Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch27 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch27 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

166
0
Read Kadal Pura Part 1 Ch27 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch27 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch27 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 27 : எங்கே என் தந்தை?

Read Kadal Pura Part 1 Ch27 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

ஆரம்பத்தில் சாளரத்தின் அடிக்கட்டையை மட்டும் தொட்டு நின்ற வெண்மதிக் கிரணங்கள் இரவு ஏறிவிட்டதால் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க இஷ்டப்பட்டனபோல் அறை நடுவிலிருந்த பஞ்சணை மீதும் லேசாகப் பாய்ந்துவிட்ட அந்த மனோகர வேளையில், கடாரத்துக் கட்டழகியின் பட்டுக் கைகள் தன் கைகளை ஆவலுடன் பற்றிய காரணத்தால் முதலிலிருந்த சஞ்சலம் சற்றே நீங்கி மனம் ஓரளவு அமைதியையும் பெற்றுவிட்டதன் விளைவாக மெள்ள நீண்டதொரு பெருமூச்சு விட்ட இளையபல்லவன் அந்த அமைதி எத்தனை நிலையற்றது என்பதைச் சில விநாடிகளுக்குள் புரிந்துகொண்டான். அறையின் சூழ்நிலையும் வெளியிலிருந்து காற்றில் மிதந்து வந்த இரவு பூத்த மலர்களின் நறுமணமும் அருகிலிருந்த பருவப் பெண்ணின் அருமை எழில்கள் அள்ளி வீசிய காந்தக் கதிர்களும், மெத்தென்ற பஞ்ச சயனமும், அதைவிட மெத்தென மேலே உராய்ந்த பக்குவ உடலும் ஆகிய அனைத்துமே, எத்தகைய சஞ்சலத்தையும் அறுத்து அமைதிக்கும் இன்ப உலகத்துக்கும் இழுத்துச் செல்லும் பெரும் சக்திகளென்றாலும், அத்தனை சக்திகளும் தன் மனத்துக்குப் போதிய சாந்தியை அளிக் கும் திறனைப் பெற முடியாததை நினைத்துப் பரிதாபப் பெருமூச்சு விட்ட இளையபல்லவன், காமத்தின் சக்தியை விட நட்பின் சக்தி எத்தனை வலிது என்பதை நினைத்து வியக்கவும் செய்தான். அழகிற் சிறந்த ஆரணங்கு ஒருத்தி பக்கத்திலிருக்க அநபாயனைப் பற்றிய எண்ணங்கள் திரும்பத் திரும்பத் தன் மனத்தில் அலைமோதி இடையே கிடைத்த அமைதியைத் திரும்ப உடைப்பதை அறிந்த அவன் ‘இத்தனை அன்பு எனக்கு அநபாயரிடம் இருக்க அவர் மட்டும் என்னைவிட அமீரைப் பெரிதாக நினைத்து விட்டாரே! அரச குலத்தாரின் அன்பு இப்படித்தான் நிலையற்றதோ என்னமோ?’ என்று தனக்குள்ளேயே எண்ண மிட்டான். பாலூர்ப் பெருந்துறை அன்றிருந்த அபாய நிலையில் ஆபத்தைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமல் அநபாயன் சென்றது அவனுக்கு எந்த வியப்பையும் அளிக்கவில்லையென்றாலும், தன்னைவிட்டு அமீரைத் துணைகொண்டு சென்றது மட்டும் அவனுக்குப் பெரும் வியப்பையும் மனக்கொதிப்பையும் அளிக்கவே அவன் இதயத்தில் இன்பநிலை அகன்று துன்ப நிலையே துள்ளி நின்றது. அந்தத் துன்ப நிலையின் விளைவாக அவன் நீண்ட நேரம் பேசாமலே இருந்தான்.

