Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch24 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch24 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

100
0
Read Kadal Pura Part 1 Ch24 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch24 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch24 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 24 : நீர்க்குடங்கள் நான்கு.

Read Kadal Pura Part 1 Ch24 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

சிறு வணிகர் வீதியிலிருந்த தன் வீட்டுக் கடைக் கட்டின் பெரும் அறையொன்றைச் சரேலெனத் திறந்து ‘விடுதலைக்கு இதோ வழி’யென அமீர் சுட்டிக்காட்டிய நான்கு பெரும் பிசாசுகளைக் கண்டதும் திட்டமும் வழியும் தெள்ளெனப் புரிந்துவிட்டதன் விளைவாக அநபாயனுக்கும் அவனைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் சந்துஷ்டிக்குப் பதிலாகச் சீற்றமே பெரிதும் ஏற்பட்டதால் கனல்கக்கும் விழிகள் பல அமீரின்மீது திரும்பினவென்றாலும், அமீர் மட்டும் அந்த விழிகளை ஏறெடுத்துப் பார்க்காமலும், தன் விழிகளை எதிரே அறையின் பெரும் பாகத்தை அடைத்து நின்ற அந்த நான்கு பிசாசுகளின் மீதே நாட்டிக் கொண்டும் நீண்ட நேரம் நின்றான். அந்தப் பிசாசுகளைப் பார்க்கப் பார்க்க அவன் ஓரளவு இருந்த இடத்தையும் சூழ் நிலையையுங்கூட மறந்துவிடவே அவன் விழிகளில் பெரிய அன்பும் ஆர்வமும் துளிர்விட்டதன்றி அந்தப் பிசாசு களைப் பற்றி அவன் விளக்க முற்பட்டபோது, குரலிலும் அந்த அன்பும் ஆர்வமும் தொனிக்கவே செய்தன.

“அநபாயரே! இளையபல்லவரே! பிசாசுகளைப் போல் பயங்கர உருவங்கள் தீட்டப்பட்ட காரணத்தாலேயே பிசாசுகளே எதிரே நிற்பது போன்ற பிரமையும் அச்சத்தையும் அளிக்கும் இந்த நான்கும் மண்ணால் செய்யப்பட்ட குடங்கள் தான். ஆனால் பாலூரிலுள்ள அத்தனைப் பொன்னையும் கொட்டிக் கொடுத்தாலும் இந்தக் குடங்கள் அகப்படுவது கஷ்டம். தலையை வெளியே நீட்டும் கொட்டை எடுத்தெறியப்பட்ட முந்திரிப்பழம் போல் அடியில் சற்றுக் குறுகலாகவும் இடையே பெரிதாக புடைத்தும் கழுத்தில் வளைவுக்காகச் சிறிது குறுகிய போதிலும் பெரும் வாய்களுடன் உங்கள் முன்பு தோற்ற மளிக்கும் இந்த நீர்க்குடங்கள் நான்கும், உலகத்தின் ஒரே இடத்தில்தான் கிடைக்கன்றன. அந்த இடம்தான் சீனா. பார்ப்பதற்கு உலோகத்தால் செய்யப்பட்டவை போல் தெரியும் இந்தப் பெருங்குடங்கள் உண்மையில் மண் குடங்கள். சீனத்தின் உயர்ந்த மண்ணிலே செய்யப்பட்டதால் சாதாரணமாக உடையாதவையும் மிகவும் கடினமானவையும், முந்திரிப் பழம் போலவே செவ்விய வர்ணம் பூசப்பட்டதாலும் பிசாசுகள் போன்ற பல உருவங்கள் அந்தச் சிவப்பு வர்ணத்தின்மீது வெள்ளைக் கோடுகளாக இழுக்கப்பட்டிருப்பதாலும் பார்ப்பதற்கு மிக பயங்கரத் தோற்றத்தை அளிக்கக் கூடியவையுமான இந்த மண் குடங்களில்தான் சீனர்கள் தங்கள் கப்பல்களில் பயணத்துக்கு நீர் சேகரித்து வைக்கிறார்கள். இந்த நீர்க்குடங்களின் விலை அதிகமாகையால் இவற்றைச் சாதாரண மரக்கலச் சொந்தக்காரர்கள் வாங்குவதில்லை. பெரும் வணிகரும் தனிகரான மாலுமிகளுமே வாங்க முடியும். மரக்கலங்களில் நீர் எடுத்துச் செல்ல இந்த மண் குடங்களைவிடச் சிறந்த பாண்டங்கள் உலகத்தில் வேறெந்த நாட்டிலும் கிடையாது. அரபு நாட்டு மரக்கலங்களில் மரக்குடங்களில் நீர் சேகரித்து வைக்கப்படுகிறது. தமிழகத்தின் மரக்கலங்களில் யவனர் மரக்கலங்களைப் போல் உலோகங்களால் செய்யப்பட்ட தவலைகளில் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் அவையனைத்தும் இரண்டாம் பக்ஷம். ஏன் தெரியுமா?” என்று கனவில் பேசுபவன் போல் பேசிய அமீர் கனவில் கேள்வி கேட்பவன் போலவே கேட்டான்.

