Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch16 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch16 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

112
0
Read Kadal Pura Part 1 Ch16 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch16 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch16 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 16 : அரபு நாட்டு அமீர்.

Read Kadal Pura Part 1 Ch16 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

காதலின் பிணைப்பிலும் உணர்ச்சி வெள்ளத்திலும் சிக்குண்டு பூலோகத்தை அறவே மறந்து சொர்க்கலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கடாரத்துக் கட்டழகியும், பல்லவ குல இளவலும் குடிசைக் கதவைத் திறந்து கொண்டு மனிதனொருவன் உள்ளே நுழைந்து கதவை மூடி உருவிய வாளும் கையுமாக நின்றதை அணுவளவும் கவனிக்காமல் ஒருவரையொருவர் மட்டுமே கவனித்த வண்ணம் நீண்ட நேரம் ஏதும் பேசாமல் நின்றிருந்தார்கள். அந்த நிலையில் காதல் அந்த இருவருக்கிடையே கிளப்பி விட்ட சங்கடத்தை விட அதைக் கவனித்த அந்த மூன்றாம் மனிதன் சங்கடம் பெரிதாயிருக்கவே, அவர்களைக் காதல் வானத்திலிருந்து பாலூர்ப் பெருந்துறை மண்ணுக்கு இழுக்க, அவன் பலமுறை தன் தொண்டையைப் பலமாகக் கனைத்தான். அந்தக் கனைப்பின் ஒலியால் இவ்வுலகத்துக்கு வந்துவிட்டாலும், இருந்த குடிசைக் கோடியை விட்டு மட்டும் நகராமல், குடிசைக் கதவுக்கருகே நின்ற அந்தப் புதுமனிதனை யாரென்று இருவரும் ஏறெடுத்து நோக்கினார்கள். வந்த மனிதனின் கோலமே பெரும் விந்தையாயிருந்ததைக் கவனித்த இளைய பல்லவன், அவன் எந்த நாட்டான் என்பதைக் கூட நிர்ணயிக்க முடியாமல் திணறினான். அவனது கொழுத்த கன்னங்களும், உதடுகளும் சிவந்த கண்களும் அவன் அராபியன் என்பதைத் தெளிவு படுத்தினவென்றாலும், நீளமாக இருபக்கத்திலும் வளர்ந்த உதடுகளின் கோடியில் நீளமாக மடிந்த மீசை மட்டும் சீனத்தவர் மீசையைப் போலிருந்தது. மேல் உடையும், கால் உறையும் அராபியர் அணிவதைப் போலிருந்தாலும், அவன் அணிந்திருந்த தொப்பி சதுர மாய்ச் சீனர்களின் தொப்பியைப் போலிருந்தது.

சீனர் களைப்போல் அவன் குள்ளமில்லை . நல்ல உயரம், பருமன். அவன் இடைக்கச்சை மேல் நாட்டினர் அணியும் கச்சையைப் போல் கெட்டித் தோலால் செய்யப்பட்டிருந்ததன்றி, அந்தக் கச்சையில் அவன் கையில் பிடித்திருந்த வாள் தொங்குவதற்கு அமைக்கப்பட்டிருந்த இடத்தைத் தவிர இன்னும் இரு குறுவாள்களைச் செருகிக் கொள்ளவும் இடமிருந்தது. பாதி சீனர் உடையிலும், பாதி அராபியர் உடையுமாகக் கலந்து அணிந்திருந்த அந்த மனிதனைச் சில வினாடிகள் ஆராய்ந்த இளைய பல்லவன், “யார் நீ? இங்கு எதற்கு வந்தாய்?” என்று வினவினான். அவன் கேள்வியைத் தொடுத்த அந்த சில வினாடிகளில் காஞ்சனாதேவி சரேலெனப் பின்னுக்கு அடைந்து குடிசைக் கோடியில் சாத்தியிருந்த தனது வாளை எடுத்துக் கொண்டாள். அதைக் கண்ட அந்த மனிதன் பெரிதாக நகைத்தான்.

அந்த நகைப்பினால் கோபத்தின் வசப்பட்ட காஞ்சனாதேவி, “எதற்காக நகைக்கிறாய்?” என்று சீறினாள்.

