Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch20 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch20 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

161
0
Read Kadal Pura Part 1 Ch20 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch20 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch20 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 20 : புலியிடம் வேதாந்தம்.

Read Kadal Pura Part 1 Ch20 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

அநீதியிலிருந்து பல அரசுகள் எழுகின்றன வென்ற பெரும் சித்தாந்தத்தைச் சர்வ சகஜமாகச் சொன்ன சீனக் கடலோடி அதன் பொருளை விளக்க முற்பட்டதும் அவன் சின்னஞ்சிறு கண்கள் பெரும் ஒளியைப் பெற்று ஜொலிக்கத் தொடங்கிவிட்டதையும், அந்த ஜொலிப்பில் பெரும் கனவும் தெள்ளிய சிந்தனையும் கலந்துறவாட முற்பட்டு விட்டதையும், விழிகளில் விரிந்த கனவு சொற்களிலும் ஓரளவு ஒளிவிட்டதையும் கண்ட அநபாயனும் மற்ற இருவரும், அவன் பேச ஆரம்பித்த சில விநாடிகளுக்குள்ளேயே தாங்கள் ஒரு கொள்ளைக்காரன் முன்பு இருக்கிறோம் என்ற எண்ணத்தை அறவே அகற்றிக் கொண்டதல்லாமல், வரலாற்றில் நிரந்தரமான இடம்பெறப் போகும் ஒரு மாவீரன் முன்னிருக்கும் மனோ நிலையும் அடைந்தனர். பேச்சைத் துவங்கிய சில விநாடி களுக்குள்ளேயே தானிருக்கும் சூழ்நிலையையும், ஏன் அருமை நண்பனான அமீரையும்கூட மறந்து பின் வர இருக்கும் வரலாற்று உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தான் அந்தச் சீனக் கடலோடி. அவன் அப்படிச் சஞ்சரிக்க ஆரம்பித்ததை அவன் முகமும் கண்களும், சில விநாடி களுக்கொருமுறை யோசனையால் சுளித்த மெல்லிய புருவங்களும் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்தன.