அவன் ஏதும் பேசாவிட்டாலும் சில விநாடிகளுக்குள் அவன் மனநிலை மாறிவிட்டதையும், தான் அளித்த மன அமைதியைத் தன்னைவிடப் பெரும் சக்தியொன்று உடைத்து விட்டதையும் வெகு சுலபத்தில் புரிந்துகொண்ட காஞ்சனாதேவி அநபாயனுக்கும் இளைய பல்லவனுக்கும் இருந்த நட்பின் உரத்தைப் பற்றிப் பெரிதும் வியப்படைந்து, ‘இந்த இருவரின் நட்பு பெரும் காரியங்களைச் சாதிக்க வல்லது’ என்றே எண்ணினாள். தன் கைகள் அவன் கைகளைப் பிடித்தபோது தன் விரல்களுடன் இணைந்த அவன் விரல்கள் மேற்கொண்டு விஷமம் ஏதும் செய்யாமல் சில விநாடிகளுக்குள் செயலற்றுவிட்டதையும் தன் உடல் உராய்ந்ததும் பதிலுக்குச் சாய்ந்து கொடுத்த அவன் உடம்புகூட திடீரென உணர்ச்சியற்றுவிட்டதையும் கவனிக்கத் தவறாத காஞ்சனாதேவி, அவன் இதய வேதனையை நன்றாக அறிந்து கொண்டாளாதலால், அவனை மீண்டும் சமாதானப்படுத்த முயன்று, “அநபாயர் உங்களை விட்டு அமீரை அழைத்துச் சென்றதை நீங்கள் இத்தனை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை” என்றாள் மெதுவாக.

இளையபல்லவன் இதற்கு உடனடியாகப் பதிலேதும் சொல்லவில்லை. குனிந்த தலை குனிந்தபடியே உட்கார்ந் திருந்தான். பிறகு தலையை நிமிர்த்தி அவள் முகத்தை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது அவன் வாயினால் எதுவும் பேசாவிட்டாலும், ‘ஏன் அவசியமில்லை ?” என்ற கேள்வி மட்டும் அவன் கண்களில் தொக்கி நின்றது. அந்தக் கேள்விகூட கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கண்களிலிருந்து அகன்றது. பிரமித்து அவள் முகத்தையே பார்த்தன வேல்களைவிடக் கூரிய அவன் கண்கள். மாறி வரும் இருளும் ஒளியும் போல அவன் சித்தம் மாறுபட்ட சக்திகளால் இழுக்கப்பட்டது. அவள் முக வசீகரத்தில் அவன் மீண்டும் மயங்கினான். இரவு ஏறிவிட்டதால் பஞ்சணைமீது பாய்ந்த பால் நிலவு அவள் முகத்தில் மிக வெண்மையாக அடித்திருந்தது. அந்த வெண்மையில் அவ்வப்பொழுது அவள் கண்களில் ஏறும் குங்குமச் சிவப்பு கூடத் தெரியாததால் நல்ல பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட சிலையெனக் காட்சியளித்தாள் காஞ்சனா தேவி. அந்த வெண்மை முகத்தில் கலந்த விண்மதியின் வெண் கிரணங்கள் அவள் நுதலிலும் கன்னங்களிலும் பிரதிபலித்து முகம் பூராவையும் கலப்படமற்ற வெண்ணொளி மயமாக அடித்துக் கொண்டிருந்தது. வெண் கிரணங்களில் கண்கள் பேரொளி வீசின. அத்தனை ஒளிக்கும் வெளுக்காத உதடுகள் மட்டும் அதிகச் சிவப்பாகப் பிரகாசித்து இருமுறை மெள்ள விரிந்து மூடின. அப்படி மூடிய சமயத்தில் ஒரு கணம் தெரிந்த இரண்டு உள்முத்துகள் திடீரென இளையபல்லவன் உள்ளத்தை அள்ளவே செய்தன. பெரும் மாயையில் மீண்டும் சிக்கினான் இளையபல்லவன். நிலவில் ஒரே ஒளிமயமாகக் கிடந்த அந்தப் பருவ மங்கையின் வசீகர வதனத்தின் ஒவ்வோர் அசைவிலிருந்தும் காமக் கணைகள் கணக்கின்றி எழுந்து அவன் சித்தத்தில் பாய்ந்தன. ஏதோ சொல்ல உதடுகள் விரிந்தபோது கவிழ்க்கப்பட்ட குமிழ்க் கண்ணாடிபோல் எழுந்திருந்த கபோலங்களில் விழுந்த குழிவுகளும், உதடுகள் மூடியதும் ஏதோ மந்திர ஜாலம்போல் அவை மறைந்துவிட்ட மாயமும், கேள்வி கேட்க எழுந்தன போல் எழுந்து தாழ்ந்த பருவங்களின் அசைவும், சிறிது நேரம் நிலைத்து நின்று திடீரெனக் கொட்டிய இமைகளும் பளிச்சு பளிச்சென்று பற்பல ரகசியச் சேதிகளைச் சொல்லவே பிரமிப்பில் ஆழ்ந்து கிடந்தான் இளையபல்லவன். காஞ்சனாதேவி மட்டும் இஷ்டப்பட்டிருந்தால் அந்தப் பிரமிப்பில் அவனை நீண்ட நேரம் ஆழ்த்தியே வைத்திருக்கலாம். ஆனால் அப்படி அவன்மீது கண்களை வீசிய காஞ்சனாதேவியே அவன் பிரமிப்பை உடைக்கவும் முயன்றாள்.

