Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch28 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch28 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

86
0
Read Kadal Pura Part 1 Ch28 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch28 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch28 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 28 : தோப்பில் தெரிந்த தீபம்.

Read Kadal Pura Part 1 Ch28 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

இயற்கை தன் இன்பத்தையெல்லாம் அள்ளிச் சொரிந்தும் அதை அனுபவிக்க முடியாமல் தந்தை எங்கிருக்கிறார் என்று கடாரத்துக் கட்டழகி எண்ணி ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், நீண்ட நாள் நண்பன் தானிருக்க அமீரைத் துணைகொண்டு சோழ குல இளவல் சென்றுவிட்டானே என்பதால் கருணாகர பல்லவன் கருத்துருகிக் கலங்கிய அந்த வேளையில், நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தாலும் மக்கள் நடமாட்டமோ காவலின் கெடுபிடியோ சிறிதும் குறையாத அந்த நேரத்தில், அச்சத்தை அணுவளவும் அறியாத அநபாய குலோத்துங்கன், அராபிய நாட்டவனும் அத்தியந்த நண்பனுமான அமீருடன் பாலூரின் அரச வீதியை மிகச் சாவதானமாக அணுகிக் கொண்டிருந்தான். அவனைத் தாங்கி வந்த புரவி மட்டுமின்றி, அமீரைத் தாங்கிய புரவியும்கூட அந்தச் சோழ நாட்டு அரசகுல வீரனின் கருத்தை நன்றாகப் புரிந்து கொண்டதுபோல் அமைதியாகவும் அலட்சிய நடை போட்டும் நடந்தது. வடநாட்டு வர்த்தகர்களைப் போல் அந்த இருவரும் வேடமணிந்திருந்ததன் விளைவாக அவர்கள் உடைகளை இடுப்புக்கு மேல் அடியோடு மறைத்துத் தலையிலும் முக்காடாக வளைந்து, முகங்களின் மேல் நீண்டு சற்றே தொங்கி, முகங்களின் மேற்பாகத்தை ஓரளவு மறைத்திருந்தாலும் பார்வையை மட்டும் மறைக்காத காஷ்மீரத்துச் சால்வைகள்கூட, கடற்புறமிருந்து வந்த காற்றில் அதிகமாகப் பறக்காது உடல்களுடன் ஒட்டி அமைதியையும் எச்சரிக்கையையும் காட்டின. பாலூர் அன்றிருந்த பயங்கர நிலையில் அத்தனை அமைதியும் எச்சரிக்கையும் தேவையாக இருந்தன.

புரவியில் அமர்ந்து, விலகிய மக்கள் கூட்டத்திடையே சர்வசாதாரணமாகச் சென்று கொண்டிருந்த அநபாயன், எதிரே அடிக்கடி புரவிகளில் வந்து கொண்டிருந்த காவலர் கூட்டத்தையும், தெருக்கள் சேரும் மூலை விடுதிகளின் ஓரங்களிலெல்லாம் சாதாரண மக்களைப்போல் காணப் பட்டாலும் கழுகுப் பார்வையாகப் போகிறவர் வருகிறவர்களைக் கண்காணித்த ஒற்றர்கள் எண்ணிக்கையும், தலையை அதிகமாகத் தூக்காமல் கண்ணை மாத்திரம் லேசாகத் தூக்கி ஊடுருவிப் பார்த்து, பாலூரின் மூலை முடுக்குகள்கூடப் பரிபூரண எச்சரிக்கையுடன் பாதுகாக்கப்படுவதை உணர்ந்தான். தவிர தெரு மூலைகளில் அசட்டையுடனிருப்பதாகக் காணப்பட்ட ஒற்றர்களின் இடைகளில் குறுவாள்கள் காட்சியளித்ததையும் கண்ட சோழர்குல இளவல், தான் சற்று நிலை பிசகி யாரென்பதை வெளியிட்டு விட்டால் அந்தக் குறுவாள்களுக்கும், ஏன், மூலை வீடுகளின் மறைவிலிருக்கக் கூடிய பெருவேல்களும் அடுத்த க்ஷணம் இரையாகக் கூடும் என்பதைப் புரிந்து கொண்டான். இத்தகைய காவலிலிருந்து தனது நண்பர்களைத் தப்புவிக்க வேண்டுமானால் சாதாரண மனிதப் பிரயத்தனால் அது சாத்தியமல்லவென்பதையும், பெரும் தந்திரத்தாலும், சாகசத்தாலுமே அதைச் சாதிக்க முடியு மென்பதையும் சந்தேகத்துக்கிடமின்றி உணர்ந்துகொண்டான் அநபாயன். அந்தச் சமயத்தில் அவன் எண்ணங்கள் மறுநாளிரவு தப்பிச் செல்லும் முறைகளைக்கூட அவ்வளவாகக் கவரவில்லை. இத்தனை பலமான காவலை மீறி அப்பொழுது வந்து காரியத்தைச் சாதிக்க வேண்டுமே என்ற கவலை அவன் இதயத்தைப் பெரிதும் கௌவிக் கொண்டிருந்தது.

