Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch23 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch23 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

90
0
Read Kadal Pura Part 1 Ch23 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch23 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch23 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 23 : விடுதலைக்கு வழி.

Read Kadal Pura Part 1 Ch23 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

அமீரின் சொற்களிலிருந்து எது வெளியானாலும் ஓர் உண்மை மட்டும் தெள்ளென விளங்கியது இளைய பல்லவன் உள்ளத்துக்கு. எந்தத் தியாகத்தையும் தான் செய்யவில்லையென்பதைக் காரணங்களைச் சுட்டிக் காட்டி அமீர் வலியுறுத்தினாலும் அந்தக் காரணங்கள் வெறும் போலிக் காரணங்கள் என்பதையும், அநபாயனிடம் கொண்டுள்ள சொல்லவொண்ணா அன்பினாலும், மதிப்பினாலும் இத்தகைய இணையில்லாத் தியாகத்தைச் செய்ய அமீர் தீர்மானித்திருக்கிறானென்பதையும் இளையபல்லவன் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரிந்துகொண்டான்.

ஒரு மனிதன் தான் வெகு காலமாகக் கட்டிப் பெருக்கிய வாணிபம், வீடு வாசல், பொருள் அனைத்தையும் துறந்து ஊரை விட்டே வெளியேறுவதென்றால் அந்தத் தியாகம் சாமான்யமானதல்ல வென்பதை அறிந்துகொள்ள கண நேரம் கூடப் பிடிக்கவில்லை பல்லவ குலத்தின் அந்தப் பெருமகனுக்கு. கோதாவரியின் ஆற்றங்கரைக் குடிசையிலிருந்து மாறு வேடமணிவித்துத் தங்களைப் பாலூரின் பெரு வீதிகளில் பகிரங்கமாக அழைத்து வந்த அமீர் உண்மையில் இஷ்டப்பட்டால், கலிங்க அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவுவது பிரமாதமான காரியமல்ல வென்றும் இளையபல்லவன் எண்ணினான். சிறு வணிகர் வீதியில் வெளிப்பார்வைக்குச் சிறியதாகவும் உட்கட்டுகள் பெரிய அளவிலுமுள்ள வீட்டை அமைத்து, கலிங்கர் அறியாமல் வருடக் கணக்கில் பெருவாணிகம் செய்தும் சிறு வாணிகனாகவே வேஷம் போட்டு வரும் அமீருக்குத் தங்களைத் தப்புவித்த பின்பும் கலிங்க வீரரை ஏமாற்றுவது அப்படி அசாதாரணமான காரியமல்லவென்று நினைத் தான் இளையபல்லவன். அவன் செய்யும் தியாகமெல்லாம் அநபாயருக்காக என்பதில் தினையளவும் கருணாகர பல்லவனுக்குச் சந்தேகமில்லாததால் பெருவியப்பும் அடைந்தான் அவன்.

மனிதர்களைச் சந்தித்த மாத்திரத்தில் அவர்கள் மனங்களைக் காந்தம் போல் இழுக்கக்கூடிய பெரும் சக்தி அநபாயருக்கு எங்கிருந்து வந்தது என்று சிந்தித்தான். மனிதர்கள் உடல், பொருள், ஆவியைத் துறப்பதற்குச் சமமான ‘அன்பை வித்திடக்கூடிய திறன் வாய்ந்த அநபாயர், சோழர் அரியணையில் அமர்ந்தால் தமிழகத்தின் சிறப்பு எத்தனை ஓங்கும் என்பதை எண்ணிப் பார்த்து மேலும் மேலும் பிரமிப்பே அடைந்த கருணாகர பல்லவன், “காந்தம் என்னை இழுக்கிறது” என்று அமீர் சொன்னதைக் கேட்டதும் அந்தக் காந்தம் அநபாயனாகத் தானிருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

ஆனால் அந்தத் தீர்மானத்துக்குக் குறுக்கே சந்தேக மொன்றும் புகுந்து கொண்டது. ‘காந்தம் என்று அமீர் கூறியது அநபாயனையென்றால், அவன் கண்களில் அத்தனை தூரம் புத்தொளியொன்று பிறப்பானேன்? அவன் அந்தச் சீனக் கடலோடியை நோக்குவானேன்? ஏதோ புரிந்ததற்கு அறிகுறியாக அந்தக் சீனக் கடலோடி தலையை அசைப்பானேன்?” என்றெல்லாம் எண்ணிப் பார்த்த இளைய பல்லவன், தான் ஆராய்ந்துணர முடியாத வேறு ஏதோ பலத்த அபிலாஷையொன்று அமீரின் உள்ளத்தில் உலாவுகிறது என்று திட்டமான முடிவுக்கு வந்தான். ஆனால் அந்த அபிலாஷை எதுவாயிருக்கக் கூடும் என்பதைப்பற்றி மட்டும் அவனுக்கு விளக்கம் கிடைக்கவில்லையாகையால் அவன் நின்ற நிலையிலேயே அநபாயன்மீது கண்ணைத் திருப்பிக் கண்கள் மூலமே கேள்வியொன்றையும் வீசினான்.