“பெண்ணே! நீ வாளை எடுத்ததைக் கண்டு சிரித்தேன்” என்று அவன் கூறி மறுபடியும் ராக்ஷஸத் தனமாகப் பெரிதாக நகைத்தான்.

“உன் கை வாள் என் வாளைவிடப் பலமுள்ளதென்று நினைக்கிறாயா?” என்று அவள் வினவினாள் ஆத்திரத்துடன்.

“பலமுள்ளதுதான் பெண்ணே! ஆனால் அதற்காக நகைக்கவில்லை. உன்னையும் இந்தச் சிறுவனையும் கொல்ல நான் வாளைத் தூக்கிக் கொண்டு அங்கு வரத் தேவையில்லை. வந்து போராடவும் அவசியமில்லை.

நீங்கள் இதைவிட இன்னும் பத்து மடங்கு அதிகத் தூரத்திலிருந்தாலும் என் கச்சையிலுள்ள இந்தக் குறுவாள்களை எடுத்தெறிந்தே மாய்த்துவிடுவேன்” என்று கூறித் தன் இடையிலிருந்த இரு குறுவாள்களையும் கையால் தட்டிக் காட்டினான்.

வந்தவனுடைய போர்த்திறமையைத் தீர்மானிக்கும் மனநிலையை அந்தச் சமயத்தில் பெற்றிராத இளைய பல்லவன் மட்டும் அதைப் பற்றிய ஆராய்ச்சியில் நுழையாமல், “யார் நீ? இங்கு எதற்கு வந்தாய்?” என்று தன் முதல் கேள்வியை இரண்டாம் தரம் மிகப் பலத்துடனும் கண்டிப்புப் பெரிதும் தொனித்தக் குரலிலும் திருப்பினான்.

அந்தக் குரலில் இருந்த கண்டிப்பும், அதிகாரமும் வந்தவனுக்குச் சற்று எச்சரிக்கையை அளித்திருக்க வேண்டும். அதைக் கேட்டதும் அவன் முகத்திலிருந்து சிரிப்பு மறைந்து சிறிது குழப்பம் அதில் படரத் துவங்கியது. அந்தக் குழப்பம் குரலிலும் ஒலிக்கச் சொன்னான் அவன், “உண்மையில் அந்தக் கேள்வியை நான்தான் கேட்டிருக்க வேண்டும்” என்று.

கருணாகர பல்லவன் முகத்தில் வியப்பின் சாயை லேசாகப் படர்ந்தது. தானிருந்த குடிசைக்குள் ஓசைப் படாமல் நுழைந்ததன்றி, தன்னையே கேள்வி கேட்கவும் முனைந்த அந்த மனிதனை நன்றாக ஊன்றிக் கவனித் தான். அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட அந்த மனிதன், “உங்கள் எண்ணம் புரிகிறது. நான் எப்படி உங்களைக் கேள்வி கேட்கலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது” என்று மீண்டும் கூறினான்.

கருணாகர பல்லவனின் ஆச்சரியம் அதிகமாகவே, “உரிமை இருக்கிறதா?” என்று அந்த ஆச்சரியம் குரலிலும் பிரதிபலிக்கக் கேட்டான்.

“ஆம். உரிமையிருக்கிறது” என்று திட்டமாகச் சொன் னான் அந்த மனிதன்.

“என்ன உரிமை?” அதுவரை மௌனமாயிருந்த காஞ்சனா தேவியும் ஒரு கேள்வியை வீசினாள்.

“சொந்தக்காரனுக்குள்ள உரிமை” என்றான் அந்த மனிதன்.

“அப்படியானால்… ” என்று இழுத்தாள் காஞ்சனா தேவி.

“இந்தக் குடிசை என்னுடையது” என்று வாசகத்தை அந்த மனிதன் முடித்ததும், கருணாகர பல்லவனும் காஞ்சனாதேவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண் டார்கள். பிறகு அந்த மனிதனை நோக்கிய கருணாகர பல்லவன், “நாங்கள் இங்கு பிற்பகலிலே வந்துவிட்டோம்” என்று சுட்டிக் காட்டினான்.

“மிகவும் சந்தோஷம்” என்று அந்த மனிதன் சொன்ன பதிலில் ஏளனமிருந்ததைக் கருணாகர பல்லவன் கவனிக்கத் தவறவில்லை. அதனால் சற்றுச் சீற்றத்துடன் கேட்டான், “அப்பொழுது நீங்கள் இங்கு இல்லையே” என்று.