அவன் மனம் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக் கவே யாரிடமிருந்தும் பதில் வராது போனாலும் பதில் வந்ததாகப் பாவித்துக் கொண்டு அந்தப் பதிலுக்குப் பதில் சொல்லும் முறையில் மேற்கொண்டு விவரிக்கவும் தொடங்கி, “சொல்கிறேன் கேளுங்கள். யவனர் மரக்கலங் களிலும் தமிழகத்தின் மரக்கலங்களிலுமுள்ள குடங்கள் செம்பு அல்லது பித்தளையினால் செய்யப்பட்டவை. உலோகத்தில் வைக்கப்படும் நீர் காலக்கிரமத்தில் பாதிக்கப்படுகிறது. உலோகத்தின் அடியில் பலப்பல விதமான வண்டல்கள் சீக்கிரம் தேங்குகின்றன. ஆகவே அந்த மரக்கலங்கள் இரண்டு மாதங்களுக்கொருமுறை ஏதாவது ஒரு துறைமுகத்துக்கு நீர் சேகரிப்பதற்கே செல்ல அவசியம் ஏற்படுகிறது. அரபு நாட்டு மரக்கலங்களில் நீர்க்குடங்கள் மரத்தால் செய்யப்பட்டவை யாகையால் உலோகத் தவலைகளைவிட அவை சிறந்தவை. ஆனால் மரத்தில் நீரின் சம்பந்தத்தால் சீக்கிரம் பாசி பிடிக்கிறது. அதிக நாள் பாசியிருந்தால் குடிநீரில் ஒருவித வேகம் வருகிறது. ஆகவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது அரபு நாட்டுக் கப்பல்கள் ஏதாவது ஒரு துறைமுகத்தில் குடிநீர் சேகரிக்கத்தங்கும். ஆனால் இந்த மண் குடங்களை உடைய சீன மரக் கலங்களுக்கு அத்தகைய கஷ்டங்கள் ஏதுமில்லை. இவற்றில் சேகரிக்கப்படும் குடிநீர் ஒரு வருஷமானாலும் கெடாமலிருக்கும். குடிநீருக்காக எந்தச் சீனக் கப்பலும் துறைமுகங்களை நாடுவதில்லை. ஒரே சமயத்தில் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு வேண்டிய குடிநீரைச் சீனக்கப்பல்களில் பார்க்கலாம். நானும் என் குருநாதரும் சீன அரசினர் கப்பல்களுடன் போர் செய்த காலங்களில் நீர் சேகரிப்ப தற்கு எந்தத் துறைமுகத்தையும் நாடியது கிடையாது. தென் சீனாவில் எங்கள் துறைமுகத்தில் இந்தக் குடங்களில் பிடிக்கும் நீரே தேவைக்குப் போதுமானது! இப்பொழுது கூட குருநாதரின் மரக்கலம் ஒவ்வொன்றிலும் இம்மாதிரி குடங்கள் ஐம்பதுக்கு மேல் இருக்கும். ஆகையால்தான் எனக்குத் துணிவு ஏற்பட்டது. குருநாதரைக் கேட்டேன், மகிழ்ச்சியடைந்தேன்” என்ற அவன் சொற்களில் உவகை பெரிதும் துள்ளி நின்றது.

