Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch22 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch22 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

141
0
Read Kadal Pura Part 1 Ch22 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch22 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch22 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 22 : காந்தம் இழுக்கிறது.

Read Kadal Pura Part 1 Ch22 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

சோழ சாம்ராஜ்ய பீடத்தில் அமரக்கூடியவனும் இணையற்ற துணிவும், வீரமும் கொண்டவனுமான சோழர் குல இளவலான அநபாயனும், இளவயதிலேயே பல போர்களில் வெற்றி வாகை சூடியதால் எதிரிகள் மறைவிலும் அச்சத்துடன் பெயரை உச்சரிக்கும் கீர்த்தி வாய்ந்த கருணாகர பல்லவனும், ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் விதியை நிர்ணயிக்கக் கடாரத்திலிருந்து வந்திருந்தவளும், தந்தையைப் பிரிந்து தன்னந்தனியாக மற்ற ஆண்களின் மத்தியில் உட்கார்ந்திருந்த அந்தச் சமயத்திலும் சிறிதும் குழப்பத்தையோ பயத்தையோ காட்டாதவளும் கட்டழகுக் கன்னியுமான காஞ்சனாதேவியும், ராஜ தந்திரத்திலும் பிற நாடுகளின் நகர அமைப்புகளையும் போர் பொறிக் கூடங்களை அறிவதிலும் நிகரற்றவனென்று அநபாயனாலேயே போற்றப்பெற்ற பாலூர்ப் பெருந்துறைச் சுங்க அதிகாரி கண்டியத்தேவனும் குழுமியிருந்த அந்த இடத்தில், அவர்களுக்கெல்லாம் விமோசனத்தை அளிக்க வழி சொல்லக் கூடியவன் தான் ஒருவனேயென்று சீனக் கடலோடியான அகூதா சுட்டிக் காட்டியதுமே, மிதமிஞ்சிய வெட்கத்தாலும், சங்கடத்தாலும், திண்டாடிய அரபு நாட்டு அமீர் அநபாயனே தன்னை நேரிடையாக யோசனை கேட்டதும், விவரிக்க இயலாத இன்ப வேதனையை அடைந்தான். அதன் விளைவாகத் தன் பிரும்மாண்ட மான சரீரத்தைச் சற்றுக் குறுக்கியும், திருப்பியும் அவஸ் தைப்பட்டதன்றி, தன் பெருவழிகளை அவர்களை நோக்கிச் சுற்றவிட்டபோது, ஓரளவு அச்சத்துடனும், சஞ்சலத்துடனுமே அவர்களைக் கவனித்தான். முன்னேற் பாடாகத் தான் திட்டத்தை வகுத்துவிட்டுச் சீனக் கடலோடியான தன் குருநாதர் உட்பட அந்தப் பிரமுகர் களையெல்லாம் வீண் தர்க்கத்தில் நீண்ட நேரம் நிலைக்க விட்டது – பற்றி அவர்கள் தவறாக ஏதாவது எண்ணிவிட்டால் என்ன செய்வதென்ற பயம் அவன் இதயத்தில் ஏற்பட்டது. அதைத் தவிர, திட்டமும் பெரும் வீரர்கள் விரும்பி ஒப்புக்கொள்ள முடியாத திட்டமாயிருந்ததால், அதை எப்படிச் சொல்வதென்ற அச்சமும் அவனுக்கு உண்டாகவே அவன் அதைப்பற்றி ஆரம்பத்தில் நேரடியாகப் பிரஸ்தாபிக்காமல் சுற்றி வளைத்தே. விவரிக்கத் தொடங்கினான்.

திட்டத்தை விவரிக்கு முன்பு அவன் அடைந்த சங்க டங்களும் அவற்றின் காரணங்களும் சீனக் கடல் வீரனான அகூதாவுக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்ததால் அவன் அமீரை நோக்கி, “இதில் சங்கடமோ வெட்கமோ அடைய வேண்டிய அவசியம் ஏதுமில்லை அமீர். நிலைமை அபாயமானது. பெரும் அரசுகளை நிர்வகிக்க வேண்டியவர்களின் நலன் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகவே திட்டத்தின் முடிவு நற்பலனைத் தருமானால் அதன் மார்க்கங்களைப் பற்றியோ முறைகளைப் பற்றியோ நாம் அதிகமாகக் கவனிக்க வேண்டியதில்லை” என்று கூறிவிட்டுத் தன் கருத்துக்கு ஆதரவிருக்கிறதா என்பதை அறிய அநபாயனையும் இளைய பல்லவனையும் நோக்கினான்.

