Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch18 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch18 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

124
0
Read Kadal Pura Part 1 Ch18 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch18 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch18 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 18 : சீன சோதிடம்.

Read Kadal Pura Part 1 Ch18 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

சிறு வணிகர் வீதியிலிருந்த தனது பெரு விடுதியின் நான்காவது கட்டின் உட்புற அறைக்குள் நுழைந்த அரபு நாட்டு அமீர் அங்கு தனக்காகக் காத்திருந்த அந்தப் புது மனிதனைக் கண்டதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி, “வரவேண்டும்; வரவேண்டும். நீங்கள் இந்த ஊருக்கு வந்து வருஷங்கள் இரண்டாகின்றன. ஏதோ எங்களைப் பிடித்த நல்ல காலம் இந்தச் சமயத்தில் நீங்கள் இந்தத் துறை முகத்தில் காலடி வைத்திருக்கிறீர்கள்” என்று முகமன் கூறி வரவேற்றதன்றி, பின்புறம் திரும்பி அநபாயனை நோக்கி, “அநபாயரே! நான் கூறிய நண்பர் இவர்தான். இவர் நினைத்தால் முடியாத காரியம் உலகத்தில் கிடையாது. நேற்றுக் கடற்கரைக்குப் போயிருந்தபோது தற்செயலாக இவரைச் சந்தித்தேன்” என்று அநபாயனுக்கு வந்த மனிதனை அறிமுகப்படுத்தினான். பின்பு பின்னால் வந்த மற்ற இருவரையும் பார்த்து, “இனி அந்த அடிமை வேடக்கம்பளங்கள் தேவையில்லை. எடுத்துவிடலாம். எல்லோரும் சற்றுச் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளலாம்” என்று கூறி, அங்கிருந்த ஆசனங்களையும் மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினான்.

அமீரின் வீட்டு வெளிப்புறத்தைப் பார்க்கும் யாரும் அத்தகைய ஓர் அறை அந்த வீட்டிற்குள் இருக்க முடியும் என்று சொப்பனமும் காண முடியாத அளவுக்கு அத்தனை பெரியதாயிருந்ததன்றி, சிறந்த மஞ்சங்களும், படாடோபத்தைக் குறிக்கும் பல்வேறு பொருள்களும் நிரம்பியதால் ஏதோ ஒரு சிற்றரசனின் அந்தரங்க அறை போலவே அது துலங்கியதைக் கண்ட கருணாகர பல்லவன், அமீர் பெரிய நுழைநரியென்பதைப் புரிந்து கொண்டான். அது மட்டுமல்லாமல் தாங்கள் தாண்டி வந்த முதல் மூன்று கட்டுகளிலும் பலப் பலவிதமான வணிகப் பொருள்களும் பெரிய பெரிய மரப் பெட்டிகளும் பொதி மூட்டைகளும் நிரம்பிக் கிடந்ததையும் ஏராளமான அடிமைகள் சதா அப்புறமும் இப்புறமும் நடமாடிக் கொண்டிருந்ததையும் கவனித்திருந்த கருணாகர பல்லவன், முன்னால் பார்ப்பதற்கு மிகச் சிறிதாகத் தெரியும் அந்த வீடு உண்மையில் ஒரு பெரும் வர்த்தகசாலை என்பதையும் சந்தேகமற அறிந்துகொண்டான். தவிர முகப்பில் சிறியதாயிருந்த வீடு உள்ளே போகப் போகக் கட்டுக்குக் கட்டு விரிந்து நான்காவது கட்டு மிகப் பெரியதாயிருந்த படியாலும், முதல் மூன்று கட்டுகளில் சதா அடிமைகளின் நடமாட்டம் இருந்ததாலும் நான்காவது கட்டில் எது நடந்தாலும் கண்காணிப்பது நடவாத காரியமென்பதையும் தெரிந்து கொண்ட கருணாகர பல்லவன், ‘இந்த அமீரின் நட்பு அநபாயருக்கு எப்படிக் கிடைத்தது?” என்று தனக்குள் எண்ணமிட்டான். அந்த எண்ணச் சூழலில் சிக்கிய வண்ணமே அமீர் காட்டிய மஞ்சமொன்றில் அமர்ந்து புதிதாக வந்த மனிதனை நோக்கித் தன் கண் களை உயர்த்தினான்.

