Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch25 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch25 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

91
0
Read Kadal Pura Part 1 Ch25 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch25 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch25 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 25 : வீரர்கள் திட்டம்.

Read Kadal Pura Part 1 Ch25 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

சீனத்து மரக்கல நீர்க்குடங்களில் அநபாயன், இளையபல்லவன், காஞ்சனாதேவி, குணவர்மன் ஆகிய நால்வரையும் பதுங்க வைத்துத் துறைமுகம் கொண்டு சேர்த்து, அங்கிருந்து மரக்கலம் மூலம் சோழநாடு அனுப்பிவிட அமீர் இட்ட திட்டம் வீரர் ஏற்க முடியாத பெரும் கோழைத் திட்டமாக ஆரம்பத்தில் இளைய பல்லவனுக்குத் தோன்றியதென்றாலும், அந்தத் திட்டத்தையும், சூழ்ந்து நின்ற ஆபத்தையும் அமீர் விளக்கியதும் அது அத்தனை தூரம் கோழைத் திட்டமல்ல என்பதையும் தனது வீரமும் வாளின் லாகவமும் அதில் பெரிதும் சோதிக்கப்படும் என்பதையும் இளையபல்லவன் இறுதியில் புரிந்து கொள்ளவே செய்தான்.

அப்படிப் புரிந்துகொண்டதால் அந்தத் திட்டத்தின் மூலம் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றி அவன் சிறிதும் பொருட்படுத்தவில்லை யென்றாலும், அந்தத் திட்டத்தின் விளைவாகக் காஞ்சனா தேவிக்கு ஏற்படக்கூடிய கொடிய ஆபத்தைப் பற்றி உள்ளுக்குள் லேசாக நடுங்கவும் செய்தான் சோழர்களின் படைத்தலைவன். இத்தனை ஆபத்து சூழ்ந்திருந்த அந்தத் திட்டத்தைத் தீவிர சிந்தனைக்குப் பின்பே அமீர் வகுத் திருக்கிறானென்பதும் அதைவிடச் சிறந்த ஒரு திட்டத்தைப் பாலூரின் அந்தச் சூழ்நிலையில் வேறு யாரும் வகுக்க முடியாதென்பதும் புலனாயிற்று அந்த வாலிப வீரனுக்கு. அமீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய முறைகளை விளக்க முற்பட்டது முதலே அதில் கலந்து கிடந்த பல ஆபத்துகளையும் புரிந்து கொண்ட இளையபல்லவன், அமீரின் சொற்களைக் குருவிடம் பாடம் கேட்கும் சீடன் போல் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் கேட்டான்.

“இந்தத் திட்டத்தில் ஆபத்தில்லை. இது கோழையின் திட்டம் என்று நினைக்கிறீர்கள் இளைய பல்லவரே! நன்றாகக் கேளுங்கள் நான் சொல்வதை!” என்று கூறி அறையைப் பெரிதும் அடைத்து நின்ற அந்த நான்கு நீர்க் குடங்களையும் காட்டி, “இந்த நீர்க் குடங்களின் பரிமாணத்தைப் பாருங்கள். இந்த ஒவ்வொரு குடத்தையும் உள்ளே நீரோ வேறு பொருளோ இன்றித் தூக்குவதற்குக் குறைந்த பட்சம் நான்கு ஆட்கள் தேவை. அதில் ஒரு மனிதரையும் பதுங்க வைத்தால் ஆறு ஆட்கள் இல்லாமல் தூக்க முடியாது.

ஆகவே இந்த நான்கு குடங்களில், உங்களையும், அநபாயரையும், கடாரத்து அரச குலத்தார் இருவரையும் பதுங்க வைத்தால் வண்டியில் இவற்றைத் தூக்கிவைப்பதற்கும் இறக்குவதற்கும் இருபத்து நான்கு அடிமைகள் தேவையாயிருக்கும். அது மட்டுமல்ல. இந்த நீர்க்குடங்கள் நான்கை மட்டும் நாம் கொண்டுபோக முடியாது. இவற்றுடன் குருநாதர் மரக்கலத்திலிருந்து வரும் இன்னும் ஐந்தாறு குடங்களையும் கலக்க வேண்டும். சில குடங்களில் நீர், சில குடங்களில் மனிதர், இப்படிக் கொண்டு போனால்தான் இடையே சோதனையிருந்தாலும் நீரிருக்கும் குடங்களைக் காட்டி, காவலாளிகளை ஏமாற்றப் பார்க்கலாம்.