அமீரின் திட்டத்தையோ திட்டம் நிறைவேற்றப் படுவ தற்கான முறைகளையோ அறியாத அநபாயரின் முகத்திலோ கருணாகரனின் பார்வையிலோ அதற்கு எந்த விதமான பதிலும் கிடைக்காவிட்டாலும், திட்டமான எதிர்ப்பு காஞ்சனாதேவியிடமிருந்து வரவே எதற்கும் கலங்காத அகூதாவே சிறிது கலக்கம் கொண்டான். அதுவரை நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டும்

சொல்லப் பட்டதையெல்லாம் செவி மடுத்துக் கொண்டும் முகவாய்க் கட்டையில் ஒரு கரத்தை ஊன்றி, சிரத்தை சற்றே ஒருக்களித்து. தன் அஞ்சன விழிகளை அகல விரித்து உட்கார்ந்திருந்த காஞ்சனாதேவி, “முடிவு மட்டும் முக்கிய மல்ல சீனத் தலைவரே, முறைகளும் முக்கியம். தவறான முறைகளைக் கொண்டு சாதிக்கப்படும் முடிவுகள் இறுதியில் விபரீத விளைவையே கொடுக்கும்” என்று தன் அழகிய உதடுகளை மெள்ளத் திறந்து சொற்களை மிக இன்பமாக உதிர்த்தாள்.

அத்தனை நாழிகையாக உதிர்ந்த ஆண் மக்களின் கரகரத்த கடுமையான குரல்களுக்குப் பரிகாரம் செய்யும் பாணியில் இன்ப நாதம்போல் திடீரென அறைக்குள் உருவாகிய அந்தக் கிள்ளைக் குரலைக் கேட்டதும், அறையிலிருந்த அனைவரும் அது வந்த திசையில் கண்களைத் திருப்பினர். மற்றவர்களுக்கெல்லாம் சற்றுப் பின்னடைந்து இளைய பல்லவனுக்கு அடுத்தபடி லேசாக ஒதுங்கிக் கடைசியில் உட்கார்ந்திருந்த காஞ்சனா தேவியின் கண்களில் ஆழ்ந்த சிந்தனை தெரிந்ததை மற்றவர்கள் கண்கள் பார்க்கவே செய்தன. அந்த ஆழ்ந்த சிந்தனையால் அந்தக் கண்கள் மயக்கம் தரும் பார்வையொன்றை வீசினாலும் அந்த மயக்கத்தினூடே ஒரு தெளிவும் உறுதியும் சென்று கொண்டிருந்ததைக் கவனித்தான் சீனக் கடலோடியான அகூதா. அப்படிக் கவனித்ததால் அந்தப் பெண்ணிடம் அவனுக்கு முதலில் ஏற்பட்ட அன்பு பல மடங்கு பெருகியதன்றி, அமீரின் திட்டத்தில் ஏதோ ஒப்புக்கொள்ள முடியாத ஓர் அம்சம் கலந்திருப்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாளென்பதையும் அவன் அறிந்து கொண்டதால், அவளது கூரிய அறிவை எண்ணிப் பெரிதும் வியந்தான். மேலே அவள் பேசப் பேச அந்த வியப்பும் அவள்மீது அவனுக்கு ஏற்பட்ட மதிப்பும் வளர்ந்து கொண்டே போயின. அந்தச் சம்பாஷணைத் தொடருக்கு அவனே வித்திட்டான். ஏனென்றால் ஆரம்பக் கருத்து அவனுடையதாயிருந்தது. அந்தக் கருத்தைக் காஞ்சனா தேவி வெட்டிப் பேசிவிட்டதால், அதை விளக்குவதும் அவள் சந்தேகத்தை நிவர்த்திப்பதும் அவன் கடமையாயிற்று. ஆகவே அவள் ஆட்சேபணைக்குப் பதில் கூற முற்பட்ட சீனக்கடலோடி சொன்னான், “தேவி! முறைகள் தவறா சரியா என்பது சந்தர்ப்பங்களைப் பொறுத்தது,” என்று .