அந்த மனிதனின் சின்னஞ்சிறிய கண்களும், தட்டை முகமும் சப்பை மூக்கும் அகன்று தடித்த உதடுகளும் லேசாக மஞ்சளோடிய சரும நிறமும், ‘ப’ என்ற எழுத்தைக் கவிழ்த்து எழுதியதுபோல் தெரிந்த மீசையும் அவன் சீன நாட்டவன் என்பதைத் தெளிவுபடுத்தின. சீன இனத்தைச் சேர்ந்ததால் மிகவும் குள்ளமாக இருக்க வேண்டிய அந்த மனிதன் அதிகக் குள்ளமாயிராமல் சுமாரான உயரத்துட னிருந்ததால், சில சமயங்களில் புகாருக்கு வரும் வட சீனாவின் மங்கோல் ஜாதியும் சீனமும் இணைந்த இரட்டை ஜாதி வகையைச் சேர்ந்தவனா யிருக்கலாம் என்று நிர்ணயம் செய்தான் இளைய பல்லவன். வந்த மனிதன் கைகள் பார்வைக்கு மெல்லியவை யாயிருந்தாலும் எலும்புகளும், நரம்புகளும் வயிரம் பாய்ந்த நல்ல உறுதியையும் பலத்தையும் காட்டியதைக் கண்டு அந்த மனிதன் பெரு வீரனாயிருக்க வேண்டுமென்பதையும் உணர்ந்து கொண்டான். எல்லாவற்றையும் விட இளைய பல்லவன் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தவை அந்த மனிதனின் சின்னஞ்சிறிய கண்கள். மஞ்சள் நிறக் கன்னத்துக்கு நேரே மேலே தெரிந்த அந்த இரு சிறு கண்களும் மிகக் கூர்மை யான ஈட்டி முனைகளைப் போல் பளிச்சிட்டதன்றிப் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தன. ஆனால் கண்களில் துளிர்த்த அழகு பயங்கர அழகாயிருந்தது. நம்பத்தகாத அளவுக்கு வஞ்சகம் கலந்த அழகாகத் தோன்றியது இளைய பல்லவனுக்கு.

இத்தனைக்கும் அந்த மனிதனின் ஆராய்ச்சி இளைய பல்லவன் ஆராய்ச்சியைப்போல் நீண்ட நேரம் பிடிக்காமல் விநாடி நேரத்தில் முடிந்துவிட்டதையும், சற்றே அப்புறமும் இப்புறமும் திரும்பி உள்ளே நுழைந்தவர்கள் அனைவரையும் அந்தக் கண்கள் அளவெடுத்து ஒரு முடிவுக்கு வந்து விட்டதையும் அநபாயன் கவனித்தான். அந்தப் புது மனிதன் அதிகமாக நம்பத் தகுந்தவன் இல்லை யென்றாலும் தங்களைப் பாலூர்ப் பெருந்துறையிலிருந்து வெளியேற்ற அவனைவிடச் சிறந்த ஒரு மனிதனைக் கண்டு பிடிப்பது கஷ்டமென்பதையும் புரிந்துகொண்ட அநபாயன், அந்தச் சீனனைவிடத் துரிதமாகத் தனது ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு அமீரை ஏறெடுத்து நோக்கினான். தன்னுடன் வந்த மூவரையும் உட்காரச் சொல்லிவிட்டு சீனனையும் அமரச் சொன்ன அமீர், தான் மட்டும் ஆசனத்தில் அமராமல் மற்றவர் முகங்களை உற்று நோக்கி அவர்கள் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்டானானாலும் அதை வெளிக்குக் காட்டாமல், அநபாயனை நோக்கி, “அநபாயரே! இவரை நீங்கள் அறியமாட்டீர்கள். இவர் என் குருநாதர்” என்று அந்தச் சீனனுக்கும் தனக்குமுள்ள உறவை விளக்கினான்.