நான்கு வேல்களும் உராய்வது போல் தன் கண்களும் அவன் கண்களும் உராய்ந்த சமயத்தில் அவன் கண்களே வெற்றியடைந்ததையும் அவன் வெறித்த பார்வை தன் கண்களுக்குள் பாய்ந்து இதயத்துக்குள்ளேயும் புகுந்து இதயத்தை மூடியிருந்த வெட்கச் சீலையைக்கூடக்களை வதைப் போன்ற பிரமையைத் தனக்கு அளித்துவிட்டதையும் கண்ட காஞ்சனாதேவி, பெரும் சங்கடத்துக்கு இலக்கானாள். அந்தச் சங்கடத்தின் விளைவாகவோ, மேற்கொண்டு அந்த நிலை நீடித்தால் விளைவு என்ன ஆகுமோ என்ற பயத்தாலோ, அவள் திடீரென அவன் கைகளைப் பற்றி நின்ற தன் கைகளை விடுவித்துக் கொண்டாள். பஞ்சணையில் சற்று நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள். அந்த இரண்டு செய்கைகளாலும் அவன் பிரமிப்பை உடைத்துவிடலாமென்று எதிர்பார்த்த காஞ்சனா தேவி, அவை இரண்டும் வேறு விபரீதங்களுக்குத் தூண்டி விட்டதை மறுவிநாடி உணர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறினாள்.

கைகள் விடுவிக்கப்பட்டதும் திடீரெனத் துடித்துப் பஞ்சணையிலிருந்து விடுதலையடைந்த அவன் கரங்க ளிரண்டும் அவள் முகத்தைச் சிறைப்படுத்தி நிலவொளிக்காக அதை நன்றாகத் திருப்பின. அவன் முரட்டு உள்ளங்கையில் அவள் பட்டுக் கன்னங்கள் குழைந்தன. சற்றே திருப் பப்பட்டதால் நிலவொளி பூரணமாக விழுந்த முகத்தின் ஒவ்வொரு சாயையும் அவன் கண்கள் ஆராய்ந்தன. கன் னங்களின் வழவழப்பை கைகள் உணர்ந்தன. முகம் லேசாகத் திருப்பப்பட்டதால் அவள் வீசிய கடைக்கண் பார்வையின் வேகத்தை அவன் கண்கள் உணர்ந்தன. கன்னங்கள் அழுத்திப் பிடிக்கப்பட்டதால் இன்ப வேதனையால் அத்தனை நிலவிலும் சிவந்துவிட்ட நுதல் அந்தச் சிவப்பை நாசிமீது பாய்ச்சி நிலவில் விகசிக்கும் புதுச் செம்பருத்தி போல் அடித்திருந்ததைக் கண்கள் மட்டுமென்ன, அவன் இதயமும் கவனிக்கவே செய்தது. கண்ணும், கண் மூலம் இதயமும் கவனித்தவை இவை. இவை காணாதவற்றைச் சித்தம் கற்பனை செய்தது, கண்டது. உணர்ச்சிகள் பேரிரைச்சலுடன் அவன் உள்ளத்தில் எழுந்து அலைமோதின.