காஞ்சனாதேவியின் அழகிய விழிகள் சிறிதும் அச்ச மின்றி கொள்ளைக்காரனென்றும், கொடுமையின் அவதார மென்றும், பெயர் பெற்ற அகூதாவை நன்றாக ஏறெடுத்து நோக்கின. “சந்தர்ப்பங்களைப் பொறுத்து மட்டும் முறைகளைக் கையாளுவது தவறு, சீனத் தலைவரே!” என்று அவள் திட்டமாகக் கூறினாள்.

அகூதாவின் சின்னஞ்சிறு ஈட்டி விழிகளில் ஆச்சரியம் மேலும் படர்ந்தது. காஞ்சனாதேவியின் தைரியத்தைப் பற்றி அவன் உள்ளத்தில் பெரும் பக்தியும் உண்டாயிற்று. ‘இவள் கடாரத்தை மட்டுமல்ல. ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தையே அரசாளத் தகுந்தவள்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அகூதா. அவள் பேச்சுக்கு அவன் பதில் சொன்னபோது, அவன் குரலிலும் அந்தப் பக்தி விளக்கமாகத் தெரிந்தது. “சந்தர்ப்பங்கள் தாமாகவே முறைகளைச் சிருஷ்டிக்கின்றன தேவி!” என்றான் சீனக் கடலோடி.

“தவறு சீனத் தலைவரே! சந்தர்ப்பங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. நாம் அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்ளப் பார்க்கிறோம். ஆகவே விடுவித்துக்கொள்ள முறைகளை நாம்தான் வகுக்கிறோம். சந்தர்ப்பங்களல்ல வகுப்பது” என்றாள் காஞ்சனாதேவி உறுதியுடன், சற்றே தன் பூவிதழ்களை மடித்து.

“நான் அப்படி நினைக்கவில்லை தேவி. சந்தர்ப்பங்கள் தான் முறைகளை வகுக்க நம்மைத் தூண்டுகின்றன. அது மட்டுமல்ல, பழைய வழிகள் அடைபடும் போது புது வழி களுக்கும் முறைகளுக்கும் கோடி காட்டுவதும் சந்தர்ப்பங் கள்தான்,” என்ற அகூதா மேலும் விவரிக்கத் தொடங்கி, “நான் அமீரிடம் அறிந்த விஷயங்கள் சரியானால், உண்மை நிலை இதுதான். நீங்களும் உங்கள் தந்தையும் இளைய பல்லவரும் அமைதியான பாலூர்ப் பெருந்துறையை நாடி வந்தீர்கள். ஆனால் உங்களை எதிர்நோக்கி நின்றது அமைதியுள்ள பாலூர்ப் பெருந்துறையல்ல. உங்களை நசுக்கிவிடத் தீர்மானித்துள்ள கடுமையான கலிங்கத்தின் கடல்வாசல். சூழ்நிலை விபரீதமாயிருந்தது. சந்தர்ப்பங்கள் மாறுபட்டிருக்கின்றன. தூதர் என்ற முறையில் நாகரிகமாக வரவேற்கப்பட வேண்டிய கருணாகர பல்லவர், வாள் முனையில் வரவேற்கப்பட்டார். இளவரசராக, அரச விருந்தினராக, அரண்மனையிலிருக்க வேண்டிய அநபாயர், ஊரில் தலைமறைவாகத் திரிந்து அவ்வப் பொழுது தலையை நீட்டுகிறார். இரண்டு கப்பல்களுடன் வர்த்தக நிமித்தமாகப் பாலூர் வந்த நான் வாணிபத்தை முடித்துக்கொண்டு எந்தவிதக் கஷ்டமுமில்லாமல் நங்கூரத்தை நீக்கிக் கடலில் செல்லலாம். ஆனால் அமீரைத் திடீரென்று கடற்கரையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக் கிறது. அந்தச் சந்தர்ப்பம் திருடனைப்போல் இங்கு வந்து ரகசிய யோசனையில் உங்களுடன் கலந்துகொள்ளும் வாய்ப்பை அளித்திருக்கிறது. பெரும் ராஜ குடும்பங்களைக் காப்பாற்றும் பொறுப்பு அநபாயரைப் போலவே எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் எதையும் நாமாகத் தீர்மானித்துவிட முடியாது. நமது இஷ்டப்படி காரியங்கள் நடக்கவும் முடியாது. சந்தர்ப்பங்களையொட்டி முறைகளை வகுப்பதுதான் விவேகம். அந்த விவேகம் அமீருக்கு உண்டு. ஏதோ சங்கடமான முறையை வகுத்திருக்கிறான் அமீர். அதனால்தான் சங்கடப்படுகிறான்” என்று கூறிவிட்டு, அமீரை நோக்கித் திரும்பி “எதுவாயிருந்தாலும் பாதகமில்லை. சொல் அமீர்” என்று அமீரை ஊக்கவும் செய்தான்.