அந்தக் கவலையைச் சிறிதும் வெளிக்குக் காட்டாமலே பல வீதிகளையும் கடந்து அரச வீதியின் முகப்புக்கு வந்துவிட்ட அநபாயன், அந்த வீதியில் மற்ற வீதிகளை விட இரண்டு பங்கு காவல் இருந்ததையும், வீதிக்குள் நுழையும் ஒவ்வொரு புரவியும் நிறுத்திச் சோதிக்கப்படுவதையும் கண்டதும் குதிரையின் நடையை அதிகமாகத் தளர்த்தி முகத்தைக் குனிந்த வண்ணமே அமீரை அழைத்தான். அந்த அழைப்பின் விளைவாகத் தன் புரவியை அநபாயனின் புரவிக்கு வெக அருகில் கொண்டுவந்து விட்ட அமீர், “ஏன் அழைத்தீர்கள்?” என்று வினவினான். இருவரும் தலையைத் தூக்காமலும், மிகுந்த எச்சரிக்கை யுடனும் குதிரைகளை நிறுத்தாமல் மெல்ல நடத்திக் கொண்டே சம்பாஷணையைத் துவங்கினார்கள். “அரச வீதியின் முகப்பைக் கவனித்தாயா அமீர்?” என்று வினவினான் அநபாயன்.

“கவனித்தேன்” என்றான் அமீர் தலையைக் குனிந்த வண்ணமே.

“அதோ செல்லும் ஒவ்வொரு வண்டியும் புரவியும் இதர வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன” என்று மீண்டும் குறிப்பிட்டான் அநபாயன், அமீருக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“அது மட்டுமல்ல, வாகனங்களை எட்டிப் பார்த்துச் சோதனையும் செய்கிறார்கள்” என்ற அமீரின் பதிலில் சிறிது கவலையும் தொனித்தது.

“புரவிகளில் வருபவர்கள் கீழிறக்கப்படுகிறார்கள்” என்று சுட்டிக் காட்டினான் அநபாயன்.

“ஆம். சிலருடைய வாள்களும் இதர ஆயுதங்களும் கூடப் பறிக்கப்படுகின்றன. “

“ஆயுதமுள்ள யாரையும் அரச வீதிக்குள் அனுமதிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

“அதைப்பற்றி நமக்கு ஏன் கவலை? உங்களிடம் ஆயுதம் ஏதுமில்லை . என்னிடமிருக்கும் குறுவாள்கள் இரண்டையும் காவலர் பறித்துக் கொண்டாலும் பாதகமில்லை . “

“இதை அறிந்துதான் ஆயுதமேதும் கொண்டுவர வேண்டாமென்று என்னைத் தடுத்துவிட்டாயா?”

“ஆம். “

“எப்படித் தெரியும் உனக்கு?”

“இந்த ஆயுத நீக்கல் உற்சவம் பாலூரில் சில நாள்களாக அடிக்கடி நடக்கிறது. பாலூரின் ஜனத்தொகையில் மூன்றிலொரு பங்கு தமிழர்கள் இல்லையென்றால் இத்தனை நாள் தமிழ் வணிகரும், மற்றோரும் நிராயுத பாணி களாக்கப்பட்டிருப்பார்கள். அது முடியாததால், அடிக்கடி இத்தகைய பரிசோதனையும் ஆயுதப் பறிமுதலும் நடக்கிறது. சாதாரணமாகவே பாலூரில் தமிழரைப்பற்றி எச்சரிக்கை அதிகம். அதுவும் நீங்கள் சிருஷ்டித்த இன்றைய நிலை மிகவும் மோசமல்லவா? என்று விளக்கினான் அமீர்.