அந்த அலைகளில் சிக்கித் தத்தளித்தாள் அஞ்சன விழியாளும்கூட. அலைகளிலிருந்து இதயத்தை மீட்க விரும்பிய அவள் விழிகளைச் சற்றே மூடினாள். மூடிய தால் அவன் பார்வையிலிருந்து மீளலாமென்றுதான் நினைத்தாள். ஆனால் மூடிய கண்கள் உள்ளே பல வாயில்களைத் திறந்துவிடவே இளையபல்லவன் கண்கள் எல்லா இடங்களிலும் எட்டிப் பார்ப்பன போலவே தெரிந்தது அந்தக் கடாரத்தின் கட்டழகிக்கு. அந்த எண்ணக் கடலிலிருந்து, கடலின் அலைகளிலிருந்து, அதன் சுழல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள் அவள். அத்தனை அலைகளையும் சுழல்களையும் மீறி எழ முயன்றது அவள் மனம். மீள முடியாமல் செய்திருந்தது இருவருக்கும் இடையே நிலவிய மௌனம். அந்த மௌனத்தைக் கலைக்க அவள் விரும்பிப் பேச முயன்றாள். உதடுகள்தான் அசைந்தன, சொற்கள் உதிரவில்லை.

அவள் மனமுயற்சி எதையும் புரிந்துகொள்ளக் கூடிய நிலையில் இளையபல்லவன் இதயம் இல்லாததால், அவள் உதடுகளின் அசைவைத் தவறாகவே பொருள் கொண்டான் அந்த வாலிபன். தவறான பொருள்களின் விளைவாகக் கன்னத்தைத் தழுவி நின்ற விரல்கள் இரண்டும் சற்றே விலகி அவள் செவ்விய உதடுகளின்மீது தவழ்ந்து பேச வேண்டாம் என வலியுறுத்தின. அந்த வலியுறுத்தல் அவசியமில்லை. அவள்தான் பேசும் சக்தியை அறவே இழந்தி ருந்தாளே!

கண்களும் மூடி, உதடுகளும் மூடி முகமே உறைந்து விட்டது போன்ற அந்த நிலையின் அபாயத்திலிருந்து விடு தலைடைய முடியாமலிருந்த அவள் மனத்தில் பலப்பல எண்ணங்கள், பலப்பல கதைகள், பலப்பல பழைய கனவுகள் எல்லாம் எழுந்து அர்த்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஓட்டத்தில் அவள் வாழ்விலும் ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் வாழ்விலும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களும் வலம் வந்தார்கள். அப்படி வலம் வந்த சமயத்தில் அவன் இதயத்தைச் சுற்றி நின்ற பெரும் வலை திடீரென அறுந்தது. அந்தப் பாத்திரங்களின் சுழற்சியில் ஒருவர் பின் ஒருவராகத் தோன்றிய மனிதர் வரிசையில் அவள் தந்தை குணவர்மனும் தோன்றினார். ‘எதற்காகத் தமிழகம் வந்தாய்? எந்த நிலையில் இருக்கிறாய்?” என்று ஏதோ குற்றத்தைச் சுட்டிக் காட்டுவதுபோல் அவள் மனக் கண் முன் எழுந்தது குணவர்மன் முகம். அதன் விளைவாகத் திடீரெனக் கட்டிலை விட்டு எழுந்த காஞ்சனாதேவி ஒருவிநாடி நின்ற இடத்தில் ஸ்தம்பித்து நின்றாள். பிறகு தலையைத் தானாக ஒருமுறை ஆட்டிவிட்டுச் சரசரவென அறைக்குக் குறுக்கே நடந்து தூரத்திலிருந்த சாளரத்தை எட்டினாள்.