அவன் வார்த்தைகளில் தொனித்த ஆனந்தம், சிவந்த வர்ணத்தின்மீது வெள்ளைக்கோடுகளில் பல்லை இளித்த பயங்கர உருவங்கள் தீட்டப்பட்டிருந்ததால் பிசாசுகளைப் போலவே காட்சியளித்த அந்த நீர்க்குடங்களைப் பற்றிய விவரங்களைச் சொன்னபோது அவன் குரலில் எழுந்த உணர்ச்சி, வேகம் இவ்விரண்டையும் அநபாயன் கவனிக்கவே செய்தானென்றாலும் அமீர் சொல்வதைச் சொல்லி முடிக்கட்டுமென்று பொறுமையோடிருந்தான். அதிகப் பொறுமையில்லாத கருணாகர பல்லவன் மட்டும், அமீரின் கனவில் குறுக்கிட்டு, “அமீர்! உங்களுக்குக் குரு நாதரைக் கண்டதும் ஆனந்தம், நீர்க்குடங்களை நினைத்ததும் ஆனந்தம். இன்னும் எதெதில் ஆனந்தம் இருக்கிறது?” என்று கோபத்தால் கடுமை பெரிதும் கலந்து நின்ற சொற்களை உதிர்த்தான்.

நீர்க்குடங்களின்மீது நாட்டிய கண்களை நாட்டியபடி இளையபல்லவனைத் திரும்பிப் பாராமலே, “எனது உயிர்த் தோழர், தமிழகத்தின் பிற்காலப் பேரரசர் அநபாயரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் தப்ப வைப்பதிலிருக்கிறது. மூன்றுக்கும் பெரும் சம்பந்தம் இருக்கிறது” என்றான் அமீர்.

அவன் சொன்னதன் பொருள் திட்டவட்டமாக விளங்கவில்லையாதலால், அதற்கு விளக்கம் கேட்க இடையே பாய்ந்தது ஒரு குரல். “எந்த மூன்றுக்கும் சம்பந்தம்?” என்று இயற்கையாகக் கடுமையில்லாத குரலில் சற்றே கடுமையை வரவழைத்துக் கொண்டு காஞ்சனா தேவி கேள்வியொன்றைத் தொடுத்தாள்.

அமீர் மெள்ளத் தலையைத் திருப்பி, காஞ்சனா தேவியின் கண்களோடு தன் கண்களை ஒரு விநாடி சந்திக்கவிட்டான். பிறகு சொன்னான், “குருநாதரைச் சந்தித்தது, சீனநாட்டு நீர்க்குடங்கள் என்னிடமிருந்தது, அநபாயர் இந்த ஏழையின் உதவியை நாடியது, இந்த மூன்றிலும் எனக்கு ஆனந்தம். மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. “

“என்ன தொடர்பு?” என்று மீண்டும் கேட்டாள் காஞ்சனாதேவி.

அமீர், காஞ்சனாதேவியையும் பார்த்து நீர்க்குடங்களையும் பார்த்தான். பார்த்தது மட்டுமின்றி அந்தக் குடங்களை நோக்கிக் கையை நீட்டி, “இளவரசி! இந்தக் குடங்களை நான் ஏன் வாங்கினேன் தெரியுமா?” என்றொரு கேள்வியையும் கேட்டான்.

“எனக்கெப்படித் தெரியும்?” என்றாள் காஞ்சனாதேவி அவன் கேள்வியில் அதிகச் சிரத்தை காட்டாமலே.