அமீர் தன் பெருவிழிகளால் அநபாயன் முகத்தையும் இளையபல்லவன் முகத்தையும் சில விநாடிகள் துழாவி விட்டுப் பிறகு காஞ்சனாதேவியை நோக்கிச் சொன்னான். “இளவரசி! என் திட்டமோ அதன் முறைகளோ உங்களுக்குத் திருப்தியில்லாவிட்டால் வேண்டாமென்று தள்ளிவிடலாம். ஆனால் என் திட்டத்தைவிட வேறு வழி யில்லையென்று எனக்குத் தோன்றுகிறது. ஊர் நிலைமை உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்க வேண்டும். அதைக் கண்டியத்தேவர் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டார். இந்த நிலையில் பாலூரில் எந்த இடத்திலும் நீங்கள் தலையைக் காட்ட முடியாது. காட்டினால் தப்பிச் செல்லவும் முடியாது. “

அமீரின் இந்த வார்த்தைகளுக்குப் பிறகு அந்த அறையில் அமைதியே நிலவியது. அமீர் மேற்கொண்டு என்ன சொல்லப் போகிறான் என்பதை அனைவரும் எதிர்பார்த்து நின்றார்கள்.

அவன் தொடர்ந்தான்: “அம்மணி! இதோ இருக்கும் அகூதா, அநபாயர், இளையபல்லவர் இவர்கள் மூவரின் வீரத்தில் மட்டுமல்ல, உங்கள் வீரத்திலும் எனக்குச் சந்தேகம் சிறிதும் இல்லை. அநபாயர் இளையபல்லவர் இவர்கள் வீரச் செயல்களைப் பற்றி இந்தப் பாலூரிலும் பல கதைகள் உலாவுகின்றன. இருவரையும் தமிழர்கள் தெய்வங் களைப்போல் பாவிக்கிறார்கள். அகூதாவின் வீரத்தை நான் நேரிடப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் மாபெரும் வீரர்களில் என் குருநாதர் ஒருவர். கடலில் இவருடைய ஒரே மரக்கலம் சீன அரசாங்கத்தின் பல மரக்கலங்களை ஒரேசமயத்தில் முறியடித்து ஓடச் செய்திருப்பதை நான் இந்த என் இரு கண்களாலும் கண்டிருக்கிறேன். உங்கள் வீரத்தைப் பற்றி நான் என்ன சொல்ல? அநபாயருக்கு அருகில் நாண் இழுத்து நின்று அனந்தவர்மனையே அச்சுறுத்திய உங்கள் செய்கை இன்று பிற்பகலே பாலூரில் தீயாகப் பரவிவிட்டது. இத்தனை வீரம் பொருந்திய உங்கள் அனைவருக்கும் சிறிதும் வீரமற்ற ஏன் கோழைத் தனமாகக்கூடத் தோன்றக்கூடிய ஒரு திட்டத்தைச் சொல்வேனானால், அதற்குக் காரணம் உங்கள் வீரத்திலுள்ள அவநம்பிக்கையல்ல, உங்கள் நலனில் எனக்குள்ள அக்கறை; உங்களை எப்படியாவது இந்தப் பாலூரிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எனது ஊக்கம்… ” என்று அமீர் மேலே சொல்லாமல் சிறிது தடுமாறினான்.

அவன் எதையோ சொல்ல சங்கடப்படுகிறானென்பதை அறிந்துகொண்ட அநபாயன், “பயப்பட வேண்டாம், எதுவாயிருந்தாலும் சொல் அமீர். ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் எங்களைப் பொறுத்தது” என்று அமீருக்குத் தைரியத்தைச் சற்று புகட்டினான்.

சற்று தைரியமடைந்த அமீர், அநபாயனை நோக்கி, “அநபாயரே! இளைய பல்லவரையும் கடாரத்து அரசர், இளவரசி, இவர்களையும் தப்புவிக்கத் தாங்கள் திட்டமிடச் சொன்னபோதே ஊர் நிலையைக் கவனித்தேன். மிகவும் பயங்கரமாயிருந்தது. நேர் வழியில் இங்கிருந்து தப்ப முடியாதென்பதைப் புரிந்துகொண்டேன். மிகவும் திண்டாடினேன். தத்தளித்தேன். கடைசியில் ஒரு முடி வுக்கு வந்தேன்” என்றான்.

