Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch19 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch19 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

127
0
Read Kadal Pura Part 1 Ch19 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch19 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch19 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 19 : கனவில் கதை.

Read Kadal Pura Part 1 Ch19 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

மூன்றே எழுத்துகள் கொண்ட அந்தச் சீனக் கடலோடியின் பெயரை அரபு நாட்டு அமீர் உச்சரித்த மாத்திரத்தில், அந்த அறையில் தங்களிடையே உதிர்ந்தவை மூன்று எழுத்துகளா அல்லது மூன்று நெருப்புத் துண்டங்களா என்பதை நிர்ணயிக்க முடியாமல் பெரும் பிரமிப்பை அடைந்த மற்ற மூவரும், தங்களைப் பாலூர்ப் பெருந் துறையிலிருந்து தப்புவிக்க இந்த மனிதனைத் தவிர அமீருக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா என்ற நினைப் பால் ஓரளவு சீற்றமும் அடைந்தனர். அந்த மூன்று எழுத்துகளை அமீர் அன்றுதான் உச்சரித்தானென்றாலும்,அந்த எழுத்துகள் துறைமுகங்களுள்ள எந்த நாட்டுக்கும் புதிதல்லவாகையால் அந்த எழுத்துத் தொடரைப் பெயராகத் தாங்கியுள்ள மனிதனின் பிரபாவம் சென்ற சில ஆண்டுகளாக வெளிநாடு சென்று வந்த சகல மாலுமிகள் வாயிலும் சதா புகுந்து புறப்பட்டுக் கொண்டுதானிருந்தது. வெளிநாடு சென்று வந்த தமிழகத்தின் வணிகர் சிலர் அந்தப் பெயரைப் பயத்துடன் உச்சரித்தனர். மற்றும் சிலர் அதைப்பற்றிப் பெருமையுடன் கதைகள் பல சொன்னார்கள். ஆனால் அத்தனை கதைகளிலும் வீரத்துடன் குரூரச் செயல்களும் கலந்தே கிடந்தன. வேறு பலருக்கு அந்த மூன்று எழுத்துப் பெயருடையவன் புரியாத புதிரா யிருந்தான். ஆனால் திட்டமாகப் புரிந்த விஷயம் ஒன்று இருந்தது. அவன் எதற்கும் அஞ்சாநெஞ்சம் படைத்த பெரும் கடற் கொள்ளைக்காரன் என்பதுதான் அது. ஆகவே அகூதா* என்ற மூன்றெழுத்துச் சொல்லை அரபு நாட்டு அமீர் அந்த இரவில் உதிர்த்ததும் மற்ற மூவருக்கும், பிரமிப்பும் திகைப்பும் ஓரளவு சீற்றமும் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லையல்லவா?

அரபுநாட்டு அமீர் தனது பெயரை உச்சரித்த மாத்திரத்தில் மற்ற மூவர் முகத்திலும் தெள்ளெனப் பிரதிபலித்த உணர்ச்சிகளை அகூதாவின் சிறு ஈட்டி விழிகள் வினாடி நேரத்தில் கவனித்து விட்டனவாகையால் அவன் கண்களில் விஷ்மச் சிரிப்பின் சாயை லேசாகப் படர்ந்த தென்றாலும், இதழ்கள் மட்டும் அந்தச் சிரிப்பை தினையளவும் காட்டவில்லை. மற்றவர்களின் ஆரம்பக் குழப்பம் அடங்கச் சற்று நேரம் அளித்துவிட்டு அவன் பேச ஆரம்பித்த சமயத்திலும் அவன் சொற்கள் எந்தவித உணர்ச்சியுமின்றிச் சர்வ சாதாரணமாக வெளிவரத் தொடங்கின. “என் இந்த உடல் உங்களுக்கு அறிமுகமில்லையென்றாலும் என் பெயர் ஏற்கெனவே அறிமுகமாயிருப்பதாகத் தெரிகிறது” என்று மிகவும் சகஜமாகப் பேசினான் அந்தச் சீனக் கடலோடி.

பாதி கேள்வி போலும் பாதி ஏதோ விஷயத்தை அறிவிப்பது போலும் அகூதாவின் உதடுகளிலிருந்து உதிர்ந்த அந்தச் சொற்களுக்குக் கருணாகர பல்லவனோ காஞ்சனாதேவியோ பதில் சொல்லும் திறனை இழந் திருந்தார்களென்றாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வெகு சீக்கிரம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ளும் திறன் வாய்ந்த அநபாயன் மட்டும் அவனை ஒருகணம் தன் சீரிய விழிகளால் ஏறெடுத்து நோக்கிவிட்டு, “தங்களுக்கு அது வியப்பாயிருக்கிறதா?” என்று ஒரு கேள்வியை வீசினான்.

