Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch21 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch21 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

130
0
Read Kadal Pura Part 1 Ch21 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch21 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch21 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 21 : பூர்வாங்கம் ஒரு கதை.

Read Kadal Pura Part 1 Ch21 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

சீனக் கடலோடியின் இதழ்களிலிருந்து சிதறிய இரண்டொரு சீனச் சொற்களைக் கேட்டதுமே வெகு துரிதமாக வெளியிலோடிய அரபு நாட்டு அமீர் இரண்டொரு விநாடிகளுக்கெல்லாம் அழைத்து வந்த இரண்டு தமிழர்களைக் கண்டதும், அறையிலிருந்த அநபாயன், இளையபல்லவன், காஞ்சனாதேவி ஆகிய மூவரும் பிரமிப்பின் எல்லையை எய்திய காரணத்தாலும், வந்த தமிழர்களும் வியப்பின் வரம்பை எட்டிவிட்டதால் திருதிருவென விழித்து வாயடைத்து நின்றதாலும், சில விநாடிகள் அந்த அறையில் மௌனமே நிலவிக் கிடந்தது. பாலூர்ப் பெருந்துறையின் மூன்று நாள் நிகழ்ச்சிகளில் சிக்கிய அந்த ஐவரும் தாங்கள் இப்படி எதிர்பாராத விதமாகத் திடீரென அரபு நாட்டு வணிகனான அமீரின் உள்ளறையில் கூடும் சந்தர்ப்பம் ஏற்படுமென்றோ , அந்தச் சந்தர்ப்பமும் ஒரு சீனக் கொள்ளைக்காரனால் கிடைக்கு மென்றோ தினையளவும் நினைக்காததால் அவர்கள் மனங்களில் பற்பல விதமான எண்ணங்கள் பாய்ந்து பெரும் ஆறுகளாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த எண்ணங்களுக்கு உடனடியாக உருக்கொடுத்து, சொற்களை உதிர்க்கும் சக்தியை அந்த ஐவருமே இழந்திருந்ததைக் கவனித்ததால், ஏற்கெனவே முகத்தில் தவழ்ந்து கிடந்த புன்னகை நன்றாக விகசிக்கும் படி தன் இதழ்களை விரிவடையச் செய்த சீனக்கடலோடியே மெள்ள உரையாடலைத் துவங்கி, “இந்த இரு தமிழரையும் உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் பாக்கியம் எனக்கில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அதுவும் ஒரு காரியத்திற்கு நல்லதுதான். அபாயமான பணிகளில் ஈடுபடும்போது, அதில் ஈடுபடுபவர்களுக்கு முன் பரிச்சயம் இருந்தால் அதுவே ஒரு பெரும் பலம்” என்று கூறி அநபாயனையும் மற்ற இருவரையும் தன் சிறு விழிகளால் நோக்கினான்.

அநபாயனோ இளைய பல்லவனோ இதற்குப் பதில் சொல்லாமல், வந்த இரு தமிழர்களையும் உற்று நோக்கியதி லேயே சில விநாடிகள் முனைந்ததல்லாமல் பிறகு பேசத் துவங்கிய போதும், அகூதாவிடம் பேச்சுக் கொடுக்காமல் அந்த இரு தமிழர்களிடம் சம்பாஷணையைத் தொடங்கவும் செய்தார்கள். முதன் முதலில் பேசத் துவங்கிய சோழர்குல இளவல், “வியப்பைத் தரும் சந்திப்பு இது” என்றான் அந்த இரு தமிழரையும் நோக்கி.

அநபாயன் பேசத் துவங்கிய பின்பும் பேசும் திறனை இழந்திருந்த தமிழர் இருவரும், பதில் சொல்லத் திராணி யில்லாத காரணத்தால், ‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தனர்.

அடுத்து எழுந்த அநபாயன் சொற்களில் கருணையோடு சீற்றமும் சிறிது கலந்தொலித்தது. “நீங்கள் கலிங்கக் காவலரிடமிருந்து விடுதலையடைந்து வந்திருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறியபோது அவன் குரலில் கனிவும் கனலும் கலந்து கிடந்தாலும் சொற்களை உதிர்த்து மூடிய அவன் உதடுகளில் மட்டும் கடுமை தெளிவாகத் தெரிந்தன.