. “நான் இல்லாதது உங்களுக்குச் சௌகரியமாகப் போய்விட்டதென்பது புரிகிறது” என்றான் அந்த மனிதன்.

காஞ்சனாதேவியின் முகம் வெட்கத்தால் குப்பென்று சிவந்தது. தானும் இளைய பல்லவனும் இருந்த நிலையையே அவன் குறிப்பிடுகிறானென்பதைப் புரிந்துகொண்டதால் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் அவள். இளைய பல்லவனுக்கும் அந்த மனிதன் பேச்சு சற்றுச் சங்கடத்தையே அளித்ததென்றாலும் அவன் அதைச் சமாளித்துக் கொண்டு, “நீங்கள் நினைப்பது தவறு. இந்தக் குடிசைக்கு நாங்களாக வரவில்லை” என்று தெரிவித்தான்.

“வேறு யார் அழைத்து வந்தார்களோ?”

“அதைச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். “

“சொன்னால் என்ன நடந்துவிடும்?”

“ஆபத்து நிகழலாம். ” “யாருக்கு?”

“என் நண்பருக்கு!”

இதற்கும் பதில் சொல்ல யோசித்தான் இளைய பல்லவன். ‘இந்த நாட்டு அதிபர்களால் ஆபத்து என்று சொல்லலாமா? ஒருவேளை இவன் கலிங்க வீரர்களிடம் காட்டிக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது?” என்று சில விநாடிகள் சிந்தித்தான்.

அவன் சிந்தனையில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட அந்த மனிதன், “நீங்கள் யாரோ எனக்குத் தெரியாது. உங்களை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை. வேறு ஒரு நண்பரை எதிர்பார்த்து வந்தேன். அவருக்குப் பதில் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். உங்களை அழைத்து வந்து என் குடிசையில் தங்க வைத்தவர் பெயரையும் சொல்ல மறுக்கிறீர்கள். அது கிடக்கட்டும். உங்கள் பெயரையாவது சொல்லலாமா?” என்று வினவினான்.

“என் பெயரையும் சொல்வதற்கில்லை” என்று அறிவித் தான் இளையபல்லவன்.

“அந்தப் பெண்ணின் பெயர்?” என்று கேட்டுச் சற்றுப் பதிலுக்கு நிதானித்த அந்த விந்தை மனிதன், “சரி, சரி, சொல்லமாட்டீர்கள். அதுவும் மர்மம். ஆனால் அந்த மர்மத்துக்குக் காரணம் தெரியும்” என்று கூறி இடி இடியென நகைத்தான்.

அந்த நகைப்பைக் கண்டு வெகுண்ட இளைய பல்லவன், “என்ன காரணத்தைத் தெரிந்துகொண்டு விட்டீர்?” என்று கேட்டான் குரலில் உஷ்ணம் பூரண மாகத் தொனிக்க. “காரணம் எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். ஆனால் இது ஒன்றும் புதிதல்ல” என்று சொல்லி மீண்டும் நகைத்தான்.

“எது புதிதல்ல?” இளையபல்லவன் குரலில் உக்கிரம் உச்சியில் நின்றது.

“ரகசியக் காதல்” என்ற அந்த மனிதன் தன் பெரு உதடுகளில் புன்சிரிப்பைத் தவழவிட்டான்.

“யோசித்துப் பேசு. “

“இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?”

யோசிப்பதற்கு ஒன்றுமில்லையென்பது இளைய பல்லவனுக்குப் புரிந்தேயிருந்தது. தாங்கள் இருந்த நிலையைப் பார்த்த எவரும் அந்தப்புது மனிதன் செய்த கற்பனையைத் தவிர வேறு கற்பனையில் ஈடுபட முடியா தென்பதைப் புரிந்துகொண்டான். அப்படி விஷயம் தெளிவாகப் புரியவே, சரியாகப் பதில் சொல்ல முடியாத காரணத்தால் இளையபல்லவன் இதய்த்தில் கோபமே பெரிதாக எழுந்து நின்றது. அந்தக் கோபத்தின் விளை வாகச் சரேலெனக் காஞ்சனாதேவியின் கையிலிருந்த கத்தியைத் தான் பிடுங்கிக்கொண்டு, “டேய், வாயை அடக்கிப் பேசு. இல்லையேல் வா அருகில்” என்று சொல்லிக்கொண்டு உருவிய வாளை நீட்டிக் கொண்டு சற்று முன்னேறினான்.