சீனக் கடலோடியின் சின்னஞ்சிறு கண்களில் கேள்விக்குறி எழுந்ததன்றி, “எது வியப்பாயிருக்கிறதா என்று கேட்கிறீர்கள்?” என்று உதடுகளிலிருந்தும் கேள்வி யொன்று உதிர்ந்தது.

“உங்கள் பெயர் எங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமா யிருப்பதை,” என்று அநபாயன் விளக்கினான்.

“இல்லை. வியப்பாயில்லை. சில வருடங்களாக எனக்கு எதுவும் வியப்பை அளிப்பதில்லை” என்று பதில் கூறினான் அகூதா.

இந்தப் பதில் அநபாயனுக்கு ஆச்சரியத்தை அளித்ததால் அவன் மறுபடியும் கேட்டான், “ஏன் வியப்பு என்ற உணர்ச்சி மீதே உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டதா?” என்று .

அகூதாவின் பதில் அநபாயனுக்கு மட்டுமின்றி, கருணாகர பல்லவனுக்கும் காஞ்சனாதேவிக்கும் கூட மேலும் மேலும் வியப்பையே விளைவித்தது. ஏதோ பெரும் காவியத்தை எழுதுபவன்போல் பேசினான் அந்தச் சீனக் கடலோடி. “உணர்ச்சிகளின் மீது வெறுப்பு ஏற்படுவது சாத்தியமில்லை. வெறுப்பே உணர்ச்சியின் சாயை. வியப்பு மற்றொரு சாயை. இப்படிச் சாயைகள் பல, பொறிகள் பல, உணர்ச்சியின் அலைகளில் உண்டு; அவற்றை நிறுத்த முடியாது. கடலின் அலைகளையும் நிறுத்த முடியாது. ஆனால் அந்த அலைகளில் மூழ்காதிருக்கலாம்” என்று கூறினான் அகூதா.

அகூதாவின் தீட்சண்யமான அறிவையும் தெளிவான சிந்தனையைப் பேசுவதில் இருந்த சாமர்த்தியத்தையும் கவனித்த மற்ற மூவரும் ஆச்சரிய அலைகளில் மேலும் ஆழ்ந்து போகவே செய்தனர். அந்த அலைகளிலிருந்து முதலில் மீண்ட அநபாயன் சொன்னான், “நீங்கள் பேசுவது காவியம் போலிருக்கிறது” என்று.

“உணர்ச்சியிலிருந்து காவியம் உதிக்கிறது. உண்மையி லிருந்து உணர்ச்சி உதிக்கிறது. உண்மையைச் சொன்னேன். அது உங்களுக்குக் காவியம் போலிருக்கிறது” என்றான் அகூதா.

“என்ன உண்மையைச் சொன்னீர்கள்” என்று வினவினான் அநபாயன்.

“வியப்பை நான் உதறி வருஷங்கள் பல ஆகின்றன என்று சொன்னேன், அது உண்மை. “

“ஏன் அதை உதறினீர்கள்?”

“உலகம் உதற வைத்தது. “

“உலகமா!”

“ஆம். உலகம்தான் நம்மை நல்லவனாகவும், கொடிய வனாகவும் ஆக்குகிறது. உலகத்தின் சில பகுதிகளில்தான் கடற்கொள்ளைக்காரனாக மதிக்கப்படுகிறேன். சில பகுதிகளில் நிலப்போரில் நிகரற்றவனாக மதிக்கப்படுகிறேன். சில பகுதிகளில் தெய்வமாக மதிக்கப்படுகிறேன். சில பகுதிகளில் பிசாசாக மதிக்கப்படுகிறேன். இப்படிப் பலவகை மதிப்பீடுகள் என்னைப் பற்றி ஏற்பட்டிருக்கின்றன. இப்படிப் பல வகையாக மனிதர்கள் பேசுவதை நான் செல்லுமிடங்களில் கேட்கிறேன். இந்த நானாவகை மதிப்பீடுகள் முதலில் சற்று வியப்பை அளித்தது உண்மை . ஆனால் காலமும் அனுபவமும் அந்த வியப்பை அகற்றி விட்டன” என்று அகூதா ஏதோ தன் சரித்திரத்தை விவரமாகச் சொல்லுவதுபோல் பேசினான்.