“ஆம், ஆம்” அநபாயனின் அந்த இரண்டு ‘ஆமி’னில் கவலை மிதமிஞ்சித் தொனித்தது.

“நீங்கள் உங்கள் நண்பர்களை நீதிமண்டபத்திலிருந்து விடுவித்தது முதல் ஊர் மூலை முடுக்குகளிலெல்லாம் காவல் பலப்படுத்தப்பட்டு விட்டது” என்று மேலும் விவரித்தான் அமீர்.

“அதைத்தான் வரும் வழியில் பார்த்தோமே” என்றான் அநபாயன்.

“அப்படியிருக்க, அரச வீதியில் மட்டும் எச்சரிக்கைக் குறைவாயிருக்குமா? அதுவும் பீமன் மாளிகையும் மாளிகையின் முக்கிய வாயிலான கிழக்குப் பகுதியும் இருக்குமிடத்தில் கேட்க வேண்டுமா?” என்று அமீர் விளக்கினான்.

அமீரின் இந்த விளக்கம் தேவையென்றாலும், அது தேவைப்பட்டதுபோல் தலையை அசைத்த அநபாயன், “ஆம் அமீர்! நிலைமை புரிகிறது எனக்கு. இருப்பினும் இந்த வீதிக்குள் எப்படி நுழைவது என்பதுதான் புரியவில்லை “ என்றான்.

“அதற்கு மருந்து வைத்திருக்கிறேன்” என்று அமீர் சமாதானம் சொன்னான்.

“மருந்து பலிக்குமா?” என்று வினவினான் அநபாயன்.

“நூற்றுக்குத் தொண்ணூறு பலிக்கும்” – என்று திடமாகச் சொன்னான் அமீர்.

“பத்து சந்தேகந்தான்?”

“ஆம். “

“அந்தப் பலிக்காத பத்தில் சிக்கிக் கொண்டால்?”

“போரிட்டுத்தான் தப்ப வேண்டும். “

“வாளைக்கூட வேண்டாமென்று நிராயுதபாணியாக அழைத்து வந்துவிட்டாயே! போரிடுவது எப்படி?”

அத்தனை அபாயத்திலும் மெள்ள நகைத்தான். “அநபாயரே! உங்கள் திறமையை அறியாமலா உங்களை நிராயுதபாணியாக அழைத்து வந்தேன்? நம்மிடம் வாளில்லாமற் போனாலென்ன, எதிரிகளிடம் வாளிருக்குமே. காவலன் எவனாவது சந்தேகப்பட்டால் என் குறுவாள் அவனைத் தீர்த்துவிடும். அது பலிக்கவில்லையென்றால் நீங்கள் அவன்மீது பாய்ந்துவிடலாம். புலிக்குட்டிக்குப் பாய்ச்சலை நானா சொல்லித் தர வேண்டும்?” என்றான் அமீர்.

