Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch17 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch17 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

133
0
Read Kadal Pura Part 1 Ch17 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch17 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch17 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 17 : புதிதாக வந்தவன்.

Read Kadal Pura Part 1 Ch17 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

பாலூர்ப் பெருந்துறையின் நிலவழிகள் பலமாகக் காக்கப்பட்டிருந்ததால் நீர்வழி ஒன்று மூலமே அநபாயச் சோழனும் அவன் நண்பர்களும் தப்ப முடியும் என்பதை எடுத்துச் சொன்னதன்றி, அவர்கள் தப்ப வேண்டிய முறையையும் நிர்ணயித்துவிட்டதாகக் கூறிய அரபுநாட்டு அமீர், அவர்களைக் கோதாவரி ஆற்றங்கரைக் குடிசையிலிருந்து அழைத்துச் செல்லுமுன்பு முன்னேற்பாடுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்துகொண்டான். “சரி புறப் படுவோம்” என்று அநபாயன் கட்டளையிட்ட பின்பும் உடனே அதற்கு உடன்படாத அமீர், “சற்றுத் தாமதிக்க வேண்டும்” என்று கூறிவிட்டுக் குடிசைக்கு வெளியே சென்று சில விநாடிகளில் மூன்று பெரும் கறுப்புக் கம்பளங்களுடன் திரும்பி வந்து, “இதை ஆளுக்கொன்று எடுத்துத் தலையை முக்காடிட்டுக் கூடியவரை உடம்பையும் மறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினான். அவன் சொன்னபடி அவர்கள் போர்த்திக் கொண்டதும் அநபாயனைப் பார்த்த அமீர், “அந்தப் பழைய நடை தங்களுக்கு ஏற்கெனவே பழக்கமானது. நான் சொல்லித்தர வேண்டிய தில்லை” என்று கூறிப் புன்முறுவல் செய்து, மற்ற இருவரையும் நோக்கி, “இதோ பாருங்கள்! எனக்குப் பின்னால் நீங்களிருவரும் முதுகை வளைத்துத் தலை குனிந்து இப்படி அடக்கமாக அரை ஓட்டமும் அரை நடையுமாக வரவேண்டும்” என்று சொல்லி அவர்கள் வரவேண்டிய முறையை விளக்க, தன் பெரும் சரீரத்தை வளைத்துத் தலையைக் குனிந்து கால்களைக் குறுக்கிக் குடிசையில் அப்படியும் இப்படியும் இரண்டு மூன்று முறைகள் ஓடியும் காட்டினான்.

அத்தனை பெரிய சரீரத்தைத் தூக்கிக்கொண்டு அமீர் ஓடியதே பெரும் விந்தையாயிருந்தது கருணாகர பல்லவனுக்கு. அப்படியிருக்க, அவன் தங்களையும் அப்படி ஓட வேண்டுமென்று வற்புறுத்தியது விந்தையின் எல்லையைத் தொடவே, கருணாகர பல்லவன் கேட்டான். “தங்கள் பின்னால் இப்படி ஓடுவதில் பயன் என்ன இருக்கிறது?” என்று.

அமீரின் கண்கள் மிகவும் விஷமத்துடன் கருணாகர பல்லவனை ஏறெடுத்து நோக்கியதன்றி உதடுகளும் விஷமத் துடனேயே சொற்களை உதிர்த்தன. “உயிர் காப்பாற்றப் படுவது போதிய பயன் அல்லவா?” என்று கேட்டான்.

அமீர் குடிசைக்கு வந்தது முதல் பேசிய பேச்சைக் கேட்டு வியப்பெய்தியிருந்த இளைய பல்லவனுக்கு அவன் கடைசியாகப் பேசிய பேச்சைக் கேட்டபோது வியப்புப் பன்மடங்கு அதிகமாயிற்று. காஞ்சனாதேவியின் காதல் வலையிலிருந்த சமயத்தில் சரேலெனக் கவனிக்கத் தவறிய பல விஷயங்களை அவன் கண்களும் செவிகளும் அதனின்று விடுபட்டதும் ஊன்றிக் கவனிக்கவே செய்தன. முதன் முதலாக இளைய பல்லவன் கவனித்தது அந்த அரபு நாட்டான் பேசிய தமிழ் மொழியின் தெளிவுதான். தமிழனாகப் பிறந்து தமிழ் நாட்டிலேயே வருடக் கணக்கில் வளர்ந்தவன் எத்தனை தூய்மையாகவும் சரளமாகவும் பேசுவானோ அத்தனைத் தூய்மையாகவும் சர்வ சகஜமா கவும் தமிழ் மொழியை அவன் கையாளுவதையும், அந்த மொழியின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து விஷமத்தையும் கலந்து அவன் சொற்களை உதிர்ப்பதையும் கண்டு வியப்பெய்திய இளையபல்லவன், “நீங்கள் தமிழகத்தில் இருந் திருக்கிறீர்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.