இதைக் கேட்ட அந்தச் சீனன் தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் தலை தாழ்த்தி அநபாயனுக்கு வணக்கம் செலுத்தினான். அநபாயனும் பதிலுக்குத் தலை தாழ்த்தி வணங்கினானாலும் அவன் முகத்தில் வியப்பின் குறி பெரிதும் படரலாயிற்று. வந்த மனிதன் எத்தனை அசகாய சூரனாயிருந்தாலும் அவன் வயதில் தன்னையும் கருணாகரனையும் விடக் கொஞ்சமே அதிக மென்பதையும், அப்படியிருக்கப்பாதி வயதைத் தாண்டியுள்ள அமீருக்கு அவன் எந்தவிதத்தில் குருவாயிருக்க முடியுமென்பதையும் அறியாததால் அந்த வியப்பு குரலிலும் பாயக் கேட்டான், “இவர் உன் குருவா?” என்று.

அநபாயன் வியப்பைக் கவனிக்கத் தவறாத அமீர், “வியப்படையக் காரணமிருக்கிறது அநபாயரே! இந்த வாலிபர் எப்படி எனக்கு குருவாயிருக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள். வயதைக் கண்டு இவரை எடை போடாதீர்கள். முதிர்ச்சி அனுபவத்திலிருக்கிறது” என்றான்.

“எதில் அனுபவம் இருக்கு?” என்று சம்பாஷணைக் குள் புகுந்தான் கருணாகர பல்லவன்.

“மரக்கலப் போரில் இவரிடம்தான் நான் மரக்கலம் ஓட்டும் பயிற்சியையும், மரக்கலங்களைப் போரில் நடத்தும் முறைகளையும் பயின்றேன்” என்றான் அமீர்.

“எப்பொழுது பயின்றாய் அமீர்?” என்று அநபாயன் வினவினான்.

“சீன நாட்டில் அடிமையாயிருந்தபோது” என்று பதிலளித்தான் அமீர்.

“இவருக்கு அப்பொழுது வயது என்ன இருக்கும்?” இப்படி எழுந்தது கருணாகர பல்லவனின் கேள்வி.

“சுமார் பதினைந்து இருக்கலாம்” அமீரின் பதில் திட்டமாக வெளிவந்தது.

“அமீர் உண்மையைத்தான் சொல்லுகிறானா? அல்லது ஏதாவது கதை திரிக்கிறானா? பதினைந்து வயது சிறுவனாவது, மரக்கலம் நடத்துவதாவது! நடக்கிற காரியமா?” என்று உள்ளுக்குள்ளேயே எண்ணமிட்ட அநபாயனின் முகத்திலிருந்தே விஷயத்தைப் புரிந்துகொண்ட அமீர், தொடர்ந்து சொன்னான்: “அநபாயரே! இந்த வாலிபன் இந்த இளவயதில் மரக்கலத்தை நடத்தும் திறமை வாய்ந்திருப்பதைக் கண்டு பிரமிக்க வேண்டாம். சின்னஞ்சிறு வயதிலிருந்தே சீனத்துக் குழந்தைகள் நாட்டுக்குத் தேவையான தொழில்களிலெல்லாம் பயிற்சியளிக்கப்படுகிறார்கள். வயது வந்த மாலுமிகள் எட்டு பத்து வயதுச் சிறுவர்களைத் தங்களுடன் படகுகளில் ஏற்றிக்கொண்டு பெரும் அலைகளும் சுழல்களும் உள்ள சீனக்கடலில் ஓடுவதை நீங்கள் இன்றும் பார்க்கலாம். அந்தச் சிறுவர்கள் படகுகளைச் செலுத்துவதும் சீனக் கடலில் சர்வசாதாரணக் காட்சி. இருபது வயதுக்குள் திறமையுள்ள மாலுமிகளாகத் திகழும் கடலோடிகள் சீனாவில் மிக அதிகம். அத்தகைய மாலுமிகளில் தலை சிறந்தவர் என் நண்பர்.