இந்தப் பதில் சொல்லி முடிவதற்கும் இருவரும் வீதி முகப்புக் காவலை எட்டுவதற்கும் சரியாயிருக்கவே, மேற்கொண்டு ஏதும் பேசாமல் ஈட்டிகளைக் கொண்டு வழிமறித்து நின்ற காவலர் கூட்டத்திடம் வந்து இருவரும் புரவிகளை நிறுத்தினார்கள். அவர்களுக்கு முன்பிருந்த இரண்டு வண்டிகள் சோதிக்கப்பட்டு அரச வீதிக்குள் நகர்ந்ததும் அமீரின் புரவியையும் அநபாயனின் புரவியையும் இருமுறை சுற்றி வந்து அவை இரண்டிலும் பக்க வாட்டில் தொங்கிய நான்கு பெரும் பைகளைத் தட்டிப் பார்த்தனர் காவலர் இருவர். இந்தச் சோதனை நடந்து கொண்டிருக்கையிலேயே முன் வண்டிகளை அனுப்பி விட்டுப் புரவிகளை அணுகிய காவலர் தலைவனொருவன், “ஏன் முக்காடிட்டிருக்கிறீர்கள்? எடுங்கள் முக்காட்டை? உங்கள் முகத்தைப் பார்ப்போம்”. என்று மிக முரட்டுத் தனமாகக் கூறி, முக்காடுகளைக்களையத் தன் வாளின் நுனியையும் அநபாயன் முகத்துக்காகத் தூக்கினான்.
அந்த வாளின் நுனி மட்டும் அந்த முகத்திரையைச் சற்று விலக்கியிருந்தால் அடுத்து நிகழ்ந்திருக்கக் கூடிய சம்பவங்களையோ, அந்தச் சம்பவங்களின் முடிவையோ ஊகிப்பது கஷ்டம். ஆனால் அத்தகைய இக்கட்டான நிலையை அமீரின் அதிகாரக் குரல் தடுத்து நிறுத்தியது. “கலிங்கத்தில் பிறநாட்டு வணிகரை அவமதிக்கும் நாகரிகம் எத்தனை நாளாகப் பரவியிருக்கிறது?” என்று மிகவும் கசப்பும் கடுமையும் நிறைந்த குரலில் கேட்டான் அமீர்.

அமீரின் இந்தக் கேள்வியால் திடுக்கிட்ட காவலர் தலைவன் அநபாயனை விட்டு அமீரை நோக்கித் திரும்பினான். “சில நாள்களாகத்தான் பரவியிருக்கிறது, அவசியத்தை முன்னிட்டு” என்று அதிகாரத்துடன் கூறவும் செய்தான்.

“அந்த அவசியம் இதற்கும் தேவையா?” என்ற அமீர், தன் மடியிலிருந்து சின்னஞ்சிறு சீலையொன்றை எடுத்துக் காவலர் தலைவனிடம் நீட்டினான்.

அதைக் கையில் வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த வீரனொருவனைப் பந்தம் பிடிக்கச் சொல்லி பந்தத்தின் வெளிச்சத்தில் சீலையைப் பிரித்துப் படித்த காவலர் தலைவனின் முகத்தில் குழப்பத்தின் ரேகை பெரிதும் படர்ந்தது. “ஆம், உத்தரவு திட்டவட்டமாகத்தான் இருக்கிறது. ஆனால்… ” என்று ஏதும் புரியாமல் இழுத்தான் காவலர் தலைவன்..

“சீலையிலிருப்பது கலிங்கபிரான் மாமன்னர் பீமருடைய முத்திரை” என்று சற்றுக் கடுமையுடன் உணர்த்தினான் அமீர்.

“அது தெரிகிறது” காவலர் தலைவன் பதில் சொன்னானே தவிர, மேலும் குழப்பமே அவன் குரலில் தொனித்தது.

“அரண்மனைக்கு வேண்டிய பல வாணிபப் பொருள் களைக் கொடுப்பவன் நான். அரசமாளிகைப் புரவி வர்த்தகத்திலும் பங்கு பெற்றவன். ஆகையால் நான் அரச மாளிகைக்குள் நுழைவதையோ, அரசரை நேரிடையாகப் பார்ப்பதையோ யாரும் தடை செய்ய முடியாது. என் பெயரைக் கூடக் கேட்க முடியாது. சீலையில் உத்தரவு தெளிவாயிருக்கிறது” என்றான் அமீர்.

காவலர் தலைவன் சில விநாடிகள் யோசித்தான். பிறகு கேட்டான், “அது சரி. நீங்கள் வேண்டுமானால் போகலாம். உங்களைச் சோதனை செய்ய அவசியமில்லை. ஆனால் இவரை ஏன் நாம் அனுமதிக்க வேண்டும்?” என்று .

“அரச காரியமாகப் போவதால்” என்றான் அமீர். “அரச காரியமாக எங்கு போகிறீர்கள்?” “அரண்மனையின் பின்புறத்துக்கு?” “பின்புறத்துக்கு எதற்காக?” “அங்குதானே குதிரைச் சாலை இருக்கிறது. “

“ஆம். “

“அதன் தலைவனிடம் இருபது புரவிகள் வாங்கப் போகிறோம். “

“அரசர் குதிரைச் சாலையில் புரவி விற்கிறார்களா?”