அப்படிக் குருநாதரின் மரக்கலக் குடங்கள் ஆறும் சேர்ந்தால் அவற்றைத் தூக்க’ ஐம்பது அடிமைகளுக்கு மேல் தேவையாயிருக்கும். ஆ க மொத்தம் பத்து நீர்க்குடங்களைத் தூக்கிவைத்து இறக்க சுமார் ஐம்பது அடிமைகள் படைசூழ வண்டியைக் கடற்கரைக்குக் கொண்டு போனால் சும்மா இருக்கச் சுங்க அதிகாரிகள் என்ன முட்டாள்களா?” என்று கேட்டான் அமீர் இளைய பல்லவனை நோக்கி.

மரக்கலங்களுக்கு நீர் சேகரிக்கும் முறைகள் எதையும் அறியாத இளையபல்லவன், “மனிதர் மறைந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அக்குடங்களைத் தூக்கவும் இறக்கவும் ஆட்கள் தேவைதானே?” என்று வினவினான் பதிலுக்கு.

“தேவைதான் இளையபல்லவரே! ஆனால் அத்தனை அடிமைகளை யாரும் நகரத்திலிருந்து ஊர்வலமாகக் கடற் கரைக்கு அழைத்துப் போவது கிடையாது. கடற்கரையோரமாகப் படகுகள் தரையில் இழுக்கப்பட்டுள்ள இடங்களில் இவற்றை இறக்கவும், படகுகளில் ஏற்றவும் சுங்க அதிகாரிகள் நிரம்ப ஆட்களை நிறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் ஊழியத்துக்குப் பணம் கொடுப்பதுதான் நமது பொறுப்பு. அவர்களை விட்டு வேறு ஆட்களை அமர்த்தும் பழக்கம் கிடையாது. அப்படி அமர்த்தினால் ஆட்களுக்குள் சண்டை ஏற்பட்டுவிடும்” என்று விளக்கினான் அமீர்.

அமீரின் இந்தப் பதிலைக் கேட்டதும் உள்ள நிலையை மெள்ளப் புரிந்துகொள்ளத் துவங்கிய இளையபல்லவன், “அப்படியானால் நாம் யாரையும் இங்கிருந்து துணை கொண்டு செல்ல முடியாதா?” என்று வினவினான்.

“முடியாது இளையபல்லவரே! முடியாது! நீர்க் குடங்களைத் தவிர மேற்கொண்டு ஐந்தாறு பேர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களில் ஒருவன் வண்டி யோட்டலாம். இருவர் பின்பக்கம் உட்கார்ந்து குடங்கள் உருண்டு விடாதபடி பாதுகாக்கலாம். மீதியிருக்கும் அடிமைகள் மூவர் வண்டிக்கு முன்னும் பின்னும் ஓடலாம். இதுவே அதிகம். இதுவே அதிகாரிகளுடைய சந்தேகத்தை வளர்க்கும். “

“ஆறு பேர்கள் போனால் கூடவா?”

“ஆம் இளையபல்லவரே! வண்டியுடன் ஆட்கள் ஓடும் பழக்கம் பாலூரில் கிடையாது. வண்டி ஓட்டுபவர், சரக்குகளைப் பாதுகாப்பவர் இவர்கள்தான் போவது வழக்கம். மற்ற எல்லாப் பணிகளுக்கும் சுங்கச் சாவடிக் கருகிலும் கடற்கரையோரத்திலும் ஏராளமான ஆட்களிருக்கிறார்கள். “

“ஆகவே யாரும் வண்டியுடன் வரமுடியாது. “

“முடியாது. நான்கூட வர முடியாது. வர்த்தகப் பொருள் அனுப்பும் வணிகர் தங்கள் வண்டிகளை எதிர் பார்த்துச் சுங்கச் சாவடியிலோ கடற்கரையோரத்திலோ காத்திருப்பார்களே தவிர வண்டியுடன் ஓடமாட்டார்கள். “

