Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch26 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch26 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

78
0
Read Kadal Pura Part 1 Ch26 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch26 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch26 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 26 : அமைதியும், அபாயமும்.

Read Kadal Pura Part 1 Ch26 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

பௌர்ணமி கழித்து மூன்று பகல்கள் பறந்துவிட்டதால் ஆறு நாழிகைகளுக்குப் பின்பே வான விளிம்பில் தலை நீட்டிய சற்றே தேய்ந்த வெண்மதி, இரவு பெரிதும் ஏறிவிட்ட அந்தச் சமயத்தில் சஞ்சலத்தின் வசப்பட்டுப் பஞ்சணையில் கிடந்த கடாரத்தின் அஞ்சுகத்தைக் காண அஞ்சிய காரணத்தால், தன் கிரணங்களால் அந்த அறைச் சாளரத்தின் கட்டைமீது மட்டும் மெள்ளத் தொட்டு ஏறித் திருடன் போல் உள்ளே நோக்க முயன்று கொண்டிருந்தான். கட்டிலில் கிடந்த அந்தக் கட்டழகியை அந்தத் திருட்டு மதி காணும்படி விடக்கூடாதென்று திட்டமிட்டுச் சாளரத்தின் மேற்புறத்தில் தொத்தி ஏறிய பூங்கொடியொன்று சாளரத்தை அரைப்பாகம் மறைத்துவிட்டதன்றி, தொங்கிய தன் கரங்களால் சாளரக் கட்டையில் பாய்ந்திருந்த வெள்ளிக் கிரணங்களையும் அகற்றிவிட அப்படியும் இப்படியும் அசைந்துகொண்டிருந்தது. அந்தக் கொடியின் மனநிலையைப் புரிந்துகொண்டது போல் சற்று தூரத்திலிருந்த பெரிய இலவ மரமொன்றும் அதற்குத் துணை செய்ய இஷ்டப்பட்டுத்தன் இலைகளைக் கொண்டு சந்திரன் சிருஷ்டியைப் பெரிதும் தடுத்ததல்லாமல், கடற்காற்றில் இலைகளைச் சலசலக்க விட்டு அறையில் துயின்ற பூங்கொடியின் சஞ்சல நிலை தனக்கும் புரிகிற தென்பதைப் புலப்படுத்திக் கொண்டு நின்றது. அத்தனை இயற்கைப் பாதுகாப்பை மீறி அறையின் சாளரத்தில் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்த அந்தத் திருடன் யாரென்பதைச்சந்தேகத்துடன் பார்ப்பது போல் அந்தி வேளையிலே விகசித்துவிட்ட கொடியின் மலர்கள் சில தங்கள் பூங்கண்களை அகல விரித்து உள்ளே எட்டிப் பார்த்தன.

சாதாரணமாக இயற்கையின் கவர்ச்சி எழிலில் இத யத்தைப் பறிகொடுக்கும் இயல்பு வாய்ந்த காஞ்சனாதேவி மட்டும் அந்த இரவு நேரத்தில் தூங்காவிட்டாலும் அஞ்சன விழிகளைச் சிறிதும் திறக்காமலும் இயற்கை அழகுகளை அள்ளிப் பருகாமலும் செயலற்ற வண்ணமே பஞ்சணையில் படுத்துக் கிடந்தாள். உடல் செயலற்றுக் கிடந்ததேயொழிய உள்ளம் செயலற்றிருக்காமல் பலப்பலஎண்ண அலைகளில் புரண்டு கொண்டிருந்ததால் புறக்கண் விழிக்காவிட்டாலும் அகக்கண் பெரிதும் விரிந்து மனம் எடுத்துக்காட்டிய காட்சிகளையெல்லாம் கண்டு கொண்டிருந்தன. அந்தக் காட்சிகளில் இன்பமும் துன்பமும், காதலும் கலையும், வீரமும் கோரமும், கோபமும் சுபமும், எல்லாமே கலந்து கிடந்ததால் பாபத்தாலும் புண்யத்தாலும் சமவலிமையுடன் இழுக்கப்படும் ஆத்மாவின் நிலையற்ற தன்மையிலிருந்து அவள் மனம் கடா ரத்தின் பெரிய ஆசார வாசல்களும் ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் அகண்டமும் அவள் மனக்கண் முன்பு எழுந்ததால் அவள் இதயத்தில் பெருமிதம் சில விநாடிகள் தாண்டவ மாடியது. பின்பு தாயாதியான ஜெயவர்மனின் அநீதிகளையும், சாம்ராஜ்ய பீடத்தில் அமரவேண்டிய தன் தந்தையும் தானும் ஒரு சிறு வணிகனின் தயவுக்கு ஏங்கி நிற்கும் நிலைக்கு வந்துவிட்டதையும் எண்ணி ஏக்கத்துக்குச் சில விநாடிகள் இலக்காகியது அவள் இதயம்.

