரிந்துகொண்டான். புரிந்தும் விழித்தான். “என்ன விழிக்கிறீர்கள்? இன்னும் புரியவில்லையா? கண்ணில்லையா உங்களுக்கு?”

“கண்கள் இருக்கின்றன. ஆனால் பயனில்லை. “

“ஏன்?”

“உன்னைக் காண இந்த இரு கண்கள் போதா. “

“நம் இருவர் கண்களும் பயன் அற்றவை” என்றாள் அவள்.

அவள் சொன்னதன் பொருள் வேறு; ஆனால் கிடைத்த பொருள் வேறு. ஏனென்றால் அத்தனை விளக் கொளியிருந்தும், குடிசைக் கதவின் மூலம் ஓசைப்படாமல் உள்ளே நுழைந்து கதவை மெள்ளச் சாத்திவிட்டு அதன் குறுக்கே உருவிய வாளும் கையுமாக நின்றுகொண்ட ஓர் உருவத்தை அந்த இருவருமே கவனிக்கவில்லை.

Previous articleRead Kadal Pura Part 1 Ch14 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch16 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here