அந்தச் சமயத்தில் அநபாயன் முகத்திலும் சிந்தனை பலமாகப் பரவிக் கிடந்தது. கிட்டத்தட்ட கருணாகர பல்லவன் உள்ளத்தே எழுந்த கேள்விகளைப் போன்ற கேள்விகளே அவன் சிந்தனையிலும் எழுந்துலாவிக்கொண்டிருந்தன. ‘காந்தம் என்னை இழுக்கிறது என்று எதைக் குறிப்பிட்டான் அமீர்? அதைக் கேட்டதும் அகூதா ஏன் தலையசைத்தான்!’ என்பது அவனுக்கும் சந்தேகத்தை அளித்ததால், “இனி நீ சொல் கதையை, அமீர்” என்று அகூதா உத்தரவிட்டு அமீர் கதையைத் துவங்கத் தொண்டையைக் கனைத்துக் கொண்டதும் அவனைக் கதையைத் துவங்கவிடாமல் தடுத்த அநபாயன், “உன்னை இழுக்கும் காந்தம் எது அமீர்?” என்று கேள்விக்கணை ஒன்றைத் தொடுத்தான் இடையே.

கதையைத் துவங்க முயன்ற அமீர், தனது நாவில் உதயமான சொற்களைச் சரேலெனத் தேக்கிக் கொண்டு புத்தொளியில் ஜொலித்த தன் கண்களை அந்த அறையைச் சுற்றிலும் ஒருமுறை ஓடவிட்டு, அநபாயன் கேட்ட கேள்வி அங்கிருந்த ஒவ்வொருவர் முகத்திலிருந்தும் புறப்படுவதைக் கவனித்தான். அந்தப் பார்வைகளில் சந்தேகம் துளிர் விடுவதையும் அவன் புரிந்து கொண்டதன்றி அதன் காரணத்தையும் ஓரளவு ஊகித்துக் கொண்டானாதலால் அகூதாவிடம் திரும்பி, இதழ்களில் புன்முறுவலொன்றையும் கொட்டினான். அத்துடன், “நான் சொல்வதை இவர்கள் யாரும் நம்பவில்லை” என்றும் சீனக் கடலோடி யிடம் சுட்டிக் காட்டினான்.

அமீரின் சொற்களை ஆமோதிக்கும் வகையில் தலையை அசைத்த அகூதா, “இவர்கள் நம்புவது கஷ்டம். சந்தர்ப்பங்கள் அப்படியிருக்கின்றன. தவிர, இவர்கள் காந்தத்தின் சக்தியை அனுபவிக்காதவர்கள்” என்று பதிலும் சொன்னான். இந்தச் சில வார்த்தைகளை உதிர்த்த அகூதாவின் சொற்களில் அன்பு கனிந்து கிடந்தது. அது அமீரிடம் ஏற்பட்ட அன்பா? அல்லது காந்தம் என்று சொல்கிறார்களே அதன் நினைப்பில் ஏற்பட்ட கனிவா? விடை சொல்ல முடியாத அளவுக்கு அந்தக் கொள்ளைக் காரன் குரலும் குழைந்து கிடந்தது.

காந்தம் எதுவாயிருந்தாலும் அதை நினைத்த மாத்தி ரத்தில் அந்தக் கொள்ளைக்காரன் குரலில் குழைவையும் கண்களில் பேரொளியையும் வரவழைக்கக் கூடிய சக்தி அதற்கிருந்ததை அறிந்த அநபாயன் மிகவும் வியப்பெய் தினானாகையால், “எங்களுக்குக் காந்தத்தின் அனுபவ மில்லாதிருக்கலாம், அனுபவமிருப்பவர்கள் விளக்கலா மல்லவா?” என்று வினவினான்.

அந்த வினாவைக் கேட்டதும் சற்றே சங்கடப்பட்ட அமீர், “விளக்குவது அவசியமா?” என்று வினவினான்.