பேசுவதற்கு முன்பு ஏற்கெனவே ஆசனத்திலிருந்து எழுந்துவிட்ட அந்தச் சீனக் கடலோடி இரண்டு விநாடிகள் மட்டும் தன் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சிந்தனையிலும், சிந்தனையின் விளைவாக ஏற்பட்ட மௌனத்திலும் ஆழ்ந்துவிட்டுப் பிறகு பேச்சைத் துவங்கிச் சொன்னான்: “ஆம். அநீதிகளிலிருந்துதான் புது அரசுகள் பிறக்கின்றன. புது அரசுகள் என்ன, பழைய அரசுகளும் அப்படித்தான் பிறந்தன. அரசுகள் உதித்ததற்கு அநீதியே அஸ்திவாரம். அரசோ, அரசனோ இல்லாமல் மக்கள் வெறும் கூட்டங்களாகத்தான் முதலில் வாழ்ந்தார்கள். அப்பொழுது மக்களுக்குத் தேவை குறைவாயிருந்தது. தேவை குறைவாயிருந்ததால் திருப்தியிருந்தது. திருப்தியிருந்ததால் சண்டையில்லை, சச்சரவில்லை, அமைதியிருந்தது. மனிதன் மெள்ள மெள்ளத் தேவையை அதிகப்படுத்திக் கொண்டான். அதிகத் தேவை அதிருப்தியைத் தந்தது; அதிருப்தி அசூயையைத் தந்தது. அசூயை சர்ச்சையைத் தந்தது. அதை விலக்கி அமைதியாக வாழ்க்கை நடத்த மனிதக் கூட்டங்களுக்குத் தலைவன் அவசியமாயிற்று. அந்த அவசியம் தலைவனைச் சிருஷ்டித்தது. ஆரம்பத்தில் தலைவன் தேவைக்கும் கூட்டத்தின் தேவைக்கும் வித்தியாச மில்லாதிருந்தது. காலம் வித்தியாசத்தை விரிய வைத்தது. தலைவன் அரசனானான். அரசுக்குத் தனி அலங்காரங்கள் ஏற்பட்டன. தனி அந்தஸ்து ஏற்பட்டது. அத்தகைய அரசனைக் காப்பதற்கு மக்களின் ஒரு கூட்டம் தேவைப்பட்டது. அது படை என்று பெயர் பெற்றது. இப்படி ஏற்பட்ட அரசர்கள் பொதுப் பணியைத் தனித்தனி சொந்த நாடுகளாகப் பிரித்துக் கொண்டனர். இப்படிப் பிரிந்த நாடுகளில் வளர்க்கப்பட்ட சுயநலம் (இதற்குத் தேசபக்தி என்பது தற்காலப் பெயர்) நாடுகளை மோத வைத்தது. அரசர்கள் பேச்சாளர்களானார்கள். இப்படி அதிருப்தி, அசூயை, தனிப்பட்ட நபர்கள் இழைத்த அநீதி அரசுகளாகவும் பேரரசுகளாகவும் வளர்ந்தன. அந்த அரசுகளிற் சில மறைவதற்கும் சில உறைவதற்கும் அநீதிகளே காரணமாயின. உதாரணமாக உங்கள் நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். இதைப் பரதகண்டம் என்று சொல்கிறார்கள். பரதன் என்ற அரசன் ஆண்டபோது இது ஒரே அரசாக இருந்தது. இப்பொழுது சேர, சோழ, பாண்டிய, கலிங்க, சாளுக்கிய நாடுகளாகப் பலபடி பிரிந்து விட்டது. அந்த நாடுகளும் அக்கம் பக்கத்தில் ஒற்றுமையுடன் வாழ முடியவில்லை. வேங்கி நாட்டு அரியணையில் அமரவேண்டிய அநபாயர் இன்று மணிமுடியற்ற நாடோடியாகப் பாலூரில் திரிகிறார். பல போர்களைச் செய்ததால் போரில் சலிப்புற்றிருக்கும் வீர ராஜேந்திர சோழர் வேங்கியில் தலையிடாமல் அங்குள்ள அநீதியை அனுமதிக்கிறார். அந்த அநீதி காலக்கிரமத்தில் தமிழக மக்களிடையும், வேங்கி மக்களிடையும் கசப்பை உண்டு பண்ணும். காலம் அந்தக் கசப்பைப் பெரும் கனலாக்கும். அந்தக் கனல் வேங்கியிலுள்ள இந்த அரசை மாற்றிப் புது அரசை நிறுவும். அநபாயர் கண்டிப்பாய் மன்னனாவார், வேங்கிக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதற்குமே… ”