அநபாயன் சொற்களில் கலந்தொலித்த மாறுபட்ட உணர்ச்சிகளால் ஓரளவு சுரணை பெற்ற அந்த இரு தமிழர்களில் ஒருவன், “இளவரசர் மகிழ்ச்சியில் ஓரளவு வருத்தமும் கலந்திருப்பதாகத் தெரிகிறது” என்று மிகத் தாழ்மையாகவும், அந்தத் தாழ்மையிலும் சற்று ஏளனம் கலந்த தொனியிலும் பதில் சொன்னான்.

அந்தத் தமிழன் சொன்ன பதில் காஞ்சனாதேவிக்கோ அமீருக்கோ வியப்பாயிருந்திருக்கலாம். ஆனால் அந்தத் தமிழனை நன்கு அறியும் வாய்ப்புப் பெற்ற அநபாயனுக்கோ ஒரு இரவில் சில நிமிஷங்களே அறியும் வாய்ப்பை அடைந்திருந்த இளையபல்லவனுக்கோ எந்தவித வியப்பையும் கொடுக்காததால் இருவரும் அவனைச் சற்றுக் கோபத் துடனேயே நோக்கினர். அந்தத் தமிழனிடம் அநபாயன் கொண்ட கோபத்திற்கும் இளைய பல்லவன் கொண்ட சீற்றத்துக்கும் பெருவித்தியாசமிருந்தது. அநபாயன் கொண்ட சினம் பாலூர்ப் பெருந்துறையை விட்டுக் கடாரத்து இளவரசியையும் அவள் தந்தையையும் காப்பாற்றி, சோழநாடு அனுப்புவதைப் பொறுத்திருந்ததால், அத்தகைய பொறுப்பில் பங்குகொள்ள வேண்டிய இரு தமிழரும் அஜாக்கிரதையால் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டார்களே என்ற நினைப்பால் அவன் உள்ளம் பொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இளையபல்லவன் கோபமோ, பாலூர்ப் பெருந்துறையில் தான் கால்வைத்த நாளன்றே துணிவைப் பெரிதும் காட்டிய அந்தச் சுங்க அதிகாரி, அந்தத் துணிவையும் இடக்காகப் பேசும் தன்மையையும், தான் அடிபணியவேண்டிய அநபாயனிடமே காட்டுகிறானே என்ற எண்ணத்தால் கிளைத்தெழுந்தது. அதன் விளைவாக உக்கிரமான பார்வையொன்றைச் சுங்க அதிகாரிமீது வீசிய இளையபல்லவன், “தமிழகத்தின் குடிமகனான நீர் இளவரச ரிடம் பேசவேண்டிய முறை இது அல்ல” என்றான் குரலில் அந்த உக்கிரம் ஊடுருவி ஒலிக்க.

இளையபல்லவன் சீற்றமும், பேச்சும் கோபத்தை விளைவிப்பதற்குப் பதிலாக சுங்க அதிகாரிக்குச் சிரிப்பையே கொடுத்தாலும், அதை அவன் வெளிக்குக் காட்டாமல், “சோழ நாட்டுக் குடிமகன் இப்பொழுதும் சீன நாட்டு அடிமை” என்று கூறித் தன் உண்மை நிலையை மிகுந்த விஷமத்துடன் இளைய பல்லவனுக்கு நினைப்பூட்டினான்.

இதைக் கேட்டதும் இளையபல்லவன் கோபம் அத்து மீறிக் கொண்டிருப்பதைக் கடைக்கண்ணால் கவனித்த அநபாயன்,. அவனைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்துவிட்டுச் சுங்க அதிகாரியை நோக்கி, “கண்டியத் தேவரே! உம்மையும் இந்தக் கூலவாணிகன் சேந்தனையும் இங்கு சந்தித்ததில் எனக்கேற்பட்டுள்ள வியப்பின் காரணம் உமக்குப் புரிகிறதா, இல்லையா?” என்று சற்றுக் கடுமையுடன் வினவினான்.