ஆனால் நீர்க் குடங்களை மீண்டும் நோக்கிய அமீரின் கண்களிலோ சிரத்தையும், கனிவும் மிதமிஞ்சிப் பரந்துநின்றன. “இந்த நீர்க்குடங்களை நான் வாங்கியபோது இவை உங்களைத் தப்ப வைக்கும் என நான் கனவுகூடக் காணவில்லை. இந்த நில வாழ்க்கையில் சலித்ததால் நீர் வாழ்க்கையை மேற்கொள்ள இவற்றை வாங்கினேன். கடலெனும் காந்தம் என்னை இழுத்ததால் என் வாணிபத்தை ஏறக்கட்டிவிட்டு ஒரு மரக்கலம் வாங்கித் திரை கடலோடத் திட்டமிட்டேன். அந்தத் திட்டத்தின் முதல் படியாக இவற்றை வாங்கினேன். குருநாதரிடம் மரக்கலப் பயிற்சியை அடைந்த பிறகு வாணிபம் செய்வதாயிருந்தால் தரை வாணிபம் வேண்டாம். அலைகடலில் ஓடி மரக் கலத்தின் மூலம் வாணிபம் புரிவோம் என்ற ஆசை ஏற்பட் டது. அந்த ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ள பாலூர் வந்தேன். வாணிபத்தைப் பெருக்கினேன். சென்ற வருடமே வாணிபத்தை ஏறக்கட்டி மரக்கலம் வாங்கி நீரின் மேல் நடந்திருப்பேன். ஆனால் கடலைப்போலவே மற்றொரு காந்தம் என்னைப் பற்றிக் கொண்டது. இந்தப் பாலூரிலே… ” என்று சொல்லிக்கொண்டே போன அமீர் சற்று நின்று அநபாயரைத் திரும்பி நோக்கினான். “அது இந்தக் காந்தம்தான். இவர் நட்பில் சிக்குண்டேன். பாலூரில் தமிழருக்குத் தொண்டு புரியத் தீரமும் சாகசமும் நிறைந்த செயல்களில் இவர் ஈடுபட்டதைக் கண்டு முதலில் வியப்பின் வசப்பட்டேன். பிறகு இவர் அடிமையாகவே ஆகிவிட்டேன். இவர் மூலம்தான் இப்பொழுது இந்த அடிமைத்தளையும் போகிறது. ஆனால் அந்த அடிமைத்தளை எத்தனை இன்பமானது!” என்று சொல்லிப் பெரு மூச்சும் விட்ட அமீர் திடீரெனத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, “அந்த நட்பு அவர் விடுதலைக்கு மட்டுமல்ல, அவர் நண்பர்கள் விடுதலைக்கும் மார்க்கம் கேட்டது. சமயத்தில் குருநாதரும் வந்தார். என்னிடமும் சந்தர்ப்ப வசத்தால் நீர்க்குடங்கள் இருந்தன. விதி எப்படித்தான் காரியங்களை நடத்திக் கொள்கிறது பாருங்கள்! குருநாதர் இல்லையேல் இந்த நீர்க்குடங்களால் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் இத்தகைய நீர்க்குடங்கள் சீனக் கப்பல்களுக்காக ஏற்பட்டவை. வேறு கப்பல்களில் இவற்றை ஏற்றச் சொன்னால் நமது திட்டம் அம்பலமாகிவிடும். ஆகவே குருநாதரைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் மரக்கலத்துக்கு நீர் சேகரிக்கும் பாவனையில் அவர் மரக்கலத்தின் ஐந்தாறு குடங்களை ஊருக்குள் கொண்டு வருவது, போகும்போது குடங்களை மாற்றி விடுவது, அல்லது கூடச் சேர்த்துவிடுவது, சில குடங்களில் நீர், சில குடங்களில் மனிதர்! யார் கண்டுபிடிக்க முடியும்? குருநாதர் வந்ததால் குடங்களுக்குப் பயன் பிறந்தது. குடங்களுக்குப் பயன் பிறந்ததால் அநபாயருக்கு நான் உதவ முடிந்தது. மூன்றுக்கும் சம்பந்தம் கேட்டீர்களே, புரிகிறதா தேவி?” என்று கேட்கவும் செய்தான்.