இந்த இடத்தில் அநபாயன் ஏதோ சொல்லக் குறுக் கிட்டான். அவனைப் பேச வேண்டாமென்று சைகையாலேயே தடை செய்த அகூதா மேலும் சொன்னான்: “குறுக்கிடாதீர்கள். குறுக்கிட்டால் என் சிந்தனை ஓட்டம் அறுபட்டுவிடும். நான் சொல்வதில் சந்தேகம் வேண்டாம். உங்கள் முகத்தின் குறுக்கே ஓடும் அந்தப் பச்சை நரம்பு பெரும் சாம்ராஜ்யாதிபதியைக் குறிக்கிறது. இரண்டு மூன்று நாடுகளின் ஆதிக்கமில்லாமல் யாரும் சாம்ராஜ்யாதிபதியாக முடியாது. வீரராஜேந்திரருக்கு அடுத்தபடி சோழ வேங்கி நாடுகளை நீங்கள் கண்டிப்பாக ஆளுவீர்கள். அது மட்டுமல்ல. இந்தக் கலிங்கத்தின் பிற்காலமும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. நான் ஏதோ சந்தையில் சோதிடம் சொல்பவனைப்போல் உளறுவதாக நீங்கள் நினைக்கலாம். இல்லை இல்லை சூசகங்களை நிகழ்ச்சிகளைப் பார்த்தே முடிவுகளைச் சொல்கிறேன். சீனக் கடலிலிருந்து எரித்திரியக் கடல் வரை சஞ்சரித்திருக்கும் நான் பல நாடுகளின் சரித்திரங்களைக் கவனித்திருக்கிறேன். எல்லா நாடுகளின் கதையும் இதுதான். எங்கும் அநீதியைச் சிலர் தூண்டுகிறார்கள். அந்த அநீதிக்கு உட்பட்ட மக்கள் முதலில் துவளுகிறார்கள், பிறகு எழுச்சியடைகிறார்கள். அதன் பலன் பழைய அரசின் வீழ்ச்சி, புது அரசின் உதயம். எங்கும் இதே கதை. பாலூரிலும் சென்ற இரண்டு நாள்களாக இந்தக் கதையைத்தான் காண்கிறேன். தமிழர்கள் அனாவசியமாகத் துன்புறுத்தப்படுகிறார்கள். பலர் சிறையிலிருக்கிறார்கள். இன்னும் பலருக்குக்கசையடி கிடைக்கிறது. சிலர் வெளிநாட்டு மரக்கலங்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டிருக்கிறார்கள். என்னிடம் அப்படி இருவர் இன்றுதான் விற்கப் பட்டிருக்கிறார்கள். நல்ல விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். என் மரக்கலத்தின் துடுப்புகளைத் துழாவ அவர்களிருவரும் உதவுவார்கள். அதில் ஒருவனுக்கு ஏற்கெனவே மரக்கலம் ஓட்டும் பயிற்சியும் இருக்கிறது. ஆனால் விலை மட்டும் சற்று அதிகந்தான். ஒவ்வொரு தமிழனுக்கும் நூறு பொற்காசுகள் கொடுத்தேன். இதிலிருந்து உங்களுக்கு என்ன ஏற்படுகிறது?” என்று கேட்டுச் சற்றுப் பேச்சை நிறுத்தினான் அகூதா.

அதுவரை கனவில் சரித்திரக் கதையைக் கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்த மூவருக்கும் அக்கதையின் கடைசிப் பகுதியைக் கேட்டதும் பெரும் சீற்றமே ஏற்பட்டது. அந்தச் சீற்றத்தை வெளிப்படையாகக் காட்டிய கருணாகர பல்லவன், “என்ன ஏற்படுகிறது? நீங்கள் உண்மையில் கொள்ளைக்காரர் என்றுதான் நினைத்திருந்தோம். இப்பொழுது அடிமை வியாபாரி யென்றும் ஏற்படுகிறது” என்றான்.

“வேறு எந்தவித செய்கையைத்தான் கொள்ளைக் காரனிடம் எதிர்பார்க்க முடியும்” என்று கிள்ளைக் குரலில் விஷமத்தையும் கலந்து உதிர்த்தாள் காஞ்சனாதேவி.

இத்தனைக்கும் அகூதாவின் முகத்தில் எந்தவிதக் கோபமோ வெறுப்போ உதயமாகவில்லை. அவன் கண்கள் இளைய பல்லவனையும் கடாரத்துக் கட்டழகியையும் இகழ்ச்சியுடன் பார்த்தன. “அந்த இரு தமிழர்களையும் நான் ஏன் வாங்கினேன் தெரியுமா?” என்று வினவினான் அகூதா, இளைய பல்லவனை நோக்கி.

“நீங்களே விளக்கலாம்” என்றான் இளைய பல்லவன் பதிலுக்கு.

“இருவரையும் இன்று மாலை வர்த்தகசாலைக்கு நடுவிலுள்ள கொடிமரங்களில் கட்டி ஆளுக்கு நூறு கசையடி கொடுக்க இந்த நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நூறு கசையடி கிடைத்திருந்தால்….” என்று ஆகூதா வாசகத்தை முடிக்காமல் விட்டான்.

“இருவரும் மூர்ச்சையாகிப் பிறகு ரணஜன்னி கண்டு இறந்திருப்பார்கள்” என்று அச்சத்துடன் கூறிய காஞ்சனா தேவி, தன் அழகிய பெரிய விழிகளை அகூதாமீது நிலைக்கவிட்டாள்.

“அத்தகைய சாவு எப்படியிருக்குமென்று உங்களுக்குத் தெரியாது. கசையடியின் தன்மையும் உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். இதோ பாருங்கள்” என்ற அகூதா சரேலெனத் தன் மேலங்கியை நீக்கிச் சுழன்று முதுகுப்புறத்தை அவர்களுக்குக் காட்டினான்.