காஞ்சனாதேவி தன் கைகளின் பிடிப்பிலிருந்து சரே லென எழுந்ததும், அப்படி எழுந்ததால் கன்னங்களிலிருந்து நழுவிவிட்ட தன் கைகளை அவள் எழில்கள் தடை செய்தும் சிறிதும் லட்சியம் செய்யாமல் கனவேகமாக அவள் தன்னை இடித்துத் தள்ளிக்கொண்டு சாளரத்தருகே சென்றுவிட்ட தையும் கவனித்த இளைய பல்லவன் சற்றே வியப்பை மட்டுமல்ல வியப்பின் விளைவாக சற்று சுயநிலையையும் அடைந்தான். ஆகவே சாளரத்தை நோக்கி அவனும் நடந்து சென்றான். சாளரத்துக்கு வெளியே மனோகரமான காட்சியே விரிந்து கிடந்தது. அந்த இரவில் இயற்கை தன் வனப்பையெல்லாம் அள்ளிச் சொரிந்திருந்தது. – கடலிலிருந்து வந்துகொண்டிருந்த காற்று சாளரத்தின் மீதிருந்த பூங்கொடியை அசைத்ததால் பூங்கொத்தொன்று கடாரத்துப் பூங்கொடியின் நுதலை ஒருமுறை முத்தமிட்டுச் சென்றது. இயற்கையின் அந்தப் பெரும் கவர்ச்சி அவள் சம்பந்தப்பட்டவரை பயனற்றதாயிற்று. துன்பமும் கவலையுமே அவள் இதயத்தைச் சூழ்ந்து கிடந்தது.

திடீரென அவள் மனத்தில் காதல் அறுபட்டுக் கவலை புகுந்து கொண்டுவிட்டதை அவள் நின்ற நிலையிலிருந்தே புரிந்துகொண்ட இளையபல்லவன், அதன் காரணத்தை மட்டும் அறிய முடியாததால் அவளை அணுகி அவள் தோள் மீது தன் கரமொன்றைப் பொருத்தி, “காஞ்சனா” என்று ஆறுதலை அள்ளிச் சொரிந்த குரலில் அழைத்தான்.

“ஹும்” இந்தப் பதில்தான் வந்தது அவளிடமிருந்து. குரலில் துன்பம் மண்டிக் கிடந்தது.

“ஏன் திடீரென இங்கு வந்துவிட்டாய்?” என்று மீண்டும் வினவினான் இளையபல்லவன்.

“ஒன்றுமில்லை” வெடுக்கென்று வந்தது அவள் பதில்.

“ஒன்றுமில்லாவிட்டால் நீ அங்கேயே உட்கார்ந்திருப் பதுதானே?” ஆதரவுடன் கேட்டான் அவன்.

“இங்கு நின்றால் என்ன?”