“இளவரசருக்கு இந்தச் சந்திப்பால் உண்டாகக் கூடிய வியப்பும் வருத்தமும் என்னைவிட வேறு யாருக்குப் புரியும்?” என்று கேட்டான் சுங்க அதிகாரியான கண்டியத் தேவன் பதிலுக்கு.

“எங்கள் விடுதலைக்கு மூன்று பேர்களைத்தான் முக்கியமாக நம்பியிருந்தேன்” என்று அநபாயன் மீண்டும் உணர்த்தினான்.

“தெரியும்,” இந்த ஒற்றைச் சொல்லிலும் விளக்கத்தைக் காட்டினான் சுங்க அதிகாரி.

“அரபு நாட்டு அமீர் மூலம் இந்தப் பாலூரை விட்டு வெளியேறத் திட்டமிட்டுவிட்டுப் பிறகு உங்களை வர வழைக்கலாமென்றிருந்தேன்” என்றான் அநபாயன்.

“இப்பொழுது அந்தச் சிரமம் தங்களுக்கில்லை. நாங்களே வந்துவிட்டோம், ஆனால் ஒரு வித்தியாசம்” என்றான் கண்டியத்தேவன்.

“என்ன வித்தியாசம்?”

“உங்கள் விடுதலைக்கு எங்கள் கையை எதிர்பார்த் தீர்கள். ஆனால் இப்பொழுது எங்கள் விடுதலைக்கு உங்கள் கையை எதிர்பார்க்கிறோம். நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. “

“என் சொற்படி நடந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. “

“உங்கள் சொற்படிதான் நடந்தோம். “

“நான் வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் சந்தித் தீர்களா?”

“அதே இடத்தில்தான். சிறைக்குப் பின்புறமிருக்கும் அந்தச் சிறு வீட்டில்தான் சந்தித்தோம். ஆனால் அங்கு நாங்கள் மட்டும் சந்திக்கவில்லை. “

“வேறு யார் சந்தித்தது?”

“பீமனும் எங்களைச் சந்தித்தான். “

இதைக் கேட்டதும் அநபாயன் புருவங்கள் வியப்பால் சற்றே மேல் நோக்கி எழுந்தன. “என்ன, பீமனா!” என்ற கேள்வியில் அந்த வியப்பின் ஒலி பலமாகப் பரவி நின்றது.

சுங்க அதிகாரி அநபாயனை நோக்கித் தலைதாழ்த்தி விட்டுச் சொன்னான்: “ஆம், அநபாயரே! பீமன் எங்களுக்கு முன்னதாக அந்தச் சிறு வீட்டிற்குள் காத்திருந்தான். நாங்களிருவரும் அந்த விடுதிக்குள் நுழைந்ததுமே வீரர் களைவிட்டு எங்களை சிறை செய்தான். எந்தெந்த இடங்களை ரகசிய இடங்களாக இந்த ஊரில் நாம் நினைத்திருந்தோமோ, அந்த இடங்களெல்லாம் இப்பொழுது பீமன் வசத்திலிருக்கின்றன. இதோ இருக்கும் கூலவாணிகர் மாளிகையை நமது ரகசிய இடமாக வைத்திருந்தோம். அந்த ரகசியம் அம்பலமாகி விட்டது. அவர் மாளிகை கைப்பற்றப்பட்டது. அவரும் ஒற்றராகச் சிறை செய்யப்பட்டார். வெளிநாட்டுப் பிரமுகர் வீதியில் குணவர்மரைத் தாங்கள் தங்க வைக்கச் சொன்ன விடுதியிலும் இப்பொழுது கலிங்க வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். சிறைக்குப் பின்னாலிருக்கும் அந்தப் பழைய சிறு வீட்டையும் என்னையும் பீமன் புரிந்துகொள்ள வில்லையென்று நினைத்தேன். அதுவும் தவறாகிவிட்டது. இந்தப் பாலூரிலுள்ள நமது ஒற்றரில்லங்களெல்லாம் இப்பொழுது கலிங்கத்து வீரர் வசமிருக்கின்றன. மற்றும்… ”

“மற்றுமென்ன? சொல்லும் மேலே” அநபாயன் குரல் வறண்டு கிடந்தது.