“இல்லை, இருந்ததில்லை. ஏன் கேட்கிறீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் வினவிய அமீர், அந்த ஆச்சரியம் கண் களிலும் மலர ஒருமுறை இளைய பல்லவனை ஏறெடுத்து நோக்கினான்.

இதற்குக் கருணாகர பல்லவன் பதில் சொல்லுமுன்பு இடையே புகுந்து அநபாயனே பதில் சொன்னான், “அமீர்! உன் தமிழின் தூய்மை கருணாகரனைப் பிரமிக்க வைத்திருக்கிறது. வேறொன்றுமில்லை” என்று.

அதுவரை கருணாகர பல்லவன் பெயரைக்கூடக் கேட்காத அமீர், “இவர் பெயர் கருணாகரரா?” என்று வினவினான்.

“ஆமாம் அமீர்! இவர் எங்கள் நாட்டின் பெரும் அரச குலமொன்றில் பிறந்தவர். “

கருணாகர பல்லவன் அரசகுலத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கேட்டதும், சீனத்துக் குல்லாயுடன் தலையை ஒருமுறை தாழ்த்தி வணங்கிய அமீர், “வணக்கம் அரசே” என்று மிகப் பணிவுடன் சொற்களை உதிர்த்தான்.

“இவர் அரசரல்ல அமீர்” என்று திருத்திய அநபாயன் மெள்ளப் புன்முறுவல் செய்தான்.

அமீர் முகத்தில் குழப்பம் விரிந்தது. “அப்படியானால் யாரிவர்?”

“எங்கள் நாட்டில் பல்லவ குலம் என்றோர் அரச குலம் இருக்கிறது. “

“உம். “

“அந்தக் குலத்து அரசரின் இளையவர் இவர். “

“இளவரசரா?”

“ஆமாம். அதுமட்டுமல்ல. “

இதைக் கேட்டதும் ஏதோ வினாவை வீசுவதற்கு அறிகுறியாக மேலே எழுந்தன அமீரின் புருவங்கள். கண்களும் அநபாயன் முகத்தை நோக்கிக் கேள்விக் குறியை வீசின. அவன் கண்களில் கண்ட கேள்விகளைப் புரிந்துகொண்ட அநபாயன், “அமீர்! கருணாகர பல்லவர் தமிழகத்தின் பெரும் படைத்தலைவர்களில் ஒருவர். போரைவிட இவர் விரும்புவது எதுவுமில்லை. அப்பேர்ப் பட்டவர் சமாதானத் தூதராகப் பாலூர் வந்தார். இவர் வந்த வேளை கடைசியில் போர்தான் விளையும் போலி ருக்கிறது” என்று சொல்லி இதழ்களில் புன்முறுவலொன்றைப் படர விட்டதன்றி, “அமீர்! வந்தவுடன் இவர்களை உனக்கு நான் அறிமுகப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஆனால் குடிசைக்குள் நுழைந்தபோது நிலைமை வேறு விதமாயிருந்ததால் அந்தப் பணியைச் செய்ய முடிய வில்லை. இப்பொழுது தெரிந்துகொள். கருணாகர பல்லவர் தமிழகத்தில் இணையற்ற படைத்தலைவர் மட்டுமல்ல. என் உயிர் நண்பருங்கூட. அதோ நிற்கும் அந்த எழிலரசி கடாரத்தின் இளவரசி. உன்னிடம் ஒப்படைத்திருக்கிறேனே ஒருவர், அவருடைய மகள்” என்று தெளிவாக அறிமுகப்படுத்தவும் செய்தான்.