பத்து வருடங்களுக்கு முன்பு நான் சீன நாட்டு வர்த்தக னிடத்தில் அடிமையாயிருந்த போது என்னை விலைக்கு வாங்கியதன்றி, தமது மரக்கலத்தில் என்னை ஏற்றிச் சென்று மரக்கலமோட்டும் பயிற்சியையும் அளித்தார். இந்த வயதிற்குள் அவர் செய்துள்ள வாணிபம் பலத்தது. இவர் செய்துள்ள கடற்போர்கள் பல. இந்த அடிமை அவற்றில் பங்கு கொண்டிருக்கிறேன். இவர் பெயரை அறியாதகடலோடி அரபு நாட்டிலிருந்து சீனம் வரை யாருமே இல்லை . “

இந்த வார்த்தைகளை உணர்ச்சி ததும்பப் பேசினான் அமீர். அந்தச் சீனநாட்டவன் கதையை அவன் சொல்லிக் கொண்டுபோன சமயத்தில் அவன் பயங்கரமான விழிகள் கிட்டத்தட்ட கண்ணீர் மல்கும் நிலையை அடைந்து விட்டதையும் குரல்கூட அதிகம் தழுதழுத்து விட்டதையும் கவனித்த அநபாயனும், கருணாகர பல்லவனும், காஞ்சனா தேவியும்கூட அவன் உள்ள நெகிழ்ச்சியையும், சீன நாட்டவனிடம் அவனுக்கிருந்த பக்தியையும் கண்டு பிரமி ப்படைந்தார்கள். இத்தனைக்கும் அந்தச் சீனத்தான் முகத்தில் மட்டும் உணர்ச்சி ஏதுமில்லை. ஏதோ சாதாரண விஷயம் பேசப்படுவதுபோல் அதைப்பற்றிச் சிறிதும் சட்டை செய்யாத அந்த முகத்திலிருந்த சிறிய கண்கள் மட்டும் விஷமத்துடன் இருமுறை அசைந்தன. மிக மெல்லியதாய் இருக்கிறதோ அல்லவோவென்று சந்தேகப் படும்படியாய் இருந்த அவன் புருவங்களிரண்டும் சிறிது சுருங்கின. மேற்கொண்டு ஏதோ சொல்லப்போன அவரை ஏதும் பேச வேண்டாமென்பதற்கு அறிகுறியாக அவன் மெல்லிய வலது கரம் எழுந்து தடை செய்தது. “என் புராணம் போதும் அமீர். நாம் செய்ய வேண்டியது என்ன வென்பதைப் புரிந்துகொள்வோம்” என்று அதிகாரத் தோரணையில் சொற்களை அவன் உதடுகள் உதிர்த்தன.

அதற்கு மேலும் பேசாதிருப்பது மரியாதைக்கு அறி குறியாகாது என்று நினைத்த அநபாயன், “சீனத்தில் இந்த வயதில் இத்தனை சிறந்த மாலுமியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கள் புராணத்தை அமீர் சொன்னதில் தவறு இல்லை. புராணம் சுவையாகத்தானிருக்கிறது” என்றான்.

சீனத்தான் இதழ்களில் புன்முறுவல் படர்ந்தது. “சுவைகள் பலதரப்பட்டவை. அவற்றைச் சுவைக்கும் சமயங்கள் தனித்தனி” என்றான் அவன்.