“அப்படியானால் நீங்கள்… ”

“நீர்க்குடமொன்றில் பதுங்கி வரவேண்டும் அல்லது வண்டியை ஓட்டிக்கொண்டு வரவேண்டும். இரண்டாவது பணியைத்தான் நான் செய்ய உத்தேசம்?” என்று கூறிய அமீர், “சற்று இப்படி வாரும்” என்று இளைய பல்லவனையும் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு ஏற்கென்வே திறக்கப்பட்ட கொல்லைப்புறக் கதவு வழியாக வெளியே சுட்டிக்காட்டி, “அதோ அந்த வண்டி யைப் பாருங்கள்” என்றான்.

நீண்டதாக இருபுறங்களிலும் பெரும் மரச் சட்டங்கள் அடிக்கப்பட்டு மேற்புறம் திறந்து கிடந்த அந்த வண்டியில் அச்சு, இரிசி முதலியன மிகவும் பலமாயிருந்ததைக் கண்ட இளையபல்லவன், ‘பத்துப் பதினைந்து நீர்க்குடங்களை மட்டுமென்ன, இன்னும் அதிக பாரத்தையும் இந்த வண்டி தாங்கும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். நீர்க் குடங்கள் திடமாகத் தங்குவதற்காக வண்டியின் பக்கப் பகுதிகளில் பெரும் பிணைக் கயிறுகள் இருந்ததையும் கண்ட கருணாகர பல்லவன் முன்னேற்பாடுகளை அமீர் அப்பழுக்கின்றிச் செய்திருப்பதை உணர்ந்தான்.

அந்த வண்டியைச் சுட்டிக்காட்டி, “இதைப் பாருங்கள்” என்று மற்றவர்களுக்குக் கூறிய அமீர் அவர்கள் அதை நன்றாகப் பார்க்கச் சற்று அவகாசம் கொடுத்து விட்டுப் பிறகு சொன்னான்: “இளைய பல்லவரே! அநபாயரே! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். என் திட்டம் இம்மியளவும் தவறாமல் நிறைவேறுவதைப் பொறுத்திருக்கிறது நமது உயிர், சோழ நாட்டின் பிற்காலம், ஸ்ரீவிஜயத்தின் நற்காலம் இவையனைத்தும். இந்த வண்டி நல்ல கட்டுடையது. பெரும் கனப்பொருள்களை ஏற்றிச் செல்ல அச்சிலும் பூட்டுகளிலும் இருப்புப் பாளங்களையும் பாய்ச்சியிருக்கிறேன். சீனத்து நீர்க்குடங்கள் இருபதைக் கூட இதில் ஏற்றலாம்.

ஆனால் நமது திட்டத்துக்குப் பத்துக் குடங்களை ஏற்றினால் போதும். பத்துக் குடங்களில் நான்கு குடங்கள் நடுவண்டியில் வைக்கப்படும். மற்றவை அவற்றைச் சுற்றிலும் இருக்கும். நடுவிலுள்ள நான்கு குடங்களில் அநபாயர், குணவர்மர், இளைய பல்லவன், காஞ்சனாதேவி ஆகியவர்கள் இருக்கவேண்டும். மற்றக் குடங்களில் நீர் இருக்கும். குடங்கள் ஆடாமல் அசையாமல் இருப்பதற்காகப் பிணைக் கயிறுகளால் பிணைக்கப்படும். நான் வண்டியின் முகப்பில் உடகார்ந்து மாடுகளை ஓட்டுவேன். உங்களைச் சேர்ந்த மற்ற இருவர், அதாவது கண்டியத்தேவரும், கூலவாணிகரும் என் அடிமைகளின் உடைகளில் வண்டியின் பின்புறம் அமர்ந்து, நீர்க்குடங்களைப் பாதுகாப்பார்கள்… ”