“நீதி மண்டபத்திலிருந்து இளைய பல்லவரையும் மற்றத் தமிழரையும் நீங்கள் விடுவித்து வந்தீர்களல்லவா!”

“ஆம். “

“அதற்குப் பிறகு எந்தத் தமிழ் வீரனும் இந்தப் பாலூரின் கோட்டை வாயில்களில் காவல் செய்ய அனுமதிக்கப் படவில்லை.

இதைக் கேட்டதும் இளையபல்லவன் தன் ஆசனத்தி லிருந்து பெரும் சீற்றத்துடன் எழுந்தான். அவனது ஈட்டிக் கண்கள் அநபாயனை ஒரு விநாடி நோக்கின. “அப்படியானால், பாலூரிலுள்ள தமிழ் வீரர்களை நாம் திரட்டி, கோட்டை வாயில்களில் பொருதி வெளியேறினாலென்ன?” என்று வினவினான்.

கண்டியத்தேவன் இளைய பல்லவனை நன்றாக ஏறெடுத்து நோக்கினான். “செய்யலாம். செய்வது சாத்திய மும்கூட. ஆனால் அதன் விளைவுகள் பயங்கரமா யிருக்கும்” என்றும் சொன்னான்.

“என்ன விளைவுகள்?”

“இப்பொழுது பாலூரில் தமிழர் ஓரளவுதான் துன்புறுத்தப்படுகிறார்கள். பெரும்பாலோர் மீது கண் காணிப்புதான் நடக்கிறது. என்னைப்போல் தீவிரமாக வேவுத் தொழில் ஈடுபடுபவர்மீதுதான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இந்தப் பாலூரின் ஜனத்தொகை அமைப்பு, படைப் பகுதிகளின் அமைப்பு. பாலூரில் மூன்றிலொரு பங்கு தமிழர் இருக்கிறார்கள். படைப் பிரிவும் அந்தக் கணக்கில் தானிருக்கிறது. படையை முழுவதும் விரோதித்துக் கொள்வது பலனளிக்காது என்பதைப் பீமனும் அனந்த வர்மனும் உணர்ந்திருக்கிறார்கள். படையிலிருக்கும் தமிழர் புரட்சி செய்தால் பாலூரில் உண்டாகக்கூடிய நிலைமை யும் அவர்களுக்குத் தெரியும். அந்தப் பயம் அவர்கள் கொடுஞ்செயல்களைத் தேக்கியிருக்கிறது. தமிழ்ப் படைப் பிரிவை நாம் திரட்டி, கோட்டைக் காவலை உடைக்க முயன்றால் அடுத்து வருவது இரண்டு நாள் பாலூர்ப் போர். பிறகு சோழர் கலிங்கர் போர். இதற்கிடையே தமிழர்கள் பெருநாசம். நால்வர் விடுதலைக்காக இந்த நிலைமையை நாம் சிருஷ்டிப்பதானால் நீங்கள் சொல்லும் திட்டத்தை நாம் கடைப்பிடிக்கலாம்” என்றான் சுங்க அதிகாரி.

மேற்கொண்டு ஏதோ பேச முயன்ற இளைய பல்லவ னைத் தன் பார்வையொன்றினாலேயே தடை செய்த அநபாயன், சுங்க அதிகாரியை நோக்கி, “முடியாது, முடியாது. அந்தத் திட்டத்தை நாம் கடைப்பிடிக்க முடியாது. சோழநாட்டுக்கும் கலிங்கத்துக்கும் போர் நிகழ்வதானால் அதற்குக் காரணம் நாமாக இருக்கக் கூடாது. போரைத் தூண்டும் பொறுப்பு பீமனுக்கும் அனந்தவர்மனுக்குமே இருக்கட்டும்” என்று கூறினான். பிறகு சற்று நிதானித்து விட்டு, “அப்படியானால் எந்தக் கோட்டை வாசல் மூலமும் வெளியேற முடியாதா? பலவீனமான காவல் எங்கும் இல்லையா?” என்றும் வினவினான் சுங்க அதிகாரியை நோக்கி.