அவன் சொற்களைக் கேட்ட அநபாயன் தன் ஆசனத்திலிருந்து சற்றே எழுந்து எதிரே அமர்ந்திருந்த அந்தச் சீனக் கடலோடிமீது தன் கண்களைச் சிறிது நேரம் நிலைக்கவிட்டான். “உலகம் உங்களைப் பலபடி மதிப்பீடு செய்வது எனக்குத் தெரியாது. உங்களைப் பெரும் கொள்ளைக்காரர் என்று மட்டும் எங்கள் நாட்டு வணிகர் சொல்கிறார்கள். உங்களைப் பற்றிப் புகாரிலும், நாகப்பட்டி னத்திலும், ஏன் இந்தப் பாலூரிலும்கூட அத்தகைய வதந்தி தான் உலாவுகிறது. அதை நீங்கள் மறுக்கிறீர்களா?” என்று கேட்கவும் செய்தான் அநபாயன்.

அகூதாவின் இதழ்களில் வெறுப்புக் கலந்த இகழ்ச்சி நகையொன்று படர்ந்தது. “வதந்திகளை மறுக்க வேண்டியது அவசியமா?” என்று வினவினான் அகூதா, அந்த இகழ்ச்சி குரலில் ஒலிபாய.

“ஆதாரமற்று இருந்தால் அவசியமில்லை “அநபாயன் பதிலில் உறுதி கலந்திருந்தது.

சீனக் கடலோடியின் சின்னஞ்சிறு கண்கள் பளிச் சிட்டன. “நான் கொள்ளைக்காரன் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா தங்களிடம்?” என்று ‘ விஷமம் பூரணமாகத் தொனித்த குரலில் வினவினான் அகூதா,

அநபாயன் உடனே அந்தக் கேள்விக்குப் பதில் சொல் லாமல் இளைய பல்லவனையும் காஞ்சனா தேவியையும் ஒரு வினாடி பார்த்தான். பிறகு அமீரின் முகத்தை அவன் கண்கள் ஆராய்ந்தன. மூன்றாவதாக அவன் அகூதாவைக் கூர்ந்து நோக்கிவிட்டுச் சொன்னான்: “அகூதா! நீங்கள் யாரென்பதை நிர்ணயிக்கவோ, உங்களைப் பற்றித் தீர்ப்புச் சொல்லவோ நான் முற்படுவதாக நினைக்க வேண்டாம். ஆனால் பெரும் பொறுப்பு என்மீது சுமந்து கிடக்கிறது. அந்தப் பொறுப்பு என்னைப் பற்றியதல்ல. இதோ உட்கார்ந்திருக்கும் என் நண்பன் இளைய பல்லவனைப் பற்றியதுமல்ல. அது இளைய பல்லவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கடாரத்து இளவரசியையும் அமீரின் பாதுகாப்பிலிருக்கும் அவள் தந்தையையும் பொறுத்தது. கடாரத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த காஞ்சனா தேவியும் அவள் தந்தையும் சோழநாட்டு உதவி நாடி இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களை இங்கிருந்து சோழநாடு கொண்டு சேர்ப்பது என் கடமை. ஆகவே அவர்களைச் சோழநாடு கொண்டு செல்ல வேண்டுமானால் யாரிடம் ஒப்படைக்கலாம் என்பதைத் தீர்மானிப்பது என் கடமை யாகிறது… ”

இப்படி வாக்கியத்தை முடிக்காமல் அநபாயன் விட்டு விட்டதைக் கவனித்த அகூதா அதன் காரணத்தைச் சந்தேகமறப் புரிந்து கொண்டு விட்டதால், “ஏன் அரை குறையாக முடிக்கிறீர்கள். மேலே சொல்லுங்கள்” என்று தூண்டினான்.

அநபாயன் மேலும் சொன்னான்: “அகூதா! நாங்க ளிருக்கும் அபாய நிலை எங்களுக்குத் தெரியும். எங்களைத் தப்புவிக்க நீங்கள் முன்வந்ததை பீமனோ அனந்தவர் மனோ அறிந்தால் உங்கள் உயிருக்குத் தீங்கு நேரிடும் என்பதும் எங்களுக்குத் தெரியும். உயிரைத் திருணமாக மதித்து நீங்கள் எங்களுக்கு உதவ வரும்போது உங்களை எடை போடுவது நியாயமல்ல. இருப்பினும் சோழநாட்டு இளவரசன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ள பொறுப்பை நான் கழிக்க முடியாது. ஆகையால்தான் யோசிக்கிறேன். உங்களைப் பற்றிய வெறும் வதந்திகளை மட்டும் நம்பி நான் யோசிக்கவில்லை. உங்களைப் பற்றிய பல விஷயங்கள் எனக்குத் தெரியும். ஆகையால் தீவிர யோசனைக்கும் ஓரளவு பயத்துக்கும் இடமிருக்கிறது. “