இப்படிச் சொல்லிக்கொண்டே போன அமீர், சற்றுப் பேச்சை நிறுத்தி மற்றவர்களைத் திரும்பிப் பார்த்தான். அந்தத் திட்டத்தைக் கேட்டுக் கொண்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. அமீர் தன் உயிரை இந்தத் திட்டத்தின் மூலம் பணயம் வைக்கிறான் என்பது மற்றவர்களுக்குச் சந்தேகமறத் தெரிந்தது. எந்த இடத்திலாவது காவலருக்குச் சந்தேகமேற்பட்டு வண்டி நிறுத்தப்பட்டால், முதல் பலி அமீர்தான் என்பதையும், அப்படி அமீர் சிக்கும் பட்சத்தில் அவனுக்கு ஏற்படக்கூடிய கதி அதோ கதிதானென்பதையும் உணர்ந்துகொண்டதால் மற்றவர்கள் யாரும் எந்தப் பதிலுமே சொல்லவில்லை.

அப்படிப் பதில் சொல்லா விட்டாலும், அவர்கள் முகபாவத்திலிருந்தே அவர்கள் உள்ளூர ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட அமீர், “இப்படி என் சாரத்தியத்திலும், கூலவாணிகர், கண்டியத்தேவர் பாதுகாப்பிலும் செல்லும் வண்டி முதன் முதலில் பாலூர் கிழக்குக் கோட்டை வாசலில் காவலரால் நிறுத்தப்படும். காவலர் யாருக்கும் இதுவரை என்மீது எந்தச் சந்தேகமும் கிடையாது. என்னைப் பார்த்ததும் வண்டியைப் போகவிடுவார்கள். அப்படிப் போகவிட்டால் அடுத்தபடி நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்து வழியில் எதுவுமில்லை. கடற்கரையில் அலைகள் தரையைத் தொடுமிடத்தில்தான் உண்டு. ஒருவேளை என்மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு… ” என்று சொல்லிக்கொண்டு போன அமீரின் பேச்சை இடைமறித்த இளையபல்லவன், “கண்டிப்பாய்ச் சந்தேகம் ஏற்படும்” என்றான்.

அமீர் தன் பெருவிழிகளை இளையபல்லவன் மீது ஆச்சரியத்துடன் திருப்பினான். “ஏன் ஏற்பட வேண்டும்?” என்று கேட்கவும் செய்தான்.

“உங்களைப்போல் தனிகரான வணிகர் வண்டி யோட்டுவது அவர்களுக்கு விந்தையாயிருக்காதா?” என்று வினவினான் பல்லவன்.

“இருக்காது இளையபல்லவரே. ஒருகாலும் இருக்காது. பலமுறை எனது வண்டிகளை, நானே ஓட்டிக் கொண்டு சுங்கச் சாவடி சென்றிருக்கிறேன். எளிய வாழ்க்கையில் சில அனுகூலங்கள் உண்டு என்று அரபு நாட்டுப் பழமொழி யொன்று சொல்லுகிறது. அத்தகைய வாழ்க்கையை நான் கடைப்பிடிக்கிறேன். பலமுறை என் ஆட்களுடன் வணிகப் பொதிகளை நானே இறக்கியும் இருக்கிறேன். அந்த விஷயத்தில் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். அதில் இல்லை ஆபத்து” என்றான் அமீர்.

“வேறு எதில்?” என்று இளையபல்லவன் சந்தேகத்துடன் வினவினான்.

“சோதனையில். சாதாரணமாக என் வண்டிகளை யாரும் சோதனை செய்வதில்லை. சுங்கக் காவலரையும் கிழக்குப்புறக் கோட்டைக் காவலரையும் நான் அவ்வப்பொழுது கவனித்துக் கொள்கிறேன். கலிங்கத்தின் ஊழல் இந்த விஷயத்தில் எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. சாதாரண நாள்களாயிருந்தால் நிச்சயமாக இந்தத் திட்டத்தை நான் நிறைவேற்றியிருப்பேன். ஆனால் இன்று பாலூர் குழப்பமான நிலைமையிலிருக்கிறது. காவல் பலமாயிருக்கிறது. முதன் முதலில் கோட்டை வாசலிலேயே வண்டி சோதிக்கப்படலாம். சோதிக்கும் முறை தெரியுமா?”

“சொல்லுங்கள். “

“நீர்க்குடங்களைக் காவலர் கழிகளால் தட்டிப் பார்ப்பார்கள். நீர் இருக்கும் குடங்களின் சத்தம் வேறு. அப்படி அவர்கள் வித்தியாசத்தைக் கண்டு பிடித்துவிட்டால் நாம் உடனே நடவடிக்கை தொடங்க வேண்டும்!”