சுங்க அதிகாரி சொன்னான்: “அநபாயரே! இந்தப் பாலூர்ப் பெருந்துறையில் நான் அறியாத இடமோ வீரர்களோ கிடையாதென்பது தங்களுக்குத் தெரியும். இந்தக் கூலவாணிகர் இங்கு வருவதற்கு வெகுநாள்களுக்கு முன்னிருந்தே பாலூரின் சுங்கச்சாவடியில் மேலுக்கும் உண்மையில் சோழநாட்டு அலுவலுக்கும் நான் பணி புரிந்து வருவது தங்களுக்குத் தெரியும். ஆகவே, உள்ள நிலைமையை உள்ளபடி சொல்கிறேன். நாம் எந்தெந்த இடங்களை ரகசியமென்று வைத்திருந்தோமோ அந்த இடங்களெல்லாம் கலிங்க வீரர்கள் கையிலிருக்கின்றன. அங்கு நாம் நிறுத்தியிருந்த புரவிகள் வணிகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வண்டிகள் அனைத்தும் கலிங்கத்தின் குதிரை சாலைகளுக்கும், வாகனக் கூடங்களுக்கும் பறந்து விட்டன. அது தவிர உங்கள் நால்வரைப் பற்றிய அடையாளங்களும், ஒவ்வொரு கோட்டை வாயில் காவலருக்கும் விவரமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே, நீங்கள் நால்வரும் தனித்தனியாகச் சென்றாலே கோட்டை வாயில்களைக் கடப்பது கஷ்டம். நால்வரும் சேர்ந்து சென்றால் கண்டிப்பாய்க் கடக்க முடியாது. நிலமார்க்கமும் அறவே அடைக்கப்பட்டு விட்டது. நிலவழியில் கோட்டையைக் கடந்தாலும், அதற்கப்பால் ஒரு காதத்துக்கு வரிசையாக உள்ள சுங்கச் சாவடிகளில் ஏதாவதொன்றில் கண்டிப்பாய்ச் சிறைப்படுவீர்கள். கடலில் மட்டும் சுங்கச் சாவடிகளை ஏற்படுத்த முடியாது. கடலை அடைந்து விட்டால் தப்பலாம். ஆனால் கடலுக்குச் செல்லும் வாயில்களில் கடுமையான காவலும் சோதனைகளும் இருக்கின்றன. அமானுஷ்யமான அதி யுக்தியான ஏதாவ தோர் அற்புதத் திட்டம் இருந்தாலொழிய இந்த ஊரை விட்டு நாம் வெளியேற முடியாதென்று நினைக்கிறேன். “இதைச் சொல்லி முடித்த சுங்க அதிகாரி உள்ள நிலையை நினைத்துச் சோகப் பெருமூச்சு ஒன்றும் விட்டான்.

சுங்க அதிகாரியின் விவரணத்தைக் கேட்டதும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான் அநபாயன். இளையபல்லவனுக்கு மட்டும் சுங்க அதிகாரி அளவுக்குமீறி அபாயத்தை எடுத்துச் சொல்வதாகத் தோன்றியதால், “நாம் அனாவசியமாக அஞ்சுகிறோமென்று நினைக்கிறேன். நம்மைப்பிடிக்கப் பீமன் வலை விரித்திருக்கலாம். ஆனால் அதை நீக்கவோ அல்லது அறுக்கவோ நமக்குச் சக்தியில்லையா என்ன?” என்று சீறினான்.

அநபாயன் கண்கள் இளைய பல்லவனை நோக்கிக் கடுமையுடன் திரும்பின. “கருணாகரா! கண்டியத்தேவரை நீ சரியாக அறியமாட்டாய். ராணுவ தந்திரத்தில் இணையற்றவர். நகரங்களில் கேந்திரங்களை அறிவதில் பிரசித்தி பெற்றவர். நிலைமை அபாயம் என்று அவர் சொன்னால் நிலைமை அபாயந்தான். பீமனையும் பாலூர்த் துறைமுகத்தையும் அவரைவிட அறிந்தவர்கள் வேறு யாரும் கிடையாது. தப்புவது அசாத்தியம் என்று அவர் சொன்னால் அது அசாத்தியம்தான்” என்றான் திட்டமாக:

“அப்படியானால் நாம் கையைக் கட்டிக் கொண்டு அமீரின் இல்லத்திலேயே இருக்க வேண்டியதுதானா?” என்ற இளைய பல்லவனின் குரலில் இகழ்ச்சி பலமாகத் தொனித்தது.