“என்ன முடிவுக்கு வந்தாய் அமீர்?” என்று வினவி னான் அநபாயன்.

“இந்த ஊரில் என் வியாபாரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிடுவதென்று முடிவு கட்டிவிட்டேன்” என்றான் அமீர்.

சர்வசாதாரணமாகத்தான் அமீர் அந்த வார்த்தை களைச் சொன்னான். ஆனால் அதன் விளைவு என்ன வென்பதைப் புரிந்து கொண்டதால் அந்த அறையிலிருந்த மற்றவர்கள் திகைப்பும் ஆச்சரியமும் கலந்த உணர்ச்சிகளுக்கு வசப்பட்டனர். அநபாயனுக்கும் சீனக் கடலோடிக்கும் மட்டும் நண்பனும், தங்களை முன்பின் அறியாதவனுமான அந்த அரபு நாட்டு வணிகன் பாலூரில் பல வருஷங்களாக நிறுவி வளர்த்த வாணிபத்தை ஏறக்கட்டுவதென்றால் காரணம் தங்கள் நல்வாழ்வாகத்தானிருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொண்ட காஞ்சனா தேவியும், இளைய பல்லவனும் திகைப்பு ஆச்சரியம் இவற்றுடன் மதிப்பும் கொண்ட பார்வையை அவன்மீது வீசினார்கள். அத்தகைய பெரிய தியாகம் நியாயமற்றது என்பதை உணர்ந்த இளைய பல்லவன், தன் ஆசனத்தை விட்டுச் சரேலென எழுந்தான். “நியாயமில்லை வணிகரே! இது நியாயமில்லை. எங்களுக்காக உங்கள் வாழ்வை நாசப்படுத்திக் கொள்வது நியாயமில்லை” என்று சற்று இரைந்தே அமீரை நோக்கிக் கூறவும் செய்தான்.

அமீரின் சிவந்த பெருவிழிகள் கம்பீரமாக இளைய பல்லவனை ஏறெடுத்து நோக்கின. “இதில் நியாயப் பிசகான காரியம் ஏதுமில்லை இளைய பல்லவரே!”

“எங்களைக் காப்பாற்ற உங்கள் வாணிபத்தை ஏறக்கட்டுவது நியாயமல்ல” என்று மீண்டும் வலியுறுத்தினான் இளையபல்லவன்.

“ஆம், நியாயமல்ல” என்று காஞ்சனாதேவியும் சம்பா ஷணையில் கலந்துகொண்டாள்.

“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என்று அநபாயனும் தன் கருத்தைத் தெரிவித்தான்.