அப்படி ஏங்கி நிற்பது தாங்கள் மட்டுமல்லவென்ற நினைப்பும், எந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் உதவியை நாடி வந்தோமோ அந்தச் சோழ சாம்ராஜ்ய பீடத்தில் ஒருநாள் அமரக்கூடிய இளவலும் அவன் படைத்தலைவரும் கூடத் தங்கள் நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதால் ஏற்பட்ட எண்ணமும், அவள் உள்ளத்திலே எள்ளத்தனை சாந்தியையும் ஏற்படுத்தியது. அந்த எள்ளத்தனை சாந்தியில் கலந்து கிடந்த படைத்தலைவன் முகம் அவள் மனக்கண் முன் எழவே அவள் இதயத்தில் இன்பம் வெள்ளமெனப் புரண்டது. அவள் நரம்புகள் ஒவ்வொன்றிலும் காதல் சுவை யோடி முகத்திலும் படர்ந்து, முகத்தில் ஒரு தெளிவையும் சந்துஷ்டியையும் நிலவ வைத்ததால் அவள் மிதமிஞ்சிய சாந்தியாலும் ஆனந்தத்தாலும் பெருமூச்சு விட்டாள். அதுவரை செயலற்றுக் கிடந்த அவள் கையும் பஞ்சணையில் எதையோ தேடுவதுபோல் தேடி, தேடிய பொருள் அகப்பட்டதால் அதைப் பலமாகப் பிடித்துக்கொண்டது. அப்படிப் பிடித்துக்கொண்டதன் விளைவாக அவள் உணர்ச்சிகள் திடீரெனக் கொந்தளித்து எழவே அவள் துடித்துப் பஞ்சணையில் எழுந்து உட்கார முற்பட்டாள். ஆனால் அவள் இருளில் தேடிப் பற்றிய ஆடவனின் கரம் அவளை எழுந்திருக்கவொட்டாமல் தடுத்ததன்றி, “அஞ்ச வேண்டாம், நான்தான்” என்ற சொற்களும் அவள் காதில் ஒலித்தன.

உள்ளத்தின் எழுச்சியாலும் உணர்ச்சிகளின் தூண்டுத லாலும் அவள் கனவில் தேடிய கை நனவில் கிடைத்த தானாலும், அப்படிக் கையைப் பற்றிப் பஞ்சணையில் தன் அருகில் உட்கார்ந்திருந்தவன் தன் உள்ளத்தையெல்லாம், கொள்ளை கொண்ட இளைய பல்லவனேயென்றாலும் அஞ்ச வேண்டாம் என்ற சொற்கள் உண்மையில் அவள் அச்சத்தை அறவே வெட்டிவிடுவதே நியாயமென்றாலும், அந்த நியாயத்திற்குப் புறம்பாகவே நடந்து கொண்ட அவள் மனம் உண்மையில் அவள் சிந்தையில் அச்சத்தையே விளைவித்ததால் சில விநாடிகள் என்ன செய்வதென்று அறியாமல் அவள் பஞ்சணையில் படுத்தே கிடந்தாள். நள்ளிரவில் ஓர் ஆடவன் கள்ளத்தனமாய்த் தன் கட்டிலின் முகப்பில் உட்கார்ந்திருப்பது எத்தனை முறைகேடு, எத்தனை விபரீதம் என்பதை நினைத்ததால் அவள் மனத்தின் சஞ்சலம் எத்தனையோ மடங்கு அதிகமாகவே, சஞ்சலத்தைக் குறிக்கும் பெருமூச்சு ஒன்றையும் விட்டாள் அவள். அந்தச் சஞ்சலத்தோடும் அச்சத்தோடும் சில விநாடிகள் மௌனமாகப் படுத்துக் கிடந்த அந்த அஞ்சன விழியாள் தன் நெஞ்சத்தில் அத்தனை சஞ்சலத்தையும் அச்சத்தையும் மீறி இன்பமான ஒரு கள்ளத்தனமும் ஊடுருவி நிற்பதை உணர்ந்து, கூடிய வரையில் நெறியைத் தகர்த்து எறிய உணர்ச்சிகள் எத்தனைத் துணை செய்கின்றன என்பதை எண்ணி இயற்கையின் சக்தியைக் குறித்துப் பெரிதும் வியந்தாள்.