“இல்லை. விற்பதில்லை . “

“பின் எதற்கு இருபது புரவிகள்?”

“மாற்றித் தர. “

இதைக் கேட்ட காவலன் விவரம் புரியாமல் விழித்தான். அவன் விழிப்பதைப் பார்த்த அமீர், “குதிரைச் சாலையிலுள்ள புரவிகள் சில பயனற்றுவிட்டன. நாளை அரபு நாட்டுக் கப்பல் ஒன்று புரவிகளுடன் வருகிறது. அவற்றில் வரும் புரவிகளுக்கு இவற்றை மாற்ற வேண்டும். இதைப்பார்” என்று மேலும் இரண்டு ஓலைகளை எடுத்து அமீர் காவலர் தலைவனிடம் சமர்ப்பித்தான்.

அந்த ஓலைகள் இரண்டிலும் பாலூர் அரண்மனைக் குதிரைச் சாலைத் தலைவனின் கையொப்பம் இருந்ததையும் அமீர் சொன்ன செய்திக்கும் அவற்றிலிருந்த விவரத்துக்கும் மிகுந்த பொருத்தமிருந்ததையும் கவனித்த காவலர் தலைவன் அவர்களிருவரையும் அதற்குமேல் கேள்விகள் கேட்காமல் அரச விடுதிக்குள் செல்ல அனுமதித்தான். வீதிக்குக் குறுக்கேயிருந்த காவல் தடை நீங்கிப் புரவிகள் அரச வீதிக்குள் நுழைந்ததும், “அப்பாடா!” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட அநபாயன், “அமீர்! அந்தச் சீலையைப் பற்றி என்னிடம் ஏதும் சொல்லவில்லையே!” என்று வினவினான்.

“அநபாயரே! அரபு நாட்டிலிருந்து சீனம் சென்று, அங்கிருந்து கலிங்கம் வந்து வாணிபம் செய்யும் நான், வாழ்க்கையில் எத்தனை சோதனைகளிலிருந்து தப்பியிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே சதா ஏதாவது இடுக்கண்களையே எதிர்பார்க்கிறேன். அதற்கு அவ்வப்பொழுது வேண்டிய பாதுகாப்புகளையும் செய்து கொள்கிறேன். சீலையும் ஓலைகளும் அத்தகைய பாதுகாப்புக் கருவிகள். ஆனால்… ” என்று இழுத்தான் அமீர்.

“என்ன ஆனால்?”

“ஓலையிலிருந்த கையெழுத்துகள் குதிரைச் சாலைத் தலைவனுடையதல்ல. “

“வேறு யாருடையது?”

“அடியேனுடையதுதான். “

அநபாயன் பிரமித்து அமீரை நோக்கினான். “கையெழுத்துப் பொய்யென்று கண்டுபிடிக்கப் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று வினவினான்.

“என் சக்தியில் அநபாயருக்கு நம்பிக்கையில்லை போலிருக்கிறது. அவசியமானால் கலிங்கத்துப் பீமன் கையெழுத்தைக்கூடப் போட என்னால் முடியும். தேவை யில்லாததால் போடவில்லை” என்று அடக்கத்துடன் பதில் கூறினான் அமீர்.

மிகுந்த ஆபத்து சூழ்ந்து கிடந்த அந்த நிலையிலும் சற்று இரைந்தே நகைத்துவிட்ட அநபாயன் மேற்கொண்டு ஏதும் கேள்வி கேட்காமல் அமீரைத் தொடர்ந்தான். அநபாயனைப் பின்னால் வரச்சொல்லி முன்னால் தன் புரவியைச் செலுத்திய அமீர், அரச வீதியின் நடுவுக்கு வந்ததும் அங்கிருந்த அரச மாளிகையின் கிழக்கு வாயிலுக்குள் நுழைந்தான். ஒவ்வோர் இடத்திலும் காவலரால் தேக்கப்பட்டாலும் உத்தரவுச் சீலையின் மந்திரத்தால் காவலர் பணிந்துவிட அரண்மனையைச் சுற்றிச் சென்ற அமீர் அரண்மனையின் பின்புற வாயிலையும் கடந்து அதற்கு நேர்ப் பின்னாலிருந்த பெரும் தோப்பிற் வந்து சேர்ந்தான்.