அந்த மனிதன் குடிசையின் கதவைவிட்டுச் சற்று அப்புறம் நகர்ந்தான். ஆனால் கையிலிருந்த வாளை அவன் நீட்டவில்லை. அதை இடது கைக்கு மாற்றிக்கொண்டு வலது கையைக் கச்சையிலிருந்த குறுவாளுக்காகக் கொண்டு சென்றான். அவனது சிவந்த பயங்கரக் கண்கள் சற்றே குறுகின. முகத்திலும் கண்களில் உதயமான பயங்கரச் சாயை படர்ந்தது. இதையெல்லாம் வினாடி நேரத்தில் கவனித்த இளையபல்லவன் புலிக் கண்கள் தனக்குச் சமதையான எதிரியைக் கண்டுவிட்ட சந்தோஷத்தால் பளிச்சிட்டன. இந்த நிலை ஒரு வினாடி நீடித் திருந்தால், என்ன விளைவு ஏற்பட்டிருக்குமென்று சொல்ல முடியாது. அந்த விளைவைத் தடுக்கத் திடீரெனக் குடிசைக்கு வெளியே குதிரைகள் வந்து நிற்கும் காலடிகள் கேட்டன. “இந்தா, இந்தக் குதிரையைப் பிடித்து அந்த மரத்தில் கட்டு” என்று அதிகாரச் சொற்கள் குடிசையின் பயங்கர அமைதியை ஊடுருவிச் சென்றன. அடுத்த வினாடி குடிசைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அநபாயன் அங்கிருந்த நிலையைக் கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

அநபாயனின் திடீர்ப் பிரவேசம் அந்தக் குடிசையிலிருந்த மூவரிடையும் பெருத்த மாறுதலை விளைவித்தது. இளையபல்லவன் வாளைச் சிறிது தாழ்த்தினான். வெட்கத்தால் வேறுபுறம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்ற காஞ்சனாதேவி சரேலெனக் குடிசையின் கதவை நோக்கித் திரும்பி அநபாயனை ஏறெடுத்து நோக்கினாள். அவளுடைய அந்தப் பார்வையில் பெரும் சாந்தியிருந்தது. ஏதோ பெரும் அபாயம் தடுக்கப்பட்டது என்பதற்கு அறிகுறியான அமைதியும் அதில் நிலவிக் கிடந்தது. ஆனால் குடிசைச் சொந்தக்காரன் போக்கு மிக விநோதமாயிருந்தது. அநபாயனைக் கண்டதும் சட்டென்று அவன் பெரிய வாள் கச்சையை நோக்கிப் பறந்து அதில் இணைந்தது. குறுவாளை எடுக்கப் போன வலதுகை துவண்டு தொங்கியது. பெட்டிப் பாம்பைப்போல் அடங்கிய அவன் பிரும்மாண்ட சரீரம் அநபாயனை நோக்கித் தலையையும் தாழ்த்தியது.

அநபாயன் அந்தப் பெரிய சரீரத்தின் முதுகில் செல்ல மாகத் தட்டிக் கொடுத்தான். பிறகு இளைய பல்லவனை நோக்கிவிட்டு அந்த மனிதனிடம் திரும்பி, “அமீர்! இதென்ன சண்டைக்கு ஆயத்தம்?” என்று வினவினான்.

அமீர் தன் சீனக் குல்லாய் தரையில் தாழ அநபாயனை நோக்கி வணங்கிவிட்டுச் சொன்னான், “என் குடிசையில் தங்களை எதிர்பார்த்து வந்தேன். ஆனால் இவர்களிருந் தார்கள்” என்று.

“உனக்கு இவர்கள் அறிமுகமில்லை. இருந்தாலென்ன? யாரென்று கேட்டுத் தெரிந்து கொள்வதுதானே?” என்றான் அநபாயன்.

“வந்தவுடனே கேட்க முடியவில்லை” என்று பதில் சொன்ன அமீரின் உதடுகளில் நமட்டு விஷமம் தெரிந்தது.