“நிற்கலாம், நிற்கலாம். “

“அதுதான் நிற்கிறேன். “

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் இளையபல்லவன் திகைத்தான். இன்பம் அதிகமாகும் போதும் சரி, துன்பம் அதிகமாகும்போதும் சரி, பெண்கள் வெடுக் வெடுக்கென்று பேசுவார்களென்பதை மனோதத்துவ சாஸ்திரத்தில் அவன் கற்றிருந்தான். அன்று ஏட்டில் கற்றான், இன்று அமீரின் வீட்டில் கிடைத்தது அனுபவம் அவனுக்கு. அந்த அனுபவம் வேறொன்றையும் உணர்த்தியது அவனுக்கு. அந்தச் சமயத்தில் அவள் அப்படிப் பேசியது துன்பம் போல் தோன்றியதே தவிர, அது இன்பத்தாலுமல்ல துன்பத்தாலுமல்ல; இரண்டும் கலந்த விபரீத நிலையால் என்பதை மட்டும் புரிந்து கொண்டான் சோழர்களின் படைத்தலைவன்.

பஞ்சணையில் தாங்களிருவரும் மௌனமாகக் கொஞ்சி நின்ற நிலைகளில் திடீரென ஏதோ ஒரு துயரத்தின் கதிர் அவள் இதயத்தில் பாய்ந்துவிட்டதென்பதையும், அந்தத் துயரம் ஊடுருவிய இன்பநிலை அவள் இதயத்தைக் கலக்கி விட்டிருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்ட இளையபல்லவன் தன் உணர்ச்சிகளைப் பூர்ணமாக ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து “காஞ்சனா! உன் மனோநிலை எனக்குப் புரிகிறது. உன் இதயத்தைத் திடீரெனத் துயரம் ஊடுருவியிருக்கிறது. அதன் காரணத்தை எனக்குச் சொல்லலாமா?” என்று குரலில் குழைவுடன் கேட்டான்.

காரணம் ஏதும் அவள் சொல்லவில்லை . “புதுத் துயரம் பாய என்ன இருக்கிறது? நாம் இருப்பதே துயரந் தோய்ந்த நிலைதானே?” என்று பொதுப்படையாகப் பதில் சொன்னாள்.

“உண்மைதான் காஞ்சனா! துயரம் ஆபத்து எல்லாமே நம்மைச் சூழ்ந்திருப்பது உண்மை. அதனால்தான் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விபரீதமாகவும் நடந்து கொள்கிறோம்” என்று துக்கத்துடன் இளைய பல்லவனும் பேசினான்.

“அப்படி என்ன விபரீதமாக நடந்துகொண்டுவிட்டோம்?” இளைய பல்லவனைத் திரும்பிப் பாராமல் வெளியே பார்த்தபடியே கேட்டாள் காஞ்சனாதேவி.

“என்னிடம் கலக்காமல் எதையும் செய்து பழக்கமற்ற எனது இளவரசர் என்னைப் புறக்கணித்து அமீரைத்துணை கொண்டு ஆபத்து நிறைந்த பாலூருக்குள் செல்கிறார். அதனால் வேதனையடைந்த நான் அமைதி நாடி உன்னிடம் வருகிறேன். நீ என்னைத் திடீரென உதறி இந்தச் சாளரத்திடம் வருகிறாய். என்ன காரணம் என்று சொல்லவும் மறுக்கிறாய். எந்த இருவரிடம் என் உயிரையே வைத்திருக்கிறேனோ அந்த இருவரும் என்னிடம் நடந்து கொள்ளும் முறை விசித்திரமாயில்லையா” என்று வினவினான் இளைய பல்லவன்.

இதைக் கேட்ட காஞ்சனாதேவியின் உள்ளம் சிறிது நெகிழவே அவள் மெள்ளத் திரும்பினாள் அவனை நோக்கி. “உயிர் நண்பரையும் என்னையும் நீங்கள் இப்படி எடை போடுவது சரியல்ல” என்று சொல்லவும் செய்தாள்.

“ஏன் சரியல்ல?”

“அது நம்பிக்கையைக் குறிக்கவில்லை. “

“உங்களிருவரிடம் எனக்கு நம்பிக்கையில்லை என் கிறாயா?”