அவளுக்குச் சஞ்சலம் இருந்தது கடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி. கள்ளத்தனம் இருந்தது உள்ளத்திலோடிய எண்ணங்களின் விளைவாக. வியப்பு இருந்தது – எண் ணங்களைத் தடுக்க முடியவில்லையே என்ற காரணத்தால். ஆனால் இத்தனையையும் மீறிய வெட்கமொன்று அவளை அழுத்திக் கொண்டதே, அது எதனால்? இந்தக் கேள்வியை அவள் தன்னைத்தானே இரண்டு மூன்று முறை கேட்டுக் கொண்டாள். உடனே விளங்கவில்லை அவளுக்கு. விளங்கியபோது தைரியமும் அடைந்தாள். பெண்களின் வெட்கம்தான். பெண்களின் நெறியைப் பாதுகாக்கும் பலத்த இரும்புக் கவசம் என்பதைப் புரிந்துகொண்டாள் காஞ்சனாதேவி. ‘வெட்கம் பயத்தை அளிக்கிறது. பயம் நெறியைக் காக்கிறது. இவை இரண்டும் இல்லாததால்தான் ஆடவர் சீக்கிரம் நெறி குலைந்து விடுகிறார்கள். இவை இரண்டும் இருப்பதால் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டே காஞ்சனாதேவி இளையபல்லவன் கையிலிருந்து தன் கையை மெள்ள விடுவித்துக்கொண்டு பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

அவள் கையைத் தன் கையிலிருந்து திருகி விடுவித்துக் கொண்டதையும் சரேலெனப் படுக்கையில் எழுந்து முழந்தாள்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிட்டதையும் கண்ட இளையபல்லவன் அவளைச் சில விநாடிகள் உற்று நோக்கினான். எட்ட இருந்த சாளரத்தைத் தொட்டு நின்ற வெண்மதிக்கரங்கள் உள்ளே முழுவதும் பாய வில்லையென்றாலும் அரைகுறை வெளிச்சத்தை அந்த அறைக்குள் வீசியதால் மங்கலமான மங்கல ஒளி அறையில் பரவி நின்றது. அப்படிப் பரவி நின்ற ஒளியில் காஞ்சனா தேவியின் மதிவதனம் தெளிவாகப் புரியா விட்டாலும், அந்தத் தெளிவற்ற தன்மையிலும் அது தனி அழகு வாய்ந்திருந்ததையும் தெளிவாகப் பார்க்க முடியாத தன்மையிலேயே அதில் பெரும் மர்மமும் கலந்திருந்ததையும், அந்த மர்மமே தன் உள்ளத்தை ஆட்டி அலைக் கழிப்பதையும் உணர்ந்தான் இளையபல்லவன். மங்கலமான வெளிச்சத்தில் லேசாகத் தெரிந்த காஞ்சனாதேவி அவன் கண்களுக்கு மெல்லிய ஒளித் திரைக்குப் பின் வீற்றிருந்த தெய்வீக மங்கை போலவே காட்சியளித்தாள். ‘தெய்வீகமான எதுவும் முழுதும் கண்களுக்குப் புலப்படுவதில்லை; அப்படிப் புலப்படாத காரணத்தாலேயே அதில் மர்மம் கலக்கிறது. அப்படித் துளிர்விடும் மர்மமே அதனிடம் ஆசையைத் தூண்டுகிறது. இது இயற்கையின் விசித்திரம்’ என்று எண்ணினான் இளையபல்லவன்.