அந்த முதுகுப்புறத்தைக் கண்ட மூவரும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டனர். பட்டை பட்டையாகப் பல கசையடிகளின் தழும்பு அந்த முதுகை விகாரமாக அடித்திருந்தது. அந்த முதுகைக் கண்ட மற்ற மூவர் உணர்ச்சிகள் எப்படியிருந்தாலும் அமீரின் ராட்சஸ விழிகளில் மட்டும் கண்ணீ ர் ஆறாகப் பிரவாகித்தது. குழந்தை போல் விக்கி விக்கி அழுதான் அமீர்.

அவன் விக்கல் காதில் விழவே சட்டென்று அங்கியை மூடி முதுகை மறைத்து அமீரைத் தன் ஒரு கையால் அணைத்துச் சமாதானப்படுத்திய அகூதா மற்றவர்களை நோக்கித் தன் விழிகளைத் திருப்பி, உங்களைவிடக் கசை யடிகளின் தன்மை எனக்கு நன்றாகத் தெரியுமென்பதைப் புரிந்து கொண்டீர்களல்லவா? இன்னும் புரிந்து கொள்ளுங்கள். எந்தக் குற்றம் செய்ததற்காகவும் இந்தக் கசையடிகளை நான் பெறவில்லை . இவையும் அநீதியின் விளைவு. என் கதையை உங்களுக்கு முழுவதும் சொல்ல நான் இஷ்டப்படவில்லை. அதற்கு அவசியமுமில்லை. ஆனால் எங்கு அநீதியின் கரம் நீள்கிறதோ, எங்கு மாந்தர் துன்புறுத்தப்படுகிறார்களோ அங்கு நானிருந்தால் நான் வாளாவிருப்பதில்லை. அநீதிக்கு உட்பட்டவர்களை மீட்க முயலுகிறேன். அப்படி மீட்ட பலர் என்னிடம் அடிமைகளாயிருக்கிறார்கள். சாதாரணமான அடிமைகளல்ல. எனக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள். அமீரைக் கேட்டால் விவரமாகச் சொல்லுவான். இதிலிருந்து உங்களைத் தப்பு விப்பதில் எனக்குள்ள அக்கறையையும் ஓரளவு ஊகித்துக் கொள்ளலாம். நான் அநீதியை எங்கு கண்டாலும் களையத் தீர்மானித்திருக்கிறேன்” என்று கூறிய அகூதாவின் குரலில் உறுதி பூரணமாகத் தொனித்தது. அந்த உறுதியுடனேயே அவன் பேச்சைத் தொடர்ந்து, “அந்த அநீதியை நான் இங்கு காண்கிறேன், அநபாயரே! இந்தக் கலிங்கத்தில் தமிழர்கள் படும் பாடு உங்களையும் உங்கள் படைத்தலைவரையும் கொதிக்க வைத்திருக்கிறது. அந்தக் கொதிப்பு ஒருநாள் போராக மாறும். இந்தக் கலிங்கத்தில் பெருநாசம் ஏற்படும். ஏன் தெரியுமா?” என்று கேட்டான்.

“சொல்லுங்கள்” என்ற அநபாயன் குரலில் ஆச்சரி யத்தின் சாயை மண்டிக்கிடந்தது.

“ஓர் அநீதியிலிருந்து இன்னோர் அநீதி விளைகிறது” என்றான் அகூதா.

“அநீதிக்குப் பதில் அநீதி செய்வது தமிழர் பழக்க மல்ல” என்றான் அநபாயன்.

“மனிதர் பழக்கம்” என்று உறுதியுடன் கூறினான் அகூதா.

“மனிதத் தன்மை வேறு. “

“உண்மை. ஆனால் அது சமயத்தில் கைகொடுப்ப தில்லை . அறிவு நல்லது. ஆனால் அது சமயத்தில் வெறியாக மாறுகிறது. அந்த வெறிக்குக் காரணங்களைக் கூறுகிறோம். பழி வாங்குதல் மனித சுபாவம். பழி வாங்கலாம். வாங்க வேண்டியதுதான். ஆனால் கருணையைச் சற்று அதில் கலந்துகொள்ள வேண்டும். என் வழி அதுதான். “

“உங்கள் வழியா?”