அநபாயன் இப்படி விளக்கிச் சொல்லியதால் ஓரளவு தெளிவடைந்த அமீர், அந்த இருவருக்கும் மீண்டும் தலை தாழ்த்தி, “அப்படியா! மிக்க மகிழ்ச்சி” என்று கூறியதோடு நில்லாமல், “கடாரத்து இளவரசி முன்பே தமிழ்நாடு வந்திருக்கிறார்களா?” என்றும் வினவினான்.

“இல்லை இல்லை. இன்னும் தமிழ்நாட்டில் அடி யெடுத்து வைக்கவில்லை. இனிமேல்தான் போகவேண்டும், அதுவும் உன் தயவால்” என்றான் அநபாயன்.

“தயவு என்று தாங்கள் சொல்வது தவறு. அடிமையைக் கட்டளை இடுவதுதான் முறை” என்று பணிவுடன் சொன்ன அமீர், “நான் தவறாக நினைத்துவிட்டேன் அநபாயரே! இவர்களுக்கு நீண்டநாள் பரிச்சயமிருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதனால்தான் இளவரசி முன்பே தமிழகம் வந்திருக்கிறார்களா என்று கேட்டேன்” என்று சமாதானம் கூறி விஷமப் புன்னகை செய்த அமீரைச் சுட்டுவிடுவன போல் நோக்கின கருணாகர பல்லவனின் ஈட்டி விழிகள். அவன் சொற்களைக் கேட்ட காஞ்சனாதேவியின் அஞ்சன விழிகள் நிலத்தை நோக்கின. அந்த நிலையை நீண்ட நேரம் நிலைக்க விடுவதால் ஏற்படக்கூடிய சங்கடத்தைப் புரிந்துகொண்ட அநபாயன் அமீரைச் சரேலென மறித்து, “அமீர்! காஞ்சனாதேவியால் கருணாகரர் கலிங்கத்தின் காவலரிடமிருந்து காக்கப் பட்டார். ஆகையால் நன்றியின் விளைவாக இருவருக்கும் நட்பு புலப்பட்டது. தவிர, இருவரும் கலிங்கத்தின் மன்னர்களான அனந்தவர்மன், பீமன் இவர் பகைக்கு இலக்காகி ஆபத்தில் சிக்கியவர்கள். ஆபத்து நட்பின் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது இயல்பல்லவா?” என விளக்கினான்.

இந்த விளக்கத்திலும் சரி, அதற்கு முன்பு அமீருடன் நடந்த சம்பாஷணையிலும் சரி, அநபாயன் தன்னை மிகுந்த மரியாதையுடன், ‘கருணாகரர்’ என்றும், ‘இளைய பல்லவர்’ என்றும், ‘இணையற்ற படைத்தலைவர்’ என்றும் அழைத்ததைக் கவனித்து அதை ரசிக்க முடியாத இளைய பல்லவன், மீண்டும் சம்பாஷணை தன்னையும் காஞ்சனா தேவியையும் சுற்ற முயல்வதைக் கண்டு அதைத் தடுக்கும் நோக்கத்துடன், “அநபாயர் இந்த அடிமைக்கு அளவுக்கு மீறிய மரியாதையைக் காட்டுவது அழகல்ல” என்று சற்றுக் கோபத்துடன் சொன்னான். அந்தக் கோபத்தின் காரணம் அநபாயனுக்குப் புரிந்திருந்ததால் அவன் சற்று இரைந்தே நகைத்துவிட்டுச் சொன்னான், “கருணாகரா! உன்னை மரியாதையாக அழைக்க வேண்டுமென்ற காரணத்தால் அந்த மரியாதையைக் காட்ட வில்லைதான். புதிதாக அமீரிடம் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் நேர்ந்ததால் உன் குலப் பெயர், பதவி முதலியவற்றைக் குறிப்பிட வேண்டியதாயிற்று” என்று.