“மிகவும் அவசியம்” என்று திட்டமாகக் கூறினான் அநபாயன்.

“அநபாயரே! நான் சொன்னதில் நம்பிக்கையில்லையா உங்களுக்கு?” என்று மீண்டும் கேட்டான் அமீர்.

அநபாயன் விழிகள் அமீரின் மீது அன்பு வெள்ளத்தைச் சொரிந்தன. “எங்கள் நிலைமை உனக்கு விளங்கவில்லையா அமீர்? நாங்கள் அரசகுலத்தில் பிறந்தவர்கள். சில சம்பிரதாயங்களுக்கும் நல்லுணர்ச்சிக்கும் அடிமைப் பட்டவர்கள். உன்னை நாசம் செய்து ஆபத்திலிருந்து தப்பு வதை நல்ல ரத்தமுள்ள மன்னர்குலத் தோன்றல் எவன் தான் ஒப்புக்கொள்வான்? உன் வாணிபத்தை ஒழித்து உன்னை நாடு கடத்தி நாங்கள் தப்ப இஷ்டப்படவில்லை அமீர். நீ தியாகம் செய்யவில்லையென்று சொல்லுகிறாய். அது உண்மையல்ல. இதைவிடப் பெரும் தியாகத்தை உலகத்தில் யாரும் செய்ய முடியாது. என்னிடம் அன்பினால் இந்தத் தியாகத்தை நீ செய்ய முன் வந்திருக்கிறாய். இதை நீ மறுத்தால் நானோ கருணாகரனோ, காஞ்சனா தேவியோ எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? முடியாது, ஒருகாலும் முடியாது” என்ற அநபாயன் பேச்சிலும், அன்பு வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

“அமீரின் பெருவிழிகளில் நீர் மெல்லத் திரண்டது. பின்புறமாகத் தலையைத் திருப்பிப் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த அங்கியின் பகுதியை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டான். பிறகு மீண்டும் திரும்பி அநபாயனை நோக்கிக் கேட்டான், “நீங்கள் இந்த பாலூர் வராதிருந்து நான் என் குருநாதரை மட்டும் சந்தித் திருந்தால் என்ன நடந்திருக்குமென்று நினைக்கிறீர்கள்?” என்று .

“என்ன நடந்திருக்கும்?” என்று அநபாயனும் பதிலுக்குக் கேட்டான்.

“நான் சொன்னால் நம்பமாட்டீர்கள். என் குருநாதரைக் கேளுங்கள்” என்றான் அமீர்.

அகூதாவின்மீது தன் விழிகளைத் திருப்பினான் அநபாயன். அகூதாவின் சிறுவிழிகளில் ஆரம்பத்திலிருந்த புத்தொளியே பரவிக் கிடந்தது. அநபாயன் விழிகளில் தொனித்த கேள்விக்குப் பதில் சொல்லிய அவன் குரலிலும் பெருத்த உறுதியிருந்தது. “அப்பொழுதும் இந்த வாணிகம் விற்கப்பட்டிருக்கும்” என்று திட்டமாகக் கூறினான் அகூதா.

“ஏன்?” என்று குறுக்கிட்டான் இளையபல்லவன்.

“காந்தம் இழுத்திருக்கும்” இன்னும் அதிகத் திட்டமாக வந்தது அகூதாவின் பதில்.

“என்ன காந்தம் அது?” என்று மறுபடியும் கேட்டான் இளையபல்லவன்.

அகூதாவின் சொற்கள் நிதானமும் உவகையும் கலந்து ஒலித்தன. “கடலெனும் காந்தம்” என்ற அகூதா மிகுந்த பெருமையுடன் அமீரைப் பார்க்கவும் செய்தான்.

“கடலெனும் காந்தமா!” இளையபல்லவன், அநபாயன் இருவருமே ஏககாலத்தில் வியப்புடன் கேள்வியை வீசினார்கள்.

அந்தக் கேள்விகள் ஏககாலத்தில் எழுந்ததையோ, அவற்றில் விவரிக்க இயலாத வியப்பு தொக்கியிருந்ததையோ, சிறிதும் கவனிக்காமல் சொற்களை மட்டும் காதில் வாங்கிக் கொண்ட அந்தச் சீனக் கடலோடி, தன் சிறு விழிகளை அவர்கள் மீது சில விநாடிகள் நிலைக்க விட்டான். பிறகு அறையில் இரண்டு விநாடிகள் அப்படியும் இப்படியும் உலாவினான். கடைசியாக நின்ற தோரணையிலேயே தனக்கருகேயிருந்த மஞ்சத்தின் முகப்பில் கைகளைச் சுற்றி அணைத்து முதுகை லேசாகக்கூனி மற்றவர்களை நோக்கினான். அவன் கண்களில் பெரும் கனவு படர்ந்தது. கனவைத் தொடர்ந்து உதிர்ந்த வார்த்தைகளிலும் கனவில் பேசும் மனிதன் நிலைமையே நிலவிக் கிடந்தது.