அதையும் விளக்க முற்பட்ட அகூதா, “ஆம் அநபாயரே! நீங்களும் உங்கள் நண்பர் படைத்தலைவரும் என்னைப் பற்றி வணிகரிடம் விசாரித்த விஷயங்களைச் சொன்னீர்களல்லவா? அதில் சில சரி, சில தவறு” என்றான்.

“எது சரி? எது தவறு?” கருணாகர பல்லவன் கேட்டான் சற்றுக் குழப்பத்துடன்.

“நான் பிறந்த இடம் சீனாவிலுள்ள சங்கரி நதிதீரம் என்று சொன்னீர்கள். “

“ஆம். “

“அது சரி, அதில் தவறில்லை . ஆனால் நான் நூசென் என்ற மங்கோலிய வகுப்பைச் சேர்ந்தவன் என்று சொன்னீர்களே அது தவறு. “

“தவறா?”

“ஆம், முற்றிலும் தவறு. உங்கள் நாட்டு வணிகர்கள் அரையும் குறையுமாகச் சொல்வதையெல்லாம் நீங்கள் பிரமாணமாக மதிக்கிறீர்கள். உங்கள் நாட்டைப் பற்றி எனக்கு ஓரளவுதான் தெரியும். எங்கள் நாட்டைப் பற்றியும் உங்கள் வணிகருக்கு ஓரளவுதான் தெரியும். உதாரணமாக, சீனா என்று எங்கள் நாட்டுக்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா?” என்று வினவினான் அகூதா.

“ஏன்?” என்று வினவினான் இளையபல்லவன்.

பதில் சொல்லத் துவங்கிய சீனக் கடலோடியின் சிறு விழிகளில் அன்பின் சாயை விரிந்தது. “உலகத்தின் மிகச் சிறந்த நாடுகளில் எங்கள் நாடு ஒன்று. மக்கள் மிகவும் நல்லவர்கள். சில வேளைகளில் தலைவர்கள் சிலர் ஏற்படு கிறார்கள். தங்கள் சுயநலத்திற்கு மக்களைத் தூண்டுகிறார்கள். சீனா! சீனா! பெயரே பட்டு மாதிரியிருக்கிறதல்லவா. *ட்ஸின் என்றால் பட்டு. எங்கள் நாடு பட்டு உற்பத்தியில் உலகத்திலேயே சிறந்தது. அதனால் ட்ஸின் நாடு பட்டு நாடு என்ற ஒரு பெயர் உண்டு. தவிர சுமார் 13 நூற்றாண்டுகளுக்கு முன் ட்ஸின் என்ற அரச குலம் ஆசியாவின் கிழக்குப் பகுதி முழுவதையும் ஆண்டு வந்தது. அதனால் அந்தக் குடும்பம் அரசாண்ட பகுதியை பாரத நாட்டுக் கடலோடிகள் சீனாவென்றும், அராபியர் ஸின் என்றும், யவனர்கள் சினாய் என்றும் அழைத்தார்கள். ஆனால் உங்கள் கடலோடிகள் அளித்த பெயர்தான் நிலைத்தது. அந்தச் சீனாவில் நூசென் என்ற இனத்தில் நான் பிறந்தேன் என்று சொன்னீர்கள். அது சரி. ஆனால் மங்கோலியரின் கிளை அது என்று சொன்னீர்களே, அது தவறு. மங்கோலியர்கள் காட்டுமிராண்டிகள், நாகரீக மற்றவர்கள். நூசென் அந்த வகுப்பின் கிளையல்ல. நாகரீகமுள்ள தார்த்தார் இனத்தின் கிளை. எங்களுக்கு அந்த மங்கோலியரும், நீங்கள் சொன்ன கிதான், கின் வகுப்பினரும் இழைத்த அநீதியால் நான் கொள்ளைக் காரனானேன். “

“உம்” என்ற குரல் மட்டும் அநபாயனிடமிருந்து எழுந்தது.