இதற்கு ஏதோ பதில் சொல்ல வாயெடுத்த கருணாகர பல்லவனைத் தன் கையை உயர்த்தி மீண்டும் தடை செய்த அநபாயன், “இப்பொழுது நீங்களிருவரும் அறிமுகமாகி விட்டதால் என் மனப்பளு பெரிதும் இறங்கிவிட்டது. நம்மை அமீர் கண்டிப்பாகத் தமிழகம் அனுப்பிவிடுவான். அமீரின் தூய தமிழைக் கண்டு நீ வியந்ததைப் புரிந்து கொண்டேன் கருணாகரா! ஆனால் அமீரை நன்கு அறிந்தவர்களுக்கு அதில் வியப்பு ஏதுமிருக்காது. அமீர் ஒரு விந்தை மனிதன். அவனுக்குப் பல மொழிகள் தெரியும். சீனமொழி தெரியும். சொர் ண பூமியையும் அதை அடுத்த தீவுகளிலும் வழங்கும் மொழிகள் பலவும் தெரியும். பாதி வடமொழி பாதி தென் மொழியும் கலந்த கலிங்கத்தின் புதுமொழியும் தெரியும். அரபு மொழி தாய் மொழி. ஆனால் யவனர் மொழியைத் திறமையுடன் பேசுவான். ஏற்கெனவே சொன்னேன் உனக்கு, அரபு நாட்டிலிருந்து சீனா வரையிலுள்ள துறைமுகங்கள் அவனுக்குத் தெரியும் என்று. துறைமுகங்கள் மட்டுமல்ல, ஆங்காங்குள்ள மக்களின் மொழிகளும் தெரியும். மொழிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு துறைமுகத்திலும் இரண்டொரு அந்தரங்க நண்பர்களுமிருக்கிறார்கள். இந்தப் பாலூர்ப் பெருந்துறையில் இவன் கையர்ட்கள் முக்கியமான பல இடங்களில் பரவிக் கிடக்கிறார்கள். ஆகவே இவன் தூய்மையாகத் தமிழ் பேசுவதைப் பற்றி வியப்படையாதே. அது மட்டு மல்ல, அரும்பெரும் காரியங்களை இவன் சாதித்தாலும் வியப்படையாதே. மற்றவர்களுக்கு அசாதாரணமானது அமீருக்குச் சர்வ சாதாரணம்” என்று கூறியதன்றி அமீரின் முதுகில் மீண்டும் செல்லமாகத் தட்டிக் கொடுத்தான்.

அநபாயன் வார்த்தைகள் கருணாகர பல்லவனுக்கும் காஞ்சனாதேவிக்கும் மென்மேலும் ஆச்சரியத்தையே அளித்தன. அரபு நாட்டான் ஒருவனிடம் அநபாய சோழன் கொண்டுள்ள நம்பிக்கையைக் கண்டு பெரிதும் வியப்பெய்திய அவ்விருவரும் ஒருவரையொருவர் சில விநாடிகள் பார்த்துக்கொண்டனர். ஆனால் அமீரின் கண்கள் அதற்குப் பிறகு யாரையும் பார்க்கும் சக்தியை இழந்தன. அநபாயன் புகழ்ச்சிச் சொற்கள் அவனுக்குப் பெரும் சங்கடத்தையும் குழப்பத்தையும் அளித்திருந்தன. ஒரே ஒருமுறை மட்டும் கண்களை உயரத் தூக்கி அநபாயனைப் பார்த்துவிட்டு மீண்டும் நிலத்தைச் சில விநாடிகள் கவனித்த அமீர், அந்தச் சங்கடத்தைப் போக்கிக் கொள்ளவோ என்னவோ துரிதமாகச் செயலில் இறங்கி, “கருணாகர பல்லவரே! தேவி! நான் முதலில் காட்டியபடி போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு என் பின்னால் முதுகைக் கூனிப் பாதி ஓட்டமும் நடையு மாக வாருங்கள்” என்று கூறிப் புறப்பட ஆயத்தமானான்.

அமீர் சொன்னபடி எதற்காகக் கூனிக் குறுகி ஓட வேண்டுமென்று புரியாததால் அதை மட்டும் கேட்க முற்பட்ட இளையபல்லவன், “ஏன் அப்படி ஓட வேண்டும்?” என்று வினவினான்.