“நம்பிக்கையிருக்கிறது. ஆனால் உங்கள் ஆசாபாசங் களை அறுக்கும் அளவுக்கு அந்த நம்பிக்கை வளரவில்லை. உங்கள் நண்பர் உங்களை விட்டுச் சென்றால் அதற்குக் காரணம் உதாசீனம் என்று நினைக்கிறீர்கள். வேறு முக்கிய காரணம் இருக்கக்கூடும் என்று ஏன் நீங்கள் நினைக்கக் கூடாது. அவர் போகுமிடம் நீங்கள் போகத் தகாததாயிருக்கலாம் என்று ஏன் முடிவு கட்டக்கூடாது? நமக்கு வேண்டியவர்கள் நம்மைச் சில அலுவல்களில் விலக்கும் போது அலுவல்களின் தன்மை அப்படியிருக்கும் என்று ஏன் தீர்மானிக்கக்கூடாது? அதிருக்கட்டும். துயரத்தின் காரணத்தை நான் சொல்லவில்லையென்கிறீர்கள். சொல்லத் தகாததாயிருக்கலாம் என்று நீங்கள் ஏன் எண்ணக் கூடாது. “

அவள் கேள்விகளில் உண்மை பெரிதும் ஒளி விடுவதைக் கவனித்த இளையபல்லவன் ஏதும் பதில் சொல்ல முடியாமல் சில விநாடிகள் திணறினான். பிறகு பேச முற்பட்டபோதும் “என்னிடம் சொல்லத் தகாதது என்ன இருக்க முடியும்… இத்தனைக்குப் பிறகும்?” என்று மெள்ள மெள்ள இழுத்து சங்கடத்துடன் பேசினான்.

‘இத்தனைக்குப் பிறகு’ என்று அவன் எதைக் குறிக் கிறான் என்பதைப் புரிந்து கொண்டாளாதலால் மெள்ளப் புன்முறுவல் செய்தாள். அந்த இன்பப் புன்முறுவலிலும் ஓரளவு துன்பம் தோய்ந்து கிடந்தது. அந்த இன்பப் புன்முறுவலைத் தொடர்ந்து உதிர்ந்த அவள் சொற்களில் காதலும் வருத்தமும் கலந்தொலித்தன.

“நாமிருவரும் அங்கே… ” என்று கட்டிலைச் சுட்டிக் காட்டினாள் அவள்.

“ஆம், உட்கார்ந்திருந்தோம்… ” என்று அவன் பூர்த்தி செய்தான் வாசகத்தை.

“நான் மெய் மறந்திருந்தேன். “

“நானும்தான். “

“அநபாயர் விட்டுப் போனதைக் குறித்து. “

“நான் துயரமடைந்தேன். “

“நான் அமைதியளிக்க… முயன்றேன். “

“ஆம். “

“அந்த நிலையில்?”

“நிலையில்?”

“சுயநிலை மறந்தேன். “

“ஓகோ!”

“எண்ணங்கள் சுழன்றன. “

“என்ன எண்ணங்கள்?”

“தந்தையைப் பற்றிய எண்ணங்கள்” என்றாள் காஞ்சனாதேவி துயரத்துடன்.

அவள் பேதை உள்ளத்தை அப்பொழுதுதான் அவன் புரிந்துகொண்டான். அடுத்தடுத்து நேர்ந்த துரித நிகழ்ச்சிகளால் அவள் தந்தையை அனைவரும் மறந்துவிட்டதை அப்பொழுதுதான் எண்ணிப் பார்த்தான் அவன். அந்த எண்ணத்தின் விளைவாக, “ஆம் ஆம். உன் தந்தையை மறந்துவிட்டோமே. அவர் இப்பொழுது எங்கிருக்கிறார்?” என்று வினவினான் அதிர்ச்சியுடன்.

“எனக்குத் தெரியாது” என்றாள் காஞ்சனாதேவி. “உனக்குத் தெரியாதா!”