அவன் பேச்சுத்திறமை பெரும் வியப்பைத் தந்தது மற்றவர்களுக்கு. சீனத்தான் நுண்ணறிவு மிகச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்த அநபாயனும், இளையபல்லவனும் ஒருவரையொருவர் சில விநாடிகள் பார்த்துக் கொண்டனர். அந்தப் பார்வையைக் கவனித்த சீனனின் இதழ்களில் ஏற்கெனவே இருந்த புன்முறுவல் இன்னும் அதிகமாகப் படர்ந்தது. “உரையாடலில் வல்லவனாயிருக்கிறானே, செயலில் எப்படியோ என்ற சந்தேகம் போலிருக்கிறது உங்களுக்கு” என்று சொல்லி மெள்ளச் சிரிக்கவும் செய்தான் சீனன்.

“அப்படி நினைக்கவில்லை நாங்கள்” என்றான் இளையபல்லவன்.

“ஏன்?” சீனன் கேள்வி மீண்டும் திடமாக எழுந்தது.

“எதற்காக நினைக்க வேண்டும்?” என்று பதிலுக்குக் கேள்வியை வீசினான் இளையபல்லவன்.

“சீனத்தில் நாங்கள் வாய்ச்சொல் வீரரை மதிப்பதில்லை. செயல் வீரரைத்தான் மதிப்போம். “

“ஏன், இரண்டிலும் வல்லவர்கள் கிடையாதா?”

“அநேகமாகக் கிடையாது. அதிகமாகப் பேசுபவன் எந்தச் செயலையும் திறமையுடன் செய்ய முடியாது. செயல் குறையும்போதுதான் நாக்கு நீளுகிறது. “

“அப்படியா?”

“ஆமாம். எங்கள் நாட்டில் தொழில் செய்யும் குழந்தைகள் தொழில் புரியும் சமயங்களில் பேசினால் உடனே தண்டிப்போம். நான் மரக்கலப் பயிற்சி பெற்றபோது அலுவல் சமயத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசியதற்காகப் பலமுறை சவுக்கடி பட்டிருக்கிறேன். பயிற்சி சமயத்தில் அலுவல் மீது மட்டுமே நாங்கள் கண்ணும் கருத்துமாயிருக்க வேண்டும். இது எங்கள் தலைவர்கள் விதிக்கும் விதி. “

சீனன் வார்த்தைகள் திடமாகவும் பெருமையுடனும் வெளிவந்தன. தனது நாட்டின் பயிற்சி முறைகளைப் பற்றி அவன் கொண்டிருந்த அசாத்திய மதிப்பையும் அவன் சொற்கள் சந்தேகமின்றிச் சுட்டிக்காட்டின. தமிழகமும் பாரதமும் சீனநாட்டின் அளவுக்கு உயர்ந்து ஏழ் கடல்களிலும் தனது கீர்த்தியைப் பரப்ப வேண்டுமானால் மரக்கலப் பயிற்சியிலும் தொழில் புரிவதிலும் அவர்களுக்குள்ள வெறி நமது மக்களுக்கும் அவசியம் என்று அநபாயன் எண்ணினான். என்றாவது சோழ அரியணையில் தான் ஏறும்பட்சத்தில் ராஜராஜனும், ராஜேந்திரனும் நிறுவிய கடற்படையைப் பத்து மடங்கு பலமுள்ளதாக்கி, அவற்றைக்கொண்டு சீனநாட்டிலும் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற ஆசையும் அவன் உள்ளத்தில் படரவே அவன் கண்கள் தமிழக விஸ்தரிப்பின் சாம் ராஜ்யக் கனவில் சஞ்சரித்தன.

அநபாயன் கண்களில் விரிந்த கனவின் உண்மைக் கருத்து அந்தச் சீனன் சிந்தைக்கு நிமிட நேரத்தில் புலப் பட்டுவிட்டதால் அவன் அநபாயனை அதிசயத்துடன் நோக்கிவிட்டுச் சொன்னான், “உங்கள் கனவு பலித்தால் நாட்டுக்கு நல்லது” என்று.