இளையபல்லவன் குரலில் தொனித்த இகழ்ச்சியை , அநபாயன் கவனிக்கவே செய்தான். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல், “அசாத்தியம் என்ற சொல் என் அகராதியில் இல்லை . கருணாகரா. இதில் சம்பந்தப் பட்டிருப்பது நாம் இருவர் மட்டுமானால் இங்கு உட்கார்ந் திருப்பதைவிட எத்தகைய அபாயமுள்ள திட்டத்திலும் ஈடுபடலாம். ஆனால் கடாரத்தின் மன்னர் குலத்தின் நலன் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகவே, நல்ல, கூடிய வரையில் வெற்றி தரக்கூடிய திட்டத்தை நாம் வகுக்க வேண்டும்” என்று கருணாகர பல்லவனை நோக்கிக் கூறிவிட்டு, அந்த அறையிலிருந்த மற்றவர்கள் மீதும் கண்களைத் திருப்பி, “உங்கள் யாருக்காவது ஏதாவது வழி புலப்படுகிறதா?” என்று வினவினான். யாரும் பதில் சொல்லவில்லை. நிலைமையின் நெருக்கடி அவர்கள் வாயை அடைத்திருந்தது. “நாம் தப்பத் திட்டம் வகுக்கக்கூடியவர்கள் இங்கு யாருமே இல்லையா?” என்று கடைசியாகச் சலித்துக் கொண்டான் அநபாயன்.

அதுவரை நடந்த சம்பாஷணையில் பங்கு கொள்ளாத அகூதா அநபாயனை இடைமறித்துக் கூறினான், “இத்தகைய சமயத்தில் சரியான திட்டத்தை வகுக்கக் கூடிய திறமை இங்கு ஒருவருக்குத்தான் உண்டு” என்று.

“யாரது?” அநபாயனும் இளைய பல்லவனும் ஏககாலத்தில் கேள்வியைத் தொடுத்தார்கள்.

சீனக் கடலோடி மெள்ள நகைத்தான். அவனது சின்னஞ்சிறு ஈட்டி விழிகள் அமீரை நோக்கித் திரும்பின. ராட்சஸனைப் போலிருந்த அமீர் வெட்கத்தால் மிகவும் சங்கடப்பட்டான். தலையை இருமுறை அப்படியும் இப்படியும் ஆட்டிக் குழைந்து மற்றவர்களை நோக்கினான்.

கொள்ளைக்காரனான சீனக் கடலோடி அமீரைப் பற்றிச் சிறப்பித்துச் சொல்லியது மற்றவர்களுக்கு வியப்பா யிருந்ததேயொழிய அநபாயனுக்குச் சிறிதும் வியப்பில்லை. “உனக்கு ஏதாவது யோசனையிருந்தால் சொல் அமீர்” என்று கேட்டான் அநபாயன்.

“ஒரு சிறு திட்டத்தை இந்த ஏழை ஏற்கெனவே வகுத் திருக்கிறேன்” என்று மிகுந்த பணிவன்புடன் சொன்னான் அமீர்.

“என்ன திட்டம் அமீர்?” என்று அநபாயன் ஆவலுடன் வினவினான்.

“அதற்குப் பூர்வாங்கம் ஒரு கதை” என்று அமீர் கதையையும் துவக்கினான். திட்டத்தையும் சொன்னான். இரண்டுமே பெரிய விந்தையாயிருந்தன கேட்டவர்களுக்கு. விந்தையில் பேராபத்தும் துணிவும் கூடக் கலந்திருந்தன.

Previous articleRead Kadal Pura Part 1 Ch20 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch22 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here