தன்னைப் பற்றிய சந்தேகங்கள் இத்தனை அநபாய னுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தும் முகத்தில் புன்சிரிப்பைத் தவிர எந்தவித உணர்ச்சியையும் காட்டாத அகூதா, “என்னைப் பற்றி வேறு பல விஷயங்களும் தெரியுமா உங்களுக்கு” என்று கேட்டான் விஷமத்துடன்.

“தெரியும்” என்ற சொல் அநபாயன் வாயிலிருந்து மட்டுமின்றி கருணாகர பல்லவன் வாயிலிருந்தும் ஏக காலத்தில் வெளிவரவே, இளையபல்லவன் மீதும் கண் களைத் திருப்பிய அகூதா, “மிக்க மகிழ்ச்சி, மகிழ்ச்சி” என்று சொல்லித் தலை தாழ்த்தினான். அவன் தங்களுக்கு உபசார வார்த்தை சொல்லுகிறானோ அல்லது தங்களைப் பார்த்து நகைக்கிறானோ என்பதை அறிந்துகொள்ள முடியாத அநபாயனும் கருணாகர பல்லவனும் சில விநாடிகள் மௌனம் சாதித்தாலும் பிறகு மௌனத்தை இருவருமே கலைத்து ஒருவர் மாற்றியொருவர் பேச முற்பட்டார்கள்.

“நீங்கள் பிறந்த இடம் சீனாவிலுள்ள சங்கரி நதி தீரம்” என்றான் அநபாயன்.

“நூ சென் என்ற மங்கோலிய வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என்றான் இளையபல்லவன்.

“கிதான், கின் வகுப்பினர் பலரை நீங்கள் சிறை பிடித்துக் கொண்டு போய்ச் சித்திரவதை செய்திருக்கிறீர்கள்” என்று அநபாயன் கூறினான்.

“அவர்களிருப்பிடங்களைக் கொள்ளையடித்து, பெண் களையும் குழந்தைகளையும் சிறைபிடித்துக் கொண்டு போயு மிருக்கிறீர்கள். அவர்களில் பலரை அழித்துமிருக்கிறீர்கள்” என்று இளையபல்லவன் விளக்கினான்.

“இத்தகைய உங்களிடம் எப்படிக் கடாரத்து இளவரசி யையும் அரசரையும் ஒப்படைப்பேன்?” என்று வினவிய அநபாயன் மேலும் ஏதோ சொல்லப் போனதும் இடி இடி யென்று கலந்தொலித்த அமீரின் சிரிப்பும் சீனக் கடலோடி யின் சிரிப்பும் அந்த அறையை கிடுகிடுக்க வைத்தன. அந்தச் சிரிப்பினால் வெகுண்ட அநபாயன், “ஏன் சிரிக்கிறாய் அமீர்?” என்று கூறினான் அமீரை நோக்கி, தீவிழி விழித்து .

அநபாயன் சீறியதால் திடீரெனச் சிரிப்பை நிறுத்திக் கொண்ட அமீர் சொன்னான், “சிரித்தது தவறுதான்” என்று. அத்துடன் நிறுத்தாமல், “நீங்கள் என் குருநாதரைக் கொள்ளைக்காரனென்று கூறியதற்கு உண்மையில்

எனக்குக் கோபம்தான் வர வேண்டும். அதற்குப் பதில் சிரிப்பு வந்தது தவறுதான்” என்று கூறினான்.

தனது சொல் அமீருக்குப் பெரும் ஆத்திரத்தை அளித் திருப்பதை உணர்ந்துகொண்ட அநபாயன் கேட்டான், “நாங்கள் சொன்னதில் தவறு ஏதேனும் இருக்கிறதா?” என்று .

இதற்கு அமீர் பதில் சொல்லுமுன்பு சீனக் கடலோடி இடையே புகுந்து, “விவரங்களில் அதிகத் தவறு இல்லை . விளக்கத்தில்தான் இருந்தது” என்றான்.

“விவரம் வேறு, விளக்கம் வேறா?” என்று இகழ்ச்சியுடன் வினவினான் அநபாயன்.

“ஆம். விவரம் விஷயத்தைக் குறிக்கும். விளக்கம் அதற்கு வியாக்கியானத்தைக் குறிக்கும்” என்று பதில் கூறினான் அகூதா.