“அரபு நாட்டு வர்த்தகர்களின் அடிமைகள் ஓடும் முறை அது. நான் முன்னால் செல்ல நீங்கள் கம்பளம் மூடி ஓடி வந்தால் என் அடிமைகளில் மூவர் என்னைப் பின் தொடருவதாக இந்த நகர மக்களும் கலிங்க வீரர்களும் நினைப்பார்கள். தோப்பு முகப்பைத் தாண்டியதும் நீங்கள் அந்த முறையைப் பின்தொடர்ந்தால் போதும். இப்பொழுது சாதாரணமாகவே செல்லலாம்” என்று அமீர் விளக்கிவிட்டுக் குடிசைக் கதவைத் திறந்துகொண்டு அவர்களை உடன்வர சைகை செய்து வெளியே சென்றான். அவன் கூறியபடியே அநபாயன், கருணாகரன், காஞ்சனாதேவி மூவரும் தலையிலிருந்து கால்வரை முக்காடிட்ட கம்பளங்களுடன் குடிசையை விட்டு வெளியே வந்து அமீரைப் பின்பற்றிச் சென்றார்கள்.

இரவு நன்றாக ஏறிவிட்டதால், தோப்பில் பயங்கர இருள் சூழ்ந்து கொண்டது. அந்த இருளை இன்னும் அதிகப் பயங்கரமாக அடிக்கச் சற்று தூரத்தே இருந்த கோதாவரியின் பிரவாகமும் கடலும் சேரும் இடம் பெரும் இரைச்சலைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தது. நல்ல ஸ்வரத்துடன் கூவும் பட்சிகள் அந்தத் தோப்பிலிருந்தும், அவை அதிகமாகச் சப்திக்காமல் ஏதோ ஓரிரு ஆந்தைகள் மட்டும் அலறியது பயங்கரத்தை உச்சிக்குக் கொண்டு போயிருந்தது. அந்த இருட்டையும் பயங்கரத்தையும் சிறிதும் லட்சியம் செய்யாமல் அமீர் சர்வ சகஜமாக அந்த அடர்ந்த தோப்பில் நடந்து சென்றான். அசையக்கூட முடியாத பிரும்மாண்டமான சரீரத்தைத் தாங்கிய அமீர் நடந்த வேகம் இளைய பல்லவனைப் பெரும் ஆச்சரி யத்தில் அமிழ்த்தியது. அவ்வப்பொழுது பின் வருபவர்களை அமீர் பார்வையிட்டபோது அத்தனை இருட்டிலும் காட்டுப் பூனையின் கண்களைப்போல் பளிச்சிட்ட அமீரின் விழிகளைக் கண்ட இளையபல்லவன் காட்டுப் பூனைகளுக்குள்ள தந்திர நடையும் திருப்பமும் அமீரின் கால்களிலிருந்ததைக் கண்டு, ‘அநபாயர் நட்புக் கொண்டிருப்பது சாதாரண மனிதனையல்ல’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

அமீர் வழிகாட்டி முன்செல்ல, அவனுக்குப் பின்னால் அநபாயன் செல்ல, அநபாயனுக்குப் பின்னால் இளைய பல்லவனும் காஞ்சனாதேவியும் அக்கம் பக்கத்தில் நடந்தார்கள். அமீரின் நடை வேகம் அதிகமாயிருந்ததால் சில சமயங்களில் காஞ்சனாதேவி இஷ்ட விரோதமாக அரை ஓட்டமும் அரை நடையுமாகவே செல்ல வேண்டியிருந்தது. அப்படி மற்றவர்களைப் பிடிக்கச் சற்று துரித நடையைக் காட்டியபோதெல்லாம் அவள் அழகிய சரீரம் பக்கத்தே நடந்த இளையபல்லவன் உடலுடன் மோதியது. அக்கம் பக்கத்திலிருப்பவர்களே சரியாகத் தெரியாத அந்த இருட்டில், முன்னே செல்பவர்கள் பின்னே வருபவர்களைப் பார்க்க முடியாதென்ற தைரியத்தில் காஞ்சனா தேவியின் இடது கையும் கருணாகர பல்லவனின் வலது கரமும் அடிக்கடி ஒன்றுபட்டு ஒன்றுபட்டுப் பிரிந்து கொண்டிருந்தது. அந்த அசாதாரண இருட்டு, அவர்கள் இருந்த அபாய நிலை, இந்த இரண்டையும் லவலேசமும் நினைத்துப் பார்க்காமல் ஏதேதோ எண்ணங்களில் உள்ளங்களை அலையவிட்டுக் கொண்ட அந்த இருவரையும் திரும்பிப் பாராமலே தீவிரமாகத் தோப்பில் நடந்து சென்றான் அமீர்.