காஞ்சனாதேவிக்கு மட்டுமென்ன மற்றவர்களுக்கும் திட்டம் தெளிவாகத்தான் புரிந்திருந்தது. எதிரே பயங்கரமாக உயரமாக நின்ற நீர்க்குடங்களைக் கவனித்த அநபாயன், ‘இந்த நீர்க்குடம் ஒவ்வொன்றிலும் மனிதர் எழுந்து நின்றாலும் தலை வெளியே தெரியாது. விந்தையான திட்டம்!’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். “அமீர் சொல்லுவதுபோல் இந்த நீர்க்குடங்களில் ஒளிந்து சென்றாலும் இவற்றைப் பாலூர் சுங்க அதிகாரிகள் சோதிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவும் செய்தான் சிறிது சந்தேகத்துடன்.

அநபாயன் மனத்திலோடிய எண்ணங்களை அமீர் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆகவே அவன் சொன்னான்: “இந்த நீர்க்குடங்களையும் சுங்க அதிகாரிகள் சோதிக்கலாமென்று நினைக்கிறீர்கள். ஆனால் நீர்க்குடங்கள் சுங்கச் சாவடிக்குச் செல்லவேண்டிய அவசிய மில்லை . “

“ஆம் அவசியமில்லை” என்று அதுவரை மௌனமா யிருந்த சுங்க அதிகாரி கண்டியத்தேவனும் சொன்னான்.

“உண்மையாகவா?” என்று இடையே புகுந்து கேட்டான் இளையபல்லவன்.

“ஆம் இளைய பல்லவரே! மரக்கலங்களுக்குச் செல்லும் நீர்க்குடங்களைச் சாதாரணமாகச் சோதிப்பதில்லை. குடி நீருக்குத் தீர்வை போடும் அளவுக்குக் கலிங்கம் இன்னும் உயரவில்லை” என்றான் கண்டியத்தேவன்.

“இருக்கலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவர்கள் நீர்க்குடங்களையும் சோதிக்க மாட்டார்களென்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று மீண்டும் வினவினான் இளையபல்லவன்.

“சொல்ல முடியாது” என்று ஒப்புக்கொண்ட கண்டியத்தேவன், “நில மார்க்கங்களை அடைந்துவிட்ட பீமனும் அனந்தவர்மனும் உங்களை நீர் வழியிலும் தப்ப விடமாட்டார்கள். இத்தனை பெரிய நீர்க்குடங்கள் வண்டியில் போய் நீர்க் கரையில் படகுகளில் ஏற்றப்படுமுன்பு சோதிக்கப்படலாம். அப்படிச் சோதிக்கப்பட்டால் அதில் ஆபத்து இருக்கத்தான் செய்யும்” என்று வலியுறுத்தினான்.

“ஆபத்து இரு வகையானது” என்று சுட்டிக் காட்டி னான் இளையபல்லவன்.

நீர்க்குடங்கள் மீது கண்களை நிலைக்க விட்டு மற்ற வர்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்ற அமீர் சரேலெனத் திரும்பி, இளையபல்லவனை, “ஆபத்து இரு வகைப்பட்டதா?” என்று ஆச்சரியத்துடன் வினவினான்.

“ஆம் அமீர். இருவகைப்பட்டது” என்று உறுதியுடன் கூறிய இளையபல்லவன் குரலில் வெறுப்பும் மண்டிக்கிடந்தது.

“எனக்குப் புரியவில்லை இளையபல்லவரே” என்றான் அமீர்.