சந்திர வெளிச்சத்தில் பிரும்மாண்டமான அந்தத் தோப்பு மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தது. தோப்பைச் சுற்றியிருந்த பெரும் மதிளுக்கு முன்புறத்தில் காவல் இல்லையென்றாலும் அதன் வாயிலுக்குப் பின்னால் இரண்டு வீரர்கள் காவல் புரிவது அவர்கள் எச்சரிக்கைக் கோஷங்களிலிருந்தே புரிந்தது. அந்தக் கோஷத்தைத் தூக்கியடித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான புரவிகளின் கனைப்புச் சத்தம் வீரனான அநபாயன் காதுக்கு ரம்மியமாயிருந்ததால் அவன் மனத்திலிருந்த ஆபத்து, கவலை முதலியன மறைந்து, அவை இருந்த இடத்தில் பெரும் இன்பம் புகுந்துகொண்டது. ‘பல சாதிக் குதிரைகள்! பல நாட்டுக் குதிரைகள்! எத்தனை விதம்! எத்தனை ரகம். எத்தனை விதமான கனைப்புகள்! எத்தனை விதமான உடற்கட்டுகள்! இத்தனை வித்தியாசத்திலும் புரவியென்ற ஒரு பொதுச் சாதிதானே இருக்கிறது. ஈசுவர சிருஷ்டியில் எது பொது? எது தனி? அப்பப்பா! என்ன விந்தை!’ என்று சிந்தித்துக்கொண்டே அமீரைத் தொடர்ந்தான் அநபாயன்.

அமீர் குதிரைச் சாலைத் தோட்டத்தின் அந்தப் பெருவாயிலைக் கண்டதுமே சிறிது ஏதோ சிந்தித்தான். பிறகு தலையை வேண்டாமென்பதற்கு அறிகுறியாக ஆட்டிவிட்டு மதிளை வலப்புறமாகச் சுற்றிச் சென்று ஒரு சிறு திட்டிவாசலுக்கு வந்து புரவியிலிருந்து கீழே குதித்து அநபாயனையும் இறங்கச் சொன்னான். அவன் சொற்படி அநபாயன் இறங்கியதும், “அநபாயரே! இனிமேல்தான், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தக் குதிரைச் சாலைகூடக் கண்காணிப்பில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று அமீர் எதிரேயிருந்த திட்டிவாசலை நோக்கி மெள்ள நடந்தான். மெள்ளத் திட்டிவாசற் கதவில் காதை வைத்துச் சில விநாடிகள் உற்றுக் கேட்டான். பிறகு அந்த வாயிற்கதவை மும்முறை லேசாகத் தட்டினான்.

சிறிது நேரம் பதில் ஏதுமில்லை . ஆளரவமும் கேட்க வில்லை. அநபாயன் மனத்திலும் மெள்ள மெள்ளச் சந்தேகம் எழுந்தது. “குதிரைகளின் இந்தக் கனைப்பில் நீ மெள்ளத் தட்டியது யாருக்குக் காது கேட்கும்” என்றும் வினவினான்.

“சற்றுப் பொருங்கள் அநபாயரே!” என்ற அமீர் திட்டி வாசலின் கதவிடுக்கின் மூலமாக உள்ளே நோக்கிவிட்டு அநபாயனையும் அழைத்து, “இதோ பாருங்கள்” என்றான்.

திட்டிவாசற் கதவின் பலகைகள் இடங் கொடுத்த இடத்தில் ஒரு கண்ணை வைத்து உள்ளே நோக்கினான் அநபாயன். தூர இருந்த மாளிகையின் வாசலில், திடீரென இரண்டு தீபங்கள் தெரிந்தன. அவற்றிலொன்று திட்டி வாசலை நோக்கி நகரவும் தொடங்கியது.

Previous articleRead Kadal Pura Part 1 Ch27 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch29 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here