இத்தகைய எண்ணங்களால் நீண்ட நேரம் மௌனமே சாதித்த இளைய பல்லவனிடம் மனம் பாகாய் உருகிய காரணத்தால் மெல்லக் காஞ்சனாதேவியே உரையாடலைத் தொடங்கி, “இரவு மிகவும் ஏறிவிட்டது” என்றாள்.

“ஆம்” ஏதோ பதில் சொல்ல வேண்டுமென்பதற்காகப் பதில் சொல்லுவது போலிருந்தது இளையபல்லவன் குரல் ஒலி.

“இந்த வீட்டில் நிசப்தம் நிலவிக் கிடக்கிறது” என்று தொடர்ந்தாள் காஞ்சனாதேவி, அவனுக்குக் கேட்கும் படியாக மிக மெல்லிய குரலில். மனம் சஞ்சலப்பட்டிருந்ததால் வேறு யாரும் அந்த அறையில் இல்லையென்ற உணர்ச்சிகூட இல்லை அவளுக்கு.

“ஆம்” இளையபல்லவன் பழைய பதிலையே சொன்னான்.

“எல்லோரும் உறங்கியிருக்க வேண்டும்” என்று சுட்டிக் காட்டினாள் அவள். ‘நீங்கள் மட்டும் ஏன் உறங்கவில்லை ‘ என்ற கேள்வி அவள் பேச்சில் மறைந்து கிடந்தது.

அந்த மறைபொருளைப் புரிந்துகொள்ளாதவன் போல் பதில் கூறிய இளையபல்லவன், “ஆம். எல்லோரும் உறங்கி விட்டார்கள், இருவரைத் தவிர!” என்றான்.

“யார் அந்த இருவர்” என்று வினவினாள் காஞ்சனா தேவி.

“நம்மைத் தப்புவிக்கும் பொறுப்பு வாய்ந்த இருவர். “

“யாரைச் சொல்கிறீர்கள்?”

“அநபாயரையும் அமீரையும்தான் சொல்கிறேன். “

“இருவரும் என்ன செய்கிறார்கள்?”

“வெளியே சென்றுவிட்டார்கள். “

“இந்த இரவிலா!”

“ஆம். “

“எந்த இடத்துக்கு?”

“என்னிடம் சொல்லவில்லை. “

“நீங்கள் கேட்கக்கூடாதா?”

“கேட்கச் சந்தர்ப்பமில்லை. “

“ஏன் சந்தர்ப்பமில்லை?”

“எல்லோரும் படுக்கச் சென்றோமல்லவா?”

“ஆம். “

“அவர்களும் படுக்கச் செல்வதாகப் பாசாங்கு செய் தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அமீரும் அநபாபரும் என்னுடைய அறைக்கு எதிர் அறையிலிருந்து வெளியே வந்தார்கள். ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். பிறகு அடிமேலடி வைத்துச் சத்தம் போடாமல் வாயிலை நோக்கி நடந்தார்கள். சில விநாடிகளில் வாயிற் கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது” என்று விளக்கினான் இளைய பல்லவன்.

இந்த மர்மத்தின் காரணம் விளங்காததால் காஞ்சனா தேவி மீண்டும் மௌனம் சாதித்தாள். பிறகு வாய்விட்டுத் தன் சந்தேகத்தைக் கேட்கவும் செய்தாள், “இளைய பல்லவரே! நாம் அனைவரும் ஒரே நிலையில்தானே இருக்கிறோம்?” என்று.

“ஆம்” என்று ஒப்புக்கொண்டான் இளைய பல்லவன்.

“அநபாயருக்குக் கலிங்கத்தில் உள்ள ஆபத்து நமக்கும் உண்டு. “

“உண்டு. “

“அப்படியிருக்க நம்மிடம் சொல்லிச் சென்றால் என்ன? எதற்காக இத்தனை மர்மமாகச் செல்ல வேண்டும்?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். “

“தகுந்த காரணமில்லாமல் அநபாயர் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார். “

“அது சரி. ஆனால் பாலூரில் அவருக்கு ஆபத்து காத்திருக்கிறதே?”

“ஆம். தலை போகும் ஆபத்து. “

“அப்படியிருக்க உங்களைத் துணைகொண்டு செல்லலாமே. “

“துணையைத்தான் அழைத்துச் சென்றிருக்கிறாரே. “

“யார், அமீரா?”