“புரியச் சொல்லுகிறேன், கேளுங்கள் அரபுநாட்டு வணிகரே. உமது திட்டத்தில் உயிரைப் பற்றிய ஆபத்து ஒன்று. ஆனால் அதைவிட நாங்கள் பெரிதாக மதிக்கும் மானத்தைப் பற்றிய ஆபத்து ஒன்று. ஆ க இரண்டு ஆபத்துகள் இருக்கின்றன. உயிரைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை . ஆனால் மானம், அதன் கதை வேறு” என்று உஷ்ணத்துடன் கூறிய இளையபல்லவன், “நீர்க்குடங்களில் நாங்கள் பதுங்கிச் சென்று சுங்க அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டால் பீமன் கையில் உயிர் போகும். ஆனால் மக்கள் கண்ணெதிரில் மானம் போய்விடும். உயிருக்காகக் குடங்களில் பதுங்கிய வீரர்கள் எனக் கலிங்கத்தின் நாவலர் கவிதைகளைப் பொழிவார்கள். சரித்திரத்தில் நாங்கள் பெரும் இடம்… ” என்று கூறி, பேச்சை முடிக்காமலே விட்டான். உள்ளெழுந்த கோபம் அவன் நாவைக் கூடக் கட்டியிருந்தது. அவன் குரலிலிருந்த சீற்றம் காஞ்சனாதேவியின் கண்களிலும் தெரிந்தது.

ஆனால் ஆந்தச் சீற்றத்தைச் சிறிதும் லட்சியம் செய்யாத அமீர் சொன்னான்: “தவறு, இளைய பல்லவரே, தவறு. தந்திரத்தால் தப்புவதை வீரத்தில் கண்ணியக் குறைவென்று சரித்திரத்தில் யாரும் கூறியதில்லை. எங்கள் நாட்டிலிருந்த பேரரசனான ‘கான்’ மாளிகைக்குள் புரட்சி வீரர்கள் குடங்களில் பதுங்கிச் சென்று அரசனை வெற்றி கண்டதாகப் பழங்கதை இருக்கிறது. இந்த வீரர்களைப் பேடிகளென்று சரித்திரம் கூறவில்லை. பதுங்கித் தப்பிச் சென்ற வீரர் கதைகள், மாறுவேடம் பூண்டு மாவீரர் தப்பிய கதைகள் சரித்திரத்தில் பல உண்டு. அரக்கு மாளிகையிலிருந்து சுரங்க வழியில் தப்பி வேதியர் வேடம் தாங்கி மறைந்துறைந்ததாக மாவீரர் ஐவரைப் பற்றி உங்கள் மகாபாரதமும் கூறுகிறது. அவர்களைக் கோழைகளாகப் புராணமோ சரித்திரமோ கூறவில்லை. பதுங்குவதும் மறை வதும் தவறல்ல. புலி பதுங்குவது பாய்வதற்காக. பதுங்கும் புலியைக் கோழையென்று யாரும் சொல்வதில்லை” என்றான் அமீர் திட்டமாக.

“அப்படிப் பதுங்கித் தப்ப நான் இஷ்டப்படவில்லை” என்றான் இளையபல்லவன்.

“எனக்கும் இஷ்டமில்லை” என்றாள் காஞ்சனாதேவி.

அமீரின் பெருத்த உதடுகளில் புன்முறுவல் தவழ்ந்தது. “இந்தத் திட்டத்தில் ஆபத்தில்லை. . வீரமில்லையென்று நினைக்கிறீர்கள். ஆனால் பேராபத்து இருக்கிறது. அதைச் சொன்னால் புரியும் உங்களுக்கு. கேளுங்கள். ” என்று ஆபத்தையும் விளக்கினான் அமீர். அவன் விளக்கத்தைக் கேட்டதும், ஆபத்து பலத்த ஆபத்துதான் என்பதை இளையபல்லவன் புரிந்துகொண்டான். அந்த ஆபத்தில் தங்களுக்கு உயிர் போகவும் கூடும் என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. வாளுக்கு நிரம்ப வேலை இருக்கத்தான் செய்தது அமீர் திட்டத்தில். ஆனால் திட்டம் சிறிது தவறினால்? காத்திருந்தது பெரும் படுகுழி!

Previous articleRead Kadal Pura Part 1 Ch23 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch25 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here