“என்ன நடவடிக்கை?”

“அருகிலிருக்கும் காவலரை நான் என் சிறு கத்திகளை வீசிக் கொன்றுவிடுவேன். நான் எச்சரிக்கைக் குரல் கொடுத்ததும் குடங்களிலிருந்து நீங்கள் எழுந்து மற்றக் காவலர்களில் இரண்டொருவரை வெட்டிவிட்டுக் கடற்கரை நோக்கி ஓடவேண்டும். மடக்கப்பட்டால் போரிட வேண்டும். ஒன்று தப்புவோம்; இல்லையேல் மடிவோம். “

இதைக் கேட்ட மற்றவர் மௌனமாயிருந்தனர். அமீர் மேற்கொண்டு சொன்னான்: “கீழ்க் கோட்டை வாசலில் சோதனை நடக்காமல் தப்பி, கடற்கரையோரம் சென்றால் அங்கு எனது குருநாதரின் படகு நமக்காகக்காத்திருக்கும், நீர்க்குடங்கள் இறக்கப்பட்டதும் குடங்களை இறக்க ஆட்களை அழைக்கக் கூடாது. குடங்களிலிருந்து நீங்கள் வெளிவந்து படகில் ஏறிவிட வேண்டும். அங்குள்ள சுங்க அதிகாரிகள் ஒருவேளை நம்மைக் கண்டு கொண்டால் அங்கும் சண்டையிருக்கும். படகில் ஏறிய பிறகும் நமக்குப் பாதுகாப்பு இல்லை . சுங்கக் காவலரின் படகுகள் நமது படகை உடனடியாகத் தொடரலாம். தொடர்ந்து கொண்டே அம்புகளை எய்யலாம், வேல்களையும் வீசலாம். அவற்றிலிருந்து பிழைத்து நமக்குப் படகின் துடுப்புகளை வேகமாகத் துழாவித் தப்பினால், பிறகு கஷ்டமில்லை . ” இதைச் சொன்ன அமீர், “திட்டம் சரிதானா குருநாதரே?” என்றும் வினவினான்.

“இந்த ஊர் உள்ள சூழ்நிலையில் இதைவிடச் சிறந்த திட்டத்தைத் தயாரிக்க முடியாது. ஆபத்து நிரம்பியது தான். இரண்டு இடங்களில் சோதனையும் சண்டையும் எற்படுகிறது. இருப்பினும் வேறு வழியில்லை . ஆனால் அமீர்! இவர்கள் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொள்வது கஷ்டம்?” என்றான் சீனக் கடலோடி.

“ஏன்?” என்று கேட்டான் அமீர்.

“அதோ அவர்கள் முகங்களைப் பார். அநபாயர், இளையபல்லவர், காஞ்சனாதேவி மூவர் முகங்களும் வீரக் களை சொட்டும் முகங்கள். நீர்க்குடத்தில் பதுங்க அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்” என்றான் அகூதா.

“வேறு வழி?” கவலையுடன் எழுந்தது அமீரின் கேள்வி.

“நீர்க் குடங்களில் காஞ்சனாதேவியும் அவர் தந்தையும் நான் விடுதலை செய்த இந்த இரு தமிழரும் பதுங்கி வரட்டும். நீ வண்டியை ஓட்டு. அநபாயரும், இளைய பல்லவரும் உன் அடிமைகளைப் போல் மாறு வேடம் பூண்டு வண்டியின் பின்புறத்தில் உட்கார்ந்து வரட்டும்.

போரிட வேண்டியிருந்தால் இவர்கள் உடனடியாக வாளை உருவிக் காவலரைத் தாக்க முடியும். இது வீரர்கள் திட்டம். இதற்கு அவர்கள் மறுப்புக் கூறமாட்டார்கள்” என்றான் அகூதா.

அகூதாவின் திட்டத்தைக் கேட்ட அநபாயனும், இளைய பல்லவனும் அதை உடனே ஒப்புக்கொண் டார்கள்!