தோப்பின் பெருமரங்கள் இலைகளை நிரம்ப உதிர்த் திருந்ததால் பாதை மெத்து மெத்தென்றே இருந்ததென்றாலும் இரண்டொரு சுள்ளிகள் கால்கள் இடறி வருத்தவே செய்தன. அப்படிப் பாதங்களில் சுள்ளிகள் தட்டுப்பட்ட சமயங்களில் காஞ்சனாதேவியைச் சட்டென்று தன்னை நோக்கி இழுத்துக் கொண்டு நடந்தான் இளையபல்லவன். காஞ்சனாதேவியின் பஞ்சுப் பாதங்களுக்கு அந்தச் சுள்ளிகள் தைத்தது பெரும் வேதனையாக இருந்தது. அந்தத் துன்ப வேதனை அதிகமா அல்லது இளைய பல்லவன் அதைச் சாக்கிட்டுத் தன்னை வலது கையால் இழுத் தணைத்த இன்ப வேதனை அதிகமா என்பதை ஊகிக்க முடியவில்லை கடாரத்துக் கட்டழகிக்கு. அப்படித் துன்பமும் இன்பமும் கலந்ததால் ஏற்பட்ட விநோத உணர்ச்சி களுக்கு இலக்காகிக் கொண்டே நடந்தாள் அவள்.

நெடுந்தூரத்திற்கு ஒரு தடவை குறுக்கிட்ட ஓரிரு குடிசைகள் வீசிய தீபங்களின் சிற்றொளியில் மட்டும் சற்று நிதானப்பட்ட அந்தக் காதலரிருவரும் மற்ற சமயங்களில் உள்ளக் கிளர்ச்சியுடனேயே அமீரைப் பின்பற்றினர். அப்படி ஒரு நாழிகை நடந்து சென்றதும் தோப்பின் முனை வந்துவிடவே அமீர் சரேலெனத் திரும்பி, “இன்னும் சிறிது தூரம் நாம் பாலூரின் சிறு வணிகர் வீதியில் நடக்கும் படியிருக்கும். நான் சொன்னது நினைப்பிருக்கட்டும்” என்று கூறி, தோப்பைக் கடந்து வீதிக்குள் நுழைந்தான்.

அமீர் அந்த வீதிக்குள் நுழைந்ததுமே தனது கம்பளத் தைப் பலமாக இழுத்து முகம் தெரியாமல் முக்காடிட்டுக் கொண்ட அநபாயன் குனிந்து, நடையும் ஓட்டமுமாகச் செல்லத் துவங்கினான். அவன் காட்டிய முறையை மற்ற இருவரும் பின்பற்றவே மூன்று அடிமைகள் பின்னால் ஓடி வரச் செல்லும் பெரு வணிகனென அமீர் அந்த வீதியில் நடந்து சென்றான். வீதியின் வீடுகளில் தீபங்கள் அப்பொழுது நன்றாக எரிந்துகொண்டிருந்தன. அடிமைகளுடன் சென்ற அமீரைப் பலரும் விசாரிக்க ஆரம்பித் தார்கள். அவர்களுக்கெல்லாம் தகுந்தபடி பதில் சொல்லிக் கொண்டும் பெரிதாக இடி இடியென அடிக்கடி நகைத்துத் தன் மகிழ்ச்சியைக் காட்டிக்கொண்டு சர்வசகஜமாக அமீர் சொன்னானாலும் அவன் கண்கள் மட்டும் அக்கம் பக்கத்தை மிகக் கூர்மையுடன் ஊடுருவி நோக்கிக் கொண் டிருந்தன. சில நிமிடங்களுக்கொருமுறை அந்த வீதியிலும் கலிங்கத்தின் காவல் வீரர்கள் புரவியில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கும் அடிக்கடி தலைவணங்கியும் தன் இரு கரங்களையும் உயர்த்தி உயர்த்தி மரியாதையைக் காட்டிக் கொண்டும் அடிமைகளையும் தனது தடித்த குரலால் அடிக்கடி விரட்டியும் நடந்து சென்ற அமீர் அந்தச் சிறுவணிகர் வீதியிலிருந்து பெரு வணிகர் வீதிக்குள் திரும்பினான். அந்த வீதியைக் கடந்ததும் கருணாகர பல்லவன் ஓரளவு பிரமிப்பையடைந்தானானாலும் அதைவெளிக்குக் காட்டாமல் உள்ளத்தில் மட்டும் பெரும் சந்தேகத்துடன் நடந்து சென்றான். அந்தப் பெரு வணிகர் வீதியை ஒருமுறை வலம் வந்த அமீர் மீண்டும் சிறு வணிகர் வீதியை நோக்கித் திரும்பியது இன்னுமதிக வியப்பை அளித்தது இளைய பல்லவனுக்கு. ‘எதற்காக இந்த அமீர் திரும்பத் திரும்ப வீதிகளைச் சுற்றுகிறான்’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட இளைய பல்லவன் விடை காணாமல் தவித்தான். அவன் தவிப் பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத அமீர் ஆங்காங்கு ஒவ்வொரு வீட்டுக்கெதிரில் நின்று குரல் கொடுத்து உள் ளிருந்த வர்த்தகர்களைக் கூப்பிட்டு ஏதோ வர்த்தக சம்பந்தமாக வெவ்வேறு மொழிகளில் பேசிவிட்டு நடந்தான். இப்படி நடந்து மீண்டும் சிறுவணிகர் வீதியிலிருந்து ஒரு வீட்டுக்கெதிரில் வந்ததும், “உம், போங்கள் உள்ளே” என்று இரைந்த குரலில் கூவினான் பின்னால் வந்த மூவரையும் நோக்கி.