அந்த வார்த்தைகளால் கனவுத் திரையைக் கிழித்துக் கொண்ட அநபாயன் கேட்டான், “என்ன சொல்கிறீர்கள்?” என்று.

“உங்கள் கண்களில் கனவு விரிந்ததைக் கண்டேன்” என்றான் சீனன்.

“என்ன கனவு?” “சாம்ராஜ்யக் கனவு. ” “நான் ஏன் கனவு காண வேண்டும்?”

“நீங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களா யிருப்பதால். “

“நான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனென்று யார் சொன்னது உங்களுக்கு?”

“முகம் சொல்லுகிறது. ” “முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறதா?”

“எழுதி ஒட்டவில்லை. ராஜகளை இருக்கிறது. முகத்தில் சிந்தனை நரம்பு ஒன்று குறுக்கே ஓடுகிறது. “

“நீங்கள் சொல்வது விளங்கவில்லை” என்றான் அநபாயன்.

சீனன் ஆசனத்திலிருந்து எழுந்தான். “விளங்கச் சொல்கிறேன் கேளுங்கள். ஏதோ நான்கு பேர்களைப் பாலூரிலிருந்து தப்புவித்து அழைத்துப் போகவேண்டுமென்று அமீர் சொன்னான். சரியென்று ஒப்புக்கொண்டேன். ஒப்புக் கொண்ட சமயத்தில் அந்த நான்கு பேரில் மூவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பவர் களென்பதை நான் உணரவில்லை. உங்கள் மூன்று பேரைத்தான் குறிப்பிடுகிறேன். ஏனென்றால் நான்காவது பெயரை நான் இன்னும் பார்க்கவில்லை. அவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராயிருக்கலாம். ஆனால் நீங்கள் மூவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்… ஆனால்… ” என்று ஏதோ சோதிடம் சொல்வது போல் சொல்லிக் கொண்டு போனவனைத் தடுக்க அநபாயன் ஆசனத்திலிருந்து எழுந்தான். “எழுந்திருக்க வேண்டாம். உட்காருங்கள். எனக்கு மிக விளக்கமாகப் புரிகிறது. நீங்கள் மூவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் மற்ற இரு வருக்கும் அரசு பெறும் ராசி முகத்தில் இல்லை . உங்கள் முகத்தில் குறுக்கே ஓடும் அந்தப் பச்சை நரம்பு ஒரு காலத்தில் பெரும் அரசை நீங்கள் ஏற்பீர்கள்; உங்களிடம் அந்த அரசு விரியும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஆம், திட்டமாகச் சுட்டிக் காட்டுகிறது. சந்தேகமேயில்லை” என்று கூறிய சீனன், அநபாயனை ஊடுருவிப் பார்த்தான்.

அவன் சொற்களால் வியப்படைந்த அநபாயன், ஆசனத்தைவிட்டுத் திடீரென எழுந்து அமீரை நோக்கினான். “அமீர்! இவர் யார்? பெயரென்ன?” என்று வினவினான் குரலில் சந்தேகம் ஒலிக்க.

அவர் பெயரைச் சொன்னான். பெயரைச் சொன்னானா? அல்லது இடியைத்தான் எடுத்து வீசினானா? இடியைத்தான் வீசி இருக்கவேண்டும். அமீரின் பதிலைக் கேட்ட மற்ற மூவரும் விவரிக்க இயலாத அத்தனை அதிர்ச்சியை அடைந்தனர். எந்தச் சமயத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த அபாயத்திலும் அதிர்ச்சியடையாத அநபாயனே அந்தப் பெயரைக் கேட்டு அதிர்ச்சி யடைந்தான்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch17 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch19 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here