“ஏன்? நானும் என் தந்தையும் மட்டும் கோழைகளா?” என்று கேட்டுத் தன் இடையிலிருந்த வாளையும் தட்டிக் காட்டினாள் காஞ்சனாதேவி.

அகூதாவே அவளுக்குச் சமாதானம் சொன்னான். “தேவி! உங்கள் வீரத்தைப் பற்றி நான் சந்தேகப்பட வில்லை. அன்று நீதி மண்டபத்தில் நீங்கள் செய்த சாகசச் செயலைக் கண்டு பாலூர் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் இங்கு வரும்போதே மக்கள் அதைப்பற்றி வழி நெடுகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆகவே, மற்றவர்களைவிட உங்களைத்தான் அதிகமாகக் காவலர் தேடுவார்கள். காவலர் தீவட்டியைத் தூக்கிப் பிடித்துச் சோதனை செய்தால் நீங்கள் என்னதான் மாறுவேடமணிந்தாலும் உங்கள் கண்கள் உங்களைக் காட்டிக் கொடுத்துவிடும். உங்கள் கண்களே உங்களுக்குப் பெரும் விரோதி” என்று சொல்லி நகைத்த அகூதா, “பெண்கள் மறைவிலிருப்பதும் தவறல்ல தேவி. அதுமட்டுமல்ல, நீங்கள் கடல் கடந்து சோழர் உதவி நாடி வந்திருப்பதை இவர்கள் பேச்சிலிருந்து புரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே உங்களைப் பத்திரமாகச் சோழ நாடு சேர்ப்பது இவர்கள் பொறுப்பு. அது மட்டுமல்ல. யாராவது நீர்க்குடங்களில் பதுங்கவேண்டும். எல்லோரும் மாறுவேடமணிந்து கும்பலாக வண்டியில் போக முடியாது. சற்று நீங்கள் விட்டுக் கொடுங்கள் இந்த வீரர்களுக்காக” எனறு இளையபல்லவனையும் அநபாயனையும் சுட்டிக் காட்டினான்.

காஞ்சனாதேவி முதலில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இளையபல்லவன் மெள்ள ஒப்புக்கொள்ள வைத்தான்.

அபநாயன் கேட்டான், “நாம் எப்போது புறப்பட வேண்டும்?” என்று.

“நாளை இரவு. “

“ஏன் நாளை இரவு?”

“நாளைக்குப் பெளர்ணமி முடிந்து நான்காவது நாள் எட்டு நாழிகைக்குப் பிறகுதான் நிலவு புறப்படும். அது வரை இருட்டு இருக்கிறது. இருட்டு நமது திட்டத்துக்குப் பெரிதும் உதவும்” என்றான் அமீர்.

“ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத் தான் அநபாயன். அதற்குமேல் பேச எதுவுமில்லாமற் போகவே அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு அகூதா வெளியே சென்றான். அவர்கள் படுக்கத் தனித்தனி அறைகளை ஒதுக்கிய அமீர் மேற்கொண்டு தனது அலுவல்களைக் கவனிக்க வெளியே சென்றான். இரவின் ஜாமம் வெகு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. தனக்கு ஒதுக்கப் பட்ட அறையில் தீவிர சிந்தனையுடன் பஞ்சணையொன்றில் படுத்துக் கிடந்தாள் காஞ்சனாதேவி. அவள் அஞ்சன விழிகள் மூடிக் கொண்டிருந்தனவேயொழிய அவள் மனத்தின் சஞ்சல விழிகள் மூடாததால் வேதனையுடன் படுத் திருந்தாள் அவள்.

உள்ளம் எங்கோ ஓடிக்கொண்டிருந்ததால் அறையில் நிகழ்ந்த எதையும் அவள் கவனிக்கச் சக்தியற்றவளானாள். அப்படிக் கவனித்திருந்தால் மெள்ள சாளரத்தின் மூலம் ஏறிக் குதித்து ஓசைப்படாமல் சுவரோரமாகப் பதுங்கிப் பதுங்கி அவள் பஞ்சணையை ஓர் உருவம் அணுகிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந் திருக்க மாட்டாளா என்ன?

Previous articleRead Kadal Pura Part 1 Ch24 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch26 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here