மூவரும் அந்த விடுதிக்குள் நுழைந்தனர். அந்த விடுதிக்குள் நுழைந்ததும் கதவைத் தாளிட வேண்டா மென்று அங்கிருந்த அடிமைகளைக் கண்களாலேயே எச்சரித்த அமீர், அநபாயனையும் மற்ற இருவரையும் அந்த விடுதிக்குள் அழைத்துச் சென்றான். அந்த விடுதி வெளிப் பார்வைக்குக் குறுகலாயிருந்தேயொழிய உள்ளே பல கட்டுகளை உடையதாகவும் விசாலமாகவும் இருந்தது. இரண்டு மூன்று கட்டுகளைத் தாண்டியதும் அங்கிருந்த அடிமைகளில் ஒருவனை விளித்த அமீர், “அவர் வந்து விட்டாரா?” என்று வினவினான்.

“வந்துவிட்டார்” என்று பதிலிறுத்தான் அடிமை.

“எங்கிருக்கிறார்?”

என்று மீண்டும் வினவினான் அமீர்.

“தங்கள் அறையில்” என்றான் அடிமை.

இதைக் கேட்ட அமீர், அநபாயனை நோக்கித் திரும்பி, மகிழ்ச்சி ததும்பும் விழிகளை அவன்மீது நிலைக்க விட்டு, “அநபாயரே! நமக்கு அதிர்ஷ்டம்தான். அவர் இத்தனை சீக்கிரம் வருவார் என்று நான் நினைக்க வில்லை” என்று கூறி உள்ளே நடந்தான். அநபாயன் ஏதோ புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்துவிட்டு அமீரைத் தொடர்ந்து சென்றான். ஏதும் புரியாமலே மற்ற இருவரும் முன்னே சென்றவர்களைத் தொடர்ந்தனர். இன்னும் இரண்டு கட்டுகளைத் தாண்டிய பின்பு தனது அறையை அடைந்த அமீர், மற்றவர்களை முன் செல்லச் சைகை காட்டித் தான் மட்டும் கடைசியில் நழைந்தான். அங்கு காத்திருந்த மனிதன் வந்தவர்களைக் கண்டதும் முதலில் சந்தேகத்துடன் விழித்தான். கடைசியில் நுழைந்த அமீரைக் கண்டதும் அவன் முகத்தில் சந்தேகச் சாயை மறைந்து இதழ்களில் புன்முறுவலொன்று படர்ந்தது. அமீரின் உவகை கட்டுக்கடங்காததாயிற்று. அந்த மனிதனைக் கண்டதும் ஏதோ பெரும் புதையலைக் கண்டுவிட்டவன் முகம்போல் பிரமிப்பும் உவகையும் திருப்தியும் கலந்து ஜொலித்தது அமீரின் முகம். அவன் கண்களில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

Previous articleRead Kadal Pura Part 1 Ch16 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch18 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here