“ஆம், கடலெனும் காந்தம்தான். சிலர் உள்ளங்களைப் பொன் கவர்கிறது. மற்றும் சிலர் உள்ளங்களை மண் கவர்கிறது. வேறு சிலர் உள்ளங்களைப் பெண்களின் விழிகள் கவர்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக ஒரு காந்தம் இருக்கிறது. அதுதான் இந்த மாநிலத்தைச் சூழ்ந்திருக்கும் பெரும் கடல். மாலுமிகளின் மனத்தை அது கவர்வதுபோல் வேறு எதுவும் கவர்வது கிடையாது. நிலையுடனிருக்கும் மண்ணில் வாழ்பவன் மண்மீது வைக்கும் ஆசையைவிட, நிலையற்றுச் சதா சலனப்படும் கடலின்மீது ஆசை வைக்கிறான் மாலுமி. அதன்மீது ஆடும் மரக்கலம் மாலுமிக்கு உயிர். நான் சொல்வது உங்களுக்குப்புரியாது. எந்த மனிதனாவது மாலுமியாக வாழ்க்கையைச் சில வருஷங்கள் நடத்திவிட்டால் அவனை மீண்டும் கடலெனும் காந்தம் இழுத்தே செல்லும். மாலுமிகளின் சரித்திரத்தைக் கவனியுங்கள் அநபாயரே! உங்கள் நாட்டின் மேல்புறத்துக்கும் எகிப்துக்கும் கடல் வழிகளை முதலில் கண்டுபிடித்த யவன ஹிப்பலாஸ் ஆயுள் முழுவதையும் மரக்கலத்தில் ஏன் கழித்தான்? அவனுக்கு யவன நாட்டில் பெண்டில்லையா, பிள்ளையில்லையா, நில மில்லையா? இருந்தது அநபாயரே! இருந்தது. அவன் பெருங்குடிமகன். ஆனால் மீண்டும் மீண்டும் கடலின் கவர்ச்சி அவனைக் கட்டி இழுத்தது. தன் மரக்கலத்தில் எரித்திரியக் கடலில் ஓடினான். அலைகளையும் புயல்களையும் எதிர்த்தான்.

சாகரத்தின் ஆபத்துகளே ஓர் இன்பமாயிற்று அவனுக்கு. பாரதத்துக்கும் எகிப்துக்கும் மூன்று கடல் வழிகளை வகுத்தான். மரக்கலமே அவன் வீடாயிற்று. கடல் அலையே அவன் வாழும் நிலமாயிற்று. இந்தக் கீழ்த் திசையைத்தான் எடுத்துக் கொள்ளுங்கள். யவனனான அலெக்ஸாண்டர் பாரதத்தின் கீழ்த் துறை முகங்களுக்கும், சொர் ண பூமிக்கும் சாவகத்தின் தீவுக்கும் மூன்று வழிகளை வகுத்தான். இந்தக் கடல் பிராந்தியத்தின் அபாயங்கள் உங்களுக்குத் தெரியாது. இன்றும் புகாரிலிருந்தும், *குருலாவிலிருந்தும் நாகையிலிருந்தும் மரக் கலங்கள் பாலூர் வந்தே கீழ்திசை செல்கின்றன. ஏன்? நேர்கிழக்கு வழியில் கடல் சுழல்களும், பேரலைகளும் கடும் புயல்களும் உண்டு. அந்த வழியிலும் மாலுமிகள் சிலர் செல்கிறார்கள். மாலுமி வாழ்க்கையை ஒருமுறை நடத்தியவனுக்குக் கடலின் ஆபத்துகளே பேரின்பம். நீங்கள் சொர் ண பூமியின் ஜலசந்தியின் பெரும் அலைகளையும் அங்கு எழும் பெரும் உப்பங்காற்றையும் அனுபவிக்க வேண்டும். அப்பொழுது தெரியும்.