இந்தச் சொற்களைக் கேட்டதும் சங்கடத்தால் அதுவரை குறுகியிருந்த அமீரின் சரீரம் பெரிதாக நிமிர்ந்தது. அவன் கண்களில் பெருமை விரிந்தது. “இன்று கிடைத்த இந்தச் சொற்களுக்கு இதைப்போல் பத்து மடங்கு வர்த்தகத்தையும் நான் ஏறக்கட்டுவேன்” என்று பெருமிதத்துடன் கூறிய அமீர் மேலும் சொன்னான்: “இளைய பல்லவரே! என் வாழ்க்கையில் சிறுமையையும் பார்த்திருக்கிறேன்; பெருமையையும் பார்த்திருக்கிறேன்; கஷ்டத்தையும் பார்த்திருக்கிறேன்; மற்றவர்கள் காணாத, காண முடியாத சுகத்தையும் பார்த்திருக்கிறேன். நான் இழந்த செல்வமும் சம்பாதித்த சொத்தும் நிரம்ப உண்டு. நான் எதையுமே லட்சியம் செய்வதில்லை. அரபுநாட்டுச் சீமான் குடும்பத் துச்செல்லப் பிள்ளையாகத்தான் பிறந்தேன். என்னிடமே அடிமைகள் நூற்றுக்கணக்கில் இருந்தார்கள். ஆனால் நானே அடிமையாகும் காலம் வந்தது. வாணிபத்துக்கு என் மரக்கலத்தில் சென்ற நான் இதே வங்கக் கடலில் சொர் ண பூமிக்கு அருகில் கொள்ளைக்காரர்களால் சிறை பிடிக்கப்பட்டுச் சீனாவில் அடிமையாக விற்கப்பட்டேன். பிறகு, மீட்கப்பட்டேன் குருநாதரால். மரக்கலப் பயிற்சி அளிக்கப்பட்டேன். இவரால் இங்கும் வந்தேன். அவர் உதவியால் இங்கும் என் வாணிபம் பெருகுகிறது. இங்குள்ள பெரு வணிகர் எல்லோரையும் விட என் வாணிபம் பெரிது” என்ற அமீர் இடையே பேச்சை நிறுத்திக் கூலவாணிகனைச் சுட்டிக்காட்டி, “இவருக்கு என்னைத் தெரியாது. இவரை எனக்குத் தெரியும். இவர் வாணிபத்தைவிடப் பலமடங்கு பெரிது என் வாணிபம். இருந்தும் இந்தச் சிறு வணிகர் வீதியில் வெளியே சிறிதாகத் தெரியும் இந்த இல்லத்திலிருக்கிறேன். இங்கிருந்தே வாணிபம் செய்கிறேன். என் வாணிபத்தின் மொத்த அளவு இந்தப் பாலூரிலுள்ள மற்ற எல்லா வணிகர்களுடைய வாணிபத்தைவிட அதிகம். இங்கும் எனது அடிமைகள் இருப்பதை நீங்கள் உள்ளே வரும்போது கண்டிருக்கலாம். ஆம், எனக்குச் செல்வமும் அடிமைகளும் அதிகம். ஆனால் அந்தச் செல்வங்களையும் விருதுகளையும் நான் பொருட்படுத்தியதில்லை. இருவர் நட்பு எனக்கு ஆயுளில் கிடைத்தது. அதுதான் எனக்குப் பெரும் செல்வம்” என்றான்.

இப்படிச் சொல்லிவிட்டுத் தன் பார்வையை அகூதா மீதும், அநபாயன் மீதும் திருப்பிய அமீர், “இந்த இருவரும் உலகத்தின் மகா புருஷர்கள். இவர்கள் நட்பு எனக்குக் கிடைத்ததுதான் பெரும் செல்வம். ஆகவே என் வாணிபத்தையோ, அதனால் வரும் செல்வத்தையோ நான் ஒரு பொருட்டாகப் பாவிக்கவில்லை. அகூதாவும் அநபாயரும் தனது அன்பு எத்தன்மையது என்பதை உணர்த்தினார்கள். அதன் தன்மையை நீங்கள் அறிய முடியாது. ஆகவே இந்த வாணிபத்தை ஏறக்கட்டுவதால் நான் பெரும் தியாகம் செய்வதாக நினைக்க வேண்டாம். இது நான் அநபாயர் அன்புக்கு அளிக்கும் சிறு காணிக்கை. இந்த ஏழையை அவர் நேற்று நாடி வந்தபோது இந்த முடிவுக்கு வந்து விட்டேன். அதுவும் குருநாதரைச் சந்தித்ததும் அந்த முடிவு உறுதிப்பட்டுவிட்டது. உண்மையில் பார்க்கப் போனால் இதில் தியாகம் எதுவுமில்லை . சுயநலமே இருக்கிறது. என் திட்டம் நிறைவேறிய பின் நான் இந்த ஊரில் இருக்கவும் முடியாது. ஆகையால் வேறு வணிகருக்கு இந்தக் கடையை விற்றுவிட்டேன்” என்று கூறிய அமீர், சரேலென்று அகூதாவின் பக்கம் திரும்பி, “குருநாதரே! அது மட்டுமல்ல, காந்தம் என்னை இழுக்கிறது” என்றான்.

அதைச் சொன்ன அவன் கண்களில் பெரு ஒளி வீசுவதை அநபாயனும் மற்றவரும் கண்டனர். அதைக் கேட்ட அகூதாவின் கண்களிலும் அதே ஒளி படர்ந்த தையும் அநபாயன் கவனித்தான். அந்த ஒளியால் விகசித்த முகத்துடனும் ஈட்டி போல் ஜொலித்த விழிகளுடன் புன்முறுவல் தவழ்ந்த வதனத்துடன் தலையை அசைத்து ஆமோதித்த அகூதா, “இனி நீ சொல் கதையை அமீர்” என்று கூறினான்.

அமீர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு கதை யைத் துவங்கினான்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch21 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch23 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here