“தெரியாது” என்றாள் காஞ்சனாதேவி, கவலை தோய்ந்த குரலில்.

“நீயும் அவரும் எப்பொழுது பிரிந்தீர்கள்?” என்று மீண்டும் கேட்டான் அவன்.

“நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்த அன்றிரவே. “

“பீமன் வீரர்கள் என்னை அழைத்துப் போனதுமா?”

“ஆம். நீங்கள் வீரர்களுடன் சென்ற அரை ஜாமத்துக் கெல்லாம் அநபாயர் அந்த இல்லத்தில் தோன்றி என்னையும் தந்தையையும், பணிப் பெண்களையும் அவசர அவசரமாக அழைத்துக்கொண்டு வெளியேறினார். எங்கள் பெட்டி பேழைகளும் துரிதமாக அவருடன் வந்த வீரர்களால் அப்புறப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் பிரமுகர் வீதியின் முகப்பிலேயே நான் வேறு, தந்தை வேறு, பணிப் பெண்கள் வேறாக, வெவ்வேறு திக்குகளில் பிரித்து அழைத்துச் செல் லப்பட்டோம். இரண்டு நாள்கள் நான் சிறைக் காவலன் ஒருவன் இல்லத்தில் தங்கியிருந்தேன். இன்று காலை அநபாயர் வந்து உங்கள் விசாரணை பற்றிக் கூறினார். அவசர அவசரமாக என்னையும் அழைத்துக்கொண்டு நீதி மண்டபம் வந்தார். பிறகு நடந்ததை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தந்தை எங்கிருக்கிறார், என்ன ஆனார் என்பது எனக்குப் புரியவில்லை. அமீரின் பாதுகாப்பில் இருப்பதாக சீனக் கடலோடியிடம் அநபாயர் சற்று முன்பு கூறியது தான் எனக்குத் தெரியும். இந்தப் பாலூரில் தந்தையை எங்குதான் தங்க வைத்திருப்பார் அநபாயர்?”

இதற்குத் திடமான பதில் எதையும் இளையபல்லவனால் கூற முடியவில்லை . அநபாயன் போக்கு எதுவும் ஊகிக்க முடியாத புதிராயிருந்தது அவனுக்கு. ஆகவே அவன் காஞ்சனாதேவிக்குச் சொன்ன பதிலில் உணர்ச்சி யிருந்ததேயொழிய தெளிவுலவலேசமும் இல்லை. “காஞ்சனா! உன் தந்தையை அநபாயர் எங்கு தங்க வைத்திருக்கிறாரோ எனக்குத் தெரியாது. நான் பாலூரில் கால்வைத்த நாளாக நேரிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரமையை ஊட்டக் கூடியனவாகவே அமைந்திருக்கின்றன. கனவில் நடப்பதுபோல் நிகழ்ச்சிகள் துரிதமாக நடந்திருக்கின்றன. நாமனைவரும் வெறும் பதுமைகள் போல் அநபாயரால் நடத்தப்பட்டிருக்கிறோம். அவர் இயக்கும் வழியில் நாம் இயங்குகிறோம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லுவேன். அநபாயர் உடலில் உயிர் இருக்கும் வரை உன் தந்தைக்கு ஆபத்து எதுவும் இல்லை. ஆனால் உன் தந்தை இருக்குமிடத்தையோ, அநபாயர் இந்த இரவில் எதற்காக எங்கு போயிருக்கிறார் என்பதையோ என்னால் ஊகிக்க முடியவில்லை” என்று உணர்ச்சி ததும்பக் கூறிப் பெருமூச்சு விட்டான் இளைய பல்லவன்.

அவ்விருவரும் ஊகிக்க முடியாத, ஏன் கனவிலும் நினைக்க முடியாத, மிகவும் ஆபத்தான இடத்தைத்தான் அந்தச் சமயத்தில் அநபாயன் அணுகிக் கொண்டிருந்தான்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch26 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch28 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here