“ஏன்?” என்று வினவிய அநபாயன் அமீரைவிட்டு இளைய பல்லவனையும் காஞ்சனா தேவியையும் நோக்கினான். இளையபல்லவன் முகத்திலிருந்த சங்கடச் சாயையும், காஞ்சனா தேவியின் முகத்தில் திடீரென மண்டி விட்ட குழப்பமும், குழப்பத்தைத் தொடர்ந்து சிவந்த கன்னங்களும் ஓரளவு கதையைச் சொல்லவே அநபாயன் முகத்தில் ஓரளவு வியப்பே விகசித்தது. வங்கக் கடலுக்கு அப்புறத்திலும் இப்புறத்திலும் இருக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த இருவர் திடீரெனச் சந்தித்து மூன்று நாள்களுக்குள் காதல் வலையில் கட்டுப்படுவது இயற்கையின் வன்மையைச் சுட்டிக் காட்டுகிறதா, விதியின் வலிமையை வலியுறுத்துகிறதா என்பதை நினைத்துப் பார்த்து விடை காணாத அநபாயன் இதழ்களில் மெல்லப் புன்முறுவல் தவழ்ந்தது. அதைத் தொடர்ந்து, “அப்படியா!” என்ற சொல்லும் வெளிவந்தது.

அந்த ‘அப்படியா’வில் ஆயிரம் அர்த்தங்கள் தொனிப் பதை உணர்ந்த இளைய பல்லவனின் குழப்பமும் காஞ்சனா தேவியின் சங்கடமும் அதிகரித்து விட்டதையும், அவர்கள் கண்கள் நிலத்தில் தாழ்ந்து விட்டதையும் கண்ட அமீர், “ஆம்! அதனால்தான் வந்தவுடன் விசாரிக்க முடிய வில்லை. விசாரித்தபோது இவர்கள் பதிலும் சரியாகச்சொல்லவில்லை. இவர்கள் பெயர்களையும் சொல்ல மறுத் தார்கள். இவர்களை அழைத்து வந்தவரின் பெயரையும் சொல்ல மறுத்தார்கள். போதாக்குறைக்கு அந்தப் பெண்ணும் வாளை எடுத்தாள். பிறகு அந்த வாளை அவர் பிடுங்கிக் கொண்டார். நானும். “

“குறுவாளிடம் கையைக் கொண்டு போயிருப்பாய்” என்று அமீரின் வாசகத்தை அநபாயன் முடித்ததைக் கண்ட இளையபல்லவன், வியப்பின் எல்லையை எய்தினான். அநபாயன் மேற்கொண்டு சொன்னது அந்த வியப்பை ஆயிரம் மடங்கு அதிகரிக்கவே செய்தது. “நல்ல வேளை அமீர்! குறுவாளை எடுக்காதிருந்தாயே! அதைக் கண்டாலே எனக்குப் பயம்” என்று கூறிய அநபாயன் மறுபடியும் அமீரின் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

அநபாயன் போக்கு எதுவும் பிடிபடவில்லை இளைய பல்லவனுக்கு. ‘யார் இந்த அமீர்? இவன் எப்படிப் பரிச்சயம் அநபாயருக்கு. குறுவாளை எடுத்து வீசுவது பற்றிச் சற்றுமுன்பு அமீர் சொன்னதை, அநபாயரும் ஊர்ஜிதப்படுத்துகிறாரே’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட இளையபல்லவன், அந்தக் கேள்விகளை நேராகவே கேட்டுவிட இஷ்டப்பட்டு அநபாயனை ஏறெடுத்து நோக்கினான்.