அகூதாவை இடைமறித்த அமீர், “சொர் ண பூமியின் துறைமுகங்கள் எத்தனை அழகு வாய்ந்தவை குருநாதரே! அங்கெல்லாம் எத்தனை சாந்தமானது கடல். ஆனால் பிறகு சீனக்கடலுக்குப் போய்விட்டாலோ கடலரசனுக்குத் தான் எத்தனைச் சீற்றம்! மரக்கலத்தின் பக்கப் பலகையில் நின்றால் வாரியடிக்கும் அலை நீர்த்துளிகள் எத்தனை இன்பம், எத்தனை இன்பம்!” என்று கூவினான். அகூதாவின் கண்களைப் போலவே அவன் கண்களிலும் கனல் விரிந்து கிடந்தது. அந்தச் சமயத்தில் அந்த இருபெரும் மாலுமிகளும் அந்த அறையையும், ஏன் தங்கள் அனைவரையுமே மறந்துவிட்டதையும், இருவரும் சீனக் கடலில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிட்டதையும், சந்தேகமற உணர்ந்து கொண்ட அநபாயன், மனித உணர்ச்சிகளை அத்தனை தூரம் கவரக்கூடிய கடலைப் பற்றிச் சற்றுப் பொறாமையும் கொண்டான். அதுவரை அமீரைத் திறமையுள்ள மாலுமி என்று மட்டுமே நம்பியிருந்தான் அநபாயன். அவன் கடலிடம் காதல் வெறி கொண்ட உலகத்தின் மிகச் சிறந்த கடலோடிகளில் ஒருவனென்பதையும் அன்றே புரிந்து கொண்டதால் சொல்லவொண்ணா ஆச்சரியத்துக்கும் உள்ளானான்.

அகூதாவின் பேச்சைக் கேட்கக் கேட்கக் கடலில் மரக் கலத்தில் ஓடுவது போன்ற உணர்ச்சிகளைப் பெற்றதால் இருப்பிடத்தை அறவே மறந்த அமீர் சில விநாடிகள் பேசாமலிருந்தான்.

பிறகு கடலைவிட்டு நிலத்தில் காலடி எடுத்து வைத்து, “உண்மை இதுதான் அநபாயரே! உங்களுக்கு மண்ணாசை யிருப்பதுபோல் எனக்குக் கட்லாசை. இந்த ஊரில் வாணிபம் நடத்திய நாள்களில் எத்தனை நாள் கடலோரத்தில் உட்கார்ந்திருப்பேன்! எத்தனை நாள் கடலின் பரந்த நீரையும் அதற்கப்பால் உள்ள நிலங்களையும் நோக்கியிருப்பேன்! எத்தனை நாள் கடல் வாழ்க்கையை நினைத்துப் பெருமூச்செறிந்திருப்பேன் என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களைத் தப்புவிக்க நீங்கள் வழி கேட்டதும் சற்றுத் திணறினேன். ஆனால் குருநாதரைக் கண்டேன். திட்டம் விநாடி நேரத்தில் உருவாயிற்று. உங்களை, ஏன், என்னையும் வெகு சுலபமாக இந்த ஊரிலிருந்து வெளியேற்றிவிட முடியும். சற்று இப்படி வாருங்கள்” என்று கூறிய அமீர் மற்றவர்களைத் தன்னைத் தொடரும்படி சைகை செய்துவிட்டு அறையை விட்டு வெளியே நடந்தான். மற்றவர்களும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். அந்த வீட்டின் மற்றொரு கட்டையும் தாண்டிக் கடைசிக் கட்டுக்கு வந்த அமீர் அந்தக் கட்டின் இறுதியிலிருந்த வாயிற்படியைச் சுட்டிக் காட்டினான். பிறகு பக்கத்திலிருந்த ஒரு பெரும் அறையைச் சரேலெனத் திறந்தான். “இதோ நம் விடுதலைக்கு வழி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு” என நான்கு பெரும் பிசாசுகளைக்கையால் சுட்டி எண்ணியும் காட்டினான்.

அதற்குமேல் யாருக்கும் விளக்கம் தேவையில்லா திருந்தது. திட்டமும் கதையும் தெளிவாகப் புரிந்தது மற்றவர்களுக்கு. திட்டம் புரிந்தது; அது விடுதலைக்கு நிச்சயம் வழியென்றும் புரிந்தது. ஆனால் அந்த வழியை ஒப்புக்கொள்வதா என்ற நினைப்பால் பெரும் சீற்றமே ஏற்பட்டது மற்றவர்களுக்கு. சீறும் வழிகள் பல திரும்பின அரபு நாட்டு அமீரின் மீது.

Previous articleRead Kadal Pura Part 1 Ch22 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch24 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here