“மங்கோலியர், கிதான், கின் இனத்தவர் மூர்க்கர்கள்; மனிதத் தன்மையில்லாதவர்கள். அவர்கள் அடிக்கடி வடக்கிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்து என் வகுப்பினரை நாசம் செய்தார்கள். பெண்களைக் கற்பழித்தார்கள். குழந்தைகளைக் கொலை செய்தார்கள். அந்த அநீதிகளி லிருந்து நான் எழுந்தேன். என் மக்கள் எழுந்தார்கள். பதிலுக்கு அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் நாங்கள் சிறை பிடித்தோம். “

“அநீதிக்குப் பதில் அநீதி செய்ய தமிழர் விரும்புவ தில்லை “என்றான் அநபாயன்.

“நாகரீகமுள்ள யாரும் விரும்புவதில்லை. ஆனால் விருப்பத்துக்கும் நீதிக்கும், நேர்மைக்கும் மாறாக நடக்க வேண்டிய சமயங்கள் சரித்திரங்களில் ஏற்படுகின்றன. மங்கோலிய கிதான், கின் இனத்தவர்களுக்கு நீதியின் சொல் புரியாது. வாளின் பதில் ஒன்றுதான் புரியும். ஆகையால்தான் அவர்களைச் சிறை பிடித்தேன். அவர்கள் இல்லங்களைச் சூறையாடினேன். அதனால் தூரத்திலிருக்கும் நீங்கள் என்னை இகழலாம். என் மக்கள் என்னை இகழ்வதில்லை. உங்கள் நாட்டுப் பழமொழி யொன்றைக் கேட்டிருக்கிறேன். புலியிடம் வேதாந்தம் பேசிப் பயனில்லையென்று சொல்கிறார்கள். நாகரீக மற்றவர்களுக்கு வாள் ஒன்றுதான் பதில் சொல்ல முடியும்” என்று திட்டமாக அறிவித்தான் அகூதா.

அவன் சொன்னதில் உண்மைகள் பல இருப்பதை உணர்ந்தான் அநபாயன். அகூதாவை எத்தனை பிசகாக மதிப்பிட்டுவிட்டோம் என்பதையும் புரிந்து கொண்டதால் தன் பெருந்தன்மையைக் காட்ட முற்பட்ட அநபாயன் ஆசனத்தினின்றும் எழுந்திருந்து, “சீனர் தலைவரே! உங்கள் சரிதம் என் மனத்தைத் தொடுகிறது. உங்களிடம் எங்களை ஒப்படைத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு வேண்டுகோள்” என்றான்.

“சொல்லுங்கள் அநபாயரே!” என்றான் சீனக் கடலோடி.

“நீங்கள் விலைக்கு வாங்கிய இரு தமிழர்களையும் எங்களுடன் அனுப்ப வேண்டும். நீங்கள் செலுத்திய பொற் காசுகளை-” அநபாயனை இடைமறித்த அகூதா, “வேண்டாம், தரவேண்டாம். அவர்களைக் கூடவே அழைத்து வந்திருக்கிறேன். இதோ வரவழைக்கிறேன்” என்றபடி சீன பாஷையில் ஏதோ சில வார்த்தைகளைக் கூறினான்.

அடுத்த விநாடி வெகு வேகமாக அந்த அறையை விட்டு வெளியே நடந்த அமீர், சில விநாடிகளுக்கெல்லாம் அந்த இரு தமிழருடன் திரும்பி வந்தான். வந்த தமிழர் மட்டுமல்ல உள்ளே இருந்தவர்களும் ஒருவரைப் பார்த்து ஒருவர் பிரமித்து விழித்தனர். உண்மையில் சீனக் கடலோடி பெரும் மந்திரவாதியாகத்தானிருக்க வேண்டுமென்று இளையபல்லவன் நினைத்தான். அநபாயன் அப்படி நினைக்கவில்லை. அகூதாவுக்குத் தாங்கள் எத்தனை தூரம் கடமைப்பட்டு விட்டோம் என்ற பெரும் சுமைதான் அநபாயனின் இதயத்தில் ஏறிக்கொண்டது.

Previous articleRead Kadal Pura Part 1 Ch19 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch21 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here