இளையபல்லவன் மனத்திலோடிய எண்ணங்களை முகமே பிரதிபலித்திருக்க வேண்டும். அவையனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்துகொண்ட அநபாயன், இளையபல்லவன் வாய் கேள்விகளைக் கேட்கு முன்பே பதில் கூறினான்: “கருணாகரா! அமீர் எனக்கு நீண்ட நாள் பழக்கமுள்ளவன். அவனை விடத் திறமையும் எந்த அபாயத்தையும் சமாளிப்பதில் வல்லமைச்சாலியுமான ஒருவனைக் கண்டுபிடிப்பது அசாத்தியம். கப்ப லோட்டுவதிலும், கப்பல் போரிலும் இணையற்ற சாமர்த்திய முள்ளவன். இந்தக் கீழ்க்கடல் பிராந்தியம் முழுவதையும் நன்கறிந்தவன். அரபு நாட்டிலிருந்து சீனநாடு வரை உள்ள துறைமுகங்கள் அனைத்தும் தெரியும் இவனுக்கு. நூறு அடிக்கு அப்பாலு முள்ளவர்களைக் குறுவாள் எறிந்து கொல்லுவதில் நிகரற்றவன். பார்ப்பதற்கு பளுவாயிருக்கும் இந்தத் தேகத்தைச் சண்டை சமயத்தில் பார்த்தால் ஆச்சரியப்படுவாய்; வாளிப்பான சரீரத்தைவிடச் சுறுசுறுப்பாய் வேலை செய்யும். இந்தப் பாலூர்ப் பெருந்துறையிலிருந்து நம்மைக் காப்பாற்ற வல்லவன் அமீர் ஒருவன் தான். அமீரிடம்தான் நம்மை ஒப்படைத்திருக்கிறேன்” என்று விளக்கினான் அநபாயன். “ஒன்று மறந்துவிட்டேன். அமீரின் தயவில்லாவிட்டால் தூதுப் புறா மூலம் நான் குணவர்மனுக்குச் செய்தியனுப்பியிருக்க முடியாது. புறா அமீருக்குச் சொந்தம்” என்று கூறினான் சோழர்குல இளவல்.

அமீரின் இந்தப் பிரதாப புராணத்தைக் கேட்ட இளையபல்லவன் சில விநாடிகள் பதிலேதும் சொல்ல வில்லை. பிறகு கேட்டான்: “நம்மைத் தப்புவிக்கும் பொறுப்பைப் பிற நாட்டார் ஒருவரிடம் ஒப்படைத்திருப்பதாகக் கூறினீர்களே, அவர் இவர்தானா?” என்று.

“ஆம்! அமீர் அரபு நாட்டைச் சேர்ந்தவன். சீன நாட்டில் அடிமையாக விற்கப்பட்டான். அங்கிருந்ததால் அந்த நாட்டுப் பழக்க வழக்கங்கள் கலந்துவிட்டன” என்று விளக்கிய அநபாயன், “அது மட்டுமல்ல கருணாகரா, யாரும் தப்பமுடியாத சீன அடிமைத்தளத்திலிருந்து தந்திரத்தால் தப்பி வந்திருக்கிறான். இப்பொழுதுகூட அமீரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சீனாவில் ஆயிரம் பொற் காசுகள் பரிசு கிடைக்கும். ஆனால் அமீரைப் பிடிப்பது முடியாத காரியம்” என்று பெருமையுடன் சொல்லவும் செய்தான்.

அத்துடன் அமீரின் கதையை முடிக்க இஷ்டப்பட்ட அநபாயன், “கருணாகரா! அமீரின் கதையை முழுவதும் சொன்னால் கேட்கத் தெவிட்டாது. இன்னொரு நாள் சொல்கிறேன். இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய அலுவல் வேறு” என்று கூறிவிட்டு, “என்ன அமீர்! நாங்கள் தப்பிச் செல்ல வழி ஏதாவது கண்டுபிடித்தாயா?” என்று அமீரை நோக்கி வினவினான்.

“கண்டு பிடிக்காமல் வருவேனா?” என்றான் அமீர்.

“எந்த வழியில் தப்பலாம்?” என்று அநபாயன் விசாரித்தான்.

“நிலவழி முடியாது. பலமாகக் காக்கப்பட்டிருக்கிறது. நீர் வழிதான் சௌகரியம். “

“அதற்குத் திட்டமிருக்கிறதா?”

“இருக்கிறது. “

“என்ன திட்டம்?”

“வந்தால் காட்டுகிறேன். “

“சரி, புறப்படுவோம். “

அநபாயனின் இந்தக் கட்டளையைத் தொடர்ந்து குடிசையிலிருந்தவர்கள் வெளியேறினார்கள். அமீர் அழைத்துச் சென்ற இடம் மட்டுமல்ல, அவன் விவரித்த திட்டமும் மிகப் பயங்கரமாக இருந்தது. ஆனால் அதை விட்டால் தப்ப வேறு வழியுமில்லையென்பதை அநபாயன் மட்டுமின்றி மற்றவர்களும் புரிந்துகொண்டார்கள்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch15 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch17 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here