“ஆம். “

“உங்களைவிட அமீர் பெரும் துணையா?”

“அப்படித்தான் அநபாயர் நினைக்க வேண்டும்” இதைச் சொன்ன இளையபல்லவன் குரலில் துயரம் ததும்பி நிற்பதைக் கவனித்தாள் கடாரத்தின் இளவரசி. அதன் காரணமும் அவளுக்குத் தெள்ளென விளங்கவே செய்தது. பல போர்களிலே தோளுடன் தோளுராய்ந்து நின்ற அருமை நண்பனைவிட அரபுநாட்டு அமீரை ஏன் பெரிதாக நினைக்கிறார் அநபாயர் என்பதை நினைக்க நினைக்க அவளுக்கும் வேதனையாகவே இருந்தது. அந்த வேதனையும், வேதனையால் இளையபல்லவனிடம் ஏற்பட்ட கருணையும் அவள் கையிலொன்றை மீண்டும் நீட்டி, சற்று எட்டி உட்கார்ந்திருந்த அந்தப் பல்லவ இளவரசனின் கையைச் சிறைப்படுத்தச் செய்தன. அப்படித்தன்னை நாடிவந்த பூங்கரத்தை வேதனையின் விளைவாகச் சற்று அழுத்தவே பிடித்தான் இளையபல்லவன். அதுவரை விலகியே உட்கார்ந்திருந்த காஞ்சனாதேவி அவனை அணுகி உட்கார்ந்தாள். அவளுடைய அஞ்சன விழிகள் துயரம் தோய்ந்த அவன் முகத்தை ஏறெடுத்து நோக்கின. “உங்கள் உள்ளத்தின் வேதனை எனக்குப் புரிகிறது” என்று மெள்ள வார்த்தைகளை உதிர்க்கவும் செய்தாள் அவள்.

சோழர் படைத் தலைவனும் மகா வீரனுமான கருணாகர பல்லவனின் மனம் அந்தச் சமயத்தில் பெரிதும் வேதனையில் சிக்கிக் குழம்பிக் கிடந்ததால் அவன் பதிலேதும் சொல்லவில்லை. பெருமூச் சொன்றுதான் பதிலாக வெளிவந்தது.

“வீணாக வருந்தாதீர்கள்” என்று சமாதானப்படுத்த முயன்றாள் காஞ்சனாதேவி.

துயரத்துடன் ஒலித்தன இளையபல்லவன் சொற்கள். “வீண் வருத்தமல்ல தேவி” என்றான் அவன்.

“அநபாயர் அமீரைத் துணைகொண்டு செல்லக் காரணமிருக்கும்” என்றாள் காஞ்சனாதேவி.

“இத்தனை நாள் அவர் என் துணையைத் தவிர வேறு துணையை நாடியதில்லை” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“சோழநாட்டில் அது சரி, இப்பொழுதுள்ள காலதேச வர்த்தமானங்கள் வேறல்லவா?”

“வேறுதான். போகிற இடத்தை, அலுவலை என்னிடம் சொன்னால் என்ன?”

“நீங்கள் உறங்கிவிட்டதாக நினைத்திருக்கலாம். “

“எழுப்ப உரிமையில்லையா இளவரசருக்கு?”

“உண்டு, உண்டு” என்று கூறிய காஞ்சனாதேவி மேற் கொண்டு என்ன சொல்வதென்று அறியாமல் சில விநாடிகள் தத்தளித்தாள். பிறகு கேட்டாள், “ஆமாம். நீங்கள் எதற்கு வந்தீர்கள் இங்கு?” என்று.

“அமைதியை நாடி வந்தேன்” என்றான் இளைய பல்லவன்.

அவன் சொன்னது நன்றாகப் புரிந்தது அவளுக்கு. அவன் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டாள் அவள். அதில் ஓரளவு அமைதி ஏற்பட்டது இளையபல்லவனுக்கு. ஆனால் அமைதியை நாடிய அவன், அதே சமயத்தில் அந்த நகரத்தின் வேறொரு கோடியில் பெரும் அபாயத்தை நாடி அநபாயன் சென்றுகொண்டிருந்ததை மட்டும் அறியவில்லை .

Previous articleRead Kadal Pura Part 1 Ch25 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch27 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here