“உங்களைப் பற்றிய என் முடிவு தவறு என்கிறீர்களா?” என்று கேட்டான் அநபாயன்.

“தவறுதான். முற்றிலும் தவறு. சந்தேகமென்ன?” என்று அநபாயனை என்றும் எதிர்த்துப் பேசாத அமீரே சொற்களைக் காரசாரமாக உதிர்த்தான்.

இதைக் கேட்டதும் அமீர் பக்கம் திரும்ப முயன்ற அநபாயனைக் கையைச் சற்றே உயர்த்தித் தடுத்த அகூதா, “சோழ நாட்டு இளவரசே! பெரும் நாடுகளின் அல்லது பெரும் மனிதர்களின் சரித்திரங்கள் வல்லவர்களால் எழுதப் படும்போதே தவறுகள் பல புகுந்து கொள்கின்றன. அப்படியிருக்க வணிகர்கள் மூலம் உங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு நீங்கள் ‘ எப்படி எடை போட முடியும்? ஒருகாலும் முடியாது. எடைபோட முயல்வது தவறும் ஆகும். நான் பெரும் அக்கிரமக்காரன், கொள்ளைக்காரன் என்ற வதந்தி ஒருபுறமிருக்கட்டும். அப்படியானால் இந்த அமீரை நான் ஏன் அடிமைத் தளையிலிருந்து மீட்க வேண்டும்? எதற்காக மரக்கலப் போர்ப் பயிற்சி அளிக்க வேண்டும்? அமீரால் என் நாட்டுக்கோ, என் குலத்துக்கோ , என்ன பயன்? சற்று யோசித்துப் பாருங்கள்..” என்று சொல்லி அநபாயனைத் தனது சிறு விழிகளால் கூர்ந்து நோக்கினான். அந்தக் கண்களை நிர்ப்பயமாகச் சந்தித்த அநபாயனின் விழிகளில் சந்தேகத்தின் சாயை சிறிது படரலாயிற்று. ‘ஆமாம்! பெரும் கொள்ளைக் காரனான அகூதா எதற்காக அமீரிடம் இத்தனை பரிவு காட்ட வேண்டும்? கருணையற்ற உள்ளத்தில் ஒருவனிடம் மட்டும் எப்படிக் கருணை பிறக்கும்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்ளவும் செய்தான்.

அவன் முகத்தில் விரிந்த சந்தேகச் சாயையைக் கண்ட அகூதா மெள்ளப் புன்முறுவல் செய்துவிட்டுச் சொன்னான்: “பார்த்தீர்களா, சோழர்குல இளவரசே! அமீர் ஒரு சிறு உதாரணம். அதைச் சொன்னதுமே தங்கள் மனத்தில் என்னைப்பற்றிய வதந்திகள் சரியா, அல்லவா வென்ற சந்தேகம் எழுந்துவிட்டது. ஆகவே ஒரு மனிதனை வதந்திகளைக் கொண்டு எடைபோடக் கூடாது. அதுவும் பின்னால் அரசாளப் போகும் நீங்கள் எடை போடக் கூடாது” என்று.

அநபாயனின் புருவங்கள் மெள்ள நுதலின் மேற் புறத்தை நோக்கி எழுந்தன. “நான் அரசாளப் போகிறேனா?” என்றும் வியப்புடன் வினவினான்.

“நீங்கள் மட்டுமல்ல; நானும் அரசாளப் போகிறேன்” என்றான் அகூதா.

“என்ன அப்படித் திட்டமாய்ச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் அநபாயன்.

“அநீதிகளிலிருந்து புது அரசுகள் எழுகின்றன” என்றான் அகூதா.

சொன்னதன் பொருளை அகூதாவே விளக்கினான். விளக்க விளக்க வியப்பே மேலிட்டது மற்றவர்களுக்கு. கனவில் கதை கேட்பது போல் அவன் சொல்வதை அவர்கள் கேட்டனர். சோழ, கலிங்க நாடுகளின் பிற்காலத்தை அத்தனைத் தெளிவாக அந்த நாட்டவராலேயே வர்ணிக்க முடியாது என்பதை அவர்கள் சந்தேகமறப் புரிந்து கொண்டனர். அப்படிப் புரிந்துகொண்டதால் சீனக் கடலோடியிடம் இருந்த சந்தேகம் பறந்து பெரும் மதிப்பும் நம்பிக்கையுமே ஏற்பட்டன அவர்களுக்கு.

Previous articleRead Kadal Pura Part 1 Ch18 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch20 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here